திங்கள், 31 டிசம்பர், 2018

சாப்பிட வாங்க - புதினா பராட்டா




புதினா பராட்டா – தக்காளி ஊறுகாய்/தயிருடன்….

பராட்டா – முதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்திவிடுகிறேன் – பராட்டா என்றவுடன் நம் ஊர் மக்கள் இதனை மைதாவில் செய்யப்படும் வீச்சுப் Bபரோட்டாவுடன் குழப்பிக் கொள்கிறார்கள்! இந்தப் பராட்டா வட இந்திய மாநிலங்களில் கோதுமை மாவு கொண்டு செய்யப் படுவது. இந்தப் பராட்டாக்களில் பல வகைகள் உண்டு – லச்சா பராட்டா, ஆலு பராட்டா, கோபி பராட்டா, ப்யாஜ் பராட்டா, மட்டர் பராட்டா, மிக்ஸ் வெஜ் பராட்டா, பனீர் பராட்டா, மேத்தி பராட்டா என இதன் வகைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். தலைநகரின் பழைய பகுதியில் “பராண்டேவாலி கலி” என ஒரு தெருவே இருக்கிறது – இங்கே பல வகை பராட்டாக்களைச் சுவைக்கலாம் – அதிலும் இரண்டு மூன்று வகைகள் உண்டு – தவா எனும் தோசைக்கல்லில் செய்வது, எண்ணையில் பொரித்து எடுப்பது மற்றும் தந்தூரி அடுப்பில் சுட்டு எடுப்பது – என்று இருக்கிறது.

தலைநகரில் குளிர் காலம் ஆரம்பித்து விட்டது. சாதாரணமாகவே நான் இரண்டு வேளை சப்பாத்தி சாப்பிடுபவன். குளிர்காலம் வந்துவிட்டால் மூன்று வேளையும் சப்பாத்தி கொடுத்தாலும் மகிழ்ச்சி தான் – பொதுவாக இந்த ஊரில் குளிர் காலத்தில் அரிசி சாதம் சாப்பிட்டால் இன்னும் அதிகமாகக் குளிரும் என்று சொல்வதுண்டு. அந்த விஷயம் எனக்கும் பிடித்துக் கொண்டது. குளிர் வந்து விட்டால், சாதம் சாப்பிடுவதைத் தவிர்த்து, சப்பாத்தியும், விதம் விதமான பராட்டாவும் செய்வது வழக்கம். சமீபத்தில் புதினா பராட்டா செய்த போது – மனதில் “ரொம்ப நாளா “திங்க” கிழமைப் பதிவோ, கதையோ எழுதி அனுப்ப”ச் சொல்லிட்டு இருக்காரே நம்ம ஸ்ரீராம், இதையே எழுதி அனுப்பலாமே என்று தோன்ற, இதோ எழுதியாச்சு – “எங்கள் பிளாக்”-ல் பதிவாகவும் வெளிவந்தாச்சு!

பராட்டா – எதில் செய்கிறார்கள் என்பதை முன்னரே சொல்லி விட்டேன் – சப்பாத்தி மாவு – வட இந்தியாவில் கிடைக்கும் சப்பாத்தி மாவு நன்றாகவே இருக்கும் – நம் ஊர் ரேஷன் கடை கோதுமையில் அரைக்கும் மாவு நன்றாக இருப்பதில்லை. இங்கே இருப்பவர்கள் கிண்டலாகச் சொல்வதுண்டு – நாங்கள் எருமைக்கும் குதிரைக்கும் போடும் கோதுமையை விட தரம் தாழ்ந்த கோதுமை தான் உங்கள் ஊரில் கிடைக்கிறது என்பார்கள்! விதம் விதமான பராட்டாக்களை உண்பதுடன், செய்யவும் செய்வேன். அப்படிச் செய்த புதினா பராட்டா எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - இரண்டு கப்
பொடியாக நறுக்கிய புதினா - ஒரு கப்
உப்பு – தேவையான அளவு
காரத்திற்கு – பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் [அ] கரம் மசாலா தூள். நான் கரம் மசாலா தான் பயன்படுத்தினேன்.
எண்ணெய்/நெய்.

எப்படிச் செய்யணும் மாமு?


1 – புதினா இலைகள்; 2 – பொடியாக நறுக்கிய பின்; 3 – கோதுமை மாவு [மேலே அஜ்வைன் [ஓமம்] தூவியிருக்கிறேன்; 4 – கோதுமை மாவின் மேல் பொடியாக நறுக்கிய புதினா இலைகள்

கோதுமை மாவுடன் உப்பு கலந்து கூடவே பொடியாக நறுக்கி வைத்திருக்கும் புதினாவினையும் கலந்து கொள்ளவும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பிசையவும். மாவு பிசையும் போதே பொடிப்பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் அல்லது கரம் மசாலாவினைச் சேர்த்துக் கொள்ளவும். நான் மிளகாய் சேர்க்கவில்லை – கரம் மசாலா தான் என்பதால் மாவுடன் பிசையாமல் வேறு முறையில் சேர்த்தேன். ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்தும் பிசைந்து கொள்ளலாம். மாவு சாஃப்டாக இருக்கும். நன்கு பிசைந்ததும் மாவினை மூடி வைத்து விடவும்.



5 – பிசைந்து வைத்த மாவு; 6 – மூடி வைத்ததைக் கூட ஃபோட்டோ எடுக்கணுமா?; 7 – உருண்டைகளாக உருட்டிய பின்; 8 – பராட்டாவாக இட்டபின்…


9 – எண்ணெய்/நெய் தடவி மேலே கரம் மசாலா தூவியுள்ளது; 10 – நீள வாக்கில் உருட்டியது; 11 – மீண்டும் உருண்டையாக…; 12 – மீண்டும் பராட்டாவாக இட்டபின்…

பதினைந்து நிமிடம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். சப்பாத்தி மாதிரி இட்டுக் கொண்ட பிறகு கொஞ்சம் எண்ணெய் தடவி மேலே கொஞ்சம் கரம் மசாலா தூவி, அப்படியே இட்ட சப்பாத்தியை நீள வாக்கில் உருட்டி, உருண்டையாக ஆக்கி, மீண்டும் சப்பாத்தியாக இட்டுக் கொள்ளலாம். தவாவில் போட்டு, எண்ணெய்/நெய் விட்டு, இரண்டு புறமும் திருப்பி நன்கு வேகும் அளவிற்கு சுட்டு எடுக்க வேண்டியது தான். எல்லா பராட்டாவும் தயாரான பிறகு, ஊறுகாய் மற்றும் தயிருடன் சேர்த்து சாப்பிடலாம்! சுவையாக இருக்கும். சிம்பிளான முறை தான் என்பதால் யாரும் செய்ய முடியும்!

தலைநகர் வந்த பிறகு தென்னிந்திய சமையலை விட வட இந்திய சமையலில் தான் அதிக நாட்டம் – சாம்பார், ரசம் என்று சாப்பிடுவதை விட இந்த ஊர் உணவு தான் அதிகம் சாப்பிடத் தோன்றுகிறது. அவ்வப்போது வட இந்திய உணவு வகைகளை முடிந்தால் “எங்கள் பிளாக்” அல்லது என் தளத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த புதினா பராட்டா முடிந்தால் செய்து பார்த்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்! மீண்டும் வேறு ஒரு சுவையான உணவு வகையுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

பின் குறிப்பு: இன்றைக்கு வெளியிட வேண்டிய பதிவு, தட்டச்சு செய்ய இயலவில்லை. ஏற்கனவே எங்கள் பிளாக்-ல் “திங்க”க் கிழமை பதிவாக வெளியிட்ட எனது சமையல் பதிவு இங்கே இன்றைய பதிவாக.... எங்கள் பிளாக்-ல் வெளியிட்ட நண்பர்களுக்கு நன்றி. 

வெள்ளி, 28 டிசம்பர், 2018

வியாழன், 27 டிசம்பர், 2018

கதம்பம் – ஷிம்லா மிர்ச் சட்னி – கிளாஸ் பெயிண்டிங் – கோலங்கள் – திறந்தவெளி நூலகம்



சாப்பிட வாங்க – ஷிம்லா மிர்ச் சட்னி - 22 டிசம்பர் 2018:



ஷிம்லா மிர்ச் எனும் குடமிளகாய் சட்னி.

கோலத்தில் மட்டும் தான் வண்ணங்களா!!!

புதன், 26 டிசம்பர், 2018

பீஹார் டைரி – உழைப்பாளி – தேநீர் தந்த தேவன்




தேநீர் தந்த தேவன்
பீஹார் டைரி...

பீஹார் டைரி என எழுதியதில் இதுவரை ஒன்பது பதிவுகள் எழுதியாயிற்று. இன்னும் எழுத செய்திகளும் பார்த்த இடங்களும் உண்டு. முடிந்தபோது எழுதுகிறேன். முந்தைய பயணங்கள் பற்றிய பகிர்வுகளை தொடராக எழுதிய போது, பலராலும் தொடர்ந்து படிக்க இயலவில்லை – தொடர்ச்சி விடுபட்டால் படிக்க முடியவில்லை என்று சொன்னார்கள். நண்பர் ஒருவர் ஒரு பயணம் போனா, நீங்க பாட்டுக்கு இருபது முப்பது பதிவு எழுதறீங்க, எல்லாத்தையும் தொடர்ந்து படிக்க முடியல, நடுவில் விடுபட்டால் அப்புறம் படிக்கத் தோன்றுவதில்லை என்றும் சொல்லி இருந்தார். அவர் சொன்னது மட்டுமல்ல, எனது பதிவுகளைப் படிப்பதையே விட்டுவிட்டார் எனத் தோன்றுகிறது! பதிவுகள் அனைத்தையும் படிப்பதென்பது கொஞ்சம் கடினமான வேலை தான்! நானும் எல்லோருடைய பதிவுகளையும் இடைவெளி விட்டுதான் படிக்க முடிகிறது!

உழைப்பாளி பற்றி சொல்ல வந்து விட்டு, வேறு எதையோ பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். பீஹார் டைரி பதிவில் இந்த உழைப்பாளி பற்றி பிறகு சொல்கிறேன் எனச் சொல்லி இருந்தேன். அதை நினைவூட்டலாம் என ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டது பதிவின் ஆரம்பம்! பீஹார் டைரி – கண்ணாடி ஜாடியில் தின்பண்டம் பதிவு எழுதிய போது, தேநீர் கடையைத் தேடிப் போனபோது பார்த்த ஒரு கடை ஒன்றில் கண்ணாடி ஜாடியில் தின்பண்டங்கள் இருப்பதைப் பார்த்தது பற்றிச் சொல்லி இருந்தேன். அப்பதிவில் தேநீர் கடை பற்றி பிறகு எழுதுகிறேன் எனவும் சொல்லி இருந்தேன். இதோ அந்த தேநீர் தந்த தேவன் பற்றிய பகிர்வு இன்றைய பதிவாக….

நாங்கள் தங்கி இருந்த ஹாலிடே ஹோமில் உணவகம் நடத்துபவர்கள் பயங்கர உழைப்பாளிகள் – காலையில் எழுந்திருப்பதே ஏழு மணிக்கு மேல் தான்! எங்களுக்கோ காலையில் சீக்கிரம் புறப்பட வேண்டும். சரி வெளியே சென்று தேநீர் கிடைக்கிறதா பார்க்கலாம் என வெளியே சென்றோம். ஆசியானா – தீகா சாலையில் தான் எங்கள் ஹாலிடே ஹோம் இருந்தது. காலை நேரம் என்பதால் பெரும்பாலான கடைகள் திறந்திருக்கவில்லை. ஒரே ஒரு கடையில் மட்டும் இந்த மனிதர் – எங்களுக்குத் தேநீர் தந்த தேவன் – இருந்தார். குர்தா – பைஜாமா, குளிருக்கு இதமாக ஒரு பெரிய ஜாக்கெட், தலையில் கம்பளிக் குல்லாய் சகிதம், கடையைத் திறந்து வைத்துக் கொண்டு வரப் போகும் வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தார். 




ஒரு சிறிய கேஸ் ஸ்டவ் – நான்கு அல்லது ஐந்து கிலோ அளவுள்ள சிலிண்டர் – அதன் மேலேயே ஒரு பர்னர் பொருத்திய அடுப்பு இங்கெல்லாம் கிடைக்கிறது. பெட்ரமாக்ஸ் லைட்டுக்கு பதிலாக, இந்த மாதிரி சிலிண்டர்களில் லைட் பொருத்தியது கிடைக்கும் வட இந்தியாவில். அதே சிலிண்டரில் ஒற்றை அடுப்பும் இணைக்கலாம். அப்படி ஒரு அடுப்பில் தேநீர் தயாரித்து கெட்டிலில் வைத்திருக்கிறார். சுடச் சுட ஒரு கப்பில் – அந்த சிறிய கப்பில் 75 எம்.எல். அளவு தான் பிடிக்கும்! – தேநீர் – ஐந்து ரூபாய் தான் விலை. என் கேரள நண்பருக்கு காலையில் தேநீர் குடிக்காவிட்டால் கஷ்டம்! அதுவும் நல்ல பெரிய குடுவையில் கொடுத்தாலும் குடிப்பவர்! இந்த கப் பார்த்த உடனேயே “சிறிய கப், வலிது கிட்டுமோ” என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். கடைக்காரர் சிறியதில் கொடுத்துவிட்டதால், கவலைப்படாதே, எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என சொன்னேன்!


இந்தப் படத்திலிருந்து கப் அளவு உங்களுக்குப் புரியும்...

தேநீர் அருந்தியபடியே அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். காலை நான்கு மணிக்கே எழுந்து கடையைத் திறந்து விடுவாராம். கங்காஜியின் [கங்கை நதி] அப்புறத்தில் அவருடைய வீடு. மனைவி, மக்கள் அங்கேயே இருக்க, இவர் மட்டும் இங்கே இந்த சாலையோரக் கடை நடத்துகிறார். காலை நான்கு மணிக்குக் கடை திறந்தால் இரவு பதினொன்று மணி வரை கடை திறந்து வைத்திருப்பாராம். தேநீர், பிஸ்கெட், குட்கா, பான்மசாலா, சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்கிறார். கடை என்றால் பெரிய கடை ஒன்றும் இல்லை. நான்கு குச்சிகள் நட்டு ஒரு சிறு கொட்டகை. மரச் சட்டங்களை வைத்து அதன் மேல் பொருட்களை வைத்திருக்கிறார். இரவு அங்கேயே தங்கி விடுவாராம்.

அச்சாலை பிரதான சாலை என்பதால் கொஞ்சம் போக்குவரத்து இருக்கும். சாலையில் போவோர் வருவோர் தேநீர் குடிக்க வருகிறார்களோ இல்லையோ, பான், குட்கா, சிகரெட்/பீடி போன்றவற்றிற்காக நிச்சயம் வருவார்கள் என்கிறார். கூடவே தேநீர் பிஸ்கெட் இருந்தால் விற்பனை ஆகிறது என்கிறார். ஐந்து ரூபாய் ஒரு கப் – இவ்வளவு சிறிய கப்-பில் தருகிறீர்களே, இது போதுமா? எனக் கேட்க, இங்கே இப்படித்தான், ஐந்து ரூபாய்க்கு மேலே விலை என்றால் வாங்க மாட்டார்கள். அதனால் ஐந்து ரூபாய்க்கு தேநீர் விற்கிறேன். ஐந்து ரூபாயில் பெரிய கப்பில் கொடுத்தால் கட்டுப்படியாகாது என்று சொல்ல, எங்களுக்கு மீண்டும் இரண்டாம் முறையாக கப்பில் தரச் சொன்னோம். இன்னுமொரு சிறிய கப்பில் அளந்து எங்களுக்கு ஊற்றினார்!

சின்ன கப்பில் தேநீர் – எனக்கும் நண்பருக்கும் போதவில்லை. அதனால் இரண்டு முறையாக வாங்கிக் குடித்த பிறகும் நண்பருக்கு திருப்தி இல்லை! மூன்றாம் முறையாக இன்னுமொரு கப் தேநீர் வாங்கிக் குடித்தார் – அந்தச் சிறிய கப் தேநீர் தொண்டை நனைவதற்குள் தீர்ந்து போன மாதிரி இருந்தது! குஜராத் அர்தி சாய், மஹாராஷ்ட்ரா கட்டிங் சாய் மாதிரி இங்கே சின்னக் கப் சாய்! எப்படியோ, காலை நேரத்தில் கடை திறந்து, அதுவும் குளிர் நேரத்தில் காலையிலேயே எழுந்து கடை திறந்து வைத்து உழைக்கும் அந்த உழைப்பாளிக்கு நன்றி சொல்லி, அவரது வியாபாரம் நன்கு நடக்க வாழ்த்தும் சொல்லி, குடித்த தேநீருக்கான காசு – 25 ரூபாய் [ஐந்து சிறிய கப்] கொடுத்து அங்கிருந்து புறப்பட்டோம். அந்த உழைப்பாளிக்கு எங்கள் சார்பிலும் உங்கள் சார்பிலும் ஒரு பூங்கொத்து!

வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி


ஞாயிறு, 23 டிசம்பர், 2018

வைகுண்ட ஏகாதசி - தில்லியில் தஞ்சாவூர் ஓவியங்கள்….




வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தலைநகரம் கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் பாலாஜி கோவிலில் நல்ல ஏற்பாடுகள் பலவும் செய்திருந்தார்கள். காலை 02 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு தான் நடை சாத்தினார்கள். பெருந்திரளமான தில்லி வாழ் மக்கள் நிகழ்வில் கலந்து கொண்டார்கள். அந்நாளில் கோவில் வளாகத்தில் சில கடைகளுக்கும் இடம் கொடுத்திருந்தார்கள். காஞ்சிபுரம் புடவை, தஞ்சாவூர் ஓவியங்களுக்கான ஸ்டால், திருமலா திருப்பதி தேவஸ்தான பிரஸாதம் மற்றும் புத்தாண்டு கேலண்டர், மற்றும் புத்தக விற்பனை என நிறைய விஷயங்கள். அன்றைய தினம் அலுவலகம் உண்டு என்பதால் இரவு தான் என்னால் கோவிலுக்குச் செல்ல முடிந்தது.

இரவு உற்சவ மூர்த்தி சேஷ வாகனத்தில் எழுந்தருள, நானும் சேவித்தேன். மூலவரைப் பார்க்க நீண்ட வரிசை. வெளியிலிருந்தே ஒரு ஹாய் சொல்லி வைத்தேன். சற்று நேரம் அங்கே நண்பர்களுடன் இருந்து அரட்டை. அங்கே காலை முதலே பிரசாத விநியோகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு தொன்னையில் கதம்ப சாதமும் மற்றொரு தொன்னையில் வண்ணம் சேர்க்காத கேசரியும்! எனக்கும் கிடைத்தது! மகிழ்ச்சி. இரவு உணவு வீட்டிற்கு வந்து தான் சமைக்க நினைத்திருந்தேன். கோவிலிலிருந்து புறப்படும் முன்னர் கதம்ப சாதம் கிடைக்க, அதுவே இரவு உணவாக முடிந்தது! அன்றைய தினம் ஏழுமலையான் படி அளந்தார்! உணவினைப் பற்றிய கவலை இல்லாததால் கடைகள் பக்கமும் ஒரு விசிட் அடித்தேன்.

புத்தகங்களும் வைத்திருந்தார்கள். எல்லாமே இலவசம்! பத்து பன்னிரெண்டு புத்தகங்கள் எனக்குப் பிடித்த மாதிரி கிடைத்தன – திருப்புகழ்த் திருத்தலங்கள், திருப்பூவனப் புராணம், பகவத் கல்யாண மஹோத்ஸவம், திருவையாறு தல வரலாறு, நாமமும் அனுமன் என்பேன் [கம்பர் காட்டும் அனுமன்], வைணவ விழுதுகள் – ஒரு சின்ன பட்டியல்! - எடுத்து வந்தேன். படிக்க வேண்டும். ஏற்கனவே படிக்காத புத்தகங்கள் இருக்கிறதே என மனது சொன்னாலும் கேட்கவா போகிறேன்! புத்தகங்கள் பற்றி பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். தெலுங்கு, ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் புத்தகங்கள் இருந்தன. ஏன் உருது மொழியில் கூட புத்தகம் இருந்தது! உருது மொழிக்கு என்னைத் தெரியாது என்பதால் அதை எடுத்துக் கொள்ளவில்லை!

கலைக்கு விலையேது:

ஸ்ரீ பாலாஜி ஆர்ஸ் லோகநாதன் அவர்களது தஞ்சாவூர் ஓவியங்களுக்கான ஸ்டாலில் சிறிது நேரம் இருந்தேன். அலைபேசியில் ஓவியங்களை படம் எடுத்துக் கொண்டேன். கொஞ்சம் மொழிபெயர்ப்பு வேலைகள் – வந்தவர்கள் கேட்டதை கடை உரிமையாளருக்கு தமிழில் சொல்வதும், அவர் சொன்னதை வாங்க வந்தவர்களிடமும் சொல்வது! என சில நிமிடங்கள் அங்கே இருந்தேன். ரொம்பவே அழகான ஓவியங்கள். 7 அடி உயரமும்,  நான்கு அடி அகலமும் உள்ள ஒரு பெரிய வெங்கடாஜலபதி ஓவியம் மிகவும் கவர்ந்தது. மரச்சட்டத்தில் ரொம்பவே அழகாக ஃபினிஷ் செய்யப்பட்ட ஓவியம் – விலை எவ்வளவு எனக் கேட்க, எட்டு லட்சம் என்றார்! கலைக்கு விலையேது! அங்கே இருந்த ஓவியங்களின் படங்களே இந்த ஞாயிறில். அலைபேசியில் எடுத்ததால் கொஞ்சம் சுமாராகவே வந்திருக்கிறது படங்கள்.

வாருங்கள் தஞ்சாவூர் ஓவியங்களின் நிழற்படங்களை ரசிக்கலாம்!














என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட ஓவியங்களின் படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

சனி, 22 டிசம்பர், 2018

காஃபி வித் கிட்டு – பெண்கள் பேண்ட் அணிய தடை – லாய் எனும் இனிப்பு – டிக் டாக் - பதிவுலகம்


காஃபி வித் கிட்டு – பகுதி – 14



சாப்பிட வாங்க – லாய்: பீஹார் பயணத்தின் போது தெரிந்து கொண்ட இன்னுமொரு பீஹார் இனிப்பு லாய் என்பது. மேலே வெள்ளை வெள்ளையாய் ராம்தானா [லாய்] ஒட்டி இருக்க, உள்ளே இருப்பது கோயா! ராம் தானா என்பது கீரை விதைகள் – ராஜ்கிரா என்றும் அழைக்கப்படுவது. இந்த லாய் பீஹார் மாநிலத்தின் கயாவில் அதிகம் கிடைக்கிறது. கயாவில் சுற்றி வரும்போது, மாலை நேர உலாவில் இந்த லாய் சுவைத்தோம். நன்றாகவே இருந்தது. எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு, இணையத்தில் ராம்தானா லட்டு எனத் தேடிப் பார்க்கலாம் என்பதே பதில்!

வெள்ளி, 21 டிசம்பர், 2018

பீஹார் டைரி – சாப்பிட வாங்க – சிலாவ் கா காஜா



சிலாவ் கா காஜா....
சிலாவ் கிராமத்தில் காஜா வாங்கும் ஓட்டுனர் பிண்டூ!

வியாழன், 20 டிசம்பர், 2018

கதம்பம் – அரிசி உப்புமா – காகிதப் பென்சில் – காதணி - கோலங்கள்



சாப்பிட வாங்க – அரிசி உப்புமா - 18 டிசம்பர் 2018:



வைகுண்ட ஏகாதசியான இன்று, இங்கு பெரும்பாலான வீடுகளில் இது தான் உணவு - அரிசி உப்புமா!!!

புதன், 19 டிசம்பர், 2018

மார்கழி நினைவுகள் – முழங்கை வழிவார…




மார்கழி பிறந்ததிலிருந்தே பதிவுலக நண்பர்கள் பலரும் தங்களது மார்கழி நினைவுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நெய்வேலியில் இருந்த வரை வீட்டின் அருகே இருந்த பிள்ளையார் கோவிலில் பொங்கல் வாங்கிச் சாப்பிட மட்டுமே இந்த சமயங்களில் சென்றதுண்டு! நமக்கும் சங்கீதத்துக்கும் பல காத தூரம்! ஏனோ அம்மாவுக்கு பாட்டு மேல் நிறைய ஆசை உண்டு என்றாலும், எங்களில் யாரையுமே பாட்டு கிளாஸ் போன்ற எதற்குமே அனுப்பியதில்லை. வரும் சம்பளத்தில் மூன்று பேரையும் படிக்க வைத்து, எல்லா வீட்டு செலவுகளையும் பார்த்துக் கொண்டதே பெரிய விஷயம். இதில் இசை வகுப்புக்கு எங்கே போக!

செவ்வாய், 18 டிசம்பர், 2018

பீஹார் டைரி – பாடாவதி போக்குவரத்து – இறந்தவரின் உடலுடன் பேருந்து பயணம்




நம் ஊர் பேருந்து வசதி பற்றி எப்போதுமே நம்மவர்கள் குறைபட்டுக் கொள்வது வழக்கம். சரியான நேரத்துக்கு வரதில்ல, ரொம்பவே கட்டணம் அதிகம் வாங்குகிறார்கள், போக்குவரத்து ஊழியர்கள் மரியாதையாகப் பேசுவதில்லை, பாடாவதி உணவகத்தில் நிறுத்துகிறார்கள் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் நமது ஊர் போக்குவரத்து பற்றிய நம் மக்களின் எண்ணத்தினை. அந்த ஊரில் இல்லாதவர்கள் படிக்கும்போது, “அப்பாடா, எவ்வளவு பிரச்சனைகள் இந்த ஊர் போக்குவரத்தில் எனத் தோன்றும்”. சமீபத்தில் பீஹார் மாநிலத்திற்குச் சென்றபோது நம் ஊரின் போக்குவரத்து வசதிகள் மனதுக்குள் வந்து போனது.

திங்கள், 17 டிசம்பர், 2018

கதை மாந்தர்கள் - ஃபுல் வக்கீல்



மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று என் பக்கத்தில் மீண்டும் ஒரு பதிவு. பதிவினைப் படிக்கும் முன்னரே சொல்லி விடுகிறேன் – இது தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய பதிவு. நண்பர் நாரோலை அடுத்த ராஜாக்காமங்கலத்தினைச் சேர்ந்தவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தில்லி வாசம். வாருங்கள் நண்பரின் எழுத்தினை ரசிக்கலாம் – வெங்கட், புது தில்லி.

வியாழன், 13 டிசம்பர், 2018

ஒரே நாளில் மூன்று சினிமா – மாட்டு வண்டி பயணம்




சமீபத்தில் சினிமா பார்ப்பது பற்றிய பேச்சு வந்தது. இப்போதெல்லாம் சினிமா பார்க்க விருப்பமே இருப்பதில்லை. நெய்வேலியில் இருந்த வரை சில மாதங்களுக்கு ஒரு முறை குடும்பத்தில் உள்ள அனைவருமாகச் சேர்ந்து அமராவதி திரையரங்கில் முன்பதிவு செய்து மாலைக் காட்சியை பார்த்து திரும்புவோம். பிறகு அதுவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது – முன்பதிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பத்தினால் மொத்தமாக நின்றது – அந்த நினைவினை முன்னரே “என் மனதைக் கொள்ளையடித்தவள்” என்ற தலைப்பில் எழுதி இருக்கிறேன்.  சமீபத்தில் தியேட்டர் சென்று படம் பார்க்கவே இல்லை – கடைசியாக பார்த்த படம் கபாலி என்று நினைவு! அவரின் அடுத்த இரண்டு படங்கள் வந்து விட்டன! அப்பாடி எவ்வளவு சுறுசுறுப்பு பாருங்க – நான் என்னைச் சொன்னேன்!

எல்லோரும் விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த 96 படம் ரொம்பவே நன்றாக இருக்கிறது என்று சொன்னதால் அதைப் பார்க்கலாம் என யூட்யூபில் தேட இருந்தது. நேரம் எடுத்து அந்தப் படம் ஒரு நாள் பார்த்தேன். அடுத்த நாள் மணிரத்னம் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தினையும் யூட்யூபில் பார்த்து வைத்தேன். ஏண்டா பார்த்தோம் என்று ஆனது – இரண்டாம் படம் பார்த்து. 96 படமும் பெரிதாக ஈர்க்கவில்லை. தியேட்டர் சென்று பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் வரவில்லை. சமீபத்தில் வெளிவந்த 2.0 படம் கூட வீட்டினர் பார்த்துவிட்டாலும் நான் பார்க்கவில்லை. என்னமோ இப்போதெல்லாம் தியேட்டர் சென்று படம் பார்க்கும் எண்ணமே வருவதில்லை.



இது இப்படி இருக்க, தில்லி பதிவர் இராமசாமி அவர்கள் தனது சிறுவயதில் சினிமா பார்த்த அனுபவத்தினை – For entertainment sake என்ற தலைப்பில் பதிவாக எழுதி இருந்தார். அந்தப் பதிவு படித்த போது என் அம்மா மற்றும் பெரியம்மாவும் தங்களது சிறு வயதில் சினிமா பார்ப்பதற்காகவே வண்டி கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்குச் செல்வது பற்றி அவ்வப்போது சொல்வது நினைவுக்கு வந்தது. அம்மா, பெரியம்மா எல்லாம் அப்போது பன்ரூட்டி நகரை அடுத்த சிறு கிராமமான ஒரையூரில் இருந்தார்கள். காலை உணவை சாப்பிட்ட பிறகு வீட்டில் இருந்த மாட்டு வண்டியில் புறப்படுவார்களாம் – அம்மா, பெரியம்மா, அத்தைப் பாட்டிகள், அத்தான் மன்னி [அத்தை மகனின் மனைவி], இன்னும் சில பெண்கள் என பெரிய கும்பலாக ஊரிலிருந்து புறப்படுவார்களாம்.

ஒரையூரிலிருந்து புறப்பட்டவர்கள் அடுத்ததாக நிற்பது புதுப்பேட்டை கிராமத்தில் இருக்கும் ஒரு ஆசிரியர் வீட்டில் – ஒரையூர் பள்ளியில் ஆசிரியராக இருந்த தம்பதியினர் [திரு சிவஞானம்- திருமதி புவனேஸ்வரி] வீட்டு திண்ணையில் அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்ட பிறகு பன்ரூட்டி நோக்கி பயணிப்பார்களாம். பன்ரூட்டியில் அந்த நாட்களிலேயே மூன்று சினிமா தியேட்டர்கள் இருந்தனவாம்.  முதல் தியேட்டரில் மதிய நேரக் காட்சி பார்த்த பிறகு, அடுத்த திரையரங்கில் மாலைக் காட்சி, மூன்றாவது திரையரங்கில் இரவுக் காட்சி – இப்படி ஒரே நாளில் மூன்று சினிமாக்களைப் பார்த்து வருவது அவர்களது வழக்கமாக இருந்திருக்கிறது! ஒரே நாளில் மூன்று சினிமா – நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது! என்னால் ஒரு படத்தினைக் கூட முழுதாக பார்க்க முடிவதில்லை – கொஞ்சம் நேரத்திலேயே போரடித்து விடுகிறது.

மூன்று படங்களையும் பார்த்து மீண்டும் மாட்டு வண்டியில் புறப்பட்டு புதுப்பேட்டை ஆசிரியர் வீட்டுத் திண்ணையில் கொஞ்சம் நேரம் படுத்து உறங்கிய பிறகு, கருக்கலில் அங்கிருந்து புறப்பட்டு விடிய விடிய ஒரையூர் வீட்டுக்கு வந்து சேர்வோம் என்று சொல்வார்கள்.  இந்த வாரம் ஒரு நாள் பெரியம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களிடம் எப்படி பெரியம்மா ஒரே நாளில் மூன்று படம் பார்த்தீர்கள் என கேட்டேன். எப்போதோ, சில சமயங்களில் தான் இப்படி சினிமா பார்க்க வாய்ப்பு கிடைக்கும். அப்படிக் கிடைக்கும்போது முழுவதாக மூன்று படமும் பார்த்துவிட வேண்டும் – இல்லை என்றால் அதன் பிறகு எப்போது அனுமதி கிடைக்கும் என்று சொல்ல முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதுவும் அந்த நாட்களில் இப்போது இருப்பது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லையே – இருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமா தான்! அதுவும் எல்லா சினிமாக்களும் பார்க்க அனுமதியும் கிடைக்காது! கிடைத்தபோது பார்த்து விடுவோம் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது இருப்பது மாதிரி, நமது வீட்டிற்குள் அமர்ந்தபடியே எந்த சினிமாவையும் பார்க்க வசதி இல்லையே! இப்போது Amazon Prime, Netflix என பல விஷயங்கள் வந்துவிட்டன. வீட்டினுள் இருந்தபடியே – தியேட்டர் போலவே பார்க்க Home Theatre வசதிகள் கூட சிலர் வீட்டில் செய்து வைத்திருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்க வேண்டும் என்பதால் ஒரே நாளில் மூன்று சினிமா!

என்னால் நிச்சயம் ஒரே நாளில் மூன்று படங்கள் இல்லை – இரண்டு படங்கள் கூட பார்க்க முடியாது என்று தோன்றுகிறது. உங்களுக்கு இப்போது அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் பார்க்க முடியுமா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்
புது தில்லி

புதன், 12 டிசம்பர், 2018

பீஹார் டைரி – கச்சோடி – சப்ஜி – ஜிலேபி – காலை உணவு



கச்சோடி, சப்ஜி, ஜிலேபி!

பீஹார் மாநிலத்திற்குச் செல்லப் போகிறேன் என்று சொன்னவுடன் அலுவலகத்தில் இருந்த பீஹாரைச் சேர்ந்த நண்பர்கள் அங்கே என்ன பார்க்கலாம், என்ன சாப்பிடலாம் என்று பட்டியல் இடத் துவங்கினார்கள். அப்படி பட்டியல் போட்ட சில உணவு வகைகள் பற்றி அவ்வப்போது இந்த பீஹார் டைரி பதிவுகளில் எழுத எண்ணம் – அப்படிச் சொன்ன உணவு வகையில் ஒன்று தான் காலை உணவாக பீஹார் மாநிலத்தில் கிடைக்கும் கச்சோடி – சப்ஜி – ஜிலேபி காம்பினேஷன்!

செவ்வாய், 11 டிசம்பர், 2018

சனி, 8 டிசம்பர், 2018

காஃபி வித் கிட்டு – சரக்கு பார்ட்டி – கழுத்தை சீவு – ஆங்கில படுத்தல் – படக் கவிதை


காஃபி வித் கிட்டு – பகுதி – 13

ராஜா காது கழுதை காது – சரக்கு பார்ட்டி:


படம்: இணையத்திலிருந்து....

சமீபத்தில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் மெட்ரோவில் பயணித்த போது, பக்கத்து இருக்கையில் ஒரு சர்தார்ஜி. ஷிவாஜி ஸ்டேடியம் மெட்ரோ நிலையத்தில் அமர்ந்தவர் தொடர்ந்து யார் யாருக்கோ அலைபேசியில் அழைத்து பிரிட்டன் போக விசா கிடைத்ததைச் சொல்லிக் கொண்டு வந்தார். ஸ்பீக்கர் வழியே அடுத்த பக்கத்தில் இருப்பவர்கள் பேசுவது எனக்கும் கேட்டது! மூன்று பேருக்கு அழைத்ததில், மூன்று பேருமே மாலை சரக்கு பார்ட்டி கேட்டார்கள். என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. சர்தார்ஜியும், 25000 ரூபாய் கட்டணம் கொடுத்து விசா வாங்கி இருக்கிறேன். இன்னும் பயணச்சீட்டு, மற்ற செலவுகள் எல்லாம் இருக்க இவர்களுக்கு சரக்குப் பார்ட்டி வேண்டுமாம்! என்று தனக்குத் தானே பஞ்சாபியில் பேசிக் கொண்டு வந்தார். எதுக்கு ஃபோன் பண்ணி சொல்ல வேண்டும் என்று தோன்றியது!

இருமலா, கழுத்தைச் சீவுங்க…


படம்: இணையத்திலிருந்து....

எங்கள் பகுதியில் இருக்கும் நண்பர்கள் தினமும் TTD தேவஸ்தானத்தின் கோவிலுக்கு இரவு கோவில் மூடும் சமயம் செல்வது வழக்கம். இறைவனை தரிசித்து கொஞ்சம் அரட்டை அடித்து வருவது வழக்கமாக இருக்கிறது – கொஞ்சம் பொழுதுபோக்கு, ஒரு நடை நடந்தது போலாகும் என்பதால் நானும் சென்று வருவது வழக்கம். இந்த வாரம் அப்படி ஒரு நாள் போனபோது தான் இந்த “கழுத்தைச் சீவ” சொன்னார் ஒரு பெண்மணி. ஏற்கனவே அவர் தமிழ் படித்த கதையை சொல்லி இருக்கிறேன் – இருமலா இருக்கும் போது கழுத்தைச் சீவினா சரியாகிடும்னு சொல்ல இருமல் இருந்தவருக்கு மட்டுமல்ல கேட்ட அனைவருக்குமே அதிர்ச்சி! மொத்தமா கதையை முடித்து விடுவார் போல!

என்னது என்ற அதிர்ச்சியோடு அவரிடம் வினவ, அவர் சொன்ன விஷயம், சீப்பால், கழுத்துப் பகுதியில் வருடினால் இருமல் நிற்குமாம் – வட இந்தியாவில் இருக்கும் ஒரு பழக்கம் – அலுவலகத்தில் உள்ளவர் சொன்னார் என்று விளக்கம் தந்தார் – நல்லவேளை கத்தியால் சீவ வேண்டும் எனச் சொல்லவில்லை! அதற்கு அடுத்து நடந்ததும் காமெடி தான். யாருக்கு இருமல் இருந்தததோ அவர் “இப்ப சீப்புக்கு எங்கே போக, வீட்டுக்குப் போனதும் செய்து கொள்கிறேன்” என்று சொல்ல, “ஏன் உங்க வீட்டுக்காரர் பாக்கெட்ல சீப்பு இருக்குமே!” என்று சொல்ல அனைவரும் சிரிக்க ஆரம்பித்தோம் – இருமல் இருந்தவரின் கணவர் தலையில் குறைவான முடிதான், வழுக்கைக்கு சீப்பு தேவையில்லை என்று சொல்ல, அந்தப் பெண்மணி, “உங்க வீட்டுக்காரரை விட, என் வீட்டுக்காரருக்கு வழுக்கை அதிகம், அவரே வச்சிருக்காரே சீப்பு!” என்று சொல்ல, எல்லோரும் சிரித்தோம்.

படித்ததில் பிடித்தது – ஆங்கில படுத்தல்:

கல்லூரி காலம் தொடர்ந்து நண்பராக இருக்கும் முரளியின் ஒரு பதிவு. எல்லா வார்த்தைகளையும் தமிழ் வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழி “பெயர்க்கும்” நபர்கள் பற்றிய சுவையான பகிர்வு.

தமிழ் மக்களை சிலபல காலங்களாகவே ஒரு பேய் பிடித்து ஆட்டுகிறது. அதாவது எல்லாவற்றையும் ஆங்கிலப் 'படுத்துதல்'. இந்தப்பித்து பெரும்பாலும் அழைப்பிதழ்களிகளில் தலைவிரித்தாடும். சென்ற வாரம் எனக்கு ஒரு invitation வந்தது. 'House worming' ceremony?!!! எதற்காக வீட்டில் புழுக்களை நிரப்ப வேண்டும்?!! Leave alone the spelling mistake. சில வார்த்தைகளும் பழக்கங்களும் குறிப்பிட்ட மொழிக்கோ அல்லது சமூகத்திற்கோ உரித்தானது. மஞ்சள் நீராட்டு விழா என்பது mostly தமிழ் வழக்கம். இதை ஏன் ஆங்கிலப் 'படுத்த' வேண்டும்? மக்கள் Yellow water bathing function என்கிறார்கள். எங்க போய் முட்டிக்க? கண்திருஷ்டி என்பதை ஏன் மொழிபெயர்க்க வேண்டும்?

பிறிதொரு அழைப்பில் "ear boring function' என்றிருந்தது. நடுங்கி விட்டேன். நல்லவேளை, இஸ்லாமிய சிறுவர்களின் விழாவிற்கு ஏதும் இதுவரை எனக்கு invitation வரவில்லை; அந்தத் தமிழை நினைத்தே பார்க்க முடியவில்லை. நெய்வேலியில் ஒரு சமயம் shift மாறும்போது, ஒரு technician, 'I heard some kasamusa sound in the boiler' என்று எழுதி வைத்துவிட்டு சென்று விட 3 B.Tech.களும் 1 M.Tech உம் சேர்ந்துகொண்டு Oxford மற்றும் Cambridge அகராதிகளின் பக்கங்களைப் பிரித்து மேய கடைசியில் அந்த technician-ஏ திடீரென்று ஞாபகம் வந்தவராக phone செய்து கசமுசா சத்தம் என்று தமிழில் விளக்க ஒரு வழியாக பிரச்சினை முடிவுக்கு வந்தது."My wife is distance, so not office coming" என்று எழுதிய ப்ரஹஸ்பதிகளும் உண்டு. இப்படியே போனால் இட்லி, சட்னி எல்லாம் வழக்கொழிந்து rice cake, coconut sauce ஆகிவிடும்.

சிற்றுந்து, பேருந்து, மகிழுந்து, தொடரி இவை போன்ற தமிழ்ப்படுத்துதல்கள் மேலே சொல்லப்பட்டவைகளுக்கு சற்றும் குறைந்ததல்ல. மக்கள் கார், பஸ், ட்ரெயின் இவைகளுக்கு நன்றாகவே பழகி விட்டார்கள்!!

இந்த வாரத்தின் நிழற்படம்:



சமீபத்தில் சென்ற பயணத்தில் தங்குமிடத்தில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டில். பார்க்க அழகாய் இருந்ததால் எடுத்த படம்! கண்ணாடி பாட்டிலில் குழாய் வைத்து…

படக்கவிதை – ஸ்ரீராம்



சென்ற வாரம் வெளியிட்ட மேலுள்ள படத்திற்கு எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்கள் முகநூலில் கருத்துரையாகத் தந்த கவிதை – இங்கேயும் ஒரு சேமிபாகவும், தகவலாகவும்…. வல்லிம்மாவும் படத்திற்கு ஒரு கதை எழுதுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். படிக்கும் மற்றவர்கள் கதை/கவிதை எழுத நினைத்தால் எழுதலாம், இங்கேயோ அல்லது அவர்கள் தளத்திலோ பகிரலாம்!

உயரமாக மட்டுமில்ல,
நான்
உரமாகவும் இருந்தேன்
ஓடி உழைச்ச கால் ஓடாச்சு…
வைரம் பாய்ஞ்ச உடம்பு கூடாச்சு
நாளும் போகுது பொழுது
பழைய நாட்களை நினைத்து மனதுக்குள் அழுது...
வடியும் கண்ணீரும் காய்ந்தது
உடலுடன் மனமும் சோர்ந்தது…
காத்திருக்கேன் முடியும் நாளுக்காய்...

இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:

மனச்சுரங்கத்திலிருந்து என்ற தலைப்பில் நெய்வேலி நினைவுகளை எழுதி வந்தேன். அப்படி எழுத ஆரம்பித்தது இதே நாளில் தான்! டைலர் ராமதாஸ் அவர்களைப் பற்றிய பகிர்வு இது. இப்போது வலைப்பூவை வாசிக்கும் பலர் இப்பதிவினை வாசித்திருக்கவில்லை. அப்போது வாசித்தவர்கள் சிலர், இப்போது பதிவுலகம் பக்கமே வருவதில்லை! :( இதோ மனச்சுரங்கத்திலிருந்து பதிவுகளின் முதல் பதிவாக…


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி