சனி, 11 ஆகஸ்ட், 2018

காஃபி வித் கிட்டு - மீண்டும் ஃப்ரூட் சாலட் – பாப்பட் கி சூரி – தலைமுடிக்கு அக்கப்போர் – ராக கங்கா“காஃபி வித் கிட்டு”ஃப்ரூட் சாலட் தலைப்பில் 200-க்கும் அதிகமான பதிவுகள் – வாரம் ஒன்று என்ற கணக்கில் எழுதிக் கொண்டிருந்தேன். சென்ற ஒரு வருடமாக ஃப்ரூட் சாலட் பகுதி வெளியிட முடியவில்லை. நடுநடுவே கதம்பம் என்ற பெயரில் சில பதிவுகள் எழுதினாலும் ஏனோ ஃப்ரூட் சாலட் பதிவுகள் போல அத்தனை திருப்தி தரவில்லை. மீண்டும் ஃப்ரூட் சாலட் தலைப்பிலேயே எழுதலாமா இல்லை வேறு தலைப்பில், வாரத்திற்கு ஒன்று என்ற கட்டுப்பாடு வைத்துக் கொள்ளாமல் முடிந்த போதெல்லாம் ஒரு தொகுப்பு வெளியிடலாமா என்று மனதில் அவ்வப்போது தோன்றிக் கொண்டிருந்தது. அதன் விளைவே இந்த “காஃபி வித் கிட்டு” தொடர்!அது சரி யார் அது கிட்டு?  பாட்ஷா பட ரஜினி மாதிரி உண்மையைச் சொல்றேன் “என் பேரு வெங்கட்…. எனக்கு இன்னோரு பேரு இருக்கு – கிட்டு!” வீட்டுல என்னை கிட்டுன்னு தான் கூப்பிடுவாங்க! நான் ஒரு தடவை சொன்னா, ஒரு தடவை சொன்னது தான்! நூறு தடவை எல்லாம் கிடையாது! அது யாருப்பா அது ஒரு மய்யமா சிரிக்கிறது! நமக்கு அரசியலுக்கும் ரொம்ப தூரம்!

இந்த வார காணொளி - The Seat Belt Crew

சில வருடங்களுக்கு முன்னர் மும்பை நகரில் இருக்கும் திருநங்கைகளை வைத்து சாலை சந்திப்புகளில் சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவத்தினை எடுத்துச் சொல்ல வைத்தார்கள். இதற்கு முன்னர் நீங்கள் பார்த்ததுண்டா எனத் தெரியாது…. பார்த்ததில் பிடித்ததாக இந்த காணொளி… இது நல்ல முயற்சி. இன்னும் தொடர்கிறதா எனத் தெரியாது. என்ன செய்கிறார்கள் என்று பாருங்களேன்.இந்த வார ரசித்த இசை – ராக கங்கா:

முகநூலில் ஒரு தோழி பகிர்ந்து கொண்டிருந்த இசை – ரொம்பவே பிடித்துப் போனது – இது வரை பத்து பதினைந்து முறையாவது கேட்டிருப்பேன்/பார்த்திருப்பேன். செய்யும் பணியை, ரொம்பவே அனுபவித்து, செவ்வனே செய்திருக்கிறார்கள். கேளுங்களேன்…. பாருங்களேன்….பூமரம் எனும் மலையாள சினிமாவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிக்காக தயார் செய்வது போன்ற காட்சி இது என்பது கூடுதல் தகவல்! ஒவ்வொருவரின் நடிப்பும், முக பாவனைகளும் ரொம்பவே சிறப்பு.

இந்த வார உணவு – பாப்பட் கி chசூரிபாப்பட் கி chசூரி – காஃபியோ அல்லது தேநீரோ அருந்தும்போது கூடவே ஏதாவது காரசாரமா இருந்தா நல்லா இருக்கும் எனத் தோன்றுவது இயல்பு. வீட்டில் அப்படி எதுவும் இல்லை எனும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் – வெளியில் சென்று எதுவும் வாங்கி வர சோம்பல். என்ன செய்யலாம்? சிம்பிளா ஒரு வழி சொல்கிறேன். ராஜஸ்தானில் செய்கிற ஒரு ஸ்னாக் – பாப்பட் கி chசூரி! சில நிமிடங்களில் தயார் செய்து விடலாம்.ராஜஸ்தானில் பாப்பட் ரொம்பவே பிரபலம் – மசாலா பாப்பட்! மசாலா பாப்பட் நம் ஊரில் கிடைக்கவில்லை என்றால் அரிசி அப்பளம் கூட பயன்படுத்தலாம். நான் பஞ்சாபி மசாலா பாப்பட் பயன்படுத்தி செய்தேன். மிகவும் சிம்பிளான ஸ்னாக்ஸ்!

மூன்று [அ] நான்கு அப்பளம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்பளம் தீயாமல், அடுப்பில் நன்கு சுட்டுக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் அதைப் போட்டு, கைகளால் அழுத்தி சிறு சிறு துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சமாக [அரை ஸ்பூன்] காஷ்மீரி மிர்ச் பொடி அல்லது நம்ம ஊர் மிளகாய்ப் பொடி தூவுங்கள். மேலே 1 அல்லது 2 ஸ்பூன் நெய் விட்டுக் கொள்ளுங்கள். நன்கு கலந்து கொள்ளுங்கள்! அவ்வளவு தான் பாப்பட் கி chசூரி தயார். சிலர் பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளும் சேர்த்துக் கொள்வதுண்டு.

இந்த வார Character:அலுவலக நண்பர் ஒருவர் – இவரைப் பற்றி முன்னரே கூட எழுதியிருக்கிறேன் – Interesting Character! தலைமுடிக்காக ரொம்பவே வருத்தப்படுகிறார். சொட்டை விழுந்துவிட்டது என்பதற்காக ரொம்பவே வருத்தப்பட்டு, முடி வரும் என்றால் எதையும் செய்யத் தயார் என்று சுற்றுகிறார். யார் யாரோ அவரை நன்கு ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது யாரோ ஒரு சாமர்த்தியசாலி, ”இந்த எண்ணையைத் தலையில் தடவினால் முடி வளரும்” எனச் சொல்லி ஒரு பிங்க் நிற எண்ணையை இவர் தலையில் கட்டி விட்டார் – விலை கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் - ஒரு லிட்டர் 5000 ரூபாய்!

தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து கொண்டு நான்கு மணி நேரத்திற்குள் தலையெல்லாம் வியர்க்கும்படி ஓட வேண்டும் – அப்படிச் செய்தால் முடி நன்கு வளரும் எனச் சொல்லி இருப்பதால் தலையில் அந்த எண்ணையைத் தடவிக்கொண்டு – பிங்க் தலையோடு தரை அதிர ஓடிக் கொண்டிருக்கிறார். முடிதானே…. இதற்கெதற்கு இத்தனை வருத்தம் – நாள் முழுக்க அதைப் பற்றியே யோசித்து, அதைப் பற்றியே பேசி வருந்தும் அளவிற்கு ஒன்றுமே இல்லை என்று சொன்னாலும் கேட்பதில்லை. இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை தலையைத் தடவி, முடி வந்திருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அலுவலகத்தில் இருக்கும் சில விஷமிகள் – “ஆமாம்பா, நிஜமாகவே முடி முளைத்திருக்கிறது, இன்னும் எண்ணை தடவி, ஓடு – நிச்சயமா தலைமுடி வளரும்” என அவரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவரை வைத்து அவர்களுக்கு பொழுது போகிறது.

இவர் பற்றி இப்படி நிறைய விஷயங்கள் உண்டு – அவ்வப்போது எழுதுகிறேன். இந்த காரக்டர் பற்றிய உங்கள் எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள்!

இந்த வார வாட்ஸப் – Selfie of the year!மேலே எழுதி இருக்கும் காரக்டருக்குப் பொருத்தமான படமாக இருக்கும்! நேற்று தான் எங்கள் பகுதி நண்பர் அனுப்பி இருந்தார். என்ன ஒரு டெக்னிக் இல்ல! மேலே இருக்கும் கேரக்டருக்குக் காண்பிக்க வேண்டும்!

இந்த வாரம் – கடந்த வருடங்களில்….

இந்த வலைப்பூ எழுத ஆரம்பித்தது 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி. இத்தனை வருடங்களில் என்ன எழுதி இருக்கிறேன் என திரும்பிப் பார்த்தபோது வியப்பாக இருந்தது. எத்தனையோ விஷயங்கள் – எத்தனையோ நினைவுகளை பதிந்து வைத்திருக்கிறேன் – ஒரு டைரிக் குறிப்பு போல! கடந்த வருடங்களில் இதே சமயத்தில் எழுதிய பதிவு ஒன்று பற்றி இங்கே பார்க்கலாம்!


இந்த மாதத்தினை சாவன் என இங்கே அழைக்கிறார்கள். இந்த மாத சிவராத்ரி சமயத்தில் ஹரித்வாரிலிருந்து கங்கை நீர் கொணர்ந்து தங்கள் வீட்டின் அருகே இருக்கும் கோவிலுக்கு நடந்தே வந்து கங்கை நீரால் அபிஷேகம் செய்வார்கள். அது பற்றிய ஒரு பதிவு – இதே நாளில் 2010 ஆம் ஆண்டு எழுதி இருக்கிறேன். படிக்காதவர்கள் படிக்கலாமே! ”காவடியா” என அழைக்கப்படும் இவர்கள் இப்போது ரொம்பவே அடாவடி செய்கிறார்கள்! கொஞ்சம் கொஞ்சமாக இதில் விஷமிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம்.

என்ன நண்பர்களே, புதிதாக ஆரம்பித்திருக்கும் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

28 கருத்துகள்:

 1. காபி வித் கிட்... ரசித்தேன். தொடரக் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 2. ராக கங்கா மிகவும் அருமை...

  அந்த 'காரக்டர்' அந்த காரக்டர்-லிருந்து தானே மாறி விடுவார்...

  காஃபி வித் கிட்டு தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராக கங்கா உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   காரக்டரிலிருந்து மாறினால் குடும்பத்திற்கு நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 3. எனக்கு ஒரு மாமா "கிட்டு" என்னும் பெயரில் உண்டு. அவர் பெயர் கிருஷ்ணஸ்வாமி! :)))) காஃபி வித் கிட்டு நல்லா இருக்கு! போல் பம் வடநாட்டில் இருக்கிறச்சே நிறையப் பார்த்திருக்கேன். செல்ஃபி ஜோக் வாட்சப்பிலும் வந்தது. கூகிள் +இலும் வந்தது. காணொளி பார்க்கலை! அப்புறமாப் பார்க்கணும். :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி முடிந்த போது பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. காபி வித் கிட்டு சுவாரஸ்யம்! தொடருங்கள்! கும்பகோணம் ஃபில்டர் காபி குடித்தது போல சுவையாகவே இருக்கிறது! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 5. திரு ஹர்ஷா போக்லே யிடமாலோசனை கேட்கச்சொல்லுங்கள் உங்கள் முடி குறைந்தநண்பரிடம் கிரிக்கட் காமண்டேட்ர் போக்லே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைமுடிக்காகவே சண்டிகட் வரை செல்லும் திட்டம் இருக்கிறது அவருக்கு - அங்கே ஒருவர் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தருகிறாராம் - போக்லே அவர்கள் எடுத்துக்கொண்டது போன்ற ட்ரீட்மெண்ட் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 6. ஓ... வெங்"கிட்டு"வா நீங்க!

  பாப்பட் கி சூரி... பரோட்டா சூரி நினைவுக்கு வருகிறார்.

  'முடியே' போச்சு என்று இருக்கலாம்... அவர் ஏன் கஷ்டப்படவேண்டும்?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரோட்டா சூரி எனக்கும் நினைவுக்கு வந்தார்! அவர் சூரி - இது chசூரி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. காபி வித் கிட்டு நன்றாக இருக்கிறது.
  காணொளிகள் நன்றாக இருக்கிறது.
  காவடியா ஆடி மாதம் தானே போவார்கள் இல்லையா?
  //கொஞ்சம் கொஞ்சமாக இதில் விஷமிகள் ஊடுருவிவிட்டார்கள் என்பது வருத்தம் தரும் விஷயம்.//
  கேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.
  காபி வித அனு தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கே சாவன் அங்கே ஆடி - சில நாட்கள் வித்தியாசம் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. "பாபட் கி சூரி" விட்டுட்டேனே! இதைப் பல ஓட்டல்களிலும் ஸ்டார்டர் ஆகக் கொடுப்பார்கள். தக்காளி, வெங்காயம் மிளகு பொடி, உப்புத் தூவி நறுக்கித் தனியாக் கொடுத்திருப்பாங்க! கொத்துமல்லி மேலே தூவி இருக்கும். பாபட் மேலே தூவியோ அல்லது இம்மாதிரிக் கலந்தோ சாப்பிடலாம். ஒரு ப்ளேட் 50 ரூ. இது 3 நக்ஷத்திர ஓட்டல்கள் வரை சரினு நினைக்கிறேன். 5 நக்ஷத்திரம்னா 100 அல்லது 150க்கும் மேல் இருக்கலாம். நான் வீட்டிலேயே மாலை பசி நேரத்தில் அடிக்கடி சாப்பிடுவேன். சும்மாவே அப்பளம் சுட்டால் நெய் ஊத்தாமல் சாப்பிடுவது இல்லை. ஆனால் இங்கே லிஜ்ஜத் பாபட் கிடைப்பதில்லை! :( அதன் சுவை தனி தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. லிஜ்ஜத் பாபட் இங்கே கூட இப்போதெல்லாம் கிடைப்பது இல்லை. அந்த அளவு விற்பனை இல்லை. நம் ஊரில் சில டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 9. இந்த ராக கங்கா வேறே, முகநூலில் நான் பார்த்தது வேறே. முகநூலில் சின்னப்பையர் ஒருத்தர் ராமன் மேலே பாடல் பாட, சங்கராபரணம் ராஜலக்ஷ்மியைப் போன்ற ஒரு பெண் (அவர் தானா தெரியலை, பழைய படமோ?) அதைக் கேட்டு ரசிக்கிறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ராக கங்கா என்பது முகநூலில் ஒரு குழு/பக்கம். அதைத் தான் குறிப்பிட்டிருந்தேன். அவர்கள் பக்கத்தில் நிறைய காணொளிகள் உண்டு.

   நீங்கள் சொன்ன பாடல் நானும் பார்த்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 10. காஃபி வித் கிட்டு நல்லாவே இருக்கு,

  அப்பளத்தை சுட்டு சாப்பிட எனக்கு பிடிக்கும். எங்க வீட்டில்லாம் அப்பளத்தை சுட மாட்டாங்க. பொரிப்பாங்க.

  எங்க வீட்டுக்காரர்க்கு பின் மண்டையில் இப்பதான் அதும் அவரோட 52 வயதில் லேசா முடி கொட்ட ஆரம்பிக்குது. அதுக்கே, கண்ணாடிமுன் நின்னு அப்பிடியும் இப்படியுமா பார்த்துக்கிட்டு நிக்குறார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுடுவது, பொரிப்பது இரண்டுமே உண்டு. இரண்டும் பிடிக்கும்.

   மாமாவை இழுக்க்லைன்னா தூக்கம் வராதே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 11. இந்த தலைப்பும் நல்லாத்தான் இருக்கு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 12. எல்லாம் நன்றாக் இருந்தது. காலையில் பின்னூட்டப் பெட்டியில் பிரச்சனையாக இருந்தது.

  பொதுவா வழுக்கைத் தலையோடு (இள வயதில்) இருந்தால், முடியை நட்டுக்கொள்ளலாம். அதற்கு வாய்ப்புகள் இருக்கு. ஆனாலும், என்னைப் பொறுத்தவரையில், இள வயது வழுக்கைக்காரர்கள் பொதுவா புத்திசாலிகளாகவும், ஸ்மார்ட்டாக இருப்பதையும்தான் கண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடியை நட்டுக் கொள்ளலாம்! - எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி செய்து கொண்டிருக்கிறார்.

   புத்திசாலிகள் - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  பழரசத்தை விட காஃபி வித் கிட்டு பெயர் பொருத்தத்துடன் நன்றாக இருக்கிறது. என் பெரிய பையன் பெயரும், மாப்பிள்ளை பெயரும் வெங்கட் தான். முறையே, கிருஷ்ணன்,ராமன் இணைப்புகளோடு....

  ராக கங்கா மிகவும் நன்றாக இருந்தது.

  பாபட் இங்கு உணவகத்தில் ரொட்டி ஆர்டர் செய்து இடைப்பட்ட நேரத்தில், வெங்காயம், தக்காளி தூவி சாப்பிட்டுள்ளோம். சுட்ட அப்பளம் சுவை அதிகம்.

  முடிக்கும் கொடுப்பினை வேண்டும். அதைப் பற்றி நினைக்க நினைக்க இருக்கிற முடியும் கொட்டித்தான் போகும். மேலும் இது பரம்பரை வாக்காயிருக்கும். வீணில் மருந்துகளை பயன்படுத்தி மனவுளைச்சல் தான் மிச்சமாகும்.

  ஸெல்ஃபி டெக்னிக் சூப்பர்.

  போல் பம் பம் போல்.. சிவனுக்கு காவடி எடுக்கும் பதிவை அங்கேயே சென்று படித்து வந்தேன்.
  அனைத்தும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 14. துளசிதரன் : முதலில் காஃபி வித் கிட்டு என்றதும் யார் இந்த கிட்டு என்று தோன்றியது? அது நீங்கள் என்பது தெரிந்தது. காஃபி வித் கிட்டு மிக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது ஜி. பப்பட் கி ச்சூரி எல்லாம் சாப்பிட்டதில்லை புதியதாக இருக்கிறது பெயரே. சீட் பெல்ட் காணொளி பார்த்த நினைவு இருக்கு. எங்கே என்று தெரியவில்லை. எல்லாமே ஸ்வாரஸ்யமான பதிவுகள் ஜி தொடர்கிறோம்

  கீதா: எங்கள் குடும்பத்தில் கிட்டு என்று உறவினர் ஒருவர் உண்டு. நாங்கள் பொதுவாகவே உங்கள் பெயர் உள்ளவர்களை வெங்கட்டா, வெங்கிட்டு, கிட்டு என்று சொல்லுவது வழக்கம்...அது எங்கள் வீட்டுக் குழுவிற்குள்..ஹா ஹா ஹா...ஸோ கொஞ்சம் யூகிக்க முடிந்தது அது நீங்களாகத்தான் இருக்குமோ என்று...அதே அதே!!!

  ஜி கணொளிகள் இரண்டுமே நன்றாக இருக்கின்றன..தேஷ் ராக தில்லானா சூப்பர்...கேரளத்தில் கலை நிகழ்ச்சிப் போட்டிகள் மிக மிக காம்பெட்டிட்டிவ் அண்ட் அதற்கு ரொம்பவே செல்வழித்து ப்ராக்டீஸ் செய்வார்கள். பள்ளி யூத் ஃபெஸ்டிவலில் க்ரேட் எல்லாம் வழங்குவார்கள் அது மார்க்கிலும் சேர்க்கப்படும். பப்ளிக் எக்ஸாம் உட்பட....எனவே ரொம்பவே செலவழிப்பார்கள். ஜட்ஜ்மென்ட் சரியாக இல்லை என்றால் அதற்கென்று உள்ள கோர்ட்டிற்கும் செல்வார்கள்.

  கல்லூரியிலும் கூட போட்டிகள் கடுமையாக இருக்கும் அதை அப்படியே சினிமாவில் கொண்டுவர முயற்சி போலும். அருமையாக இருக்கிறது...

  பப்பட் கி ச்சூரி நான் வீட்டில் செய்தால் இப்படியும் மற்றும், வெங்காயம் எல்லாம் போட்டு சில சமயம் தக்காளி பொரி என்றும் போட்டு செய்வதுண்டு. சாட் சட்னிகளும் போட்டு இறுதியில் பப்பட் போட்டு...என்று ..நன்றாக இருக்கும். ஆமாம் இப்போது லிஜிட் பப்பட் கிடைப்பதில்லை. இங்கு நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் அல்லது சில வட இந்தியக் கடைகளில் அல்லது பாரீஸ் கார்னரில் வட இந்திய பட்டப் வெரைட்டிஸ் கிடைப்பதுண்டு.

  காஃபி வித் கிட்டு வெகு நன்றாக இருக்கு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு - பதிவின் அனைத்து பகுதிகளையும் படித்து ரசித்து, பின்னூட்டம்.... மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....