செவ்வாய், 1 மார்ச், 2016

சிகரெட் - காதோரம் லோலாக்கு - சாய், மட்டி, ஃபேன்!

முகப்புத்தகத்தில் நான் - 3

February 22, 2016 - சிகரெட் - நல்ல நண்பன்?



தில்லி நகரின் எல்லையில் இருக்கும் ஒரு இடம் – சூரஜ்குண்ட் – ஹரியானா மாநிலத்தில் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் இங்கே சூரஜ்குண்ட் மேளா என ஃபிப்ரவரி மாதத்தின் முதல் 15 நாட்கள் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்வார்கள்.  இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் கைவினைப் பொருட்கள், அழகுச் சாதனங்கள், உணவு என பல்வகையான விஷயங்கள் பார்க்கவும், வாங்கவும் கிடைக்கும். சமீப வருடங்களில் வெளிநாடுகளிலிருந்தும் இங்கே கடை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  தில்லி மக்களுக்கு பொழுது போக்க பெரிதாய் ஒன்றும் இல்லை என்பதால் இது போல மேளாக்கள் நடக்கும் போதெல்லாம் கூட்டம் அலைமோதும். 

சென்ற வருடமும் அதற்கு முந்தைய வருடமும் மேளாவிற்குச் சென்று வந்த பிறகு அதைப் பற்றி சில பதிவுகளும் படங்களும் எனது பக்கத்தில் வெளியிட்டதுண்டு.  இவ்வருடமும் பதிவுகள் எழுதவேண்டும் – நேரம் தான் அமையவில்லை! அதற்கு முன்னால் இங்கே இவ்வருடம் பார்த்த ஒரு விஷயம் தலைப்பில் சொன்ன விஷயத்தினை எழுதத் தூண்டியது.  சிகரெட் நல்ல நண்பனா?  சாவிக் கொத்துகள் விற்பனை செய்யும் ஒரு கடையில் மேலுள்ள படத்தில் இருப்பது போல சிகரெட் கொண்ட சாவிக் கொத்து தொங்க விட்டிருந்தது. அதன் அருகில் இருந்த சாவிக் கொத்தில் ஒரு இதய வடிவத்தில் Best Friend என எழுதி இருந்தது!

கடைக்காரர் வேண்டுமென்றே இப்படி இரண்டையும் ஒன்றாக தொங்க விட்டிருந்தாரா, இல்லை அதுவாகவே அமைந்ததா என்பது தெரியவில்லை – இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சிகரெட் நிச்சயம் நல்ல நண்பனாக இருக்க முடியாது.  நீங்கள் என்ன சொல்கிறீர்கள்!  Best Friend சாவிக் கொத்தின் கீழே இருப்பது “I Love You” பொறித்த இதய வடிவ சாவிக் கொத்து – காதலித்தால் சிகரெட் தான் உற்ற நட்பு என்று சொல்கிறதோ!

February 25, 2016 - காதோரம் லோலாக்கு…..





காதணிகளில் தான் எத்தனை எத்தனை வகைகள். பேப்பர் முதல் பிளாஸ்டிக் வரை…..  தகடு முதல் தங்கம் வரை…..  மூங்கில் முதல் எலுமிச்சை குச்சி வரை….  எதைத் தான் காதணியாக மாற்றவில்லை!

தில்லியில் இருக்கும் எந்த கடைத்தெருவிற்குப் போனாலும், மேளாவிற்குப் போனாலும் இம்மாதிரி காதணிகளை விற்கும் கடைகள் ஏராளமாக இருக்கும். இந்த ஊர் பெண்களுக்கு சின்னச் சின்ன காதணிகள் மீது அவ்வளவு காதல் இல்லை! காதணி என்றால் பெரியதாக, மிகப் பெரியதாக – நம் ஊர் பாட்டிகள் போட்டுக் கொண்ட பாம்படம் போன்று பெரிதாக இருக்க வேண்டும் – காது அறுந்து விடாதோ எனப் பார்க்கும் அனைவருக்கும் ஒரு பயம் வரும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும்!

இம்முறை சூரஜ் குண்ட் மேளா சென்ற போது இப்படி காதணிகள் விற்கும் கடைகளைப் பார்த்த போது சில காதணிகளை புகைப்படம் எடுத்தேன்! 10 ரூபாயிலிருந்து கிடைக்கும் காதணிகள்! அக்கடைகளில் எப்போதுமே கூட்டம் தான்!  வாங்குபவர்களைத் தவிர்த்து காதணிகளை மட்டும் புகைப்படம் எடுக்க நிறையவே “zoom” செய்ய வேண்டியிருந்தது!

February 25, 2016 - சாய் – மட்டி – ஃபேன்

படம்: இணையத்திலிருந்து....

தில்லியின் நடைபாதைகளில் தேநீர் விற்கும் கடைகள் நிறையவே உண்டு! நம் ஊர் போல நிரந்தரக் கடைகள் அல்ல! இவர்களுக்குத் தேவை – ஒரு நடைபாதை – ஒரு சாய்பாத்திரம் – பம்ப் ஸ்டவ் – பால் ஊற்றி வைக்க ஒரு ப்ளாஸ்டிக் பாட்டில், ஒரு கத்தி, சில கற்கள் மட்டுமே.  எங்கு வேண்டுமானாலும் கடை விரித்து விட முடியும் இவர்களால்! இவர்களிடம் சாய் [தேநீர்] குடிக்கவென்றே நிறைய பேர் உண்டு – பெரும்பாலும் ஆட்டோ/டாக்ஸி ஓட்டுனர்கள், கூலி வேலை செய்பவர்கள் பலரும் தங்கள் அலுப்பினை போக்கிக் கொள்ள இவர்களிடம் தான் தேநீர் வாங்கிக் குடிப்பார்கள்.  மற்றவர்களும் இவர்களிடம் தேநீர் வாங்குவதுண்டு!

படம்: இணையத்திலிருந்து....

இவர்களிடம் தேநீர் மட்டுமல்லாது சில தின்பண்டங்களும் கிடைக்கும் – மட்டி [மட்ரி], ஃபேன் என அழைக்கப்படும் தின்பண்டங்களை வாங்கி ஒரு கடி, ஒரு குடி என இருப்பவர்களை தில்லி முழுவதுமே காண முடியும்.  அது என்ன மட்டி [மட்ரி]? நம்ம ஊர் தட்டை மாதிரி தான் இருக்கும்.  ஃபேன் சாப்பிடுகிறாயா என்று தில்லி வந்த புதிதில் எனை நண்பர் ஒருவர் கேட்டபோது நான் பலமாக முழித்தேன்!  ஃபேனை எப்படி சாப்பிடுவது? அதுக்கு இறகுகள் எல்லாம் உண்டே – உலோகமாச்சே! என்றெல்லாம் முழிக்க, நண்பர் காக்கி பேப்பர் கவரில் இருந்த ஒரு பொருளை எடுத்து “இந்தா சாப்பிடு!” என்று கொடுத்தார்.  மைதா மாவில் செய்யப்பட்ட ஒரு பதார்த்தம் அது – தேநீருடன் சாப்பிட நன்றாக இருந்தது! சிலர் ப்ரெட் பகோடாக்களும் விற்பதுண்டு!

சமீபத்தில் தில்லியின் ஜன்பத் சாலையில் இருக்கும் Le Meridien ஹோட்டலின் வாயிலில் இப்படி ஒரு கடை இருக்க, நானும் அங்கே தேநீர் குடித்தேன் – கூடவே மட்ரியும்! பத்து ரூபாய்க்குத் தேநீர் மட்ரி – ஐந்து ரூபாய்க்கு இரண்டு! இதுவே Le Meridien-ல் தேநீர் குடித்திருந்தால் சில நூறுகள் பழுத்திருக்கும்!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்,
புது தில்லி.
  

28 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

      நீக்கு
  2. சுவாரஸ்யமான இந்தத் தகவல்களை முகநூலிலும் படித்து ரசித்திருந்தேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காருக்கு அருகில் தரைவில் அமர்ந்து
    தேநீரில் தோய்துது எடுத்து மட்ரி ஃபேன் சாப்பிடும்காட்சி
    இதுதான் இந்தியா
    அருமைஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  4. படங்கள் அருமை...

    ஃபேனை சாப்பிடுவது ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ஏழு சகோதரிகளைக் காண அழைத்துச் செல்வதாகக் கூறி புதுதில்லிக்கு வந்துவிட்டீர்களோ? இருந்தாலும் பரவாயில்லை. லோலாக்குகள் ஜோராக உள்ளன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏழு சகோதரிகள் - வாரத்திற்கு இரு பகுதிகள் வரும்....... மற்ற நாட்களில் வேறு பதிவுகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. காரின் அருகே சாய் சாப்பிடுபவர் பக்கத்தில் துடைப்பம். வீதி பெருக்குகிறவர் போலும்.ஸ்வாரஸ்யமான பதிவுகள்.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  7. லோலாக்கு காதோரம் சொன்ன கதைகள் அருமை :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  8. ஆஹா அழகான காதணிகள், பெரியதாக இருந்தாலும் வலிக்காதுல்ல,,,

    பகிர்வு அருமை சகோ, தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரிதாக இருந்தாலும் எடை அதிகமில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

      நீக்கு
  9. நல்ல புகைப்படங்கள்...அருமையான தகவல்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  10. ஒவ்வொரு தலைப்பின் மேலும் காணும் தேதிகள் கன்ஃப்யூஸ் செய்கின்றன. அவை எதைக் குறிக்கின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழப்பமே இல்லை! தலைப்பின் முகப்புத்தகத்தில் நான் என்று குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். Facebook-ல் நான் பகிர்ந்து கொண்டதை [அந்தந்த தேதிகளில்] இங்கேயும் பதிவு செய்கிறேன் - அங்கே எனைத் தொடராதவர்களுக்காகவும், எனக்காகவும்....

      ”முகப்புத்தகத்தில் நான் - 1” - ஆதார் கார்டிலும் அழகாய் இருக்கேன் என்ற தலைப்பில் எழுதிய பதிவு - http://venkatnagaraj.blogspot.com/2016/02/blog-post_11.html - இதில் எழுதி இருக்கிறேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  11. பெரியவர் டீ அருந்தும் புகைப்படம் மனதை வதைத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  12. லோலாக்கு எனும் வார்த்தை ரொம்ப வசீகரமானது.... உங்கள் எழுத்தைப் போல தம்பி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்ஜி அண்ணா!

      நீக்கு
  13. அறிந்திராத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  14. கடைக்காரர் வேண்டுமென்றே இப்படி இரண்டையும் ஒன்றாக தொங்க விட்டிருந்தாரா, இல்லை அதுவாகவே அமைந்ததா என்பது தெரியவில்லை – இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை சிகரெட் நிச்சயம் நல்ல நண்பனாக இருக்க முடியாது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! Best Friend சாவிக் கொத்தின் கீழே இருப்பது “I Love You” பொறித்த இதய வடிவ சாவிக் கொத்து – காதலித்தால் சிகரெட் தான் உற்ற நட்பு என்று சொல்கிறதோ!// ரொம்பவே ரசித்தோம் உங்கள் இந்த விவரணத்தை....

    லோலாக்குகள் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன....அழகு..அழகு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....