சனி, 27 ஜூன், 2020

காஃபி வித் கிட்டு – சொற்கள் – சரிகா ஜெயின் – நெகிழி – மின்னூல் – மூதாட்டி – லோட்டா


காஃபி வித் கிட்டு – பகுதி 73

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


வீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது கவனமாக இருங்கள்.  கற்கள் உயிரைக் கொல்லும்! சொற்கள் உயிரோடு கொல்லும்!


இந்த வாரத்தின் ரசித்த காணொளி:


என்னவொரு தன்னம்பிக்கை இந்தப் பெண்மணிக்கு – இரண்டு வயதில் போலியோ – ஒடிஷாவின் கிராமத்தில் பிறந்தவருக்கு வந்த போலியோவை மலேரியா என நினைத்து மலேரியாவுக்கான மருந்து கொடுத்து போலியோ முழு வீச்சில் பாதிப்பினைத் தந்தது – சரிகா ஜெயின்!  அவர் தனது பாதிப்பினைக் கடந்து CA முடித்து, பின்னர் IRS அதிகாரியாக தற்போது பணிபுரியும் சரிகா ஜெயின் அவர்களின் வாழ்க்கை அவர் குரலிலேயே – தமிழ் பிரியர்கள் மன்னிக்க – இந்த காணொளி ஹிந்தியில்.  இவர் பற்றிய ஆங்கில காணொளி இணையத்தில் கிடைக்கவில்லை.


 

இந்த வாரத்தின் ரசித்த படம்:


Add caption
 

இந்த வாரத்தின் ரசித்த படமாக வருவதும் ஹிந்தியில் தான் இருக்கிறது!  ஆனால் அது சொல்ல வரும் விஷயம் நல்ல விஷயம் என்பதால் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் - விளக்கத்துடன்.  மனிதன் இந்த பூமியின் மீது நெகிழி கொண்டு தாக்குதல் நடத்த, பூமி அதே நெகிழியால் நம்மை முழுவதும் மூடிக்கொள்ளும்படிச் செய்திருக்கிறது – கொரோனா காலத்தில்!  இப்பொழுதும் நீங்கள் திருந்தாவிட்டால்…..


ஏழு சகோதரிகள் – பாகம் 1 - தரவிறக்கம்


ஏழு சகோதரிகள் – பாகம் 1 என்ற தலைப்பில் வெளியான மின்னூல் – மணிப்பூர் மற்றும் நாகலாந்து ஆகிய இரண்டு மாநிலங்கள் – ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் இரண்டு - அங்கே சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்ட மின்னூல் வரும் செவ்வாய்க் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! இந்த வசதி வரும் செவ்வாய் மதியம் 12.00 மணி வரை மட்டுமே!

என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி கீழே:

மின்புத்தகங்கள் பட்டியல்


மூத்த தம்பதி - பூங்காவில்:


எனது வீட்டின் எதிரே ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு.  அங்கே உடற்பயிற்சி செய்வதற்கென கருவிகள் அமைக்கப்பட்ட ஒரு சிறு பூங்கா. சில இருக்கைகளும் அங்கே உண்டு.  தினமும் காலையும் மாலையும் அங்கே ஒரு மூத்த தம்பதிகள் அமர்ந்து கொண்டு காற்று வாங்கிக் கொண்டிருப்பார்கள்.  எந்த வித பேச்சு வார்த்தையும் கிடையாது.  உட்கார்ந்து – அதுவும் இருவரும் அமர்ந்திருக்கும் விதத்திலேயே அவர்கள் பேசிக் கொள்வதற்கு வாய்ப்பில்லை – வேறு வேறு திசை நோக்கி அமர்ந்து கொண்டிருப்பார்கள் – இத்தனை வருடத்திற்குப் பிறகு பேசிக் கொள்ளாமலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முடியும் என்பதைப் போல, சிறிது நேரத்திற்குப் பிறகு முதியவர், மூதாட்டியை நோக்கி ஒரு பார்வை – இரண்டு பேரும் எழுந்து கொள்வார்கள்!  ஹாஹா… “இந்தப் பார்வைக்கு எனக்கு அர்த்தம் தெரியாதா?” என்று மூதாட்டி சொல்வது போல இருக்கும் எனக்கு! சில நாட்களாக அவர்களை வேடிக்கை பார்ப்பதில் கொஞ்சம் பொழுது போகிறது எனக்கு!


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


2011-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – ’காதறுந்த ஊசியும் எவர்சில்வர் லோட்டாவும்’ ஒன்றிலிருந்து சில வரிகள்…

 

சில வருடங்களுக்கு முன்பு நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்றிருந்தேன்.  பிரவாகமாக தங்குதடையின்றி அங்கே ஓடிக்கொண்டு இருந்த  கங்கையில் நாங்கள்  நீராடிக் கொண்டிருந்த  போது அங்கே ஒரு பெரியவரும் கையிலிருந்த லோட்டாவில் தண்ணீர் எடுத்து நீராடிக் கொண்டிருந்தார்.  கங்கையின் பிரவாகத்தில் கையிலிருந்த லோட்டா அடித்துக் கொண்டுச் செல்ல, பெரியவர் செய்வதறியாது திகைத்தார்.

 

பக்கத்திலேயே நீராடிக்கொண்டு இருந்த அவரது மகன் இதனைப் பார்த்தவுடன், “இவ்வளவு வயசாச்சு, ஒரு லோட்டாவைக்  கூட பத்திரமா வச்சுக்க முடியாதா?” என்பது போன்ற சொற்களால் சுட, அந்தப் பெரியவர் வாயடைத்து நின்று கொண்டிருந்தார். அவர் இப்படித் திட்டத்திட்ட நாங்கள் கூட ஏதோ நவரத்தினங்கள் பதித்த தங்க லோட்டாவைத்தான் விட்டுவிட்டாரோ என நினைத்து, அந்த பெரியவரின் மகனிடம் கேட்டே விட்டோம்


முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


காதறுந்த ஊசியும் எவர்சில்வர் லோட்டாவும்


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

50 கருத்துகள்:

  1. இன்றைய வாசகம் அருமை ஜி

    எத்தனையோ வினோதமான தம்பதிகள் இவ்வுலகில் உண்டுதான்...

    தனக்கும் முதுமை வரும் என்பதை உணராத முடுமைகள் இவ்வுலகில் ஏராளம் உண்டு.

    மின்நூல் தொடர்ந்து வரட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்சி கில்லர்ஜி.

      தம்பதிகள் - இப்படி எத்தனையோ பேர் உண்டு - உண்மை தான்.

      தனக்கும் முதுமை வரும் - உணர்ந்தால் நல்லதே.

      மின்னூல் - நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. இன்றைய வாசகம், இன்றைய பதிவு, அதிலும் ரசித்த படம் எல்லாமும் அருமை. சரிகா ஜெயின் பற்றிப் படித்தேன். முழு விபரங்கள் பின்னர் காணொளியில் மத்தியானமாப் பார்க்கிறேன். மொத்தத்தில் பதிவு அருமை. தொலைந்த எவர்சில்வர் டம்பளர் கங்கையின் ஆழத்தில் எங்கே கிடக்கோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா...

      தொலைந்த லோட்டா - எங்கே கிடைக்கிறதோ? அதானே.... உருண்டு உருண்டு எங்கே போனதோ?

      நீக்கு
  3. மூத்த தம்பதிகள் பற்றிய செய்தியைக் கண்டதும் திருநீலகண்டர் வரலாறு நினைவிற்கு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூத்த தம்பதிகள் - திருநீலகண்டர் நினைவுக்கு வரவைத்தனரா.... நல்லது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
  5. வாசகம் அருமை.  நினைவுக்கு வந்த திரைபபடப்பாடல் வரிகள் :  "கல்லால அடிச்ச அடி வலிக்கவில்லை ராசா...   சொல்லாலே அடிச்சுப்பிட்டே துடைச்சு விடு லேசா...."  (குறள் எல்லோருக்கும் தெரியும், நினைவுக்கு வரும்)

    சரிகா!  இந்தப் பெயர் இருந்தாலே ஏதாவது கஷ்டம் அனுபவிப்பார்கள் போலும்.  தன்னம்பிக்கையும் அவர்கள் கூட இருக்கும் போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி

      சொல்லால் அடி! அதிக வலி!

      சரிகா - பெயரில் என்ன இருக்கிறது! தன்னம்பிக்கை மனிதர்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  6. 7 சகோதரிகள் கணினிக்கு வராமல் ஆண்ட்ராய்டு டிவைஸுக்கு செல்கிறது!  கணினிக்கு வந்தால் நலம்.  என்ன செய்ய?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த மின்னூல் Kindle for PC -க்கு இருக்கிறதே ஸ்ரீராம். Send to Android என வரும் இடத்தில் க்ளிக்கி மாற்றிக் கொள்ளலாம். முயற்சி செய்யுங்கள்.

      நீக்கு
    2. இல்லை ஐய்யா. ஏழு சகோதரிகள் பாகம் 2 தவிர ஏனைய 3 நூல்கள், ஆதி அடுக்களை நூல், கடைசி நூல் அணைத்தும் மொபைலுக்கு மட்டுமே செல்கிறது. பீசீயில் ஓப்பென் ஆகலை. Screen reader support enabled ஆக இருக்கனும். அதர்க்கு அணைத்து புகைப்படங்களுக்கும் விளக்கம் கொடுத்திருக்கனும் என்று அணுமானிக்கிறேன்.

      நீக்கு
    3. இந்த நூலுக்கான பக்கத்தில் நான் பார்க்கும் போது Kindle for Pc தெரிகிறது அரவிந்த். நான் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து WhatsApp செய்கிறேன்.

      நீக்கு
  7. பிள்ளைகள் பற்றிய மாறுபட்ட கருத்துகள் இருந்திருக்கும் அந்த முதிய தம்பதிகளுக்கு.  பெற்றவர் கடுமையாக இருப்பார்.  தாய் கனிவாக இருப்பார்.  அந்தந்த எண்ணங்களில் அவர்கள் தனித்தனியாக அப்பழைய நினைவலைகளில் மூழ்கி இருப்பார்கள்!  

    பழைய பதிவு 150 வது பதிவு!   அங்கு சென்றதும் நான் முதலில் பார்ப்பது என் கமெண்ட் அங்கு இருக்கா என்றுதான்.  இருந்து விட்டால், அப்புறம் மேலோட்டமாக பார்த்து எதைப்பற்றி என்று பார்த்துக்கொள்வேன்.   இல்லை என்றால் முழுவதும் படிப்பேன்.  இப்பவும் அப்படிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிள்ளைகள் பற்றிய மாறுபட்ட கருத்துகள் - இருந்திருக்கலாம்.

      பின்னோக்கிப் பார்க்கலாம் - 150வது பதிவு! ஆமாம். உங்கள் கருத்தையும் இருந்தால் பார்த்து, அதைப் படிப்பது ஒரு அனுபவம் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி...

    மூத்த தம்பதிகள் வீட்டில் உரையாடிக் கொண்டே இருப்பார்களோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      //வீட்டில் உரையாடிக் கொண்டே இருப்பார்களோ...// இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. இன்றைய பொன்மொழி நிதர்சனம்...

    அருமையான செய்திகளுடன்
    இன்றைய பதிவு ...

    நலம் வாழ்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

      இன்றைய பதிவின் பகுதிகள் பற்றிய உங்கள் கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  10. எத்தனை கொரோனா வந்தாலும் நாங்க திருந்த மாட்டோம்ன்னு சிலர் இருக்காங்க.. இரண்டு நாளுக்குமுன் கடைக்கு சென்றுவரும்போது எனக்குமுன் வண்டியில் சென்றவர் 500மீட்டர் போறதுக்குள் நாலு முறை எச்சில் துப்பிக்கிட்டே போனார். பின்னாடி வருபவர்மீது தெறிக்கும்ன்னு விவஸ்தை துளிகூட இல்லை. மாஸ்க் போட சொன்னால் மூக்கை விட்டுட்டு வாய்க்கு மட்டும் போட்டுட்டு போறாங்ல..
    சமூக இடைவெளி இல்லை. இன்னும் நாம் திருந்தலை என்பதற்கு இதுதான் சான்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருந்தாத மனிதர்கள் - ஒன்றும் செய்வதற்கில்லை ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  11. வாசகம் அருமை ஜி. மிகவும் ரசித்தேன். பஞ்ச் போல இருக்கு!

    சரிகா ஜெயின் காணொளி கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

    பிடித்த படத்தின் கருத்து அருமை. உண்மைதானே!

    மின்னூலுக்கு வாழ்த்துகள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      சரிகா ஜெயின் - ஆங்கிலத்தில் இல்லை ஜி. இருந்திருந்தால் அதையே சேர்த்திருப்பேன்.

      உண்மையான கருத்தே.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி கீதாஜி.

      நீக்கு
  12. முதியவர்கள் இத்தனை காலம் நல்ல புரிதலோடு வாழ்ந்ததன் அடையாளம் என்றே தோன்றுகிறது. ஒருஅருக்கொருவர் அடுத்தவரது ஒவ்வொரு அசைவும் கூட மனப்பாடமாய் புரிந்திருக்கும்!!!!

    காதறுந்த ஊசியும், எவர்சில்வர் லோட்டாவும் நீங்கள் சொல்லியிருக்கும் சில வரிகளே சொல்லுகிறது இன்றைய வாசகம்!! அந்தச்சுட்டி சென்று வாசிக்கிறேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிதலின் அடையாளம் - இப்படியும் இருக்கலாம் கீதாஜி.

      பின்னோக்கி பதிவினை வாசித்து விட்டீர்கள் போலும். நன்றி.

      நீக்கு
  13. வாசித்தேன் ஜி. பட்டினத்தாரின் பாடல் சொல்லி அருமையா சொல்லிருக்கீங்க. அந்த மகனை நினைத்தால் இப்படியும் இருக்காங்களேன்னு தோணுது. மெத்தப்படிச்சு பெரிய வேலையில் இருந்தும் என்ன பயன்?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் சிலர்.... ஒன்றும் செய்வதற்கில்லை கீதாஜி. நாம் சொன்னால் நம்மையே தப்பாகச் சொல்வார்கள் இவர்கள்.

      நீக்கு
  14. இன்றைய வாசகம் மிகவும் சிறப்பான வாசகம்.

    சரிகா ஜெயின் உங்கள் குறிப்புகளை வாசித்ததில் அவர் நிஜமாகவே தன்னம்பிக்கைப் பெண். உதாரணப் பெண் என்று தெரிந்து கொண்டேன்.

    ரசித்த படத்தின் கருத்தை நீங்கள் சொல்லியிருப்பதால் எளிதாகியது புரிந்துகொள்ள. நல்ல கருத்து. மக்கள் திருந்த வேண்டுமே!

    மின்னூலுக்கு வாழ்த்துகள்.

    முதியவர்களின் தளர்ச்சியாக இருக்கலாம் அவர்கள் பேசிக் கொள்ளாததற்குக் காரணம். இத்தனை வருடங்கள் பேசாததையா இனி பேசிக் கொள்ளப் போகிறோம் என்றும் இருக்கலாம்.

    பின்னோக்கி : இப்படியான மகன்கள் மனதிற்கு வேதனை தருபவர்கள். தங்களுக்கும் வயது ஆகிறது என்ற எண்ணமே வராதோ..

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      சரிகா ஜெயின் - உதாரணப் பெண்ணே தான். சந்தேகமில்லை.

      ரசித்த படம் - மக்கள் திருந்துவதாக இல்லை.

      மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி துளசிதரன் ஜி.

      பதிவின் பகுதிகள் அனைத்தினையும் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  16. முதியவர்கள் இருவரும் என்னைப் போல் காது கேட்காதவர்களாய் இருக்கலாம். பொதுவில் கத்திப் பேசுவது சரியில்லை அல்லவா?
    குறளை நினைவு படுத்தும் என்று சொல்லி எழுதாமல் விட்டது இதுவா? 

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதுகேட்காதவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்துதான் அமர்வார்கள், அவர்களின் உடல்மொழியை தெரிந்துகொண்டு react செய்ய.

      நீக்கு
    2. //காது கேட்காதவர்களாக இருக்கலாம்// - லாம்! கோயில்பிள்ளை சொல்லி இருக்கும் பதிலையும் பாருங்கள் ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது உண்மை தான். பார்த்தே புரிந்து கொள்வது தானே அவர்களுக்கு இயல்பு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  17. சொந்தத்துடன் நெருங்கி வந்து பேசுவது போலவான உங்கள் உரைநடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிறர் நகலெடுக்க இயலாதது இது. ஒரிஜனாலிட்டி இருந்தால் தான் சாத்தியப்படும்.
    யாராவது சோதித்துப் பார்க்க முயல்வார்களேயாயின் சூடு போட்டுக் கொண்ட பூனை தான்.

    இப்பவும் சொல்கிறேன்: ஏழு சகோதரிகள் தலைப்பு அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சொந்தத்துடன் நெருங்கி வந்து பேசுவது போலவான உங்கள் உரைநடை// தங்களது கருத்து மகிழ்ச்சியைத் தந்தது ஜீவி ஐயா.

      நீக்கு
  18. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெங்கட், வாழ்க வளமுடன்!

    வாசகம் அருமை.ஸரிகா ஜெயின் அவர்களின் தன்னம்பிக்கை விடாமுயற்சி வாழ்க உடல் ஊனம் பற்றி கவலை பட்டு முடங்கி போகாமல் வலிகளை வேதனையை தாண்டி சாதனை படைத்து இருக்கிறார் வாழ்க வளமுடன்.
    மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      வாசகம், காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றிம்மா...

      நீக்கு
  19. கற்கள் உயிரைக் கொல்லும்! சொற்கள் உயிரோடு கொல்லும்.---WOW!!!!
    kuch nahi samchgiyaa!! A B C டி …அ ...ஆ ...இ ..ஈ புரிந்தது,but nevertheless appreciate Sariga's perseverance and achievements; good motivational speech.
    பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களுக்குள் ஒரு basic understanding இருப்பது பாராட்டத்தக்கது. வேடிக்கை பார்ப்பதோடு அவர்களோடு கொஞ்சம் பேசித்தான் பாருங்கள், பிறகு உங்கள் உரையாடல்களை எங்களுக்கும் சொல்லுங்களேன்.
    ஆமாம், உங்களுக்கு பிறந்தநாளா? இதயபூர்வமான வாழ்த்துக்கள்.பிறந்தநாள்காணும் உங்களின் பின்வரும் ஒவ்வொரு நாளும் சிறந்த நாளாக அமைய வாழ்த்துக்கள். Manymore happy returns Venkat.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிந்தி காணொளி - உங்கள் கருத்திற்கு நன்றி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பிறந்த நாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கோயில்பிள்ளை.

      நீக்கு
  20. இந்த வாரம் தாங்கள் இரசித்த வாசகத்தை நானும் இரசித்தேன். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்பதை நிரூபித்த சரிகா ஜெயினின் காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி! அந்த படம் சொன்ன பாடமும் அருமை. ஏழு சகோதரிகள் – பாகம் 1 மின் நூலை பதிவிறக்கம் செய்தபோது This title format is compatible with your device என வருகிறது. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் தான் ஆலோசனை கேட்கவேண்டும் போல் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.

      மின்னூல் - தரவிறக்கம் எதில் செய்து கொண்டீர்கள் ஐயா? கணினியிலா? அல்லது அலைபேசியிலா?

      நீக்கு
    2. மடிக்கனினியில்தான் பதிவிறக்கம் செய்தேன்.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி வே. நடனசபாபதி ஐயா. எதனால் இந்தப் பிரச்சனை எனப் பார்க்க வேண்டும்.

      நீக்கு
  21. சொற்கள் உயிரோடு கொல்லும் - உண்மை.சரிகா ஜெயினின் காணொளி அருமை.முதியவர்களின் மௌன மொழி நாம் பேசுவதைவிட சிறப்பாக இருக்குமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      நீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை.
    முதலில் தங்களுக்கு சற்று தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
    பதிவும் அருமை. ரசித்த படமும். அதன் தொடர்பான வாசக வரிகளும் நன்றாக உள்ளது.

    தங்களது ஏழு சகோதரி மின்னூலுக்கு வாழ்த்துகள்.
    முதியோர் பற்றி கூறியது நெகிழ்ச்சியாக உள்ளது.அதன் தொடர்பான கருத்துக்களும் படித்தேன். அவர்களுக்கு மனோபலத்தை இறைவன் அருளட்டும்.

    பின்னோக்கி சென்று பார்த்தேன். அழகாக எழுதியுள்ளீர்கள். "காதறுந்த ஊசியும்" கருவுக்கு பொருத்தமாக, ஆனால் மாறுபாடாக அந்த தந்தை மகன் உரையாடல்கள் பதிவு நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த லோட்டா கங்கையின் புனிதத்தில் எங்காவது உறங்கிக் கொண்டிருக்கும்.அதை அந்த மகன் உணராது தந்தையை கடுமையாக பேசியது கஸ்டமாக உள்ளது.

    அந்த 150தாவது பதிவின் கருத்தாக வந்த அனைவரது வாழ்த்துகளும் பலித்து நீங்கள் தொடர்ந்து நிறைய பதிவுகள் எழுதி பெரிய சாதனைகளை படைத்திருக்கிறீர்கள். இன்னமும் எங்களுக்கும் பயனுள்ளதாக நிறைய பதிவுகள் எழுதி, நீங்கள் செல்லும் இடங்களின் பயணங்களை குறித்து விவரமாக பதிவுகள் எழுதி,எங்களை மகிழ வைக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

      பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....