திங்கள், 17 பிப்ரவரி, 2020

பாய்ச்ச மாடு - பத்மநாபன்



அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாமா?

பறவைகளும் விலங்குகளும் தன் தேவைக்கு மிஞ்சிய எதையும் தொடுவதில்லை. ஆனால், மனிதனோ… தலைமுறை தாண்டிய சொத்துகள் இருந்தும் பணத்தாசையை விடுவதில்லை!

உண்மை தான் – எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் எனும் தேடலில் இருப்பது மனித ஜந்து மட்டுமே! 

 
இன்றைய பதிவு பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தில்! வாருங்களேன் படிக்கலாம்! – வெங்கட், புது தில்லி.

பாய்ச்ச மாடு


படம்: இணையத்திலிருந்து...

ஜல்லிக்கட்டு ஸீஸன் முடிந்தாலும் இன்னும் அங்க  இங்க ஏதோ காரணத்த வச்சு ஜல்லிக்கட்டு  நடந்துக்கிட்டுதான் இருக்கு. எங்க ஊர்ல இந்த மாடுபிடி கிடையாது. மாட்டு வண்டி ரேஸ் உண்டு. முன்னால ஈத்தாமொழி தாண்டி கொய்யன் விளை, சுண்டபற்றிவிளை பக்கம் நடக்கும் மாட்டு வண்டி ரேஸ் பாக்க வாடகை சைக்கிள் எடுத்துக்கிட்டு  முக்கி முக்கி சைக்கிள் சவுட்டி போயிருக்கோம். இப்ப நடக்கான்னு தெரியல்லை. ஒத்த மாட்டு வண்டி ரேஸ், ரெட்டை மாட்டு வண்டி  ரேஸுன்னு நடக்கும். ரேஸைப் பாக்கதைவிட, வித விதமான காளை மாடுகளை பாக்கதில அவ்வளவு சந்தோஷம். நல்ல லட்சணமான கம்பீரமான காளை வந்தாப்போதும், இந்த அஜீத்து, விஜயெல்லாம் வந்தாக்கூட பொறத்தப் போயிறனும். அட நம்ம நயன்தாரா வந்தாலே மாட்டுக்கு பொறகுதான். அந்த கம்பீரமான காளையைக்காண கூட்டம் சேர்ந்து ..ன்னு பார்த்துக்கிட்டு நிக்கும். ஆனா சமயத்தில ஏதாவது சொங்கி காளை பரிசு வாங்கிகிட்டு போயிரும்.

அடுத்தால எந்த இடத்தில கூட்டம் கூடுமுன்னா ரேஸுல தலை தெறிக்க ஓடி பாதியில எங்கேயாவது ஏதாவது வண்டி பெப்பரப்பான்னு குப்புறக் கவுந்து கிடக்கும். அங்க ஒரு கூட்டம் ..ன்னு கூடி ரிசர்ச் செய்யும்.

அப்புறம் இந்த ரேஸ் நடத்துக கமிட்டி பண்ணுக அட்டகாசம் இருக்கே, தாங்க முடியாது. ரேஸ் வண்டி முன்னாடி பைக்கில போறதுல இருந்து மைக்குல காட்டுக்கத்தல் போடுகது வரைக்கும், ...என்ட அம்மே! என்னத்தச் செய்ய, இதெல்லாம் சகிச்சுக்கிட வேண்டியதுதான். அவ்வளவு கஷ்டப்பட்டு எல்லா ஏற்பாடெல்லாம் செய்துப் போட்டு இந்த அளப்பறை கூட செய்யாட்டி எப்பூடி.

நான் சின்னப்பையனாக இருந்தபோது எங்க வீட்டுல நாலு மாடு இருந்தது. (இலக்கணம் பாக்கப்படாது). அதனதன் குணத்தை வச்சு கூப்புடுவோம். ஆனா ஒரு ரொம்ப சாதுவான பசுவுக்கு லச்சுமின்னு பேரு வச்சோம். ஆனா அதை செவலைன்னு கூப்பிட்டே பழகிப் போச்சு.

எங்க ஊருல ரண்டுகால் மாட்டையே ஒழுங்கா பேரு சொல்லி கூப்பிட மாட்டான். ஏதாவது ()ட்டப் பேரு உண்டு பண்ணி பரப்பி உட்டுருவான். பின்னே ஒரே பேருல ஏழு எட்டு பேரு இருந்தா நாங்களுந்தான் என்ன செய்வோம். அதுலயும் எங்க ஊருல இந்த வைத்தி ங்கிற பேருள்ள ஆளுகளுக்கு குறைவு கிடையாது. ஏன்னா, வைத்தீஸ்வரன் சாமிதான் எங்க குடும்பசாமி. அதனால எங்க பாத்தாலும் வைத்திதான். கட்ட வைத்தி, பீரங்கி வைத்தி, பட்டாளம் வைத்தி, வாத்து வைத்தி, சண்டியர் வைத்தி என்று prefix போட்டாத்தான் குழப்பம் குறையும். என்னது, எனக்கு என்ன பட்டப் பேரா! அது இப்ப எதுக்கு. மாட்டை விட்டு போட்டு மரத்தப் பிடிச்சக் கதையால்லாப் போச்சு.

நாலு பசுவுல ஒண்ணு செவலை. இதுக்கு கொம்பு கொஞ்சம் வளைஞ்சு கோணலா இருக்கும். ஆனாலும் எங்க வீட்டுல எல்லாத்துக்கும்இந்த செவலையை ரொம்ப பிடிக்கும். ஒருதடவை இந்த செவலை உப்பளத்தில் இருந்து திரும்பும் போது படுவத்தில (புதை சகதி) மாட்டிக்கிட்டு வெளிவர முடியாம திணறிப் போச்சு. எங்க தாத்தாவும் வைத்திலிங்க மச்சானும் சேர்ந்தும் வெளியில இழுக்க முடியல்ல. நான் அழுதுகிட்டே ஊருக்கு ஓடி வந்து அப்பாவிடம் சொல்ல ஊரிலிருந்து நாலைந்து பேர் சென்று படுவத்தில் இருந்து வெளியே இழுத்து கொண்டு வந்தார்கள்.

அடுத்துது கருப்பு நிறத்துல நல்ல லட்சணமான பசு. இதுக்கு மொட்டக் கொம்பு. ஆனாலும் அழகா இருக்கும். இந்த ரண்டும் குட்டியில இருந்தே வீட்டில வளர்ந்ததால எல்லோருக்கும் செல்லம்.

அப்புறம் எனக்கு ஒரு ஒம்பது பத்து வயசு இருக்கும் போது நாகர்கோவிலில் இருந்த எங்க அத்தை வீட்டுல இருந்து இரண்டு இறக்குமதி ஆச்சு. மாமாவுக்கு வெளியூர் வேலை மாற்றம் ஆனதால அங்க இருந்த ரண்டு பசுவும் எங்க ஊர் வந்தது. ரண்டும் சரியான டவுண் பெருச்சாளிகள். ஒண்ணு கருப்பா சின்ன கொம்போடவும் மொறைப்போடவும்தான் வந்தது.  அதுக்கு பாய்ச்ச மாடுன்னே பேரு நிலைச்சுப் போச்சு. எங்க அப்பாவுக்கு மட்டும்தான் கொஞ்சம் கட்டுப்படும். எங்க அப்பா ஊருல இல்லாத சமயங்களில் அதனிடம் பால் கறக்க வேண்டுமானால் எனது இரண்டாவது அக்கா, அப்பாவின் வேட்டியும் வெள்ளை சட்டையும் எடுத்து போட்டுக் கொண்டு அதன் கண்ணில் பட்டும் படாமலும் அதை ஏமாற்ற முயல எனது மூன்றாவது அக்கா அதனிடம் பால் கறக்க எடுக்கும் பிரயத்தனம் இருக்கிறதே, இப்போது நினைத்தால் சிரிப்பு வருகிறது. அது சரியான எம்டன். சமயத்தில இந்த ஏமாத்து வித்தையை கண்டு பிடிச்சுரும். அப்பறம் என்ன, ஒரே எத்து. பால் சொம்பு நசுங்கிப் போன பஞ்சாயத்து சொம்புதான்.

கடைசியாக பாய்ச்சமாட்டுடன் கூடவே வந்தது ஒரு மொட்டைச் செவலை. இதுக்கு எப்படியோ 'பக்கிடி' ன்னு ஒரு பேரு நிலைச்சுப் போச்சு. பார்ப்பதற்கு கொழு கொழுன்னு செல்ல தக்கிடியாட்டமா இருக்கும்.

இந்த நாலு மாடுகளையும் ஓட்டிக் கொண்டு எங்க ஊர் உப்பளத்தை ஒட்டி உள்ள பெரிய மேய்ச்சல் இடத்திற்கு பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் எங்கள் பாட்டாவுடன் நானும் சிறுமியாக  இருந்த எனது அக்காவும் கிளம்பி விடுவோம். கூடவே வைத்திலிங்க மச்சானும் தனது மாடுகளுடன் இணைந்து கொள்வார். எங்க பாட்டா இவரை மச்சான் என்பார். அதனால் நானும் அவரை மச்சான் என்றே அழைப்பேன். பதிலுக்கு என்னை அவர் குட்டி மச்சான் என்பார். எனக்கு அப்போது தெரியாது பிற்காலத்தில் வடக்கு தேசத்திலிருந்து ஒருவர் தெற்கு தேசம் வந்து ஊரையே மச்சான் என்று கூப்பிடப் போகிறார் என்று.

இந்த மாடு மேய்க்கும் பணியில் இருந்த காலம் எங்களுக்கு பொற்காலம். பக்கத்தில் இருந்த சின்ன வாய்க்காலில் எங்க பாட்டா நீச்சல் கற்றுக் கொடுப்பார். தென்னை ஓலையில் காற்றாடி செய்து கடிகார முள் அமைப்பிலான உடைமரத்து முள்ளில் இணைத்து அது வேகமாக சுற்றுவதை கண்டு மகிழ்ந்த மகிழ்ச்சியை இப்போது எனது மகளுக்கு கொடுக்க முடியாதது வருத்தம்தான்.

ஒருமுறை எங்கள் பாட்டாவிற்கு முடியாத போது மாடுகளை மேய்ச்சலுக்கு காலையில் கொண்டு விட்டு விட்டு மதியம் போய் அழைத்து வர அப்பாவும் நானும் சென்றோம். நான் கையில் ஒரு கொம்பை வைத்துக் கொண்டு நான்கு மாடுகளையும் சேர்த்துக் கொண்டிருந்தேன். அப்பா கொஞ்சம் தள்ளி பின்னால் வந்து கொண்டிருந்தார். இந்த பாய்ச்ச மாட்டிற்கு என்மேல் என்ன கோபமோ தெரியவில்லை. ஒருவேளை இந்த பொடியன் கொம்பு வைத்து நம்மை மிரட்டுவதா என்று நினைத்ததோ தெரியவில்லை, அப்படியே திரும்பி என்னை ஒரு முட்டு முட்டி தூக்கிப் போட்டது. நல்லவேளை, கூர்மையான கொம்புகளில்லாததால் வண்டி பஞ்சர் ஆகவில்லை. கொஞ்சம் தள்ளி நின்று கொண்டு இருந்த அப்பா ஓடி வரவும் பசு ஓடி விட்டது.

ஓடி வந்த அப்பா பசுவை விரட்டி விட்டு என்னை அணைத்து தோளில்  தூக்கி போட்டுக் கொண்டார். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் அந்த ஆதரவு ரொம்ப சுகமாக இன்றும் நினைவில் உள்ளது. சிறுவயதில் நான் உட்பட யாரையும் அப்பா தோளில் தூக்கிக் கொஞ்சியதாக நினைவு இல்லை. ஏனென்றால் அவருக்கு அப்படி பாசம் காட்டத் தெரியாது. ஆனால் அவர் காட்டும்  கண்டிப்பிலும் எங்களால் அவரது அன்பை உணர முடியும். எனது மகள் குழந்தையாக இருந்தபோது அவரது பக்கத்தில் சென்றால், "கெட்டிக்காரி! கெட்டிக்காரி!" என்று முதுகில் தட்டிக் கொடுப்பார். பேத்தியிடமே அவ்வளவுதான் அன்பை வெளிக்காட்டத் தெரியும். ஆனால் பேரக்குழந்தைகளைப் பார்த்தால் மிகுந்த பரவசமும் மகிழ்ச்சியும் அடைவது நன்கு தெரிந்தாலும் தோளில் போட்டுக் கொண்டு கொஞ்சுவது போன்றவை அவருக்கு தெரியாது. இப்படிப்பட்டவர் அந்த பாய்ச்சமாடு புண்ணியத்தில் என்னை தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு அணைத்தது மறக்கவா செய்யும். இப்படியாக பாய்ச்சமாட்டுடனான ஜல்லிக்கட்டில் மாடு என்னை பந்தாடினாலும் பரிசு என்னவோ எனக்குத்தான்.

நண்பர்களே, இந்த நாளின் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்


பத்மநாபன்
புது தில்லி.

16 கருத்துகள்:

  1. வாசகம் மிக அருமை.

    //சமயத்தில இந்த ஏமாத்து வித்தையை கண்டு பிடிச்சுரும். அப்பறம் என்ன, ஒரே எத்து. பால் சொம்பு நசுங்கிப் போன பஞ்சாயத்து சொம்புதான்.//

    நல்ல வேளை அக்காவிற்கு ஒன்றும் ஆகவில்லை.


    //நல்ல லட்சணமான கம்பீரமான காளை வந்தாப்போதும், இந்த அஜீத்து, விஜயெல்லாம் வந்தாக்கூட பொறத்தப் போயிறனும். அட நம்ம நயன்தாரா வந்தாலே மாட்டுக்கு பொறகுதான்.//

    நல்ல நகைச்சுவையாக இருக்கிறது.

    //எனக்கு அப்போது தெரியாது பிற்காலத்தில் வடக்கு தேசத்திலிருந்து ஒருவர் தெற்கு தேசம் வந்து ஊரையே மச்சான் என்று கூப்பிடப் போகிறார் என்று.//

    நல்ல குறும்பு.


    //பாய்ச்சமாட்டுடனான ஜல்லிக்கட்டில் மாடு என்னை பந்தாடினாலும் பரிசு என்னவோ எனக்குத்தான்.//

    அப்பா தோளில் போட்டு கொண்டு அணைத்த நினைவுகளை பகிர்ந்து கொண்டு அதை பெரிய பரிசாக சொன்னது கண்ணின் ஒரத்தில் கண்ணீர் துளிர்த்தது.
    அப்பாவின் நினைவுகள் மனதில்.

    பதிவு மிகவும் பிடித்து இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா தோளில் போட்டுக் கொண்டு அணைத்த நினைவுகள் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அன்பு வெங்கட்,
    உண்மையான வாசகம். எத்தனை இருந்தால் ஒரு மனிதனுக்குப் போதும்?
    திரு .பத்மனாபனின் நெல்லை எழுத்து மிக நெகிழ்ச்சி.
    அற்புதமான ஓட்டம். அன்பு கோமதி அத்தனையையும் மேற்கோள்
    காட்டி விட்டார்.
    இப்படியான அப்பாக்கள் எத்தனையோ பேர் நம் ஊரில்.
    என் அப்பாவாவது தன் பேரனை அப்படிக் கொண்டாடுவார்.
    எங்களைத் தூக்கி வைத்ததே இல்லை என்று அம்மா சொல்வார்.
    மிக அருமையான எண்ணங்கள். மனதில் பதிந்தது. மிக நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      அண்ணாச்சியின் நெல்லை எழுத்து எனக்கும் பிடித்த ஒன்று தான் மா... அவ்வப்போது எழுதுங்கள் என சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பத்மநாபன் அண்ணாச்சி அன்பால் மனதில் முட்டி விட்டார்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அன்பால் மனதில் முட்டி விட்டார்...!// ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  4. எழுத்து நடைக்காகவே வாசிக்க வந்தேன். ஏமாற்றமில்லை.

    //அட நம்ம நயன்தாரா வந்தாலே மாட்டுக்கு பொறகுதான்.// - அட..அப்படியா? இது நாரோயில்காரங்களுக்குத் தெரியுமா? ஹா ஹா

    //மாட்டை விட்டு போட்டு மரத்தப் பிடிச்சக் கதையால்லாப் போச்சு.// - விட்டுப் போட்டு... பிடிச்ச கதையால்ல போச்சு - இப்படித்தான் பேச்சு வழக்கு. 'ப்' படிக்கும் சுவையைக் குறைக்கிறது.

    //கொம்புகளில்லாததால் வண்டி பஞ்சர் ஆகவில்லை. // - ஹா ஹா... இதுக்கு எத்தனை பேருக்கு அர்த்தம் விளங்கியிருக்குமோ.

    அடிக்கடி எழுதுங்க அண்ணாச்சி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை பதிவு ஏமாற்றவில்லை என்றறிந்து மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      எத்தனை பேருக்கு அர்த்தம் விளங்கியிருக்குமோ? ஹாஹா...

      அடிக்கடி எழுதுங்கள் என்று நானும் சொல்லிக் கொண்டே இருக்கிறேன். பணிச்சுமை அவரை எழுத விடுவதில்லை. அதுவும் இல்லாமல் அவர் எழுத வேண்டுமென்றால் தமிழ்ச் சங்கத்தில் கச்சேரி வைக்க வேண்டும் - கச்சேரி கேட்டுக் கொண்டே அலைபேசி வழி தட்டச்சு செய்து அனுப்பி விடுவார்! ஹாஹா... இந்தப் பதிவு கூட அப்படி கச்சேரிகளில் எழுதியது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. சிறந்த பதிவு. வாழ்த்துக்கள்...

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பதிவுகள் சந்தித்தபோது சிந்திக்கவைத்த 10 பதிவுகள் (17.02.2020) எமது தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அருமையான வாசகம்.  பணத்தை விடுங்கள்   பஃபே சிஸ்டத்தில் சாப்பிடும் மனிதர்களை பார்த்திருப்போம்... தேவைக்கு மேல் ஆசைப்பட்டு தட்டிலெடுத்துப்போட்டுக்கொண்டு கொட்டுவார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பஃபே-வில் சாப்பிடும் மனிதர்கள் - எத்தனை வீணடிக்கிறார்கள். உண்மை தான் ஸ்ரீராம். பார்க்கும்போதே நெஞ்சு பதறும் எனக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. சுவாரஸ்யமான நடையில் சுவாரஸ்யமான பிளாஷ்பேக்!  நடையையும் ரசித்தேன்.  விவரங்களையும் ரசித்தேன்.  என் பாட்டி (அப்பம்மா_  மாடு வளர்த்தார் என்று தெரியும்.  நான் பார்த்ததில்லை.  எங்கள் வீட்டில் என் மூத்த சகோதர சகோதரிகள் நிறைய கதை சொல்வார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் அம்மாவின் வீட்டிலும் மாடு வளர்த்ததுண்டு ஸ்ரீராம். ஆனால் நாங்கள் பார்த்ததில்லை. அம்மா வழி தாத்தா-பாட்டி இருவரையுமே நாங்கள் பார்த்ததில்லை. அம்மாவின் திருமணத்திற்கு முன்னரே அவர்கள் இறந்து விட்டார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. எத்தனை இருந்தாலும் இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் எனும் தேடலில் இருப்பது மனித ஜந்து மட்டுமே!

    உண்மை
    உண்மை
    அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....