வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் கோவில் - ஏக்லிங்க்ஜிராஜாக்கள் மாநிலம் – பகுதி – 16

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஏக்லிங்க்ஜி மஹாதேவ்....
படம்: இணையத்திலிருந்து...
 
ஒரு நாள் முழுவதும் உதய்பூர் நகரின் பல்வேறு இடங்களையும், மாளிகைகளையும் பார்த்த பிறகு நல்ல உறக்கம். விடிகாலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்துக் கொண்டு புறப்பட வேண்டும் என்பதால் திட்டப்படி எழுந்தேன். விடியற்காலையிலேயே புறப்பட்டால் உதய்பூர் நகரிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் செல்வதாகத் திட்டம். அந்தக் கோவில் மிகவும் பிரசித்தமான கோவில். நிறைய சிற்பங்கள் இருக்கும் இடம். கோவில் இருக்கும் இடம் ஒரு சிறிய கிராமம் தான். உதய்பூர் நகரிலிருந்து குழுவினர் அனைவருமாகப் புறப்பட்டோம். கூகுள் மேப் மூலம் உதய்பூர் நகரிலிருந்து வெளியேறி அந்த இடத்தினை அடைவதற்காகப் பயணித்தோம். நாங்கள் பயணிக்கும் சமயத்தில் கோவில் பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
ஏக்லிங்க்ஜி கோவில்....
படம்: இணையத்திலிருந்து...

ஏக்லிங்க்ஜி – மேவார் ராஜாக்களின் பிரதான தெய்வம். 734-ஆம் ஆண்டு Bபப்பா ராவல் எனும் ராஜாவினால் அமைக்கப்பட்ட கோவில் – பின்னர் வந்த பல மேவார் மன்னர்களும் தொடர்ந்து ஆதரித்த, பராமரித்த கோவில். இன்றைக்கு வரை மேவார் ராஜ வம்சத்தினர் இந்த கோவிலை தங்களது பிரதான கோவிலாக வைத்திருக்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை எண்-8-ல் அமைந்திருக்கும் இந்தக் கோவில் உதய்பூர் நகரிலிருந்து அஜ்மேர் செல்லும் பாதையில் இருக்கிறது. பிரம்மாண்டமான கோவில். சிற்பங்கள் பல இருக்கும் இந்தக் கோவில் மிகவும் பிரபலமான கோவிலும் கூட. இரண்டு அடுக்குகளில், பிரமீட் வடிவத்தில் அமைக்கப்பட்ட கோவில். வாயிலில் வெள்ளியில் நந்தி தேவர் இருக்க, உள்ளே கருப்பு மார்பிள் கல்லில் ஒரு நந்தியும், வெண்கலத்தில் ஒரு நந்தியும் உண்டு.


ராஜாக்களின் கோவில் என அறிவிக்கும் கல்வெட்டு....


வெளிப்புற சிற்பங்கள், ஏக்லிங்க்ஜி....

இங்கே இருக்கும் நான்கு முகம் கொண்ட ஏக்லிங்க்ஜி என அழைக்கப்படும் சிவபெருமான் நான்கு முகங்களுடன் 50 அடியில் பிரம்மாண்டமாக இருக்கிறார். கருப்பு நிற மார்பிள் கல்லில் அமைக்கப்பட்டிருக்கும் சிவபெருமானின் நான்கு முகங்களும் அவரது நான்கு வடிவங்களைக் குறிக்கின்றன. கிழக்கு நோக்கிய முகம் சூரியனையும், மேற்கு நோக்கிய முகம் பிரஹ்மாவையும், வடக்கு நோக்கிய முகம் விஷ்ணுவையும், தெற்கு நோக்கிய முகம் சிவபெருமானையும் குறிக்கிறது.  என்னுள் அனைத்தும் அடக்கம் என்பதைச் சொல்லும் வடிவம். ஷிவ் பரிவார் என வடக்கே அழைக்கப்படும் சிவ குடும்பத்தின் அங்கத்தினரான சிவன், பார்வதி, பிள்ளையார் மற்றும் கார்த்திகேய் என அழைக்கப்படும் முருகன் ஆகியோர் அனைவருக்கும் இங்கே இடம் உண்டு. கூடவே சரஸ்வதி தேவிக்கும் யமுனா தேவிக்கும்!


வெளிப்புற சுவரில் பிள்ளையார்.... 
ஏக்லிங்க்ஜி...


வெளிப்புற சுவரில் ஒரு சிற்பம்.... 
ஏக்லிங்க்ஜி...


ஏக்லிங்க்ஜி பிரபு என அழைக்கப்படும் சிவபெருமானின் கோவில் அமைந்திருக்கும் ஊரின் பெயர் கைலாஷ்புரி என்றாலும், பெரும்பாலும் ஊரும் ஏக்லிங்க்ஜி என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது. கோவிலுக்குள் இரண்டு பெரிய குளங்கள் உண்டு – அதிலிருந்து தான் கோவில் பூஜைக்குத் தேவையான நீர் எடுக்கப்படுகிறது – கர்ஸ் குண்ட் மற்றும் துள்சி குண்ட் என்ற பெயர் கொண்ட குளங்கள். இந்தக் கோவில் ஏற்கனவே சொன்னது போல மேவார் ராஜாக்களின் பிரதான கோவில் என்பதால் நிறைய பொருட்கள் வெள்ளி அல்லது தங்கத்தில் இருக்கின்றன – ஏக்லிங்க்ஜி மஹாராஜ் கழுத்தில் இருக்கும் நீண்ட பாம்பு – வெள்ளியில். கோவில் வாயிலில் இருக்கும் மிகப் பெரிய கதவு கூட வெள்ளி தான் – அதில் ஒரு கதவில் பிள்ளையார் உருவமும், மறு கதவில் கார்த்திகேய் உருவமும் இருக்கிறது.


வெளிப்புற சுவரில் சிற்பம்.... 
ஏக்லிங்க்ஜி...
 
மிகவும் பிரபலமான இந்த கோவில் காலை 04.15 மணியிலிருந்து காலை 06.45 மணி வரையிலும், பிறகு 10.30 மணி முதல் 01.00 மணி வரையிலும், மாலை நேரத்தில் 05.15 முதல் 07.45 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். நாங்கள் காலையில் விரைவாக புறப்பட்டு, பயணம் செய்து ஏக்லிங்க்ஜி கோவில் வாயிலுக்குச் சென்று சேர்ந்த போது மணி 06.50! எத்தனை தான் சீக்கிரமாக புறப்பட்டும் கோவிலுக்குச் சென்று சேர்ந்த போது பூட்டிய கதவுகளைத் தான் பார்க்க முடிந்தது! 10.30 மணி வரை காத்திருக்க வேண்டும் – கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் – காத்திருக்க வேண்டுமா இல்லை அடுத்த திட்டமிட்ட இடத்திற்குச் செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டும். கோவில் வாசலில் சில பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.


வெளிப்புற சுவரில் பிள்ளையார்.... 
ஏக்லிங்க்ஜி...
 
குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருக்கும் பல கோவில்கள் குறைவான நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்பதால் பயணத்திட்டத்தில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டாலும் குழப்பம் தான். அடுத்து நாங்கள் செல்லப் போவதும் ஒரு கோவில் தான் – அங்கேயும் ஒவ்வொரு நாளும் ஆறே ஆறு தரிசன காலங்கள் தான். இங்கே காத்திருந்தால் அங்கே சென்று தரிசனம் செய்ய முடியாது. அதனால் அங்கேயே சென்று விடுவோம் என முடிவு செய்தோம். எங்கள் குழுவில் நானும் ஒர் நண்பர் குடும்பமும் ஏற்கனவே அந்தக் கோவிலுக்குச் சென்றிருக்கிறோம் – மற்ற எவருமே இரண்டாவது கோவிலுக்குச் சென்றதில்லை என்பதால் அங்கே செல்ல முடிவு செய்தோம். ஏக்லிங்க்ஜி கோவிலுக்கு வெளியே மட்டும் தான் எங்களால் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ள முடிந்தது. 


வெளிப்புற சுவரில் சிற்பங்கள்.... 
ஏக்லிங்க்ஜி...


கோவிலின் வெளிப்புறம்.... 
ஏக்லிங்க்ஜி...
 
அடுத்த முறை அந்தப் பக்கம் சென்றால் நிச்சயம் செல்ல வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டேன். அந்தப் பக்கம் சென்றால் நிச்சயம் தவற விடக்கூடாத கோவில் இது. இந்தக் கோவில் பற்றிய மேலதிகத் தகவல் ஒன்று – கோவிலுக்குள் அலைபேசி, கேமரா மற்றும் பெல்ட் போன்ற தோல் பொருட்களுக்குத் தடை உண்டு. அனைத்தையும் வெளியே வைத்து விட்டுச் செல்ல வேண்டும். கோவில் வளாகத்தில் 108 சிறு சிறு கோவில்கள் உண்டு. அனைத்தும் மார்பிள் கற்களில் அமைக்கப்பட்ட கோவில் – மார்பிள் சிற்பங்கள் நம் ஊர் சிற்பங்கள் மாதிரி இல்லை என்றாலும் இதுவும் ஒரு வித அழகு தான். பார்த்து ரசிக்கலாம்! கோவில் அமைந்திருக்கும் பகுதியில் வேறு சில கோவில்களும் உண்டு. சிற்றூர் என்றாலும் நிறைய கோவில்கள் அமைந்திருக்கின்றன. அந்தப் பக்கம் சென்றால் தவறவிடக்கூடாத கோவில்.


வெளிப்புற சுவரில் பிள்ளையார்.... 
ஏக்லிங்க்ஜி...


ஐந்து நிமிடம் தாமதமாகச் சென்றதால் எங்களால் கோவிலின் உள்ளே சென்று ஏக்லிங்க்ஜி தரிசனம் பெற முடியவில்லை. ஒரு சிறிய கதவு திறந்திருந்தது என்றாலும் எங்களை உள்ளே விடவில்லை. உள்ளே சென்றிருந்தால் At least கோவில் கட்டமைப்பையாவது பார்த்திருக்கலாம். சரி இந்த முறை எங்களைப் பார்க்க ஏக்லிங்க்ஜி அவர்களுக்கு விருப்பமில்லை என நினைத்துக் கொண்டோம். ஏக்லிங்க்ஜி பிரபு கோவிலிலிருந்து நாங்கள் எங்கே சென்றோம் அங்கே எங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

30 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்... ஹரஹர மஹாதேவ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   ஹர்ஹர் மஹாதேவ் - வடக்கே இப்படியும் Bum Bum Bhole என்றும் முழக்கம் எழுப்புவார்கள்.

   நீக்கு
 2. ஏக்லிங்க் கோவில் வித்தியாசமாக இருக்கிறியாது. சிறப்பான தகவல்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசமான கோவில் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. ​ராஜாக்களின் கோவில் என்றால் ராஜாக்கள் மட்டுமே வழிபடும் கோவிலா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முந்தைய காலத்தில் ராஜாக்கள் மட்டுமே வழிபட்ட கோவில். இப்போது அனைவருக்கும் அனுமதி உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. ராஜாக்களின் கோவில் என்றால் ராஜாக்கள் மட்டுமே வழிபடும் கோவிலா?

  வழிபட்ட கோவிலா என்றிருக்க வேண்டும்!

  அவ்வளவு பெரிய கோவிலை உள்ளே சென்று பார்க்காமல் மிஸ் செய்து விட்டீர்களோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தக் கோவில் மிஸ் செய்தது எனக்கும் வருத்தம் தான். அங்கே காத்திருந்தால் அடுத்த இடமும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் புறப்பட வேண்டியதாயிற்று.

   நம் ஊர் கோவில்களில் நடை சார்த்தியிருந்தாலும், கோவில் வளாகத்திலாவது உள்ளே விடுவார்கள் - இங்கே அதுவும் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. ​​நீங்கள் உள்ளே செல்ல முடியவில்லை என்கிற குறை உங்களுக்கு இருந்ததோ, இல்லையோ, உள்ளே எப்படி இருந்தது என்று உங்கள் மூலம் தெரிந்துகொள்ள முடியாத குறை எங்களுக்கு இருக்கிறியாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பக்கம் செல்லும் போது நிச்சயம் பார்க்க வேண்டும். பார்க்கலாம் எப்போது வாய்ப்பு கிடைக்குமென....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. கோயில் வளாகத்தில் 108 சிறு கோயில்கள் என்பதைப் படித்தவுடன் எனக்கு தமிழ்நாட்டில் உள்ள திருவாரூர் கோயில் நினைவிற்கு வந்தது. 33 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இக்கோயிலில் ஒன்பது ராஜ கோபுரங்களும், 80 விமானங்களும், 12 பெரிய மதில்களும், 13 மிகப்பெரிய மண்டபங்களும், 15 தீர்த்தக்கிணறுகளும், மூன்று நந்தவனங்களும், மூன்று பெரிய பிரகாரங்களும், 365 லிங்கங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட சன்னதிகளையும், 86 விநாயகர் சிலைகளையும், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்களையும் பெற்ற பெருமை உடையது திருவாரூர் கோயில். ஐந்து நிமிட வித்யாசத்தில் தாமதமாகச் சென்று உள்ளே பார்க்காமல் உங்கள் குழுவினர் திரும்பியது போல நாங்கள் பல கோயில்களில் சென்று பார்க்காமல் திரும்பியுள்ளோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவாரூர் கோவில் பற்றிய சிறப்பான மேலதிகத் தகவல்களுக்கு நன்றி ஐயா.

   சில சமயம் கோவில் வரை சென்றும் பார்க்க முடியாமல் போவது வருத்தமான விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. வித்தியாசமான கோவில் தான்... அறிய வைத்தமைக்கு நன்றி ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. பயணங்கள் தொடரட்டும் அண்ணா வாழ்த்துகள் ...
  வேலைப்பளூ காரணமாக முந்தைய பதிவை வாசிக்க முடியவில்லை.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலைப் பளு - Happens.... முடிந்த போது படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

   நீக்கு
 10. ஏக்லிங்க்ஜி பெயரே வித்தியாசமாக இருக்கிறதே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 11. அறியாத கோவில்...தொடர்கிறேன்...தங்களின் பயணத்தில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   நீக்கு
 12. கோவிலை தரிசிக்க முடியாமல் போனது வருத்தமே.
  அடுத்த முறை தரிசனம் கிடைக்கும்.
  கோவில் கலைஅம்சத்தோடு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை எப்போது என்பது கேள்விக்குறி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 13. 5 நிமிஷத்துல தரிசனத்தை மிஸ் பண்ணிட்டீங்களே... அதனால் என்ன, இன்னொருதடவை அவன் கூப்பிடுவான். (எனக்கு , மற்றவர்கள் சரியான சமயத்துக்குப் புறப்படாததால் தரிசனம் மிஸ் ஆச்சுன்னா பயங்கர கோபம் வந்துடும். பெரும்பாலும் நான் தேவையான சமயத்துக்கு முன்னதாகவே ரெடியாயிடுவேன். பயணம்னாலும் சரி. இதுல எனக்கும் எங்க வீட்டுல உள்ள எல்லோருக்கும் கருத்து வித்தியாசம் வரும். 12 மணிக்கு ரெயில்னா, 11:30க்கு முன்னாலேயே ஸ்டேஷனில் இருக்கணும் என்பது என் கட்சி. ஹா ஹா)

  நாங்கள் மலைநாட்டு யாத்திரை சென்றிருந்தபோது, திருவனந்தபுரம் கோவில் நடை சாத்தியிருந்தது (கோவிலே பூட்டியிருந்தது). அப்புறம், காத்திருக்கவேண்டாம் என்று நினைத்து, நேரடியாக வர்க்கலைக்குச் சென்றோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குழுவாகச் செல்லும் போது இது போன்ற நடப்பதை தவிர்க்க முடிவதில்லை. எனக்கும் இப்படி நேரத்தில் சென்று விடும் பழக்கம் உண்டு. அனுபவம் தந்த பாடம் - ஒரு முறை கடைசி நொடியில் சென்னை-தில்லி தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் பிடித்திருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. அடியோங்கள் சென்றபோது இவ்வாலயம் மூடியிருந்தது. இன்று உங்கள் மூல்ம் தரிசனம் கிட்டியது. நன்றி.
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்களுக்கும் தரிசனம் கிடைக்கவில்லை. கோவில் மூடியிருந்தது. ரொம்பவே குறைவான நேரம் தான் திறந்திருக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முருகானந்தம் சுப்ரமணியன் ஐயா.

   நீக்கு
 15. கோவில் பற்றிய தகவல்களும் சிற்பங்களின் புகைப்படங்களும் மிகவும் அருமை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....