புதன், 20 மார்ச், 2019

ஆனந்தம்! விவேகானந்தம்! - பத்மநாபன்
இந்த வருடம் ஆரம்பித்ததுமே இரண்டு மகிழ்வு தரும் செய்திகள் என் காதினிலே வந்து விழுந்தன. முதலாவது செய்தி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு 'காந்தி அமைதி விருது' அதன் கிராமப்புற முன்னேற்றம் மற்றும் கல்விப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அதே விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
ஆமாம். அதுக்கென்ன இப்போ என்கிறீர்களா. அது ஒன்றுமில்லை, விவேகானந்தா கேந்திராவிற்கும் எனக்கும் ஒரு வருடகாலம் பிணைப்பு இருந்தது. கல்லூரி பட்டப்படிப்பு முடிந்து வேலைதேடும் படலத்தில் இருந்த காலம். அப்போது எனக்கும் லாட்டரி அடித்தது. பணப்பயன் உள்ள லாட்டரி அல்ல. அனுபவம் பல அள்ளித் தந்த லாட்டரி. வேலை தேடும் முகாந்திரமாக பத்திரிகையை புரட்டிக் கொண்டிருந்த போது கண்ணில் பட்டது ஒரு மூலையில் சிறியதாக காணப்பட்ட அந்த விளம்பரம். "கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் கிராமப்புற முன்னேற்றத் திட்டத்தில் கெளரவ தொண்டர்களாக பணிபுரிய பட்டதாரி இளைஞர்கள் தேவை. கெளரவ ஊதியமாக ரூபாய் மாதம் நானூறு வழங்கப்படும்."

ஆஹா! ரூபாய் நானூறு ஆச்சே! அப்போது நம்மள மாதிரி வெட்டி ஆபீஸருக்கு அது கௌரவமான தொகை. உடனே எடுடா பேப்பரைன்னு கட கடன்னு ஒரு விண்ணப்பத்தை எழுதி தபால்ல போட்டேன். அடுத்த பத்து பதினைஞ்சு நாளில் நேர்முகத் தேர்வுக்கு கன்னியாகுமரிக்கு வருமாறு அழைப்பு வந்தது.

எனக்கும் இந்த நேர்முகத் தேர்வுக்கும் ரொம்ப தூரம். வங்கி எழுத்துத் தேர்வில் இரண்டு முறை வெற்றி பெற்று நேர்முகத் தேர்வில் புறமுதுகிட்டு வந்ததால் நேர்முகத் தேர்வு என்றால் கொஞ்சம் அலர்ஜிதான். ஆனாலும் போய்த்தான் பார்ப்போம், கிடைத்தால் மாசம் நானூறு, இல்லேன்னா கன்னியாகுமரி சுத்திப் பாத்துட்டுப் போனாரு, அவ்வளவுதானேன்னு போயாச்சு. இதற்கு முன்னால் கன்னியாகுமரிக்கு எத்தனையோ முறை போயிருந்தாலும் அதன் நுழைவாயிலில் இருக்கும் விவேகானந்தா கேந்திரா வளாகத்திற்குள் நுழைந்ததில்லை. இந்த நேர்முகத் தேர்வைப் பயன்படுத்தி அந்த வளாகத்தின் உள்ளே பார்க்கும் வாய்ப்பும் கிடைக்குமேன்னும் ஒரு எண்ணம். ஒரு வழியாக கேந்திரத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும் இடத்தை அடைந்தால் எனக்கு முன்னால் ஆண்களும் பெண்களுமாக ஒரு நூறு பேருக்கு மேல் உட்கார்ந்து இருக்கிறார்கள். அந்த நூறு பேரில் இருந்து இருபத்தைந்து பேர்களை தேர்ந்தெடுக்கப் போகிறார்களாம்.

சற்று நேரத்தில் பத்து பத்து பேராக குழுக்களாகப் பிரித்து ஒரு கலந்துரையாடல். அதில் இருந்து வடிகட்டி சிலரை அடுத்த கட்டமாக நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உடனே அழைத்து ஒரு ஐம்பது நாள் உள்ளிருப்பு மற்றும் களப்பயிற்சியில கலந்து கொள்ள கடிதம் தந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்குத் தெரியாது அந்த ஐம்பது நாள் பயிற்சி ரூபாய் நானூறு சம்பந்தப்பட்டதல்ல, ரூபாய் நாலு லட்சம் கொடுத்தாலும் கிடைக்காத அரிய வாய்ப்பு என்பது.

காரைக்குடி காளீஸ்வரன்; இனிய குரலில் அழகாய்ப் பாடும் சேர்ந்தமரம் விவேகானந்தன்; நல்ல கவிதை எழுதும் திண்டுக்கல் லோகநாதன்; பரமக்குடி தனசேகரன்; காந்திகிராமம் பொன்னுச்சாமி; மோரும் தயிரும் என்றால் சொத்தையே எழுதி வைக்கும்  பாளையங்கோட்டை தேவராஜ்; ராமநாதபுரம் வடிவேல், செல்வராஜ், புதுக்கோட்டை திருமாறன்; நான் ஓம் நமச்சிவாய என்றால் ஓம் நமோ நாராயணாய என்று வம்புக்கு இழுக்கும் திருமங்கலம் பரமேஸ்வரன், அருப்புக்கோட்டை காசிராஜன் மற்றும் மேலகிருஷ்ணன்புதூர் பாஸ்கரன் ஆகியோர் மேலும் இதுபோல் ஏழு பெண்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி பெற்றோம்.

ஆண்களில் நானும் மேலகிருஷ்ணன்புதூர் பாஸ்கரனும் மட்டுமே குமரி மாவட்டம். பயிற்சிகாலத்தில் மாலைநேர விளையாட்டு நேரத்தில் எனக்கும் அவருக்கும்தான் போட்டி. நூறு மீட்டர் இருநூறு மீட்டர் ஓட்டத்தில் என்னை அவரால் மிஞ்ச முடியவில்லை. அது போல் நானூறு மீட்டர் போன்ற நீண்டதூர ஓட்டத்தில் அவரை மிஞ்ச என்னாலும் முடியவில்லை. நான் வெற்றி பெற்றால் காற்று பலமாக அடித்ததால்தான் நான் வெற்றி பெற முடிந்தது என்று என்னை கலாய்ப்பார். பாஸ்கரன் உண்மையாகவே ஊருக்குழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர். அவர் ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தவரை சில வருடங்களுக்கு முன்னர் சிலர் அவர் வீட்டருகிலேயே வெட்டிச் சாய்த்து விட்டனர் என்று நண்பர் பிரேம்குமார் மூலம் கேள்விப்பட்டபோது பாஸ்கரனின் துறுதுறு முகம் நினைவில் வந்து கண்ணீர் வந்தது.

எங்கள் பயிற்சி காலை ஐந்து மணிக்கு ஆரம்பிக்கும். எல்லாம் அந்த நானூறு ரூபாய் படுத்தும்பாடு. ஐந்து மணிக்கு கண் கெஞ்சும் போது நானூறு ரூபாய் முன்னே வந்து கொஞ்சும். ஐந்தரைக்குள் குளித்து காலைக்கடன் முடித்து குரு சங்கர்ஜியின் யோகா வகுப்பு!  அவர்   முதலில் சூர்யநமஸ்காரத்தில் ஆரம்பித்து சவாஸனத்தில் முடிப்பார்.  எல்லோருக்கும் பிடித்த ஆஸனம் அதுதான். அது முடிந்ததும் கூட்டுப் பிரார்த்தனைக்கு போக வேண்டும், இல்லாவிட்டால் மூன்று நிமிட ஸவாஸனம் முப்பது நிமிடமாக நீண்டுவிடாதா!

யோகா மற்றும் பிரார்த்தனை முடிந்ததும் திவ்யமான காலை உணவு. முதல் நாளில் இப்படித்தான், காலையில் நல்ல பசி. நம்ம குரூப்பில மூணுபேருக்கு சாப்பாடு பரிமாறும் டூட்டி. நல்ல வேளை, எனக்கு அன்னைக்கு சாப்பிடும் டூட்டிதான். அவரவர் சாப்பாட்டுத் தட்டை எடுத்து வந்து வரிசையில் உட்கார்ந்தாச்சு. அன்னைக்கு இட்லியும் பொங்கலும் மெனு. தட்டுல வட்ட நிலாவாட்டமா இட்லியை வச்சு பக்கத்தில பொச்சுக்குன்னு ஒரு பெரிய கரண்டி பொங்கலும் வச்சு சட்னி, சாம்பாரும் ஊத்தியாச்சு. எனக்கோ நல்ல பசி. பாத்தா ஒருத்தரும் தட்டுல கையை வைக்கிற மாதிரி தெரியல. ஒவ்வொரு உணவு வேளையிலும் பிரார்த்தனை பண்ணி ஆண்டவனுக்கு நன்றி சொல்லி சாப்பிடணும்னு முன்கூட்டியே அறிவுறுத்தியிருந்தார்கள். இட்லிக்கு பக்கத்தில் நெய் மணக்க மணக்க பொங்கலின் கறுப்பு மிளகு கண்ணால என்னைத் தின்னுடா, என்னைத் தின்னுடான்னு இந்தியன் பட மோனிஷா கொய்ராலா மாதிரி கண் சிமிட்டுது. அதுதான் வெண்பொங்கல்ன்னு எனக்கு அன்னைக்குத்தான் தெரியும். எனக்கு தெரிஞ்ச பொங்கல் தைப்பொங்கலும், எங்க ஊர் சிவன்கோவிலிலும், அம்மன் கோவிலிலும் அவ்வப்போது போடும் சர்க்கரைப் பொங்கலும்தான். அப்பாடா! ஒருவழியாக ஒருவர், "பிரம்மார்ப்பணம்" ஆரம்பிச்சு இன்னும் சில ஸ்லோகம் சொல்லி முடிச்சு சாப்பிடலாம்னு அனுமதி கொடுத்தார். அடடா! இவ்வளவு திவ்யமான வெண்பொங்கலை இத்தனை நாள் தவற விட்டிருக்கிறோமே!

வள்ளியூர் முருகன் அண்ணனும் தாணுபிள்ளை அண்ணனும்தான் அப்போது விவேகானந்தா கேந்திராவின் ஆஸ்தான சமையல்கலைஞர்கள். அவர்களை மனதாரப் பாராட்டி விட்டு மனதில் சபதம் எடுத்துக் கொண்டேன், கல்யாணம் பண்ணினால் நல்ல பொங்கல் பண்ணத் தெரிந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வது என்று.  இந்த சபதத்தை பின்னாளில் தில்லியில் நண்பர்களிடம் சொன்னபோது நல்ல பொங்கல் பண்ணக்கூடியவர் என்றால் பெருமாள் கோவில் பூசாரியைத்தான் கல்யாணம் செய்யணும்னு கிண்டல் பண்ணி ஒருவழியாக்கிட்டாங்க. அது சரி, சபதம் நிறைவேறியதா எனறு கேட்கிறீர்களா? பெண் பார்க்க போகும்போது பெண்ணின் அழகில் மயங்கி பொங்கலை மறந்துவிட்டேன்.   (என்னத்தச் செய்ய, அவ்வப்போது இந்த மாதிரி ஏதாவது பிட்டப் போட்டுத்தான் குடும்பத்தில அமைதியை நிலைநாட்ட வேண்டியிருக்கு.) சரி, அந்தக் கதை எதுக்கு இப்போ.

காலை உணவு முடிந்து பின்னர் ஒரு இரண்டு மணி நேரம் அழகான நம்பிக்கை ஊட்டும் வகுப்புகள், ராமாயண வகுப்புகள், பாரதியார் பாடல்கள் என்று அழகாகக் கழியும். பின்னர் மதிய உணவுக்குப் பின் மீண்டும் எங்களை மெருகேற்றும் பல்வேறு வகுப்புகள். மாலையில் விளையாட்டு நேரம், பின்னர் பிரார்த்தனைக்கூடத்தில் ”இணைந்து பாடுவோம் இறைவனை பாடுவோம்” என்று அற்புதமான பிரார்த்தனைப் பாடல்கள் என அழகாக கடந்த தினங்கள் அவை.

பயிற்சிக்குப் பின் எங்கள் பணி கிராமப்புறங்களில் சென்று பணியாற்றுவது. கேந்திராவின் சார்பில் பல கிராமங்களில் உணவுடன் கூடிய பாலர்வாடி பள்ளிகள் நடக்கின்றன. அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்முகாம்கள் நடக்கும்.  கிராமப்புற பள்ளிகளில் பல பண்பாட்டுப் போட்டிகள் நடத்துவது மற்றும் பல இளைஞர் முகாம்கள், சிறுவர் முகாம்கள் நடத்துவது என்று பல பணிகள். அவற்றை எப்படி திறம்பட செய்வது என்ற பயிற்சிகளுமாக மறக்க முடியாத நினைவுகள் விவேகானந்தா கேந்திராவுடன் எனக்கு.

அதுவும் இந்த கண்முகாம் இருக்கிறதே, அதற்காக கிராமம் கிராமமாக நாங்கள் சென்று பணியாற்றும் போது முதியவர்கள் எங்களையே டாக்டர்கள் என்று எண்ணி ஒத்துழைப்பார்கள். முகாமில் மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கும் கண்புரை உள்ளவர்களை அரவிந்த் மருத்துவனை அழைத்துச் சென்று அறுவை சிகிச்சை முடிந்து அவரவர் வீடுகளுக்கு கொண்டு சேர்ப்பது வரை எங்களைப் போன்ற கேந்திர தொண்டர்கள் பார்த்துக் கொள்வோம். மனதிற்கு மிகவும் திருப்திகரமாக இருக்கும்.பயிற்சி முடிந்து திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் கிடைத்த எனது கேந்திரப் பணியில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள். ஏற்கனவே ஒற்றைத்துண்டுடன் நடந்த கதை ஒன்றை சொல்லி இருக்கிறேன். இப்படி மகிழ்ச்சிகரமான அத்தியாயத்தை எனக்கு தந்த விவேகானந்தா கேந்திராவிற்கு கிடைத்த விருது எனக்கு கிடைத்ததைப் போல பெருமை. கன்னியாகுமரி செல்லும் போது விவேகானந்தா கேந்திரா வளாகம் சென்று பெருமாள் அருள் பெற்று வாருங்கள்.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை…

நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி.

28 கருத்துகள்:

 1. காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் அண்ணாச்சி..

  அட! விவேகானந்த கேந்த்ராவுக்கு காந்தி அமைதி விருதா! மகிழ்ச்சியான விஷயம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கீதா ஜி!.

   ஆமாம் 2015-ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. குட்மார்னிங்.

  இனிய அனுபவங்கள் என்று தெரிகிறது. உடன் இருந்த நண்பர் பாஸ்கரன் நிலை வருத்தத்தை அளித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

   இந்தப் பதிவில் சொன்ன பாஸ்கரன் - என்ன ஒரு கொடுமையான முடிவு... வருத்தம் தான் தந்தது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பத்மநாபன் ஜி சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார். இடையில் பிட்டு போட்டதை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 4. ஆஹா..... அருமை! வெண்பொங்கலுக்கு இப்படி ஒரு பெருமை இருக்கா !!!!

  நாங்களும் இதுவரை கேந்த்ராவுக்குள் போனதில்லை..... நேரா பகவதிதான்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் உள்ளே சென்றதில்லை. விவேகானந்தர் பாறை, கோவில், கடற்கரை என திரும்புவது தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. விவேகானந்தா கேந்திராவில் நீங்கள் சேர்ந்து சேவை செய்தது சூப்பர் அனுபவம். அதையும் உங்கள் நடையில் நகைச்சுவையுடன் சொன்னது ...ஹா ஹா அதுவும் பாருங்க நல்ல பொங்கல்...பிரார்த்தனை இதுக்கிடையில மனிஷா கொய்ராலாவும் எட்டிப் பார்த்துட்டாங்க பாருங்க!!! ஹா ஹா ஹா..

  உங்கள் அனுபவங்களில் வாழ்க்கைக்கான பாடங்களையும் கற்றிருப்பீங்க இல்லையா அண்ணாச்சி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. பாஸ்கரன் உண்மையாகவே ஊருக்குழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர். அவர் ஊரில் பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தவரை சில வருடங்களுக்கு முன்னர் சிலர் அவர் வீட்டருகிலேயே வெட்டிச் சாய்த்து விட்டனர் //

  ஹையோ என்ன ஒரு வேதனையான விஷயம். //பாஸ்கரன் உண்மையாகவே ஊருக்குழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர்.// அதான் நல்லா இருந்தா நல்லது செஞ்சா அதுவும் தலைவரா இருந்து செஞ்சா இப்படித்தான் போலும்...மனது வேதனை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாஸ்கரன் இழப்பு - வேதனை....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 8. //கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவிற்கு 'காந்தி அமைதி விருது' அதன் கிராமப்புற முன்னேற்றம் மற்றும் கல்விப் பணிகளுக்காக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது அதே விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் திருப்பதி தேவஸ்தானம் வெங்கடாசலபதி திருக்கோவில் அமைத்து கும்பாபிஷேகம் நடைபெற்றது.//

  இரண்டு நல்ல செய்திகளுக்கு வாழ்த்துக்கள்.
  கல்வி பணி தொடரட்டும்.

  //பாஸ்கரன் உண்மையாகவே ஊருக்குழைத்திடல் யோகம் என்று வாழ்ந்தவர். //
  ஊருக்கு உழைத்தால் தன் உயிரை இழக்க வேண்டுமா? கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. உங்களின் மகிழ்ச்சி எங்களுக்கும் மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 12. விவேகானந்த கேந்த்ரத்திற்கு விருது கிடைத்தது மகிழ்க்சி.

  பத்மநாபன் அவர்கள் அனுபவங்களை நகைச்சுவையுடன் சொல்லியதையும் ரசித்தோம்.

  நல்ல பயிற்சி வாழ்க்கைக்குத் தேவையான ஒன்று. 400 ரூபாய் கொடுத்து வாழ்க்கைக்கல்வியே கற்றுக் கொடுத்தது அருமையான அனுபவம்தானே.

  பாஸ்கரின் விஷயம் தான் வேதனை.
  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி...

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  விவேகானந்த கேந்திரத்துற்கு காந்தி அமைதி விருது கிடைத்தது மிக்க மகிழ்ச்சி.
  சகோதரர் பத்மநாபன் அவர்கள் நல்ல நகைச்சுவையுடன் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இடையிடையே வாய் விட்டு நகைக்கவும் வைத்தார்.

  அவர்தம் நண்பர் விஷயம் கண் கலங்க வைத்தத்து. கடைசியில் அந்த நானூறு ரூபாய்க்காக சென்று நல்லதோர் வாழ்க்கை அனுபவங்களை கற்று வந்த விவேகானந்த கேந்தரியத்தை கன்னியாகுமரி செல்லும் போது சென்று தரிசித்து வர வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 14. மிக நன்றாகச் சொல்லி இருக்கிறார். அருமையான எழுத்து. இம்மாதிரித் தொண்டர்களை அடையாளம் காண்பதே கடினம். அதிலும் ஒருவர் வெட்டிச் சாய்க்கப்பட்ட விஷயம் மனதை உறுத்துகிறது! :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....