புதன், 17 ஏப்ரல், 2019

ஜார்க்கண்ட் உலா – தோசா ப்ளாசா – விளையாட்டுப் பிள்ளை


கயாவிலிருந்து ராஞ்சி வந்த இரயிலில் அவதிப் பட்ட பிறகு ராஞ்சி நகர் வந்த உடன் தங்குமிடம் செல்லாமல் நேரடியே ஏதாவது உணவகத்திற்குச் சென்று மதிய உணவை சாப்பிட்ட பிறகு தான் தங்குமிடம் செல்வது என்ற முடிவுடன் இருந்தது. காலையிலிருந்து முறையாக சாப்பிடாமல் இருந்தது கொஞ்சம் படுத்தியது! இரயில் நிலையத்தில் பெரிதாக உணவக வசதிகள் இருக்காது என்ற எண்ணத்துடன் எங்களுக்கான வாகனம் வந்த பிறகு ஏதாவது உணவகத்தில் சாப்பிடலாம் என முடிவு செய்தோம்.

ராஞ்சி நகரில் இருக்கப்போகும் நாட்களில் பயன்படுத்த எங்களுக்காக ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தோம். வாகனம் ஏற்பாடு செய்தவர் ஒரு ஜார்க்கண்ட் நண்பர். அவரே எங்களுக்கான தங்குமிடமும் ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் பயணத்திற்கு எங்களுக்கு முழு ஆதரவும் நண்பருடையது! அவருக்கு இச்சமயத்திலும் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். ராஞ்சி நகரில் எங்களுக்கு எல்லா விதத்திலும் உதவி செய்தவர் அந்த நல்ல நண்பர் – அதுவும் தில்லியில் இருந்தபடியே! தங்குமிடம் பற்றி பிறகு சொல்கிறேன் இப்போது உணவு பற்றி பார்க்கலாம்! எங்களுக்கான வாகனம் வந்து சேர்ந்தது. வாகன ஓட்டி குல்தீப் ஒரு இளைஞர் – பதினெட்டு வயது தான் ஆகியிருக்கும் போல! ஆனால் திறமையாகவே ஓட்டினார். ரொம்பவே விளையாட்டுப் பிள்ளை!



சாப்பிட்ட பிறகு தான் எங்கள் தங்குமிடம் செல்ல வேண்டும் எனச் சொல்ல, அவர் எங்களை அழைத்துச் சென்ற இடம் “தோசா ப்ளாசா!” தென்னிந்திய, வட இந்திய மற்றும் சைனீஸ் உணவுகள் கிடைக்கும் இடம் – உலகத்திலேயே அதிக வகை தோசைகள் கிடைக்கும் இடம் என்ற வாசகத்துடன் தென்னிந்தியாவிலிருந்து பல நூறு மைல்கள் தாண்டி ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் இப்படி ஒரு உணவகம்! விசித்திரமாக இருக்கிறது இல்லையா… எங்கும் தோசையும் இட்லியும் கொடிகட்டிப் பறக்கிறது! இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் – பீஹாரில் எங்களுக்கு வாகன ஓட்டியாக இருந்த பிண்டூ எங்களுடன் பயணித்த போது பல இடங்களில் இட்லி தான் சாப்பிட்டார் – பயணத்தில் தொல்லை தராத உணவு என்பது அவர் சொன்னது! நாங்கள் சாப்பிட்டது வட இந்திய உணவு! தென்னிந்தியர்களாகிய நாங்கள் வட இந்திய உணவும், வட இந்திய வாகன ஓட்டி தென்னிந்திய உணவும் சாப்பிட்டோம்!



சாம்பார் சாதம், விதம் விதமான தோசைகள், தந்தூரி ரொட்டி, சப்ஜி என பல வித உணவுகள் கிடைத்தது. முதல் நாள் இரவுக்குப் பிறகு ஒழுங்காக சாப்பிடாததால், கிடைக்கும் அனைத்தையும் சாப்பிட வேண்டும் எனக் கேட்கும் குழந்தையைப் போல, சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, சப்ஜி, என அனைத்தும் சொன்னோம்! சாம்பார் சாதம் சரவணபவனில் தரும் இரண்டு ஸ்பூன் அளவு தான் இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்தால் வந்தது நிறையவே! அதே போலவே எல்லா உணவு வகையும் நிறைவாக இருந்தது. நானும் நண்பரும் கூடவே ஓட்டுனர் குல்தீப் மூன்று பேரும் சாப்பிட்டும் தீரவில்லை! உணவை வீணடிப்பது பிடிக்காது என்று நிறைய சாப்பிட்டாலும் கொஞ்சம் மீதியானது! வெளியே வந்து ஒரு பான் சாப்பிட வேண்டியிருந்தது!

உணவின் தரமும் நன்றாகவே இருந்தது என்றாலும் முழுவதும் சாப்பிட முடியவில்லை. எதிரே இருந்த ஒரு இருக்கையில் ஒரு வட இந்திய குடும்பம் – கணவன், மனைவி மற்றும் மகன் – மூவரும் வஞ்சனையின்றி உடலை வளர்த்து இருந்தார்கள். அவர்கள் சொன்ன உணவுப் பட்டியல் கேட்ட போது மலைப்பாக இருந்தது – பனீர் தோசாவில் ஆரம்பித்து ஒரு பெரிய பட்டியலே சொன்னார்கள். பனீர் ஸ்பிரிங் ரோல் தோசா, நவரத்தன் மசாலா தோசா என அனைத்தும் ஹெவியான உணவுகள். இதற்கு நடுவில் மகன் மட்டும் அடுத்த கடையில் சென்று எதையோ வாங்கிச் சாப்பிட்டு வருகிறேன் என்று பொறுமையாகச் சென்றார்! சிறு வயதிலேயே அவ்வளவு எடை!

உணவகத்தில் மட்டுமல்லாது ஓட்டுனர் குல்தீப் அன்றைய பயணம் முழுவதுமே எங்களுடன் செல்ஃபி எடுக்க ஓடி ஓடி வந்தார் குல்தீப். பொதுவாக வாகன ஓட்டிகள் இப்படி சுற்றுலா பயணம் என்றால் வாகனத்தினை நிறுத்தி, பயணிகளை சுற்றச் சொல்லி, வாகனத்திலேயே ஒரு குட்டி தூக்கம் போடுவார்கள் அல்லது ஓய்வு எடுப்பார்கள். இவரோ எல்லா இடங்களுக்கும் எங்களுடன் வந்தார் – நுழைவுச் சீட்டு அவருக்கும் சேர்த்தே வாங்க வேண்டியிருந்தது! எல்லா இடங்களுக்கும் அவர் எங்களுடனேயே வந்து கொண்டிருந்தார். இவரே தான் எங்களுடன் அடுத்த இரண்டு நாட்களும் இருக்கப் போகிறார் என்று நினைத்த போது கொஞ்சம் கவலையாக இருந்தது! புதிய ஊர், புதிய இடங்களுக்குச் செல்லும்போது ஊரை நன்கு தெரிந்தவர் ஓட்டுனராக இருப்பது நல்லது. ஆனால் இவரோ விளையாட்டுப் பிள்ளையாக இருப்பது மட்டுமன்றி பல இடங்களுக்கு வழியும் தெரியாதவராக இருந்தார்!

இரவு தங்குமிடம் சென்ற பிறகு ஏற்பாடு செய்த நண்பருடன் பேச வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஆனால் அதற்கு தேவையில்லாமல் போனது வேறு விஷயம். காலையில் வருவதாகச் சொல்லிச் சென்ற குல்தீப் அடுத்த நாள் காலை வரவே இல்லை!
  
நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி

44 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் வெங்கட்ஜி.

    தோசை ப்ளாஸா! தோசையும் இட்லியும் அங்கு ஃபேமஸ் ஆகிருப்பது மகிழ்ச்சி, இங்கு ரொட்டி, நாண், குல்சா ஃபேமஸ் ஆகியிருப்பது போல. பாரதியின் நினைவு வந்தது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதாஜி.

      எல்லா இடங்களிலும் தோசை, இட்லி இருக்கிறது என்றாலும் நம் மாநிலத்தின் சுவை வருவதில்லை. பாரதி - மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. குட்மார்னிங்.

    அங்கெல்லாம் உணவு என்பது நாளைய ரொட்டி, கொஞ்சம் உருளைக்கிழங்கு, கொஞ்சம் குருமா போல ஏதோ என்றுதான் கண்ணில் படுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான உணவகத்தைத் தேடிச் செல்லவேண்டும். இப்போதெல்லாம் இந்தியா முழுவதும் தோசை, இட்லி, வடை கிடைக்கின்றன. நாங்க நைமிசாரணியம் போனபோது அந்த நெடுஞ்சாலை முழுவதும் வழி நெடுக தோசைக் கடைகளும் வடைக்கடைகளும், எல்லாம் வட இந்தியரால் நடத்தப்படுபவை! வழியில் அப்படி ஒரு கடையில் தான் நாங்க தோசையும், வடையும் வாங்கிச் சாப்பிட்டோம். தோசை பரவாயில்லை ரகம், சாம்பாரில் கெடுத்து விடுவார்கள்.

      நீக்கு
    2. அங்கே எல்லாம் காலை உணவாக ப்ரெட் சான்ட்விச், ப்ரெட் டோஸ்ட், போஹா, பராத்தா, பூரி எனக்கிடைக்கும். ஓட்டல்களில் முதலில் இனிப்பு ஏதேனும் கொடுத்துவிட்டே நாம் என்ன கேட்கிறோமோ அதைக் கொடுப்பார்கள்.பராத்தா விதம் விதமாய்க் கிடைக்கும்.

      நீக்கு
    3. கீசா மேடம்... என்ன ஆட்டோவில் போனீங்களா? நாங்கள் பஸ்ஸில் சென்றபோது ஒரு கடையையும் பார்க்கவில்லை. அப்புறம் நைமிசாரண்யத்தில் அலைந்து திரிந்து நிறைய விலை கொடுத்து திராட்சைப் பழங்களை வாங்கிவந்தேன் (டூர் ஆபரேடர் அட்டஹாசமான உணவு இருவேளையும் கொடுத்தபோதும்)

      நீக்கு
    4. //கீசா மேடம்... என்ன ஆட்டோவில் போனீங்களா? /கடவுளே! லக்னோவிலிருந்து ஆட்டோவா நைமிசாரண்யத்துக்கு? கிழிஞ்சது! உடம்பு என்னத்துக்கு ஆகும்! அந்த நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் உணவகங்கள் நிறைய உள்ளன. நைமிசாரணியத்தில் இருந்து திரும்பி வரும்போது ஒரு பஞ்சாபி தாபாவில் ரங்க்ஸ் சாப்பாடு சாப்பிட்டார். நான் வழக்கம் போல் லஸ்ஸி மட்டும்! :))))

      நீக்கு
    5. வணக்கம் ஸ்ரீராம்.

      நாளைய ரொட்டி? விதம் விதமான சப்ஜிகள் உணவுகள் கிடைக்குமே ஸ்ரீராம். உணவகங்கள் பார்க்கக் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் உள்ளூர் உணவு நன்றாகவே இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. இந்த மாதிரி ஊர்களில் நடத்தப்படும் உணவகங்களில் கிடைக்கும் தென்னிந்திய உணவு பெரும்பாலும் வட இந்தியர்களாலேயே தயாரிக்கப்படுகிறது. சுவை என்று பார்த்தால் அத்தனை நன்றாக இருக்காது. நம் ஊர் உணவு என்ற ஒரே காரணத்திற்காக வேண்டுமானால் சாப்பிடலாம்! என்னைப் பொறுத்த வரை எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் உணவையே சாப்பிடுவது நல்லது. இட்லி, தோசைக்கான தேங்காய் சட்னியை மொத்தமாக அரைத்து வைத்து ஒருவாரம், பத்து நாட்கள் பயன்படுத்தும் உணவகங்களை நான் இங்கே பார்த்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..

      நீக்கு
    7. காலை உணவாக நிறைய விஷயங்கள் கிடைக்கும் என்றாலும் நிறைய ஊர்களில் ப்ரெட் பட்டர் ஜாம், போஹா [குறிப்பாக ராஜஸ்தான் எல்லையிலிருந்து போகப் போக], பஞ்சாப், ஹிமாச்சல் பகுதிகளில் பராட்டா என நிறையவே கிடைக்கிறது. நம் ஆட்கள் பல இடங்களுக்கும் செல்வதால் நிறைய உணவகங்களில் சௌத் இண்டியன் உணவு கிடைக்கும் என எழுதி வைத்து தோசா, இட்லி, ஊத்பம் [இப்படித்தான் ஊத்தப்பம் என்பதை இங்கே சொல்வார்கள் - ஹாஹா....] ஆகியவற்றை தருகிறார்கள் - சுமாரான சுவையில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
    8. உணவு - பலருக்கு பழக்கமான உணவு இல்லையென்றால் சிரமம் தான். பழங்களை உண்டு சமாளிப்பவர்கள் நிறைய பேர் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    9. நாங்க சட்னியே வேண்டாம்னு சொல்லிடுவோம். வெறும் தோசை தான்! ஆனால் சில சமயங்களில் அம்பேரிக்காவில் கொடுக்கிறாப்போல் முறுக்கு மாதிரிக் கொடுக்கிறாங்க! :( அதான் பிடிக்கலை! நான் பொதுவாக ப்ரெட் டோஸ்ட் சொல்லிடுவேன். வயித்தையும் ஒண்ணும் பண்ணாது. நைமிசாரணியத்தில் சாப்பிட்ட தோசை மலையாளிகளால் நடத்தப்பட்ட கடை! ரொம்பவே பிரபலம். கூட்டம் அதிகம் வரும். இடம் கிடைக்காது என்றெல்லாம் கார் ஓட்டுநர் சொல்லிக் கூட்டிச் சென்றார்.

      நீக்கு
    10. வட இந்தியாவில் லஸ்ஸி நன்றாகவே இருக்கும் - குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் பகுதிகளில். தமிழகத்தில் லஸ்ஸி என்ற பெயரில் தண்ணீராக இனிப்பான நீர் மோர் போன்ற எதையோ தருகிறார்கள்! ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    11. நானும் அப்படித்தான் - சட்னி வேண்டாம் எனச் சொல்லி விடுவேன். சாம்பார் - கேவலமாக இருந்தாலும் சூடாகவாது இருக்கும்! சில மலையாளிகள் உணவகங்கள் நடத்துகிறார்கள் பெரும்பாலான வட இந்திய சுற்றுலாத் தலங்களில். அவர்கள் இல்லாத இடம் ஏது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    12. ஆமாம், நானும் பெரும்பாலும் லஸ்ஸி, சாஸ் பழங்கள் என்றே நாட்களை ஓட்டிடுவேன். இம்முறை கோலாப்பூர் போனப்போ ஃபலூடா! :))) பாதாம் மில்க் ஷேக்!

      நீக்கு
    13. இப்படிச் செய்வது தான் நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    14. வெங்கட் சொன்னமாதிரி, அலஹாபாத்தில் லஸ்ஸி மிக மிக அருமையா இருந்தது. தனிச் சுவை. (ஆனால் அந்த ஊரில் கோடிக்கணக்கான ஈக்கள்).

      கீசா மேடம்... ஃபலூடால்லாம் சொல்லி வயித்த வலியை வரவழைச்சுக்காதீங்க...சொல்லிட்டேன். நான் ஃபலூடாவின் ரசிகன்... நல்ல ஃபலூடா எங்க கிடைக்கும் என்று தேடுபவன்.

      நீக்கு
    15. ஈக்கள் :)

      ஃபலூடா... நம் ஊரில் அத்தனை சுவை இல்லை. தில்லியில் கரோல் பாக் பகுதியில் ரோஷன் தி குல்ஃபியில் நன்றாக இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. அடடா.... இவ்வளவு நாட்கள் பயணம் செய்து எங்கள் வாகன ஓட்டி பெயர் கேட்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்...!

    ஓடி ஓடி வந்த குல்தீப்... ஹா... ஹா.... ஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பெயர் கூட கேட்கவில்லையா.... நான் எப்போதும் சாரதியாக வருபவர் பெயர் கேட்டு விசாரிப்பேன். உணவகங்கள், தங்குமிடங்கள் என அனைத்து சிப்பந்திகளுடன் பேசி, பெயர், குடும்பம் என பேசுவது அவர்களுக்கு மகிழ்ச்சி தரும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. பிண்டூ அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. குல்தீப்புக்கு என்ன ஆச்சு என அறிய அவா. எங்களுக்கும் நாங்க அயோத்தி போனப்போ அங்கிருந்து லக்னோ செல்ல இளம் வயது ஓட்டுநரே வந்தார். 20,22 வயது தான் இருந்திருக்கும் அப்போ 2013 ஆம் ஆண்டிலே. பான் போட்டுக் கொண்டே வந்தார். ஆனால் வண்டி ஓட்டுவது நிதானமாக இருந்தது. திருமணம் ஆகி ஒரு பையர் இருப்பதாகச் சொன்னார். அங்கே தான் சீக்கிரமாய்க் கல்யாணம் செய்து வைச்சுடுவாங்களே! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்தீப் - ஹாஹா... அவர் பற்றி விரைவில் சொல்கிறேன்.

      ஆமாம் 18-19 வயதிலேயே திருமணம் செய்து விடுகிறார்கள் வடக்கே...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. தோசை பிளாசா
    அறிந்தேன் வியந்தேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நெட் எனக்கு மட்டும்தான் இங்கு ஸ்லொவாக இருக்கிறதா இல்லை எல்லோருக்க்மேவா?

    ஒரு கருத்து போடுவதற்குள் நேரம் ரொம்ப எடுக்கிறது. அப்புறம் வேலை வந்துவிட்டது எனவே மீண்டும் இப்பத்தான் வர முடிந்தது.

    வித விதமான உணவுப் பட்டியல் யம்மாடியோவ் என்று சொல்ல வைக்கிறது!!! அந்த வட இந்தியக் குடும்பம் எப்படித்தான் அத்தனையும் சாப்பிடுகிறார்களோ? இப்போதெல்லாம் நிறையப் பேர் மிகவும் சிறு வயதிலேயே மிகவும் குண்டாக இருப்பதைக் காண முடிகிறது. உணவுப் பழக்கவழக்கம் தான் காரணமாக இருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இணையம் இப்படித்தான் படுத்துகிறது.

      உணவு பழக்கம் - பிரதான காரணம் - இளம் வயதிலேயே குண்டாக இருப்பவர்கள் இப்போது நிறைய பேர்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  8. தோசா புராணம் நல்லாத்தான் இருக்கு.
    குல்தீப் என்னவானார் ? ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்தீப் பற்றி அடுத்த ஜார்க்கண்ட் உலா பதிவில் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. //மகன் மட்டும் அடுத்த கடையில் சென்று எதையோ வாங்கிச் சாப்பிட்டு வருகிறேன் // - ஹா ஹா ஹா. ராஜா காது மட்டுமல்ல பார்வையும் கழுதைதான் ஆஹ்ஹாஹ்ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காது, பார்வை மட்டுமல்ல, மொத்தமே கழுதை தான்! கொஞ்சம் கொஞ்சமாக கழுதை மாதிரி கத்த ஆரம்பிக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  10. சுற்றுப்பயணத்தில் பலருக்கும் பிரச்சனை தருவது உணவுதான். நாக்குக்கு ருசியாய் உணவு கிடைக்காது, கிடைத்தாலும் வயிற்றுக்கு ஒவ்வாது என்று பல சமயம் பிரச்சனைதான். தோசா பிளாசா நல்ல முயற்சி. வாகன ஓட்டியை விளையாட்டுப்பிள்ளை என்றது மிகச்சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. உணவு மட்டும் சரியாக அமைந்து விட்டால் பயணம் சிறக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  11. தோசை பிளாசாவில் கண்ட காட்சிகளை சொன்ன விதம் அருமை.
    பிண்டூ அவர்கள் சொன்னது சரியென்றாலும் வடைந்தியாவில் இடலியை விட தோசை பரவாயில்லைரகம் .
    இடலி நன்றாக இருந்ததா?

    //காலையில் வருவதாகச் சொல்லிச் சென்ற குல்தீப் அடுத்த நாள் காலை வரவே இல்லை!//
    விளையாட்டு பிள்ளையை என்ன செய்வது ? என்ற கவலைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
    ந்ல்லதாக போய் விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் இட்லி சாப்பிடவில்லை. பெரும்பாலான வட இந்திய உணவகங்களில் இட்லி கல் போல இருக்கும்! சாஃப்டாக இருப்பதில்லை. கூடவே ஆறிப்போய் தான் இருக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  12. வட இந்தியாவிலும் தோசை எல்லாம் கிடைக்கிறதா. தோசை பிளாசா விவரணம் நாவில் நீர் ஊற வைக்கிறது.

    குல்தீப் என்ன ஆனார்?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குல்தீப் பற்றி அடுத்த ஜார்க்கண்ட் உலா பதிவில் சொல்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.

      நீக்கு
  13. நீங்களே உங்க நண்பரிடம் கேட்க இருந்தப்ப குல்தீப்பே அடுத்த நாள் வராமல் போனது என்னாச்சு என்று அறிய மண்டைக் குடைசல்..ஹா ஹா ஹா சஸ்பென்ஸ்!!

    காலைல சொல்ல விட்டுப் போன கமென்ட்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. குல்தீப்மிடமிருந்து எஸ்கேப் ஆகிட்டீங்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அதையும் சொல்வோம். அதற்கு முன்னர் அவருடன் இன்னும் கொஞ்சம் பயணம் இருந்தது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  15. வடக்கே வட இந்திய உணவுகளை சாப்பிடுவதே சரி. அவர்களால் தென்னிந்திய உணவுகளை நம்மவர்கள் போல் சமைக்கத் தெரியாது. குல்தீப் ஏன் வரவில்லை என அறிய காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை. எந்த ஊரில் இருக்கிறோமோ அவ்வூரின் உணவைச் சாப்பிடுவது நல்லது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....