செவ்வாய், 5 மார்ச், 2019

கதம்பம் – மேத்தி பூரி – நட்பு – நீட் கோச்சிங் – ஹரே ராமா – கென்யா காஃபிசாப்பிட வாங்க – மேத்தி பூரி – 27 ஃபிப்ரவரி 2019


Hebbar's kitchen தளத்தில் பார்த்து செய்த மேத்தி பூரி ஆலு சப்ஜியுடன்! வெந்தயக்கீரையை மேத்தி என்று ஹிந்தியில் சொல்வார்கள். உருளைக்கிழங்கை ஆலூ என்று சொல்வார்கள். சாப்பிடலாம் வாங்க!


நட்பு – மார்க் நினைவுபடுத்திய விஷயம் – 1 மார்ச் 2019

இரண்டு வருடங்களுக்கு முகநூலில் எழுதியதாக மார்க் நினைவு படுத்திய விஷயம் இது…

சென்ற வாரத்தில் தில்லி நண்பர் ஒருவரை சந்தித்து சற்று நேரம் பேசிக் கொண்டிருக்க வாய்ப்பு கிடைத்தது. ஒரு திருமணத்திற்காக திருவரங்கம் வந்திருப்பதாகச் சொல்லி, கிளம்புவதற்கு முன் எங்கள் இல்லத்திற்கும் வந்திருந்தார். தில்லியில் எல்லோரும் ஒரே ஏரியாவில் இருந்தோம். வார இறுதியில் நான்கைந்து குடும்பங்களாக சந்தித்துக் கொள்வோம். மாதத்தில் ஒரு நாள் "கெட் டு கெதர்" ஏற்பாடு செய்து, ஒவ்வொருவர் வீட்டிலோ, அல்லது தாபாவுக்கோ சென்று சாப்பிடுவோம். குளிர்காலங்களில் ஆளுக்கொரு அயிட்டமாக செய்து எடுத்துக் கொண்டு பூங்காக்களில் குழந்தைகளை விளையாட விட்டு, அரட்டை அடித்து ஒருவருக்கொருவர் பரிமாறி சாப்பிடுவோம்.

இப்போது ஆளுக்கொரு திசையில். தில்லி, சென்னை, மும்பை, திருச்சி என. தில்லி வாழ்க்கை போல வராது என அலைபேசியில் video call மூலம் பேசிய நண்பரின் மனைவி தெரிவித்தார். அந்த செட் போல கிடைக்காது. உரிமையுடன் அடுப்படி வரைக்கும் வந்து என்ன சமைச்சிருக்கிற?? எனக் கேட்ட நண்பர்களை திருமணமான புதிதில் அப்போது மிரள பார்த்திருக்கிறேன்...:) குடு ஒரு கிண்ணத்தில் போட்டு என்று எடுத்துச் செல்வார்கள்..:) சில மணிநேர பேச்சில் தில்லி நாட்களின் நினைவுகளை மீட்டெடுத்தோம். அழைப்பு விடுத்திருக்கிறார்கள் மும்பைக்கு. அவரும், அவர் குடும்பமும். "உன் வீடு அது! எவ்வளவு நாள் வேண்டுமானாலும் வந்து இரு! என்று.

இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது! இன்னமும் அங்கே செல்லும் வாய்ப்பு அமையவில்லை! அமைத்துக் கொள்ளவும் இல்லை!

கென்யா காஃபி – 26 ஃபிப்ரவரி 2019

நேற்று தோழியிடமிருந்து அழைப்பு. கென்யாவிலிருந்து அவரது தம்பி காஃபி பொடி கொண்டு வந்ததாகவும், அவரின் அம்மா அதை எனக்கும் தரும் படி சொன்னதாகச் சொன்னார்!!

இல்லப்பா!! நான் காஃபி குடிக்க மாட்டேன் எனச் சொன்னேன்..

குடிக்கறதை விட்டுட்டீங்களா???

ம்ம்ஹூம்ம்ம்!!! இதுவரை நான் காஃபி குடிச்சதேயில்லை..:) நான் பழகாததால ரோஷிக்கும் பழக்கவே இல்லை..என்றேன்.

இல்ல. நீங்க ஃபில்டர் எல்லாம் வெச்சிருப்பீங்களே!!! என்றார்.

அவருக்கு மட்டும் தான், அதுவும் அவர் வரும் போது காபிப் பொடி வாங்குவேன்..:)) மீதியிருந்த பொடியைக் கூட போகும் போது குடுத்து விட்டுட்டேன்..:) என்றதும், ஓ!!! சரி!! என்றார்.

என்னையும் மகளையும் தவிர புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் காஃபி பிரியர்கள் தான். நான் காஃபி இதுவரை குடித்ததே இல்லையே! எந்த நாட்டிலிருந்து வந்தாலும் நான் என்ன செய்வது.

இந்த விஷயத்தினை முகநூலில் பகிர்ந்த போது வந்த ஒரு கருத்துக் கோர்வை: Uma Sundar: நான் உங்காத்துக்கு வரும்போது இனி ப்ளாஸ்க்-ல காபி போட்டு எடுத்துண்டு வந்துடறேன். Adhi Venkat: அது ரொம்ப நல்ல விஷயம். அதை நான் டபரா டம்ளரில் விட்டு ஆத்தி தரேன். அப்படியே ஒரு சின்ன ஃபிளாஸ்க்கில நல்ல மசாலா டீ போட்டு கொண்டு வந்தா… ஆஹா!!! Uma Sundar: அடிப்பாவி!

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா – 26 ஃபிப்ரவரி 2019

ஞாயிறன்று எங்கள் குடியிருப்பில் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டது. ஏறக்குறைய பத்து வீடுகளிலாவது, பத்து நிமிடங்களாவது ஒரு குழுவால் ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா! கோஷம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

எங்கும் ஹரே ராமா கோஷம்!! மாலை 3:30 மணி முதல் இரவு 9 மணி வரை எந்த வித கவலைகளோ, சிந்தனைகளோ இல்லாமல் கடவுள் நாமத்தை அக்கம் பக்கத்தாரோடு சேர்ந்து நாமாவளி கோஷம் செய்து கொண்டு, எங்கள் வீட்டிற்கும் எல்லோரும் வாருங்கள் என்று அழைப்பு விடுத்து, இருப்பதை வைத்து எல்லோருக்கும் தாம்பூலம் தந்து என அன்றைய நாள் இனிதே கடந்தது. ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டில் உள்ளவர்களின் நலனுக்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யப்பட்டது. விரைவில் எல்லோரும் சேர்ந்து சத்சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் திட்டமிட்டு இருக்கிறார்கள். நல்லதே நடக்கட்டும்!

ஹரே ராமா! ஹரே கிருஷ்ணா!

ரோஷ்ணி கார்னர் – NEET Coaching – 25 ஃபிப்ரவரி 2019இன்று மகளின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு என நேற்றே பள்ளியிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. அதுவும் எட்டாம் மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணாக்கர்களின் பெற்றோருக்கு மட்டும். என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே சென்றேன். சிறிது நேரக் காத்திருப்புக்குப் பின் பள்ளி முதல்வருடன் மூவர் வந்திருந்தனர். அவர்கள் Pinnaacle இலிருந்து IIT JEE/NEET கோச்சிங் பற்றி விவரிக்க வந்திருந்தனர். ஒன்பதாம் வகுப்பிலிருந்து Pre foundation கோர்ஸ் ஆரம்பித்தால் தான் இந்த போட்டி நிறைந்த உலகில் சமாளிக்க முடியுமென்று சொல்லி அவர்களின் கட்டண விவரங்களை பற்றி சொன்னார்கள்.

இதைப் பற்றியெல்லாம் எதுவுமே யோசிக்காத என் மனதில் அதைக் கேட்டுக் கொண்டே பலவித எண்ணங்கள்!! குழப்பங்கள். மகளின் எதிர்காலத்திற்கு செய்ய வேண்டியது என்ன? இந்தக் கோர்ஸெல்லாம் கட்டாயம் சேர்ந்தே ஆகணுமா? மருத்துவமும், பொறியியலும் தவிர வேற எதுவும் முக்கியமில்லையா?? போட்டி நிறைந்த உலகில் ஒன்பதாம் வகுப்பிலிருந்தே ஓடணுமா?

வெளியில் வந்து சில பெற்றோர்களை சந்தித்தால், ஒருவர் இவங்களுக்கு வேற வேலை இல்லையா! இனிமே மீட்டிங் இருக்குன்னு சொன்னா யோசிக்கணும்! என்றார். மற்றொருவரோ "என் பையன் பாவம் இன்ஜினியரிங் வேண்டாம், வேற ஏதாவது கோர்ஸ் படிக்கிறேன்னு அவன் அப்பாக்கிட்ட சொன்னான். அவர் கேட்காம பணத்தை கட்டி சேர்த்து விட்டுட்டார். இப்போ கஷ்டப்படறான்" என்றார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!! என்னவோ போங்க!!!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

36 கருத்துகள்:

 1. வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்ஜி!

  மேத்தி பூரியும் சப்ஜியும் பார்க்கவே செமையா இருக்கு..

  பழைய தில்லி நட்பு அந்த நினைவுகள் ஸ்வாரஸியமாக இருந்திருக்குமே..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

   நட்பு - இன்றைக்கும் தொடர்கிறது - வேறு வேறு ஊர்களில் இருந்தாலும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. கென்யா காஃபி நன்றாக இருக்கும் ஆதி. வெங்கட்ஜிக்காவது டேஸ்டுக்கு வாங்கிருக்கலாம்...ஹா ஹா ஹா

  கூட்டுப்பிரார்த்தனை நல்ல விஷயம். நல்லதே நடக்கட்டும்

  கோச்சிங்க் என்று இப்போது அதற்கே நிறைய பணம் கட்ட வேண்டியிருக்கிறது என்று தெரியவருகிறது. பெற்றோரும் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து ஊக்குவிக்க வேண்டும் தாங்கள் நினைத்ததைப் படிக்கச் சொல்லுவது என்பது ஏனோ...தெரியலை..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெங்கட்ஜிக்காவது டேஸ்டுக்கு வாங்கியிருக்கலாம்! ஹாஹா.... லாம்! :)

   குழந்தைகளின் விருப்பம் முக்கியம் என்பது தான் எனது எண்ணமும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. இதை ஏற்கெனவே முகநூலில் பார்த்துட்டேன், படித்து விட்டேன். மேதி பூரி சிறுதானிய மாவுகளிலும் செய்யலாம். கொஞ்சம் கோதுமை மாவு சேர்க்கணும். ரோஷ்ணி கார்னர் முகநூலிலும் படித்தேன். ஒன்பதாம் வகுப்புப் படிக்கையிலேயே மேலே என்ன படிக்கணும் என்பதைத் தீர்மானிக்கணுமே! அதனால் அந்தக் கோச்சிங் சென்டரில் இருந்து வந்திருக்காங்க போல! இது ஒரு வியாபார தந்திரம் என்றாலும் பெற்றோர், குழந்தைகளிடம் பேசிக் குழந்தையின் விருப்பத்தைத் தெரிஞ்சுக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறுதானிய மாவிலும் செய்யலாம். உண்மை. கொஞ்சம் கொஞ்சமாக பழைய உணவு முறைகள் திரும்புகிறது என்பதில் மகிழ்ச்சி.

   வியாபார தந்திரங்கள் தான் இப்போது எல்லா விஷயத்திலும் வியாபித்து இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 4. எங்க பையர் இஞ்சினியரிங் தான் என ஒன்பதாம் வகுப்பிலேயே சொல்லிவிட்டதால் நாங்க அப்போப் பிரபலமாக இருந்த பிரில்லியன்டில் நாங்களாகவே சேர்த்து விட்டோம். அப்போல்லாம் பள்ளிகளுக்கு இவங்க வந்ததில்லை. அதோடு பையர் படிச்சதெல்லாம் கேந்திரிய வித்யாலயா ராஜஸ்தான்/குஜராத்! பேப்பரில் விளம்பரம் பார்த்துட்டுச் சேர்த்தோம். அது பின்னாட்களில் படிக்கையில் உபயோகமாக இருந்தது எனப் பையர் சொல்லுவார். ஆனால் இதெல்லாம் முக்கியமாய்க் குழந்தைகளின் விருப்பத்தைச் சார்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். அப்போது ப்ரில்லியண்ட் டுடோரியல்ஸ் ரொம்பவே பிரபலம் ஆயிற்றே....

   குழந்தைகளின் விருப்பம் ரொம்பவே முக்கியம். ஆனால் பல வீடுகளில் பெற்றோர்கள் தாங்கள் செய்ய முடியாததை குழந்தைகள் மீது திணிப்பது தான் நடக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

   நீக்கு
 5. குட்மார்னிங்.

  ஹோட்டல் என்பதற்கும் தாபா என்பதற்கும் ஏதும் வித்தியாசம் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாபா அநேகமாகத் திறந்தவெளி உணவகங்களையே குறிப்பிட்டாலும் அமிர்த்சர் போயிருந்தப்போ மூடி இருந்த ஓட்டல்களையும் தாபா என்றே குறிப்பிட்டார்கள். ஆகவே பஞ்சாபியில் ஓட்டல்களுக்கு தாபா என்னும் பெயரோ என நினைத்தோம்.

   நீக்கு
  2. சிறிய அளவு உணவகம் - வெளியிடங்களில் இருப்பவை என்றாலும் இப்போது பெரிய உணவகங்களைக் கூட தாபா என்று அழைக்கிறார்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 6. திருமதி வெங்கட் இதுவரை காபியே குடித்ததில்லை என்பது மிகவும் ஆச்சர்யமான தகவல். என்னால் காஃபி குடிக்காமல் இரண்டு நாட்களை ஓட்டமுடியும் என்றுநினைக்கிறேன். அதுவே கஷ்டம்தான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு இருந்தாலும் ஓகே... இல்லை என்றாலும் ஓகே! காஃபி குடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எப்போதும் இல்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. எல்லோரும் எஞ்சினியரிங், மருத்துவம் என்று சேர்ந்தால் வேலைக்கு எங்கே போக, என்று என் மகன் படிக்கும் சமயத்தில் கேட்டேன். பிடிவாதமாக அவனும் பொறியியல் சேர்ந்தான். என்னைக் கேட்டால் மற்ற கோர்ஸ்கள் படிக்கலாம், அவனுக்கும் சொன்னேன் அவன் கேட்கவில்லை. இதில் முக்கியம் படிக்கப்போகும் உங்கள் மகளின் விருப்பம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெற்றோர்களின் விருப்பதை விட குழந்தைகளின் விருப்பம் முக்கியம் என்பது தான் எனது எண்ணமும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 8. முக நூலில் படித்தாலும் மீண்டும் படிக்க அருமையாகத்தான் இருக்கு.
  குழந்தைக்கு எது இஷ்டமோ அதைப் படிக்க வையுங்கள். அந்த இளந்தோள்களில் பாரம் ஏற்றக் கூடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இளந்தோள்களில் பாரம் ஏற்றக் கூடாது - அதே தான்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 9. முக நூலில் படித்தேன், இங்கும் படித்து மகிழ்ந்தேன்.
  மாயவரம், திருவெண்காடு நட்புகள் போல் இங்கு அமையவில்லை இன்னும்.
  அந்தக் காலங்கள் மிகவும் அருமையான காலம்.
  ரோஷ்ணிக்கு பிடித்த் படிப்பை படிக்க வையுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில ஊர்கள் நமக்கு ரொம்பவே பிடித்து விடுகின்றன. அவற்றை, அந்த ஊர் நினைவுகளை மறக்க முடிவதில்லை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. மேத்தி பூரி... அட்டகாசம்

  கூட்டுப்பிரார்த்தனை ...சிறப்பான விஷயம்

  இப்பொழுது எல்லாம் எட்டாம் வகுப்பிலேயே இந்த கோச்சிங் ஆரம்பித்து விடுகிறார்கள் , அதற்கு தனி கட்டணம் வேறு ...பாவம் பிள்ளைகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாவம் பிள்ளைகள்... ஆமாம். ரொம்பவே படுத்துகிறார்கள். போட்டி நிறைந்த உலகம் என்பது உண்மை என்றாலும் ரொம்பவே கஷ்டப்படுத்துவதாகத் தோன்றும் எனக்கு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 11. குழந்தைகளுக்கு எதில் ஆர்வம் என்பது கண்டுபிடித்து, படிக்க வைப்பதே சிறந்தது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. கூட்டுப் பிரார்த்தனை நல்ல விஷயம்.

  கேரளத்திலும் கோச்சிங்க் உண்டு என்றாலும் என் குழந்தைகள் மூவருமே மருத்துவம் என்று சொல்லிவிட்டதால் (மற்ற கோர்ஸும் அப்ளை செய்வார்கள் என்றாலும் மருத்துவம் முதல் சாய்ஸ்) முதல் மகன் 12 முடித்து ஒருவருடம் பயிற்சி பெற்று அப்புறம் தான் நீட் எழுதினான். இங்கு சரியாக அமையவில்லை என்பதால் ரஷ்யாவில் படித்து வருகிறான். இரண்டாவது மகனும் இப்போது ஒரு வருடம் கோச்சிங்க் போகிறான். இதோ இந்த வருடம் எழுதுகிறான் பார்ப்போம் இறைவன் சித்தம்.

  மூன்றாவது மகள் இப்போது 12 எனவே அடுத்து அவளும் கோச்சிங் சென்று அடுத்த வருடம் தான் பரீட்சை எழுதுவாள்.

  தங்கள் மகள் ரோஷினிக்கு எதில் விருப்பமோ அதைப் படிக்க வையுங்கள். வாழ்த்துகள்.

  கதம்பம் அருமை சகோதரி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் குழந்தைகளுக்கு என் வாழ்த்துகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 13. என்னது? 9 வது வந்த பின்னும் கோச்சிங் கிளாஸ் சேக்கலையா ?அபச்சாரம் .அபச்சாரம்
  ஹைதராபாத்தில் இருந்திருந்தால் இந்நேரம் உங்க குழந்தை IIT சிலபஸ் முடிச்சிரு
  க்கணும். 12th போர்ஷனும் முடிச்சிருக்கணும்.
  கோட்டா (ராஜஸ்தானில்) கொண்டுவிடச் சொல்லி யாருமே சொல்லலியா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோட்டாவில் கொண்டுவிடச் சொல்லவில்லையா? ஹாஹா.... இன்னும் சொல்லவில்லை நல்ல வேளை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   நீக்கு
 14. பதில்கள்
  1. வாழ்க்கையின் மிகப் பெரிய பரிசு - நட்பு... 100% உண்மை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 15. என்ன ரெண்டு வீட்டிலயும் வெந்தயக்கீரையா கிடக்கு?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... என்னவோ இப்படி அமைந்து விட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 16. மேத்தி பூரி இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன்.

  உங்கள் மகளுக்கு எது படிக்க விருப்பமோ அதில் அவர் படிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேத்தியில் இப்படி நிறைய விஷயங்கள் செய்யலாம் சொக்கன் சுப்ரமணியன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....