புதன், 8 ஆகஸ்ட், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நன்றி சொல்ல வார்த்தையில்லை – பாதாம் பால்
ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
ஃபதேசாகர் ஏரியில் ஸ்பீட் போட்டில் சென்ற அனுபவத்திற்குப் பிறகு படகுத்துறையிலிருந்து வெளிவந்தோம். உதய்பூர் நண்பர் கஜேந்திரா மற்றும் அவரது நண்பரும் எங்களுக்காகக் காத்திருந்தார்கள். அன்றைய நாள் முழுவதும், எங்களுடன், எங்களுக்காகவே செலவிட்ட அந்த நல்ல உள்ளங்களுக்கு, வார்த்தைகளால் நன்றி சொல்லிவிட முடியாது. ஒரு நாள் முழுவதும் தங்கள் வேலைகளை விட்டு, குடும்பத்தினரை விட்டு, எங்களுடனேயே சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு நாளில் உங்களால் சில இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. இன்னும் ஒரு நாள் இருந்தால் விடுபட்ட சில இடங்களையும் உங்களுடன் வந்து காண்பிக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். உதய்பூர் நகரின் மற்ற இடங்களையும் பார்க்க இன்னுமொரு முறை நிச்சயம் நீங்கள் அனைவரும் வர வேண்டும் எனச் சொன்னார். 


உதய்பூர் நண்பர்களுடன் நான்.... 


அவரையும் அவரது குடும்பத்துடன் தலைநகர் தில்லிக்கு வருமாறு நாங்களும் அழைத்தோம். அவ்வப்போது WhatsApp மூலமும், அலைபேசி மூலம் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறோம். பயணம் செய்வது கஜேந்திராவிற்கும் பிடித்த விஷயம் என்றும் அடுத்த முறை நான் எங்கேயாவது நண்பர்களுடன் பயணம் செய்ய திட்டமிட்டால் அவரையும் அழைக்க வேண்டும் என்றும் என்னிடம் கேட்டுக் கொண்டார். ஆஹா இன்னுமொரு பயணக் காதலன் கிடைத்தார் என நானும் மகிழ்ந்தேன். இரண்டொருமுறை அவர் கேட்டு விட்டார் – அடுத்த பயணம் எங்கே, எப்போது என – இன்னும் அவருடன் பயணம் செய்ய வாய்ப்பு அமையவில்லை. விரைவில் அமையட்டும்! அப்போது தானே நானும் பயணிக்க முடியும்! ராஜஸ்தானின் பார்க்காத சில பகுதிகளுக்கு வரும் ஆவலுண்டு என்பதை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.

நண்பர்கள் இருவருக்கும் நன்றி சொல்லி, பிரியா விடை கொடுத்தோம். அடுத்த நாள் நாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கும் வருவதற்கு முடியவில்லையே என ரொம்பவே வருந்தினர். பரவாயில்லை – ஒரு நாள் எங்களுடன் செலவிட்டதே பெரிய விஷயம் என்று சொல்லி அவருக்கு விடை கொடுத்தோம். பிறகு எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த அரசு அலுவலகத்தின் வெளியிலிருந்து ஓட்டுனர் ஜோதியை அழைக்க, அவர் வாகனத்துடன் வந்தார் – உள்ளே கொஞ்ச தூரம் நடக்க வேண்டாம் என வெளியே அழைத்தோம். அனைவரும் வாகனத்தில் ஏறிக்கொண்ட பிறகு அந்த இடத்திலிருந்து ஒரு வழிப் பாதையில் ஃபதேசாகர் ஏரிக்கரையிலேயே பயணித்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு வந்து சேர்ந்தோம் – வழி தெரியாது என்றாலும் இருக்கவே இருக்கிறது Google Map!

காலையிலிருந்து சுற்றிக் கொண்டே இருந்ததில் அனைவரும் கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும் எனச் சொல்ல அவரவர் அறைக்குச் சென்றோம். இரவு உணவு சமயத்தில் மீண்டும் சந்திப்பதாகத் திட்டம். நானும் அறைக்குச் சென்று அடுத்த நாள் காலையில் உதய்பூரிலிருந்து புறப்படத் தகுந்தமாதிரி உடைமைகளை முதுகுப் பையில் வைத்தேன். கேமரா பேட்டரி மற்றும் அலைபேசியையும் சார்ஜ் செய்து கொண்டு, அன்றைய கணக்குகளை எழுதி முடித்த பிறகு உணவகம் செல்ல வேண்டும். அதற்கு முன்னர் எங்கள் அனைவருக்கும் இரவு உணவு வேண்டும் என்பதையும் தங்குமிடச் சிப்பந்தியிடம் சொல்லி வைத்தோம். உணவு இல்லை என்று சொல்லி விட்டால் மீண்டும் வெளியே செல்ல வேண்டுமே!


புஷ்கரிலிருந்து உதய்பூர் வந்த போது....
ராஜாவின் இசையோடு....

முதல் நாள் இரவு போலவே இரண்டாம் நாள் இரவும் சிம்பிள் உணவு தான் சொல்லி இருந்தோம். dhதால் chசாவல், ரொட்டி, சப்ஜி, ராய்தா என சிம்பிள் உணவு. அனைவரும் தங்குமிடத்திலிருந்த Dining Hall-இற்கு வந்து சேர்ந்தார்கள். அன்றைய பொழுதின் அனுபவங்களை பேசியபடியே உணவு உட்கொண்டோம். நன்றாகவே இருந்தது உணவு. வெளி இடங்களுக்குச் செல்லும் போது அந்தந்த ஊர் உணவு என்னவோ அதையே சாப்பிடுவது நல்லது. எப்போதுமே அப்படி சாப்பிடுவது தான் எனக்கு வழக்கம். அடுத்த நாள் காலையிலேயே புறப்பட வேண்டும் என்பதால் இரவே உணவுக்கான கட்டணம் எவ்வளவு என்பதைச் சொல்லி விடக் கேட்டோம். உதய்பூர் வந்ததிலிருந்து நாங்கள் இங்கே தான் மூன்று வேளை உணவு உண்டதும், தேநீர் அருந்தியதும். அடுத்த நாள் காலை தரப்போகும் தேநீருக்கும் சேர்த்து கட்டணத்தினைச் சொல்லும்படி சொன்னோம்.

பதினான்கு பேர், மூன்று வேளை உணவு மற்றும் தேநீர் – அனைத்திற்கும் சேர்த்து எங்களுக்கு வந்த உணவுக்கான பில் – ரூபாய் 3940/- மட்டுமே! நல்ல தரமாக இருந்த உணவுக்கு இத்தனை குறைவான பில் என்பதில் மகிழ்ச்சி. எங்களுக்கு மூன்று வேளையும் உணவு அளித்த உழைப்பாளிகளுக்கு அன்பளிப்பும் கொடுத்து, மொத்த பில் தொகையையும் செலுத்தி அவரவர் அறைக்குச் சென்றோம். நண்பர் ஸ்ரீபதி அவர்களுக்கு ATM-ல் பணம் எடுக்க வெண்டுமெனச் சொல்ல நானும் அவரும் மட்டும் வெளியே சென்றோம்! அதுவும் ஒரு விதத்தில் சாதகமாகவே இருந்தது! – எல்லாம் நல்லதற்கே! – பணம் எடுத்துக் கொண்ட பிறகு பார்த்தால் சாலையில் முதல் நாள் பார்த்த பாதாம் பால் வண்டிக்காரர் இருந்தார். நேற்றே உதய்பூர் நகரின் ஃபேமஸ் மேவார் பாதாம் ஷேக்/பாதாம் பால் அருந்தவில்லையே என அங்கே சென்றோம்.

இரண்டு வகை ஐஸ்க்ரீம் உடன் பாதாம் ஷேக் ஒரு பெரிய கிளாஸ் ஐம்பது ரூபாய் மட்டுமே. நானும் நண்பரும் ஆளுக்கு ஒரு கிளாஸ் அங்கேயே உண்டோம். இரவு பதினோரு மணி வரை கடை திறந்திருக்கும் என்றும் இரவு நேரத்தில் தான் அதிக பிஸினஸ் என்றும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டோம். நாங்கள் சுவைத்தது ரொம்பவே பிடித்திருக்க நண்பரின் மனைவிக்கும் ஒரு கிளாஸ் பாக் செய்து வாங்கிக் கொண்டோம். மற்றவர்கள் உறக்கத்தினை தழுவி இருக்கலாம் என்ற எண்ணத்தில் அவர்களுக்கு வாங்கிக் கொண்டு செல்லவில்லை. நாங்கள் மட்டுமே மேவாரின் சிறப்பு பாதாம் ஷேக் சாப்பிட்டதை தெரிந்து கொண்ட மற்ற நண்பர்கள் எங்களிடம் பொய்க் கோபம் கொண்டார்கள். சரி சரி எல்லாரும் சமத்தா இருந்தா அடுத்ததா போகப் போகும் ஊரில் வாங்கித் தருவேன் என்று சொல்லி சமாளித்தேன்!

அடுத்த ஊர் எந்த ஊர்? அங்கே பார்த்த விஷயங்கள் என்ன, குழுவினர் அனைவருக்கும் பாதாம் ஷேக் வாங்கிக் கொடுத்தேனா, அது நன்றாக இருந்ததா இல்லையா என்பதை எல்லாம் வரும் பதிவுகளில் சொல்கிறேன். இப்போதைக்கும் உதய்பூர் நகரின் இரண்டாம் இரவில் நித்ரா தேவி அழைக்கிறாள். அவள் அழைப்பை செவி மடுத்து உறக்கத்தில் ஆழ்கிறேன். அடுத்த நாளில் ராஜஸ்தானின் வேறு ஒரு இடத்தில் சந்திப்போம்.

பயணம் நல்லது! ஆதலினால் பயணம் செய்வோம்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

24 கருத்துகள்:

 1. அருமையான பாதாம் ஷேக்! இங்கே பாதாம்பால் என்னும் பெயரில் கொடுப்பது! :))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம் ஊரில் கிடைப்பது போலி! வடக்கில் இதை பருகியவர்கள் நிச்சயம் நம் ஊரில் பருக முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 2. பாதாம் பால் (ஷேக்) சாப்பிடும் ஆவல் வருகிறது. உங்களுக்கு இன்னொரு பயனாக காதலன் கிடைத்ததில் சந்தோஷம். நம் ரசனையுடன் ஒத்த நண்பர்கள் கிடைப்பதும் வரம். உணவு பில் நிஜமாகவே சீப்தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லிக்கு வாருங்கள் ஸ்ரீராம். பாதாம் ஷேக் விதம் விதமாகக் கிடைக்கும்.

   இன்னொரு பயனாக காதலன் கிடைத்ததில் மகிழ்ச்சி! :)

   உணவு - ஆமாம் - ரொம்பவே குறைவு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இனிமையான பயண அனுபவம். பயணத்தை விரும்புவர்களுடன் பயணம் செய்வது சுகமே!
  பாதாம் பால்ஷேக் வாங்கி கொடுத்தீர்களா என்பதை அறிய தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 4. காணொளி அருமை, மயில் பாடும் பாட்டைக் கேட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. இராஜஸ்தானில் நடந்தவைகளை அறிய தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   நீக்கு
 8. காணொளி மிக அருமை...கருமேகங்கள் ஊர்ந்து செல்லும் வானம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 9. உணவு பில் மிகக் குறைவு. பாதாம் பால் அருமை (இங்கயும் தர்றாங்களே... பால்ல பவுடரைக் கலந்து). பயணத்தைத் தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால் பவுடரைக் கலந்து - ஆமாம். சோகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. நான் அடுத்தமாதம் ராஜஸ்தான் வருகிறேன். வாங்க வெங்கட் சார், சந்திக்கலாம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ.... அடுத்த மாதமா.... பயணத்திட்டம் பற்றி மின்னஞ்சலில் சொல்லுங்கள். தில்லி வருகை உண்டா?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி.

   நீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இனிமையான பயணம். காணொளியும் அருமை. விரையும் சாலையையும், ஓடும் மேகங்களையும் பார்த்தபடி பயணிப்பது மிகவும் இனிதான ஒன்று.

  சிறப்பு பாதாம் பால் இனியதாக இருந்தது குறித்து மகிழ்ச்சி. நண்பர்களுக்கும் மறுநாள் அது போல் கிடைத்ததா என அறிய தங்களுடன் பயணிக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 12. எல்லோருக்கும் கணக்கு வழக்கு சப்மிட் செய்ய வேண்டுமோ யார் காசியர் பணம்முதலிலே யே வசூல் செய்வீர்களா இல்லை கடைசியிலா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கணக்கு வழக்கு சப்மிட் செய்ய வேண்டியதில்லை. ஆனால் மொத்தமாக இவ்வளவு ஆகியிருக்கிறது எனச் சொல்ல வேண்டும் இல்லையா.... கொஞ்சம் அட்வான்ஸ் - பிறகு செட்டில்மெண்ட்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....