புதன், 12 செப்டம்பர், 2018

பண்டிகை கொண்டாடலாம் வாங்க – தீஜ்….

இன்றைக்கு தீஜ் பண்டிகை. வட இந்திய மாநிலங்களில், பெண்களால் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை தீஜ். எதற்காக இந்தப் பண்டிகை, இதன் சிறப்பு என்ன என்பதையெல்லாம் பார்ப்பதற்கு முன்னர், இந்தப் பண்டிகை பற்றிய ராஜஸ்தானி பாடல் ஒன்று – உங்கள் பார்வைக்கு… 
ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் இந்த விழா கொண்டாடப்படுகிறது – மூன்று தீஜ் விழாக்கள் உண்டு – ஹர்யாலி தீஜ், கஜ்ரி தீஜ் மற்றும் ஹர்தாலிகா தீஜ். அமாவாசை, பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாளிலும், மழைக்கால மாதங்களில் கொண்டாடப்படும் விழா தீஜ். மிகவும் கோலாகலமாக இந்த விழாவினை பெண்கள் கொண்டாடுவார்கள். காலையிலிருந்து நிர்ஜல் – அதாவது தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருந்து மாலை நிலாவைப் பார்த்த பிறகு தான் சாப்பிடுவார்கள். காலையிலிருந்து சிவன் – பார்வதியை வணங்கி விரதம் இருந்து பூஜை முடித்து மாலையில் நிலா பார்த்த பிறகு தான் சாப்பிடுவார்கள். மரங்களில் பெரிய ஊஞ்சல் கட்டி அதில் ஆடுவதும், கொண்டாட்டங்களுமாக இருக்கும். பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழா.எதற்காக இந்த விழா: பார்வதி பல பிறவிகள் எடுத்து வந்தாலும் சிவனுடன் திருமணம் நடக்கவில்லை. 108 பிறவிகள் எடுத்து, 108-ஆவது பிறவியில் கடுமையான விரதம் இருந்த பிறகு தான் சிவனுடன் திருமணம் நடந்ததாம் பார்வதிக்கு. தனக்கு நல்ல கணவன் அமையவேண்டும், ஏழேழு ஜென்மாக்களிலும் சிவபெருமானைப் போல நல்லதொரு கணவன் அமையவேண்டும் என்ற வேண்டுதல்களோடு பார்வதி தேவியையும் சிவபெருமானையும் வழிபடும் விழாவாக இந்த தீஜ் கொண்டாடப்படுகிறது. இன்றைக்கு கொண்டாடப்படும் தீஜ் – ஹர்தாலிகா தீஜ். இந்த விழாவிற்கு வேறு ஒரு கதை உண்டு – இதுவரை கேள்விப்பட்டிராத கதை! கேட்க நீங்க ரெடின்னா, நானும் சொல்ல ரெடி!ஹிமாலயா என்பவருக்கு, ஷைலபுத்ரி என்ற பெயர் வைத்து அழைக்கப்பட்ட, மகளாகப் பிறக்கிறார் பார்வதி தேவியை அவரது தந்தை விஷ்ணு பகவானுக்கு – சரியாகத் தான் சொல்கிறேன் – விஷ்ணு பகவானுக்கு திருமணம் செய்து தர முடிவு செய்கிறார் – அதுவும் நாரதரின் யோசனைப்படி! ஆனால் பார்வதி தேவிக்கோ சிவபெருமானைத் தான் திருமணம் செய்து கொள்ள விருப்பம். தனது தோழியிடம் [ஆலிகா என்றால் தோழி] தனது கஷ்டத்தினைச் சொல்ல அத்தோழி பார்வதியை அடர்ந்த வனத்திற்குள் கடத்திச் [ஹாரித்] செல்கிறார். காட்டிற்குள் பௌர்ணமிக்கு அடுத்த மூன்றாம் நாள், பார்வதி தனது முடியிலிருந்து சிவலிங்கத்தினை உருவாக்கி பிரார்த்தனை செய்ய, சிவபெருமான் பிரார்த்தனையை ஏற்று மணம் முடிக்க சம்மதிக்கிறார். ஷைலபுத்ரியின் தந்தை ஹிமாலயாவின் சம்மதத்துடன் திருமணம் நடக்கிறது! பார்வதி நினைத்தபடியே சிவபெருமானை கணவனாக அடைகிறார்.

இன்றைய தீஜ் கொண்டாட்டத்திற்குப் பிறகு  - ஒரு கணவன் மனைவி.... 

மேலே சொன்ன கதை – நான் கேள்விப்பட்டதில்லை. இன்றைக்கு தான் இந்த ஹர்தாலிகா தீஜ் கொண்டாடுகிறார்கள். குறிப்பாக பீஹார் மாநிலப் பெண்கள் இன்றைக்கு மிகவும் கோலாகலமாக கொண்டாடுவார்கள். பெண்களைப் பெற்றவர்கள் இந்த நாளில் அவர்களுக்கு சிஞ்சாடா[ரா] என அழைக்கப்படும் அன்பளிப்பைத் தருவார்கள் – அதில் பெண்களின் அலங்காரத்திற்குத் தேவையான மஞ்சள்-குங்குமம், வளையல்கள், புடவை, இனிப்பு வகைகள் என எல்லாம் இருக்கும். கைகளில் மருதாணி இட்டுக்கொள்வது இந்த நாளில் மிகவும் முக்கியமான விஷயம். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் உணவும் [அதாவது விரதத்திற்குப் பிறகு] சிறப்பாகச் செய்வார்கள்.

என்ன நண்பர்களே, இந்தப் பண்டிகை பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

10 கருத்துகள்:

 1. தீஜ் பண்டிகை.. அறிந்திராத தகவல்...

  படங்களின் அழகிற்கு சொல்லவும் வேண்டுமோ!..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீஜ் பண்டிகையா? இதோ படித்து விட்டு வருகிறேன்!

   நீக்கு
  2. படங்கள் - இணையத்திலிருந்து.... போட விடுபட்டு விட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
  3. ஆமாம் தீஜ் பண்டிகை தான். படித்துச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. புதிய தகவல்தான். ஆனால் ஏதோ முன்னாலேயே படித்த மாதிரி இருப்பது ப்ரமையாகத்தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தீஜ் திருவிழா பற்றிய நிகழ்வு ஒன்றில் எடுத்த படம் முன்பு வெளியிட்டு இருக்கிறேன் - அது நினைவில் இருந்திருக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  வட மாநில பண்டிகைக் பற்றிய குறிப்புகளுடன் பதிவு அருமை. இது வரை இந்தப்பண்டிகை பற்றி கேள்வி பட்டதில்லை. தீஜ் பண்டிகை.. பெயரே அழகாக உள்ளது.
  பாடலும் ஆடலுமாக காணோளி அருமையாய் உள்ளது.
  படங்கள் மிகவும் அழகாக இருக்கிறது.
  கதை கேள்விப்பட்டதில்லை எனினும் இன்று அறிந்து கொண்டேன். இது வரை அறியாத தகவல்களை அறிய தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பண்டிகைக்கான பாடல்கள் இணையத்தில் நிறையவே இருக்கிறது. இருப்பதில் ஒன்றை இங்கே பகிர்ந்து கொண்டேன். அது உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 4. இந்தி நாடகம் தமிழில் டப்பிங்க் செய்து வரும் பொழுது இந்த பண்டிகை காட்டப்படுகிறது.

  இனிமையான பாடல் பகிர்வு. கார்த்திகை மாதம் சிவன் பார்வதி திருமணம் செய்து கொண்டார்கள் என்று அந்த மாதம் அதிகமான திருமண்ம இருக்கும் இல்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....