செவ்வாய், 2 ஏப்ரல், 2019

சாப்பிட வாங்க – விதம் விதமாய் பப்பு ரொட்டை – சுதா த்வாரகநாதன்


மூன்று வித பப்பு ரொட்டை...

என் மாமியார் சொல்லிக் கொடுத்த தெல்லத் தொக்கு பற்றி இரண்டு வாரங்கள் முன்னர் பார்த்தோம். இந்த வாரமும் மாமியார் சொல்லிக் கொடுத்த ஒரு குறிப்பு பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது பப்பு ரொட்டை என்று அழைக்கப்படும் ஒரு உணவு வகை.

எங்களுக்குத் திருமணம் ஆகி ஐந்து மாதங்களுக்குப் பிறகு என் மாமியார் எங்களுடன் தில்லி வீட்டில் வந்து சில மாதங்கள் தங்கியிருந்தார். அப்போது விதம் விதமான டிஃபன் வகைகளைச் செய்து தந்து அசத்துவார். அதில் ஒன்று கொஞ்சம் வித்தியாசமானது. அதன் பெயர் தான் பப்பு ரொட்டை. தெலுங்கில் அடையை ரொட்டை என்றும், பருப்பை பப்பு என்றும் சொல்வோம். ஒரு நாள், என் மாமியார் என்னிடம் “பப்பு ரொட்டை செய்திருக்கிறாயா?” என்று கேட்டதற்கு “ஓ செய்திருக்கிறேனே, ஆனால் நாங்கள் ரொட்டை என்றுதான் சொல்வோம்“ என்றேன். அது தெரியும், இது வேறு என்று சொல்ல, சரி எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் எனக் கேட்டதற்கு அவர் சொல்லித் தந்த குறிப்பு தான் இந்த பப்பு ரொட்டை. சரி பப்பு ரொட்டை எப்படிச் செய்வது என்பதைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 1 ½ கிளாஸ் [200 கிராம்]
தேங்காய் – ஒரு பெரிய மூடி
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

பச்சரிசியை ½ அல்லது 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

அரை மூடி தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும்.



ஊற வைத்த அரிசியுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கிளாஸ் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, நன்கு நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, மெலிது மெலிதாக, நீர்க்கக் கரைத்த மாவில் தோசைகளாக வார்க்க வேண்டும். தோசையை திருப்பிப் போடக் கூடாது! மூடி வைத்தால் போதும். வார்க்கும்போதே நல்ல வாசனை வரும். 



அட இவ்வளவு தானா, இது என்ன பெரிய விஷயம்? நாங்க தோசையே செய்ததில்லையா என்ன என்று நினைத்து விட வேண்டாம்! இது ஆரம்பம் மட்டுமே! இனிமேல் தான் வேலையே தொடங்குகிறது! இந்த பப்பு ரொட்டை செய்வதற்கு நிறையவே பொறுமை வேண்டும். நீர்க்க இருப்பதாலும் மெலிது மெலிதாக வார்ப்பதாலும் நிறைய தோசைகள் வரும். நடுவில் தோசைகளை அப்படியே சுவைக்க ஆசை இருந்தால், உப்பு சரியாக இருக்கிறதா எனப் பார்க்கும் சாக்கில் யாருக்கும் தெரியாமல் சுவைத்துக் கொள்ளலாம்!

எல்லா மாவையும் மெல்லிய தோசைகளாக வார்த்து எடுத்துக் கொண்ட பிறகு அவற்றைச் சின்னச் சின்னதாக பிய்த்து ஒரு தாம்பாளம் அல்லது தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும். இப்போது செய்தது Bபேஸ் மட்டுமே – சேவை செய்வது போல இந்த Bபேஸ் வைத்து பல விதங்களில் பப்பு ரொட்டை செய்யலாம். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்!

எலுமிச்சம்பழம் சேர்த்த பப்பு ரொட்டை:

வாணலியில் எண்ணெய் வைத்து, அது காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம், கருவேப்பிலை போட்டு தாளித்து, பிய்த்து வைத்த தோசைத் துண்டுகளை ஒரு கிண்ணம்/தேவையான அளவு போட்டு மேல் உப்பு சேர்த்து நன்கு கலக்கி அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழம் பிழிந்து கலந்து வைத்தால் எலுமிச்சம்பழம் சேர்த்த பப்பு ரொட்டை தயார்.

கடுகு பச்சடி சேர்த்த பப்பு ரொட்டை:

கடுகு, சிறிதளவு தேங்காய், சிவப்பு மிளகாய் 2, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசல் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, வாணலியில் எண்ணெய் வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கருவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை விட்டு கொதித்தவுடன் அரைத்த விழுதைக் கலக்கி கொஞ்சம் கெட்டியானவுடன், தேவையான அளவு/ஒரு கிண்ணம் பிய்த்து வைத்த தோசைகளைச் சேர்த்தால் கடுகு பச்சடி சேர்த்த பப்பு ரொட்டை தயார். இதில் சிறிதளவு வெல்லமும் சேர்த்துக் கொள்ளலாம்!

இனிப்பு பப்பு ரொட்டை:

வெல்லப் பாகு வைத்து அதில் ஏலக்காய், தேங்காய் துருவல் சேர்த்து நெய் விட்டு அந்த கலவையில் சேர்த்து இனிப்பு பப்பு ரொட்டை செய்யலாம்!



இப்படி நமக்கு பிடித்த வகைகளில் கேரட், மட்டர், பச்சை மிளகாய் சேர்த்து செய்யலாம், தக்காளி சாதம் செய்வது போலவே தக்காளி பப்பு ரொட்டை செய்யலாம்! இப்படி நிறைய செய்ய முடியும். எனக்கு இந்த செய்முறையை என் மாமியார் சொல்லிக் கொடுத்த போது ஐந்து ஆறு மெல்லிய தோசைகள் செய்து காண்பித்து, மீதியிருந்த மாவில் மெல்லிய தோசைகளை வார்க்கும்படிச் சொல்லி விட்டு கீழே அமர்ந்து கொண்டார். வார்த்து வைத்த தோசைகளை சின்னச் சின்னதாய் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்த போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது – உங்களுக்கும் அந்த சந்தேகம் வந்திருக்கலாம்! “நாலைந்து தோசைகளை ஒன்றாக வைத்து கத்தியால் சின்னச் சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளலாமே?” என்ற சந்தேகம் தான் அது! மாமியாரிடம் கேட்ட போது, அப்படிச் செய்தால் ஒன்றுக்கொன்று சேர்ந்து கொண்டு களிபோல ஆகிவிடும் என்று சொன்னார்.

இதைப் படிக்கும்போது உங்களுக்குத் தோன்றலாம் – இதைச் செய்ய இவ்வளவு வேலை செய்ய வேண்டியிருக்கிறதே, இதை யார் செய்வார்கள் எனத் தோன்றலாம் – எனக்கும் அப்படித் தான் தோன்றியது. ஆனால் விதம் விதமாக செய்து சாப்பிட்ட போது ரொம்பவும் சுவையாகவே இருந்தது. அதன் பிறகு நான் இந்த பப்பு ரொட்டை செய்யவே இல்லை! இவ்வளவு வேலை செய்ய வேண்டுமே என்ற சோம்பல் தான் காரணம்! ஆனால் அந்த சுவையையும் மறக்கவே இல்லை. இந்த குறிப்புகளை என் தோழிகளுக்குச் சொன்னபோது அவர்கள் ஏகோபித்த குரலில் சொன்ன விஷயம் – “எங்களால செய்ய முடியாது – நீ ஒரு முறை செய்து நாங்கள் சுவைக்க எங்களுக்குக் கொடு!” என்பது தான்.

இந்தக் குறிப்பினை இங்கே பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் படம் எடுக்க வேண்டும் என்பதற்காகவும், பல வருடங்கள் இப்படி சோம்பல் பட்டுக்கொண்டே இருந்தால் சரியல்ல என்பதற்காகவும் மீண்டும் இந்த பப்பு ரொட்டை செய்தேன். முதல் முறையாக இந்த பப்பு ரொட்டை சாப்பிட்ட மகனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. [என்னையும் அழைத்து பப்பு ரொட்டை உண்ணத் தந்தார்கள் என்பதை இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன் – சுவையாக இருந்தது மூன்று விதமான பப்பு ரொட்டை. குறிப்பாக கடுகு பச்சடி சேர்த்த பப்பு ரொட்டை ரொம்பவும் பிடித்திருந்தது! – வெங்கட்] உங்களில் யாராவது இந்த பப்பு ரொட்டை செய்திருந்தால், இந்தக் குறிப்புகளைப் படித்து செய்யப் போகிறீர்கள் என்றால் உங்கள் பொறுமைக்கு ஒரு பூங்கொத்து!

விரைவில் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….

நட்புடன்

சுதா த்வாரகநாதன்
புது தில்லி.

46 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    முதலில் நீர் தோசை/தேங்காய் தோசை என்று அட பிய்த்துப் போட்டு செய்வது புதிது. நோட்டட். கடுகுப்பச்சடி செய்வதுண்டு. எபியில் கூட திந்த பதிவில் கொடுத்திருந்த நினைவு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய காலை வணக்கம் கீதா ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. என் கணினி கீ போர்ட் ரொம்பவே படுத்துகிறது நிறைய கீகள் லூசாக இருக்கிறது திங்க என்பது திந்த என்று வந்துவிட்டது. த அடித்தால் கூடவே ட வும் வருது ஹா ஹா ஹா.. அதுவும் நான் மிக வேகமாக அடிப்பதாலும் கீஸ் மாறுகிறது..

      கீதா

      நீக்கு
    3. கீ போர்ட் பிரச்சனைகள் - சில சமயம் தவறாக வருபவை கூட ஸ்வாரஸ்யமானது தான் இல்லையா! :) நீங்கள் சொல்ல வந்ததை புரிந்து கொண்டேன்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  2. ஆமாம் இந்த தோசைகளைச் சேர்த்துப் போட்டு வெட்டினாலோ களி போக ஆகும். மட்டுமல்ல எல்லாவற்றையும் சேர்த்து செர்வ் செஞ்சாலும் ஒன்றுக்கொன்று ஒட்டிக் கொள்ளும். இந்த தோசை நம் வீட்டில் பிறந்த வீட்டில் முன்பு அடிக்கடிச் செய்வாங்க.

    இதில் வெரைட்டி பப்பு ரொட்டை இப்போது தெரிந்து கொண்டேன். அடுத்த முறை செய்துட்டா போச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண தோசை கூட ஒன்றின் மீது ஒன்று வைக்கும்போது ஒட்டிக் கொள்ளுமே...

      நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. வெங்கட்ஜி கடுகுப்ப் பச்சசி ரொம்ப டேஸ்டியா இருக்கும். புளிக்காய்ச்சல் போல செய்து வைத்துக் கொள்ளலாம். சாதத்தில் கலந்து சாப்பிடவும் நல்லாருக்கும்.

    எபில திங்கவுல குறிப்புகள் இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடுகுப் பச்சடி இது வரை நான் செய்து பார்த்ததில்லை. செய்து பார்க்க நினைத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. குட்மார்னிங்.
    அடையை தெலுங்கில் ரொட்டை என்று சொல்வார்களா? புதுசு எனக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      புதிதாக ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள முடிந்தது எனக்கும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. //உப்பு சரியாக இருக்கிறதா எனப் பார்க்கும் சாக்கில் யாருக்கும் தெரியாமல் சுவைத்துக் கொள்ளலாம்!//

    ஹா... ஹா... ஹா... ரகசியத்தை எல்லாம் வெளியில் சொல்லலாமா? நோட் தி பாயிண்ட் நெல்லைத்தமிழன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பலரும் செய்வது தான் இது! சிலர் மட்டுமே விதிவிலக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. ஆனால் ப(ரு)ப்பு என்பதை பெயரில் மட்டும் சேர்த்து விட்டு பண்டத்தில் சேர்க்கவில்லையே.... இருங்கள் தொடர்ந்து படிக்கிறேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  7. சேவைக்கலவை போல இருக்கிறது என்றாலும் புதுவிதமாக இருக்கிறது. நான் சாதாரண தோசையை வைத்து இப்படி ஒன்று யோசித்து வைத்திருந்தேன். செய்ய நேரமில்லை. அதை நினைவு படுத்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாதாரண தோசையை சிறு துண்டுகளாக்கி அதில் மிளகாய்ப் பொடி தூக்கலாகப் போட்டு எண்ணை விட்டு பிசறி சாப்பிடுவதுண்டு! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. ஆமாம், இவ்வளவு வேலை செய்ய வேண்டுமென்றால் பாஸ் பின்வாங்கி விடுவார்... கொஞ்சம் செய்து வாரணாசி வரை வந்து கொடுத்துச் செல்ல முடியுமா?

    ஹா... ஹா... ஹா....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுக்குள்ளே வாரணாசி போய்ச் சேர்ந்தாச்சா? :)))))

      நீக்கு
    2. ஹாஹா... பாஸ் பின்வாங்கி விடுவார்! வாரணாசிக்கு தானே... கொண்டு வந்து தந்து விடுகிறேனே! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    3. முன்னாலேயே சொல்லி வைச்சால்தானே செய்து எடுத்து வந்து கொடுக்க சௌகரியமாய் இருக்கும்!

      நீக்கு
    4. இன்னும் புறப்படவில்லை! அவர் வரும்போது கொண்டு தரச் சொல்கிறார்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    5. சென்னையில் சந்திக்க முடியவில்லையே - அதனால் வாரணாசியில் சந்திக்கலாம்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  9. நீர் தோசை என நினைத்தேன். இந்தப் பெயரும் புதுசு. செய்முறையும் புதுசு. ரொம்பப் பொறுமைசாலிகள் தான்! :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... உங்களுக்கே புதியதா இந்த பப்பு ரொட்டை.

      ஆமாம் ரொம்பவே பொறுமை தேவை. அதிக வேலை என்பதால் தான் இப்போது யாரும் செய்வதில்லை போலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  11. படமே ஆசையை தூண்டுகிறது நன்றி சுதா த்வாரகநாதன் அவர்களுக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  12. பப்பு ரொட்டை - கேள்விப்பட்டதே இல்லையே...இரண்டாவது படம், மைதா மாவு தோசையை பிய்த்து தட்டில் போட்டுக்கொண்டமாதிரி இருக்கு. பிறகு படித்துப்பார்க்கிறேன்.

    இது யாருடைய உணவு (எந்தப் பகுதியின்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் சேலம் பகுதியைச் சேர்ந்தவர்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  13. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  14. சுவையான குறிப்பு. வித்தியாசமாகவும் இருக்கு. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு
  15. நல்லதொரு குறிப்பு தந்திருக்கிறீர்கள்!! பெயரும் வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் பருப்பு இதில் சேர்க‌கவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  16. சுவையான தோசை.
    பப்பு ரொட்டை.
    பொறுமை கடை பிடிக்க வேண்டிய ரொட்டை.

    பாராட்டுக்கள் சுதாஅவர்களுக்கு. செய்து காண்பித்து உங்களுக்கும் கொடுத்தற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  17. super sudha. Every time when I read your kitchen postings it is a malarum ninaivugal for me. Reminding me our old days and thinking of your mamiyar fondly. Thank you dear

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பழைய ஆட்கள் வித விதமான ருசியில் சமையல் செய்திருக்கிறார்கள்.பப்பு ரொட்டை! சும்மா சொல்லிப் பார்த்தேன். (கண்ணை செக் செய்யணும். பப்பு சொட்டைன்னு படிச்சிட்டேன்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... நமக்கு எப்பவும் சொட்டை தான் நினைவு - தலை அப்படி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    சுவையான உணவாக உள்ளது.
    சேவை பாணியில், ஆனால் தோசைகளாக வார்த்து பொறுமையாக செய்ய வேண்டிய வேலை. கலந்த தசைகளை படிக்கும் போது ஒவ்வொன்றின் சுவையையும் நாவு உணர்ந்து கொள்கிறது. நினைக்கும் பொழுதிலே கடுகு புளிசேரி மணம் நாசியை துழைக்கிறது. பகிர்ந்த சகோதரி சுதா த்வாரகநாதன் அவர்களுக்கு மிக்க நன்றிகள். தங்களின் பகிர்விற்கும் நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  20. ஒரு விதத்தில் பிரெட் உப்புமாச் செய்வதைப்போலவும் இருக்கு... நெடுகவும் தோசையாக சாப்பிடாமல் இப்படி விதம் விதமாகச் செய்தால் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....