புதன், 24 ஜூன், 2020

கிண்டில் வாசிப்பு – மாஞ்சோலை டு குதிரைவெட்டி – ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன்


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.

Never measure the height of a mountain until you reach the top.  Then you will see how low it was – Dag Hammerskjold.


 

இந்த வாரத்தின் கிண்டில் வாசிப்பு அனுபவமாக வலைப்பதிவர் – முகநூலில் மூழ்கிவிட்ட முந்தைய வலைப்பதிவர் என்று கூடச் சொல்லலாம் – சீனு என நான் அழைக்கும் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் – அவர்களின் எழுத்தில் உருவாகியிருக்கும் ஒரு மின்னூல் – மாஞ்சோலை டு குதிரைவெட்டி! நண்பர் சீனு தென்காசியைச் சேர்ந்தவர்.  தென்காசியை அடுத்த மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வருவதைப் பற்றி இந்த மின்னூலில் மிகவும் சிறப்பாகச் சிலாகித்து எழுதி இருக்கிறார்.  வாருங்கள் அந்த மின்னூல் பற்றிய சில தகவல்களை இந்த வாரத்தின் கிண்டில் வாசிப்பில் படிக்கலாம் – அவரது வார்த்தைகளிலேயே…


****

மாஞ்சோலை – எங்கே இருக்கிறது? 


திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தனை அழகானதொரு மலைப்பிரதேசம் இருக்கிறது என்பதும் இயற்கை தன்  ஆதி அழகுடன் அங்கே உயிர்ப்புடன் இருக்கிறாள் என்பதும் நெல்லையில் வசிக்கும் மக்களிலேயே பெரும்பான்மை-யானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் மாஞ்சோலை ஒரு சுற்றுலாத் தலம் கிடையாது. 


மாஞ்சோலை சுற்றுவட்டார மக்கள் சென்று வருவதற்காக திருநெல்வேலி, பாபநாசம், தென்காசியில் இருந்து ஒரு நாளைக்கு மொத்தமாகவே ஐந்து அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.


மாஞ்சோலையைச் சுற்றி மொத்தம் ஐந்து சிறிய கிராமங்கள் அமைந்துள்ளன. மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரவெட்டி, கோதையாறு. ஒவ்வொரு கிராமத்திலும் மொத்தமே நூறு அல்லது அதற்கும் குறைவான அளவிலான குடும்பங்களே வசிக்கின்றனர்.


கல்லிடைக்குறிச்சி மலையடிவாரத்திலிருந்து சுமார் முப்பது கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் மணிமுத்தாறு நீர்த்தேக்கப் பகுதியிலிருந்து கரடுமுரடான மலைப்பாதைகளின் வழியே ஆரம்பமாகிறது மாஞ்சோலை எனும் மலைப்பயணம்.  பெரும்பள்ளம், பள்ளங்களுக்கு இடையில் கைகளால் அமைக்கப்பட்ட ஆங்கிலேயர்கள் காலத்து தார்சாலைகள், அதிலும் ஒரே ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய வகையிலான, அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை தன் அத்தனை திருப்பங்களிலும் கொண்ட மலைவழிச்சாலை. 


மணிமுத்தாறு நீர்த்தேக்கம் அருகே அமைந்திருக்கும் செக்போஸ்ட்தான் மிக முக்கியமானது. கடுமையான சோதனைகளுக்குப் பிறகே வனத்துறை அனுமதி உடன் அனுமதி கிடைக்கும். அரசுப் பேருந்துகள் மூலம் செல்வதாக இருந்தால் சோதனைகள் எதுவும் கிடையாது. ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பது நலம்.  தங்குமிடங்கள் எதுவும் அங்கே கிடையாது என்பதால் காலையில் சென்று  மாலைக்குள் திரும்பிவிடுவது நலம். 


என்ன பார்க்கலாம்?


“அட்லீஸ்ட் ஒரு புலிய கூட பார்க்கமுடியலையே” என்ற அவன் ஆதங்கத்தினை மட்டும் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. புலியைப் பார்ப்பதில் என்னவொரு அசால்ட்டான தைரியம் அவனுக்கு. அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம் – இந்த அட்லீஸ்ட் புலியையாவது என்ற வார்த்தையைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாமல் நடந்து கொண்டிருந்தேன்.  ஒரு வேளை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எந்த புலியை கற்பனையில் பார்த்து வியக்கிறோமோ அதே புலி மிகக் கம்பீரமாக நம்முன் வந்து நின்றுவிட்டால்? “படுவா என்னைப் பார்த்தா அட்லீஸ்ட் புலின்னு சொன்ன”, என்ற கோவத்தில் ஏதேனும் அசம்பாவிதத்தில் இறங்கிவிட்டால்? உள்ளுக்குள் அந்த பயம் இல்லாமல் இல்லை. காரணம் நாங்கள் நடந்து கொண்டிருப்பது புலிகளும் சிறுத்தைகளும் சர்வசாதாரணமாக நடமாடக்கூடிய மேற்குத் தொடர்ச்சி மலையின் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதி.


இயற்கை அழகு: ஆங்காங்கு வெளிப்படும் காட்டருவிகளும் ஓடைகளும் சலசலத்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் அமைதி கானகத்தின் தெளிவான குரல்களைத் தவிர மனித சஞ்சலங்கள் அற்ற மனித கண்டுபிடிப்புகள் அற்ற பேரமைதி. சில பெயர் தெரியாத பறவைகள் தங்கள் இணையோடு காதல் பேசிக்கொண்டிருந்தன. வண்டுகள் கவி பாடிக்கொண்டிருந்தன. யாருமற்ற அந்த சாலைகளின் வழியே மெல்ல நடந்து கொண்டிருந்தோம். பேசுவதற்கு ஏராளமான கதைகள் இருந்தன. எதையும் பேசவில்லை. மிக மௌனமாக மிக கவனமாக மிக தீவிரமாக அந்த சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தோம்.


செந்நாய்:  நாங்கள் செந்நாய் பார்த்த தகவலையும் உயிரோடு திரும்பி வந்த கதையையும் சொல்லிச் சொல்லி வியப்படைந்து கொண்டிருந்தார்கள். “வெறும் ரெண்டு செந்நாய் போதும் தம்பி நம்மள கொல்ல”.  இதைக் கேட்டபோது முத்துவுக்கு அல்லு இல்லை. காரணம் அதில் ஒரு நாயை அவன் தான் தைரியமாகத் துரத்திச் சென்றிருந்தான். மாஞ்சோலை வனப்பேச்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஒரு கரடி வந்து செல்வதாகக் கூறினார் அதே பெரியவர்.  புலி சிறுத்தை யானைக் கதைகள் என்று அவர்களிடம் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கச் சென்ற தொழிலாளர்களை யானைகளும் புலிகளும் அடித்துப் போட்ட சம்பவங்கள் அவர்களுக்குள் இயல்பாகிப் போயிருந்தது. ஓர் அடர் வனத்தின் அத்தனை மிரட்சிகளையும் மாஞ்சோலை மலைப்பகுதியும் அங்கிருக்கும் மக்களும் தங்களுக்குள் ஒளித்து வைத்தபடிதான் வாழ்ந்து வருகிறார்கள். 

*****

இப்படி ஸ்வாரயஸ்மாக தனது ஊரின் அருகே இருக்கும் மாஞ்சோலை, குதிரவெட்டி பகுதிகளைப் பற்றி சீனு தனது மின்னூலில் எழுதி இருக்கிறார்.  வடக்கே பல வனங்களிலும், மலைப்பிரதேசங்களில் பயணித்திருந்தாலும், தெற்கே இப்படி ஒரு வனப்பயணம் எனக்கு வாய்த்ததில்லை.  எப்போதாவது தென்னிந்தியாவின் வனப்பகுதிகளில் பயணம் செய்ய வாய்ப்பு அமையாதா? அமைத்துக் கொள்ள முடியாதா என்ற ஏக்கம் எனக்கு எப்பொழுதும் உண்டு.  என் நினைவு சரியாக இருந்தால், சீனு இந்த மாஞ்சோலை பற்றி வலைப்பூவில் எழுதும்போது என்னையும் அப்படி ஒரு மாஞ்சோலை பயணத்தில் அழைத்துச் செல்லும்படி கேட்டதாக நினைவு.  சென்னையில் அவர் இருந்தவரையாவது இப்படி ஒரு வாய்ப்பு அமைந்திருக்கக்கூடும். ஆனால் அவரோ இப்பொழுது இருப்பது அமெரிக்காவில்! அவர் இந்தியா வரும்போது எனக்கும் சூழல் சரியாக இருக்க வேண்டுமே!  பார்க்கலாம் ஒரு வாய்ப்பு கிடைக்காமலா போகப் போகிறது!  அந்த வாய்ப்புக்காக நான் காத்திருக்கிறேன்.


உங்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் மாஞ்சோலைக்குச் சென்று வாருங்கள். வாய்ப்பு இல்லையென்றாலும் நண்பர் சீனுவின் அனுபவங்களைப் படித்து ரசிக்க அவரது “மாஞ்சோலை டு குதிரவெட்டி” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  Kindle Unlimited கணக்கு இருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.  மற்றவர்கள் தரவிறக்கம் செய்ய நினைத்தால் ரூபாய் 70/- செலுத்த வேண்டியிருக்கும்.  இந்தப் புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள கீழேயுள்ள சுட்டியினைச் சுட்டலாம்!


மாஞ்சோலை டூ குதிரைவெட்டி: இதுவரை பயணித்திராத பாதைகளின் வழியாக (Travel) (Tamil Edition) Kindle Edition


என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் கிண்டில் வாசிப்பு அனுபவம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவின் வழி சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

40 கருத்துகள்:

  1. நல்லதொரு பகிர்வு. சீனு திறமையான சுவாரஸ்யமான எழுத்தாளர். பேஸ்புக்கில் கூட குறைவாகத்தான் வருகிறார். சமீப காலங்களில் சில பதிவுகள் போட்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். நல்லதொரு எழுத்துக்குச் சொந்தக்காரர். வலைப்பூக்களை விட்டு முகநூலுக்குத் தாவிய பலரில் இவரும் ஒருவர். சமீபத்தில் சில பதிவுகள் எழுதினார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சிறப்பான விவரிப்பு அருமை ஜி
    நண்பர் சீனு அவர்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      நீக்கு

  3. சீனிவாசன் வலைப்பதிவரா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? சீனு தெரியாதா உங்களுக்கு! நம்ம சென்னை பதிவர் சந்திப்பில் கூட நம்மை எல்லாம் சந்தித்தாரே. திடம் கொண்டு போராடு வலைப்பூவில் எழுதியவர். சுட்டி கீழே....

      http://www.seenuguru.com/

      நீக்கு
  4. மதிப்புரை நன்று. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதிப்புரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. வாய்ப்பு கிடைத்தால் சென்று வர வேண்டும் என நானும் நினைத்திருக்கிறேன்.

      நீக்கு
  5. நல்ல மதிப்புறை சார். நிச்சயம் இந்த இடத்திர்க்கு செல்வோம் வாய்ப்பு அமையும்போது. ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் ஐய்யாவின் தனுஷ்கோடி குறித்து இன்னொரு மின் நூலையும் படித்து இருக்கிறேன். தனுஷ்கோடியின் இன்றைய நிலையை அறிய அணைவரும் வாசிக்க வேண்டிய நூல் அது. இரு நூல்களையும் வாசிக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சீனுவின் தனுஷ்கோடி பற்றிய மின்னூலும் தரவிறக்கம் செய்து வைத்திருக்கிறேன். இனிமேல் தான் வாசிக்க வேண்டும் அரவிந்த்.

      நீக்கு
  6. சீனு அமெரிக்கா சென்றுவிட்ட பிறகு வலைப்பதிவில் வருவது குறைந்துவிட்டது. சென்னையில் அவரைச் சந்தித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளர். கிண்டிலில் இப்புத்தகத்தை வாசித்தபிறகு விமர்சிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். அவர் அமெரிக்கா சென்ற பிறகு வலைப்பதிவில் எழுதுவது குறைந்தே விட்டது.

      கிண்டிலில் படிக்கப்போவது அறிந்து மகிழ்ச்சி இராய செல்லப்பா ஜி.

      நீக்கு
  7. நல்லதொரு நூல் அறிமுகம்...எடுத்துக்கொடுத்தப் பகுதி அங்கு செல்லவேண்டும் எனும் ஆர்வத்தைத் தூண்டுகிறது...பகிர்வுக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. சுவாரசியமான நடையில் ரசனையான விமர்சனம்...

    சைனிங் ஸ்டார்-க்கு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஷைனிங் ஸ்டார் சீனு! ஹாஹா.... இன்னமும் அந்தப் பெயர் நினைவில் இருக்கிறது எனக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  9. ஃபேஸ்புக் போன்ற வேறு பக்க திசைதிருப்பல் இல்லாமல் ப்ளாகர் பதிவுகளுக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து எழுதி வருபவர்களுக்கு லேசில் இந்த பதிவுலகைவை விட்டு நீங்க மனம் வராது. ப்லாக்கர் பதிவுகளில் போட்ட பதிவு பற்றி சுவாரஸ்யமாக எழுதியவர் -- வாசிப்பவர் என்று நீண்ட நெடிய பின்னூட்டங்கள் மூலம் பேசிக் கொள்ள முடிகிறது. இது தான் பிளாகர் உலகில் இருப்பதும் மற்ற இடங்களிலும் இல்லாததுமான வசதி.

    ஃபேஸ்புக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவதை நிறுத்தி விடத்தான் ஏதுவாகிறது.

    பிறர் அனுபவங்களைப் பார்த்து விட்டுத் தான் இந்த கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃபேஸ்புக் - கொஞ்சம் கொஞ்சமாக எழுதுவதை நிறுத்திவிடத் தான் ஏதுவாகிறது. இருக்கலாம் ஜீவி ஐயா. முகநூலில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர் சிலரும் இருக்கிறார்கள். எனக்கு ஃபேஸ்புக் அத்தனை ஈர்ப்பானதாக இல்லை. எனது பதிவுக்கான சுட்டி தந்து வெளிவந்து விடுகிறேன். அப்படிச் செல்லும் சமயத்தில் சிலரது இற்றைகளைப் படிப்பதோடு சரி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. ஓ! சீனு போட்டிருக்கிறாரா? அவர் பகுதியாயிற்றே..

    அவர் மிகவும் ரசித்து எழுதுவார். அவரது எழுத்து அலாதியான எழுத்து! மிகவும் பிடிக்கும். அவரது பதிவில் அகஸ்தியர் ஃபால்ஸ் குறித்தும் எழுதியிருந்த நினைவு.

    உங்கள் விமர்சனமும் நன்று. ஜி கண்டிப்பாகப் போய் பாருங்க அப்படியே நாகர்கோவில் பகுதியும் சேர்த்துக்கோங்க. நிறைய அருவிகள், காட்டுப் பகுதிகள் இருக்கு. ஒருநாள் கவரேஜ் எல்லாமும் இருக்கு. 2 வாரம் நாகர்கோவில் திருநெல்வேலி கம்பைன் பண்ணிக் கொண்டால்.

    மாஞ்சோலை, குதிரைவெட்டி, மணிமுத்தார் அருவி, டேம், கோதையார் டேம், போயிருக்கிறோம். குழுவாக. 17 வருடங்களுக்கு முன் 2 வாரம். அங்கு கெஸ்ட் ஹவுஸில் தங்கியும் சுற்றியிருக்கிறோம். இரவு கரடி வந்து கதவைத் தட்டும் என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் அப்படியான அனுபவம் எதுவும் இல்லை. அப்போது கேமரா கிடையாது என்னிடம். நான் படங்கள் எடுக்கவில்லை. குழுவினர் எடுத்தார்கள்.

    என்னைத் தவிர எங்கள் குழு புகுந்த வீட்டினர், நட்புகள் எல்லாரும் சென்னைவாசிகள். அவங்களும் ரொம்பவே எஞ்சாய் செஞ்சாங்க.

    சீனுவுக்கு வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதாஜி. நம்ம வலைப்பதிவர் சீனுவின் மின்னூல் தான். அவரும் தென்காசிக்காரர் ஆயிற்றே. சுவைபட எழுதுவார்.

      உங்கள் அனுபவங்களையும் இங்கே குறிப்பிட்டதற்கு நன்றி. எனக்கும் சென்று வரும் ஆசை உண்டு. இரண்டு வாரங்கள் - ஆஹா - அத்தனை நாட்கள் இல்லை என்றாலும் மூன்று - நான்கு நாட்கள் பயணமாவது செல்ல வேண்டும். பார்க்கலாம்.

      நீக்கு
  11. நல்ல நூலறிமுகம். உங்கள் விமர்சனமும் நன்றாக இருக்கிறது. உங்கள் ஆர்வத்திற்கான புத்தகம். சீனு இப்போது அமெரிக்காவில் இல்லையா?

    சீனுவிற்கு வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூலறிமுகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. ஆமாம் அவர் இப்போது அமெரிக்காவில் தான் இருக்கிறார்.

      நீக்கு
  12. நானும் இந்த இடத்தைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், போகமுடியவில்லை. போகலாம் என்று முடிவெடுத்த சமயத்தில்தான் இந்த கொரோனா வந்து எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கிப்போட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகலாம் என முடிவு எடுத்த சமயத்தில்..... கொரோனா விலகட்டும். நீங்களும் சென்று வாருங்கள் செந்தில்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. சீனு எனப் பெயரை அடிக்கடி கணேஷ்பாலா, ஆ.வி. குறிப்பிட்டதால் தெரியும்.அவர் முதல் முதல் அம்பேரிக்கா போன பதிவும் படித்த நினைவு இருக்கு. ஆனால் அவர் தன் வனப் பயணம் பற்றி எழுதியது தெரியாது. மலையடிவாரக் காட்டில் அற்புதமான அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். அருமையான விமரிசனம். சீனிவாசன், வாசன் என்னும் பெயரிலும் ஒருத்தர் முகநூலில் இருக்கார். அவரும் சீனுவும் ஒருவரே தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - எல்லோரும் நண்பர்கள் தான். நானும் சில முறை அவரைச் சந்தித்து இருக்கிறேன். Srinivasan Balakrishnan என்ற பெயரில் முகநூல் கணக்கு வைத்திருக்கிறார். தற்சமயம் Plano, Texas-இல் இருக்கிறார்.

      நீக்கு
  14. மாஞ்சோலை சென்றுவர ஆசை வந்து விட்டது.
    உங்கள் விமர்சனம் அருமை.நூல் எழுதிய ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாஞ்சோலை சென்று வர ஆசை வந்து விட்டது. ஆஹா.... மகிழ்ச்சிம்மா.. முடிந்தபோது சென்று வாருங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  15. நல்ல ஒரு பயணப் புத்தகத்தை அறிமுகப்படுத்தியிருக்கீங்க. ஒரு நாளில் என்னவற்றையெல்லாம் பார்க்க முடியும்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்க்க முடிவதில்லை. முடிந்த அளவில் பார்க்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  16. ஓ உண்மையிலேயே மாஞ்சோலை எனும் ஒரு ஊர் இருப்பது இப்போதான் அறிகிறேன்.. மாமரங்கள் அடர்த்தியாக இருப்பதை மாஞ்சோலை என்பினம் எல்லோ.. அப்படித்தான் நினைத்திருந்தேன்..

    மாஞ்சோலைக் கிளிதானோ.. மாந்தானோ... வேப்பந்தோபுக் குயிலும் நீ தானோ... அப்பாடல் ஒலிக்கும்போது...

    அதுசரி அல்லு என்றால் என்ன?

    செந்நாய்... இதுவும் புது வார்த்தை...

    அழகிய புத்தகமாகவே தெரிகிறது...

    இவ்ளோ பிசியிலும், தனியே சமைச்சு சாப்பிட்டு வேர்க் போய் வந்து.. டெய்லி போஸ்ட் போட்டு, அவற்றுக்கு பதிலும் கொடுத்து.. புத்தகமும் வாசிக்கிறீங்களே.. ஹையோ நினைச்சுப் பார்க்கவே எனக்கு மூச்சு விட முடியாமல் இருக்குது ஹா ஹா ஹா... இப்படித்தான் இருக்கோணும் தொடரட்டும் உங்கள் வாசிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மாஞ்சோலைக் கிளிதானோ...// பாடல் மிகவும் இனிமையான பாடல். எனக்கும் பிடித்தமானது.

      அல்லு - சில தமிழ் வார்த்தைகள் வட்டார வழக்குகள். எல்லோருக்கும் புரிவதில்லை அதிரா.

      //இவ்வளவு பிசியிலும்.....// ஹாஹா... கொஞ்சம் நேரம் கூட சும்மா இருப்பதில்லை. எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் எனக்கு. பொதுவாக தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை - அதனால் எனக்கு அதிக நேரம் கிடைக்கிறது.

      நீக்கு
  17. நண்பர் சீனுவின் மாஞ்சோலை பயணம் சிறப்பாக இருந்தது. தென்காசி சென்றபோது பார்திருக்கலாம். மிஸ் பண்ணிவிட்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ட்ரிப் போட்டுடலாமா இராமசாமி ஜி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  19. அருமையான மதிப்புரை சார். வாழ்த்துக்கள். எழுத்தாளர் சீனு சாருக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா.

      நீக்கு
  20. Wow ❤️

    நண்பர் திருப்பதி மகேஷ் இந்த லின்க் அனுப்பியிருந்தார். இல்லையென்றால் அதிவும் தெரிந்திருக்காது. கிண்டில் புத்தகம்தானே என்று விட்டுவிடாமல் விமர்சனம் எழுதிய உங்களுக்கு முதல் நன்றி, அதனை எனக்குத் தெரியப்படுத்தியத மகேஷ் அவர்களுக்கு அடுத்த நன்றி.

    எத்தனை கொண்டாட்டமாக இருக்கிறது. நீங்கள் விமர்சனம் எழுதியதும் அதற்கு நம் நண்பர்கள் அனைவரும் என்னை ஞாபகம் வைத்துப் பேசியது.

    கண்கள் பனித்தன இதயம் இனித்தது ❤️

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் நீங்கள் பார்த்திருப்ப்பீர்கள் என நினைத்தேன் சீனு. உங்கள் பணிச்சுமைக்கு இடையே தொந்தரவு தரவேண்டாம் என தனியாக தகவல் தரவில்லை.

      உங்களுக்குத் தகவல் தெரிவித்த திருப்பதி மகேஷ் அவர்களுக்கும் நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....