திங்கள், 13 ஜூலை, 2020

ஸுனோ ஸுனோ – ஹிந்தி – நிர்மலா ரங்கராஜன்


அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய காலையை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

ஒரு முறையாவது உங்களைப் பற்றி முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள். இல்லையென்றால் வாழ்க்கையின் மிகச் சிறந்த நகைச்சுவையைத் தவறவிட்டு விடுவீர்கள் – சார்லி சாப்ளின்.


தமிழகத்திலிருந்து தலைநகர் தில்லிக்கு/வட இந்தியாவிற்கு பணி நிமித்தம் வந்த பலருக்கும் இருந்த ஒரு மிகப் பெரிய சவால் இங்கே பேசப்படும் ஹிந்தி மொழி தான். தமிழகத்திலிருந்த வரை தமிழையும் ஆங்கிலத்தினையும் தவிர பெரும்பாலானவர்கள் வேறு மொழிகளை அறிந்தவரல்ல! வெகு சிலரே ஹிந்தி ப்ரசார் சபா மூலம் ஹிந்தி கற்றவர்கள் – அவர்களும் கூட படித்தாலும் பேசுகின்ற பழக்கம் இல்லை என்பதால் வட இந்தியா வரும்போது சில நாட்கள் திண்டாட்டம் தான்!  எனக்கும் அப்படியான அனுபவங்கள் உண்டு. இன்றைய பதிவில் தில்லி நட்பு வட்டத்திலிருந்து திருமதி ரெங்கராஜன் அவர்கள் தலைநகர் தில்லி வந்த புதிதில் கிடைத்த மொழி அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ஓவர் டு திருமதி ரங்கராஜன் - நட்புடன்… வெங்கட் நாகராஜ், புது தில்லி.

*****

ஸுனோ ஸுனோ – ஹிந்தியும் நானும்! – நிர்மலா ரங்கராஜன்


டெல்லிக்கு வந்த புதிதில் ஹிந்தியில் இரண்டொரு வார்த்தைகள் மட்டுமே தெரியும் அது "நஹீ,  "நாம் கியா ஹை" . இதை தவிர வேறு வார்த்தைகள் தெரியாது. ஆனால் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தது. என்னதான் புத்தகத்தில் ஹிந்தி வார்த்தைகளை தமிழில் படித்து வைத்திருந்தாலும் அதை நடைமுறையில் பயன்படுத்த தெரிவதில்லை . ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்தேன் அமைதியான சூழல். திடீரென வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வீட்டு உரிமையாளர் சத்தமாக 'ஸுனோ' என்று குரல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஹிந்தியில் பேசுகிறார்.  அவரது மனைவி கீழே நின்றுகொண்டு பதிலுரைக்க கணவரை கூப்பிடுகிறார் அதே தொனியில் 'ஸுனோ' என்று. பிறகு இருவரும் சத்தமாக ஏதோ பேசிக்கொண்டிருந்தனர் எதுவும் புரியவில்லை.  ஆனால் ’ஸுனோ’ என்ற ஒரு வார்த்தை மட்டும் மனதில் பதிந்தது. அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் ஆக இருக்கும் என்று புத்தகத்தில் தேடிப் பார்த்தேன். ஆனால் புத்தகத்தில் அந்த வார்த்தை இல்லை. யோசித்துப் பார்த்தேன் இருவருமே அப்படி அழைத்தனர் எனவே இது பெயராகத்தான் இருக்க முடியும் என்று நினைத்துக்கொண்டேன்.


அப்படியானால் இருவருக்கும் எப்படி ஒரே பெயராக இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.   அதற்கும் சமாதானம் சொல்லிக் கொண்டேன் ஏன் இருக்க முடியாது நம்ம ஊர்ல பாரதி என்று பெயர் இருக்கிறதல்லவா அப்படியாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இருந்தாலும் யாரிடமாவது இது பற்றி கேட்க வேண்டும் என்று ஆவல். யாரிடமும் கேட்க முடியாது ஏனென்றால் ஹிந்தி தெரியாது. ஆங்கிலத்தில் கேட்டாலும் யாரும் பதில் சொல்ல மாட்டார்கள் எனவே வேறு வழி இல்லை கணவர் வீடு திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  அவர் மாலை வீடு திரும்பியதும் முதல் வேலையாக என் சந்தேகத்தை கேட்டேன். 'எப்படி கணவன் மனைவி இருவருக்கும் ஒரே பெயராக இருக்க முடியும்? ' என்று அதற்கு 'ஏன் அப்படிக் கேட்கிறாய்?' என்று கேட்டார். நானும் நடந்த சம்பவத்தைச் சொன்னேன். அவர் சிரித்துவிட்டு பதில் சொன்னார் 'ஸுனோ என்றால் பெயரல்ல. அது கவனத்தைத் திருப்ப பயன்படுத்தும் ஒரு சொல்.  நாம் ஹலோ என்று சொல்கிறோம் அல்லவா அது போலத்தான் இதுவும் என்று சொன்னார்.  சொல்லுக்கு அர்த்தம் தெரிந்து கொண்டேன் ஆனால் அதன் பிறகு அந்த வார்த்தையை கேட்கும்போதெல்லாம் எனக்கு அந்த சம்பவம் தான் ஞாபகத்திற்கு வரும். என் அறியாமையை நினைத்து சிரிப்பும் வரும்.


இப்படித்தான் ஒருநாள் காய் வாங்க சென்றேன். கடை அதிக தொலைவு கிடையாது வீட்டு வாசலில் தான். இருந்தாலும் என் கணவர் நான் தனியாக வெளியே சென்றால் தான் விரைவில் ஹிந்தி கற்றுக்கொள்ள முடியும் என்பதற்காக அவர் வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டு என்னை காய் வாங்கி வர அனுப்பி வைத்தார். நானும் மிக தைரியமாகச் சென்றேன். கடையில் சென்று வாய் திறந்து பேசவில்லை கை ஜாடையில் ஒவ்வொரு காயாக காண்பித்து 'ஏக் பாவ் ( கால் கிலோ)' சொல்லி, தேவையான காய்கள் வாங்கியாச்சு. பணம் தரவேண்டும் கடைக்காரர் ஏதோ சொன்னார். நான் நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன் அவர் 'குல்லா நஹி ' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. இது காய் கடை தானே!  இவர் எதற்கு குல்லா இல்லை என்கிறார்? என்று நினைத்துக்கொண்டே பதில் எதுவும் சொல்லாமல் விருவிருவென வீட்டுக்கு வந்தேன். கணவரிடம் 'நான் அந்தக் கடைக்காரரிடம் காய் மட்டும் தான் வாங்கினேன் குல்லா எதுவும் கேட்கவில்லை ஏன்னா  துணி கடையில் தான் குல்லா கிடைக்கும் என்பது எனக்கு தெரியும், அப்படி இருக்க, இந்த கடைக்காரர் எதற்கு என்னிடம் திரும்ப திரும்ப குல்லா நஹி  என்று சொல்கிறார்?' என்று கேட்டேன்.


அவர் தலையில் அடித்துக்கொண்டு இது அந்த குல்லா இல்லை சில்லறையை தான் அப்படி சொல்லி இருக்கிறார் என்று கூறிவிட்டு அவரே கடைக்கு வந்து கடைக்காரருக்கு பணம் கொடுத்துவிட்டு எனக்கு ஹிந்தி தெரியாது என்ற விஷயத்தையும் கடைக்காரரிடம் தெரிவித்து விட்டு என்னை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார். கடைக்காரர் முன்பு எனக்கு அவமானமாகி விட்டது. அதன் பிறகு அந்த கடையில் நமக்கு தனி கவனிப்பு தான். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எனக்குத்தான் முன்னுரிமை!

ருக்கு!

வீட்டில் தனியாக இருப்பது என்பது மிகப்பெரிய தண்டனை. என்னதான் புத்தகம் படித்தாலும் பாடல்கள் கேட்டாலும்  எவ்வளவு நேரம் முடியும்? எனக்கும் அப்படித்தாங்க. எனவேதான் சில நேரங்களில் நண்பர்களின் வீட்டிற்கு சென்று விடுவேன். ஒருநாள் அப்படித்தான் நண்பரின் வீட்டிற்குச் சென்றேன். அங்கு நண்பரின் மனைவி வீட்டு வேலையில் மிகவும் மும்முரமாக இருந்தார். எனவே நான் அவர்கள் வீட்டு வாசலில் அமர்ந்து வெளியில் நடப்பவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு சிலர் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் தண்ணீர் பிடிப்பதில் ஏதோ பிரச்சினை. வீட்டு உரிமையாளர் அங்கு வந்து சூழலை சரி செய்துக் கொண்டு இருந்தார்.  அப்போது ஒரு பெண்மணியை பார்த்து 'ருக்கு' (எனக்கு அப்படி தாங்க கேட்டது) என்றார். அந்தப் பெண்மணியை பார்த்தால் வட இந்திய பெண்மணியாக தோன்றியது.  இந்தப் பெயர் நம்ம ஊர் பக்கம் தானே அதிகம் பயன்படுத்துவர். இந்த ஊரிலும் அந்த பெயர் வைப்பார்களா என்ன!  என்று நினைத்துக்கொண்டேன். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே மற்றொரு பெண்மணியை பார்த்து அதே போல 'ருக்கு' என்றார்.  என்ன இது இவர் பெயரும் அதையே சொல்கிறாரே! 


இதுவும் அந்த ஸுனோ கதைத் தானோ?  என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு ஆளை பார்த்து அதே போல 'ருக்கு  என்றார். அவ்வளவுதான் அதன்பிறகு பொறுமை இழந்து நண்பரின் மனைவியிடம் சென்று இதற்கு அர்த்தம் என்ன என்று கேட்டேன். அவர்கள் சொன்னார்கள். அது 'ருக்கு இல்லை 'ருக்கோ' . அப்படி என்றால்  'கொஞ்சம் பொறு' என்று அர்த்தம் என்று சொன்னார்கள். அதன் பிறகு அந்த வார்த்தை எனக்கு மறக்கவே இல்லை.  இப்படி ஒவ்வொரு வார்த்தை கற்றுக்கொண்ட போதும் ஒவ்வொரு மறக்கமுடியாத அனுபவங்கள் இருந்தன.


எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் இதுபோல அனுபவங்கள் உண்டு என்று அவர் என்னிடம் சொன்னதை நான் உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.


எனது கணவரும் அவரது நண்பரும் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது ஒருநாள் எனது கணவர் அலுவலகம் செல்லவில்லை. அவரது நண்பர் மட்டும் அலுவலகம் சென்று விட்டார். நண்பர்  கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து வைத்திருக்க, அன்று சிலிண்டர் வீட்டிற்கு வந்துள்ளது.  கீழ் வீட்டில் இருந்த வீட்டு உரிமையாளர் என் கணவரை அழைத்து செய்தியை சொல்ல இவரும் முழுவதும் கேட்டு டீகே(சரி) என்று சொல்லிவிட்டு கதவை சாத்திக்கொண்டு விட்டார். இப்படியே பலமுறை சொல்லியும் இவர் முன்புபோலவே சரி என்று சொல்லி கதவை சாத்திக் கொண்டார். வேறுவழியின்றி அந்த அம்மா சிலிண்டரை வாங்கி வைத்துக் கொண்டார். மாலை நண்பர் வீடு திரும்பியதும் அவரிடம் நடந்ததை கூறி உன் நண்பன் சரியான முட்டாள் நான் சிலிண்டர் வந்துள்ளது என்று சொன்னால் அவன் சரி என்று சொல்லிவிட்டு கதவை தாழிட்டுக் கொள்கிறான் என்று சொன்னார்களாம். நண்பர் அதை என் கணவரிடம் சொன்னபோது இவருக்கு மிகவும் அவமானமாகி விட்டதாம்.

இப்படித்தாங்க எங்களுக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு ஹிந்தி தெரியாமல் டெல்லிக்கு வந்து இதுபோல நிறைய அனுபவங்கள் இருந்திருக்கும். எங்களுடைய அனுபவங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி.


இந்த சம்பவங்கள் நடந்து 24 வருடங்கள் ஆகிவிட்டது ஆனாலும் இன்னும் மறக்கவில்லை. அன்று அவமானமாக நினைத்த நிகழ்வுகள் இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் அனுபவம் ஆகியது. காலம் அனைத்தையும் மாற்றி விடுகிறது.


அப்படித்தான் இப்போதும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய பிரச்சனையான "கொரோனா"  வையும்  காலம் சரி செய்து விடும் என்று நம்பிக்கை வைப்போம்.  நிச்சயம் நாம் அனைவரும் அமைதியான ஒரு நல்ல சூழலை விரைவில் காண்போம் என்ற நம்பிக்கையுடன் முடித்துக்கொள்கிறேன் நன்றி வணக்கம்.


நிர்மலா ரங்கராஜன்.

 

*****

 

இன்றைய பதிவின் வழி சொன்ன விஷயங்களை நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். நாளை வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


34 கருத்துகள்:

 1. இன்றைய பதிவில்
  நகைச்சுவை மிளிர்கின்ற்து....

  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நலமே விளையட்டும்.

   நீக்கு
 2. பதில்கள்
  1. ரசனையான அனுபவங்கள்! - ஆமாம்! மொழி தெரியாமல் பட்ட கஷ்டங்கள் நல்ல ரசனையான அனுபவங்களே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. இந்த ரகளையான அனுபவத்தின் தலைப்பு எனக்கு ஆப் கி கசம் பாடலை நினைவு படுத்தியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடல் - ஸுனோ... கஹோ... கஹா... சுனா... கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர் குரலில். நல்ல பாடல் தான் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஹிந்தி மொழி - ரசித்த சம்பவங்கள். நானும் கிடைத்த வாய்ப்பை உபயோகிக்காமல் மொழியை கற்றுக்கொள்ளாமலேயே காலம் தள்ளிவிட்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் கற்றுக் கொள்வது நல்லதே. இப்போது கூட நீங்கள் ஹிந்தி கற்றுக் கொள்ளலாம் நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. அனுபவத்தை ரசித்தேன். அவருடைய அனுபவத்தை என்றும் மறந்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். முதன்முதலில் சென்னையில் பணியில் சேர்ந்தபோது ஆங்கிலமும் இந்தியும் மற்றுமே அலுவலகத்தில் பேச்சுமொழியாக இருந்தது. ஆங்கிலம் உதவியாக இருந்தபோதிலும் நான் கற்றிருந்த இந்தி அதிகம் துணையாக இருந்தது. பிரவேசிகா வரை தேர்ச்சி பெற்றிருந்தேன். பிறமொழியறிவு என்றும் தேவையே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவங்களை ரசித்தமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   ப்ரவேஷிகா வரை ஹிந்தியில் தேர்ச்சி - ஆஹா. வாழ்த்துகள். பிறமொழியறிவு அவசியமும் கூட.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. அனுபவங்கள்தான் நாம் படிக்கும் பாடங்கள் நல்ல சுவாரஸ்யம்.

  "ஸுட்டா" என்றுதான் நான் அறிந்து இருந்தேன், "குல்லா" என்பதை இன்றே அறிகிறேன். இதுகூட எனக்கொரு அனுபவப் பாடமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுபவங்கள் நாம் படிக்கும் பாடங்கள் - உண்மை.

   ஸுட்டா அல்ல chசுட்டா.... ஸுட்டா என்பதற்கு வேறு அர்த்தம் கில்லர்ஜி. பீடி/சிகரெட் புகைபிடித்து ஒரு இழுப்பு இழுப்பதை ஸுட்டா என்று சொல்வார்கள். “ஏக் ஸுட்டா மார்கே ஆதா ஹூன்” என்றால் புகைபிடித்து வருகிறேன் என அர்த்தம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. சுவையான அனுபவங்கள்...

  இப்பொழுதும் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிந்தி கற்றுக் கொள்வது சுலபம் தான் அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

 8. இந்த பதிவு நகைச்சுவை பாணியில் இருந்தாலும் சில ஹிந்தி வார்த்தைகளை கற்றுக் கொண்டேன் டிகே அடுத்த பதிவில் பார்ப்போம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கு ஹிந்தி தெரிந்திருக்குமே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. ஆமாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. வாசகத்திற்கேற்ப என்னை பற்றி எண்ணி அடிக்கடி சிறித்ததுண்டு.
  முன்பு நான் எண்ணிய விதம், நடந்துகொண்ட விதம் எல்லாம் இப்போது யோசிக்க முட்டாள்தனமாகவும் சிறிப்பாகவும் இருக்கும்.
  நிர்மலா மேடம் அணுபவங்கள் சுவையாக இருக்கிறது.
  சில்லறைக்கு டில்லிவாசிகள் உபயோகிக்கும் குல்லா எனக்கு புது தகவல்.
  எனக்கு நிர்மலா மேடம் என்றால் அந்தமானில் ஏர்ப்போர்ட்டிலிருந்து கைப்பேசி மறந்ததாக சொல்லி மீண்டும் அறைக்கு ஓடவைத்து கைப்பேசியை மீட்ட சம்பவம் தான் நினைவு வரும்.
  ஒருவேளை என் நியாபகம் பிழையாக இருக்கலாம் வேறு சக பயணியாக இருக்கலாம்.
  நல்ல சுவையான பதிவு ஐய்யா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... இவரே தான் அந்தமானில் கைப்பேசியை விட்டது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
 11. எங்க அம்மா சொல்றது கடைக்காரனுக்குப் புரியாது. எங்க அம்மா ஒண்ணு சொன்னா அவன் வேற ஒண்ணு எடுத்து குடுப்பான். கடுப்பாயிட்ட எங்க அம்மா கடைக்குள்ளயே போயி வேணுங்கிறதை எடுத்து கிட்டு பில் போடுண்ணு சொல்லிடுவாங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹாஹா... மொழி பிரச்சனை எனும்போது சமாளிக்கவும் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

   நீக்கு
 12. நானும் அவசியமான பொருட்களை வாங்க ரிச்ஷாவில் போனால் நேரே போ, சைடில் திரும்பு, வழி விடு, மீதி கொடு, காய் வாங்க அளவுகள் காய்களின் இந்தி பெயர் எல்லாம் கற்றுக் கொண்டேன்.நான் படிக்கும் போது இந்தி கிடையாது பள்ளியில்.

  நிர்மலா ரங்கராஜன். அனுபவங்கள் அருமை. நாம் என்னதான் புத்தகம் பார்த்து படித்தாலும் பேச்சு வழக்கில் கற்றுக் கொண்டால்தான் நல்லது.

  //மிகப்பெரிய பிரச்சனையான "கொரோனா" வையும் காலம் சரி செய்து விடும் என்று நம்பிக்கை வைப்போம்.//

  நம்பிக்கையோடு காத்து இருப்போம் நம்பிக்கைதானே வாழ்க்கை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொழி கற்றுக் கொள்வது பல விதங்களில் உதவியாக இருக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
  2. அன்பு வெங்கட்,
   இனிமையான பதிவு.
   எங்கள் மாமாவும், மாமியும்
   அங்கு போய், இந்தியில் பேச ஆரம்பித்து அவர்கள் குழந்தைகளுக்குத்
   தமிழே வராமல் இருந்தது. இப்பொழுது பிரபந்தம் சொல்லும் அளவுக்குத் தேறி விட்டார்கள்.
   நிர்மலா ரங்கராஜனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

   எத்தனை அருமையான நகைச்சுவை.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா..

   நீக்கு
 13. மிகவும் ரசிக்கும்படியான சம்பவங்கள். தமிழ் நாட்டில்இருந்து இங்கு வந்தவர்கள் அனைவரும் இந்தமாதிரி சம்பவங்களை சந்தித்திருப்பார்கள.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. Vasagam arumai,as usual. Learning hindi is must in India. Easy to travel, & communicate to others. Whatever effort we take to learn hindi is worth for living.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும், பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. இந்தப் பகுதி வந்தாலே குழந்தைகளுக்கும் புரிகிற மாதிரி ஒரு இலகுவான தமிழ் நடையில் நிகழ்வுகள் சொல்லப்படும் பொழுது நான் என்னையே மறந்து போகிறேன். இது மற்ற பதிவுகளில் எனக்குக் கிடைக்காத அனுபவம் ஆகையால் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றுகிறது.

  தலைநகர் வந்து மொழியறியா அவஸ்தையில் நான் பட்டபாடுகள் சில நினைவுக்கு வந்தன.

  அதில் ஒரு ஆட்டோவில் கனாட்பிளேசிலிருந்து பழைய தில்லி ரயில் நிலையத்திற்கு பயணித்த அனுபவமும் ஒன்று உண்டு. நான் நெகிழ்ந்து போய் அந்த ஆட்டோ ஓட்டுனரை இறுகத் தழுவி
  பேசவும் தெரியாது, மொழி தெரியாததால் சொல்லவும் முடியாது திக்கித் திணறிய அனுபவமும் ஒன்று உண்டு. அது இப்பொழுது நினைவுக்கு வந்தது.

  வாய்ப்பு வரும் பொழுது பகிர்ந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /மொழியறியா அவஸ்தை/ - உண்மை. எனக்கு சில மாதங்கள் வரை அந்தப் பிரச்சனை இருந்தது.

   உங்கள் அனுபவங்களையும் வாய்ப்பு வரும்போது எழுதுங்கள் ஜீவி ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. அவஸ்தைகளை அழகான பதிவாக்கிவிட்டார் உங்கள் தோழி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....