சனி, 25 ஆகஸ்ட், 2018

காஃபி வித் கிட்டு – உழைப்பாளி – இங்கேம் இங்கேம் – வாஜ்பேயி திருமணம் – ஆனந்த வாசிப்பு – ஓலா ஓட்டுனர்காஃபி வித் கிட்டு – பகுதி - 3

இந்த வார உழைப்பாளி


உழைப்பாளி....அலுவலகத்திலிருந்து மாலை வீடு திரும்பும்போது பெரும்பாலும் மூன்று நண்பர்களாகச் சேர்ந்து வருவது வழக்கமாக இருக்கிறது. நாங்கள் புறப்படும் நேரத்தில் நிறைய ஆட்டோவாலாக்கள் காத்திருப்பார்கள் – அவர்களில் பலரும் பழகியவர்கள். எந்தப் பேச்சுமே கிடையாது – நாங்கள் ஏறி உட்கார்ந்து கொள்ள எங்கள் இடத்தில் கொண்டு விட்டு கொடுக்கும் காசை வாங்கிக் கொண்டு தலையை அசைத்துச் செல்வது தான் வழக்கம். பெரும்பாலும் எங்களுக்குள் பேசிக் கொள்வது கூட குறைவு தான். சில நாட்களில் மட்டும் ஏதோ ஒரு ஆட்டோவாலா எங்களிடம் பேச்சுக் கொடுப்பார். அன்றைக்கு முன்னாள் பிரதமர் அடல் பீஹாரி வாஜ்பாய் அவர்களின் பூத உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதால் அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை. ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டார் – இப்போதைய அரசியல்வாதிகள் ஒருவரும் அவர் போல இல்லை என்று சொல்லிக் கொண்டு வந்தார் ஆட்டோ வாலா. 

பெரும்பாலும் அரசியல் பேச்சுக்களைத் தவிர்த்து விடுவது எனது வழக்கம். பேச்சை அவராகவே திசை திருப்பினார். குருத்வாரா வெளியிலிருக்கும் தேநீர் கடைக்காரர் சர்க்கரைப் பாகு போல தேநீர் கொடுத்ததைச் சொல்லி, வாயின் சுவை கெட்டுப்போனது என்று சொல்லிக் கொண்டு வந்தார். வீட்டிலிருந்து வரும்போதே ஒரு தெர்மஸில் [ஃப்ளாஸ்க்-ஐ இங்கே இப்படி அழைப்பார்கள்] எடுத்து வரலாமே என்று கேட்க, காலையில் ஒன்பது மணி முதல் இரவு பதினொன்று வரை ஆட்டோ ஓட்டுகிறேன் – ஒரு நாளுக்கு குறைந்தது ஆறு கிளாஸ் தேநீர் குடிப்பது வழக்கம் – அத்தனையும் எடுத்து வரமுடியாது – அப்படியே எடுத்து வந்தாலும் சுவை இருக்காது என்று சொன்னார்.

1985-ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரை, கிட்டத்தட்ட 33 வருடங்களாக ஆட்டோ ஓட்டுகிறாராம். மகன் மைக்ரோமேக்ஸ் கம்பெனியில் வேலை செய்கிறாராம். என் கைகால்களில் தெம்பு இருக்கும் வரை உழைப்பேன் – சொந்த வீடு இருக்கிறது – ஆட்டோவும் சொந்தம் தான். யாரையும் நம்பி நான் இருக்கக் கூடாது – உழைத்து தான் சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று சொன்னார். இத்தனையும் ஐந்து நிமிட பயணத்தில் பேசியவை. உழைப்பாளிக்கு வாழ்த்துகளைச் சொல்லி விடைபெற்றோம். பார்க்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ளக் கிடைக்கிறது. கற்றுக் கொள்வது உங்கள் கைகளில்!

இந்த வாரத்தின் ரசித்த பாடல்:

இசைக்கு மொழி கிடையாது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை அவ்வப்போது கேட்பதுண்டு – புரிகிறதோ இல்லையோ, இசைக்காகக் கேட்பதிலும் சுகம் உண்டு. நண்பர் வாட்ஸப்-ல் பகிர்ந்த ஒரு தெலுங்குப் பாடல் [இசை கோபி சுந்தர்] நீங்களும் ரசிக்க இதோ….ராஜா காது கழுதை காது:

சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பீஹாரி வாஜ்பேய் அவர்கள் பற்றியது இந்த விஷயம். சமீபத்தில் வயதான ஒருவரை AIIMS அருகில் பார்க்க முடிந்தது. அன்று தான் வாஜ்பேய் அவர்கள் மரணமானதை உறுதி செய்தார்கள். அந்தப் பெரியவருக்கு எப்படியும் 85 வயதிற்கு மேல் இருக்கலாம் – நடையில் அப்படி ஒரு தளர்ச்சி – தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய விஷயம் இது தான்…

பாவம், மனுஷன் பிரம்மச்சாரியாகவே இறந்து விட்டார். அவர் அந்தம்மாவைத் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். தலைவாரான பெண்ணின் அப்பாவுக்கும் அதில் சம்மதம் உண்டு. ஆனால் அந்தம்மா வேற ஆளைக் கல்யாணம் பண்ணிட்டு போயிடுச்சு…. பாவம் இவர் தான் பிரம்மச்சாரியாவே போயிட்டார்…. எல்லாம் நேரம்!  அந்தம்மா மட்டும் இவரைக் கல்யாணம் செய்திருந்தால் இப்படி தனிக்கட்டையா போயிருக்க வேண்டாம்…. அந்தம்மா யார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்! :)

இந்த வாரத்தின் பதிவர்:

பதிவுலகம் கொஞ்சம் கொஞ்சமாக தனது விறுவிறுப்பினை இழந்து கொண்டிருப்பது கண்கூடு. எத்தனை எத்தனை பதிவர்கள், தினம் தினம் எத்தனை பதிவுகள் – தமிழ்மணத்தில் ஒரு நாளில் வெளியிடப்பட்ட பதிவுகளே 100க்கு மேல் இருந்ததுண்டு. நான் தொடரும் பதிவர்களின் பதிவுகளை ஒவ்வொரு நாளும் படிப்பதற்கே கஷ்டமாக இருந்ததுண்டு. இன்றைக்கு ஒவ்வொரு நாளும் வெளிவரும் பதிவுகள் மிகக் குறைவான எண்ணிக்கையில். எனது பழைய பதிவுகளில் தொடர்ந்து கருத்துரைத்த சில பதிவர்கள் இன்றைக்கு எழுதுவது கூட இல்லை! பத்மநாபன் – ஆனந்த வாசிப்பு தளத்தில் சில பதிவுகள் எழுதி இருக்கிறார். நண்பர்கள் வலைத்தளங்களில் அவரது கருத்துப் பகிர்வுகள் சிறப்பாக இருக்கும். இப்போது எங்கே இருக்கிறார் என்று கூட தெரியவில்லை. சில நட்புகளை இப்படியே இழந்து விட்டோம் இல்லையா…..  

அவ்வப்போது இப்படி காணாமல் போன பதிவர்கள் பற்றி இங்கே பார்க்கலாம்!

வித்தியாசமான பெயரில் ஓலா ஓட்டுனர்:

அலுவலக நண்பர் ஒருவர் – ஸ்வாரஸ்யமான மனிதர் – அவர் பற்றி பிறிதொரு சமயத்தில் விரிவாகப் பார்க்கலாம் – இப்போதைக்கு அவரது ஒரு பண்பு மட்டும் – நல்லதொரு Tech Savvy – பெரும்பாலும் Online-லியே தன்னுடைய பல வேலைகளை முடித்துக் கொள்வார். மொபைல் மூலமாகவே பல விஷயங்களைச் செய்வதில் வல்லவர். அவர் அலைபேசியில் எத்தனை App இருக்கும் என்பதை கணக்கில் எடுக்க முடியவில்லை. எந்த App பற்றி கேட்டாலும் அவருக்குத் தெரிந்திருக்கும்! அதைப் போலவே எந்த தளத்தில் எந்தப் பொருளுக்கு எத்தனை டிஸ்கவுண்ட் என்று அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அனைத்தும் விரல் நுனியில் அத்துப்படி!

இந்த செவ்வாய்க் கிழமை பேருந்து நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது எதிரில் அவர்! – வாங்க ஓலா கேப்-ல போகலாம் என்று அழைத்தார். ஏற்கனவே ஓலா புக் செய்து, ஓட்டுனருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல 76 ரூபாய் – அதில் 50 ரூபாய் உடனடி டிஸ்கவுண்ட் – ஆக வெறும் 26 ரூபாயில் அலுவலகம் சென்று சேர்ந்தோம். Of course, அந்த 26 ரூபாயிலும் ஒரு ரூபாய் ஏதோ டிஸ்கவுண்ட். மீதி 25 ரூபாய் ஆன்லைன் மூலமாகவே/Paytm மூலமாகவே அனுப்பி விட்டார். எல்லாமே ஆன்லைன் தான்! ஐந்து நிமிடத்தில் அலுவலகம் வந்தாயிற்று. அந்த ஓட்டுனரிடம் பேச்சுக் கொடுத்தபடியே வந்தார் நண்பர் – ஓலா App-இல் வருவது உங்க பெயர் தானா – வித்தியாசமா இருக்கே என்றார். ஆமாம் என் பெயர் தான் என்று சொன்னார் அந்த இளைஞரும். ஆந்திராவினைச் சேர்ந்தவர் – அப்பா, அம்மா இருவருமே இங்கேயே Settle ஆனவர்கள். பெயர் என்னன்னு தான் கேட்கறீங்க – சொல்றேன் – அந்த ஓலா ஓட்டுனர் பெயர் – துரியோதன்….

புகைப்பட நாள் – சிறப்புப் படம்:மேலுள்ள படம் – சமீபத்தில் தலைநகர் தில்லியின் ஒரு விழாவில் எடுத்த படம் – அந்தப் பெரியவர் கண்களில் தூரப் பார்வை – இசைக் கருவியை வாசித்தபடி அமர்ந்திருந்த அந்தப் பெரியவரின் கண்களில் ஏதோ ஒரு தேடல் – என்னென்னவோ சொல்கிறது இல்லையா…

என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

32 கருத்துகள்:

 1. அருமை, சுவாரசியமானவை !!! அந்த வாஜ்பாயி கல்யாண விஷயத்தையும் பட்டுன்னு போட்டு உடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும் !!! இப்போ தலையே வெடிச்சிடும் போல இருக்கே !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பட்டுனு போட்டு உடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்! ஹாஹா.... சொல்ல முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷங்கர் ஜி!

   நீக்கு
 2. வாஜ்பேய் திருமணம் செய்துக்க விரும்பிய பெண்மணி யாருனு சொல்லி இருக்கக் கூடாதோ? இந்தச் செய்தியே ஏனக்குப் புதுசு இஃகி, இஃகி, மற்றச் செய்திகளும் அருமை. வாத்தியம் வாசிக்கும் பெரியவர் கண்களில் தேடல், சோகம். ஓலா எங்களுக்கு என்னமோ சரிப்பட்டு வரலை. அல்லது திருச்சி ஓலா ஓட்டுநர்கள் சரியா இல்லை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருச்சி ஓலா - சில சமயம் பயன்படுத்துவதுண்டு.

   பெரியவர் கண்களில் தேடல், சோகம் - உண்மை. நன்றாகவே வாசித்தார் என்றாலும் அவரிடம் வாத்தியம் வாங்கியவர்கள் ஒருவர் கூட இல்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 3. எனக்குத் தெரிந்து "ராவணன்" என்னும் பெயரில் கூட ஒருத்தர் இருக்கார்/இருந்தார். இரண்யகசிபு, இரண்யாட்சன் என்னும் பெயரில் தான் இல்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராவண் என்ற பெயரில் சிலர் இங்கே இருக்கிறார்கள். இரண்யகசிபு, இரண்யாட்சன் - ஹாஹா.... நானும் இன்னும் இந்தப் பெயர்களோடு இருப்பவர்களைச் சந்திக்கவில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. தமிழ்மணம் நிறையப் பதிவுகள் வருவதாகக் காண்பிக்கறதே. யாரும் தெரிந்த பெயராக இருந்தால் வாசிப்பதுண்டு.
   உங்கள் கிட்டு வித் காப்பி நன்றாக இருக்கிறது. அட அந்த ஓலா ஆப்ப் வசதியாக இருக்கே.
   வாஜ்பேயி மணக்க இருந்த பெண் .....யாரா இருக்கும். சே ரொம்ப மோசம் கண்டு பிடிக்க முடியவில்லை.பாவம் இவர்.

   நீக்கு
  3. தமிழ்மணம் - இப்போது வரும் பதிவுகள் பெரும்பாலும் எனக்குத் தெரியாதவர்களின் பதிவுகள் தான்...

   ஓலா ஆப்ப் - வசதியாகத் தான் இருக்கிறது மா....

   அடடா உங்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை அந்தப் பெண்மணியை... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   நீக்கு
 4. ஆட்டோக்காரர் வைராக்கியம் சிறப்பு...

  அந்த அம்மா யார்...?

  பெரியவரின் பார்வை ஏக்கமா...? கோபமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் இல்லை என்று தான் எனக்குத் தோன்றியது. அவர் கடனே என வாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தது போல இருந்தாலும் அனுபவித்து வாசித்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. ஒவ்வொரு வயதானவர்களின் முகமும் ஒரு கதையை, வெறுமையாய்ப் போன வாழ்க்கையை, இளமைத் துள்ளலை காலம் பறித்துக்கொண்டதை, உழைத்த காலங்களுக்குப் பின் வயதானபோது வாழ்க்கை அளித்த ஏமாற்றம்... என்ன என்னவோ நினைக்க வைக்கிறது.

  கிசு கிசுக்களின் மிகப் பெரிய பிரச்சனை, அப்பாவிகளையும், இவராக இருக்குமோ என நினைத்து நமக்குப் பாவம் சேர்ப்பதுதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில மனிதர்களைப் பார்க்கும்போதே நம்முள் உணர்வு அலைகள் அடிக்க ஆரம்பித்து விடுகின்றன - குறிப்பாக முதியவர்களை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 6. ஒரு வேளை பெயர்களைக் கொண்டு அவர்களை எடை போடும்வழக்கத்தாலோ என்னவோ சில பெயர்கள் சரியானவை இல்லை என்று எண்ண வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 7. ரசிக்கும்படியான, வியக்கும்படியான செய்திகளைத் தருகின்ற உங்களது பாணியைக் கண்டு வியக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
  2. தொகுப்பு சுவையாக இருக்கிறது. ஆட்டோ டிரைவரை வாழ்த்தலாம்.
   கண்களில் சோகமும், கைகளில் வாத்தியமுமாய் இருக்கும் பெரியவர் சிந்து பைரவில் வரும் கிழவனாரைப் போல் இருக்கிறார்.
   வாஜ்பேயை மருமகனாக ஏற்க மறுத்த அந்த அர்ஷியல் தலைவர் யாராக இருக்கும்?கூகுளார் உதவுவாரா?
   துரியோதன் பெயர் அரிதுதான். ஸ்ரீரங்கத்தில் கீழை சித்திர வீதியில் ராவணன் என்று ஒரு பால்காரர் இருந்தார்.

   நீக்கு
  3. சிந்து பைரவியில் வரும் கிழவனார்... சிந்து பைரவி படமா இல்லை ஏதும் சீரியலா? படத்தில் கிழவனார் இருப்பதாக நினைவில்லை.

   கூகுளார் உதவ வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

   கீழ சித்திர வீதியில் ராவணன் - இலங்கேஸ்வரன் என எனக்குத் தெரிந்த ஒருவர் இருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   நீக்கு
 8. வணக்கம் சகோதரரே

  இந்த வாரமும் அனைத்தும் நன்றாக இருந்தது.

  தன்னம்பிகையும், சுயமாக உழைத்து வாழ வேண்டுமென்ற தைரியமும் கொண்ட ஆட்டோ டிரைவரை பாராட்ட வேண்டும்.

  பாட்டு நீங்கள் சொன்னது போல் இனிமையாக இருந்தது. ரசித்தேன்

  ஓலா டிரைவரின் அனைவருக்கும் பயனுள்ள ஞாபகசக்திக்கு நன்றி.

  வயதானவரின் சோகம் மனதை வருந்தியது.
  அனைத்தும் ரசிக்கும்படியாக இருந்தது
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 9. ஒரு பதிவிலிருந்து அவரவர் பின்னூட்டத்திற்காக தேர்ந்தெடுக்கும்
  பகுதியை வைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டவரின் எண்ண
  ஒட்டத்தை அறிந்து கொள்ள முடியுமா என்று சமீபத்தில் பிரபல பதிவர் ஒருவர் என்னிடம் கேட்டார்.

  இந்தப் பதிவுக்கான பின்னூட்டங்களை படிக்கும் பொழுது முடியும் என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த பிரபல பதிவர் யாரென்றும் சொல்லி இருக்கலாமே ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஜி!

   நீக்கு
 10. அனைத்தும் அருமை.
  வாஜ்பேயி மணக்க இருந்த பெண் .....யாரா இருக்கும்?
  நீங்கள் சொன்னதை வைத்து யூகிக்க முடிந்து விட்டது, ஆனால் சொன்னால் நன்றாக இருக்காது இப்போது.
  அது ரகசியமாய் இருக்கட்டும்.
  முதல் செய்தி (உழைப்பாளர்) ஆருமை.
  பாடல் இனிமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதில் சொன்னால் நன்றாக இருக்காது - அதுவும் சரி தான். அதனால் தான் நானும் சொல்லாமல் விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 12. ஆட்டோக்காரரின் தன்னம்பிக்கைக்கு கவர்கிறது.

  இந்தப் பாடல் பற்றி சமீபத்தில்தான் என் மகன் சொல்லிக் கொண்டிருந்தான். கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். சித் ஸ்ரீராம் பாடிய பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பாடல் இளைஞர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. பாடல் கேட்டீர்களா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 13. வாஜ்பாய் - அந்த அம்மா யார் என்கிற என்னுடைய கெஸ்ஸில் எனக்கே பயமாக இருக்கிறது. நல்லவேளை என்று தோன்றுகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா.... உங்களுக்கே பயமாக இருந்ததா.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. ஒன்று தெரியுமோ... ஒலாவோ, ஊபரோ... பே டி எம் மூலமாக பணம் கைமாறுவதைவிட, கையில் கேஷாகக் கிடைப்பதையே விரும்புகிறார்கள். ஊபரில் முன்பெல்லாம் நிறைய ஆஃபர்கள் தந்து கொண்டிருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கையில காசு வாயில தோசை.... இது தான் நல்லது என்று தெரிந்தவர்கள். என்னதான் பேடிஎம் இருந்தாலும் சில இடங்களில் அவை பயன் தருவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....