வியாழன், 4 ஏப்ரல், 2019

மகளதிகாரம்…



மழலை மொழி:





குழந்தையின் மழலை மொழியை கேட்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை என்பதை எங்கும் எவரிடமும் எவ்வித தயக்கமுமின்றி கூறலாம். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ராகம். அவர்களாகவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை வைத்துவிடுவார்கள்.

என்னுடைய பெண் பிறந்து இரண்டு வயது வரை சில சொற்களே பேசுவாள். மனைவிக்கு அது ஒரு பெரிய குறையாகவே இருந்தது. ”எப்பதாங்க நம்ம பொண்ணு அழகா மழலையா பேசுவா?” என்று என்னை அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பாள்.

ஆனால் எனக்கென்னவோ அவள் மழலையில் அழகழகாக சில வார்த்தைகள் பேசுவதை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கலாமெனத் தோன்றும். அவளின் சில மழலை வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் இங்கே:

நிக்கி – பாப்கார்ன்; லாலா ஐஸ்க்ரீம் – Kwality Walls Ice Cream; மம்மி 2 – ஜாம்; பூஸ்டிகா – பூஸ்ட்; மம்மாச்சி – ஸ்வாமி; ஒயிட் – வாழைப்பழம்; முன்பே வா அன்பே வா பிஸ்கெட் - Little Hearts Biscuit; பட்டாசு – விளக்கு/ மெழுகுவர்த்தி; நெய்மோஸ் – நெயில் பாலிஷ்; நவல் சோப் – Vivel Soap; இஞ்சி ஐஸ்க்ரீம் – Mother Diary Ice Cream; கோண்டிட்டா – Bournvitta; இங்கேர் – இங்க பாரு.

அவள் சொன்ன வார்த்தைகளில் எங்களுக்கு அர்த்தம் தெரிந்தது இவ்வளவு. அர்த்தம் தெரியாத வார்த்தைகள் எண்ணிலடங்கா. இன்று வரை புரியாத ஒரு சொற்றொடர் – “இசீசா…. அக்கூக்கா…. குய்…..” இதை சொல்லிவிட்டு “ஹாஹா…..ஹாஹா” என்று வேறு சிரிப்பாள். இன்னொரு சொல் – “இட்டி பண்டு”. தெலுங்கில் “பண்டு” என்றால் பழம். ஆனால் “இட்டி பண்டு” என்று ஏதாவது இருக்கிறதா என்பது தெரியவில்லை.



ஐந்து வயதில் மகளின் மழலை கொஞ்சம் மாறி இருந்தாலும், நிறைய பேசுகிறாள். சென்ற வருடம் பள்ளியில் சேர்த்த பிறகு தமிழிலும் ஹிந்தியிலும் மாற்றி மாற்றி எதையாவது பேசிக்கொண்டே இருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளாள். பேசமாட்டாளா என்று குறைபட்ட என் மனைவி இப்போதெல்லாம் என் பெண்ணிடம் “கொஞ்ச நேரம் பேசாம, வாய்மேல விரல் வைச்சுகிட்டு கம்முன்னு உட்காரமாட்டே!” என்று சொன்னது வேறு விஷயம்!

ரைம்ஸ்…



மகளது பள்ளியில் ஆங்கில நர்சரி பாடல்களைத் தவிர ஹிந்தி மொழியிலும் நிறைய பாடல்களை சொல்லித் தருவார்கள். ஒவ்வொன்றையும் அவள் மழலை கொஞ்சும் ஹிந்தியில் சொல்லுவதைக் கேட்டு அவளது பள்ளி ஆசிரியையே ஒவ்வொரு சந்திப்பின் போதும் எங்களிடம் சிலாகித்து சொல்லுவார். அவள் சொன்ன ஒரு ஆங்கில நர்சரி பாடலின் சில வரிகள் –

“மம்மா கால் டாக்டர்,
டாக்டர் சேஸ், நோ நோ மோன்கி,
நம்பிக்கோத்தா பேர்” –

அந்த பாடலின் சரியான வரிகள் –

“Mumma Called the Doctor,
The Doctor Said, “No More Monkey”
Jumping on the Bed”



இப்போதும் கூட வீட்டில் சில சமயங்களில் நானும் எனது மனைவியும் “நம்பிக்கோத்தா பேர்” என்று அவளிடம் சொல்லி சிரித்துக் கொண்டிருப்போம்.

வலை ராஜா:



ஒரு நாட்டோட முக்கியமான ஆளுன்னா அவரை ராஜான்னு சொல்வாங்க.  எந்த ஒரு துறையா இருந்தாலும் அதில் சிறந்த ஆளை அந்தத் துறைக்கே ராஜான்னு சொல்வாங்க. அது மாதிரி என் மகள் என்னைச் செல்லமாய் கூப்பிடுவது “வலை ராஜா”!  அதுக்குன்னு என்னை ஏதோ வலை வீசி மீன் பிடிப்பதிலோ, மீன் பிடிக்கும் வலை பின்னுவதிலோ பெரிய ஆள்னு நினைச்சுடாதீங்க.

பெரும்பாலான நாட்களில் அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்த சிறிது நேரத்திலேயே மடிக்கணினி முன் உட்கார்ந்து வலையுலகில் புகுந்தால் வெளியே என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல் அந்த உலகத்திலேயே  இருந்து விடுவேன்.  விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என்றால் கேட்கவே வேண்டாம் – பெரும்பாலான நாட்கள் கணினி முன் என்றாகிவிடுகிறது இப்போதெல்லாம்.  இது எல்லாம் சேர்ந்து எனக்கு இந்த ”வலை ராஜா” என்ற பெயரை வாங்கிக் கொடுத்து விட்டது [எங்க வீட்டு அம்மணிதான் சொல்லிக் கொடுத்திருப்பாங்க!].   நீங்க எப்படி? “வலை ராஜாவா, ராணியா?”

புத்தாண்டில் ஒரு பல்பு!:



புத்தாண்டு அன்று என் பெண்ணிடம்  என் மனைவி  “அப்பாவை நமஸ்காரம் பண்ணும்மா, காசு தருவாங்க!” என்று சொல்ல என் பெண்ணும் குளித்து விட்டு வந்து என்னை நமஸ்கரிக்க, நானும் அவளுக்குக் காசு கொடுத்தேன்.  அடுத்து அவள் அம்மாவைப்  பார்த்து, ”அம்மா நீயும் அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணு, உனக்கும் அப்பா காசு கொடுப்பாங்க!” என்று சொல்லி, என் சட்டைப் பையின் கனத்தினைக் குறைக்க வழி செய்தாள்.  அப்பவாவது நான் சும்மா இருந்து இருக்கலாம், சும்மா இல்லாம, “உங்களுக்கு எல்லாம், புது வருடத்தில், முதல் நாளிலேயே காசு கிடைக்குது, எனக்கு யாரு கொடுப்பாங்க!” என்று கேட்க, அதற்கு என் பெண் அளித்த பதில் – “நீங்க எனக்கு நமஸ்காரம் பண்ணுங்க, நான் உங்களுக்குக் காசு கொடுக்கிறேன்!”- இது எப்படி இருக்கு?

சரி இதெல்லாம் இன்றைக்கு மீள் பதிவாக என்று முன்னரே படித்த நண்பர்கள் கேட்கலாம்… விஷயம் இருக்கிறது!

இன்றைக்கு எங்கள் செல்ல மகளுக்கு பிறந்த நாள். இந்த நாளும் வரும் எல்லா நாட்களும் இனிதாகவும் வளமாகவும் இருந்திட எங்களது வாழ்த்துகள். எல்லாம் வல்லவனின் பூரண அருள் கிடைத்திட எங்களது பிரார்த்தனைகள்.



நட்புடன்

ஆதி வெங்கட்/வெங்கட்

32 கருத்துகள்:

  1. எங்களுக்கு எல்லாம் புதுசு தான்! எங்க குட்டிக் குஞ்சுலுவும் ஒரு வார்த்தை, இரு வார்த்தை என்றே பேசுகிறாள். ஆப்பிள் வருகிறது. பனானா வரலை! பாட்டி இஸ் தேர் எனச் சொல்லுவாள். ஆனால் மேலே சொல்லத் தெரியாது. வெட்கம் வந்துடும். உங்க ரோஷ்ணியைப் பேசாமலே பார்த்த நான் இப்போதெல்லாம் அவள் பேசுவதைக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன். அப்படியே உங்க ஜாடை தான்! சின்ன வெங்கட் என்றே சொல்லலாம். உயரமும் அப்படியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்ன வெங்கட்... :) சின்ன புவனா என்றும் சிலர் சொல்வதுண்டு. பாட்டி ஜாடை என என் அம்மாவின் ஜாடையில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  2. குஞ்சுலுவுக்கும் நோ மோர் மங்கி ஜம்பிங் ஆன் தி பெட் கார்ட்டூன் ரொம்பப் பிடிக்கும். அதெல்லாம் போட்டால் நின்று கொண்டே பார்க்கும்! இப்போல்லாம் குறைச்சுட்டாங்க! ப்ளே ஸ்கூல் போவதால் கொஞ்சம் மனசை மாற்ற முடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... குட்டிக் குஞ்சுலு ப்ளே ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சா... மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  3. ரோஷ்ணிக்கு எல்லாவிதமான உடைகளும் பொருந்திப் போகும் வண்ணம் உடல் அமைப்பு! நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  4. //அப்படியே உங்க ஜாடை தான்! //

    இதே தான் நானும் நினைத்தேன். ரோஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பி...

      நீக்கு
  5. நினைவலைகள் சுவாரஸ்யம்
    ரோஷினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. தங்களின் செல்ல மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. அடிக்கடி நான் நினைப்பது ரொஷ்ணி வெங்கட்டின் பெண் அவதாரம் என்று. நெத்தி மட்டும் ஆதி.
    எத்தனை வார்த்தைகள். மழலையை மீண்டும் கேட்க வைப்பது அவள் திருமணம் ஆன பிறகுதான்.
    மிக மிகச் சுவையான பதிவு.
    ஸ்ரீரங்கம் செல்லும்போது வலையை விட்டு விடுங்கள். ரோஷ்ணி அப்பாவாகவே இருங்கள்.

    இன்னும் நிறையக் கற்கலாம் அவளிடம். உங்களுக்கும் ஆதிக்கும் ரோஷ்ணிக்கும் இனிய
    பிறந்த நாள் வாழ்த்துகள்.
    அவள் பிறந்ததால் நீங்களும் புதிதாய்ப் பிறந்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருவரங்கம் செல்லும்போது வலையில் உலா வருவது ரொம்பவும் குறைவு - அங்கே இணையமும் இல்லை! அலைபேசி வழியே எப்போதாவது தான் உலா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  8. எப்போதும் பிரமிப்பையும் ரசனையையும் தருகிற சூட்டிகையான குழந்தை.. ஆம்.. என் பார்வையில் அதே ரோஷ்ணிக்குட்டி தான்..

    வாழ்க நலமுடன் எந்நாளும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

      நீக்கு
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி. வாழ்க வளமுடன்.
    அப்பா, அம்மா பகிர்ந்து கொண்ட படங்கள் எல்லாம் அழகு.பல திறமைகள் உள்ள அன்பான குழந்தை. அவள் என்று மகிழவாய் இருக்க எங்கள் ஆசிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  10. உலகத்தில் மிக இனிமையான மொழி குழந்தைகளின் மழலை.ரோஷ்ணிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

      நீக்கு
  11. மீண்டும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணிக் குட்டி!!! என்ன ஸ்பெஷம் இன்று? அம்மா ஆதி அதை தனிப் பதிவா போடுவாங்கதானே?!

    //அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ராகம். அவர்களாகவே ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரை வைத்துவிடுவார்கள்.//

    ஆமாமாமாம் என் மகன் நிறைய ...நாம் பனானா நு சொன்னா புனானி அப்படினு சொல்லுவான். அவனுக்கு 2 வயது கடந்துதான் ஓரிரு சொற்கள் வந்தது. அவன் ப்ராஸஸ் எல்லாமே ஸ்லோதான்...கொஞ்சம்.

    ரோஷினி படங்கள் எல்லாம் க்யூட்.

    தலைப்பு மிகவும் ரசித்தேன் ஜி. மகளதிகாரம்!!!! சூப்பர்.

    நமஸ்காரம்நிகழ்வு//ஹா ஹா ஹா ஹா ஹா...

    மிகவும் ரசித்த பதிவு ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
  12. அழகழகான அற்புதமான நினைவுகளை தொகுத்திருக்கிங்க ..இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஷிணிக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

      நீக்கு
  13. அழகான தொகுப்பு. ஆமாம், எல்லோரும் சொல்வதுபோல அப்படியே குட்டி வெங்கட்!

    பாராட்டவைக்கும் ரோஷ்ணியின் திறமைகள் ​- காரணமாயிருக்கும் ரோஷ்ணியின் அம்மா... நல்லதொரு குடும்பம்.

    மறுபடியும் ரோஷ்ணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. அழகான, சந்தோஷமான பதிவு. அழகான புகைப்பஞங்களோடு இனிய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். படிக்கும் எங்களுக்கும் சந்தோஷம்.
    ரோஷிணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இறையருளோடு பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் குழந்தையாக நீடூழி வாழ வாழ்த்துகிறேன். ஆயுஷ்மதி பவ!����

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி பானுமதிம்மா...

      நீக்கு
  15. படங்களும் பகிர்வும் அருமை. மழலை மொழி இனிமை.

    ரோஷ்ணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  16. குழந்தைகள் வளர்ந்த நாட்களை நினைத்துப் பார்ப்பதே ஒரு சுகம் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....