புதன், 22 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் - இரவு உணவு – மாவா கி கச்சோடி - ஃபலூடாராஜாக்கள் மாநிலம் – பகுதி – 21

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


மாவா கச்சோடி....


ஜோத்பூர் நகரில் ஏற்பாடு செய்திருந்த தங்குமிடம் உதய்பூர் அளவிற்கு இல்லை என்றாலும் ஓகே ரகம் தான். எங்கள் பெயர்களை பதிவு செய்வதற்கு முன்னர் அறைகளைப் பார்த்து வந்தோம் – ஒரே ஒரு குளிரூட்டப்பட்ட அறை மட்டுமே இருந்தது – மற்றவை வட இந்தியா ஸ்பெஷல் ஆன Desert Cooler இருக்கும் அறைகள் தான். எங்கள் குழுவிலேயே ஒரு நண்பர் குடும்பத்தினருக்கு ஏசி அறையை ஒதுக்கி விட்டு மற்றவர்கள் மற்ற அறைகளில் தங்கலாம் என நினைத்தோம். தங்குவதற்கு முன்னரே இந்த இடம் ஓகேவா, இல்லை வேறு எங்கும் பார்க்க வேண்டுமா என சில நிமிடங்கள் எங்களுக்குள் பேசிக் கொண்ட பிறகு, “ஓரிரவு மட்டுமே இங்கே தங்க வேண்டும்” என்பதால் அங்கேயே தங்க முடிவு செய்தோம்.


ஆட்டே கி ஹல்வா...

பதிவேட்டில் பெயர்களைப் பதிவு செய்து கட்டணம் பற்றிய விவரங்களையும் கேட்டுக் கொண்டோம். அறையைக் காலி செய்யும் போது கொடுத்தால் போதுமானது என்று சொல்லி விட்டார். அதுவரை எங்கள் உடைமைகள் அனைத்தும் வண்டியிலேயே இருந்தது. இந்தச் சமயத்தில் குழுவில் இருந்த நண்பர் பற்றி சொல்ல வேண்டும். மலையேற்றத்திற்காகக் காத்திருந்த போதும், உங்க எல்லோரையும் தோள்களிலே அமரவைத்துத் தூக்கிக் கொண்டு போக முடியும், என்று சொல்ல, அவரை நாங்கள் அனைவரும் ஓட்டிக் கொண்டிருந்தோம். அவரை அனைவருமாக அழுத்திப் பிடித்து புகைப்படம் எடுத்ததோடு விட்டோம்.


நண்பர்....

அதே போலவே ஜோத்பூர் தங்குமிட வாசலிலும் அந்த நண்பர் “என் தோள்கள் திணவெடுக்கின்றன. என்னால் ஒரே சமயத்தில் அத்தனை உடைமைகளையும் தூக்கிக் கொண்டு செல்ல முடியும்” என வேடிக்கைக்கு மீண்டும் சவால் விட, எல்லோருமாகச் சேர்ந்து, அவர் தோள்களிலும் கைகளிலும் பைகளையும் பெட்டிகளையும் கொடுத்து விட்டோம்! அவரும் அனைத்தையும் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு போனார். ஆனாலும் அவர் வீட்டம்மாவிடம் திட்டு வாங்கினார் – ஏன் என்று கேட்டால் – அவர்கள் கொண்டு வந்த பெட்டி வைத்த இடத்திலேயே இருந்தது! திட்டு கிடைக்காமல் வேறு என்ன கிடைக்கும்… இந்த வாரம் கூட நண்பர்கள் எல்லோரும் கூடி இருந்தபோது இந்த நிகழ்வினை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தோம்.


Gகேவர்....

தங்குமிடத்தில் இருந்தபோது ஜோத்பூர் நண்பரின் அழைப்பு வந்தது – இரவு உணவினை இந்த இடத்தில் சாப்பிடலாம் – நன்றாக இருக்கும் – வீட்டு உணவு போல இருக்கும் எனவும் ஒரு இடத்தினைச் சொன்னார். சரி அங்கேயே சென்றுவிடலாம் என்று முடிவு செய்தோம். அங்கே செல்வதற்கு முன்னர் ஜோத்பூர் நகருக்குள் இருக்கும் ஒரு ஐயப்பன் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து கொண்டு போகலாம் எனச் சொன்னார் – வரும் வழியில் இக்கோவில் பார்த்தேன் என்றும் சொன்னதால் வழியில் கேட்டுக்கொண்டு அங்கே சென்று சேர்ந்தோம். மாலை நேரப்பூஜையில் கலந்து கொண்ட போது, அப்போது அங்கே நடந்திருக்கும் பூஜைகள் பற்றிச் சொல்லி அடுத்த நாள் சிறப்பு பூஜைகள் உண்டு என்றும் நிச்சயம் வரவேண்டும் என்றும் சொன்னார்கள். 


ஜோத்பூர் அய்யப்பன் கோவில்....

ஜோத்பூர் நகரில் இருக்கும் அய்யப்பன் கோவிலில் திவ்ய தரிசனம் முடிந்த பிறகு நண்பர் சொன்ன உணவகத்திற்கு, கூகிள் மேப் உதவியுடன் சென்று சேர்ந்தோம். கேண்டில் லைட் டின்னர் போல – ஒன்றோ இரண்டோ விளக்குகள் தான் அங்கே இருந்தன. மக்களும் அதிகம் இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருந்தார்கள். நாங்கள் சென்று பதினான்கு பேருக்கும் உணவு சொல்லி இருப்பதைச் சொல்ல, உட்காருங்கள் கொஞ்சம் நேரம் எடுக்கும் என்று சொன்னார். அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து கொண்டோம். அந்த இடத்தில் இருந்தது எங்கள் குழுவினர் மட்டுமே. ஏற்கனவே இருந்த இருவரும் பார்சல் வாங்கிக் கொண்டு புறப்பட்டார்கள். அரை மணி நேரத்திற்கும் மேல் ஆன பிறகும் தட்டு கூட வரவில்லை. கொசு வேறு பிடுங்க ஆரம்பித்தது. பூச்சிகளின் ரீங்காரம் வேறு.


மாவா கச்சோடி....

கொஞ்சம் கொஞ்சமாக பொறுமை இழக்க ஆரம்பித்திருந்தோம். எங்களிடம் ஆர்டர் எடுத்தவர் அங்கேயும் இங்கேயும் நடக்கிறார். வேறு ஒருவர் வேக வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு எங்கோ செல்கிறார் – கொஞ்சம் நேரத்தில் காய்கறி, தயிர் போன்றவை வருகிறது! அட இனிமே தான் காய்கறி நறுக்கி, சமையலா என எங்களுக்குத் தோன்றியது. சிலருக்கு கோபம் வர, நானும் ஓட்டுனர் ஜோதியும் மறைவாக இருந்த சமையலறைப் பக்கம் சென்று பார்த்தால், கைக் குழந்தையோடு ஒரு பெண் சப்பாத்தி செய்து கொண்டிருக்கிறார். அந்த உணவகம் நடத்துபவரின் மனைவி போலும். கணவரும் மனைவியுமாக உணவகம் நடத்துகிறார்கள். 


மிர்ச் bபடா எனப்படும் மிளகாய் பஜ்ஜி....

கைக்குழந்தையோடு அந்தப் பெண்மணி வேகவேகமாக ரொட்டி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தபோது கஷ்டமாக இருந்தது – அவர் ரொட்டி செய்து தர, தட்டுகளில் சப்ஜி போட்டுத் தந்தார் கணவர். நானும் ஜோதியும் தட்டுகளை வாங்கி குழுவினருக்கு கொடுத்தோம். எல்லோருக்கும் கொடுத்த பிறகு நாங்களும் தட்டுகளோடு ஓரிடத்தில் அமர்ந்தோம். பிறகு கணவரும் வேறு ஒரு உதவியாளரும் எங்கள் அனைவருக்கும் சுடச் சுட ரொட்டிகளைத் தந்த வண்ணம் இருந்தார்கள்.  மொத்தமாக 14 பேர் என்பதால் அனைவருக்கும் ரொட்டி ஒரே சமயத்தில் செய்வது கஷ்டம் தானே. கொஞ்சம் நேரமெடுத்தாலும், ரொட்டி, தால், சப்ஜி, ராய்த்தா என எல்லாமே நன்றாக இருந்தது. எங்கள் அனைவருக்குமான உணவுக்கு நாங்கள் கொடுத்த காசு – 1200 ரூபாய் மட்டும்.


ஜோத்பூரி தாலி....


ஃபலூடா....

உணவகத்தினை நடத்துபவருக்கு நன்றி சொல்லி அங்கிருந்து புறப்படும் போதே இரவு 10 மணி ஆகியிருந்தது. ஏற்கனவே உதய்பூரில் நாங்கள் மூவர் மட்டுமே பாதாம் ஷேக் சாப்பிட்டதால் இங்கே குழுவில் இருந்த மற்றவர்களுக்கும் வாங்கிக் கொடுக்கலாம் என ஜோத்பூரின் மெயின் மார்க்கெட் பகுதிக்கு வண்டியை விட்டோம். அங்கே இருந்த ஒரு இனிப்பகம்/உணவகத்தில் கேட்டால் பாதாம் மில்க் ஷேக் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஃபலூடா மற்றும் மட்கா குல்ஃபி தான் இருந்தது. சரி என அனைவருக்கும் ஃபலூடா ஆர்டர் செய்தோம். பாதாம் ஷேக் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே இருந்தது. குழுவினர்களை அடுத்த முறை உதய்பூர் போகும்போது வாங்கித் தருகிறேன் என்று சொல்லி சமாதானம் செய்தோம்! :) ஃபலூடாவுக்கும் சில ஐஸ்க்ரீம்களுக்குமாக மொத்தச் செலவு 540/- மட்டும்!


ப்யாஜ் கச்சோடி....

ராவத் மிஷ்டான் பண்டார் எனும் புகழ்பெற்ற இனிப்பகத்திலிருந்து ”மாவா கி கச்சோடி” மற்றும் வேறு சில இனிப்புகளும் வாங்கிக் கொண்டோம். பிறகு அங்கிருந்து புறப்பட்டு தங்குமிடம் வந்து சேர்ந்தோம். அன்றைய தினம் முழுவதும் பார்த்த இடங்கள் பற்றிய சிந்தனையோடு கணக்கு வழக்குகளை முடித்துக் கொண்டு நல்ல உறக்கம். அடுத்த நாள் காலையில் எழுந்திருந்து நீல நகரமாகிய ஜோத்பூரில் உள்ள ஒரு சில இடங்களைப் பார்க்க வேண்டும். உங்களை அழைத்துச் செல்ல நான் ரெடி. நீங்க ரெடியா?

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


பின்குறிப்பு: ஃபலூடா மற்றும் நண்பர் படம் தவிர்த்து மற்ற படங்கள் இணையத்திலிருந்து...

32 கருத்துகள்:

 1. மாவா கச்சோடி பார்வைக்கு தேவகோட்டை ஏரியா அதிரசம் போலவே இருக்கிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருமணத்துக்கு தேவகோட்டை அதிரசமா இல்லை பரமக்குடி அதிரசமா கில்லர்ஜி..

   நீக்கு
  2. தேவகோட்டை செட்டிய வீட்டு ஆச்சி செய்த ஸ்பெஷல் அதிரசம் தமிழரே...

   நீக்கு
  3. ஆஹா.... அருமை.... எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் கில்லர்ஜி....

   நீக்கு
  4. ஆஹா.... தேவகோட்டை அதிரசம் மாதிரி இருக்கா.... இருக்கலாம்! அதிரசம் எனக்கு ரொம்பவும் பிடித்த ஒரு உணவுப்பண்டம். இங்கே கிடைப்பதில்லை என்பதில் எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  5. அது தேவகோட்டையோ, இல்லை பரமக்குடியோ - திருமணம் என்றால் அதிரசம் இல்லாமல் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  6. ஆஹா தேவகோட்டை அதிரசம் - வர முடிந்தால் நன்றாக இருக்கும். பணிச்சுமைகள் எங்கேயும் பயணிக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
  7. எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும். மணமக்களுக்கு எனது வாழ்த்துகளும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 2. இன்றைய பயணத்தில் ஒரே உணவாக இருக்கிறதே (ஐயப்பன் கோவிலைவிட). படங்கள் இணையத்திலிருந்தா?

  கேவர் இனிப்பைப் பார்க்கும்போதெல்லாம் என் நினைவுக்கு நீங்கதான் வருவீங்க. இதை அறிமுகப்படுத்தியது நீங்க. அந்த வாரமே பெங்களூரில் சாப்பிட்டேன். மனைவிக்கும் வாங்கிச் சென்றிருந்தேன் (எதேச்சயா அப்போ பஹ்ரைனிலிருந்து பெங்களூர் சென்றிருந்தேன்)

  ஃபலூடா ஒரு தட்டில் இப்போதான் பார்க்கிறேன். எப்போதும் பெரிய தம்ளரில்தான் சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு மிகப் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உணவு படங்கள் - ஆமாம் கொஞ்சம் அதிகம் தான். கோவிலில் படங்கள் எடுக்கவில்லை. படங்கள் இணையத்திலிருந்து தான். ஃபலூடா படம் மற்றும் நண்பர் படம் தவிர அனைத்தும் இணையத்திலிருந்து என குறிப்பில் சொல்லி இருக்கிறேன்.

   கேவர் - உங்களுக்குப் பிடித்ததா என்று சொல்ல வில்லையே!

   இங்கே தட்டில் தான் ஃபலூடா - தில்லியிலும் இப்படித்தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. நீங்க உங்க பதிவுல மென்ஷன் பண்ணியிருக்கலைனா நான் சாப்பிட்டிருக்க மாட்டேன் (எங்கள் கண்முன்னால் பண்ணிக்கொண்டிருந்தார்கள்). என் மனைவிக்கு சென்னைக்கு வாங்கிச் சென்றிருந்தேன். அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனக்குப் பிடிக்காத இனிப்பு இனித்தான் யாரேனும் கண்டுபிடிக்கணும்.

   நீக்கு
  3. எனக்குப் பிடிக்காத இனிப்பு இனித்தான் யாரேனும் கண்டுபிடிக்கணும்! ஹாஹா... சேம் பிஞ்ச். எனக்கும் இனிப்பு ரொம்பவும் பிடித்த விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. மாவா கசோடி, ஃபலூடா இரண்டும் சாப்பிடும் ஆசை வந்து விட்டது. என்ன இருந்தாலும் இந்த இனிப்பு வகைகளில் ராஜஸ்தான், குஜராத்தை மிஞ்ச முடியாது நம்மால்! :))) மிட்டாய்க் கடைகளில் அவங்க சாம்பிளுக்குக் கொடுப்பதே வயிறு நிறையும். ஃபலூடா பெயரைப் பார்த்துட்டுத் தான் ஓடோடி வந்தேன். இந்த ஃபலூடா நான் வீட்டிலேயும் தயாரிப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா ஆசை வந்து விட்டதா உங்களுக்கு.... ஃபலூடா நீங்களாகவே செய்து சாப்பிடலாம். மாவா கச்சோடி?

   உண்மை. இங்கே இருக்கும் இனிப்புகள் ரொம்பவே சிறப்பு தான். சாம்பிள் - தலைநகரில் அப்படித் தருவதில்லை பெரும்பாலும் - குறிப்பாக பெரிய கடைகளில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. பதில்கள்
  1. இந்தப் பதிவினை முன்னரே படித்து கருத்தும் சொல்லி இருக்கிறேன். கரோல் பாக் பகுதியில் இருக்கும் ரோஷன் தி குல்ஃபி கடையில் அடிக்கடி சாப்பிட்டதுண்டு - ஆரம்ப கால தில்லி வாழ்க்கையில்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 5. திருமண மண்டபம் போல் உள்ளதே என்று நினைத்தால் கோயில்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோவில் தான். வெளிப்புறப் படம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. ஃபலூடா, கச்சோடி... - அருமை..

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. உணவு வகை படங்கள் எல்லாம் அருமை.
  ஐயப்பன் கோவில் படம் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 8. ஐயப்பன் கோவில் படங்கள் அழகு..

  பயணத்தின் சுவையை கூட்ட, இப்படி ஒருவர் வேணும். பார்க்கும்போதே அவரை பிடிச்சு போச்சுது.

  மாவோ!! இந்த பெயரில் ஒரு போதை வஸ்து இருக்குன்னு நினைக்குறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாவோ இல்லை - மாவா - குஜராத்தில் குட்கா போன்ற வஸ்துவிற்கு மாவா எனப் பெயர் உண்டு.

   பயணத்தில் இருப்படி ஒருவர் வேணும் - நண்பரிடம் சொல்லி விடுகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 9. இன்று பகிர்ந்த உணவுகளில் அதிகம் இனிப்புக்கள்.. எனக்கு அவை வேண்டாம், மிளகாய் பஜ்ஜி மட்டும் போதும். ஐயப்பன் கோயிலைப் பார்க்க ஏதோ கல்யாண மண்டபம் போல இருக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிளகாய் பஜ்ஜி மட்டும் போதுமா... ஓகே... இனிப்புக்குத் தான் போட்டி அதிகம் போல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 10. தட்டில் இருக்கும் உணவு கைகைகளைப் பார்த்தால் ஒரு நாலாயிரம் ருபாய் பில் இருக்கும் என்று நினைத்தேன், மலிவுதான். புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரும்பாலும் இங்கே உணவு விலை குறைவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கும்மாச்சி.

   நீக்கு
 11. உணவு வகைகள் பார்க்கப் பார்க்க ருசிக்கத் தூண்டுகின்றன

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 12. நண்பருக்கு உதவ யாரோபின்னால் நிற்பது போல் தெரிகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் முதுகில் பைகளை மாட்டி விட்ட நபர் - உதவி செய்ய செல்ல! அந்த நபர் நான் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....