வியாழன், 27 செப்டம்பர், 2018

சுற்றுலா பருவம் – விதம் விதமாய் உணவு – கலைநிகழ்ச்சிகள் – தலைநகரில்…ஸ்வீட் எடு... கொண்டாடு...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

உத்திராகண்ட் தாலி....
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

சென்ற வாரம் காஃபி வித் கிட்டு பகிர்வில் “உத்திராகண்ட் தாலி” படம் சேர்த்து அது பற்றி பிறகு எழுதுகிறேன் என்று சொல்லி இருந்தேன். இதோ தகவல்களோடு வந்துவிட்டேன்! கடந்த 16-ஆம் தேதி முதல் இன்று வரை [27-ஆம் தேதி] வரை தலைநகர் தில்லியின் ராஜபாட்டையில் [Rajpath] மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சார்பாக “பர்யாடன் பர்வ்” என்ற நிகழ்ச்சி நடக்கிறது. கடந்த வருடம் தான் முதல் முறையாக இந்த பர்யாடன் பர்வ் நிகழ்ச்சி துவங்கினார்கள். இந்த வருடமும், இனி வரும் வருடங்களும் இந்த பர்யாடன் பர்வ் தொடர்ந்து நடக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.  பர்யாடன் என்றால் சுற்றுலா, பர்யாடக் என்றால் சுற்றுலாப்பயணி.  பர்வ் என்பது பருவம்! இந்த நிகழ்வில் அப்படி என்ன சிறப்பு? வாருங்கள் பார்க்கலாம்.


ராஜ்பத் - ராஷ்ட்ரபதி பவன், விளக்கொளியில்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


சோலே பட்டூரேக்கான சோலே!...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


கலை நிகழ்ச்சியிலிருந்து...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

இந்தியாவின் பல மாநிலங்களில் கிடைக்கும் உணவு, சிறப்புப் பொருட்கள் அனைத்தும் இங்கே ஒரே இடத்தில் – தனித்தனி ஸ்டால்களில் கிடைக்கும். கூடவே பல மாநில கலைஞர்களும் ராஜபாட்டையின் ஒரு பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இது ஒரு நாள் நிகழ்வு அல்ல! கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக நடக்கிறது. இந்த வருடம் 16-ஆம் தேதி துவங்கிய நிகழ்ச்சி இன்றுடன் முடிகிறது. சில நாட்களாகவே குடில்கள் போன்ற அமைப்புகளை இங்கே அமைத்துக் கொண்டிருந்ததால் என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்புடன் இருந்தேன். பர்யாடன் பர்வ் என்று தெரிந்தவுடன் ஒரு நாள் மாலை அலுவலகம் முடிந்தபிறகு நானும் நண்பர் பத்மநாபனும் சென்று வந்தோம். அன்று சுற்றிப் பார்த்து சாப்பிட்டது தான் உத்திராகண்ட் தாலி! படம் மட்டும் பகிர்ந்து இருந்தேன்.


மிக்ஸ் வெஜிட்டபிள்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


தால் மக்கனி....
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

தலைநகரில் இருப்பதால் பல மாநில உணவுகளைச் சுவைக்க வாய்ப்பு இருந்தது என்றாலும், உத்திராகண்ட் தாலி இதுவரை சுவைத்ததில்லை. சரி சாப்பிடலாம் என முடிவு செய்தோம். ஒரு உத்திராகண்ட் தாலியின் விலை 120/- ரூபாய் மட்டும். அதில் இரண்டு மண்ட்வா ரொட்டி, காஃபுலி, CHசேன்சூ, Bபாட் கி தால் என மூன்று சப்ஜி, கொஞ்சம் சாதம், சாலட் மற்றும் ஜங்கோரா கி கீர் – இவ்வளவு தான்! என்னவோ தெரியாத பெயர்களாக இருக்கிறதே என்று நாங்கள் விழித்த மாதிரி விழிக்க வேண்டாம் – அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டதை உங்களுக்கும் சொல்கிறேன். மண்ட்வா என்பது நம் ஊர் கேழ்வரகு! கேழ்வரகு மாவில் செய்த ரொட்டியை நெய் சேர்த்து, சாதம் மற்றும் மேலே சொன்ன சப்ஜிகளுடன் தந்தார்கள்.


பாலக்....
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


புலாவ்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


Bபதாய் நடனம் ஆடும் ஜோடி...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

காஃபுலி என்பது பாலக்கீரை போன்ற கீரைகளில் செய்யப்படும் சப்ஜி, CHசேன்சூ என்பது கருப்பு உளுந்து கொண்டு செய்யப்படுகிறது, பாட் கி தால் என்பது ஒருவித சோயாபீன். வித்தியாசமான சுவையில் இருந்த மூன்றில் காஃபுலி மற்றும் Bபாட் கி தால் இரண்டும் பிடித்திருந்தது. CHசேன்சூ நன்றாக இருந்தாலும் ஏனோ நரநரவென இருந்ததால் அவ்வளவாக ருசித்து சாப்பிடமுடியவில்லை. கேழ்வரகு ரொட்டியுடன் காஃபுலி சேர்த்து சாப்பிட்டோம். அது மாதிரி சாதத்துடனும் காஃபுலி சேர்த்து கொஞ்சமும், Bபாட் கி தால் சேர்த்து கொஞ்சமும் சாப்பிடோம். கூடவே சாலட்! கடைசியில் இனிப்பு – இனிப்பாக கிடைத்தது தான் ஜங்கோரா கி KHகீர்! கீர் என்றால் நம் ஊர் பாயசம் மாதிரி! அப்ப ஜங்கோரா என்றால் என்ன என்று கேட்பதற்கு முன் சொல்லி விடுகிறேன் – குதிரைவாலி என தமிழில் அழைக்கப்படும் Barnyard Millet தான் உத்திராகண்ட் பகுதியில் ஜங்கோரா என அழைக்கப்படுகிறது. குதிரைவாலி பாயசம் ஆறிப்போயிருந்தது.   சூடாகக் கொடுத்திருந்தால் இன்னும் சுவைத்திருக்கலாம்.


ஷாஹி பனீர்......
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


சோலே......
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


பார்க்கும்போதே சாப்பிடத் தோணுதில்ல!... மிளகாய் பார்க்கும்போது தான் கொஞ்சம் டரியலா இருக்கு!...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

என்னதான் இனிப்பாக கீர் சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்சம் இனிப்பு சாப்பிடலாம் என வேறு மாநில ஸ்டால்களிலும் கொஞ்சம் உலா வந்தோம். ஒடிசா மாநிலத்தின் ஒரு ஸ்டாலில் விதம் விதமாய் இனிப்புகள் வைத்திருக்க அவற்றில் ரஸ்குல்லா மற்றும் மால்புவா மட்டும் தான் தெரிந்த பெயராக இருந்தது. சென்னா போடா என்று கூட ஒரு இனிப்பு இருந்தது. அந்த இடத்தில் கிடைக்கும் உணவு வகைகளை ஆங்கிலத்தில் எழுதித் தொங்க விட்டிருந்தார்கள் – Poda, Vada, Enduri எனப் பார்த்த நண்பர் – அண்ணாச்சி, என்னமோ போடா வாடானு மரியாதை இல்லாம இருக்காங்களே எனக் கிண்டல் அடித்தார். அங்கே சில இனிப்புகளைச் சுவைத்துப் பார்க்க கொஞ்சம் கொடுத்தார்கள் முதல் முறை சாப்பிட்ட இனிப்பு என்ன என்று பிறகு சொல்கிறேன். இரண்டாம் முறை படங்கள் எடுப்பதற்காகச் சென்ற போது ரஸகுல்லா சாப்பிட்டோம்.


ஸ்டஃப்ட் நான் மற்றும் சப்ஜி...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


சற்றே ஓய்வெடுக்கும் கலைஞர்கள்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


அலங்கரித்து வைத்திருந்த காய்கறிகள்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

கடந்த வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இரண்டாம் முறையும் நானும் நண்பர் பத்மநாபனும் சென்று இருந்தோம். அன்றைக்கு ஒவ்வொரு இடமாக காமிராவில் படம் எடுத்துக்கொண்டு, கலைநிகழ்ச்சிகளைப் பார்த்தோம். அங்கேயும் சில படங்கள் எடுத்திருக்கிறேன். முடிந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து கொள்கிறேன். இரண்டாம் நாள் கலைநிகழ்ச்சிகள் முடிந்த பிறகு NASVI [National Association of Street Vendors of India] சார்பில் அமைத்திருந்த ஒரு ஸ்டாலில் வட இந்திய தாலி சாப்பிட்டோம். நல்ல காரம் – உத்திராகண்ட் தாலியே நன்றாக இருந்தது. இரண்டு ஸ்டஃப்ட் நான், தால் மக்கனி, மிக்ஸ் வெஜ், புலாவ் மற்றும் சாலட் - அவ்வளவு தான்.  விலை 150 ரூபாய்! [ஒரு ப்ளேட் தான்!] இனிப்பு கூட கிடையாது! விலை அதிகம் கொடுத்தும் நன்றாக இல்லை என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டோம்.   


அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் கலைஞன்...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


நான் என்ன பாவம் செய்தேன்... இப்படித் தொங்கவிட்டீர்களே....
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


ஹலோ... வெறும் ஃபோட்டோ தான் புடிப்பீகளா... 
இல்ல ஏதும் சாப்பிடவும் செய்வீகளா......

பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

தலைநகர் தில்லியில் மட்டுமல்லாது இந்த பர்யாடன் பர்வ் இந்தியா முழுவதும் மாநிலத் தலைநகர்களில் ஒன்றிரண்டு நாட்கள் இந்த ஆண்டிலிருந்து கொண்டாட முடிவு செய்திருக்கிறார்கள். இந்த மாதிரி நிகழ்வுகள் நடந்தால் சில புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வதோடு, புதிய உணவு வகைகளையும் சாப்பிட முடிகிறது என்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம் தானே. நாங்கள் சென்ற போது எடுத்த நிழற்படங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன். உணவுப் படங்கள் மட்டும் இந்தப் பதிவில் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். இன்னும் சில படங்கள் உண்டு – அவையும், அவை பற்றிய செய்தியும் காஃபி வித் கிட்டு பதிவுகளில் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.


கத்புத்லி எனும் பொம்மலாட்டமும் உண்டு...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


எக்ஸ்ட்ரா லார்ஜ் மிளகாய் பஜ்ஜி!...
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...


எல்லாம் சாப்டாச்சா....? 
ஒரு மீட்டா பான் போடலாம் வாங்க......
பர்யாடன் பர்வ்-2018, தில்லி...

இப்பதிவு மூலம் நீங்களும் சில புதிய உணவு வகைகளைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். சில உணவு வகைகளை வீட்டில் செய்து பார்க்க எண்ணமுண்டு. அப்படிச் செய்தால் அது பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்! இந்தப் பதிவில் தந்திருக்கும் படங்களும் விஷயங்களும் பற்றிய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

58 கருத்துகள்:

 1. குட்மார்னிங் வெங்கட்...

  'பர்யாடன்' என்றால் சுற்றுலாவா? ராகேஷ் ரோஷன், ஹேமமாலினி நடித்து அப்படி ஒரு படம் இருக்கிறது இல்லை? இரண்டு பாடல்கள் அதில் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அதை பர்யா Dhதான் என்று உச்சரிப்பேன்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் 🙏 ஸ்ரீராம்.

   வேற்று மொழி வார்த்தைகளை தெரியாமல் ஆங்கிலத்தில் அல்லது நம் மொழியில் படித்தால் இப்படிதான். மோடி என்று எல்லாரும் சொல்லும் வார்த்தை மோதி எனச் சொல்ல வேண்டும் - just one example!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. அது சரி, கவாஸ்கரையே அல்லது வாஜ்பாயை எத்தனை விதமாக அழைப்போம்? ஷோபனா ரவி உச்சரிப்பு சரியாக இருக்கும் என்று சொல்வார்கள்!

   நீக்கு
  3. ஆமாம் இப்படி நிறைய வார்த்தைகள் உண்டு. ஹிந்தியில் படிக்கும்போதும் வேறு மொழியில் படிக்கும்போதும் நிறைய வித்தியாசம் உண்டு! இப்பதிவில் கூட இப்படிச் சில வார்த்தைகள் உண்டு. காஃபுலி என்பதை ஆங்கிலத்தில் kafil என எழுதி வைத்திருந்தது! ஹிந்தியில் படித்தபோது தான் அதனைத் தெரிந்து கொண்டேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நீங்கள் சொல்லி இருக்கும் தாலியை விட பகிர்ந்திருக்கும் படங்கள் இழுக்கின்றன. கத்புலி கற்புலி என்றெல்லாம் பயமுறுத்துகிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கத்புத்லி - கத்புலி இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நுழைவுக் கட்டணம் உண்டா? வெஜ் மட்டும்தானா? தமிழ்நாட்டு அல்லது தென் இந்திய உணவு வகைகளை அதிகம் காணோமே.. 'தோஸா' தவிர!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நுழைவுக் கட்டணம் கிடையாது. தென் இந்திய உணவுப் பக்கமே போகவில்லை. அசைவமும் உண்டு. நாகலாந்து கடை வருவதை தூரத்தில் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பல வடஇந்திய ஐட்டங்களின் படங்களை பார்க்கும்போது ஓரளவு சுவையை யூகிக்க ( ! ) முடிகிறது. ஆனால் ரசகுல்லா விஷயத்தில் இப்படி கற்பனைச் சுவையில் ஏமாந்திருக்கிறேன்!! இன்றுவரை நான் நினைத்த சுவையில் அது இல்லை என்பது ஏமாற்றம்தான்!!!

  அவர்கள் காயை சற்றுப் பெரிதாக வெட்டிப் போடுகிறார்கள் - ஆவக்காய் போடுவது போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட இந்தியர்கள் கொஞ்சம் சோம்பேறிகள் - காய் வெட்டும் விஷயத்தில் குறிப்பாக! ஷிம்லா மிர்ச் என அழைக்கப்படும் குடைமிளகாயை நான்காக வெட்டி பெரிய பெரிய உருளையுடன் வேக வைத்து ஆலு ஷிம்லா மிர்ச் சப்ஜியாகக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறேன்! டேய்... கொஞ்சம் சின்னச்சின்னதா வெட்டிப்போடுங்கடா என தமிழில் சொல்வதுண்டு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  2. காய்களை பெரிய துண்டுகளாய் வெட்டி சமைத்தால் தான் சத்து என்று சொல்லியது படி செய்கிறார்கள் போலும்.

   நீக்கு
  3. ஸ்ரீராம், ரசகுல்லாவை விட, ரசமலாய் சாப்பிட்டுப்பாருங்கள். அது ஸ்மூத் ஆக இருக்கும். ரசகுல்லா பொதுவா கொஞ்சம் கரகரப்பா இருக்கும்.

   நீக்கு
  4. இருக்க வாய்ப்பில்லை கோமதிம்மா... சிறிது சிறிதாய் வெட்ட சோம்பேறித்தனம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
  5. ஆமாம் ஸ்ரீராம். ரஸ்குல்லாவினை விட ரஸ்மலாய் இன்னும் சுவை அதிகம். நன்றாகவே இருக்கும். இங்கே சாப்பிடுவதுண்டு. நம் ஊரில் சில முறை சுவைத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 5. குட்மார்னிங்க் வெங்கட்ஜி...

  ஆஹா ஒரே சாப்பாடு ஐட்டமா இருக்கே அதுவும் ;எனக்கு பிடிச்சா மாதிரி இருக்கே..சுவைக்க வரேன்....

  ஸ்ரீராம் சுவைத்தாச்சா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ஹா ஹா ஆமாம் இப்பத்தான் நானும் பார்த்தேன்...கண்டிப்பா வரணும்...வருவோம் எல்லாரும் சேர்ந்து கொண்டாடிட்ட போச்சு!!!

   கீதா

   நீக்கு
  2. காலை வணக்கம் கீதா ஜி!

   ஆமாம் கீதா ஜி! சாப்பாடு ஐட்டம் தான். சுவை எப்படின்னு பார்த்து சொல்லுங்க! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  3. ஞாயிறு நிழற்பட உலா மட்டும் தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. ஆஹா... வாங்க வாங்க.... எல்லோரும் வாங்க. கொண்டாடிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 6. ஆஹா சுவையா இருக்கே!!! சோலே, தால்மக்கனி வீட்டில் செய்வதுண்டு. உத்ரகான்ட் தாலி ஐட்டம்ஸ் நோட் செய்து கொண்டேன் இதுவரை தெரியவில்லை. நீங்கள் கொடுத்திருப்பதை நோட் செய்து கொண்டேன் நெட்டில் தேடிவிட்டால் கிடைக்கும்தானே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உத்திராகண்ட் பகுதி சமையல் என சில தளங்களில் இருக்கின்றன. ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்! நானும் செய்து பார்க்க நினைத்திருக்கிறேன். நீங்களும் செய்து பார்க்கலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  2. உத்ரகான்ட் தாலி இரு வகையாக இருக்கு இரு ரீஜனாக (ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல் போன்று) கார்வாலி, குமாஒனி என்று கார்வாலி ரீஜனில்தான் நீங்கள் சொல்லியிருப்பது எல்லாம் வருகிறது ஜி...பார்த்துவிட்டேன்..

   செய்ன்ஸூ கர கர என்ரு இருப்பதற்குக் காரணம் தால்மக்கனி போலத்தான் செய்தாலும் தால்மக்கனி போன்று நிறைஅய் நேரம் கடாயில் போட்டு சிம்மில் வைத்துக் கொதிக்கவிடுவதிலலி போல....க உளுந்தை வறுத்து பொடித்துச் செய்கிறார்கள் அதான் அப்படி உங்களுக்குத் தோன்றியிருக்கு. நன்றாக குழைவாக வேக வைத்துவிட்டால் அப்படித் தெரியாது போல இருக்கு. செய்து பார்த்துவிடணும். கிட்டத்தட்ட தால்மக்கனி போலத்தான் இருக்கு...

   கீதா

   நீக்கு
  3. நானும் செய்முறை பார்த்தபோது தான் கரகரப்பின் காரணம் புரிந்தது - தெரியாமல் சாப்பிட்டபோது கல்லை அரைத்து விட்டார்களோ என்ற நினைப்பு மனதுக்குள்! ஹாஹா...

   Gகட்வாலி, குமாவ்னி என்று சொல்ல வேண்டும் - Garhwali, Kumauni என்று எழுதி இருப்பதை! சப்ஜி செய்து பாருங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. வட இந்தியர்கள் சாலட் அலங்கரிக்கும் விதமே ரொம்ப அழகா இருக்கும். வீட்டில் கூட மிக அழகாக அலங்கரிக்கிறார்கள். நான் அங்கு ஹரியானாவைச் சேர்ந்தவர் வீட்டில் (ஓல்ட் குர்காவ்ன்) சாப்பிட்டிருக்கிறேன் இரு முறை. ரொம்ப நன்றாக இருக்கும் அவர்கள் செய்யும் ஐட்டங்கள். நிறைய வைக்கிறார்கள். நமக்குத்தான் சாப்பிட முடிவதில்லை...இரு முறையும் வேறு வேறு டிஷஸ் வைத்திருந்தார்கள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இங்கே சைட் டிஷ் தான் அதிகம் - ரொட்டியில் அவ்வளவு வகை இல்லையே! :) பெரும்பாலும் தால் மக்கனி, ஷாஹி பனீர் தான் பிரபலம் என்றாலும் நிறைய உணவு வகைகளை ருசித்திருக்கிறேன் - கடி, மலாய் கோஃப்தா, Bபேங்கன் Bபர்த்தா, பனீர் Bபுர்ஜி, கடாய் பனீர் என விதம் விதமாய் இருக்கும் சைட் டிஷ்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
  2. ஆமாம் ஜி நானும் நீங்கள் சொன்னவை மற்றும் பல வகை சுவைத்தாயிற்று...வீட்டிலும் உடன் செய்து பார்த்துவிடுவேன் மகன் இருக்கும் போது. பனீர் புர்ஜி கடாய் பனீர் எல்லாம் நிறைய செய்திருக்கேன். தால் மக்கனி.....அவனுக்கும் மிகவும் பிடிக்கும். அப்போதெல்லாம் வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் முணுக்கென்றால், குடும்ப நண்பர்களை அழைத்து ஒரு கெட்டுகெதர் போட்டு விடுவார்கள். எனவே சான்ஸ் நிறைய. நீங்கள் வந்தீர்களே கோடம்பாக்கத்தில் அந்த வீட்டில்தான். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் எங்கெங்க்கோ குழந்தைகள் பெரியய்வர்களாகி வேலையில் பல இடங்களில் என்றானதால்... இப்போதெல்லாம் யாரேனும் கேட்டால்தான் செய்வதாய் இருக்கிறது.

   கீதா

   நீக்கு
  3. இங்கேயும் இப்படி நிறைய கெட் டு கெதர் நடந்து கொண்டிருந்தது - இப்போதும் உண்டு - சில மாதத்திற்கு ஒரு முறையாவது. அப்போதெல்லாம் விதம் விதமாய் உண்ண வாய்ப்பு கிடைக்கும் - எல்லா வீடுகளிலிருந்தும் எதாவது செய்து எடுத்துக் கொண்டு வருவார்கள்.....

   இப்படி சந்தித்து அளவளாவி, உண்டு மகிழ்ச்சியுடன் இருப்பது குறைந்து கொண்டே வருகிறது - பலரும் மொபைலிலும், தொலைகாட்சியிலும் மூழ்கிக் கிடக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. எல்லாத்தையும் பார்த்ததுமே வயிறு ரொம்பிப் போச்சு! ஸ்வீட் மட்டும் எத்தனை சாப்பிட்டாலும் அலுக்காது. எல்லாம் வைச்சிருக்காங்க, ஸ்வீட் வகைகள் வைச்சிருக்கக் கூடாதோ? நீங்களும் ஒடிசா ஸ்வீட் வகைகளோட படம் போடலை! என்ன போங்க! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒடிசா ஸ்வீட் வகைகளைப் படம் பிடிக்க இயலவில்லை! படம் எடுக்க முடியாத அளவுக்கு மக்கள் கும்பல் - பெண்கள் தான் அக்கடையில் அதிகம்! எனவே படம் எடுக்க இயலாத சூழல்! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. இஃகி, இஃகி, அப்போப் பெண்கள் எல்லாருமே ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ச்ச்வீட்டு!

   நீக்கு
  3. ச்சோ ச்ச்வீட்டு! ஹாஹா....

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  4. அப்படிப் போடுங்க கீதாக்கா !!!!! ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. பார்த்து பார்த்து - ரெண்டு கீதாக்களும் சேர்ந்துட்டீங்க.... நான் வரல விளையாட்டுக்கு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 9. விதவிதமாய் புதுப்புது உணவு வகைகளைப் பார்த்து பசியே வந்துவிட்டது ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... பசி வந்துவிட்டதா... கொஞ்சம் காலையிலேயே உணவு எடுத்துக் கொள்ள வைத்துவிட்டேனோ :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 10. ஒவ்வொரு உணவு வகைகளும் வித்தியாசமாக உள்ளது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 11. புகைப்படங்கள் சாப்பிடும் ஆசையை உண்டாக்குகிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 12. வட இந்திய உணவுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள முடிந்தது..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 13. இனிப்பில் ஆரம்பித்து பீடாவுடன் நிறைவு செய்து விட்டது அருமை.
  பொம்மலாட்டம் பள்ளியில் (கோவை) , திருவெண்காடு கோவிலில், மாயவரத்தில் பார்த்து இருக்கிறேன்.
  மீண்டும் பார்க்க ஆசை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொம்மலாட்டம் - ராஜஸ்தானில் நிறையவே இருக்கிறது இந்தக் கலை. என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக தன் பொலிவினை இழந்து வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 15. ஒரே படம் இருமுறை வந்திருக்கிறது. (சோலே பட்டூராக்கான சோலே). ஸ்டஃப்ட் நான் படம் கிளியரா வரலை. முதல் படம் பாதுஷா மாதிரி இருக்கு. வேற இனிப்புகள் எதுவும் காணோமே? ஞாயிறில் பகிருங்கள்.

  இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு வாரம் தில்லியில் டேரா போட்டு எல்லாவித சைவ உணவுகளையும் ருசிக்கணும்னு தோணுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை நானும் அதேதான் நினைத்தேன் இந்த பர்யாடன் பர்வ்/பர்வம் மட்டுமாவது தில்லி விசிட் அடிக்கணும்னு ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  2. ஒரே படம் இருமுறை. ஆமாம் - சரி இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன்!

   ஒரு வாரம் தில்லியில் டேரா.... வாங்களேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  3. பர்யாடன் பர்வ் இனிமேல் வருடா வருடம் - உலக சுற்றுலா தினம் சமயத்தில் கொண்டாட இருக்கிறார்கள். முடிந்தால் வாங்களேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 16. உணவு பிரியர்களுக்கு ஒரு விருந்து பதிவில் பார்த்து ரசிக்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 17. முன்பெல்லாம் கலா மிலன் என்னும் நிகழ்ச்சியை பி எச் இ எல் சார்பாக டெல்லியில்நடத்துவார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கலா மிலன் - நான் கேள்விப்பட்டதில்லை ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. இந்த வட இந்திய உணவுகள் எதுவும் நான் சுவைத்ததில்லை. ஒரே ஒரு முறை இங்கு கேரளத்தில் குழந்தைகள் ஆர்டர் செய்ததால் நாண் மற்றும் பனீர் பட்டர் மசாலா என்று ஒன்று சாப்பிட்டேன். அவ்வளவுதான்.

  அழகான சுற்றுலா உணவு விழாதான் போல....தமிழ்நாட்டு, கேரளத்து உணவு ஸ்டால்கள் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேரளத்தில்/நம் ஊரில் கிடைக்கும் வட இந்திய உணவுகள் குறிப்பாக ஹோட்டலில் கிடைப்பவை அவ்வளவு நன்றாக இருப்பதில்லை. வீட்டில் செய்ய முடிந்தால் செய்து சாப்பிடலாம்.

   தமிழகம், கேரளாவிலிருந்தும் ஸ்டால்கள் உண்டு - அந்தப் பக்கம் போகவில்லை - எப்போதும் சாப்பிடும் உணவு தானே! வட இந்தியர்கள் கூட்டம் அங்கே அதிகம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 19. எத்தனை விதமான உணவுகள்?!

  எனக்கு பீடான்னா ரொம்ப பிடிக்கும். வேலூர்ல சில இடங்களில் பீடா செமயா இருக்கும். வேலூர் போகும்போதெல்லா வாங்கி சுவைக்க மறப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாப்பிடுவதில் தான் எத்தனை விதங்கள் இல்லையா....

   பீடா எனக்கும் பிடிக்கும். இங்கே நிறையவே கிடைக்கும். அதுவும் விதம் விதமாக!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....