வியாழன், 11 ஜூன், 2020

பாரம் குறைந்தது – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளினை சார்லஸ் லேம்ப் அவர்களின் ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம்

 

ஆயிரம் வருத்தங்களின் பாரத்தை நீக்கக் கூடியது ஒரே ஒரு இதயச் சிரிப்பாகும்! இதற்கீடான பொருள் உலகத்தின் எந்த சந்தையிலும் இல்லை”.

*****

பாரம் குறைந்தது...



”Bபையா உங்களுக்கு எப்படி வெட்டி விடணும்… அவரு ரொம்பவும் அதிகமா குறைச்சுட சொன்னாரே – அதனால ஹரியானாகாரங்க வெட்டிக்கிற மாதிரி ”கட்டோரி கட்டிங்” வெட்டி விட்டேன் – உங்களுக்கு எப்படி வேணும்னு சொன்னா அப்படியே வெட்டி விடறேன்”,  பிரகாஷ் கேட்டுக் கொண்டிருந்தார் பாண்டியனிடம். 

தரைத்தளத்தில் இருக்கும் வீடு ஒன்றின் சிறு தோட்டத்தில் மேலே வேட்டியால் ஒரு மறைப்பு. இரும்பு வேலியில் மாட்டி வைக்கப்பட்ட பெரிய கண்ணாடி. புதிதாக வாங்கிய கத்திரி, ப்ளேடுகள், சானிடைசர், சீப்பு மற்றும் தேவையான உபகரணங்கள் – எல்லாம் வீட்டு எஜமானியே வாங்கி வைத்திருந்தார்.  பிரகாஷ் மட்டும் வர, அவருக்குத் தேவையான முகமூடி, கையுறை, தலையுறை எல்லாம் தந்து அவரும் தனது கைகளை நன்கு சுத்தம் செய்து கொண்ட பிறகு எல்லாவற்றையும் தரித்துக் கொண்டார்.  கீழே கற்கள் வைக்கப்பட்டு இரும்பு நாற்காலி போடப்பட, அந்த வீட்டுத் தோட்டத்திலேயே ஒரு மினி சலூன் – திறந்தவெளி சலூன் உருவாகியிருந்தது.

பாண்டியன் அமர்ந்து கொள்ள, பிரகாஷ் பேசிக் கொண்டே வேலையை ஆரம்பித்தார் – “இப்போது தானே குளிரூட்டப்பட்ட சலூன்கள், விதம் விதமான வசதிகள். முன்பெல்லாம் கிராமங்களில் வீட்டுக்கோ அல்லது ஆற்றங்கரைக்கோ தானே செல்வார்கள். மரத்தடியில் அமர்ந்து ஊர் கதை பேசி, முடி திருத்தம் செய்து கொண்டு அப்படியே ஆற்றிலோ, குளத்திலோ குளித்து வீடு திரும்புவது தானே வழக்கமாக இருந்தது.  தில்லி போன்ற பெருநகரில் அவற்றுக்கெல்லாம் ஏது வசதி.  மாதத்திற்கு ஒரு முறையோ, இல்லை 45 நாட்களுக்கு ஒரு முறையோ கடைக்குப் போய் வேலை முடிந்ததும் வீடு வருவது தானே வழக்கமாகி இருக்கிறது.  இந்த கொரோனா வந்தாலும் வந்தது, எங்கேயும் சலூன் கடைகள் இல்லை. தில்லியின் சாலையோர கடைகளும் இல்லை! பெரும்பாலான ஆண்கள் சைடு குடுமியோ, பின் குடுமியோ போடும் அளவு முடியோடு அலைகிறார்கள் – அல்லது துணைவிகளின் கைவண்ணத்தில் குதறி வைத்த தலையோடு அலைகிறார்கள்! தொழிலுக்கு அவர்கள் புதிதென்பதால் எப்படி வருகிறதோ அப்படி வெட்டி விட – அது கரப்பான்பூச்சி கடித்த மாதிரி வந்து விடுகிறது! அந்தத் தலையோடு வெளியே வர வெட்கப்பட்டுக் கொண்டு தலையில் முண்டாசு கட்டி வருபவர்களும் அதிகமாகி விட்டார்கள்!”

வேலையைக் கவனித்தபடி மேலும் பேசினார் பிரகாஷ் - ”இரண்டு மூணு மாசமா வேலையே இல்லைங்க, ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. இரண்டு குழந்தைகளையும் மனைவியையும் வச்சுக்கிட்டு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்.  சொந்த ஊர் பீஹாருக்குப் போயிடலாம்னா, அங்கே போய் என்ன பண்றது? நிலமும் இல்லை, வேலையும் இல்லை, சோத்துக்கு வழியும் இல்லை! அதையெல்லாம் யோசிச்சு தானே பீஹாரிலிருந்து தலைநகரத்துக்கு வந்தோம். இப்ப அங்கே திரும்பிப் போய் என்ன பண்றது? எங்க ஊர்க்காரங்க ரெண்டு பேரு சரியா வாகனம் இல்லைன்னு நடந்தே போகப் போறோம் நீங்களும் வரீங்களான்னு கேட்டாங்க! ஆனால் நான் போகலை. கஷ்டமோ, நஷ்டமோ, நம்மை நம்பி வந்த மனைவியும், குழந்தைகளும் இருக்காங்க. அவங்களையெல்லாம் கஷ்டப்படுத்தி, நடத்தி அழைச்சுட்டுப் போய் வழியிலே சாகறதுக்கா? இங்கேயே கிடைக்கிற வேலையைச் செஞ்சுகிட்டு, மூணு வேளை சாப்பிடறோமோ இல்லையோ, ஒரு வேளையாவது சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கோம்.  இரண்டு மாசம் ஓட்டிட்டோம்.  நேத்துல இருந்து சாப்பாட்டுக்கு வழி இல்லை. என்னடா இது இன்னும் எவ்வளவு கஷ்டம் நமக்கு கொடுக்கப்போறார் இந்த Bபோலே Bபாபா (சிவன்)ன்னு நினைசுச்சுட்டு இருந்தேன். நல்ல வேளையா ஐயா கூப்பிட்டு அனுப்பினார் – தெரிஞ்ச ஆள் மூலமா! அது மட்டும் இல்லாம, அவரோட தெரிஞ்சவங்க எல்லாருக்கும் சொன்னதால, இங்கேயே பத்து பேருக்கு முடி வெட்டி விட்டுட்டேன்.

Bபோலே Bபாபாவை திட்டக்கூட செய்தேன் – உனக்கு கண்ணே இல்லையா? உன் கண்முன்னாடியே எவ்வளவு கஷ்டம் மக்களுக்கு? காது கேட்கவே இல்லையா? எத்தனை எத்தனை மரண ஓலம்னு? எது நடந்தாலும் பேசாம இருக்கியே? உன்னை கல்லில் வடிச்சு கும்பிடறோம்னு நீயும் கல்லாவே மாறிட்டியான்னு நேத்தி புலம்பிட்டு இருந்தேன். என் மனைவிதான் சொன்னா, “நம்பிக்கையோட இருய்யா, எதையாவது வழி காட்டாம இருக்க மாட்டாரு ஆண்டவன்”னு!  அதே மாதிரியே, ஆட்டோ ட்ரைவர் சோமு ஃபோன் பண்ணி வேலை இருக்கு வான்னு சொன்ன உடனே வந்துட்டேன்.  ஐயாவோட நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா இருக்கணும்!

பாண்டியன் தலையில் மூன்று மாதங்களாக மண்டிக் கிடந்த புதர் – அதாங்க தலைமுடி சரியான அளவில் திருத்தப்பட்டு இருந்தது. பாண்டியனுக்கு மகிழ்ச்சி.  ஒருவாரமா தலைமுடி அதிகமாக இருந்ததால தலைவலி வேறு இருந்தது. வெயிலால் வேர்வை வேறு, தலை ஈரமாகி, நீர் கோர்த்துக் கொண்டு விட்டது. எங்கே ஜலதோஷம், இருமல்னு வந்து கொரோனா தாக்கி விடுமோ என பயம் பாண்டியனுக்கு!  தலையில் ஒரு பெரிய பாரமே குறைந்தது போல இருந்தது.   பிரகாஷிடம் “அப்பாடா, இப்பதான் எனக்கு ஒரு பெரிய பாரமே குறைஞ்ச மாதிரி இருக்கு – தலைமுடி அதிகமாக இருந்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது” என்று சொன்னதற்கு பிரகாஷ் சொன்ன பதில்….

“ஐயா, உங்களுக்கு தலைமுடி கொறைந்ததாலே தலை பாரம் குறைஞ்சது… அது உங்களுக்குப் பெரிசா இருக்கலாம்! ஆனா எனக்கு அதைவிட பெரிதாகத் தெரிஞ்சது என்ன தெரியுமா…. எனக்கு நெஞ்சில் இருந்த பாரம் குறைஞ்சு போச்சு.  இன்னிக்கு இங்கே கிடைச்ச காசு வைச்சு இன்னும் பத்து நாளைக்கு நிம்மதியா நானும், மனைவி குழந்தைகளும் சாப்பிடலாம்!  சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு எனக்கு இருந்த நெஞ்சு பாரம் குறைஞ்சது!”ன்னு சொன்னபோது தன் பாரம் ஒன்றுமே இல்லை என்பது பாண்டியனுக்கும் புரிந்தது!  நம்பிக்கையோடு வாழ்க்கை நடத்தினால் நிச்சயம் நல்ல வழி நம்மைத் தேடி வரும்”னு பிரகாஷ் சொன்னது போலத் தோன்றியது பாண்டியனுக்கு.

*****

நண்பர்களே, இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வழி சொல்லுங்களேன்.  நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திக்கும் வரை….

 

நட்புடன்,

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

42 கருத்துகள்:

  1. இந்த யோசனையை நான் என் அலுவலகத்தில் சொன்னேன்.  அவரையே தேவையான புதிய சீல் பிரிக்காத உபகரணங்களை வாங்கிவரச் செய்வது, அல்லது அவரவர் வாங்கி வைத்துக்கொண்டு ஆளை அழைப்பது என்று...   ஆனால் யாரும் ஒத்துவரவில்லை.  நான் வீட்டில் 'நமக்கு நாமே' என்று முடித்துக் கொண்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு நாமே! _ நல்ல திட்டம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பாரம் குறைந்தது...

    பிரகாஷ் சொன்னதைப் போல -
    எல்லாருக்கும் நல்ல வழி தேடி வரட்டும்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எல்லோருக்கும் நல்ல வழி தேடி வரட்டும்// - அது தான் எல்லோருடைய வேண்டுதலும் துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. சூப்பர் சார். அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல மாற்றங்களே உண்டாகட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நவீன்.

      நீக்கு
  4. எனக்கு இருக்கும் அத்தனை வெள்ளையும் பின் மண்டையில் தான். அதுவே குறு குறு என்றிருக்க புதிய ஒரு ட்ரிம்மர் ஒன்லைனில் வாங்கி மனைவியிடம் கொடுத்து சரி செய்ய அது எலி கடித்தது போல் ஆகிவிட்டது. கடைசியாக தற்போது ஷாப் சென்று வந்தவுடன் சரியானது. 

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //எலி கடித்தது போல// ஹாஹா....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  5. உணவு சங்கிலிப்போல மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறார்கள். நான் யாரையும் நம்பி இல்லன்னு உதார் விட்டாலும் அது உண்மையில்லைன்னு உங்கள் பதிவு உறுதிப்படுத்துகிறது.

    பொதுவா மாமா அடிக்கடி நீட்டிக்கிட்டிருக்கும் முடியை அவரே வீட்டில் வெட்டிக்குவார். அதனால் மாமாக்கு பிரச்சனையில்லை. ஆனால் மகனார், இந்த கொரோனாவை காரணம் காட்டி தாடி வளர்த்தான். என் மாமனார் திட்டியும் வெட்டல. காலேஜ் போகும்போதுதான் வெட்டுவேன்னு திரிஞ்சான். காலேஜ் திறந்தபாடில்லை. இப்ப வெட்டிக்கிட்டான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஒருவரை ஒருவர் சார்ந்து தான் இருக்கிறார்கள்// - உண்மை தான் ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. //நமக்கு நாமே திட்டம்// - உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. //எனக்கு நெஞ்சில் இருந்த பாரம் குறைஞ்சு போச்சு. இன்னிக்கு இங்கே கிடைச்ச காசு வைச்சு இன்னும் பத்து நாளைக்கு நிம்மதியா நானும், மனைவி குழந்தைகளும் சாப்பிடலாம்! சாப்பாட்டுக்கு என்ன பண்றதுன்னு எனக்கு இருந்த நெஞ்சு பாரம் குறைஞ்சது!//

    இவர் சொன்னதை கேட்டு கண் கலங்கி விட்டது.

    எத்தனை பேர் இப்படி கஷ்டபடுகிறார்கள் என்று எண்ணி மனம் கனத்து போனது.


    என் கணவரே டிரிம்மர் வைத்து வெட்டிக் கொள்கிறார்கள். (நன்றாக)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை எத்தனை கஷ்டங்கள் இந்த சமயத்தில்.... ஒவ்வொன்றும் சோகம். சில பாசிட்டிவ் விஷயங்களும் உண்டு என்றாலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  8. மனைவியின் நம்பிக்கை வீண் போகவில்லை,பாபா கண் திறந்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மனைவியின் நம்பிக்கை வீண் போகவில்லை// நம்பிக்கை தானே எல்லாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  9. கோரனா கதை நகைசுவையாகவும் இப்போது உள்ள நிலவரத்தை அப்படியே பிரதிபலிக்கின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  10. மன பாரம் குறைத்துக் கொள்வதே இன்றைய சூழலுக்கு அரிதான பாரம் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன பாரம் குறைந்தால் நல்லது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  11. நல்ல பொன்மொழி.

    'பிரகாஷ் நெஞ்சுபாரம் குறைந்தது.' நோயினால் தொழில்பாதிக்கப் பட்டவர்கள் அநேகர்.
    ஊரடங்கு நேரம் நமது ப்ளாட்டில் ஒருவரை அழைத்து இரண்டு,மூன்று பேர் கீழே போய் முடி திருத்தி வந்தார்கள். அதில் எனது கணவரும் போய் வந்தார்.
    மற்றையவர்கள் தானே தன் உதவி டிரிம்மர் செய்தார்கள்.
    இப்போது கடைகள் திறந்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொன்மொழி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      சூழல் - பலருக்கு பாதகமாகவே இருக்கிறது. பலரும் இப்பொழுது வீட்டிலேயே செய்து கொள்கிறார்கள் தான். ஆனாலும் முதல் முறையே சரியாக வந்துவிடாதே. பழக வேண்டும்.

      நீக்கு
  12. மனப்பாரம் குறைந்தது இந்த வாழ்க்கை பலருக்கும் உண்டுதான் என்ன செய்வது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனப்பாரத்துடன் பலருடைய வாழ்க்கை - சோகம் தான் கில்லர்ஜி. எல்லாம் சரியாகும் என நம்பிக்கையில் தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

      நீக்கு
  13. கஷ்டம் தான் ஆண்களுக்கும். பலரும் வீட்டில் மனைவியை விட்டு வெட்டச் சொல்வதாக முகநூல், வாட்சப் ஆகியவற்றில் செய்திகள் வந்தன/வந்து கொண்டிருக்கின்றன. ஊரடங்கு ஆரம்பித்ததும் வீட்டுக்கு ஆளை வரவழைத்து முடி வெட்டிக் கொண்டார். இப்போதும் கடைக்குப் போக எண்ணம். கடை திறந்து விட்டார்கள் என்பதால். நான் தான் குறுக்கே விழுந்து தடுத்துக் கொண்டிருக்கேன். முன் போல வீட்டிற்கு வந்து புதிதாக உபகரணங்கள் கொண்டு வந்து வெட்டி விட்டால் நல்லது. இல்லைனா பயம்மா இருக்கும் போல! :( எல்லாவற்றுக்கும் பயப்படும்படி நிலைமை ஆகிவிட்டதே! :(((((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இது குறித்து நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

      //எல்லாவற்றுக்கும் பயப்படும்படி நிலைமை ஆகிவிட்டதே// - உண்மை தான் கீதாம்மா... விரைவில் சூழல் சரியாகவேண்டும். சரியாகும் என்ற நம்பிக்கையோடு கடந்து கொண்டிருக்கிறது நாட்கள்.

      நீக்கு
  14. மத்தவங்களுக்குத் தலை பாரம்னா முடிவெட்டும் தொழிலாளிகளுக்குக் குடும்ப பாரம். மொத்தத்தில் யாருக்கும் பிரச்னை இல்லாமல் இல்லை. எல்லோருக்கும் பிரச்னை தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /மொத்தத்தில் யாருக்கும் பிரச்சனை இல்லாமல் இல்லை/ உண்மை தான் கீதாம்மா... பிரச்சனை இல்லாத மனிதர்கள் யார்.

      நீக்கு
  15. சூழலுக்கு பொருத்தமான கதைகளாக இரண்டு வாரங்கள் படைத்துள்ளீர்கள். சூப்பர். எனக்கு என் அக்கா தான் யூட்டியூப் பார்த்து குத்துமதிப்பாக வெட்டிவிட்டாள். என்ன ஆகுமோ? முகச்சவரம் எனக்கே செய்யத் தெரிந்ததால் தப்பித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சூழலுக்கு பொருத்தமான கதைகளாக// நன்றி அரவிந்த். சும்மா ஒரு முயற்சி தான். கேட்ட, கண்ட விஷயங்களை கதை மாந்தர்களாக சொல்ல ஒரு முயற்சி.

      நீக்கு
  16. பாண்டியன் என்பது வெங்கட்டோ என நினைக்க வருது ஹா ஹா ஹா அழகாக எழுதிட்டீங்க.. நிஜம்தானே. ஆனா வெளிநாடுகளில், இப்போ வீட்டுப் பெண்கள்தான் பாபர் ஆக மாறிவிட்டனர்... :)... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாண்டியன் என்பது வெங்கட்டோ? ஹாஹா இல்லை அதிரா....

      பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. எங்கள் வீட்டில் முடித்திருத்தம் எப்போதுமே வீட்டில்தான் நாங்களே தான். அதனால் இப்போதும் பிரச்சனையாக இருக்கவில்லை. இந்த ஒரு சிறு விஷயத்தை வைத்து மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டீர்கள் வெங்கட்ஜி!

    அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”சிறு விஷயத்தை வைத்து மிகப் பெரிய விஷயத்தைச் சொல்லிவிட்டீர்கள்// நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  18. ஜி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. சாதாரண ஒரு நிகழ்வுதான் ஆனால் அதில் இடையில் சின்னதாக ஒரு நகைச்சுவையும் இழையோட அதே சமயம் முடிக்கும் போது பெரியதொரு பாரத்தை சிந்திக்கும்படி செய்துவிட்டீங்க. இப்படி எத்தனை மாந்தர்கள்! விரைவில் நிலைமை சரியாக வேண்டும். அருமை ஜி. உங்களின் கதை சொல்லும் திறன் வளர்ந்து கொண்டே வருகிறது.

    பாராட்டுகள் வாழ்த்துகள்

    இங்கு நம் வீட்டிலும் வீட்டிலேதான்! இப்போதைய சூழலில்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /இப்படி எத்தனை மாந்தர்கள்/ - உண்மை தான் கீதாஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  19. இந்த நாட்களில் எளிய மக்களின் நிலையை அப்பட்டமாக விண்டுரைத்த கட்டுரை.

    இந்த வேளைக்கு எது முக்கியம் என்று தேர்ந்தெடுப்பில் ஏகப்பட்ட அவஸ்தைகள். இதுவும் கடந்து போம் என்ற நம்பிக்கையில் காலத்தைக் கடப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. /எளிய மக்களின் நிலையை அப்பட்டமாக விண்டுரைத்த கட்டுரை/ - நன்றி ஜீவி ஐயா.

      /இதுவும் கடந்து போகும்/ - நம்பிக்கையோடு இருப்போம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

      நீக்கு
  20. எனக்கு சாதாரணமாக முடிவெட்டுபவரை அழைத்தேன் வீட்டுக்கே வந்துமுடி திருத்தின ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....