திங்கள், 22 ஜூன், 2020

மூன்றாம் மனிதர் – கதை மாந்தர்கள் – கொரோனா கதைகள்…

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.


The most painful Goodbyes are the ones that are never said and never explained…


*****

அந்த காலை நேரத்திலேயே ஒரு அழைப்பு வந்தது சுகுமாரனுக்கு… அழைக்கும் நபர் யாரென்று பார்த்தால் தெரியாத பேராக, “ரெட்டிகாரு” என்று சொல்லியது ட்ரூ காலர்.  நமக்கு எந்த ரெட்டிகாரு-வையும் தெரியாதே!  யாராவது காலையிலேயே தெலுகுலோ மாட்லாடுவார்களோ என்ற எண்ணத்துடன், எடுக்கவா, வேண்டாமா என மனதுக்குள் பூவா தலையா போட்டுப் பார்த்துக் கொண்டான் சுகுமாரன்.  சரி அழைத்து விட்டார்கள்… எடுத்துப் பேசுவோம், என எடுக்க மறுமுனையில் ஒரு கரகரப்ரியா குரல் – “ஹலோ சுகுமாரன்காருவா?” என்னடா இது சரியா நம்ம பெயரைச் சொல்லி கேட்கிறாரே, நமக்குத் தெரிந்தவரா, தெரியாதவரா, “அவுனண்டி” ந்னு சொல்றதா, “ஆமாம்”னு சொல்றதான்னு புரியாமா, ஹிந்தியில் “ஜி ஹான்” என்றான். 


எதிர்பக்கத்திலிருந்த ரெட்டிகாரு, தமிழுக்குத் தாவினார்.  “என்னை உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.  உங்க நண்பர் ராவ்காரு தான் நம்பர் கொடுத்து பேசச் சொன்னார்.  அவரும் உங்க கூட தில்லில வேலை பார்த்தாராம். உங்க கிட்ட ஒரு அவசர உதவி தேவை, அதனால தான் உங்களை இந்த காலை வேளைல தொந்தரவு பண்ணிட்டேன்… மன்னிக்கணும்” என்றார்.


தில்லில வந்ததுல இருந்து நம்ம கூட நிறைய ராவ் வேலை செய்திருக்கிறார்களே எந்த ராவை இவர் சொல்கிறார் என்ற குழப்பத்துடனேயே, “உங்களுக்கு என்னால என்ன உதவி வேணும்?  நீங்க எந்த ராவைச் சொல்றீங்க?” என்று இரண்டு கேள்விகளை முன்னே வைத்தான் சுகுமாரன்.


”எஸ்.வி.வி.என். ராவ்-னு உங்களோட இரண்டு வருஷம் முன்னால வேலை பார்த்தாரே – இப்போதைக்கு ஹைதைல இருக்காரே அந்த ராவ் தான்…” என ரெட்டிகாரு சொன்னவுடன் “அட நம்ம நரசிம்ம ராவ் காரு” என நினைவுக்கு வந்தார் – நல்ல மனிதர் – பலருக்கும் ஓடி ஓடி உதவி செய்வார்.  அவர் சொல்லி இருக்கிறார் என்றால் நிச்சயம் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு, “சொல்லுங்க ரெட்டிகாரு…. என்ன உதவி செய்யணும் உங்களுக்கு?” என்று கேட்க எதிர் முனையில் மௌனம்….


சிறிது நேரத்திற்குப் பிறகு அலைபேசி வழியே விசும்பல் ஒலி… என்னடா இது என்ன பிரச்சனை – ரெட்டிகாரு அழும் அளவிற்கு என்ன பிரச்சனை? அதைத் தீர்க்க நான் என்ன உதவி செய்ய முடியும்” என்ற யோசனையோடு ரெட்டிகாரு பேசுவதற்காகக் காத்திருந்தான் சுகுமாரன். 


சிறிது நேரத்திற்குப் பிறகு விசும்பல் ஒலி குறைந்து, “மன்னிக்கணும்… என்னால தாங்க முடியல, அழுதுட்டேன்…  எனக்கு உங்களால ஒரு உதவி ஆகணும்….”


அவர் என்ன உதவி கேட்கப் போகிறார்?  செய்ய முடிந்த உதவி என்றால் பரவாயில்லை.  செய்ய முடியாத உதவி எனும்போது அதனை நேரடியாகச் சொல்லும் திடம் எப்போதுமே சுகுமாரனுக்கு இருந்ததில்லை.  சுகுமாரனின் மனைவி கூட அவனை கடிந்து கொள்வதுண்டு – ”முடியாது’ன்னு சொல்ல உங்களால முடியாது!”


“சுகுமாரன்காரு, நானும் என் குடும்பத்தினர் அனைவரும் ஹைதையில் இருக்கிறோம்.  என்னோட மாப்பிள்ளை… எனது மூத்த மகளின் கணவன் ஒரு வேலையாக தில்லிக்கு வந்திருந்தார்.  லாக்டவுன் சமயத்துல அங்க வந்து மாட்டிக்கிட்டார்… சரி எப்படியாவது ஹைதை திரும்பணும்னு செய்த முயற்சி எல்லாம் பலன் தரல.  தில்லிலயே தங்கிட்டார்.  அவருக்கு, வீட்டுக்குப் போக முடியலையேன்னு மன உளைச்சல்.  சாப்பாடு பிரச்சனை, பணப் பிரச்சனை என பலமுனைத் தாக்குதல்கள்.   கடைசியா ரெண்டு நாள் முன்னாடி தான் எங்களோட பேசினார். அதுக்கப்புறம் அவர்கிட்ட இருந்து அழைப்பே இல்லை.  நாங்க கூப்பிட்டாலும் பதிலே இல்லை.  ஒரேடியா தவிச்சுப் போயிட்டோம்.  என்ன பண்றது, யாரைத் தொடர்பு கொள்வது என ஒண்ணுமே புரியல.  போலீஸ்ல புகார் குடுக்கலாம்னா அவர் தங்கி இருந்த ஹோட்டல் பேரைக் கூட கேட்டு வச்சுக்கல நாங்க! ரெண்டு நாள் கழிச்சு தான் எங்களுக்கு ஒரு அழைப்பு வந்தது. “


”தில்லி போலீஸ்ல இருந்து பேசறோம், இங்கே இந்த ஹோட்டல் அறையில தங்கியிருந்தவர் இறந்து போயிட்டார். யாருன்னு விவரங்கள் கிடைக்கல. கடைசியா அவர் பேசிய நம்பர் உங்களுடையது தான்! அதான் விசாரிக்கலாம்னு ஃபோன் பண்ணினோம்னு” சொல்ல எனக்கு காலுக்குக் கீழ் தரை வழுக்கியது.  என் மகள் வாழ்க்கை என்னாவது என்ற கவலை வேறு தாக்கியது.  தொடர்ந்து பேசிய தில்லி போலீஸ்காரர், “இங்கே உறவுக்காரங்க யாராவது இருக்காங்களா?, லாக்டவுன் சமயத்துல உங்களால இங்கே வரமுடியாதே… யாராவது உறவுக்காரங்க தில்லில இருந்தா சஃப்தர்ஜங்க் மருத்துவமனையோட பிணக்கிடங்குக்கு உடனே வரச் சொல்லுங்க” என்று சொல்லி தனது பெயரையும் அலைபேசி எண்ணையும் கொடுத்தார்.


எனக்கு என்ன பண்றதுன்னு புரியல.  உங்களால உதவி செய்ய முடியுமா, அந்த தில்லி போலீஸ் நபரிடம் பேசி, என் மருமகனை…..  விசும்பியபடியே, அவரோட உடலை ஹைதைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு பண்ணுங்க….  ப்ளீஸ்…. உங்களோட உதவியை நானும் என் குடும்பத்தினரும் வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டோம்….” என்று கதறி அழ ஆரம்பித்தார்.  அவரைத் தேற்ற வார்த்தைகள் இன்றி, வழக்கம் போல உதவி செய்யும் நோக்கத்துடன் “நான் அந்த போலீஸ்காரர் கிட்ட பேசிட்டு உங்களைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லி அலைபேசி அழைப்பைத் துண்டித்தான் சுகுமாரன். 


”இறந்தவரின் உடலை எடுத்து, ஹைதை அனுப்பி வைக்க என்ன செய்ய வேண்டும்?” எனக் காவலரிடம் கேட்டபோது கிடைத்த பதில் அதிர்ச்சி தருவதாக இருந்தது – “என்னங்க விளையாடறீங்களா? இது கொரோனா காலம்… நீங்க நினைக்கிற மாதிரி இறந்தவரின் உடலை மூன்றாம் மனிதரிடம் தர முடியாது.  அதுவும் இல்லாமல் கண்டிப்பாக ஹைதைக்கு அனுப்பி வைக்க முடியாது. உறவினராக இருந்தால் அவரை பார்க்க அனுமதிப்போம் – சுடுகாடு வரை சென்று பார்க்க அனுமதிப்போம். அவ்வளவு தான்” என்று கறாராகச் சொல்ல செய்தறியாது திகைத்தான் சுகுமாரன்.  ஹைதைக்கு அழைத்து விஷயத்தினைச் சொல்ல அங்கே இன்னும் அழுகை அதிகமாகியது.  “ஏடுகுண்டலவாடா…  இது என்ன சோதனை… எதுக்கு இந்த கொரோனா கோர தாண்டவம்? இன்னும் எத்தனை எத்தனை சோகங்களைத் தரப் போகிறாயோ?” என்று புலம்பிக் கொண்டே இருந்தார் ரெட்டிகாரு. 


எல்லா தொடர்புகளையும் பயன்படுத்தி சுகுமாரானால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்று தான் – இறுதிச் சடங்கை நல்லவிதமாகச் செய்ய காவல்துறையினர் ஒப்புக் கொண்டதும், சுகுமாரனும் கூடவே இருக்க அனுமதித்ததும், Zoom வழி இறுதிச் சடங்குகளை ரெட்டிகாரு குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள முடிந்ததும் மட்டுமே! சாதாரணமாக கலங்குவதில்லை என்றாலும், எங்கேயோ இருந்து கொண்டு தனது கணவனின் இறுதிப் பயணத்தினைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் கதறல் கேட்டபிறகு சுகுமாரன் எனும் அந்த மூன்றாம் மனிதன் மனம் உடைந்து அழத் தொடங்கினான்.

*****

தன்னால் முடியாதது எதுவுமே இல்லை என்ற மமதை பிடித்த மனிதர்களுக்கு மட்டுமல்ல, ரெட்டிகாரு, சுகுமாரன் போன்ற சாதாரணர்களுக்கும் கூட இந்த கொரோனா காலம் என்னென்ன பாடங்களைச் சொல்லித் தந்து கொண்டிருக்கிறது… வாழும் காலம் கொஞ்சமே… எதற்காக இந்த வன்மமும், வக்கிரமும், போட்டியும், பொறாமையும்…  மனிதம் வளர்ப்போம் வாருங்கள்.  எல்லோருக்கும் நல்லதே நடக்கட்டும்.


நண்பர்களே,  நாளை வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை….


நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

40 கருத்துகள்:

  1. // கதறல் கேட்டபிறகு சுகுமாரன் எனும் அந்த மூன்றாம் மனிதன் மனம் உடைந்து அழத் தொடங்கினான்.//

    இந்த வரி வந்த்தும் நானும் உடைந்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்கள் நம்மை உடைத்து விடுகின்றன....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா
    மிக மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  3. மனசே ஆறலையே! :((((((((((((((((((((((((((((((((((((((( கொடுமையிலும் கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசே ஆறலையே.... உண்மை தான் கீதாம்மா.... சில விஷயங்களை மறக்க முடிவதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இன்றைய கால கட்டத்தில்
    இது கதை மாதிரி தெரியவில்லை..

    சுகுமாரன் மாதிரி எத்தனை எத்தனையோ
    மூன்றாம் மனிதர்கள்....

    காலம் எல்லாரையும் காக்கட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுகுமாரன் மாதிரி எத்தனை எத்தனையோ மூன்றாம் மனிதர்கள்.... உண்மை தான் துரை செல்வராஜூ ஐயா.

      //காலம் எல்லாரையும் காக்கட்டும்...// காலமே மருந்து.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. மனதை மிகவும் அழுத்துகின்றது...

    கொரானா என்றைக்குத் தொலையுமோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய நிகழ்வுகள் மனதை அழுத்துபவையாகவே இருக்கிறது துரை செல்வராஜூ ஐயா.

      நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அழுகை தான் வருகிறது...

    எங்கள் ஊரிலும் நிலைமை, நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது...

    தீநுண்மி காலம் என்றைக்கு மாறுமோ...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அழுகை தான் வருகிறது// நம்பிக்கையோடு இருப்போம் தனபாலன். நல்லதே நடக்கும்.

      பல ஊர்களிலும் நிலைமை சரியில்லை. மக்களுடைய ஒத்துழைப்பும் சரியாக இல்லை.

      தீநுண்மி - விரைவில் ஒழியட்டும்.

      நீக்கு
  7. இதை கதையாக நினைக்க முடியவில்லை ஜி நிகழ்கால நிகழ்வுகளே... மனம் கனத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையாக நினைக்க முடியவில்லை ஜி// - பல கதைகளுக்கு ஆதாரமே நிகழ்வுகள் தானே கில்லர்ஜி.

      நீக்கு
  8. //”முடியாது’ன்னு சொல்ல உங்களால முடியாது!” //

    புதிய பாண்ட் முயற்சிக்கு வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய ஃபாண்ட் முயற்சி - நண்பர் நீச்சல்காரனுக்கும் தனபாலனுக்கும் நன்றி! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  9. இது இன்றைய காலக்கட்டத்துல எங்கோ ஒரு மூலையில் நடந்த உண்மையா இருக்க வாய்ப்புகள் அதிகம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல கதைகளுக்கு ஆதாரமே நிகழ்வுகள் தானே ராஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. நெஞ்சை உடையச் செய்த கதை. சொல்ல வார்த்தையே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு
  11. நேற்றைக்கு சென்னை ஐஜி கொரோனாவினால் மரணமடைந்த காணொளி வந்தது. உறவினர் யாரையும் தொடக்கூட அனுமதிக்கலை. கார்லேர்ந்து அவங்க எல்லோரும் இறங்கி, 2 அடி தூரத்திலிருந்து பார்க்கறாங்க. பெண் குழந்தை-பதின்ம வயது, தொட முயன்றது, எல்லோரும் அவளை பின்னுக்கு இழுக்கிறார்கள். ரொம்ப ரொம்ப பரிதாபமாக இருந்தது. எ.பி குழுமத்துக்கு அனுப்பலாமான்னு யோசித்து, மனதைப் பாதிக்கும் என்பதால் அனுப்பலை.

    இந்த மாதிரி சம்பவங்களை படிக்கும்போதே மனம் கலங்குகிறது. எங்கேயாவது, போய்ப் பார்த்து வாட்சப்பில் புகைப்படம் அனுப்பினால், அது அவரது மருமகன் இல்லை என்று கதையில் வரி வருமோ என்று தேடிப்பார்க்க மனம் எண்ணியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய நிகழ்வுகள் - பலவற்றை வெளியே சொல்ல முடிவதில்லை. நாம் கஷ்டப்படுவதோடு போகட்டும் என்று விட்டு விடுகிறேன். சிலவற்றை சொல்லாமலும் இருக்க முடிவதில்லை நெல்லைத் தமிழன்.

      //அவரது மருமகன் இல்லை என்று கதையில் வரி வருமோ என்று தேடிப்பார்க்க மனம் எண்ணியது// அப்படி இருந்திருந்தால்..... ஆனால் இல்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. கதையாக இப்போது நடந்து கொண்டிருக்கிற நிஜங்கள்...அருமையாக எழுதி உள்ளீர்கள்..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கதையாக இப்போது நடந்து கொண்டிருக்கிற நிஜங்கள்// ஆமாம் ரமணி ஜி. நிஜங்களே கதைகளாக....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  13. மனதை உலுக்கிவிட்டது. நிறைய வருகிறது இப்படியான செய்திகள். விரைவில் எல்லாம் நார்மலாக வேண்டும் என்று மனம் விழைகிறது

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் துளசிதரன் ஜி. நிறைய செய்திகள் இப்படி வருகின்றன. விரைவில் சூழல் சரியாகவேண்டும் என்பதே அனைவருடைய ஆசையும்.

      நீக்கு
  14. ஜி வாசிக்கும் போதே மனது உடைந்து போனது. அதுவும் சுகுமாரன் அழும் வரி..எப்போது இப்படியான செய்திகள் கேட்காமல் இருப்போம் என்று ரொம்பவே தோன்றத் தொடங்கிவிட்டது.

    எதற்காக இந்த வன்மமும், வக்கிரமும், போட்டியும், பொறாமையும்… மனிதம் வளர்ப்போம் //

    அதே ஜி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

      நீக்கு
  15. /சுகுமாரன் எனும் அந்த மூன்றாம் மனிதன் மனம் உடைந்து அழத் தொடங்கினான்.//

    சுகுமாரனை மட்டும் அல்ல கேட்பவர், பார்ப்பவர் எல்லோரையும் அழவைக்கும்.

    இது போல் நிறைய செய்திகளை கேட்கிறோம் , மனம் நொந்து போகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் கோமதிம்மா... தினம் தினம் கேட்கும் சில செய்திகள் ரொம்பவே நோகடிக்கிறது.

      சூழல் விரைவில் சரியாகும் என்ற நம்பிக்கை மட்டுமே இப்போதைக்கு தேவை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. கொரோனாவால் உயிர்விடுவது கொடுமையென்றால் யாருமில்லா இடத்தில் தனியே உயிர்விடுவது அதனினும் கொடுமை. இப்படியும் கொடுமைகள் அனுபவிப்போம் என்று இந்த வருடம் ஜனவரி 1 தொடங்கும்போது எதிர்பார்த்திருப்போமா. மனது வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வருடம் இப்படி இருக்கும் என யாருமே நினைத்திருக்க மாட்டோம் அபிநயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  17. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  18. மனதை தொட்ட கதை. மனித இனத்தை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லதே நடக்கட்டும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  19. அன்பு வெங்கட்,
    மனம் பதறுகிறது. இப்படி நடக்கிறதே.
    இறைவன் உறங்கி விட்டானா.
    நானும் இது பொய்யாக இருக்கக் கூடாதா
    என்று மனம் ஏங்குகிறது.
    கடவுளே காப்பாற்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சூழல் விரைவில் சரியாகட்டும்.... நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை கொள்வோம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....