வியாழன், 14 மார்ச், 2019

சாப்பிட வாங்க – தெல்லத் தொக்கு – சுதா த்வாரகநாதன்




சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு சமையல் குறிப்புடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது மாமியார் சமையலில் கை தேர்ந்தவர். நான் என் திருமணத்திற்குப் பின் புதிது புதிதான டிஃபன் வகைகள், ஊறுகாய் வகைகள் ஏன் எல்லா விதமான சாப்பாட்டு வகைகளையும் என் மாமியாரின் கைப் பக்குவத்தில் ரசித்து ருசித்துச் சாப்பிட்டவள். பிறகு அவரிடமிருந்து நிறைய சமையல் குறிப்புகளை கற்றுக் கொண்டேன். கையளவு, கண்ணளவு என்றெல்லாம் சொல்லாமல் இவ்வளவு போட வேண்டும், இவ்வளவு போட்டால் இந்த அளவிற்கு வரும் என்று கணக்காகச் சொல்வார். அவர் கைவண்ணத்தில் நான் ரசித்த சில சமையல் குறிப்புகளை அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன். இந்த வாரம், இந்தப் பகிர்வில் ஒரு குறிப்பினைப் பார்க்கலாம்.

என் மாமியார் தெலுங்கில் இதை தெல்லத் தொக்கு என்று சொல்வார். தெலுங்கில் தெல்ல என்றால் வெள்ளை என்று அர்த்தம். நெல்லிக்காய் கொண்டு செய்யப்படும் தொக்கு இது.

தேவையான பொருட்கள்:



முழு நெல்லிக்காய் – கால் கிலோ.
பச்சை மிளகாய் – 6 – 7
இஞ்சி – ஒரு இஞ்ச் அளவான துண்டு.
கல் உப்பு – தேவையான அளவு
வெந்தயம் – 1 ஸ்பூன்
எலுமிச்சை - 1
தாளிக்க – நல்லெண்ணெய், கடுகு, பெருங்காயம்

செய்முறை:

நெல்லிக்காய் சுத்தம் செய்து கொட்டைகளை நீக்கிக் கொள்ளவும். நெல்லிக்காய், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கல் உப்பு சேர்த்து முடிந்த அளவு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து வைத்த விழுதில் வெந்தயத்தினைப் போட்டுக் கலக்கிக் கொள்ளவும்.

ஒரு சின்ன வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து அதையும் அரைத்து வைத்த விழுதில் சேர்க்கவும்.

அதில் ஒரு எலுமிச்சை பழம் பிழிந்து நன்கு கலக்கி எடுத்து வைத்துக் கொண்டால் தெல்லத் தொக்கு தயார்.

இந்த தெல்லத் தொக்கினை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். வெய்யில் காலம் என்றால் ஃப்ரிட்ஜ்-இல் வைத்துக் கொண்டு ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். நெல்லிக்காய், வெந்தயம், எலுமிச்சம்பழம் இவை ஒன்றாகச் சேர்ந்ததால் மருத்துவ குணம் நிறைந்தது. உடம்பிற்கு நல்லது! இந்த தெல்லத் தொக்கு செய்து பாருங்கள். உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதையும் சொல்லுங்களேன்.

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    ஆரோக்கியமான சமையல் குறிப்பு இன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நெல்லிக்காய் உடம்புக்கு நல்லது. அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நல்ல விஷயம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. நாங்களும் இது போல செய்ததுண்டு. எங்கள் அம்மா செய்வார். சாப்பிட்டுப் பல வருஷங்கள் ஆயின. இப்போதெல்லாம் நெல்லிக்காயே வாங்குவதில்லை. மாம்பழம் பக்கம் செல்லும்போது பெரிய பெரிய நெல்லிக்காய் கண்ணில்படும். ஊறுகாய் செய்யவேண்டும், வேகா வாய்த்த நெல்லிக்காய் போல செய்ய வேண்டும் என்று தோன்றும். ஆனாலும் வாங்குவதில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாம்பழம் - மாம்பலம்?

      வேகா வாய்த்த - வேக வைத்த?

      இன்றைக்கு தட்டச்சு ரொம்பவே படுத்துகிறது போல :)

      நான் எப்போதாவது வாங்குவதுண்டு. இங்கே பெரிது பெரிதாகக் கிடைக்கும் நெல்லிக்காய்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. ஆமாம்... ஆமாம்!!! கூகிளுக்கு மாம்பழ ஆசை! மாம்பலம் என்று டைப்பினால் முதல் ஆப்ஷனே மாம்பழம்தான்!

      //வேகா வாய்த்த - வேக வைத்த?//

      மறுபடியும் ஆமாம்... ஆமாம்... இந்த வார்த்தையை இடைவெளி இல்லாமல் டைப்பினால் ஒழுங்காக இருந்திருக்கும்!!!

      நீக்கு
    4. ஹாஹா... கூகிளுடைய தமிழ் சேவை! பல சமயங்களில் ஆட்டோ கரெக்‌ஷன் செய்து படுத்துகிறது.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    5. ஒரே கருத்து இரண்டு முறை வந்து விட்டது போலும்....

      நீக்கு
  3. அவ்வைக்கு பாரி தந்தது நெல்லிக்காய்தானே?!! நான் ஒருமுறை ஒரு மருந்தகத்திலிருந்து தேனில் ஊறவைத்த நெல்லிக்காய்களை வாங்கி தினம் ஒன்று என சாப்பிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனில் ஊற வைத்த நெல்லிக்கனிகள் - கடையிலிருந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே தயாரிக்கலாம். எங்கள் வீட்டில் அப்படித்தான். ஊருக்கு வரும்போது சாப்பிடுவது தான். எடுத்துக் கொண்டு வருவதில்லை - வீட்டிலே சொன்னாலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. கீதா ரெங்கனுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் மெதுவாகத்தான் வருவார் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... விரைவில் அவர்களது உடல்நிலை சரியாகட்டும். பதிவுகள் எங்கே போய்விடப் போகிறது. உடல் நலம் தான் முக்கியம். நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. நல்லா 'சுர்'ன்னு இருக்கும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாகவே இருக்கிறது. சாதம் உடன் சாப்பிட்டேன் நான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. முதல் படத்தை பார்த்த போது கோதுமை ரவை உப்புமா போல் இருந்தது.
    நெல்லிக்காய் தொக்கு நன்றாக இருக்கிறது செய்முறை.
    தெல்ல தொக்கு என்று இன்றுதான் கேள்வி படுகிறேன்.
    தொக்கு செய்வேன், ஊறுகாய் செய்வேன். தெல்ல தொக்கு செய்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெல்லத் தொக்கு நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கம்மா.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. வெங்கட்ஜி வணக்கம்...

    ஸ்ரீராம் சொல்லிருக்கார் காரணத்தை...

    ஓ இதன் பெயர் தெல்லத் தொக்கு என்று சொல்வங்களா ஆந்திராவில்!!!

    நான் வெந்தயத்தை வறுத்துச் சேர்ப்பேன் அல்லது வறுத்துப் பொடி பண்ணிச் சேர்ப்பேன். பொதுவாகவே ஆந்திராவின் இப்படியான ரெசிப்பிக்களில் எண்ணையில் போட்டு வதக்காமல் சூடான எண்ணையை அரைத்ததில் போட்டுக் கலப்பது வழக்கம் என்று தோன்றுகிறது. பச்சை நீட்டக் கத்தரிக்காய் தொக்கு கூட அப்படித்தான்...

    எலுமிச்சையும் பிழிந்ததில்லை.

    இப்படியும் செய்து பார்த்துவிடுகிறேன்...மிக்க நன்றி சுதா ஜி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீட்டக் கத்திரிக்காய் தொக்கு செய்ய நினைத்திருக்கிறேன் - இம்முறை காய்கறி மார்க்கெட் சென்ற போது இந்த வகை கத்திரிக்காய் கிடைக்கவில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. நன்றாகவே இருக்கிறது அதிரா. நெல்லிக்காய் உங்கள் ஊரில் கிடைக்கும் என்றால் இப்படிச் செய்து பார்த்து சொல்லுங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  9. உடலுக்கு நல்லது என்று கூறப்பட்டு வாய்ஜ்ஜுப் பிடிக்கால இருக்கும்பொருட்களில் இந்த நெல்லிக்காயும் ஒன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... நல்லது என்று சொன்ன பல காய்கறிகள் எனக்கும் பிடிக்காமல் இருந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. நெல்லிக்காயின் பயன்பாடுகள் அதிகம். தொக்குப் பண்ணிப் பார்க்கலை. ஒரு முறை அதுவும் பண்ணிடலாம். இப்போதைக்கு வீட்டில் ஊறுகாய் மயம்! :) மாவடுவாக வாங்கித் தள்ளுகிறார். இன்னிக்கு அதனால் ஒரு குருக்ஷேத்திரம்! :)))) சாப்பிட யார் இருக்கா? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாவடுவாக வாங்கித் தள்ளுகிறார்! :) ஹாஹா... இந்த முறை எங்கள் வீட்டிலும் இன்னும் போடவில்லை! சென்ற வருடம் போட்டதே இருக்கிறது என்பதால்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. புதுமையாகத்தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாப்பிடவும் நன்றாகவே இருக்கும் கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    தெல்லத் தொக்கு செய்முறை புதிதாக உள்ளது. வெந்தயம் வறுத்து பொடி பண்ணி சேர்ப்பேன். எலுமிச்சையும் இதனுடன் கலப்பதில்லை. தங்கள் செய்முறை அழகாக உள்ளது. இது போல் செய்து பார்க்கிறேன்.
    நெல்லிக்காயைக் கொண்டு புதுமாதிரி தொக்கு செய்முறையை அறிமுகப்படுத்திய சகோதரி சுதா த்வாரகநாதன் அவர்களுக்கு பாராட்டுடன் நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது இம்முறையில் செய்து பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள் கமலா ஹரிஹரன் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. என் அம்மா நெல்லிக்காய்களை இடித்து கொட்டை நீக்கி வெய்யிலில் கல் சட்டியில் வேடு க‌ட்டி தினமும் வைத்து ஊறுகாய் செய்வார்கள். நாலைந்து நாட்களில் நெல்லிக்காய் அப்படியே குழைந்து வரும். அப்புறம் உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்ப்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். உங்கள் தெல்ல தொக்கும் வித்தியாசமாக இருக்கிறது. கிட்டத்தட்ட அதே பாணி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேடு கட்டுவது..... இப்பொழுது அப்படிச் செய்பவர்கள் ரொம்பவும் குறைவு தான் இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....