திங்கள், 8 ஏப்ரல், 2019

இரயில் பயணங்களில்… – எனக்கு ஜன்னல் சீட் வேணும்




பயணங்கள் எப்போதுமே பிடித்தமானது – அது சாலை வழிப் பயணமாக இருந்தாலும் சரி, இரயில் பயணமாக இருந்தாலும் சரி இல்லை ஆகாய மார்க்கமாக இருந்தாலும் சரி எல்லாமே பிடித்தது – ஏனெனில் பயணம் செய்வது மட்டுமே முக்கியம்! பயணிக்கும்போது கிடைக்கும் நல்ல மற்றும் கெட்ட அனுபவங்களை நமக்கு ஒரு பாடமாக மாற்றிக் கொள்ள முடியும்!
 

பீஹார் மாநிலத்திற்கு பயணம் செய்யப் போகிறோம் என நானும் நண்பர் பிரமோத்-உம் முடிவு செய்தபோது பட்னா நகரம் வரை விமானப் பயணம் என்றும் பீஹார் மாநிலத்தில் சாலை வழிப் பயணம் என்றும் பீஹாரிலிருந்து ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் செல்ல இரயில் வழிப் பயணம் எனவும் திட்டமிட்டு இருந்தோம். பீஹார் மாநிலத்தில் Gகயா தான் எங்கள் கடைசி தங்குமிடம். அங்கிருந்து ராஞ்சி நகருக்கு இருக்கும் இரயில்களில் எங்களுக்கு 12365 – RNC – Janshatabdi இரயில் தான் சரியாக இருக்கும் எனத் தோன்றியது. வாரத்தின் எல்லா நாட்களிலும் பீஹார் தலைநகர் பட்னாவிலிருந்து, Gகயா வழியே ஜார்க்கண்ட் தலைநகரம் ராஞ்சி வரை செல்லும் இந்த ஜன்ஷதாப்தியில் இருக்கைகள் மட்டுமே கொண்ட இரண்டு வகுப்பு தான் – சாதாரண பெட்டி, மற்றும் குளிரூட்டப்பட்ட பெட்டி.

நாங்கள் திட்டமிட்ட போது சாதாரண பெட்டியில் தான் இடம் இருந்தது. குளிரூட்டப்பட்ட பெட்டியில் இருக்கைகள் இல்லை. ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டார்கள் என்பதால் சாதாரண பெட்டியில் முன்பதிவு செய்வது என்றும், பயணத்திற்கு முதல் நாள் குளிரூட்டப்பட்ட பெட்டி இருக்கைக்கு தத்காலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் முடிவு செய்தோம். பயணத்திற்கு முதல் நாள் திட்டமிட்ட குளிரூட்டப்பட்ட பெட்டியில் தத்காலில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்பதால் சாதாரண பெட்டியிலேயே பயணம் செய்ய வேண்டியிருந்தது! ஏதேனும் உணவு கட்டித் தருகிறேன் எனச் சொன்ன அனிலிடம் வேண்டாம் என மறுத்துவிட்டு வந்தது ரொம்பவே தவறு என்பதை இரயிலில் பயணித்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது.



பொதுவாகவே பீஹார் மாநில இரயில் பயணம் பற்றிய ஒரு நெகட்டிவ் பிம்பம் மனதிற்குள் பதிந்து விட்டது என்றாலும் கொஞ்சமாகவாது மாறி இருக்காதா என்ற எண்ணத்தில் இந்தப் பயணத்தினை முடிவு செய்து விட்டோம். ஆனால் அது தவறு இந்த இரயிலில் பயணித்த போது புரிந்து கொள்ள முடிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருக்கும் இருக்கைகளை விட அதிகமான பயணிகள். எங்களுக்குக் கிடைத்த இருக்கைகளும் ஒன்றாக இல்லாமல் வேறு வேறு இடங்களில் இருக்க மாற்றி உட்காரச் சொல்லலாம் என்றால் வழியில்லை. இரு பக்கங்களிலும் மூன்று மூன்று இருக்கைகள் வழியில் ஒரு பாதை – எனக்கு இடப்பக்க ஜன்னலோர இருக்கை, பிரமோதின் இருக்கை வலப்புறத்தில் நடுவே!

Gகயா இரயில் நிலையத்திற்கு இரயில் வரும்போதே பெட்டியில் நிறைய கூட்டம். பெட்டியின் ஒரு கதவு மூடியிருக்க, மற்ற கதவு வழியாகவே அனைத்து பயணிகளும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் வேண்டியிருந்ததால் ஒரே தள்ளு முள்ளு! கொஞ்சம் காத்திருந்து பெட்டிக்குள் சென்றால் எங்கள் இருக்கைகளில் வேறு யாரோ அமர்ந்திருந்தார்கள். எங்கள் இருக்கைகள் எனச் சொன்ன பிறகும் நகர்வதாகத் தெரியவில்லை. பெரிய மனது செய்து முணுமுணுத்தபடியே [ஹிந்தியில் கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே] நகர்ந்தார்கள். இருக்கைகள் மாற்றிக்கொள்ள யாரிடமும் கேட்கும் அளவிற்கு மற்றவர்கள் இல்லை! எனவே வேறு வழியில்லை என நான் ஜன்னலோர இருக்கையிலும் பிரமோத் அவரது இருக்கையிலும் அமர்ந்தோம்.



பெட்டி முழுவதும் பயணிகள் குளித்து பல நாட்கள் ஆன வாடை – குளிர் ஆரம்பித்திருந்த நவம்பர் நாட்கள் என்பதால் பலரும் ஸ்வெட்டர்கள், ஜாக்கெட்டுகள் என பல நாட்கள் அணிந்து கொண்ட அழுக்கு வாடை! இந்த வாடையின் நடுவே இரயில் பெட்டியில் விற்பனை செய்து வந்த உணவுப் பொருட்கள் – அவித்த கொண்டக்கடலை, ப்ரெட் ஆம்லேட் இன்னும் என்னென்னவோ உணவுப் பொருட்கள் என ஒருவித கலக்கலாக இருந்தது. எனது பக்கத்து இருக்கைகளில் ஒரு பெண்மணி அவரது இரு குழந்தைகள் – ஒரு சிறுவனும் சிறுமியும். குழந்தைகளின் தந்தை வலப்பக்க மூன்று இருக்கைகளில் ஒன்றில் நிம்மதியாக இருக்க, இந்தக் குழந்தைகள் வருவதை எல்லாம் வாங்கித் தரக் கேட்கிறார்கள். சாப்பிட்டுக் கொண்டே வருகிறார்கள். கூடவே விதம் விதமான சேட்டைகளும்!



வந்து அமர்ந்தார்களோ இல்லையோ அந்தச் சிறுவன் “நீ நடு சீட்ல, எங்க அம்மாவோட ஒட்கார்ந்துக்கோ, எனக்கு ஜன்னல் சீட்டுதான் வேணும்!” என்று என்னிடம் கேட்க, சிறுவனின் அப்பா அடுத்த பக்கத்திலிருந்து ஒரு அதட்டல்… அம்மாவோ சேலைத் தலைப்பை இன்னும் இழுத்து முகத்தை மூடிக் கொண்டு சிறுமியையும் சிறுவனையும் நடு சீட்டில் அழுத்துகிறார்! நான் இதையெல்லாம் கவனித்தும் கவனிக்காதபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்து அமர்ந்திருக்கிறேன். எதிர் பக்கத்திலிருந்து ப்ரமோத் வேறு நக்கலாக ஒரு சிரிப்பு சிரிக்கிறார்! வருவதையும் போவதையும் வாங்கித் தின்றது மட்டுமல்லாது சாப்பிட்ட கையை அவ்வப்போது என் மீது வைக்கிறார்கள் சிறுவனும் சிறுமியும். கீழேயும் சிந்தி ஈ மொய்க்க ஆரம்பிக்கிறது! வந்த ஒரு உணவுப் பொருளைக் கூட விடவில்லை. அம்மாவும் அவ்வப்போது குழந்தைகளுடன் சாப்பிடச் சேர்ந்து கொள்கிறார்.  

பெட்டியில் எங்களைத் தவிர எல்லோரும் இப்படி சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்! கொண்டக்கடலை சுண்டல் தனது வேலையை ஆரம்பிக்க பெட்டி முழுவதும் அபானவாயுத் தொல்லை! விதம் விதமான நாற்றம் வர குமட்டிக் கொண்டு வந்தது! இதில் எங்கே சாப்பிடுவது. வழியில் ஏழு இரயில் நிலையங்களில் வண்டி நின்றபோது கொஞ்சம் இறங்கி ஏறலாம் என்றால் மீண்டும் வரும்போது எங்கள் இருக்கை எங்களுக்கானதாக இருக்காது! அத்தனை கும்பலில் இறங்கி ஏறுவதும் சுலபமல்ல! காலை 08.15 மணிக்குப் புறப்பட்ட ஜன்ஷதாப்தி ராஞ்சி சென்று சேரும்போது மதியம் ஒரு மணிக்கு மேல்! அதுவரை ஒன்றிரண்டு பிஸ்கெட்டுகளும் இரண்டு துண்டு பிரிட்டானியா கேக்குகளும் மட்டுமே சாப்பிட்டோம் – அதுவும் வயிற்றின் பசியை அடக்க! எப்போதடா ராஞ்சி இரயில் நிலையம் வரும் என்று ஆகிவிட்டது!

இந்த உணவுப் பிரச்சனை ஒரு பக்கம் என்றால் பெட்டி முழுவதும் சண்டை போட்ட படியே இருந்தார்கள் – இது என் இருக்கை, இல்லை, இல்லை என் இருக்கை என சண்டை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தது. பெட்டியில் ஒரு சர்தார்ஜி தான் பயணச் சீட்டு பரிசோதகர். ஒரு முறை அப்படியே நடந்து பயணிகள் வந்து விட்டார்களா என பரிசோதித்ததோடு சரி. பெட்டியில் அதற்கும் மேலாக இருந்த பயணிகளிடம் ஒன்றுமே கேட்கவில்லை! சண்டைகள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. எத்தனையோ முறை இரயிலில் பயணித்து இருக்கிறேன் – ஆனால் இந்த மாதிரி தொல்லைகள் இருந்ததில்லை. கொஞ்சம் தூரமே ஆனாலும் இத்தனை கூட்டத்துடனும் சண்டை சச்சரவுகளுடனும் பயணித்ததில்லை.



ஒரு வழியாக ராஞ்சி இரயில் நிலையம் சென்று சேர்ந்த போது தாவிக் குதித்து வெளியே சென்ற முதல் ஆள் நான் தான்! இரண்டாவதாக வெளியே வந்தது பிரமோத்! முதல் நாள் தத்காலில் பதிவு செய்யாமல் விட்டது தப்பே என்பதை முழுமையாக உணர்ந்து கொண்டோம். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்திருந்தது… எங்களுக்கான வாகனம் வந்த பிறகு முதலில் ஏதேனும் நல்ல உணவகத்திற்குச் செல்ல வேண்டும் என்று பேசிக் கொண்டே இரயில் அனுபவங்களையும் பேசினோம்.  இப்படி ஒரு மோசமான இரயில் பயண அனுபவம் இதுவரை கிடைத்ததில்லை என்பது தான் எங்கள் இருவரின் பேச்சாக இருந்தது! இந்தப் பயணம் இப்படி என்றால் சமீபத்தில் சென்ற இரயில் பயணத்தில் கிடைத்த அனுபவம் வேறு மாதிரி – அதைப் பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன்!

நாளை மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

வெங்கட்
புது தில்லி


பின்குறிப்பு: கேமராவில் படம் எடுக்கும் அளவிற்கு பயணம் இல்லை! அதனால் இப்பதிவில் இணைத்திருக்கும் படங்கள் இணையத்திலிருந்து....

40 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

    தலைப்பு எனக்கும் பொருந்தும்! ஹா ஹா ஹா

    அது போல முதல் வரியும்! எப்படியான பயணமும் ரசனைதான்! நானும் பயணத்தின் காதலி. அதே தான் பயணம் நிறைய பாடங்களிக் கற்றுத் தரும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்க்ட்ஜி பிஹார் இன்னும் மாறவே இல்லை! என்று தெரிகிறது. மிக மிக கஷ்டமாக இருந்திருக்கும் உங்களுக்கு என்று புரிந்து கொள்ள முடிகிறது. பீஹார் பயணம் என்றாலே ஏசி பெட்டியில் முன் பதிவு செய்துவிடுவது நல்லது என்ற பாடம் உண்டு இல்லை என்றால் போகவே வேண்டாம் என்றும். பொதுவாகவே மஹாராஷ்ட்டிரா பயணத்தில் கூட சாதாரணப் பெட்டி என்றால் மக்கள் முண்டி அடித்து அதுவும் அங்கிருந்து சென்னை என்றால் கொஞ்சம் உண்டு ஆந்திரா பார்டர் வரும் வரை இருக்கும் சில சமயம். ஆனால் பிஹார் மிக மிக மோசம்.

      இதெல்லாம் எப்போது மாறுமோ..

      //ஒரு வழியாக ராஞ்சி இரயில் நிலையம் சென்று சேர்ந்த போது தாவிக் குதித்து வெளியே சென்ற முதல் ஆள் நான் தான்! இரண்டாவதாக வெளியே வந்தது பிரமோத்! //

      ஹா ஹா ஹா ஹ சிரித்துவிட்டேன். அந்தக் கூட்டத்திலும் முண்டி அடித்து இறங்கிட்டீங்களே!!! அதுவே சாதனை!!!!!!!!

      கீதா

      நீக்கு
    2. வெங்கட்ஜி நீங்க சாப்பாடு கொண்டு வந்திருந்தாலும் சாப்பிட்டிருக்க முடிந்திருக்குமோ?!!

      கீதா

      நீக்கு
    3. //சாப்பிட்டிருக்க முடிந்திருக்குமோ?!! // இந்த வம்புதானே வேணாம்றது. அந்தக் காட்சியை நினைத்தே பார்க்க முடியலை. ஹாஹா

      நீக்கு
    4. வணக்கம் கீதாஜி!. காலையில் பதிலளிக்க முடியவில்லை!

      பயணங்கள் நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகின்றன. ஆதலினால் பயணம் செய்வோம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. பீஹார் மாற வேண்டும் என்றால் மனிதர்களின் மனநிலை மாற வேண்டும். முன்பை விட நிறைய இரயில்கள் பீஹாரில்/பீஹாருக்காக இயங்குகின்றன. என்றாலும் குறைவு தான். அத்தனை மக்கள் கூட்டம் அங்கே! நிறைய மாற்றங்கள் தேவை. மாறுவதற்கு அவர்கள் மனம் வைக்க வேண்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
    6. ஹாஹா... நல்ல கேள்வி! பல சமயங்களில் இடம் தோதாக இல்லை என்றாலும் சாப்பிட்டு ஆக வேண்டியிருந்திருக்கிறது!

      சில வருடங்கள் முன்னர் இரவு நேரம் எமர்ஜென்சி வார்டுக்கு நண்பருடன் சென்ற போது பல வித உபாதைகளுடன் உழன்று கொண்டிருக்க, மருத்துவம் பார்க்கும் சிலர் அவர்களை கவனிக்க, சில மருத்துவர்கள் அங்கேயே அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். கிடைக்கும் சிறிது நேரத்தில், கிடைத்த இடத்தில் சாப்பிட்டு ஆக வேண்டிய கட்டாயம் இருந்தால், சாப்பிட வேண்டியது தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
    7. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  2. ரயில் பயணம் அனைவருக்கும் பிடித்தமானது குவைத் ஜி அவரது தளத்தில் ஜன்னல் ஓரசீட் வேண்டுமென கவிதையில் கூவுகிறார்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கேயும் சென்று மாலை தான் படித்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
    2. இங்கே எனது தளத்தைக் குறித்தமைக்கு ஜி அவர்களுக்கு நன்றி...

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  3. குட்மார்னிங்.

    இந்தக் கஷ்டங்கள் இல்லாமல் அலகாபாத் வந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துகள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. ஒரு முறை குர்லா - கல்கத்தா எக்ஸ்பிரஸ் இல் பயணித்தபோது கொடுமையான அனுபவமாக இருந்தது. நாகபூர் இல் நடந்த ஒரு பேங்க் பரிட்சையில் கலந்து கொள்ள பீஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். அனைவரும் இந்த ரயிலில் ஏறிவிட்டார்கள். ஸ்லீப்பர் பற்றிய கவலை ஏதும் இல்லாமல், எல்லா இருக்கைகளில் நீக்கமற நிறைந்திருந்தார்கள். பெரிய மனது பண்ணி என் berth இல் உட்கார்ந்து வர அனுமதித்தார்கள்! மற்ற பயணிகளுடன் சண்டை. எங்களுக்கு வேலை இல்லை. இதில் டிக்கெட் வேறு வாங்கவேண்டுமா என்று குரலுயர்த்தி கேட்டதில் டிக்கெட் கலெக்டர் எங்கோ பதுங்கி விட்டார். கொடுமையான அனுபவம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல டிக்கெட் கலெக்டர்கள் பெயருக்கு தான் வேலை பார்க்கிறார்கள். தூக்கி வெளியே வீசி விடுவார்கள் பயணிகள் என்ற பயம்! அப்படி நடந்ததும் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி Bபந்து ஜி

      நீக்கு
  5. படிக்கும் போதே சங்கடமாக இருக்கிறது ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. இவ்வளவு சங்கடங்களையெல்லாம் எதிர்கொண்டுதான் ஆகவேண்டியுள்ளது. உங்களுக்கு பொறுமை அதிகம் என்பதை இதுபோன்ற உங்களது பயணப்பதிவுகள் தெளிவிக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் இப்படி சங்கடமும் உண்டு. ஆனாலும் பயணம் பல வித அனுபவங்களைத் தருவதால் தொடர்ந்து பயணிப்போம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. ஒரு மனுஷன் காசிக்குப் போகலாமான்னு நினைத்தால், இப்படி ஆசையில் மண்ணள்ளிப்்போடுகிறீர்களே.. அவ்வளவு மோசமாகவா வடநாட்டு இரயில் பிரயாணம் இருக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... பயம் வேண்டாம். சில பிரச்சனைகள் சந்திக்க நேர்ந்தாலும் சமாளிக்க உங்களால் முடியும் என்ற எண்ணத்தோடு காசி, ப்ரயாக்ராஜ் சென்று வாருங்கள். உங்கள் பயணம் சிறப்பாகவே நடக்கும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. இன்று சகோ துரைசெல்வராஜூ அவர்கள் எழுதி இருக்கும் கவிதையில் சண்டை இல்லாமல் என்ற வரியை படித்தவுடன் வட நாட்டு பயணங்கள் நினைவு வந்தது.

    எங்களுக்கு நாங்கள் அலகாபாத்தில் ரயிலில் முன் பதிவு செய்து போயும்( டெல்லியிலிருந்து)
    பட்ட அவஸ்தை, சார்தம் போன போது நம் முன் பதிவு செய்த டிக்கட் போலவே இன்னும் பலரும் அதே மாதிரி டிக்கட் வைத்து கொண்டு ஏரியது ஆச்சிரியம், கோவம், வருத்தம் எல்லாம் வந்தது.

    சில நல்லவர்கள் உதவியால் எப்படியோ உட்கார்ந்து கொண்டு வந்தோம்.
    கீழே இறங்கவும் முடியாது அதற்கும் சில நல்ல இளைஞர்கள் உதவினார்கள்.


    நீங்கள் சொன்னது போல பலவிதமான மணங்களால் மூச்சு திணறிய அனுபவமும் உண்டு.

    நாம் பயணத்தில் எது எல்லாம் சாப்பிட பயப்படுவோம் அதெல்லாம் அவர்கள் சாப்பிடுவது ஆச்சிரியமாய் இருக்கும். மிச்சர், ஓமப்பொடி, போன்றவை. அதுவும் மெகா பாக்கெட் பார்க்க பயமாய் இருக்கும். கடவுளே அவர்களுக்கு வயிறு ஒன்றும் செய்ய கூடாது என்ற பிரார்த்தனையும் செய்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரயில் பெட்டிக்குள் சண்டையில்லை என்று சொன்னதெல்லாம் அந்தக் காலப் பயணத்தைக் குறித்து....

      இங்கே குறித்ததற்கு மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
    2. ஹாஹா... பல முறை இப்படியான வட இந்திய பயணங்களில் பார்த்ததுண்டு என்றாலும் கொஞ்சம் கடினமாகதான் இருந்தது இப்பயணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  9. கடினமான ஒரு பிரயாணம் தான். எல்லாத்தையும் சகித்துக்கொள்ளலாம் ஒன்றை தவிர - அபானவாயுத் தொல்லை. பெரிய கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடுமை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  10. அந்த மூன்றாவது புகைப்படம் பயங்கிரமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... இணையத்திலிருந்து தான் எல்லா படமும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

      நீக்கு
  11. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க. சொல்லி வச்சார் வள்ளுவர் சரிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

      நீக்கு
  12. ஆகா... படாதபாடு தான் பட்டிருக்கின்றீர்கள்....

    தங்களுக்கே உரிய நகைச்சுவையுடன் அருமை....

    படங்கள் இல்லா விட்டால் என்ன?..

    தங்களது நேர்முக வர்ணனையே அங்கிருந்த சூழலைப் படம் பிடித்துக் காட்டுகின்றது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் பயணம் இப்படி அமைந்து விடுகிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  13. வடநாட்டு ரயில் பயணம் மோசம்ன்னு அம்மா சொல்ல கேட்டிருக்கேன். என்னதான் ரிசர்வ் செஞ்சு போனாலும் அடாவடியாய் இடம் பிடிப்பாங்கன்னு அம்மா சொல்லும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில சமயங்களில் அப்படித்தான். ஆனால் ஒரு சில வட இந்திய பயணிகள் ரொம்பவே நல்லவர்களாக இருந்ததுண்டு! நல்லதும் கெட்டதும் கலந்தது தானே வாழ்க்கை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  14. வடநாட்டுப் பயணிகள் அநாகரிகமாக நடந்துகொள்வது மிகப் பல ஆண்டுகளாகவே நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ரெயிவே நிர்வாகமோ சம்பந்தப்பட்ட அரசுகளோ கண்டுகொள்ளாமலிருப்பது கண்டிக்கத்தக்கது.

    கண்டிக்க வேண்டியவர்கள் கண்டித்தால் பயன் விளையலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் சரி செய்ய முடியாதவை - மக்கள் திருந்தினால் தான் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பசி பரமசிவம் ஜி!

      நீக்கு
  15. வட இந்தியப் பயணம் குறிப்பாக பீஹார் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. இப்போது உங்கள் பயணத்தின் வழி இத்தனை கஷ்டங்கள் என்றும் தெரிகிறது. சகோ கோமதி அவர்கள் சொன்னதைப் பார்த்தாலும் பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏசி கோச் என்றால் இத்தனை அவஸ்தை இருக்காது என்று நினைக்கிறேன்.

    என்றாலும் பயணங்கள் கற்றுத் தருவது நிறையவே தான். அதுவும் உங்களுக்கு நிறையவே பயண அனுபவங்கள் உண்டுதான்.

    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏசி கோச்சில் அத்தனை பிரச்சனைகள் இல்லை. சாதாரண கோச்களில் 72 பேர் பயணிக்க வசதி என்றால் குறைந்தது 100 பேராவது இருப்பார்கள். :(

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....