வெள்ளி, 10 ஜூலை, 2020

அமேசான் வெளியீடுகள் – பணம் கொட்டுமா?

அன்பின் நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு பொன்மொழியுடன் ஆரம்பிக்கலாம் வாங்க!

நம்பிக்கையோடு நகர்ந்து கொண்டே இரு – “நதி” போல! ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் “கடலாக”!


*****

அமேசான் தளத்தில் தற்போது வலைப்பதிவர்கள் பலரும் மின்னூல்களை வெளியிடுவது நல்ல விஷயம்.  நண்பர் ஜோதிஜி அவர்கள் இந்த விஷயத்தில் முன்னோடி.  நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழிகாட்டுதலில் சில நண்பர்கள் மின்னூல்களை முனைப்புடன் வெளியிடத் துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். முனைவர் ஜம்புலிங்கம் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, எங்கள் பிளாக் நண்பர்கள், கில்லர்ஜி என ஒவ்வொருவராக மின்னூல்களை வெளியிடத் துவங்கியிருப்பது நல்லதொரு மாற்றம்.  அச்சுப் பிரதிகளாக நூல்களை வெளியிட்ட நண்பர் பால கணேஷ் அவர்களும் ஒரு மின்னூலை கடந்த வாரத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.  இந்த மாதிரி பலரும் மின்னூல்களை வெளியிடுவது உற்சாகம் தருகிறது.  இந்த நூல்களை அமேசான் தளம் வழி வெளியிடுவதால் என்ன கிடைக்கப் போகிறது? பணம் கொட்டோ கொட்டென்று கொட்டுமா? என்று சிலர் நினைக்கலாம்!  பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையில் குறிக்கோளாக வைத்துக் கொள்வது நல்லதல்ல!  அத்தியாவசியத் தேவைக்கு பணம் தேவையானதாக இருந்தாலும் அதுவே பிரதானமல்ல!  மனதிற்குக் கிடைக்கும் மகிழ்ச்சி கூட ஒரு விதத்தில் ஒரு சம்பாத்தியமே! 


எனது முந்தைய பதிவொன்றில் மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா அவர்களும் இந்த விஷயத்தினைப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார் – பெரிதாக பணம் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று!  அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.  உங்களுக்கு அமேசான் தளத்தில் வெளியிட்ட மின்னூல்கள் மூலம் நிறைய பணம் வரலாம் – வராமலும் போகலாம்! அது முக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை! பணம் சம்பாதிப்பதை விட வேறு விஷயம் ஒன்று இதில் முக்கியம் – அது உங்கள் மனதிற்குக் கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி, சந்தோஷ உணர்வு.  உங்களுடைய எழுத்து, உங்களுக்குப் பிறகும் இந்த இணையப் பெருங்கடலில் இருக்கப் போகிறது! எத்தனை வருடங்கள் ஆனாலும் அவை இணையப் பெருங்கடலினை விட்டு வெளியே செல்லாது. மூழ்கி முத்தெடுத்துக் கொண்டே இருக்கும் எவரோ ஒருவர் உங்கள் ஆக்கத்தினை எப்போது வேண்டுமானாலும் படிக்கக் கூடும்! உங்கள் எழுத்து அந்த நபருக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற போது, நீங்கள் அந்தத் தருணத்தில் அங்கே இல்லை என்றாலும், உங்கள் எழுத்து நிலைத்து நிற்கும்!  அதனால் பணம் வருமா வராதா என்ற எண்ணங்களை விட்டு விடுவோம்! தொடர்ந்து எழுதுவோம்.  தளர்ந்து விடாமல் எழுதுவோம்!


மின்னூல்களை தரவிறக்கம் செய்து படிப்பவர்கள் பெரும்பாலும் உங்கள் மின்னூல் பற்றி சமூகத் தளங்களில் எழுதுவதில்லை – அவர்கள் படித்தபோது கிடைத்த மகிழ்ச்சியினை, உணர்வுகளை – அது நல்லதாக இருந்தாலும், மோசமாக இருந்தாலும் தனக்குள்ளேயே வைத்துக் கொண்டு விடுகிறார்கள். வெகு சிலரே தங்களது நூல் வாசிப்பனுபவத்தினை பகிர்ந்து கொள்கிறார்கள்.  உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் – உங்கள் ஆக்கத்தில் உருவான மின்னூலை வாசித்து – தனது தளத்திலோ, சமூகத் தளங்களிலோ பகிர்ந்து கொண்டார் என்று உங்களுக்குத் தெரிய வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை எத்தனை பணம் கிடைத்தாலும் வாங்கி விட முடியாது! கடந்த வாரத்தில் நண்பர் ஸ்ரீனிவாசன் பாலகிருஷ்ணன் (சீனு) என்னை முகநூலில் Tag செய்திருந்தார். அதன் வழி “வாசிப்பை நேசிப்போம்” என்ற முகநூல் குழுமத்தில் எனது “ஏழு சகோதரிகள் பாகம் 1” ஐப் பற்றி ரூபினா ராஜ்குமார் அவர்கள் எழுதி இருந்த ஒரு வாசிப்பனுபவத்தினை தெரிந்து கொள்ள முடிந்தது!  ஆஹா… அதைப் படித்த போது மனதில் அப்படி ஒரு மகிழ்ச்சி. அவர் எழுதிய வாசிப்பனுபவம் கீழே:

*****

”கிண்டிலில் வெங்கட் நாகராஜ் என்பவர் எழுதிய "ஏழு சகோதரிகள் (பாகம் 1) வாசித்தேன். வட கிழக்கு மாநிலங்கள் ஏழை ஏழு சகோதரிகளாக உருவகப்படுத்தி இருக்கிறார். முதல் பாகத்தில் மணிப்பூரையும் நாகாலாந்தையும் பற்றி சொல்லி இருக்கிறார்.

முதல் சகோதரி மணிப்பூர். மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு கோயில் ஒன்று இருக்கிறது. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல் கோயிலாம்.

மணிப்பூர் ராஜாவையும் மக்களையும் அவமதிக்கும் விதமாக பீர் திகேந்திர ஜீத் சிங் மற்றும் தளபதி தங்கல் ஆகியோரை தூக்கிலிட்ட இடத்தில் ஆங்கிலேயர்கள் 8000 பெண்களை விதவைக் கோலத்தில் நிற்க வைத்து தூக்கிலிட்டார்களாம்.

அந்த இடத்தில் உயிரிழந்த தியாகிகளுக்காக ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கிறார்களாம். மூன்று தூண்கள் கீழிருந்து மேல் நோக்கிச் சென்று மேலே சேர்கிறதாம். அங்கே மணிப்பூர் நகரச் சின்னமான டிராகன்கள் மூன்று வைத்திருக்கிறார்களாம்.

இரண்டாவது சகோதரி நாகாலாந்து. இங்கே நாகாலாந்து பழங்குடி மக்கள் தவிர பல பீஹாரிகளும் உத்திரப் பிரதேச மக்களும் இருக்கிறார்கள். கூலி வேலை செய்பவர்கள். ஒரு நீண்ட குச்சியில் இரண்டு பக்கமும் தகர டின்னில் தண்ணீர் கொண்டு வரும் வேலையும் செய்கிறார்கள். தண்ணீருக்கு இங்கே பஞ்சம்.

தலைநகரமான கொஹிமாவில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய மரச்சிலுவை அமைத்த சமயத்தில் ஆசியப் பகுதியிலேயே பெரிதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

நாகாலாந்து மக்களும் சீனர்களைப் போலவே வாத்து வெள்ளெலி புழுக்கள் நத்தை தேனீக்கள் எதையும் விடுவதில்லையாம். எல்லாம் உண்கிறார்களாம்.

ஏழு சகோதரி மாநிலங்களில் எல்லா மாநிலங்களிலுமே பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் ஆண்களைப் பார்ப்பது கடினமாக இருக்கின்றது. பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை தாங்குகின்ற தூண்கள். வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு கைக் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு கடைகளுக்கு வியாபாரம் செய்ய வந்து விடுகிறார்கள்.

நாகாலாந்து மக்களுக்கு ஒரு பழக்கம் இருந்ததாம். தன் எதிரிகளைக் கொன்று மண்டை ஓடுகளை சேகரித்து வருவார்களாம். ஒவ்வொரு முறை தலையைக் கொய்ததும் தன் உடலில் பச்சை குத்திக் கொள்வார்களாம். அது அவர்கள் வீரத்துக்கு அடையாளமாக இருக்குமாம்.

மற்ற சகோதரிகளையும் அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கிறேன்.”

*****

இந்த வாசிப்பு அனுபவத்தினைப் படித்த போது கிடைத்த மகிழ்ச்சி அலாதியானது!  வலைப்பூவில் எழுதும் நண்பர்கள் தங்களது ஆக்கங்களை வலைப்பூவைத் தொடர்ந்து அமேசான் தளம் மூலமாகவும் மின்னூல்களை வெளியிட்டு, பலரும் படிக்க ஏதுவாகச் செய்யலாம்! வாருங்கள் இணையவெளியில் நம் ஆக்கங்களை விதைத்து வைப்போம்! நிச்சயம் என்றாவது ஒரு நாள் அது அறுவடையாகி மகிழ்ச்சி எனும் மகசூலைத் தரும்! 


சரி இந்த வாரத்தின் எனது மின்னூல் வெளியீடு பற்றிய தகவலையும் சொல்லி விடுகிறேன்.  இந்த வாரத்தில் எனது ஒரு மின்னூல் வெளியாகி இருக்கிறது.  ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா பயண அனுபவங்கள் அடங்கிய, குறைந்த பக்கங்களைக் கொண்ட ஒரு மின்னூல்!  மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி – “விஜயவாடா சுற்றுலா”.

மேலும் ஒரு தகவல் – “ஏழு சகோதரிகள் பாகம் 3” மின்னூலை ஐந்து நாட்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் – இன்று மதியம் 12.30 மணியிலிருந்து வரும் செவ்வாய்க் கிழமை மதியம் 12.29 மணி வரை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்து முடிந்தால் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்!  இது வரை வெளியிட்ட எங்கள் அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி – மின்னூல்கள்!

என்ன நண்பர்களே... இன்றைய பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நாளை வேறு ஒரு பதிவுடன் சந்திப்போம்... சிந்திப்போம்... 

நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.

அமேசான் கிண்டில் வெளியீடு பற்றிய முந்தைய பதிவுகள்: 

அமேசான் தளத்தில் மின்னூல்கள் வெளியிடுவது எப்படி…


கிண்டிலுக்காக Word ஃபைல் சேமிப்பு – சில குறிப்புகள்

48 கருத்துகள்:

 1. /// மகிழ்ச்சி கூட ஒருவிதத்தில் சம்பாத்தியமே!...///

  அருமை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 2. வழக்கம்போல நல்லதொரு வாசகம்.   கிண்டில் பாதிப்புகள் பற்றி நீங்கள் சொல்லியிருப்பது முற்றிலும் உண்மை.  பணம் பெரிய விஷயமே இல்லை.  ஆரம்பப் புள்ளிகளாய் இருக்கும் ஜோதிஜி, DD ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

  தலைப்பு சொல்லும் பொருள் ஒருவருக்கு வேறு பொருளைத்தந்து படிக்காமல் போனாலும், இது மாதிரியான விமர்சனப் பதிவுகள் புத்தகம் எதைப்பற்றி பேசுகிறது என்று சொல்லும்போது அதில் ஆர்வம் இருக்கும் இன்னும் சிலர்/பலர் புத்தகத்தைப் படிக்க வாய்ப்புகள்.

  உங்கள் புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   பணம் பெரிய விஷயமே இல்லை - உண்மை.

   விமர்சனப் பதிவுகள் நல்லதே. நீங்கள் சொல்வது போல இன்னும் சிலரைப் படிக்கத் தூண்டுகோலாக அவை இருக்கும்.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 3. ஆம் பணத்தை விட நம் எண்ணமும் கருத்தும் பலரிடம் போய்ச்சேருவதில் கிடைக்கிற சந்தோசம் கூடுதலானதே...சொன்னவிதம் அருமை..வாழ்த்துகளுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /நம் எண்ணமும் கருத்தும் பலரிடம் போய்ச் சேருவதில் கிடைக்கிற சந்தோசம் கூடுதலானதே/ - 100% உண்மை ரமணி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. //நீங்கள் அந்தத் தருணத்தில் அங்கே இல்லை என்றாலும், உங்கள் எழுத்து நிலைத்து நிற்கும்//

  ஆமாம் இதுதான் நமது மகிழ்ச்சி.
  தங்களது புதிய மின்நூலுக்கு எமது வாழ்த்துகள் ஜி.

  பதிலளிநீக்கு
 5. உண்மை. இதுபோன்ற மகிழ்ச்சிதான் மனதிற்கு நிறைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. பொன்மொழி அருமை அண்ணா.
  நண்பர்கள் பலரும் மின் நூல் வெளியிட்டு இருப்பது மகிழ்ச்சி. இங்கு யாருக்கு இருக்கும் சில நண்பர்களும் தற்பொழுது மின்னூல்கள் வெளியிடுவதைக் காண்கிறேன். உங்கள் நூலின் வாசிப்பை நேசிப்போம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கிரேஸ்.

   நண்பர்கள் பலரும் மின்னூல் வெளியிடுவது மகிழ்ச்சியான விஷயமே.

   வாசிப்பை நேசிப்போம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பத்திரிகைகளில் எழுதியபோதும் இதே நிலைதான். இதழ் வராது. சன்மானம் குறைவு அல்லது வராது.
  வாசித்தவர்கள் பாராட்டும்போது கிட்டுகிற மகிழ்ச்சியே நிஜ சன்மானம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /பத்திரிகைகளில் எழுதியபோதும் இதே நிலை தான்/ இதைச் சொல்லும் உங்களுக்கு இந்த விஷயத்தில் நிறையவே அனுபவம் இருப்பதை உணர்கிறேன்.

   மகிழ்ச்சியே நிஜ சன்பானம் - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.

   நீக்கு
 8. மகிழ்ச்சியுடன் திருப்தியே அவசியம்... மின்னூல்கள் தொடர வாழ்த்துகள் ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்ச்சியும் திருப்தியும் அவசியம்! நன்று.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. புதிய மின் நூலுக்கு வாழ்த்துக்கள். 
  மின் நூல் என்றவுடன் தான் பல படைப்புகளும் வெளியுலகம் காணத்துவங்கின. காரணம் செலவு இன்மையே. மின்னூல்களால் பயன்கள்.
  1. பிரசுரிப்பது எளிது.
  2. கணினி அறிவுடையவர்களே பார்ப்பர், படிப்பர்
   3. நல்ல நூல்கள் இணைய வழி பிரபலம் ஆகி விடும்.
   4. ஆசிரியருக்கும் ஒரு ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி, அவருடைய  நூல் வாசிப்பு உலகம் முழுதும் பரவுதலால்.
  5. கடைசியாக குறைவே ஆயினும் கிடைக்கும் பண வரவு. 
  ஆகவே உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடுவதைத் தொடருங்கள். சில சமயம் இதயம் பேசுகிறது என்று மணியன் எழுதிய தொடர் போன்று உங்கள் படைப்புகளும் பிரபலமாகலாம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. உங்கள் புதிய மின்னூல் முயற்சிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்

  பதிலளிநீக்கு
 11. மின்னூல்கள் பிர்பலமடைய நிறையவே மார்கெடிங் செய்ய வேண்டும் பதிவுகளில் எழுதிய விஷயங்களே பெரும்பாலும்மின்னூல்களிலும் நாம்யாரென்று தெரியாத வாசகர்கள் வாசிப்பர்களென்னும் நம்பிக்கையே முக்கியம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்க்கெட்டிங் - அதிகம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. வெளியீடு பற்றி இங்கேயும், முகநூலிலும் பதிவிடுவதோடு சரி. சில சமயங்களில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் - ஆக வைத்ததுண்டு. அவ்வளவே. தெரியாத வாசகர்கள் வாசிப்பார்களெனில் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 12. மின்னூல் இளவரசர் நீங்கள்.
  வாரத்திற்கு ஒரு மின்னூல் வெளியீ டா?.. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் இளவரசர் - ஹாஹா. அப்படி ஒன்றும் இல்லை!

   வாரத்திற்கு ஒரு மின்னூல் - இதுவரை அப்படி! பிறகு இப்படி வர வாய்ப்பில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவி ஐயா.

   நீக்கு
 13. "மனதிற்குக் கிடைக்கும் மகிழ்ச்சி கூட ஒரு விதத்தில் ஒரு சம்பாத்தியமே!"

  உண்மைதான்..! அதற்காத்தானே வலைப்பக்கத்தில் எழுதுகிறோம்.

  நல்ல வேலையில் ஒரு நிரந்தரமான வருமானம் இல்லையென்றால். அதாவது அரசு வேலை போன்று ஒன்று இல்லையென்றால், வெறும் மகிழ்ச்சிக்காக தொடர்வது சிரமமே!

  ஆனாலும், சோதனையான காலங்களில் இதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது என்பதில் சந்தேகமில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நல்ல வேலையில் ஒரு நிரந்தரமான வருமானம் இல்லையென்றால். அதாவது அரசு வேலை போன்று ஒன்று இல்லையென்றால், வெறும் மகிழ்ச்சிக்காக தொடர்வது சிரமமே!// எழுதுவதை தொழிலாகக் கொண்டால் நிச்சயம் சிரமமே செந்தில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. மின்னூலுக்கு வாழ்த்துக்கள் வெங்கட்.

  //உங்களுக்கு அறிமுகம் இல்லாத ஒருவர் – உங்கள் ஆக்கத்தில் உருவான மின்னூலை வாசித்து – தனது தளத்திலோ, சமூகத் தளங்களிலோ பகிர்ந்து கொண்டார் என்று உங்களுக்குத் தெரிய வரும்போது கிடைக்கும் மகிழ்ச்சி இருக்கிறதே அதை எத்தனை பணம் கிடைத்தாலும் வாங்கி விட முடியாது! //

  உண்மை.
  உங்கள் பயண கட்டுரைகள் அனைவருக்கும் பயன் உள்ளது.
  மின்னூல்கள் தொடர வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

   பயண நூல்கள் சிலருக்கேனும் பயன்படும் எனில் மகிழ்ச்சியே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. முற்றிலும் சரி வெங்கட் ஜி. நமது கருத்துக்களை வாசகர்கள் ஆதரிக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உங்கள் புதிய மின் நுலிற்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. புதிய மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயா
  அமேசான் தளத்தில் நூல்களை வெளியிடுவதில் பணம் முக்கியமல்ல என்ற கருத்தினைக் கொண்டவன்தான் நான். தாங்கள் கூறுவது போல், நமக்கும் பிறகும் நம் எழுத்து அமேசானில் நிலைத்திருக்கும் என்ற நிலையும், அமேசான் தளத்தில் நம் நூல்களைக் காணும் போது எழும் மகிழ்வுமே போதும்.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   /அமேசான் தளத்தில் நம் நூல்களைக் காணும் போது எழும் மகிழ்வுமே போதும்/ உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. புதிய மின்னூல் வெளியீட்டுக்கு வாழ்த்துகள்! ருஃபினா அவர்களின் மதிப்புரை அருமை.

  உண்மைதான். லாப நோக்கமின்றி நமது படைப்புகள் மற்றவரைச் சென்றடைய இன்னொரு தளம் எனும் வகையிலேயே அமேசான் வெளியீட்டு வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. கிடைக்கும் நேரத்தை உங்களுக்குத் பிடித்த விஷயங்களில் செலுத்துவதே ஒரு பெரிய மகிழ்ச்சி . கடும் குளிர் மற்றும் கடும் வெயிலில் எழுதுவது அதைவிடப் பெரிய விஷயம் . (நான் டெல்லியில் இருந்தபோது அக்டொபர் முதல் பிப்ரவரி ஆபிசிலிருந்து வந்ததும் ரஜாய்க்குள் நுழைந்து விடுவேன் ரேடியோ கேட்பேன் )மின் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கடும் குளிர் மற்றும் கடும் வெயிலில் எழுதுவது அதைவிடப் பெரிய விஷயம் - :) பழகிவிட்டது.

   பெரும்பாலும் ஆரம்ப நாட்களில் நானும் இப்படியே இருந்தேன் - ரஜாய்க்குள்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா.

   நீக்கு
 19. மின்னூல்கள் தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி.

   நீக்கு
 20. தொடர்ந்து உங்கள் மின்னூல்கள் வெளிவர வாழ்த்துகள். எனக்கு அங்கே போனால் எதுவுமே சரியாய்த் திறப்பதில்லை. மறுபடி மறுபடி முயற்சிக்கிறேன். நானாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணம். இல்லை என்றால் உதவிக்குக் கூப்பிட்டே ஆகவேண்டி இருந்தால் கூப்பிடணும்! பார்ப்போம், முயன்று கொண்டே இருந்தால் ஒரு நாள் புரிந்துவிடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல்கள் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

   வெளியிடுவது சுலபம் தான் - முயன்றால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். மின்னூல்கள் வெளியிட்டு விடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 21. பொதுவாய் புனைவு புத்தகம் படிக்கும் அளவுக்கு மற்றவை படிக்கபப்டுவதில்லை. ஆசிரியரின் சொந்த செல்வாக்கை பொறுத்து பணம் வரலாம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /ஆசிரியரின் சொந்த செல்வாக்கை பொறுத்து பணம் வரலாம்/ - லாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எல்.கே.

   நீக்கு
 22. மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும் ....

  நம்மின் மிக சிறந்த சேமிப்பாக இந்த மின்நூல்களை கருதுகிறேன் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /நம்மின் மிக சிறந்த சேமிப்பாக இந்த மின்னூல்களை கருதுகிறேன்/ உண்மை தான் அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 23. 'விஜயவாடா சுற்றுலா’ வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 24. ஆம், மனதிற்கு கிடைக்கும் மகிழ்ச்சிதான் முதன்மையானது. நானும் முயன்று கடந்த ஜனவரியில்தான் மூன்று நூல்களை அமேசான் கிண்டிலில் வெளியிட்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களது நூல்களையும் அமேசான் கிண்டில்ல் வெளியிட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சி எம்.ஞானசேகரன். தொடரட்டும் உங்களது மின்னூல்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....