புதன், 17 ஜூன், 2020

ஏமாளி மதராஸிகள் – ஆட்டோ ஓட்டுனரின் வாக்குமூலம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம்.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

உன் இதயத்திற்குச் சம்பந்தமில்லாத சொற்கள் உன் நாக்கில் பிறக்கலாம். ஆனால் உன் நாக்கில் பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் கேட்பவர் இதயத்தோடு சம்பந்தப்பட்டே இருக்கிறது.

 

கொரோனா காலகட்டங்களில் முதல் சில நாட்கள் வரை அலுவலகத்துக்குச் செல்லும்/திரும்பும் சமயங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.  பிறகு அலுவலகத்திலிருந்தே வாகனம் தந்து விட்டார்கள் – என்ன வாகனத்திற்கான காத்திருப்பு நேரம் அதிகமாகவே இருந்தது.  காலையில் – எனது இல்லத்திற்கு அருகிலேயே ஓட்டுனர் இருந்ததால் முதல் சவாரியே நான் தான் – மாலையில் கடைசியாக நான் வீடு திரும்பும்படி ஆனது. ஒவ்வொரு நாளும் அலுவலகத்தில் பன்னிரெண்டு, பதினான்கு மணி நேரத்திற்கும் மேலாகவே ஆனது. சில நாட்கள் காலையில் எட்டரைக்குப் புறப்பட்டு எனது பணி முடியவே இரவு ஒன்றரை மணி ஆக, அலுவலகத்தில் தொடர்ந்து பதினேழு மணி நேரம் கூட அலுவலகத்திலேயே இருந்திருக்கிறேன்.  அப்படி பதினேழு, பதினெட்டு மணி நேர தொடர் உழைப்பு இருந்தது சுமார் பத்து நாட்கள்! அந்தப் பணி சிறப்பாக முடிந்த போது மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது – அப்பாடா இன்னும் சில நாட்கள் சரியான நேரத்தில் வீடு திரும்பலாம் என!


ஆனால் இந்த மாதிரி சந்தோஷப்படுவது உனக்கு உகந்ததல்ல என்று எங்கோ ஆண்டவன் சிரித்தபடி நினைத்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியவில்லை. பல சமயங்களில் நீண்ட நேர உழைப்பை அலுவலகத்திற்காகத் தர வேண்டியிருந்தது – வீட்டில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும் தொடர் பணி – எத்தனை மணிக்கு வேண்டுமானாலும் அழைத்து இந்த நிமிடத்தில் இந்த வேலை நடக்க வேண்டும் என உத்தரவு வரும் – உடனே செய்யவேண்டும் – அப்படி ஒன்றும் தலைபோகிற வேலை இல்லை என்பதை நாம் உணர்ந்தாலும் செய்யாமல் இருக்க முடியாது.  அந்த வேலை நடக்காவிட்டால் வானம் கீழேயும் பூமி மேலேயும் மாறிவிடாது என்று கண்டிப்பாகத் தெரிந்தாலும் அதைச் சொல்ல முடிவதில்லை. எல்லா வேலைகளும் அவற்றுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, கொரோனாவுடன் சம்பந்தப்படுத்தி வேலை வாங்குவதே வழக்கமாகி விட்டது – சரி விடுங்கள் எதையோ சொல்ல வந்து எதையோ பேசிக் கொண்டிருக்கிறேன்.   


லாக்டவுன் 3.0 சமயத்திலேயே அலுவலகம் தந்த வாகனத்தில் செல்வதைக் குறைத்துக் கொள்ள ஆரம்பித்தேன் – காலையில் நண்பருக்குத் தனியாக அவருடைய அலுவலகத்தில் தந்திருந்த வாகனத்தில் அவருடன் பயணித்து, மாலை நேரத்தில் எங்கள் அலுவலக வாகனத்தில் வரத் துவங்கினேன்.  ஒரு வேளை மட்டும் காத்திருக்கலாம் என்ற எண்ணத்தில்.  அதிலும் சில சமயங்களில் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் அலுவலகம் தந்த வாகனத்தினைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொண்டேன்.  நான் அந்த வாகனத்தினை பயன்படுத்துவதை நிறுத்திய பத்து நாட்களில் அந்த ஓட்டுனர் கோவிட் பாசிட்டிவ்! அவருடன் அப்போதும் பயணித்த அனைவரையும் வீட்டிலேயே தனிமைப்படுத்தினார்கள்.  நான் தொடர்ந்து நண்பரின் அலுவலக வாகனத்தில் காலையும், சில வேளைகள் மாலையிலும் பயணித்தேன்.  நல்ல வேளையாக அந்த ஓட்டுனரின் வாகனத்தில் பயணிக்கவில்லை என்று மனது சந்தோஷப்பட்டாலும், அவருடன் பயணித்த நண்பர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலையும் மனதுக்குள் இருந்தது.


லாக்டவுன் 4.0 ஆரம்பித்த பிறகு, தலைநகர் தில்லியில் பேருந்துகள், ஆட்டோக்கள், வாடகை சிற்றுந்துகள் இயங்க ஆரம்பித்தன.  வேறு ஒரு நண்பர் காலை அலுவலத்திற்குச் செல்லும்போது என்னையும் அவரது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று என்னை விட்டுவிட்டு அவரது அலுவலகம் செல்வார். மாலை வேளைகளில் நான் ஆட்டோவில் வீடு நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர். சிலர் அவர்களாகவே பேசுவார்கள். சிலரை நான் பேச்சுக் கொடுத்து பேச வைப்பேன்.  தானாகவே பேசும் ஓட்டோ ஓட்டுனர் பேசிய விஷயங்கள் தான் இன்றைய பதிவின் வழி சொல்ல வரும் விஷயம்! சரி அந்த ஆட்டோ ஓட்டுனர் அப்படி என்னதான் சொன்னார் – அவருடைய வார்த்தைகளிலேயே கேட்கலாம் வாருங்கள்…


”அதிக அலட்டல் இல்லாமல், காலைல எட்டரை மணிக்கு Bபாராகம்(b)பா/ஜன்பத் மெட்ரோ அருகே வருவேன். அங்கே இருந்து நான்கு அல்லது ஐந்து முறை மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் ராஜ்பத் பகுதிக்கு சவாரி – சுலபமா 50/60 வாங்கிவிடலாம்.  ஐந்தாறு சவாரி வந்தால் 300 ரூபாய்க்கு மேல் வசூலாகிவிடும்.  அதன் பிறகு ராஜ்பத்தில் தான் பெரும்பாலும்.  நிறைய மதராஸி சுற்றுலா பயணிகள் வருவார்கள். இண்டியா கேட்டிலிருந்து ராஷ்ட்ரபதி பவன், ராஷ்ட்ரபதி பவனிலிருந்து இண்டியா கேட் இப்படி தொடர்ந்து சவாரி போய்க் கொண்டே இருப்பேன் – வேறு எங்குமே போவதில்லை. ஒவ்வொரு முறையும் 50-லிருந்து நூறு வரை ஆளுக்குத் தகுந்தமாதிரி கட்டணம் வசூலித்துவிடுவேன். பல மதராஸிகளுக்கு பாஷை தெரியாது.  அதனால் அவர்களை ஏமாற்றுவது சுலபம். நூறு ரூபாய் சொன்னால் பேரம் பேசி 70-80 என குறைத்து வாங்கிவிடுவேன். அதுவே அதிகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை.  


இப்படி காலையில பதினோறு மணியிலிருந்து மாலை ஆறு ஆறரை வரை ஆட்டோ ஓட்டினாலே போதும்.  ஒவ்வொரு நாளும் 1500 முதல் 2000 வரை சம்பாதித்து விடுவேன்.  எப்படியும் செலவு போக 700-800 ரூபாய் லாபம்! ஆனா இந்த ரெண்டு மாசமா லாக்டவுன், கொரோனா என எல்லா இடங்களிலும் ஊரடங்கு.  ஒரு சுற்றுலாப் பயணியும் வருவதில்லை. ஆட்டோக்களும் ஓடவில்லை. எல்லாம் ஸ்தம்பித்து விட்டது.  இரண்டு மாதங்கள் இருந்த பணத்தை வைத்து ஏதோ வாழ்க்கையை ஓட்டி விட்டேன்.  இனிமேல் சாப்பாட்டுக்கு வழியில்லை. ஆட்டோவிற்கான ட்யூ கட்ட வேண்டும் என்ற சமயத்தில் ஊரடங்கு தளர்த்தி இருக்கிறார்கள்.  ஆனால் இன்னும் குறைந்தது ஒரு வருடத்திற்காவது சுற்றுலாப் பயணிகள் வரப் போவதில்லை.  முன்பு மாதிரி சிறு தொலைவு பயணம் செய்து காசு சம்பாதிக்க முடியாது.  முன்பெல்லாம் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என சவாரி வந்தால் அடுத்த ஆட்டோவை கை காண்பித்து விடுவேன்! இனிமேல் அப்படி முடியாது.


இதோ காலையிலிருந்து யார் எங்கே கூப்பிட்டாலும் செல்கிறேன் – வேர்க்க விறுவிறுக்க உழைக்கிறேன் – ஆனாலும் மொத்தமாக ஆயிரம் ரூபாயைக் கூட பார்க்கவில்லை! காலை எட்டுமணியிலிருந்து ஓட்டிக் கொண்டிருக்கிறேன் – பத்து சவாரி தான் பார்க்க முடிந்தது – நீங்கள் பதினொன்றாவது சவாரி!  ஆண்டவன் ஏன் என்னை இப்படிச் சோதிக்கிறானோ? என்றைக்கு சூழல் சரியாகுமோ?  சுற்றுலாப் பயணிகள் என்று மீண்டும் வருவார்களோ?  என்றைக்கு மதராஸிகள் சுற்றுலா வருவது, என்றைக்கு நான் மீண்டும் நன்கு சம்பாதிப்பது?” என்று புலம்பினார்.


அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நானும் மதராஸி என்பது தெரியவில்லை!  முகத்தில் தான் முகமூடி அணிந்திருக்கிறேனே!  மொழியை வைத்து என்னைக் கண்டுபிடிக்க முடியவில்லை அவருக்கு!  ஆனாலும் அவர் செய்வது தவறு என்பதைப் புரிய வைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு!  இறங்கும்போது அவரிடம் சொன்னேன் – ”இந்தக் கஷ்டங்கள் எல்லாம் உனக்கு வந்ததே – நீ மதராஸிகளை ஏமாற்றியதால்தான் என எனக்குத் தோன்றுகிறது – யாரையும் ஏமாற்றாதே – உழைப்புக்கேற்ற, செல்லும் தூரத்திற்கேற்ப கட்டணம் வசூலிப்பது தான் சரியானது! பிறரை ஏமாற்றி சம்பாதித்த பணம் என்றைக்கும் உனக்கு ஒட்டாது. ஏதோ ஒரு விதத்தில் உன்னை அது இம்சிக்கும் என்பதை உணர்ந்து கொள்”.  அவரும் கொஞ்சம் புரிந்தமாதிரி “நீங்கள் சொலவதும் சரிதான், உங்களுக்கு நன்றி” என்று புறப்பட்ட போது அவரிடம் சொன்னேன்….  “நீ இத்தனை நேரம் சொன்னாயே மதராஸி மதராஸி என….  நானும் ஒரு மதராஸி தான்!” என்று.  கேட்ட மாத்திரத்தில் அந்த ஆட்டோ ஓட்டுனர் முகத்தில் ஒரு மாற்றம் – அடடா…  ஒரு மதராஸி கிட்டயே நாம் இப்படி பேசி விட்டோமே என தோன்றியதோ என்னவோ – “மாஃப் கரோ Bபாய், ஆகே சே ஐசே நஹி கரேங்கே”.   (மன்னித்து விடுங்கள் சகோதரா, இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்” என்று சொல்லி வண்டியை வேகமாக அங்கிருந்து நகர்த்தினார்! 


என்ன நண்பர்களே, இந்தப் பதிவு வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை, பின்னூட்டம் வழி சொல்வீர்கள் தானே…


மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


38 கருத்துகள்:

  1. இப்படியான அனுபவங்கள் சில எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. மொழி புரிந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடைசியில் பேசுவோம். அவர்கள் திகைத்துப் போய் உட்கார்ந்திருப்பார்கள். நல்ல அனுபவங்கள் தாம். இப்போது அலுவலகத்தில் பணிச்சுமை குறைந்துள்ளதா? நிச்சயம் இருக்காது. இன்னும் அதிகமாகவே ஆகி இருக்கும். கூடியவரை கவனமாக இருங்கள். கொரோனா துரத்துவது நிற்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல சமயங்களில் இங்கே இப்படியான அனுபவங்கள். நிறைய பேருக்கு நான் தமிழன் என்று புரிந்து கொள்ள முடிவதில்லை. :)

      பணிச்சுமை - அப்படியே இருக்கிறது கீதாம்மா. Work From Home வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் மீதி நாட்கள் அலுவலகம். ஆனால் நேரக் கணக்கு ஒன்றும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வருகிறது. வேலை நடக்கிறது! முடிந்த அளவு கவனமாகவே இருக்கிறேன். தங்கள் அன்பிற்கு நன்றி.

      கொரோனா துரத்துவது நிற்கவே இல்லை - நிற்கும். விரைவில் சூழல் சரியாகட்டும்.

      நீக்கு
  2. வணக்கம்
    ஐயா

    நீங்கள் சொல்வது போல பலருடைய வாழ்க்கையில் இது நடந்து கொண்டு இருக்கின்றது உலகளாவியரீதியில்
    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.

      பல இடங்களில் இது போன்ற கொள்ள தான்.

      நீக்கு
  3. ஆட்டோகாரரிடம் எனக்கு கோபம் வந்தது அவரிடம் என்ன சொல்லி இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ... அதையே நீங்களும் சொல்லி அவரது முகத்தில் கரியை பூசி விட்டீர்கள்.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஹிந்தி இல்லை. பார்த்தீர்களா ? தமிழனை எப்படி எல்லாம் ஏமாற்றுவதற்கு திராவிடகட்சிகள் இருந்திருக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுவதும் கேட்டு முடித்த பிறகு அவரிடம் சொன்னேன் கில்லர்ஜி.

      ஹிந்தி - ஒன்றும் சொல்வதற்கில்லை. நிறைய அரசியல்.

      நீக்கு
  4. ஆட்டோ ஓட்டுநர்கள் எல்லா இடங்களிலும் இப்படித்தான். சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனேகமாக மற்றவர்களை ஏமாற்றுபவர்கள்தாம். ரொம்ப வருஷமா பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர்கள் நியாயமாக மீட்டர் போட்டு ஓட்டறாங்க. அதிலும் சிலர் தமிழன் என்றால், அதிகமாகக் கேட்கிறார்கள், இல்லைனா வரமாட்டேன் என்று சொல்லிடறாங்க.

    இந்த மூணு மாசத்துல அவங்கள்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா இடங்களிலும் இப்படியே - உண்மை தான். பல இடங்களில் மொழி தெரியாதவர்கள் என்றால் ஏமாற்றவே நினைக்கிறார்கள்.

      //இந்த மூணு மாசத்துல அவங்கள்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பாங்க// - உண்மை தான் நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. ஏமாற்றிப் பிழைத்து சேர்த்த காசை வைத்து வயிற்றைக் கழுவிக் கொள்ள வேண்டியது தானே...

    ஆனால் அது எத்தனை நாட்களுக்கு?..

    அப்பாவி மக்களை ஏமாற்றுவது
    ஆட்டோக்காரர்களுக்கு இயல்பான ஒன்று போலிருக்கிற்து...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏமாற்றிப் பிழைத்து சேர்த்த காசை வயிற்றைக் கழுவிக் கொள்ள வேண்டியது தானே - ம்ம்ம்.. நீங்கள் சொல்வது போல எத்தனை நாளுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி.

      நீக்கு
  6. நம்மூர் ஆட்டோக்காரர்கள் இங்கே வடக்கத்தியர்களை ஏமாற்றுவதும் மிக மிக அதிகம்...ஊருக்கு ஊர் அப்படித்தான் உள்ளது...திருடராய் பார்த்து...கதைதான் இந்த விசயமும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருடராய் பார்த்து - கதைதான் இந்த விஷயமும். உண்மை தான் ரமணி ஜி.

      நீக்கு
  7. வெளி இடங்களில் போகும்போது நம்ம வீர, சூரத்தனத்தைலாம் காட்டக்கூடாது. அப்புறம், நம்ம பயணத்தின் நோக்கம் தடைப்பட்டு போக வாய்ப்பிருக்கு. அதனால்தான் அதிகம் பேரம் பேசுவதை குறைச்சுக்குறாங்க. இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெளி இடங்களில் சூரத்தனத்தை எல்லாம் காட்டக் கூடாது - உண்மை தான் ராஜி.

      நீக்கு
  8. பொதுவாகவே ஆட்டோக்காரர்கள் இப்படிதான். பேராசைக்காரர்களும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேராசை - யாருக்குத்தான் இல்லை ஸ்ரீராம். பலருக்கும் இருப்பது தானே...

      நீக்கு
  9. மாப் கரோ... இறுதியில் நெகிழவைத்துவிட்டார் ஆட்டோ ஓட்டுநர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறுதியில் நெகிழ்ச்சி - நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. அலுவலக வாகனத்தில் தொடர்ந்து செல்லாமல் இருந்தது உங்கள் அதிர்ஷ்டம் தப்பிவிட்டீர்கள்.

    மொழி தெரியாதவர்களை ஏமாற்றும் ஆட்டோகாரர்கள் எங்கும் உள்ளார்கள். இங்கு மீற்றர் கட்டாயம் என்பதில் ஏமாற்றும் குறைந்தது விட்டது.
    ஆட்டோகாரருக்கு ஏமாற்றாதே என எடுத்துச் சொன்னது சிறப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலுவலக வாகனத்தில் தொடர்ந்து செல்லாமல் இருந்தது அதிர்ஷ்டம் - உண்மை தான் மாதேவி.

      நீக்கு
  11. //மாஃப் கரோ Bபாய், ஆகே சே ஐசே நஹி கரேங்கே”. (மன்னித்து விடுங்கள் சகோதரா, இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன்” என்று சொல்லி வண்டியை வேகமாக அங்கிருந்து நகர்த்தினார்! //

    நீங்கள் சொன்னவிதம் அவரை மன்னிப்பு கேட்க வைத்துவிட்டது. அப்படியே இனி யாரையும் ஏமாற்றாமல் பிழைத்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இனி யாரையும் ஏமாற்றாமல் பிழைத்தால் நல்லது// உண்மை தான் கோமதிம்மா... ஏமாற்றுவது சரியல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

      நீக்கு
  12. வாசகம் செம ஜி!!! மிக மிக ரசித்தேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  13. மதராசிகளை நம்பி வாழ்க்கையை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள் குறித்து ஆச்சரியம் அடைந்தேன். உங்களிடமே அவர்களை ஏமாற்றியது பற்றி கூறியது சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மதராசிகளை நம்பி வாழ்க்கையை ஓட்டும் ஆட்டோ ஓட்டுனர்கள் - உண்மை தான். இப்படியும் சிலர் - நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
  14. ஜி உங்கள் பணிச்சுமை குறைந்திருக்காது என்று தெரியும். புரிந்து கொள்ளவும் முடிகிறது. உடல் நலன் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த வண்டியில் பயணித்தாலும் சரி.

    ஆட்டோகாரர்கள் திருவனந்தபுரத்தில் பொதுவாக நியாயமாக இருப்பார்கள் மிட்டர் போட்டு ஓட்டுகிறார்கள். அங்கும் ஒரு சிலர் இப்படியும் இருக்கின்றனர்தான்.

    நீங்கள் சொல்லியிருப்பது போலவே அனுபவமும் உண்டு. புது இடத்திற்குச் செல்வதென்றால் அங்குள்ள்வர்களிடம் ஆட்டோ சார்ஜ் எவ்வளவு ஆகும் என்று கேட்டு வைத்துக் கொண்டு ஆட்டோக்காரர் கூடுதல் சொன்னால் அடுத்த ஆட்டோவைப் பேச சென்றுவிடுவதுண்டு. பங்களூரிலும் ஒரு சிலர் தான் மீட்டர் போடுகின்றனர்.

    அந்த ஆட்டோக்காரர் பேசியது கொஞ்சம் கோபம் வந்தது. உங்கள் பதில் சூப்பர். ஏமாற்றிப் பிழைப்பது கண்டிப்பாக ஒட்டாது. கடைசில அவர் மன்னிப்பு கேட்கும் விதத்தில் நீங்கள் அழகா சொல்லிட்டீங்க. அவர் இனியேனும் ஏமாற்றாமல் இருந்தால் நல்லது.

    கீதா

    பதிலளிநீக்கு
  15. //இனியேனும் ஏமாற்றாமல் இருந்தால் நல்லது// அவரே திருந்தினால் தான் உண்டு கீதாஜி.

    மீட்டர் போட்டு ஓட்டுபவர்கள் குறைவு தான். தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிகம். ஏமாற்றுவதும் அதிகம்.

    பதிலளிநீக்கு
  16. தஞ்சையில் பக்கத்துத் தெருவிற்குச் செல்லவே ஆட்டோகாரர்கள் ஐம்பது ரூபாய் கேட்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியிலும் இதே நிலை தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  17. அன்பு வெங்கட்,
    தில்லி நிலவரம் மற்றும் இந்திய நிலவரம் படிக்கப் படிக்க வேதனை மிகுகிறது.
    எப்பொழுதும் மாஸ்க் அணியுங்கள்.
    இங்கும் நோயின் தீவிரம் அச்சுறுத்துகிறது.
    செய்தி கேட்காமல் இருக்கிறேன்.

    இப்படி எல்லாம் ஏமாற்றுகிறவர்களுக்கு நியாயம் கிடைக்கும்
    என்று எப்படி நம்புவது.
    கடைசியில் நீங்கள் அவருக்கு கொடுத்த
    புத்திமதி விலை மதிப்பில்லாதது.
    வட இந்தியாவில் மதராஸிகள் எப்பொழுதுமே
    இளைத்தவர்கள்.இன்னும் மாறவில்லை என்பதே வேதனை.
    இதில் அதிசயம் என்ன என்றால்.,
    அங்கேயே பிறந்து வளர்ந்த என் மாமா பெண்கள், மருமகள் எல்லோரும்
    தில்லி மாதிரி கிடையாது என்றே சொல்வார்கள்.
    பத்திரமாக இருங்கள் .இறைவன் துணை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிலவரம் சரியாகும் - நம்பிக்கை கொள்வோம் வல்லிம்மா....

      நானும் பெரும்பாலும் செய்திகளை வாசிப்பதே இல்லை. வாட்ஸ் அப் வழி வரும் செய்திகளை பெரும்பாலும் படிப்பதில்லை.

      ஏமாற்றுவது - அவராகத் திருந்தினால் தான் உண்டும்மா...

      //தில்லி மாதிரி கிடையாது// உண்மை தான்மா... பல விஷயங்களில் தில்லி மாதிரி வராது.

      நீக்கு
  18. ஆட்டோக் காரர்கள் மட்டுமல்ல பலரும் செய்து கொண்டிருந்த அக்கிரமங்களுக்கு கொரோனா வந்து ஆப்பு வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா...

      நீக்கு
  19. We noted you have north Indian ascent. You are able to converse easily. That's why not able to find out. The most human quality about human beings is that they make mistakes, all kinds of them. You reasoned him. I hope this man has changed. This man is not the same man again.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

      நீக்கு
  20. நல்ல அனுபவம். நல்ல பதிலடிகொடுத்தீர்கள். அவர்கள் மதாராசியை ஏமாற்றுகிறார்கள். ஆனால் ம்தராசி ஆட்டோக்காரர்கள் இனம் மொழி பேதமின்றி எல்லாம் பார்க்க மாட்டார்கள். எல்லோருக்கும் அதிக கட்டணம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊர் ஆட்டோக்காரர்கள் பற்றி சொல்லவே வேண்டியதில்லை! நிறையவே ஏமாற்றுகிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....