புதன், 29 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் – மெஹ்ரான்கட் கோட்டை - பிரம்மாண்டம்ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 24

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


கோட்டையின் உள்ளே - மாளிகைகளில் வேலைப்பாடுகள்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்

கோட்டையின் மேல் புறத்தில் இருந்த பீரங்கிகளுக்குப் பிறகு உள்ளே ஒவ்வொரு பகுதியாக நுழைந்து அங்கே காட்சிக்கு வைத்திருக்கும் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். அங்கே ராஜ்புத்/ராதோட் ராஜாக்கள் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், இருக்கைகள், பல்லக்குகள், ஆயுதங்கள், நகைகள் என காட்சிப்படுத்தி வைத்திருக்கும் பொருட்கள் பலப்பல. எல்லாமே மிகவும் அழகான முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு சுற்றுலா வருபவர்களின் பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். அனுமதிச் சீட்டு மற்றும் கட்டணங்கள் அனைத்துமே பராமரிக்கவே செலவு செய்கிறோம் என்று சொல்கிறது அவர்களின் தளம். இந்த வம்சத்தினரின் தற்போதைய மஹாராஜா இரண்டாம் Gகஜ் சிங் அவர்கள் தான் இந்த கோட்டை/அருங்காட்சியகத்தினை நிர்வாகம் செய்கிறார்.


கோட்டையின் உள்ளே...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்கோட்டையின் உள்ளே...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்
கோட்டைக்குள் இருக்கும் மாளிகைகளை பல பகுதிகளாகப் பிரித்து ஆங்காங்கே தனித்தனி தொகுப்புகளாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு அறையில் யானைகளுக்கு மேல் வைக்கப்படும் இருக்கைகள் [ஹௌடா] என்றால் மற்றொரு அறையில் ராஜா/ராணிகள் பயன்படுத்திய பல்லக்குகள். வேறொரு அறையில் ஓவியங்கள் – துணிமணிகள் காட்சிப்படுத்தவே ஒரு பகுதி – DHதௌலத் KHகானா – DHதௌலத் என்றால் சொத்து – ராஜாக்களின் பல்வேறு விலைமதிப்பற்ற பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் அறை – KHசிலே கானா என்ற இடத்தில் ராஜாக்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் இருக்கின்றன. இங்கே இருப்பவை தவிர ஒரு ஆயுதக் கிடங்கும் இங்கே உண்டு – அங்கே பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை!


கோட்டையின் உள்ளே - மாளிகைகளில் வேலைப்பாடுகள்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்


கோட்டையின் உள்ளே - திறந்தவெளி தர்பார்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்
இதைத் தவிர தொட்டில்களுக்கென்றே ஒரு அறை, மரப் பொருட்களுக்கான அறை – ராஜா ராணிகள் பயன்படுத்திய அறைகள் என பல விஷயங்களும் இங்கே ஒரு வரிசைக் கிரமமாக காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் நுழைந்தால் அடுத்த பகுதிக்குள் நாமாகவே போய் சேரும் விதமாகத் தான் வழி வைத்திருக்கிறார்கள். பார்த்துக் கொண்டே இருந்தால் நேரம் போவதே தெரிவதில்லை. எத்தனை எத்தனை பொருட்கள் – எத்தனை அழகான பொருட்கள் – பார்க்கப் பார்க்க – “ராஜ வாழ்க்கை” என்பதன் அர்த்தம் நமக்குப் புரியும்! – சொல்ல மறந்து விட்டேனே – ராஜஸ்தான் என்றாலே நம் நினைவுக்கு வருவது தலைப்பாகை தானே – ராஜாக்கள் பயன்படுத்திய விதம் விதமான தலைப்பாகைகள் கூட ஒரு பகுதியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
கோட்டையின் உள்ளே - மாளிகைகளில் பலகணிகள்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்


கோட்டைக்குள் இருந்த மாட மாளிகைகள் அனைத்தும் மிகப் பிரம்மாண்டமாக, பலகணிகளோடு எத்தனை அலங்காரமாக இருக்கின்றன. நடுவில் இருக்கும் பெரிய இடத்தில் தான் ராஜா அமர்ந்து தர்பார் நடத்துவாராம் – அங்கே ஒரு மேடையும், மேடை மேலே ஒரு இருக்கையும் உண்டு. ஆங்காங்கே பீரங்கிகள் வைத்திருக்கிறார்கள். மாளிகைகளின் வெளி அலங்காரங்கள் பிரமிக்க வைக்கின்றன. எத்தனை விதமான வேலைப்பாடுகள் அவற்றில். எத்தனை உழைப்பு – எத்தனை திறமை அந்த இடத்தைக் கட்டியவர்களுக்கு. அவர்களின் திறமை பேசப்படுகிறதோ இல்லையோ, அவர்களின் உழைப்பும், திறமையும் என்றென்றும் நிலைத்திருக்கும் – ராஜாக்களின் பெயர் நிலைத்திருப்பதைப் போலவே.


கோட்டையின் உள்ளே - தலைப்பாகை கட்டுவது எப்படி...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்
அந்த திறந்த வெளியில் ஒரு பதாகை – ராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி என்று செய்து காண்பிப்பார்கள் – நீங்கள் கேட்டால் – அதற்குக் கட்டணமாக 100 ரூபாய் வாங்கிக் கொண்டு தலைப்பாகை கட்டிக் காண்பிப்பார்கள் – ஒரு மனிதர் தலைப்பாகை கட்டிக்கொள்ள இரண்டு பேர் தேவை. ஆமாம் அத்தனை பெரிய துணி! சில வெளிநாட்டவர்கள் அங்கே இருந்த இரண்டு ராஜஸ்தானி மனிதர்களைக் கேட்க, அவர்கள் கட்டிக் காண்பித்தார்கள். அங்கே நாங்களும் நின்று வேடிக்கை பார்த்தோம் – காசு கொடுக்காமலேயே! அந்தக் காட்சியை காணொளியாக எடுத்து ஏற்கனவே எனது பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறேன் – ராஜஸ்தானி தலைப்பாகை கட்டுவது எப்படி? என்ற பதிவில். பார்க்காதவர்கள் பார்த்து ரசிக்கலாம். ரொம்பவும் கஷ்டமான வேலை தான் இந்த தலைப்பாகை கட்டுவது. ஆனால் கட்டி முடித்த பிற்கு மீசையை முறுக்கி கம்பீரத்தினைக் காண்பிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
கோட்டையின் உள்ளே - ஹாத்தி ஹௌடா...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்

ஹாத்தி ஹௌடா – யானைகள் மீது ராஜாக்கள் உட்கார அமைக்கப்படும் இருக்கைகளுக்குப் பெயர் தான் ஹாத்தி ஹௌடா – மரத்தில் செய்யப்பட்ட அந்த இருக்கைகளுக்கு வெள்ளித் தகடுகள் கொண்டு அலங்காரம் – பெரும்பாலும் இரு பக்கங்களிலும் ஆக்ரோஷமான சிங்கங்கள் இருக்கின்றன. மரத்தில் செய்யப்பட்டால் நிச்சயம் எடை அதிகமிருக்கும். அதன் மீது வெள்ளித்தகடு பொருத்துகிறார்கள். இருக்கையை யானை மீது வைத்து அதன் மீது ராஜா அமர்ந்து கொள்வார். யானை மீது எவ்வளவு எடை ஏற்றி இருப்பார்கள் என யோசித்து, யானை மீது பரிதாபம் வருகிறது. இருந்தாலும் ராஜாவாயிற்றே. இந்த ஹாத்தி ஹௌடாக்களே நிறைய எண்ணிக்கையில் வைத்திருக்கிறார்கள் அதற்கான அறையில். அங்கே தலைப்பாகை + மீசையுடன் இருந்த ஒரு பெரியவர் முகத்தில் சிரிப்பும் ஆனந்தமும்.


கோட்டையின் உள்ளே - ராஜஸ்தானி பெரியவரும் நானும்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்கோட்டையின் உள்ளே - ஹாத்தி ஹௌடா...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்


கோட்டையின் உள்ளே - பல்லக்கு...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்
அந்தப் பெரியவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அவருக்கு அங்கே என்ன சம்பளம் எனத் தெரியாது – ஆனால் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் அனைவருமே பத்தோ, இருபதோ கொடுக்கிறார்கள். நானும் கொடுத்தேன்! மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டார். அந்த அறை முழுவதுமே ஹாத்தி ஹௌடா மற்றும் பல்லக்குகள் தான் இருந்தன. பல்லக்குகளும் நிறையவே வேலைப்பாடுகள் செய்திருக்கிறார்கள். பல்லக்குகளில் வேட்டையாடும் காட்சிகளைச் செதுக்குவது உண்டு. இருக்கைகளுக்கு வெல்வெட் மெத்தைகள்! ரொம்பவே அழகான வேலைப்பாடுகள் தான் – பயன்படுத்திய காலத்தில் இன்னமும் அழகாய் இருந்திருக்கலாம். ஆனாலும் மனதின் ஒரு ஓரத்தில் ”மனிதனை மனிதனே சுமக்கும் அவலம்” என்ற எண்ணமும் வந்தது.கோட்டையின் உள்ளே - ஹூக்கா புகைக்கும் பெரியவர்...
மெஹ்ரான்கட் கோட்டை - ஜோத்பூர்
இந்த ஹௌடாக்களையும், பல்லக்குகளையும் பார்த்தபடி வெளியே வந்தால் ஒரு அறையில் மூத்தவர் ஒருவர் பக்கத்தில் விதம் விதமாக ஹூக்காக்களை [ஹூக்கா என்பது புகைபிடிக்கப் பயன்படுத்தும் கருவி] வைத்துக் கொண்டு பெரிய தாடி-மீசை – Of course with traditional தலைப்பாகையுடன் அமர்ந்திருக்கிறார். அவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அவருடன் பேச்சுக் கொடுக்க முயற்சித்தேன் – வாயே திறக்கவில்லை – கருமமே கண்ணாயினார் என புகைபிடிப்பது போல ஹூக்காவிலிருந்து வரும் குழலை வாயில் வைத்துக் கொண்டிருந்தார். ஒரு சில படங்கள் எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன். அடுத்ததாக உள்ளே நுழைந்தது என்ன இடம், அங்கே என்ன பார்த்தோம் என்பதையும் வேறு சில அனுபவங்களையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியும் மெஹ்ரான்கட் கோட்டை பற்றியே!
    
பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. இந்த மாளிகையில் அப்போது வசித்தவர்கள் எப்போதாவது தங்கள் கோட்டையின் ஜன்னல் பக்கம் உள்ள இந்தக் கலைநயமிக்க இடங்களைப் பார்த்து ரசித்திருப்பார்களா? நம் முதுகை நாம் பார்க்க முடியாது என்பது போல....!!!

  குட்மார்னிங் வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   நம் முதுகை நாம் பார்க்க முடியாது என்பது போல.... :) பலகணியில் நின்று இயற்கையை ரசித்திருக்கலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. சூரியனார் கோவில் கட்டடக் கலையும் இதுவும் ஒரே மாதிரியோ... மாளிகையின் பழகனிகளைப் பார்க்கும்போது அப்படித் தோன்றியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரியனார் கோவில்களில் சிற்பங்கள் நிறைய இருக்கும். இங்கே அப்படி இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நீங்களும் அந்தத் தலைப்பாகையைக் கட்டிப் பார்த்திருக்கலாமோ வெங்கட்... முழு தலைப்பாகை அணிந்த வெங்கட்டைக் கற்பனையில் பார்க்கிறேன்!!

  படங்களையும் பதிவையும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முழுத் தலைப்பாகை கட்டிய வெங்கட் - ஃபோட்டோ ஷாப் செய்து தான் பார்க்க வேண்டும் :) அவர்களுக்குக் கட்டிக் கொண்ட பின்னர் அப்படியே அலேக்காக எடுத்து காசு கொடுத்தவர் தலையில் வைத்து விடுகிறார் - படம் எடுத்துக் கொண்ட பின்னர் திரும்ப எடுத்துவிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. விளக்கம் அருமை ஜி மனிதனை மனிதன் சுமந்தது கொடுமைதான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. கோட்டைக்குள் சுற்றிப்பார்க்கும் வாய்ப்பினை உங்கள் மூலம் பெற்றேன். அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோட்டை பற்றிய தகவல்கள் இன்னும் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. ஜோத்பூர் அரண்மனையின் அழகைக் காட்டும் படங்கள் மனதைக் கவர்கின்றன...
  தங்களோடு நானும் சுற்றி வருகின்றேன்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 7. பெரிய கோட்டையாக இருக்கும்போல! நல்லா அருமையா இருக்கு. என்றாலும் ஹாத்தி ஹௌடாவும், பல்லக்கும் மனதை உறுத்தத் தான் செய்கிறது. பார்க்க, களிக்க நிறையவே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய கோட்டை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 8. ஜோதபூர் அரண்மனை மிக அழகு.
  அழகான பல்லாக்கு.

  //மனதின் ஒரு ஓரத்தில் ”மனிதனை மனிதனே சுமக்கும் அவலம்” என்ற எண்ணமும் வந்தது.//

  ஆமாம், நினைக்கும் போது கஷ்டமாய் தான் இருக்கும்.  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. அழகு.. அழகு... கோட்டையின் ஒவ்வொரு துளியிலும் அசத்தும் அழகு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. படங்கள் அருமை. தகவல்களுக்கு நன்றி.

  ராஜஸ்தான் தலைப்பாகை மிகப் பெரிதாக இருக்கும். தலைப்பாகையுடன் ராஜஸ்தானிகளை பெங்களூரில் படமாக்கியிருக்கிறேன்.

  விதம் விதமான பல்லக்குகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.
  அரண்மனை கோட்டைகளின் வேலைப் பாடுகளும், சிங்கம், மயில் வகையுடன் சிம்மாசனங்களும், பல்லக்குகளும் நன்றாக உள்ளது.

  ஆனால் மனிதனின் பளுவோடு, சிம்மாசனத்தையும் சேர்ந்து சுமக்கும் யானைகளும். மனிதனை மனிதனே சுமக்கும் பல்லக்கு தூக்கிகளும் பாவம்.! என்ன செய்வது? ராஜ வாழ்க்கை இப்படித்தான் போலும்!

  மற்ற படங்களும் நன்றாக உள்ளது. தலைப்பாகை கட்டுவது பார்த்திருக்கிறேன். அவரவர்கள் பாரம்பரியங்கள் என்றுமே தொடர்கின்றன. இன்னமும் கோட்டையின் அழகுகளை தங்களுடன் தொடர்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....