வெள்ளி, 7 செப்டம்பர், 2018

ராஜஸ்தான் போகலாம் வாங்க – ஜோத்பூர் –– மதிய உணவு – தில்லி நோக்கி – பயணத்தின் முடிவு


ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 28

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


பயணத்தின் கடைசி நாள் - மறையும் சூரியன்...
உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...உமைத் பவன் அரண்மனை அருங்காட்சியகத்தில் பல விஷயங்களைப் பார்த்து ரசித்த பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். ஜோத்பூரில் எங்களுக்குக் கிடைத்தது மிகக் குறைவான நேரமே. முதல் நாள் மாலை வந்து, அடுத்த நாள் மதியம் வரை தான் என்பதால் இரண்டு இடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. குறைந்த மதியம் 3 மணிக்குள் ஜோத்பூரிலிருந்து புறப்பட்டால் தான் இரவு தில்லி திரும்பி, அடுத்த நாள் அலுவலகம் செல்ல முடியும்.  ஜோத்பூரில் பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் சில உண்டு என்றாலும் எங்களிடம் நேரப் பற்றாக்குறை. ஆனால் பார்த்த இடங்கள் இரண்டிலும் பொறுமையாக பார்த்து ரசித்தோம். அதிலும் மெஹ்ரான்கட் கோட்டையில் நிறைய நேரம் இருக்க முடிந்தது. முந்தைய பதிவுகளில் நாங்கள் பார்த்த பல விஷயங்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். சொல்ல விடுபட்ட, சொல்லாத சில விஷயங்கள் இந்தப் பகிர்வில்.இன்னும் கொஞ்சம் நாளில் இதுவும் இருக்காது...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்... 

அரண்மனையிலிருந்து புறப்பட்ட எங்கள் வண்டி அடுத்ததாக நின்ற இடம் ஜோத்பூர் அய்யப்பன் கோவில் – காலையிலேயே கோவிலுக்குச் சென்றபோது மதிய உணவிற்கும் கோவிலுக்கு வரவேண்டும் என சொல்லி இருந்தார்கள். பூஜைகளும் முடிந்திருக்கும் என்பதோடு, அந்த வழியே தான் நாங்கள் எப்படியும் போக வேண்டும் என்பதால் அய்யப்பன் கோவிலுக்குச் சென்றோம். கோவில் வாசலிலேயே பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தெரிந்தது. வண்டியிலேயே அனைவரும் இருக்க, நான் மட்டும் கீழே இறங்கி கோவிலுக்குள் சென்று நிலைமை என்ன எனப் பார்த்து வரச் சென்றேன். சாப்பாடு நடந்து கொண்டிருந்தது. சாப்பிடக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை – ஒரு பெரிய வரிசையே காத்திருந்தது – நாங்களும் சென்றால் எப்படியும் மூன்று பந்திகளுக்குப் பிறகு தான் எங்கள் முறை வரும்!


ராம்தேவ்ரா பக்தர்கள் - பாதையில் ஓய்வெடுத்தபடி...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


அதனால் வண்டி நிறுத்திய இடத்திற்கு வந்து நிலைமையைச் சொல்லி, அங்கே மதிய உணவிற்கு நிற்க வேண்டாம் என்ற முடிவு எடுத்தோம். வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் ஜோத்பூருக்கு டாட்டா பை பை சொன்னோம். ஏற்கனவே உதய்பூரிலிருந்து வரும்போது பார்த்த உணவகம் மாதிரி ஏதோ ஒன்று இருக்காமலா போகும் என்ற தைரியம் – ராஜஸ்தான், குஜராத் பொறுத்த வரை சாலையோர உணவகங்கள் ரொம்பவே நன்றாக இருக்கும். நம் தமிழகம் போல – அதுவும் இந்த அரசு/தனியார் பேருந்துகள் நிறுத்தும் இடம் மஹா கொடுமை – அங்கே சாப்பிடுவதை விடுங்கள், தேநீர் கூடக் குடிக்க முடியாது – அப்படி இருக்கும் அதன் தரம் – விலை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை! சாதாரண விலையை விட ஒரு மடங்கு, இரண்டு மடங்கு அதிகமாகவே இருக்கும்.


வாகனத்தில் காதல் சின்னம் - தனித்தனி பலகைகளில்...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


ஜோத்பூரிலிருந்து ஜெய்பூர் செல்லும் பிரதான சாலையில் நாங்கள் பார்த்த ஒரு உணவகம் – மிலன் ரெஸ்டாரெண்ட். ஃபோஜி chசௌராஹா [இதன் அர்த்தம் ராணுவ வீரன் சாலை சந்திப்பு], ஜைதாரண் எனும் இடத்தில் இருந்த உணவகத்தில் தான் எங்கள் வாகனம் நின்றது. உணவகம் சுத்தமாகவே இருந்தது – நாங்கள் சென்று எங்களுக்குத் தேவையானதை சொன்னோம் – சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. உணவகத்தில் ஒரு பெரிய டி.வி. – அதில் ஏதோ ஒரு ஹிந்தி சினிமா – அதைப் பார்த்தபடியே பயணம், பயணத்தில் பார்த்த இடங்கள் பற்றி எல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். உணவுக்காகக் காத்திருப்பது கொஞ்சம் கடினமான விஷயம் – அதுவும் பசி நேரத்தில். எப்போது நாம் சொன்ன உணவு வரும் என்று நாங்கள் காத்திருக்கும் சமயத்தில் உதய்பூர் – ஜோத்பூர் பற்றி சில விஷயங்கள் பார்க்கலாம்.


மதிய உணவு சாப்பிட்ட உணவகம்...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...உணவுக்காகக் காத்திருந்த வேளையில்...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


நாங்கள் உதய்பூர், ஜோத்பூர் இரண்டு இடங்களிலுமே அரசு தங்குமிடங்களில் தான் தங்கினோம். முதலாவது மத்திய அரசுத் துறையின் கீழே இயங்குவது. இதில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உண்டு – அரசுத் துறையைச் சேர்ந்தவர்கள் இங்கே தங்க முடியும். மற்றவர்களுக்கு இங்கே தங்க அனுமதி இல்லை – அல்லது அரசுப் பணியாளர்களின் பெயரில் முன்பதிவு செய்து அவர்களின் விருந்தினர்களாகத் தங்க முடியும் – சில ஊர்களில் மட்டுமே இந்த விடுதிகள் இருக்கின்றன. விவரங்கள் WWW.HOLIDAYHOMES.NIC.IN எனும் இணையதளத்தில் இருக்கின்றன. உதய்பூர், ஜோத்பூர் ஆகிய இரண்டு நகரங்களைப் பொறுத்தவரை தனியார் தங்குமிடங்கள் நிறையவே உண்டு. OYO Rooms போன்ற தளங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் – ஆயிரம், ஆயிரத்தி ஐநூறு வரை நல்ல தங்குமிடங்கள் கிடைக்கின்றன.


வித்தியாச வடிவில் ஸ்பூன்!

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


தமிழகத்திலிருந்து சுற்றுலாவாக வருவதென்றால் உதய்பூர் மற்றும் சுற்றியுள்ள இடங்களைப் பார்ப்பதற்காகவே மூன்று தினங்களை ஒதுக்கிக் கொள்வது நல்லது – ஏனென்றால் நிறைய இடங்கள் இங்கே உண்டு. ஜோத்பூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்கள் பார்க்க குறைந்தது இரண்டு தினங்களாவது தேவை. ராஜஸ்தான் பொறுத்தவரை உணவு பெரிய பிரச்சனையாக இருக்காது – சைவம் நிறையவே கிடைக்கும். ஆனால் தென்னிந்திய உணவு மட்டுமே வேண்டும் என்றால் கொஞ்சம் கடினம். வட இந்திய உணவு வகைகள் சுலபமாகக் கிடைக்கும். அதுவும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் கிடைப்பதால் உடம்புக்கு ஒன்றும் செய்யாது.  எந்த ஊருக்குப் போனாலும், அந்த ஊரின் சாப்பாடு சாப்பிடுவது தான் நல்லது. நாங்கள் மதிய உணவாக அந்த மிலன் ரெஸ்டாரெண்ட்-ல் சொல்லி இருந்த வட இந்திய உணவு வந்தது. நன்றாகவும் சுத்தமாகவும் இருந்தது.


எப்போது விழுந்து விடுமோ என்ற திகில் எனக்குள்...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


சாப்பிட்ட பிறகு அங்கிருந்து தில்லி நோக்கிய பயணம் தொடர்ந்தது. அஜ்மேர், ஜெய்பூர் வழியே தில்லி நோக்கிய பயணம். மொத்தம் 600 கிலோமீட்டர்.  மிதமான வேகத்தில் சுமார் 10 மணி நேரம் ஆகலாம் – வழியில் நிறுத்துவதையும் சேர்த்து. அப்படிப் பயணிக்கும் போது இன்னும் சில விஷயங்கள். ஜோத்பூரில் பார்த்த ஆட்டோக்கள் சற்றே வித்தியாசமாக பறக்கத் தயாராக இருக்கும் விமானம் போல இருந்தன. மேலே இருக்கும் படம் பாருங்கள்! ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் வாகனங்கள், மனிதர்கள், கிடைக்கும் உணவு, வசதிகள் என அனைத்திலும் வித்தியாசங்கள். ஒவ்வொரு முறை பயணிக்கும் போதும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பல விஷயங்களை நமக்குச் சொல்லித் தருகின்றன. சிறு வயதில் பயணிக்க முடியாததை எல்லாம் சேர்த்து பயணித்துக் கொண்டிருப்பது வழக்கமாக இருக்கிறது இப்போது!


இரவு உணவு சாப்பிட்ட சாலையோர உணவகம்....

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். வாகனம் சீரான வேகத்தில் பயணித்தது – ஓட்டுனர் ஜோதியின் சிறப்பான இயக்கத்தில். இரவு பத்து மணிக்கு மேல் NH8 என்ற சாலையோர உணவகத்தில் வாகனத்தினை நிறுத்தி அவரவர்களுக்குத் தேவையான உணவை சாப்பிட்டோம். சிலர் உணவு வேண்டாம் எனச் சொல்லி விட்டார்கள். நான்கு நாட்கள் எந்த வேலையும் செய்யாமல் உணவகச் சிப்பந்திகள் சமைத்துக் கொடுக்க, சாப்பிட்டாலும், பயணித்த அலுப்பு அனைவருக்கும் இருந்தது. உணவு சாப்பிட்ட பிறகு அனைவரும் உறக்கத்தில் இருக்க நானும், நண்பர் ஒருவரும் ஓட்டுனர் ஜோதியுடன் அளவளாவியபடி இருக்க வாகனம் நெடுஞ்சாலையில் பயணித்தது. நள்ளிரவு தாண்டியபிறகு தில்லி வந்து சேர்ந்தோம். அனைவரும் ஒரே பகுதியில் இருப்பதால் அவரவர் வீட்டின் அருகில் விட்ட பிறகு ஜோதிக்குத் தர வேண்டிய பணம் கொடுத்து அனுப்பி வைத்தோம்.


சாலையோர உணவகத்தில் இருந்த வாத்து...

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


நான்கு நாட்கள் பயணம் – ராஜஸ்தானின் சில பகுதிகள் – புஷ்கர், உதய்பூர் மற்றும் ஜோத்பூர் சென்று வந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.  இந்தப் பயணத்திற்கான செலவு – அதிகமில்லை – ஒருவருக்கு சுமார் 6500/- மட்டுமே. வாகனம், உணவு, தங்குமிடம், நுழைவுக்கட்டணங்கள் என அனைத்தும் இதில் அடக்கம். இனிமையான பயணத்தினை முடித்து இரவு வீடு வந்து நல்ல உறக்கம். அடுத்த நாள் காலை கொஞ்சம் தாமதமாக எழுந்தாலும், கடமை அழைக்க எழுந்து புறப்பட்டு அலுவலகம் சென்றால் வேலைகள் காத்திருந்தன! கடுமையான வேலைச் சுமைகள் தொடர்ந்து இருக்க, இப்படி இடையிடையே பயணங்கள் தேவையாக இருக்கிறது. இப்படி பயணம் செய்வது ஒரு புத்துணர்வு தருகிறது. ஆதலால் தொடர்ந்து பயணிப்போம்! 


ஜோத்பூர் ஆட்டோ - முன் பக்கம் உயரமாக.....

உதய்பூர் - ஜோத்பூர் பயணத்தில்...


இந்தப் பயணத்தில் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் என அனைத்தும் உங்களுடனும் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் இந்தப் பகிர்வுகள் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். கூடவே நான் எடுத்த படங்களையும் நீங்கள் ரசித்திருக்கலாம். இந்தப் பயணத்தில் நான் எடுத்த அனைத்து படங்களையும் பகிர்ந்து கொள்வது சாத்தியமல்ல – தேர்ந்தெடுத்த சில படங்கள் மட்டுமே பகிர்ந்தேன். மற்ற படங்கள் என்னுடைய கூகுள் ஃபோட்டோஸ் பக்கத்தில் இணைத்த பிறகு சுட்டி தருகிறேன். பதிவுகளைத் தொடர்ந்து படித்து, கருத்துரைத்த அனைவருக்கும் நன்றி. பதிவின் ஆரம்பத்தில் சொல்லி இருப்பது போல, இந்தத் தொடரின் அனைத்து பகுதிகளுக்குமான சுட்டி வலைப்பூவின் இடது ஓரத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது. மொத்தமாக படிக்க ஒரு வசதி தான்!


அடுத்த பயணம் எங்கே, எப்போது? விரைவில் சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

22 கருத்துகள்:

 1. நிறைய விடயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

  அடுத்த பயண விபரத்தை அறிவியுங்கள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. உதய்பூர் பயணத்தின் படங்கள் மனதைக் கவர்கின்றன...

  இங்கெல்லாம் எப்போது சென்று வருவது!?..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது சென்று வாருங்கள். விரைவில் அந்த வாய்ப்பு உங்களுக்கு அமையட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 3. செலவும் குறைவு...

  திருப்தியான பயணம்...

  தொடரட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படிச் சேர்ந்து செல்லும் போது செலவு குறைவாகத் தான் ஆகின்றது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. பயணம் இனிதாக நிறைவு பெற்றது.
  படங்கள் எல்லாம் அழகு.
  இரண்டு இடங்கள் பார்த்தாலும் முழுமையாக ரசித்துப் பார்த்து மனநிறைவு கொண்டது மகிழ்ச்சி.
  பயண அனுபவம் பிறருக்கும் உதவும் வகையில் பகிர்ந்து கொண்டது அருமை.
  வாழ்த்துக்கள் அடுத்த பயணத்திற்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பயணத் தொடர் - அதுவே கடைசி பயணத் தொடராகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 5. நமது சாலையோர உணவகங்களின் நிலைதான் நமக்குத் தெரியுமே...! ஆனால் இப்போது சென்னை விழுப்புரம் சாலையிலும், சென்னை பெங்களூரு சாலையிலும் சில தரமான உணவு விடுதிகள் இருக்கின்றன. விலையும் சகாயம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில இடங்களில் நல்ல உணவகங்கள் இருந்தாலும் தனியார் பேருந்துகள் அங்கே நிறுத்துவதில்லை. நாமே வண்டி எடுத்துக் கொண்டு போனால் அங்கே நிறுத்தலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. சாய்வான கம்பிகளைத் தங்கிச் செல்லும் வண்டி... பின்னால் வருபவர்களுக்கு காத்திருக்கிறது ஆபத்து! ஜோத்புர் ஆட்டோ பார்க்க வினோதமாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆபத்து தான் - இந்த மாதிரி வண்டிகள் நிறையவே பார்க்க முடியும் இங்கே. எல்லாமே இங்கே இப்படி ”சப் சலேகா” Attitude!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பயணத்தில் தொடர்ந்து வந்து ரசித்தோம். இதற்கெல்லாம் (பயணம் செய்வதற்கு) ஒரு ஆர்வம் வேண்டும். உடல் அசதியைப் பொருட்படுத்தக்கூடாது. சில பல அசவுகரியங்களையும் ஏற்றுக்கொள்ளணும். உணவில் காம்ப்ரமைஸ் செய்யவேண்டி வந்தாலும், தங்குமிடம் கொஞ்சம் சரியில்லாமல் போனாலும், கூட வருபவர்களில் ஒரு சிலரால் சில இடங்களைப் பார்க்கமுடியாது போனாலும் அட்ஜஸ்ட் செய்துக்கணும்.

  பயண அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது. அடுத்த பயணம் விரைவில் தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான பயணங்கள் - நிறையவே அட்ஜஸ்ட் செய்து போக வேண்டியிருக்கும் என்பது உண்மை.

   அடுத்த பயணம் பற்றிய தொடர் - விரைவில் தொடங்கிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 8. அதிகம் பயணம் செய்தது இல்லை.....உங்கள் பதிவுகளை படிக்கும் போது பயணம் செய்து பல பகுதிகளை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் நல்லது. முடிந்த போது இப்படியான பயணங்கள் செய்யலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குத்தூசி.

   நீக்கு
 9. தங்களால் நாங்களும் பயணித்த உணர்வினைப் பெற்றோம்
  தங்களின் அடுத்தப் பயணத்திற்காகக் காத்திருக்கிறோம்

  பதிலளிநீக்கு
 10. அடுத்த பயணத் தொடர் விரைவில்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

  பதிலளிநீக்கு
 11. பயணங்கள் நம்மை பண்படுத்தும் எனக்கும்பயணம் பிடிக்கும் ஆனால் இப்போதெல்லாம் பயணித்த அனுபவங்களை அசை போடத்தான் முடிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா சமயங்களிலும், வயதுகளிலும் பயணம் செய்ய முடிவதில்லை. சிறு வயதில் அத்தனை பயணங்கள் எனக்கு அமைந்ததில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  தங்கள் பதிவின் மூலம் உபயோகமான விஷயங்களை தெரிந்து கொண்டது மட்டுமின்றி, தங்களுடன் நாங்களும் பயணித்த உணர்வை தந்தது. அனைத்து இடங்களும் நன்றாக இருந்தது. படங்கள் அழகாயிருந்தது. வித்தியாசமான வடிவில் இருந்த ஸ்பூன்களும் ஆட்டோவும் காண்பதற்கு அழகாயிருந்தது. பத்திரமாக தலைநகர்சென்று சேர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
  இனி அடுத்த பயணத்திற்கு நானும் தங்களுடன் தயாராகிறேன். நேற்று வந்து கருத்திட முடியவில்லை. அதனால் இந்த தாமதம்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. வர வேண்டும் அது தான் முக்கியம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....