செவ்வாய், 19 மார்ச், 2019

கதம்பம் – சீனா ஐயா - உயிரின் மதிப்பு - பாவ் பாஜி –– இலை வடாம் - ஜீயர்புரம்

சீனா ஐயா – 16 மார்ச் 2019வலைச்சரம் என்ற தளத்தில் பல பதிவர்களை ஆசிரியராக்கி சிறப்பித்தவர். என்னையும் மூன்று முறை ஆசிரியராக அமர்த்தியவர். வை.கோபாலகிருஷ்ணன் சார் ஒருமுறை ஐயாவைவும், அவரது துணைவியையும் எங்கள் இல்லத்துக்கு அழைத்து வந்திருக்கிறார்.
 
இன்று சீனா ஐயா நம்மிடையே இல்லாதது பெரும் இழப்பு. ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

உயிரின் மதிப்பு - பேருந்துப் பயணத்தில் – 11 மார்ச் 2019

இரண்டு நாட்களும் பேருந்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. முதல் நாள் அரசுப் பேருந்தில் கிராமத்தை நோக்கிய பயணம். ஓட்டுனருக்கு என்ன கோபமோ! அப்படியொரு வேகம்!

பேருந்தில் ஒரு பெண்மணி ஓட்டுனரிடம் குறிப்பிட்ட இடத்தில் இறக்கி விடச் சொல்லி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார். ம்ம்ம்ஹும். "போம்மா, உன் சவுகரியத்துக்கு நிறுத்தச் சொல்லுவ!! நான் டயத்துக்கு போகணும்! பின்னாடி வர்றான் பாரு!" என்று சொல்லி நிறுத்தவே இல்லை.

திரும்பி வரும் போது தஞ்சாவூர் பேருந்து தான் கிடைத்தது. அதுவும் அப்படித்தான். முந்திக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணம் தான் ஓட்டுனரிடம். நேற்று தனியார் பேருந்தில் பயணம். அசுர வேகம். முன்புறமும் பின்புறமும் வரும் பேருந்துகளுடன் போட்டி. ஆயில் டேங்கருடனும்! எங்கள் மைண்ட்வாய்ஸ் "டேய்! உங்க போட்டியில எங்களை சாவடிச்சுட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க போலிருக்கே" சீட்டில் உட்காரவே சிரமப்படுமளவு வேகம்!! எதற்கு??

பொதுமக்களின் உயிர் இவர்களுக்கு அலட்சியமாய் போய்விட்டது.

சாப்பிட வாங்க – பாவ் பாஜி – 10 மார்ச் 2019மாலை நேரச் சிற்றுண்டியாக முதன்முறையாக பாவ் பாஜி!! செய்ததும்! சுவைத்ததும்! நானே செய்து தான் சாப்பிடணும்னு இருக்கு.

இலை வடாம் – மார்க் நினைவுபடுத்திய விஷயம் – 16 மார்ச் 2019இரண்டு வருடம் முன்னர் இப்படி இலை வடாம் பற்றி எழுதி இருக்கிறேன் என்று மார்க் தம்பி நினைவூட்டிய விஷயம்!

இலைவடாம்!!!

சென்ற வருடம் தெரிந்த ஒரு மாமி இந்த வடாம் செய்வது சுலபம் ”செய்து பார்” என்றார். வெயிலும் அதிகமாக தேவையில்லை. வீட்டிலேயே பால்கனியில் கூட வைத்து காய வைக்கலாம். ஒரு நாள் வெயிலில் போட்டு வைத்துக் கொண்டால் ஆச்சு என்று சொல்லியிருந்தார்.

நேற்று இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு தம்ளர் பச்சரிசி ஊற வைத்து வைத்திருந்தேன். கடைசியாக இந்த அரிசியை கிரைண்டரில் போட்டு மைய அரைத்துக் கொண்டேன். ஒரு தம்ளர் அரிசிக்கு ஒரு கைப்பிடி ஜவ்வரிசியும் சேர்த்து அரைக்க வேண்டும்.

Geetha Sambasivam மாமியின் சாப்பிட வாங்க வலைப்பூவில் இந்த ரெசிபியை படித்து இரவு ஜவ்வரிசி தனியே ஊற வைத்தேன். காலையில் அதையும் அரைத்து, காரத்துக்கு ஏறப பச்சை மிளகாய் அரைத்து சேர்க்கவும். அத்துடன் பெருங்காயம், சீரகம், உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இட்லிப் பானையில் ஒரு தட்டை போட்டு அதன் மீது தேங்காய் எண்ணெய் தடவிய இலை வைத்து மாவை விட்டு தோசை போல் மெலிதாக தேய்க்கவும். மூடி போட்டு ஒரு நிமிடம் வைத்தால் வெந்து விடும். இரண்டு பக்கங்களிலும் இப்படி இட்லிப் பானையோ வாணலியோ வைத்துக் கொண்டால் மாற்றி மாற்றி வைத்து எடுக்கலாம். இலையிலிருந்து எடுத்து ஒரு தட்டிலோ பேப்பரிலோ போட்டு காய வைக்கவும். செய்வது மிகவும் சுலபமாக இருந்தது.

ஒரு தம்ளர் அரிசிக்கு இருபதுக்கு மேற்பட்ட இலை வடாம் கிடைக்கும். நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். ஒரு நாள் வெயிலில் போட்டு வைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்தோ, அப்பளம் போல் சுட்டோ சாப்பிடலாம். நான் மிதமான வெயிலாக இருப்பதால் மாடியில் உலர்த்தியிருக்கிறேன்.

திருவரங்கம் - ஜீயர்புரம் – 15 மார்ச் 2019பங்குனித்தேர் உற்சவத்தின் ஒரு நாளாக நேற்று திருச்சியின் அருகே இருக்கும் ஜீயர்புரம் என்ற ஜீயபுரம் செல்லும் வழியில் இரவு 10:30 மணியளவில் எங்கள் குடியிருப்பின் வாயிலில் ரங்கனை தரிசித்தோம். வழியெங்கும் உபயங்கள் உண்டென்பதால் ஒரு நிமிடம் தான். இன்று திரும்பி விடுவார். ஆனால் எங்கும் நிற்காமல் ஓட்டம் தான்.

வருடத்தில் இரண்டு முறை வீட்டு வாசலில் ரங்கனை தரிசிக்கலாம். சித்திரைத் தேர் சமயம் தங்க கருட சேவை உண்டு.

ரங்கா! ரங்கா!

என்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்....

நட்புடன்

ஆதி வெங்கட்

40 கருத்துகள்:

 1. சீனா ஐயாவின் இல்லாதது நமக்குப் பேரிழப்புதான். பலருக்கும் ஆசிரியர் பொறுப்பு அளித்தவர். புதிதாய் வலையில் வந்திருந்த எங்களுக்கும். ஆழ்ந்த அஞ்சலிகள்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் இந்தப் பதிவுலகில் பலரை அவர் தெரிய வைத்திருக்கிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 2. தனியார்ப் பேருந்துகள் போட்டிப் போட்டுக் கொண்டு ஓட்டுவது நாம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் பயணம் செய்ய வேண்டும் பயமாகத்தான் இருக்கும்.

  இலை வடாம் போன வருடம் போட்டேன்...சூப்பராக இருக்கு. இலை வடாம் எப்போது வேண்டுமானாலும் போடலாம் வெயில் அத்தனை தேவையில்லை என்பதால். ஜவ்வரிசி சேர்க்காமலும் செய்வதுண்டு. சேர்த்தும் செய்வதுண்டு. போன முறை சேர்க்காமல் செய்தேன். இம்முறை இனிதான் தொடங்க வேண்டும்.

  தரிசனம் சிறப்பு.

  கதம்பம் அருமை ஆதி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேருந்து பயணத்தில் ஓட்டுனர்கள் ரொம்பவே படுத்துகிறார்கள் - குறிப்பாக தனியார் பேருந்துகள்...

   இலை வடாம் - இந்த வருடம் இன்னும் வடாத்துக் கச்சேரி ஆரம்பிக்கவில்லை எங்கள் வீட்டில்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 3. சீனா ஐயா அவர்களின் மறைவுக்கு எங்கள் இதயபூரவமான அஞ்சலிகள். வலையுலகத்துக்கு ஒருபேரிழப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஸ்ரீராம். பலருக்கும் இங்கே ஒரு அறிமுகம் கிடைக்கக் காரணமாக இருந்தது வலைச்சரமும் சீனா ஐயாவும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. பஸ் வேகம்... பல வருடங்களுக்கு முன் வத்ராப், விருதுபட்டி, சாத்தூர், சில்த்தூர் போன்ற ஊர்களில் பணிசெய்த காலங்களில் இந்தக் கொடுமையை அனுபவித்ததுண்டு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பள்ளி, கல்லூரி வரை நடந்தோ சைக்கிளிலோ தான். தலைநகர் வந்த பிறகு இவ்வளவு வேகமான பயணம் வாகன நெரிசல் மிகுந்த தலைநகரில் சாத்தியமில்லை :) நாலடி போவதற்குள் நாற்பது முறை ப்ரேக்! இன் ஃபாக்ட் ப்ரேக் மீதிருந்து காலை எடுக்கவே வேண்டாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. பாவ்பாஜி சூப்பர்... இலைவடாமா? இலவடாமா? நாங்கள் இரண்டாவதாக இருப்பதுபோலச் சொல்லுவோம். ரங்கதரிசனத்துக்கு நன்றி. இந்த நாள் இனிதாகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலை வடாம், இல வடாம் இரண்டுமே ஓகே தான்.

   இந்த நாள் இனிதாகட்டும்... அனைவருக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அருமையான தரிசனம். இந்த வருஷம் கொடியாலம் சத்திரத்து மண்டகப்படிக்குக் கூடப் போக முடியலை! :( அரங்கனைப் பார்த்து நாளாச்சு! எப்போக் கூப்பிடப் போறான்னு தெரியலை! சீனா ஐயாவை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாவ் பாஜி சாப்பிட்டு நாளாச்சு. முகநூலிலும் பார்த்தேன். நான் இப்போல்லாம் வடாம் போடுவதே இல்லை! சாப்பிட ஆள் வேணுமே! :)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடியாலம் சத்திரத்து மண்டகப்படி... இப்படி அங்கேயே இருந்தாலும் போக முடியாதபடி தான் இருக்கிறது. அரங்கனை நான் பார்த்தும் ஆகிவிட்டது பல நாட்கள்... பார்க்கலாம் எப்போது அழைப்பு வருகிறது என!

   சாப்பிட ஆள் வேணுமே - அதானே....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 7. சீனா சாரையும், வலைச்சரத்தையும் மறக்க முடியாது.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்பு குதுகலமான காலம்.
  நம் பதிவுகள் அறிமுகபடுத்தபடும் போது மனம் மகிழ்ச்சியில் துள்ளிய காலங்களை மறக்க முடியாது அது போல் சீனா சாரையும் மறக்க முடியாது. நினைவில் வாழ்வார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சர ஆசிரியர் பொறுப்பு குதூகலமான காலம். உண்மை. நம்மை அறிமுகம் செய்வார்களா என ஒவ்வொரு வாரமும் பார்த்தது உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 8. இல வடாத்துக்கு அடுக்கு தட்டு கேரியர் வைத்து இருக்கிறேன் எவர்சில்வரில், மாயவரத்தில் வாங்கினேன்.
  நிறைய வடகம் போட்ட காலங்களை நினைத்துக் கொள்கிறேன். இப்போது மீண்டும் இலைவடாம் போட ஆசை வந்து விட்டது ஆதியின் பதிவுப் பார்த்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இல வடாம் போட ஆசை வந்து விட்டதா... இந்த வருடம் போட்டுடுங்கம்மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. பதில்கள்
  1. மகிழ்ச்சி...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 10. அன்பின் சீனாவின் மறைவிற்கு
  ஆழ்ந்த இரங்கல்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. சீனாதானா ஐயாக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. இலை வத்தல் செய்து பார்த்துட்டு சொல்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செய்து பார்த்துச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 13. இரண்டு பேருந்துகளின் போடியில் ஒன்றோடு ஒன்று மோதி அவசரத்துக்கு ஆட்டோ பிடிச்சு போகும்போது இந்த பதிவை படிக்கிறேன். நல்லவேளை யாருக்கும் காயமில்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை யாருக்கும் காயமில்லையே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 14. வலைச்சரம் மீண்டும் வரும் என்று நினைத்தபோது ஐயாவின் மரணம் மேலும் பேரிழப்பு.

  ஓட்டுனர்கள் பலருக்கும் அலட்சியப்போக்கு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சரம் மீண்டும் வந்தால் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 15. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 16. 16.10.1950 இல் பிறந்தவரும்,

  ’அன்பின் திரு. சீனா ஐயா’ என்று

  வலையுலகில் அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவரும்,

  வலையுலக மூத்த பதிவருமான

  ’ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள்

  16.03.2019 சனிக்கிழமையன்று அவரின் சொந்த ஊரான மதுரையில், காலமானார் என்ற அதிர்ச்சியும், துக்கமும் தரும் செய்திகள் பலரின் வலைத்தளங்களில், கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.

  2011 முதல் 2014 வரை சுமார் ஐந்து ஆண்டுகள், என்னுடன் மிகவும் பிரியமாகவும், அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்த அவரின் இந்தப் பிரிவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மிகவும் உயர்ந்த எண்ணங்கள் கொண்ட, அருமையான, மிகவும் நல்ல மனிதர் அவர்.

  கடந்த ஐந்து ஆண்டுகளாக (2014 to 2018) அவரை வலைப்பக்கமே எங்கும் பார்க்க இயலவில்லை.

  அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

  அவரின் பிரிவினால் வாடும் அவரின் அன்பு மனைவி + இதர குடும்பத்தார் அனைவருடனும் என் துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். :(

  அவருடனான என் சந்திப்பு பற்றியும், அவரையும் அவரின் இல்லத்தரசியையும், தங்கள் இல்லத்திற்கு ஒருநாள் (06.10.2013) கூட்டிக்கொண்டு வந்த நிகழ்வையும், என் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள செய்திகள் இதோ இந்தக் கீழ்க்கண்ட இணைப்புகளில் உள்ளன:

  https://gopu1949.blogspot.com/2013/10/61-2-2.html

  https://gopu1949.blogspot.com/2015/02/4-of-6.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி.

   நீக்கு
 17. இந்த மாதிரி பஸ் ஓட்டும்போட்டிதிருச்சிதனியார் பேரூந்துகளில் அதிகம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 18. ஆத்தங்குடி திரு. பெ.க.சு.பெ.கரு.கா. சிதம்பரம் செட்டியார் அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 19. சீனா ஐயாவுக்கு எனது அஞ்சலிகள் .
  பஸ் ஒட்டுறதில் இவ்ளோ கவனக்குறைவா :(
  எல்லா பேருந்திலும் சிசி டிவி வச்சி கண்காணிக்கும் ..பயணிகளுக்கு ஆபத்தாச்சே இவர்களால் .
  இல வடாம் முயற்சிக்கிறேன் சம்மருக்கு .
  பாவ் பாஜி நல்லா இருக்கு ஆனா எங்க வீட்லயும் கஷ்டம்தான் நானேதான் சாப்பிடணும் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 20. இல வடாம் தகவல் எளிதாக உள்ளது. I will try.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல வடாம் முயற்சித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....