சனி, 22 செப்டம்பர், 2018

காஃபி வித் கிட்டு – உத்திராகண்ட் தாலி [உணவு] – உடலுறுப்பு தானம் – காஃபி தயாரிப்பு – ஸ்வர்ணா என்றொரு தேவதை

காஃபி வித் கிட்டு – பகுதி – 7

இந்த வாரத்தின் உணவு – உத்திராகண்ட் தாலி:உத்திராகண்ட் தாலி....


தாலி என்றால் தட்டு – இங்கே பல உணவுகளின் சங்கமத்தினை தாலி – பஞ்சாபி தாலி, குஜராத்தி தாலி, ராஜஸ்தானி தாலி, சௌத் இண்டியன் தாலி என்று ஊர் பெயர்களை வைத்து தான் சொல்வார்கள். தற்போது தலைநகர் தில்லியில் நடந்து கொண்டிருக்கும் ஒரு விழாவிற்குச் சென்ற போது உத்திராகண்ட் தாலி சுவைத்தோம் – தோம் என்பதில் என்னைத் தவிர இரண்டாவது நண்பர் பத்மநாபன் அவர்கள். அப்படி என்ன அந்த உத்திராகண்ட் தாலியில் இருந்தது, விலை எவ்வளவு, வேறு என்ன சாப்பிட்டோம், விழாவில் பார்த்த விஷயங்கள் ஆகியவை தனிப்பதிவுகளாக வெளிவரும்! இப்போதைக்கு உத்திராகண்ட் தாலி படம் மட்டும்! படம் நண்பர் பத்மநாபன் அலைபேசியில் எடுத்தது.  

இந்த வாரத்தின் முகநூல் பக்கம்:

இந்த வாரம் உடலுறுப்பு தானம் பற்றிய இரண்டு காணொளிகள் காணக் கிடைத்தது. இரண்டுமே இருதய தானம் பற்றியது தான் -  ஒன்று சீன விளம்பரம், மற்றது இந்திய விளம்பரம். ஒன்று தாயை இழந்த சிறு குழந்தையை மையமாகக் கொண்டது என்றால் மற்றது மகனை இழந்த தாயை மையமாகக் கொண்டது. இரண்டுமே நன்றாகவே இருந்தன என்றாலும் சீன விளம்பரம் அதிகம் கவர்ந்தது. பாருங்களேன்.

சீன விளம்பரம்:
இந்திய விளம்பரம்:


இந்த வாரத்தின் அறிமுகம் - முரளி:

என் நண்பர்கள் சிலரை அறிமுகம் செய்ய எண்ணம். நெய்வேலியில் என்னுடன் கல்லூரியில் படித்தவர் முரளி – தற்போது சென்னை மெட்ரோவில் பொறுப்பு மிகு பதவியில் இருப்பவர் – இன்றும் நட்பில் இணைந்திருப்பவர். தமிழ்பற்று அதிகம் கொண்டவர். முகநூலில் சமீபத்தில் காஃபி தயாரிப்பது பற்றி எழுதிய பகிர்வு இன்றைய பதிவில் – அவர் எழுத்தில்.நீள் பதிவிட்டு நீண்ட நாட்களாகி விட்டன. இங்கே சற்று குழம்பிநீரைப் (_____ வடி நீர் என்றும் அழைப்பர்), coffee, பற்றி சற்று காண்போம்.

குழம்பிநீர் தயாரிப்பதில் எனக்கு விருப்பமும் மற்றும் நீண்ட அனுபவமும் உண்டு. பெரும்பாலும் காலை வேலை என்னுடையது. இதனை நான் விரும்பி செய்கிறேன்; மிரட்டலால் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி விடுகிறேன். Decoction (வடிநீர்) தயாரிப்பது ஒரு வலுவான கலை. பொடியை அதிகம் அழுத்தினால், வெந்நீர் ஒரு ஞானி போல அசைவற்று மேலேயே நின்று விடும். சற்றே 'loose' ஆக விட்டால், வெந்நீர் சர்ரென்று வெந்நீராகவே கீழிறங்கி விடும். இதனை சமாளிக்கக் கற்றுக்கொண்டால் பாதி வேலை முடிந்தது. குறைந்தது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை எடுத்துக்கொண்டால், தொட்டுப் பொட்டு இட்டுக்கொள்வது போன்ற நிலையை அடையும். இவையெல்லாம் எனக்கு இடது கை வேலை. ஆனால், உண்மையான அறைகூவல் (challenge) கீழே வருமாறு:

கிராமங்களில் ஒரு பழமொழி உண்டு. மழை பெய்வதும், பிள்ளை பிறப்பதும் மகாதேவனுக்கே தெரியாது என்று. இங்கே, பால் பொங்குவதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பார்த்துக்கொண்டிருக்கும்போதே, சடக்கென விஷமம் செய்யும் குழந்தை போல பொங்கி வழிந்து விடும். என்னதான் வாயடுப்பை (gas stove) 'sim' இல் வைத்திருந்தாலும் இந்த அபாயம் சில நேரங்களில் தவிர்க்க இயலவில்லை. இதுவும் கூட எனக்கு பிரச்சினை இல்லை. மனைவியிடம் வசமாக சிக்கிக்கொள்வோம் என்ற ஒரு பயம்தான். என் DNA வை வசைபாடுவாள். கை தேர்ந்த குற்றவாளியும் ஒரு தடயத்தையாவது விட்டு செல்வது போல, பரபரவென்று அடுப்பைத் துணி கொண்டு துடைத்து விட்டாலும், சிறிது நேரம் கழித்து சிவனடியார் உடலில் திருநீறு போல வரிவரியாக கோடிட்டு வசமாகக் கட்டிக் கெடுத்து (கொடுத்து) விடும். I have still not mastered the art of expunging evidence.

ஆங்கிலேயர் விட்டுச் சென்றதின் அடிமைத்தனத்திலிருந்து அந்தணர் இன்னும் மீண்டு வராதன மூன்று; ஆங்கிலம், மட்டைப்பந்து மற்றும் குழம்பிநீர். இதைப்படித்து நீர் குழம்பினீர்!

திருமலாவில் பிரஹ்மோத்ஸவம்:


திருமலாவில் ப்ரஹ்மோத்ஸவம்....


தில்லியில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பாலாஜி மந்திர் ஊழியர் ஒருவர் தினம் தினம் அவருக்கு வரும் பிரஹ்மோத்ஸவ படங்களை வாட்ஸப்பில் அனுப்பி வைக்கிறார். சில சமயங்களில் இருபது முப்பது படங்கள் ஒரே நாளில் வரும்போது, Block செய்துவிடலாமா என்று கூட தோன்றும். சரி வேண்டாம் என்று விட்டால் தினமும் படங்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. சரி என்ன செய்யலாம் என்று யோசித்தபோது – சரி பரவாயில்லை இருக்கட்டும் – சில படங்களை இந்த ஞாயிறில் இங்கே பகிர்ந்து கொள்ளலாம் – உலாவாக! யாருங்க அது – ஒரு பதிவு தேறிடுச்சா என்று சத்தம் விடுவது!

இந்த வாரத்தின் பதிவர் – விந்தை மனிதன் ராஜாராமன் :

பதிவுலகில் காலடி எடுத்து வைத்த சில வருடங்கள் – எத்தனை பதிவுகளை, எத்தனை பதிவர்களின் அனுபவங்களைப் படித்திருப்பேன் என்ற கணக்கே இல்லை. அப்படிப் படித்த ஒரு பதிவரின் வலைப்பூ இந்த வாரத்தின் அறிமுகமாக…. அவர் பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்டதில்லை – நான் படித்த பெரும்பாலான பதிவுகள் போலவே! சமீபத்தில் முகநூலில் அவர் பதிவொன்றின் சுட்டி பார்த்தபோது அவரது வலைப்பூவில் ஏதாவது இப்போது எழுதுகிறாரா எனப் பார்த்தால் 2013-க்குப் பிறகு ஒன்றும் இல்லை! அவரின் ஸ்வர்ணா என்றொரு தேவதை பதிவிலிலிருந்து சில வரிகள்…

ஆற்றில் வலைக்குச் சிக்காமல் துள்ளி நழுவும் கெண்டைமீன் போல கண்கள் ஓயாமல் ஓடிக்கொண்டே இருக்கும் ஸ்வர்ணாவுக்கு. நொடிக்கு மூன்றுதரம் சிரிக்கும் வித்தையை எங்கிருந்துதான் கற்றாளோ! சாயங்கால வெயில் மாந்தளிரில் பட்டால் ஒருமாதிரி மின்னுமே, அதுபோல வெளுப்புமில்லாமல் மாநிறமும் இல்லாமல் ஒரு நிறம் அவளுக்கு... ராட்சஸி!

அழகான பெண்களுக்கு அறிவு என்பது ஆட்டுக்கு வால்போல என்ற தொன்மொழிகளெல்லாம் ஸ்வர்ணாவுக்கு செல்லுபடியாகாது. ஹெட்மாஸ்டர் பஞ்சாபகேச அய்யருக்கு ஸ்வர்ணா என்றாலே ஒரே பூரிப்புதான். ப்ராக்ரஸ் ரிப்போர்ட் பார்த்து வயிறெரிந்தவர்கள் சுதந்திரதினக் கலை நிகழ்ச்சிகளில் பாரதமாதா வேஷம் கட்டியபோது குளிர்ந்துபோனார்கள். "பாரதி கனவில் வந்த" கவிதையைப் படித்தபோது தமிழ்வாத்தியார் வாயில் எத்தனை பல் சொத்தைப்பல்லென்ற நெடுநாள் சந்தேகம் தீர்ந்துபோனது.

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்

கோஹினூர் பாஸ்மதி அரிசிக்கான விளம்பரம் இது. வேறு வேறு நாட்டிலிருந்து மூன்றாம் நாட்டில் சந்திக்கும் இருவர். அவர்களுக்குள் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத்தில் ஒன்றுபட்டு இருக்கிறார்களாம். பார்க்க நன்றாக இருக்கிறது இந்த விளம்பரம் – பாருங்களேன்.
பின்னோக்கிப் பார்க்கிறேன் – என் வலைப்பூவில்…

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவில் சென்று வந்த பிறகு எழுதிய பயணத்தொடரின் மூன்றாம் பகுதியை இதே நாளில் நான்கு வருடத்திற்கு முன்னர் எழுதி இருக்கிறேன். சில பயணங்கள் மறக்க முடியாதவை. மீண்டும் ஒரு முறை பயண நினைவுகளைப் படித்துப் பார்த்தேன். படிக்காதவர்கள் படித்துப் பார்க்கலாமே…. முழுத்தொடரும் படிக்க விருப்பமிருப்பவர்களும் படிக்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

42 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. காலை வணக்கம் வெங்கட். இங்கு சென்னையிலும் என் மகன்கள் தாலி எனும் உணவினை விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆனால் இங்கு ஊர் பெயருடன் வராமல் பொதுவாக வடஇந்திய தாலி என்று வரும் என்று நினைக்கிறேன். ஒரே ஒருமுறை (அதை பார்சல் செய்ய மாட்டார்களாம்.. முடியாதாம்) நானும் சுவைத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   இப்போதெல்லாம் தாலி என நம் ஊரிலும் வட இந்திய தாலி கிடைக்கிறது. பார்சல் கிடையாதா? இங்கே பார்சல் செய்வதற்கெனவே தனி வசதி உண்டு - பிளாஸ்டிக் பெட்டிகள் - தனித்தனி குழிகள் மற்றும் மூடிகளூடன் - மேலே அட்டையில் கவரும் உண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. சீன விளம்பரப்படம் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். இந்திய விளம்பரப்படம் இப்போதுதான் பார்க்கிறேன். பார்த்து கண்கலங்கிப்போனேன். அருமை, அற்புதம். கண்கள் சீரானதும் பின்னூட்டம் டைப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சீன விளம்பரம் முகநூலில் வந்து கொண்டிருக்கிறது சில நாட்களாக....

   இந்திய விளம்பரமும் மனதைத் தொட்டது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. உங்கள் நண்பர் முரளியின் காஃபி விவரணம் படித்து ரசி(ரி)த்தேன். கடைசி வரி(யும்) ஸூப்பர்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் காஃபி விவரணம் - ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. நான் கூட எப்போதோ ஓரிருமுறை விந்தைமனிதன் ராஜாராமன் பதிவுப்பக்கம் சென்ற நினைவு!

  பெருமாள் படத்துக்கு நன்றி! சனிக்கிழமைக்கு தரிசனம் ஆச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை பதிவர்கள் இப்போது எழுதுவதே இல்லை.... :( கொஞ்சம் கொஞ்சமாக பதிவு எழுதுவது நின்றே போனது வருத்தம் தான் இல்லையா...

   பெருமாள் படம் இன்னும் நிறைய இருக்கிறது - நாளை தனிப்பதிவாக...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. விளம்பரங்கள் - சில - இப்போதெல்லாம் அழகிய ஒரு சிறுகதையாக எடுக்கிறார்கள். ரசிக்க முடிகிறது.. விளம்பரங்களைத் தவிர்க்கும் எனக்கு நீங்கள் கொடுப்பதன் மூலம் பார்க்க முடிகிறது. ரசித்தேன். அந்தப் பெண் கொஞ்சம் பத்மினி கோலாப்பூரி போலவும், கொஞ்சம் என் அன்னான் பெண் தாரிணி போலவும் இருந்தாள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரங்களில் பெரும்பாலானவை மஹா கேவலமாக இருக்க, இப்படி சில விளம்பரங்கள் தான் விளம்பரங்கள் மீதான நம்பிக்கையைத் தருகிறது.

   ஆஹா அந்த விளம்பரப் பெண் உங்கள் உறவினர் பெண் போல இருக்கிறாரா? மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  உத்திராகண்ட் தாலி விரிவாக்கத்திற்காக காத்திருக்கிறேன்.

  தங்கள் முகநூல் நண்பர் எழுதிய காபி தயாரிக்கும் முறை எழுத்துகளும், மற்றொரு நண்பரின் "ஸ்வர்ணா என்றொரு தேவதையும்" என்ற கதையின் எழுத்துகளும் என்னை பிரமிக்கச் செய்தன. என்னவொரு அழகான, எழுத்து கையாடல்கள்.. மிகவும் ரசிக்க வைத்தன.

  பெருமாளின் திவ்ய தரிசனம் புரட்டாசி முதல் சனியன்று தந்ததற்கு மகிழ்ச்சி.

  தாங்கள் குறிப்பிட்டுள்ள சட்டியில் சென்று படிக்கிறேன்.

  காணொளி பிறகு அவசியம் கண்ட பின் வருகிறேன்.

  காஃபி வித் கிட்டு எப்போதும் போல் அருமையாக இருந்தது.பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்தும் படித்து ரசித்தமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 8. அடடே... அப்பவே உங்கள் பழைய பதிவைப் படித்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நீங்கள் படித்து பின்னூட்டமும் கொடுத்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. குழம்பிநீர் ஈடுபாடு உட்பட அனைத்தும் அருமை ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. இன்று 'உலக இதய நாளுக்கு ' அருமையான காணொளி.
  இதயத்தை டச் செய்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலக இதய நாள்.... தகவலுக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 11. இந்திய, சீன காணொளி இரண்டும் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 12. அனைத்தும் அருமை.
  பாசுமதி அரிசி விளம்பர காணொளியும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாசுமதி அரிசி விளம்பரமும் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   நீக்கு
 13. கதம்பத்தொகுப்பு அருமை ஜி
  காணொளிகள் கண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 14. கதம்பத் தொகுப்பு அருமை. இந்த 'காபி பிரியர்கள்' பெரும்பாலும் தஞ்சை கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். என் பரம்பரைக்கே காபி பிடிக்காது ஹாஹா

  தாலி மீல்ஸில், ராஜஸ்தானி, குஜராத்தி, பொதுவா வட இந்திய தாலி மீல்ஸ் போன்றவை சாப்பிட்டிருக்கிறேன். உங்க ஊர் பிகானிர்வாலாவிலும் தாலி மீல்ஸ் சாப்பிட்டிருக்கிறேன். அதுதான் சாப்பிட்டதிலேயே பெஸ்ட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிகானேர்வாலா மீல்ஸ் இப்போது அவ்வளவு நன்றாக இல்லை. நிறைய இடங்களில் Franchise என்பதால் எது ஒரிஜினல் என்று தெரியாத அளவிற்கு அதிகமாகி விட்டது! :(

   காஃபி உங்கள் பரம்பரைக்கே பிடிக்காது - ஹாஹா.... நல்ல விஷயம். என் இல்லத்தரசி இது வரை காஃபி சுவைத்ததே இல்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 15. நல்ல பானங்கள் பல வற்றை ஒருசேர வைத்தாலும் என்வோட் நல்ல காப்பிக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 16. உத்தரகாண்ட் தாலியில் காணப்படுவது கர்நாடகா மொத்தை போல் தெரிகிறதே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு வித ரொட்டி - சப்பாத்தி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 17. நல்லா இருக்கு. நானும் காஃபி பத்தி எழுதினேன். இந்தப்பால் காய்ச்சும்போது பொங்க விடுவது பத்தி முகநூலில் ஒரு குழுவே இருக்கு. எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் முதல் கோவை கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணையர் வரை! பிரார்த்தனை போல் பால் பொங்க விடுவாங்க போல! நானெல்லாம் சிம்மில் வைச்சுட்டு வேறே வேலை பார்ப்பேன். இன்டக்‌ஷன் ஸ்டவ் எனில் பாலுக்குள்ள ஆப்ஷனில் வைத்தால் பொங்கும் நிலை வந்ததும் குரல் கொடுத்துவிட்டு அடுப்பு தானே அணையும். பிரச்னையே இல்லை. விருந்தாளிங்க தான் அந்த ஸ்டவைப் பாடாய்ப் படுத்துவாங்க! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் பால் பொங்க விடுவதைப் பற்றியே சிலர் எழுதுவதைப் படித்திருக்கிறேன். கொஞ்சம் கவனம் சிதறினால் இப்படி ஆகிவிடுவதுண்டு.... நானும் சில முறை பொங்க விட்டிருக்கிறேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 18. திருமலா பிரம்மோத்சவம் நேரடி ஒளிபரப்பே பார்க்கிறோம். உங்க காணொளி எல்லாம் நிதானமாய்ப் பார்க்கணும்.
  http://sivamgss.blogspot.com/2006/11/148.html

  http://sivamgss.blogspot.com/2014/03/blog-post_23.html இது மட்டும் தொடராக 2,3 பதிவுகள் வந்தன. நீங்களும் கருத்துச் சொல்லி இருக்கீங்க! ஆதியும்! :) சும்மா ஒரு விளம்பரந்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரடி ஒளிபரப்பு - நான் டி.வி. பார்ப்பதே இல்லை!

   உங்கள் பதிவு மீண்டும் சென்று பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 19. உலாவாக! யாருங்க அது – ஒரு பதிவு தேறிடுச்சா என்று சத்தம் விடுவது!//

  ஹா ஹா ஹா நான் இல்லைப்பா....ஏன்னா உங்களுக்கு எல்லாம் பதிவு தேத்தவேண்டிய அவசியமே இல்லையே!! அதான்...

  காஃபி கதை அருமை வெகு ஸ்வாரஸ்யம் நல்ல காஃபியைப் போல நுரை பொங்க சொல்லியிருக்கார். யெஸ் டிக்காக்ஷன் போடுவது என்பது தனிக்கலை...

  பல விளம்பரங்கள் அழகாஅ குறும்படம் போல எடுக்கிறார்கள் இப்போதெல்லாம்....நல்லாருக்குஜி...

  உபி தாலி மீல்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கு...என்னென்னனு நீங்க சொல்லும்வரை வெயிட்டிங்கா...??!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு தேத்த வேண்டிய அவசியம் இல்லை - ஹாஹா... நன்றி!

   டிக்காக்ஷன் போடுவது தனிக்கலை தான் - அனைவருக்கும் கைகூடி வருவதில்லை.

   உத்திராகண்ட் தாலி! சொல்கிறேன் விரைவில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  சீன காணொளி கண்டேன். குழந்தை தாயில்லாமல் அழுவது பின் தந்தையிடம் பீச் பிணைப்பு. இரண்டாவது மிகவும் கண்களை கலங்க வைத்தது. இந்த கொடுமை எந்த தாய்க்கும் வர வேண்டாம்.

  பாசுமதி அரிசி விளம்பர படமும் நன்றாக இருந்தது.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு
 21. "தந்தையிடம் பாச" என படிக்கவும். தட்டச்சு பிழை இந்த கைபேசியில் அடிக்கும் போது நிறைய வருகின்றன நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த ஆண் குழந்தையின் தந்தை இல்லை. தாயின் இதயத்தினைப் பெற்றுக்கொண்டவர் - உடலுறுப்பு தானமாக.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....