திங்கள், 1 ஏப்ரல், 2019

பதிவர் சந்திப்பும் கல்லூரியும் – நினைவுகளைத் தேடி – நான்கு



சமீபத்தில் எனது பிறந்த/வளர்ந்த ஊரான நெய்வேலி நகருக்கு ஒரு நாள் பயணமாகச் சென்று வந்ததைப் பற்றி இதற்கு முன்னர் எழுதிய நினைவுகளைத் தேடி பதிவுகளின் சுட்டி கீழே.

நினைவுகளைத் தேடி – ஒன்று இரண்டு மூன்று





நான் படித்த பள்ளி மூடப்பட்டதை பார்த்த பிறகு அங்கே இருந்து புறப்பட்டு நான் படித்த கல்லூரிக்குச் சென்று விரிவுரையாளர்/பேராசியர் யாரும் இருந்தால் பார்க்கலாம் என நினைத்து அங்கே பயணித்தேன். வழியில் ஆஹா நம் பதிவுலக நண்பர்கள் பாரதிக்குமார் மற்றும் நிலாமகள் வீடு இங்கே அருகே தானே இருக்கிறது என்பது நினைவுக்கு வந்தது. நான் நெய்வேலி வருகிறேன் என்பதை அவர்களுக்கு அறிவிக்கவில்லையே என நினைத்தாலும், அலைபேசி மூலம் அழைத்து அங்கே வந்திருப்பதைச் சொல்வோம் என அழைத்தேன். நண்பர் பாரதிக்குமார் அவர்கள் அலுவலகத்தில் இருக்கவே, வீட்டிற்குச் செல்லுங்கள் எனச் சொன்னார்.  அவர்களது வீட்டிற்குச் சென்று சகோ நிலாமகள் அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தேன். சுவையான பழரசம் தந்தார். மதிய நேரம் என்பதால் சாப்பிட்டுப் போகலாம் என பாசத்துடன் சொல்ல, வேறு நண்பர் வீட்டில் ஏற்கனவே உணவு உண்பது முடிவாகிவிட்டது என்பதால் அன்புடன் மறுத்து அங்கிருந்து புறப்பட்டேன்.



நாங்கள் படித்த போது எங்களது கல்லூரி, நாங்கள் படித்த உயர்நிலைப் பள்ளியின் ஒரு பகுதியில் இயங்கியது. நாங்கள் தான் கல்லூரியின் இரண்டாவது செட்.  நாங்கள் கல்லூரி முடித்த சில வருடங்களுக்குப் பிறகு தான் கல்லூரிக்கான தனி கட்டிடம் கட்டி முடித்தார்கள். அதன் பிறகு கல்லூரி புதிய கட்டிடத்தில் இயங்குகிறது. புதிய கட்டிடத்திற்குச் சென்றபோது வாசலில் இருந்த காவலாளி விசாரித்தார் – நான் சென்ற அன்று சனிக்கிழமை என்பதால் கல்லூரிக்கு விடுமுறை என்றும் ஒரே ஒரு விரிவுரையாளர் மட்டுமே இருக்கிறார் என்றும் சொன்னார். எந்த விரிவுரையாளர் எனக் கேட்க திரு விவேகானந்தன் அவர்கள் என எங்களுக்கு பாடம் எடுத்தவரின் பெயரைச் சொல்ல அவரை சந்திக்கலாமா எனக் கேட்டு உள்ளே சென்றேன். சனிக்கிழமைகளில் அரசு பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய வகுப்புகள் சனிக்கிழமைகளில் எடுப்பதாகச் சொன்னார். கல்லூரி இப்படி நல்ல பல விஷயங்களைச் செய்து வருகிறது என்று அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.




எங்களுக்கு விரிவுரையாளராக இருந்த திரு வி.டி. சந்திரசேகர் அவர்கள் தான் இப்போதைய கல்லூரி முதல்வர். அவரை சந்திக்க முடியுமா எனக் கேட்டபோது இன்றைக்கு ஏதோ நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருக்கிறார், மாலை தான் வருவார் என்று சொல்லி அவரது அலைபேசி எண்ணைக் கொடுத்தார். அவரிடம் பேசியதில் மாலை நெய்வேலி திரும்பிவிடுவேன் என்றும் வந்ததும் அழைக்கிறேன் என்றும் சொல்லி இருந்தார். மாலை அவர் வீட்டுக்கு வந்ததும் அழைக்க, வீட்டுக்குச் சென்று அவரையும் குடும்பத்தினரையும் சந்தித்து வந்தேன். வெங்கட் என்று சொன்னதும் “பென்சில் மாதிரி” இருந்த என் உருவம் தான் அவருக்கு நினைவுக்கு வரும் என்று சொல்ல, அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம். பென்சில் கூட கொஞ்சம் குண்டாக இருந்திருக்கும்! நம்ம உடம்பு வாகு அப்படி! கல்யாணம் ஆனபிறகு பழைய புகைப்படங்களைப் பார்த்த இல்லத்தரசி கூட “பென்சில் மாதிரி இருந்திருக்கீங்க!” என்று சொன்னாரே!



நெய்வேலி சென்று, நான் சுற்றித் திரிந்த மெயின் பஜார், செவ்வாய் சந்தை, நீண்ட நெடும் வீதிகள் என பல இடங்களில் பயணித்த போது மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அங்கே தான் என் வாழ்க்கை! அதன் பிறகுதான் தில்லி! என்னதான் நெய்வேலியை விட தில்லியில் அதிக வருடங்கள் இருந்தாலும், நெய்வேலி நினைவுகளை மறக்க முடிவதில்லை. ஒவ்வொரு இடமும் ஏதோ ஒரு நினைவை நமக்குத் தந்த இடமாக இருந்திருக்கிறது. இப்படி ஒவ்வொரு இடமாகச் சுற்றி, நண்பர் வீட்டில் மதிய உணவை முடித்துக் கொண்டு மாலை நேரம் கல்லூரித் தோழி வீட்டிற்குச் சென்று சேர்ந்தேன். அங்கே வேறு மூன்று தோழர்களும் வந்து சேர நீண்ட நேரம் கல்லூரி நிகழ்வுகளையும் மற்ற அனுபவங்களையும் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. எத்தனை எத்தனை விஷயங்கள் பேசுவதற்கு!



கல்லூரித் தோழி தனது வீட்டில் காய்த்த எலுமிச்சையை பறித்துக் கொடுத்து அனுப்பினார். நெய்வேலியில் நாங்கள் இருந்த வரை இப்படித்தான் வீட்டிற்கு வருபவர்களுக்கு எல்லாம் மாம்பழம், எலுமிச்சை ஏதாவது கொடுத்து அனுப்புவோம் என்பது நினைவுக்கு வந்தது. மண்வளம் நிறைந்த பூமி என்பதால் எதை வைத்தாலும் காய்க்கும்! தென்னை, மா, பலா, வாழை, எலுமிச்சை, நெல்லி, சப்போட்டா, முந்திரி என ஒவ்வொரு வீட்டிலும் பல மரங்கள் இருக்கும். ஒரு சமயத்தில் எங்கள் வீட்டு தோட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் இருந்தன – அதிலும் விதம் விதமான வாழை! முருங்கைக் காய்கள் நீளநீளமாகக் காய்க்கும். முருங்கையில் எத்தனை விதமாகச் சமைக்க முடியுமோ அத்தனையும் செய்து விடுவார்கள். வாராந்திர சந்தையில் வாங்கிய காய்கறி தீர்ந்துவிட்டதே என்ற கவலையே இல்லை. தோட்டத்திலிருந்து ஏதாவது பறித்து சமைத்து விடலாம் அப்போது!



இப்படியே காலையிலிருந்து மாலை வரை, சுற்றிச் சுற்றி வந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. நெய்வேலியை விட்டு வரவே மனதில்லை! இன்னுமொரு நண்பர் வீட்டிற்கும் சென்று அங்கிருந்து புறப்பட்ட போது இரவு எட்டரை. வண்டி கொடுத்த நண்பர் வீட்டிற்குச் சென்று இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு பேருந்து நிலையம் வரை அவரே கொண்டு விட, மதுரை வரை செல்லும் விரைவுப் பேருந்து எனக்காகக் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டு, அன்றைய நினைவுகளை அசை போட்டபடியே பயணித்துக் கொண்டிருந்தேன். சுற்றி நடக்கும் விஷயங்கள் எதையுமே கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை! உறக்கமும் வரவில்லை. அன்றைய நிகழ்வுகளையும், சந்தித்தவர்களுடனான அனுபவங்களையும், நெய்வேலி நினைவுகளையும் நினைத்தபடியே பயணித்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் வந்து சேர்ந்த போது இரவு 01.30 மணி! அங்கிருந்து திருவரங்கம் வந்து வீடு சேர்ந்த போது இரவு 02.15 மணி! ஆனாலும் தூக்கம் மட்டும் வரவில்லை! நினைவுகளோடே தூங்கியது எப்போது என்பதை அறியவில்லை!



கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு நினைவுகளைத் தேடி நெய்வேலிக்கு சென்று வந்ததில் மனதில் மகிழ்ச்சி. மீண்டும் எப்போது அங்கே சென்று வர முடியும் என்பதை யார் அறிவார்! நினைவுகள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி



பின்குறிப்பு: இப்பதிவில் வெளியிட்டு இருக்கும் படங்கள் அனைத்தும் நெய்வேலி நகரம் முகநூல் குழுமத்திலிருந்து.  குழுமத்தினருக்கு மனம் நிறைந்த நன்றி.

36 கருத்துகள்:

  1. குட்மார்னிங்.

    தமிழகத்தில் நீர் நிறைந்து இருக்கும் நீர்நிலைகளைக் கண்டாலே ஒரு சந்தோஷம்.​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      நீர் நிலைகள் மகிழ்ச்சி தருபவை. நெய்வேலியில் திறந்த வெளி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் நீர் இப்படி சேமிக்கப்படுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பள்ளி ஆசிரியர்களைதான் சந்திக்க முடியவில்லை, கல்லூரியிலாவது ஓரளவுக்கு எண்ணம் நிறைவேறியது நிறைவு. நண்பர்கள் சிலர் இன்னமும் அங்கே இருக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யம். கொடுத்து வைத்தவர்கள்தான். ஆனால் அவர்கள் நம்மைப் பற்றி அப்படி நினைப்பார்கள்! இ அ ப!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - கல்லூரி ஆசிரியர்களைச் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி எனக்கும்.

      இ.அ.ப. - உண்மை. இன்னும் சில நண்பர்கள் அங்கே இருக்கிறார்கள். நெய்வேலி நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். தோழியின் கணவர் அங்கே பணிபுரிகிறார். வேறு சில நண்பர்களும் தோழிகளும் இங்கே இருந்தாலும் தொடர்பில் இல்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. நீங்கள் சொல்வது போல சில வருடங்களே வாழ்ந்திருந்தாலும் இளமைக்காலம் என்பதால் மனதில் ஆழப்பதிந்து போகிறந்து இந்த நாட்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் அவை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. இளவயது நினைவுகளை சொல்லிச் சென்றது சுவாரஸ்யமாக இருந்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. உங்கள் 1900 வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. துரை செல்வராஜூ அவர்களின் 1300-ஆவது பதிவு எனப் பார்த்தபோது என் பதிவு எத்தனையாவது எனப் பார்க்கத் தெரிந்தது 1900-மாவது பதிவு என! :)

      தங்களது மீள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. நினைவுகளை மீட்டெடுத்துப் பார்ப்பதிலும், இளமைக்காலத் தோழர்களையும் ஆசிரியர்களையும் சந்திப்பது என்பது அலாதி மகிழ்ச்சிதான்
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனிய நினைவுகளை மீட்டெடுப்பது ஒரு சுகமான அனுபவம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. 1900 ஆவது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அருமையான படங்களுடன் கூடிய நெய்வேலி நினைவுகள் இனிமையானவையாகவே இருப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து பயணியுங்கள். கூட வரோம். இனிய நினைவுகள் நிறைந்திருந்தாலும் உறக்கம் வராது. எங்க பையரும் கொத்தவரை போல் இருந்தார். இப்போது!!!!!!!!!!! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொத்தவரை! :))) இளமையில் இப்படி இருந்தவர்கள் பலர் இப்போது நல்ல எடையுடன் இருக்கிறார்கள். சிலர் இன்னமும் அப்படியே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. இளமைக்காலத்தில் வளர்ந்த இடம் - தனியகச் சென்றது நல்லதுதான். உங்களுக்குள்ள உணர்வு குடும்பத்தினருக்கும் கிட்டும் எனச் சொல்ல முடியாது. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்குள்ள உணர்வு குடும்பத்தினருக்கும் இருக்க வாய்ப்பில்லை! அவரவர்களுக்கு அவரவர் ஊர் தான் பிடித்தமானது! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது, பலமுறை பேருந்தில் நெய்வேலியைக் கடந்து சென்றிருக்கிறேன். அது இத்தனை அழகான ஊர் என்பது தெரியாமல்போனது.

    அழகழகான புகைப்படங்கள் பார்த்து மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான தான் ஊர் நண்பரே....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அறிவிலிநம்பி.

      நீக்கு
  11. 1900 வது பதிவு. ஒன்னு இரண்டு எழுதறத்திற்கே கஷ்டமாக இருக்கிறது, வாழ்த்துகள். போட்டோ மிகவும் அருமை. object, framing, contrast என்று எல்லா விதத்திலும் சூப்பர். விரைவில் ரகு ராய் போன்று சிறப்பாக வருவீர்கள். மகிழ்ச்சி.

    வாரணாசி போட்டோக்கள் அவ்வளவாக சிறப்பாக அமையவில்லை. ஒரு வேளை நகர்ந்துகொண்டே இருக்கும் படகினால் ஆக இருக்கலாம்.
    Jayakumar​​

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பதிவில் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் நான் எடுத்தது அல்ல என பதிவில் பின் குறிப்பாகச் சொல்லி இருக்கிறேன். அதை நீங்கள் பார்க்கவில்லை எனத் தெரிகிறது....

      வாரணாசி படங்கள் - அவ்வளவு சிறப்பாக இல்லை என்பது உண்மை. தெரிந்த அளவு மட்டுமே எடுத்திருக்கிறேன். ரகுராய் பாவம். அவருடன் என்னைப் போன்ற கத்துக்குட்டியை ஒப்பீடு செய்ய வேண்டாமே.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. லேட் வணக்கம் வெங்கட்ஜி!

    நினைவுகள் எப்போதுமே அருமைதான்..கல்லூரியில் ஒருவரையேனும் சந்தித்து அப்புறம் பிரின்ஸிபலையும் வீட்டில் சென்று சந்திக்க முடிந்த விஷயம் மகிழ்வானது இல்லையா. அத்தனை தூரம் போய்விட்டு சந்திக்க முடியாமல் போனது என்றால் கஷ்டம்தானே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா ஜி! இன்றைக்கு வேலைகள் போல!

      உண்மை - சந்திக்க முடியாமல் போனால் வருத்தம் தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  13. இளமைக்கால நினைவலைகள் மிக அருமை.
    அவை தந்த ஊக்கம் மீண்டும் போகும் வரை இருக்கும்.
    1900 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் முகநூல் குழுவிலிருந்து என்பதை பின் குறிப்பில் எழுதி இருக்கிறேன் மா.... நெய்வேலியில் நான் எடுத்த படங்கள் சில மட்டுமே. அதுவும் அலைபேசியில் எடுத்த படங்கள். அதை முந்தைய பகுதிகளில் சேர்த்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  14. நெய்வேலி வீடு பள்ளி என்று பதிவில்போட்டோ மூலம் தெரியப்படுத்தி இருக்கலாமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பகுதி ஒன்றில் படங்கள் வெளியிட்டு இருக்கிறேன். நீங்கள் பார்க்க விடுபட்டிருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  15. சூப்பர்! 1900 பதிவுகள். அனைத்து பதிவுகளும் ஏதாவது ஒரு தகவலை கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  16. காசு கொடுத்து வாங்கி பரிசளிப்பதைவிட நம் வீட்டில் விளைஞ்சது நாமளே செஞ்ச கைவினைப்பொருட்களை கொடுப்பது பெரிய சந்தோசத்தை தரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  17. அழகான ஊர். சொர்க்கமே என்றாலும் நம்மூர் போல வருமா என்றபாட்டுதான் ஞாபகம் வரும். ஊருக்கு போனால் இங்கு வர்வே மனம் வராது.
    அழகான படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

      நீக்கு
  18. முதலில் 1900 மாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    அழகான ஒரு நினைவலைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....