புதன், 10 ஏப்ரல், 2019

சக்கைப் பழமும் பின்னே ஞானும் – பகுதி ஒன்று - பத்மநாபன்…


வெங்கட் "நினைவுகளைத் தேடி" நெய்வேலி போனதும் எனக்கு நெய்வேலி பக்கத்தில் உள்ள பண்ருட்டியின் பலாப்பழ வாசனையும் கூடவே வந்தது. பலாப்பழத்தை நாங்கள் சக்கைப்பழம் என்றே கூறுவோம். இந்த சக்கைப் பழத்தை மட்டும் ரகசியமாக வாங்கி வீட்டுல வைக்க முடியாது. அதன் வாசனை ஊருக்கே காட்டி கொடுத்து விடும். இந்த சக்கைக் கொட்டையை வைத்து அவியல் செய்வார்கள்.  அருமையாக இருக்கும். நிறைய பேருக்கு இந்த சக்கைக் கொட்டையை அனலில் சுட்டு சாப்பிடவும் பிடிக்கும். சக்கைக்கொட்டை சாப்பிட்டவன் மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் வச்சிருந்தா தேசத்திற்கும் நல்லது. பக்கத்தில் இருப்பவன் சுவாசத்திற்கும் நல்லது. அவ்வளவுதான்!
 
இந்தப் பலாவின் பெயரில் ஊர்களும் உண்டு. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி போகும் வழியில் நாங்குநேரி பக்கம் பலாக்கொட்டைப்பாறை என்கிற சிறிய ஊர். தூரத்தில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய ஒற்றைப் பாறை, ஒரு பலாக்கொட்டையை கொஞ்சம் சாய்வாக மண்ணில் ஊன்றி வைத்தது போல இருக்கும். அந்த பாறையை விட்டு வைத்திருக்கிறார்களா, இல்லை வெட்டி சாப்பிட்டுவிட்டார்களா என அடுத்த முறை செல்லும்போது பார்க்க வேண்டும். என்ன செய்ய? மலைமுழுங்கி மகாதேவன்கள் பெருகி விட்டார்களே!

இதேபோல நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் போகும் மார்க்கத்தில் ஒரு இடத்தின் பெயர் இடிச்சக்கைபலாமூடு. அவ்வப்போது திருவனந்தபுரம் போகும் போது இந்த ஊரைத் தாண்டும்போதெல்லாம் எங்க அம்மா எப்போதோ செய்து பரிமாறிய இடிச்சக்கை தோரனும் அதை சாப்பிட்டபின் என் கையில் வீசும் இளம் மசாலா மணமும் அம்மாவின் நினைவும் மனசை வருடிச் செல்லும். இப்படி சக்கைப்பழம் என்றதும் பல நினைவுகள். கூடவே எட்டாம் வகுப்பில் எங்களால் சக்கப்பழம் என்று அன்புடன் அழைக்கப்பட்டு அதற்காக உடற் பயிற்சி ஆசிரியர் ஆசீர்வாதராஜ் சாரிடம் வசமாய் அடிவாங்கிக் கொடுத்த வசந்தகுமாரியும் நினைவுக்கு வருவாள். அடிவாங்கிய கூட்டத்தில் நானும் இருந்ததை அதே பள்ளியில் ஆசிரியராக இருந்த எனது தந்தையிடம் போட்டுக் கொடுக்காத ஆசீர்வாதராஜ் சாருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

ஒருமுறை நல்ல சக்கைப்பழ சீஸன். எனது பெரிய அக்காவிற்கு அப்போது திருமணம் முடிந்து ஒருசில மாதங்களே ஆகி இருந்தது.   எங்க அப்பாவிற்கு பள்ளி செல்லும் வழியில் உள்ள ஒரு பலா மரத்தில் நல்ல செழுமையான சக்கைப்பழங்களைப் பார்த்ததும் மகள் ஞாபகம் வந்து விட்டது. வீடு வந்ததும் என்னை கூப்பிட்டு, "எலேய்! இந்த சனிக்கிழமை உனக்கு ஸ்கூல் லீவுதானே. ஒண்ணு பண்ணு. நல்ல வருக்கச்சக்கை ஒண்ணு வாங்கிக்கோ. திருநெல்வேலி போய் அக்கா வீட்டுல கொடுத்துக்கிட்டு அத்தானையெல்லாம் விசாரிச்சிக்கிட்டு வா"ன்னு சொல்லி சக்கப்பழம் வாங்க ஒரு இருபது ரூபாயை கையில கொடுத்தார். எனக்கோ மனசுக்குள்ள ஒரு கணக்கு ஓடுது.

சக்கைப்பழம் ஒரு பதினைஞ்சு ரூபாய். மீதி அஞ்சு ரூபாய் நம்ம கணக்கு.  கடையிலே போய் சக்கப்பழம் வாங்கலாம்னா அவன் வகைக்கு உதவாத கூழஞ்சக்கையை வச்சுருப்பான். இல்லேன்னா கட்சிக்காரன் போட்ட ரோடு மாதிரி குண்டும் குழியுமான சக்கைப்பழத்தை வச்சுருப்பான். உரிச்சா சுளை ஒண்ணும் இருக்காது. வெறும் பூஞ்சுதான் இருக்கும். அதெல்லாம் சரிப்பட்டு வராது. அப்படியே ஒரு சைக்கிள வாடகைக்கு எடுத்துக்கிட்டு அப்படியே ஆலங்கோட்டைப் பக்கமா வண்டியை விட்டேன். அங்க தான் பள்ளி நண்பன் சசி இருந்தான். அவனிடம் விஷயத்தைச் சொன்னதும் அவன் தன் வீட்டில் இருந்த பலா மரத்தின் புராணத்தை பாடி "நல்ல ஒண்ணாம் நம்பர் வருக்கச்சக்கை, பாத்துக்க. ஆனா இப்பத்தான் முக்கால் விளைச்சல் ஆயிருக்கு. வா, ஒண்ணு பண்ணுவோம். பக்கத்தில எல்லாம் நம்ம சொந்தக்காரங்களோட விளைகளில் சக்கை விளைஞ்சு கிடக்கும். எந்த சக்கை தோதுப்படுதோ அதைப்புடிச்சுருவோம்" ன்னு சொல்லி இரண்டு பேரும் இரண்டு மூணு விளை விளையா ஏறி இறங்கி கடைசியில வாகா நல்ல நீள் உருண்டையா நல்ல விளைஞ்ச ஒரு சக்கை கண்ணுல தட்டுப்பட அதையே பேசி முடிச்சு பின்னால் சைக்கிள் கேரியரில் வச்சுக் கட்டி வீடு வந்து சேர்ந்தோம்.

இனிமே அதை திருநெல்வேலி கொண்டு போய்ச் சேர்க்கணும். சரியான அளவுக்கு ஒரு சணல்சாக்கு எடுத்து அதுக்குள்ள அந்த சக்கப்பழத்தை வச்சு பக்குவமா கட்டியாச்சு. நாளைக்கு காலையில பஸ்ஸை பிடிக்கணும். எங்க அப்பா வேற க்ளாஸ் எடுக்காரு. "எலேய்! அக்கா வீட்டுக்கு வழி தெரியும்லா. அந்த வாய்க்கால்பாலம் பஸ் ஸ்டாண்ட்டில நிறுத்துவான். இறங்கிக்கோ. ரோட்டக் கிராஸ் பண்ணி..." அப்படின்னு இப்படின்னு லெக்சர் போய்க்கிட்டு இருக்கு. நல்ல தாலாட்டுப் பாடின மாதிரி இருந்தது. அப்படியே உறங்கி விட்டேன். என்னடா இது! ஒரு சக்கப்பழத்தை வாங்கி சகோதரி வீட்டில் கொடுப்பதற்க்கு கூழஞ்சக்கைச் சுளையை கொட்டையோடு முழுங்கின மாதிரி இவ்வளவு பெரிய கதையா. பின்னே, கொண்டு போன வழியில் எனக்கும் ஒரு கதை கிடைச்சுல்லா.

அடுத்தநாள் காலையில் திருநெல்வேலி பஸ்ஸுல அவ்வளவு கூட்டமில்லை. அதுதான் சிக்கலே. பஸ்ஸுல ஒத்த ஸீட்டு மட்டுமே இருந்ததுன்னா ஏதோ இந்திரன் ஸீட்டே கிடைச்ச மாதிரி சந்தோஷமாகி பாய்ஞ்சு போய் உட்காருவான். அது கிழிஞ்சு தொங்கின ஸீட்டா இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஆனா நிறைய இருக்கைகள் காலியாக இருந்தா சிக்கல்தான். முதல்ல பஸ்ஸுக்கு நடுவுல இரண்டு பேர் ஸீட்டுல சன்னலோர ஸீட்டாப் பார்த்து உட்காருவான். அப்புறம் இருப்பு கொள்ளாது.  இந்த ஸீட்டை விட பின்ஸீட் நல்லா இருக்குமோ. அப்படியே எழுந்து அங்க போய் இருப்பான். அதுக்குள்ள இவன் முதல்ல இருந்த ஸீட்டில ஒரு அம்மாவும் சின்ன பையனும் வந்து உட்கார்ந்து விடுவார்கள். அந்த அம்மா கையில ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து அந்தப் பையன் கையில கொடுத்து, "ஏலே, மோந்து பாத்துக்கிட்டே வா. அப்பதான் வாந்தி வராது" ன்னு சொல்லும். அடடா! இந்த ஸீட்டு சரிப்பட்டு வராதுடோய்ன்னு வேற நல்ல ஸீட்டாத் தேடி சுத்திமுத்திப் பார்த்தா கிட்டத்தட்ட எல்லா ஸீட்டும் ஃபுல்லாகி கடைசி வரிசை ஸீட்டுதான் காலியாக இருக்கும். இந்த வாந்திக்கார பயபுள்ள ஸீட்டுக்கு பின்னால இருப்பதை விட கடைசி ஸீட்டே கொள்ளாம்ன்னுகிட்டு அங்க போய் இடத்தப் புடிச்சு கடைசி வரைக்கும் தூக்கி தூக்கி போட்ட பயணம்தான் மிஞ்சும்.

அன்னைக்கு நம்ம கதையும் அப்படித்தான் ஆகியிருக்கும். ஆனா சக்கைப்பழம் காப்பாத்தி விட்டது. பின்னே! யாரு சக்கைப்பழத்தை தூக்கிக்கிட்டு ஸீட்டு ஸீட்டா மாறிக்கிட்டு இருக்கது. நிறைய ஸீட்டு காலியா கிடக்கு. நானும் தோளில சக்கப்பழச்சாக்க வச்சுக்கிட்டே ஒரு சர்வே எடுத்து ஒரு ஸீட்டப் புடிச்சு காலுக்கு கீழே சக்கைப்பழச் சாக்கை வச்சாச்சு. இந்தக் கண்டக்டர் வந்தா சக்கைக்கு லக்கேஜ் சார்ஜ் போடுவாரோ? சீட்டுக்கு அடியில கொஞ்சம் உள்ள தள்ளி விடுவோம். கண்டக்டர் கண்டுக்கிடல்லை. பைசா மிச்சம்தான். காலைவேளையில் வெயில் ஏறுவதற்கு முன்னால் நாகர்கோவில் - திருநெல்வேலி பஸ்ஸில் ஜன்னலோர இருக்கையில் பயணிப்பது சுகமான விஷயம். கற்பனை சிறகடிக்கும். அந்த இரண்டு மணி நேர பயணத்தில் சிலசமயம் ராஜராஜ சோழனாக ஆகியிருக்கிறேன். நல்ல நேர்மையான அரசியல்வாதியாக ஆகியிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கிறேன். ஊரெங்கும் நிலபுலன்களுடன் பெரும் பண்ணையாராக ஆகியிருக்கிறேன். இப்படி எனக்கு மனசுக்கு பிடித்த பல அவதாரங்கள் இந்த ஜன்னலோர இருக்கையில் கிடைக்கும். இப்பொழுதும் அந்த காலைநேர பஸ் பயணம் கற்பனையை சிறகடிக்க வைக்கும் பயணம்தான்.

திருநெல்வேலியில் இறங்கிய பின்னர் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்! சரியா!

நட்புடன்

பத்மநாபன்
புது தில்லி

34 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி அண்ட் அண்ணாச்சி

    ஆஹா இன்று அண்ணாச்சியின் பதிவு!

    அது சரி சக்கை நாரோவில்லயும் ஃபேமஸ்தானே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதாஜி!

      சக்கைப்பழம் வாசனை வந்தது இல்லையா! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சக்கைக்கொட்டை சாப்பிட்டவன் மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் வச்சிருந்தா தேசத்திற்கும் நல்லது. பக்கத்தில் இருப்பவன் சுவாசத்திற்கும் நல்லது. அவ்வளவுதான்!//

    ஹையோ சிரிச்சு முடிலப்பா....

    அது போல மலைமுழுங்கி மஹாதேவன்கள்// ஹா ஹா ஹாஹ் ஆ ஹா ஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... சில கேரக்டர்கள் எங்கள் அலுவலகத்தில் உண்டு - அவர்களுக்கு பெயர் வைப்பதில் நம்ம அண்ணாச்சி கெட்டிக் காரர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  3. வருக்கன், கூழன் ஆஹா எத்தனை நாளாச்சு முழு சக்கை வீட்டுல உரிச்சு. எங்க வீட்டுலயும் வருக்கன் தான் சாய்ஸ். கூழன் சக்கைய சக்கை வரட்டிக்கு போட்டுருவாங்க.

    இடி சக்கை தோரன் இப்பவும் செய்யறம்ல! இங்க பங்களூர்ல கூட சந்தைல கிடைக்குது. இடி சக்கை.

    திருனெல்வேலி ரூட் ஹையோ நானும் எத்தனை தடவை பிரயாணம் அதுவும் பல எக்ஸாம் எழுதறதுக்கும். இப்படித்தான் நான் எந்த எக்ஸாம் எழுதப் போனேனோ அந்த எக்ஸாம்ல பாஸாகி வேலைக்குச் சேர்ந்து மிடுக்கான நேர்மையான ஆஃபீஸரா இருக்கறாப்ல கனவு கண்டுக்கிட்டே... ஹா ஹா

    அது போல திருவனந்தபுரம் போயி எழுதின இந்தியன் எக்கனாமிஸ் செர்வீஸ்ல பாஸாகி (பாசும் ஆகிட்டேன்!!) ஏதோ ப்ளானிங்க் கமிஷன்ல எல்லாம் போயி இந்த நாட்டையே வளப்படுத்தறா மாதி நான் தான் திட்டம் போடறாப்ல ல்லாம் ஹிஹிஹிஹி...அது போல ஸ்டாஃப் செலக்ஷ்ன்ல பரீட்சைக்கு தின்னவேலி...கிடைச்சுது ஆனா அதுவும் ஜாயின் பண்ணலை..பஸ்ஸோடு போச்சு கனவு எல்லாம் ஹா ஹாஹ் ஆ

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக்கன், கூழன்.... ஆஹா பதிவு உங்கள் நாரோயில் நினைவுகளைத் தூண்டி விட்டது போலும்.

      கனவுகள் - சில மகிழ்ச்சி தருபவை தான்.

      தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில் சேர முடியாமல் போனது - ம்ம்ம்ம்... சில விஷயங்கள் நம் கையில் இல்லை. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று கடக்க வேண்டியிருக்கிறது இல்லையா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  4. அருமை. தொடரவும்.

    /பலாக்கொட்டைப்பாறை/

    இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  5. பலாப்பழம் என்னவானது முடிவு காண காத்திருக்கிறேன். பத்மநாபன் ஸார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாளை முடிவு தெரிந்து விடும் கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. //அதையே பேசி முடிச்சு// - காசு கொடுத்தமாதிரி தெரியலையே... இல்லைனா எவ்வளவுன்னு சொல்லியிருப்பீங்களே.... எனக்கென்னவோ பஸ் ஓட்டை வழியா சக்கை கீழ விழுந்திருக்குமோன்னு சம்சயம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சம்சயம் நாளை விலகும்.... காத்திருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு


  7. /பலாக்கொட்டைப்பாறை/
    கேள்வி பட்டது இல்லை.


    பிஞ்சு பலாக்காய் சீஸனில் இடிச்சக்கை துவரன் எல்லா வீடுகளிலும் உண்டு.

    //அந்த காலைநேர பஸ் பயணம் கற்பனையை சிறகடிக்க வைக்கும் பயணம்தான்.//

    சீட்டுக்கு அடியில் வைத்த சக்கையை யாரோ எடுத்து போய் விட்டார்களோ?


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாராவது எடுத்துப் போய்விட்டார்களோ? :) பதில் நாளை தெரியும்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  8. சக்கைப்பழம், சக்கையானதா என அறிந்துகொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. அந்த "மனசுக்கு பிடித்த பல அவதாரங்கள்" ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. மிக மிக சுவாரஸ்யமான பதிவு. ' அந்த நாள் ஞாபகம்' எப்போதுமே சுவாரஸ்யமாகத்தானிருக்கும். அதை தானும் ரசித்து எழுதி படிப்பவரையும் ரசிக்க வைப்பது ஒரு கலை. அத்தனை அழகாய் எழுதியதற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  12. அழகான நடை .. இனிய பதிவு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. சக்கை என்றதும் நாகர்கோயில், கேரளம், பண்ருட்டி நினைவுக்கு வந்துவிடும்.

    பல இடங்கள் சிரிக்க வைத்தன. அந்த வயதில் வேலை தேடிய சமயத்தில் பல கனவுகளுடன் அலைந்தவன் என்ற ரீதியில் உங்கள் பேருந்துப் பயணத்தில் உங்கள் கனவை ரசித்தேன் பத்மநாபன் அண்ணாச்சி!

    திருனெல்வேலிக்குச் சக்கைப் பழம் ஒழுங்காகப்போய்ச் சேர்ந்ததா என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  14. "//திருநெல்வேலியில் இறங்கிய பின்னர் என்ன நடந்தது என்பதை//" - அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  15. அடடா! சக்கைப்பழத்தை ஒழுங்கா கொண்டு போய் சேர்க்கணுமேங்கற பயம் எனக்கே வந்து விட்டது. ஒருவேளை சஸ்பென்ஸ் சப்புன்னு ஆயிட்டா உதைப்பாங்களோ தெரியலையே. வேங்கடராமா! கோவிந்தா! காப்பாத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்னாச்சி.

      நீக்கு
  16. அடடே... இதை மிஸ் செய்திருக்கிறேன். நல்லவேளை லிங்க் கொடுத்திருக்கீங்க.. பதிவு முழுவதும் இழையோடிய மெல்லிய நகைச்சுவையை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணத்தில் இருந்ததால் பதிவுகள் படிக்க கொஞ்சம் சிரமம் தான் உங்களுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  17. அருமையான சொல் வளம். சரளமான நடை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....