ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

தலைமை இல்லா இயக்கம்… – படங்களின் உலாPhoto of the day Series – Part 9

கடந்த சில நாட்கள் #Photo_of_the_day என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…


படம்-1: எடுத்த இடம் – மஹாபலிபுரம், தமிழ்நாடு


மலையளவு கஷ்டங்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஊதித் தள்ளிவிடலாம். நம்பிக்கை கொள்வோம்….

ஒரு சின்ன கதை. படித்ததில் பிடித்ததாக….

மாயை
=======
ஒரு முனிவர் ஆற்றங்கரை மரத்தடியில் தியானத்திலிருந்தார். அப்போது அங்க வந்த கணேசன் தனது கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும் என அவர் தியானம் முடியும்வரை காத்திருந்தார்.

தியானம் முடித்து எழுந்த முனிவரிடம் தனக்கு பல கஷ்டங்கள் இருப்பதாகவும், அவை மலையளவு என சொல்லி அழுதார் கணேசன்.

ஆறுக்குள் நடந்து சென்று ஒரு குடத்தில் தண்ணீர் கொண்டுவருமாறு கணேசனிடம் கூறினார் முனிவர். உடனே பதற்றத்துடன் குடத்தை எடுத்துக்கொண்டு ஆற்றுக்குள் ஓடிய கணேசன் கால் தடுமாறி ஆற்றில் குப்புற விழுந்தார்.

உடனே தண்ணீரில் விழுந்தநிலையில் இருந்து கொண்டு தன்னை காப்பாற்றுமாறு கத்தி கூச்சலிட்டார் கணேசன். கரையிலிருந்த முனிவர் சத்தமாக “எழுந்து நில்” என கூறினார். தன்னால் முடியவில்லை என அழுதான். மறுபடியும் முனிவர் சத்தமாக “எழுந்து நில்” என கூறினார். தன்னால் முடியவில்லை என கூறி அழுதான். உடன் முனிவர் பலமாக காடே அதிருமளவுக்கு “உன்னால் முடியும், எழுந்து நில் ” என உரக்க சொன்னார்.

தன் பலத்தால் எழுந்து நின்றார் கணேசன். எழுந்து பார்த்த கணேசன். ஆற்றில் நீர் முட்டியளவே இருப்பதை உணர்ந்தார். தனது அறியாமை கண்டு மனவருந்தினார்.

ஒவ்வொருவரின் கஷ்டங்களும் அவரவரால் தீர்க்க முடிந்தவையே. ஆனால் தன்னம்பிக்கையின்மையும், பதட்டமும், தேவையற்ற பயமும் அந்த துன்பங்களை மலையளவு இருப்பதாக காட்சிப்படுத்துகிறது என அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.


படம்-2: எடுத்த இடம் – திருவரங்கம், தமிழ்நாடு – செப்டம்பர் 2016

கொழுக்கட்டை சாப்பிட நாங்களும் ரெடி! வாங்க வாங்க… கொழுக்கட்டையோட வாங்க! 


படம்-3: எடுத்த இடம் – தில்லி ஹாட், பீதம்புரா, தில்லி – ஆகஸ்ட் 2018

நற்றிணையிலிருந்து ஒரு பாடல் – மதுரை மருதனின் நாகனார் எழுதிய பாடல்.

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

தலைமக்கள் பெற்றோருக்குத் தெரியாமல் உடன்போக்கில் சென்றனர். நீண்டதூரம் சென்றதால் தலைவி வருத்தமடைந்தாள் என்பதை உணர்ந்த தலைவன்,

“அன்பே மேகம் முதல் மழையைப் பொழிந்ததால் இந்த அழகிய காட்டில் தம்பலப் பூச்சிகள் (பட்டுப் பூச்சிகள்) எங்கும் பரவின. அவற்றைப் பார்த்தும், பிடித்தும் நீ சிறிது நேரம் விளையாடிக்கொண்டிரு. நான் இளைய யானைகள் தம் உடலைத் தேய்த்துக்கொள்ளும் பருத்த அடியுடைய வேங்கை மரத்தின் பின்புறத்தில் அமர்ந்திருக்கிறேன். அப்போது வழிப்பறி செய்வோர் வந்தால் அவர்களுடன் அஞ்சாது போரிட்டு அவர்களை ஓடச் செய்து உன்னைக் காப்பேன். ஒருவேளை உன்னைத் தேடி உன் உறவினர் வந்தால் நீ வருந்தாமலிருக்க அவருடன் போரிடாது மறைந்துகொள்வேன்“

சக பதிவர், முனைவர் இரா. குணசீலன் அவர்களின் தளத்திலிருந்து பாடலும் அதன் பொருளும்….


படம்-4: எடுத்த இடம் – அன்னை ஆஸ்ரமம், பாண்டிச்சேரி.

மௌனம் – பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம்.

பழகியவர்கள் பிரியும் போது கூட வலிப்பதில்லை. அவர்கள் பழக்கம் இல்லாதவர் போல் நடந்து கொள்ளும் போது தான் அதிகம் வலிக்கிறது.

படித்ததில் பிடித்ததாக ஒரு கவிதை….

ஒரு சொல் எறி….
உடையட்டும்
மௌனக் குளம்….


படம்-5: எடுத்த இடம் – விசாகப்பட்டினம் – ஏப்ரல் 2016

தூங்கி எழும்போது புதிதாக பிறப்பது நாள் மட்டுமல்ல! நீங்களும் தான். நினைவில் கொள்ளுங்கள். கடந்த காலத்தின் நினைவுக் குப்பைகளை நம் மனதில் சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பைத் தொட்டிகளல்ல! என்னாளும் மகிழ்ச்சியாக இருக்கப் பழகுவோம்.


படம்-6: எடுத்த இடம் – தஞ்சை பெரிய கோவில், தமிழ்நாடு

சரியான தலைமை இல்லாதிருப்பது அழிவுப் பாதையில் தான் முடியும் – அது வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, தஞ்சை பெரிய கோவில் சிற்பங்களில் ஒன்று தலை இல்லாமல் இப்படி…

”சிங்கத்தின் தலைமையின் கீழ் இருக்கும் கழுதையும் வென்றுவிடும். கழுதையின் தலைமையின் கீழ் இருக்கும் சிங்கமும் தோற்றுவிடும்” – சாணக்யன்.       


படம்-7: எடுத்த இடம் – ஜோத்பூர் – தில்லி நெடுஞ்சாலை உணவகத்தில், ஆகஸ்ட் 2017.

ஹையோ…. எனக்கு ஒரே வெட்கமா இருக்கு, என்னை ஃபோடோ புடிக்கிறாங்க…. நான் என் தலையை உள்ளே மறைச்சுக்கறேன்!

படித்ததில் பிடித்ததாக் ஒரு கவிதை…..

புதியவர்களைக்
கண்டதும்
தாயிடம் ஓடிச்சென்று
முந்தானையில் முகம்
புதைத்து
மெல்ல எட்டிப்
பார்க்கும்
குழந்தையின் முகத்தில்
பிரகாசமாய்
பளிச்சிடுகிறது
மெல்லத் துளிர்விடும்
வெட்கம்

-     கோபிநாத், சேலம்   

பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம் எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால் கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….

இதுவரை Photo of the Day Series-ல் வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க, கீழுள்ள சுட்டியைச் சுட்டலாம்!


மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


32 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட். முதல் படம் வெகு அழகு. அங்கு நிற்கும் மனிதரின் உருவத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து எடுக்கப் பட்டிருக்கும் அந்தப் படம் என்று யோசிக்கிறேன். அவ்வளவு பெரிய பாறை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   கொஞ்சமாக தள்ளி நின்றால் போதும் - சாதாரண கோடக் டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படம் இது. பாறை பெரியது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. முனிவர் கதை படித்திருக்கிறேன்.

  கொழுக்கட்டை எனக்கு மிக இஷ்டமான பண்டம். அதிகமாகக் கிடைக்காததால் இஷ்டமானதாக ஆகியதா, இஷ்டமானதாக இருப்பதால் அதிகமாக்க கிடைக்கும் பேறு இல்லையா என்பது கேள்விக்குறி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு கொழுக்கட்டையை விட, அதில் வைக்கும் தேங்காய்-வெல்லம் போட்ட பூரணம் தனியாகச் சாப்பிட ரொம்பவே பிடிக்கும் - அம்மா எனக்காகவே எடுத்து வைத்து தருவார். மனைவியும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நற்றிணைப் பாடல் அழகு.

  அன்னை ஆசிரமப் படமும், விசாகப்பட்டினக் குழந்தையும் வெகு அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விசாகப்பட்டினக் குழந்தை - எனக்கும் ரொம்பவே பிடித்த படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. புரியவில்லை. அதென்ன "நீங்கள் மட்டுமல்ல, நீங்களும்தான்..."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாள் மட்டுமல்ல - நீங்களும் தான்! இப்போது மாற்றி விட்டேன்!

   சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. சாணக்கியன் வார்த்தையையும் ரசித்தேன், தஞ்சைப் பெரிய கோவில் படத்தையும் ரசித்தேன். சமயோஜிதமான தலைப்புக்கான வரியையும் ரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைப்புக்கான வரி - உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. கடைசிப்பட வெட்கமும் ரசனை! அதற்கான வரிகளும் ரசனை.

  மொத்தத்தில் அனைத்தையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெட்கமும் அழகு தான்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. எல்லாம் ரசித்தேன், மறுபடி வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது வாங்க.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 9. அனைத்தையும் ரசித்தேன். பேசிய வார்த்தைகளைவிட பேசாத வார்த்தைகள்....அதிகம் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. ஐந்தாவது படம் மிகவும் இயல்பாக, அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 11. படம்-5 மிகவும் பிடித்தது... அனைத்து கருத்துக்களும் அருமை... கவிதை ரசனை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. மலையளவு கஷ்டங்கள் இருந்தாலும், தன்னம்பிக்கை இருந்தால் ஊதித் தள்ளிவிடலாம். நம்பிக்கை கொள்வோம்….ஆனால் நம்பிக்கை ரியலிஸ்ட்க்காக இருக்க வேண்டாமா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரியலிஸ்டிக்காக - அவசியம் இல்லை. ஆரம்பிக்கும்போதே சந்தேகம் எதற்கு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 13. எனக்குப் பிடித்தது வாத்துதான்.பிராணிகளை படம் எடுப்பது கஷ்டம். அதுவும் why do you disturb me என்ற கேள்வியுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிராணிகளை படம் எடுப்பது கஷ்டம் - உண்மை. அவற்றுக்கு நம்மை விட பயமும், வெட்க உணர்வும் அதிகம் - குறிப்பாக மயில்களுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜே.கே. ஜி!

   நீக்கு
 14. அனைத்து படங்களும் அழகு.
  முகத்தை மறைத்துக் கொண்ட வாத்து அழகு.

  தஞ்சை கோவில் தலை இல்லா சிலை பிள்ளையார் தான் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிள்ளையார் சிலையாகத் தான் எனக்கும் தோன்றியது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 15. வணக்கம் சகோதரரே

  முதலாவது படம் மிக அழகு. மாமல்லபுரம் எப்போதோ போனது. பார்த்ததாக கூட நினைவில்லை. மலையளவு துயரங்களை தன்னம்பிக்கை கொண்டு முறியடிக்கலாம். என்ற கதை அருமை.

  ஒவ்வொரு படங்களும் மிக அருமையாக உள்ளது.
  குழந்தைகள் அழகாக இருக்கின்றனர்.
  ஒவ்வொரு வாசகங்களும், கவிதைகளும் படிக்க படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக உள்ளது.
  தலையை உடலுக்குள் புதைத்து கொண்ட வாத்து படம் மிகவும் அழகாக உள்ளது.
  அதற்கேற்ற கவிதை வரிகளும் சூப்பர்.அனைத்தையும் ரசித்தேன்.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 16. படங்கள் ரசனையின் அழகிய வெளிப்பாடுகள். நற்றிணைப் பாடல் ரசிக்கவைத்தது. படங்களையும் பதிவையும் ஒருசேர சுவைத்தேன் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....