சனி, 1 டிசம்பர், 2018

காஃபி வித் கிட்டு – வேர்க்கடலை – அக்கா தங்கையுடன் பிறக்கலையா – முதுமையில் வறுமை


காஃபி வித் கிட்டு – பகுதி – 12

சாப்பிட வாங்க – வேர்க்கடலை வித்தியாச காம்போ:



வேர்க்கடலை சாப்பிடுவது அனேகமாக எல்லோருக்குமே பிடிக்கும். நம் ஊரில் வறுத்த கடலை சாப்பிட்டால் கூடவே வெல்லம் சாப்பிடச் சொல்வார்கள். பித்தம் உடலுக்கு ஏறாது எனச் சொல்வார் அத்தைப் பாட்டி. 



வட இந்தியாவில் குளிர் காலம் வந்துவிட்டால் நிறைய நடைபாதை கடைகள் – வேர்க்கடலை விற்பவர்கள் அதிகரித்து விடுவார்கள். பத்து ரூபாய்க்குக் கூட கிடைக்கும். கூடவே ஒரு சிறு காகிதத்தில் மசாலா தூள் தருவார்கள். ஒரு சில கடலைகளைச் சாப்பிட்ட பிறகு வேர்க்கடலை ஓட்டின் ஒரு பாதியில் மசாலா தூளை கொஞ்சம் எடுத்து வாய்க்குள் போட்டுக் கொள்வது இங்கே உள்ள வழக்கம். என்ன வேர்க்கடலை வயிற்றுக்குள் போக, வேர்க்கடலை ஓடுகளை ஆங்காங்கே போட்டு விடுவார்கள் – பெரும்பாலான பேருந்துகளில் இந்தக் குப்பை பல நாட்கள் அப்படியே இருக்கும்! சமீபத்தில் பார்த்த ஒரு காம்பினேஷன் வித்தியாசமாக இருந்தது. அது தான் இந்தப் பகுதியை எழுத வைத்த காட்சி!

சமீபத்தில் பீஹார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் பயணம் செய்து வந்தேன். பீஹாரில் தெருவோரங்களில் நிறைய வேர்க்கடலை விற்கும் கடைகள். ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசலில் காத்திருந்தபோது பார்த்தால் சாலையோரம் வேர்க்கடலை விற்கும் கடை. ஒரு லிஃபாஃபா [பாலித்தீன் கவர்!]-வில் வேர்க்கடலை வாங்கும்போது, கூடவே மசாலா தூளும் பத்து பதினைந்து பச்சை மிளகாயும் கொடுத்தார். எங்கள் ஓட்டுனர் பின்டூவிடம் விசாரித்தபோது பீஹாரில் வேர்க்கடலையுடன் மசாலா மட்டுமல்லாது பச்சை மிளகாயும் சேர்த்தே சாப்பிடுவார்கள் என்று சொன்னார்! இதுவரை இப்படி ஒரு Combination நான் கேள்விப்பட்டதில்லை. பார்த்ததும் இல்லை! கூடவே கொஞ்சம் தண்ணீரும் குடித்தால் வேர்க்கடலை சட்னியாக உள்ளே போகும்! :)

நீங்க அக்கா தங்கச்சியோட பிறக்கலையா?

தில்லியிலிருந்து பீஹார் சென்றது ஸ்பைஸ்ஜெட் விமானத்தில். விமானப் பயணத்தில் இந்த முறை கிடைத்த அனுபவங்கள் பல. லோக்கல் பேருந்து கெட்டது – அதை விட மோசமாக இருந்தது இந்த விமானப் பயணம் – தனியே அதைப்பற்றி எழுதுகிறேன். இப்போது வேறு விஷயம் பற்றி தான் சொல்லப் போகிறேன். என் பின் இருக்கையில் ஒருவர் அமர்ந்திருந்தார் – தலையில் தொப்பி – பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதைப் பார்க்கும்போதே தெரிந்து கொள்ள முடிந்தது. விமானம் புறப்படுவதற்கு முன்னர் பணிப்பெண்கள் சீட் பெல்ட் பற்றியும் பாதுகாப்பு பற்றியும் சொல்லிக் கொண்டிருந்த போது பின் சீட்காரர் அவர்களை காணொளியாக படம் பிடித்துக் கொண்டிருந்தாராம். பாதுகாப்பு பற்றி சொல்வதை விட்டு காணொளி எடுக்கக் கூடாது என்று சொல்லி மீண்டும் தொடர்ந்தார்.

ஆனால் அந்த ஆள் காணொளி எடுப்பதை நிறுத்தவில்லை. இரண்டு பணிப்பெண்களாக வந்து அந்தக் காணொளியை நீக்கச் சொல்ல, எடுக்கவில்லை என்று சாதித்தார். அலைபேசியை வாங்கிப் பார்க்க, அந்தப் பெண் ஆக்ரோஷமானார். இரண்டு பேருமாகச் சேர்ந்து தன் கோபத்தினை அடக்கிக் கொண்டு கேட்ட கேள்வி தான் “அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா, உங்க அம்மாவையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ இப்படி படம் பிடிப்பீர்களா?” என்றெல்லாம் கேட்டார். பணிப்பெண்களோடு ஒரு ஆண் பணியாளரும் இருக்க, அவர் வந்து அலைபேசியை வாங்கிப் பார்த்தபோது Trash Bin-ல் அந்த காணொளி இருந்தது! பிறகு சேமிக்க வசதியாக இருக்கும் என மொத்தமாக அழித்ததுடன், அலைபேசி மற்றும் போர்டிங் பாஸ் இரண்டினையும் வாங்கி வைத்துக் கொண்டார் அந்தப் பணியாளர். பட்னா நகர விமான நிலையம் வந்ததும், பட்னா போலீஸிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார்!

பட்னா விமான நிலையம் வந்ததும் நாங்கள் அனைவரும் இறங்க, அவரும் அவர் உடன் வந்த முதியவரும் இருந்தார்கள். முதியவர் கைகளைக் கூப்பியபடி அந்த இளைஞரை விட்டுவிடச் சொல்லி, மன்னிக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்தார். இளைஞர் செய்த தவறுக்கு முதியவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருந்தார். இளைஞரோ எனக்குக் காணொளி எடுக்கக் கூடாது எனத் தெரியாது என கூலாகச் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முதியவரைப் பார்த்தால் பாவமாக இருந்தது.

இந்த வாரத்தின் ரசித்த காணொளி:

என்னவொரு திறமை இந்த மனிதருக்கு…. பாருங்களேன்.




இந்த வாரத்தின் நிழற்படம்:



முதுமை – இளமையில் மட்டுமல்ல, முதுமையிலும் வறுமை கொடியது தான். சமீபத்திய பயணத்தில் எடுத்த ஒரு நிழற்படம் – பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெரியவர்….

இதே நாளில் – திரும்பிப் பார்க்கிறேன்:

இதே நாளில் 2009-ஆம் வருடம் எழுதிய பதிவு ஒன்று…. இப்போது என் வலைப்பூவை வாசிக்கும் பலர் இந்தப் பதிவு படித்திருக்க வாய்ப்பில்லை. படித்துப் பார்க்கலாமே!


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி

50 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    முகப்புப் படம் ரொம்ப அழகாக இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ஜி.

      முகப்புப் படம் - சமீபத்தில் பீஹாரில் எடுத்த படம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. வேர்க்கடலை ரொம்பவே பிடிக்கும்...இங்கும் பங்களூரிலும் வேர்க்கடலை நிறைய வந்திருக்கு. தள்ளு வண்டியில் எல்லாம் விற்கிறார்கள் பச்சை வேர்க்கடலை. நீங்கள் சொல்லியிருப்பது போல் தெருவில் சில பெண்களும், பிள்ளைகளும் அதைச் சாப்பிட்டுக் கொண்டே குப்பையைப் போட்டுக் கொண்டே செல்கின்றனர். எங்கு பார்த்தால் வேர்க்கடலை ஓடுகள்.

    இங்கு அவர்கள் வேர்க்கடலையை பலரும் பச்சையாகவே சாப்பிடுகின்றனர். ஒரு சிலர் அவித்து பச்சைமிளகாயுடன் சாப்பிடுகின்றனர். எதிர்வீட்டில் ஒரு வட இந்தியக் குடும்பம் இருக்கிறது. ஒரே தளத்தில் மூன்று குடும்பங்கள். அவர்கள் இப்படிச் சாப்பிடுவதைப் பார்த்தேன். புதியதாகத்தான் இருந்தது. ஒரு வேளை அந்த ஊர்க் குளிருக்கு இத்தனை காரம் தேவையாக இருக்குமோ?

    பூட்டான் மக்களும் பச்சை மிளகாய் நிறைய பயன்படுத்துகின்றனர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதிர் வீட்டு வட இந்திய குடும்பம் - பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவராக இருக்கலாம்...

      குப்பை போடுவது - தங்களது பிறப்புரிமை என நினைக்கிறார்கள் பலரும் என்பது தான் வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. விமானத்தில் இப்படியா? அதுவும் சொல்லியும் கூட...பாவம் அந்த முதியவர். இளைஞர்கள் ஏன் இப்படியோ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்னும் இப்படி பல இளைஞர்கள்... முதியவரைப் பார்த்தால் ரொம்பவே பாவமாக இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. காணொளியில் வாவ்! ரங்கோலி செம...இதே போல வாட்சப்பில் ஒன்று வந்தது. வட இந்திய உணவு சப்பாத்தி, பச்சை வெங்காயம், சப்ஜி இரண்டு கிண்ணம் ஒரு தட்டில் என்று ஏதோ நிஜமாகவே சாப்பாடு ஐட்டெம் என்று பார்த்தால் இல்லை ரங்கோலி அதில் வரும் பெண்ணும் சின்ன பையனும் அதைக்கலைத்துக் காட்டியதும் அசந்துவிட்டேன்.... என்னா திறமை!!

    அது போல்தான் இதுவும் இருக்கு ஹையோ செம....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த ரங்கோலி போடும் ஓவியர் நிறைய இப்படி வரைகிறார். யூவில் நிறைய காணொளிகள் பார்க்க முடியும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  5. கப்பும் வாளியும் எப்படி நிற்க வைத்து என்பது ஆச்சரியமாக இருக்கு...நேரில் பார்த்தால்தான் தெரியும் என்று தோனுது..அசாத்திய திறமை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. இப்படியான திறமைசாலிகளை மேலும் ஊக்குவிக்க வேண்டும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. முதியவர் படம் மனதை என்னவோ செய்கிறது....எபி யில் படக் கதை எழுதலாம் போல!!! என்னென்னவோ மனதில் தோனுது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரில் பார்க்கும்போது இன்னும் கஷ்டமாக இருந்தது கீதா ஜி!

      //எபியில் படக் கதை எழுதலாம் போல// - ஸ்ரீராம் ஜி மனது வைத்தால் அதுவும் நடக்கும். கதாசிரியர்கள் தயாராகட்டும்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  7. கங்கைக் கரை திடல் வாசிக்கிறேன் ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கங்கைக் கரை திடல் பதிவு வாசித்து உங்கள் கருத்துகளை அப்பதிவில் சொல்லுங்கள் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. காணொளியும் மற்றதும் பார்க்கணும், படிக்கணும். குஜராத்திலும் வேர்க்கடலை நிறைய உண்டு. அங்குள்ள வேர்க்கடலையின் ருசியும் தனி தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள்/படியுங்கள் கீதாம்மா....

      உங்களுக்குத் தெரிந்திருக்கும் - தெரியாத மற்றவர்களுக்காக.... வேர்க்கடலை குஜராத்தில் நிறையவே உண்டு - அங்கே அதற்கு சீங்க் dhதாணா என்று பெயர்! எல்லா சப்ஜியிலும் வேர்க்கடலை பெரும்பாலும் உண்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  9. விமானப் பயணத்தில் பயணி நடந்து கொண்ட முறை அதிர்ச்சி அளிக்கிறது. இப்படியும் மனிதர்கள்! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி நடப்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  10. குட்மார்னிங் வெங்கட். எம்மாம்பெரிய வேர்க்கடலை!!! ஆமாம், எங்கள் வீட்டிலும் வேர்க்கடலை சாப்பிட்டதும் வெல்லம் சாப்பிடச் சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜராத் பகுதியில் கிடைக்கும் வேர்க்கடலை இப்படி பெரியதாக இருக்கும் ஸ்ரீராம்.

      ஆஹா உங்கள் வீட்டிலும் வெல்லம் சாப்பிடச் சொல்வார்களா!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  11. தலைப்பைப் பார்த்ததும் வேர்க்கடலை எப்படி அக்கா தங்கச்சியுடன் பிறக்கும் என்று நினைத்துக் கொண்டேன்... கடலை சாப்பிட்டு தண்ணீர் குடிக்கக் கூடாது என்றும் சொல்வார்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேர்க்கடலை அக்கா தங்கையுடன் - ஹாஹா....

      ஆமாம் - தண்ணீர் குடித்தால் வயிற்றுக் கோளாறு வரும் எனச் சொல்வதுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. விமானத்தில் இருக்கட்டும்.. வீட்டு நிகழ்ச்சிகளிலேயே சிலர் புகைப்படம், காணொளி எடுக்கிறேன் என்று பெண்களை சில அசந்தர்ப்பங்களில் எடுப்பது உண்டு. இது நன்றாயிருக்காது என்பது தெரிந்தோ, அறியாமலோ எடுப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமணங்களில், விழாக்களில் இப்படி படம் எடுப்பது நடக்கிறது. பெரியவர்களை நமஸ்கரிக்கும் படம் எடுக்கிறேன் என எடுத்து அது சரியாகவே இருக்காது! :( பெரும்பாலும் நமஸ்கரிக்கும்போது படம் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. காணொளி ஸூப்பர். சில நாட்களுக்கு முன் வாட்ஸாப்பில் கீதா ரெங்கன் இதேபோல ஒரு சப்பாத்தி, சைட் டிஷ் காணொளி அனுப்பி இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்பாத்தி சைட் டிஷ் காணொளி - பார்த்த நினைவில்லை ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. அந்தப் பழைய பதிவு இப்போதுதான் வாசித்தேன். ஆதங்கமாக பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆரம்ப கால பதிவினைப் படித்து கருத்துச் சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  15. தவறு செய்வது இயல்பு அதை உணராமல் பேசுபவர்களை விடக்கூடாது. பாவம் பெரியவர்.

    காணொளி பிரமிப்பு பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவர் பாவம் - உண்மை தான் ஜி. இளைஞர் தவறு செய்யாதவர் மாதிரியே பேசிக் கொண்டிருந்தார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  16. இளைஞருக்காக முதியவர் மன்னிப்பு கேட்பது வேதனை
    ஆனாலும் இளைஞர் தன் தவற்றை உணராததும் வேதனையை அளிக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. அனைத்தும் அருமை ஜி... அதிலும் காணொளி செம...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  18. சில நேரங்களில் சில பயணிகள் நடந்துகொள்வது மிகவும் வேதனையான விசயம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  19. காணொளி அருமை.
    வாளி, முறம், டீகப் எல்லாம் பிரமிக்கவைத்து விட்டது,
    திறமைகள் வியக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  20. முதியவர் படம் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை தந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  21. வேர்க்கடலை பற்றி படித்தபோது 1960 களில் இருந்த பெங்களூர் நினைவிலாடியதுபெரும்பாலும்கன்னடியர்கள் கோட் சூட் அணிந்து பாக்கெட்டில் வேர்கடலையுடன் கொறித்துக் கொண்டே போஷ் ஏரியாக்களில் வலம்வருவார்கள் கடலைக்கய் உற்சவம்பெங்களூரின் விசேஷம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடலைக்காய் உற்சவம் - அறிந்ததில்லை. அது பற்றி எழுதுங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  23. இது போல கையில் செல்ஃபோன் வைத்திருப்பவர்களை நம்ப முடியாது.
    முந்தைய நாள் நாங்கள் அரசு அலுவலகம் ஒன்றுக்குச் சென்றிருந்தோம்.

    அங்கும் ஒரு இளைஞர் கையில் அலைபேசியில்
    ஏதோ செய்து கொண்டிருந்தார். என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த
    இளம் தந்தை திடிரென எழுந்து அந்த வழியாகச் சென்று அவர் கையைப் பிடித்துவிட்டார்.
    செல்ஃபோனில் இந்த அப்பாவின் நாங்கு வயது அழகுப் பெண்.

    ரசாபாசமாகிவிடாமல் தடுத்து நிறுத்தப் பட்டது.

    அந்தப் பெரியவரை வைத்துக் கதை எழுத வேண்டும். பெரிய விவசாயியாகச் சித்தரித்து வளமுடன் வாழ்வது போல எழுத வேண்டும். மிக நன்றி வெங்கட்.
    வேர்க் கடலையும் பச்சை மிளகாயுமா. அம்மாடி.. நடுக்கமா இருக்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரியவரை வைத்து கதை - எழுதுங்கள் அம்மா... எழுதி உங்கள் பக்கத்தில் வெளியிட்டாலும் சரி இல்லை எனக்கு அனுப்பினால் என் பக்கத்திலும் வெளியிடுகிறேன்.

      வேர்க்கடலையும் பச்சை மிளகாயும் - எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  24. அனைத்தும் ரசித்தேன் வெங்கட்ஜி...அந்த ரங்கோலி மிகச் சிறப்பு பிரமிப்பு!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  25. 'சட்னியாக சாப்பிடுவாரோ' - மிகவும் ரசித்தேன்.

    //உங்க அம்மாவையோ, உடன்பிறந்த சகோதரிகளையோ இப்படி படம் பிடிப்பீர்களா?” // - நாங்களும் (என் ஆபீஸ் நண்பர்கள்) இந்தத் தவறை, ஓமான் கடலில் பெரிய படகில் போனபோது செய்திருக்கிறோம் ஃபன் என்ற பெயரில்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....