சனி, 4 ஜூலை, 2020

காஃபி வித் கிட்டு – கடமை – தந்தையர் தினம் – அல்வா கேக் –கண்ணீர் – பயந்த புலிகள்


காஃபி வித் கிட்டு – பகுதி 74அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:


கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட – த்ரையன் எட்வர்ட்ஸ்


இந்த வாரத்தின் ரசித்த பாடல்:


இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு இனிமையான ஹிந்தி மொழி பாடல்.  மொழி புரியாவிட்டாலும் ரசிக்கலாம். 2013-ஆம் ஆண்டு வெளிவந்த I hate Luv Stories படத்திலிருந்து ஒரு பாட்டு - கேட்டு ரசிக்கலாமே!  இதோ பாடல்…


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் ஒரு விளம்பரம் – சமீபத்திய தந்தையர் தினம் சமயத்தில் வெளியிடப்பட்ட ஒரு விளம்பரம். பாருங்களேன். ராஜா காது கழுதைக் காது:


ராஜா காது பகுதி எழுதி நீண்ட காலமாகி விட்டது. வெளியே போவதே குறைவு – மனிதர்களைச் சந்திப்பதும் அரிதாகிவிட்டது என்பதால் இந்தப் பகுதியில் எழுத விஷயங்கள் குறைவே! சமீபத்தில் எங்கள் பகுதியிலுள்ள காய்கறி கடைக்குச் சென்றிருந்தபோது ஒரு பெண் கடைக்காரரை மிகவும் தொல்லைக்குள்ளாக்கினார்! எந்த காய்கறி வாங்குவதற்கு எடுத்தாலும் அதன் சுவை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்.  அவரது கேள்விகளும், கடைக்கார பெரியவரின் பதிலும் இப்படி இருந்தது - “உருளை இனிப்பா இருக்குமா?  இல்லம்மா, நேத்து நானும் இந்த உருளை தான் சாப்பிட்டேன், நல்லா இருக்கு!”  பாவக்காய் ரொம்பவும் கசக்குமோ?  பாவக்காயின் குணமே கசப்பு தானம்மா”.    வாழைப்பழம் நல்லா இருக்குமா? இல்லை காயா இருக்குமா?  இப்பதான் பசிக்குதுன்னு ஒரு பழம் சாப்பிட்டேன் மா. நல்லாவே இருக்கு! நீயும் வேணும்னா ஒண்ணு சாப்பிட்டுப்பாரேன்!”


இதையெல்லாம் கூட ஒத்துக் கொள்ளலாம்! கடைசியாக அப்பெண்ணின் கேள்வியும் அதற்கு அந்தக் கடைக்காரர் செய்த விஷயமும் அதிர்ச்சியானது!  அது என்ன? சொல்கிறேன்….  அப்பெண்ணின் அடுத்த கேள்வி “பச்சை மிளகாய் காரமா இருக்குமா?” கேள்வி இப்படி என்றால், அதற்கு அந்தக் கடைக்காரப்  பெரியவர் செய்தது இன்னும் டெரராக இருந்தது!  ஒரு பச்சை மிளகாயை எடுத்துக் கரகரவெனக் கடித்து, ”கொஞ்சம் காரமாத் தான் இருக்கும்மா” என்று கண்களில் கண்ணீருடன் சொன்ன போது அதற்கு மேலும் அங்கே இருந்தால் என் வாய் சும்மா இருக்காது என அங்கிருந்து சற்று தள்ளியே நின்று கொண்டேன்! அவர் அகன்ற பிறகு பெரியவரிடம் காய்கறி வாங்கிக் கொண்டு – “பெரியவரே, அந்தப் பெண் தான் கேட்கிறாள் என்றால் நீங்கள் இப்படி மிளகாயைக் கடித்து எரிச்சலில் கண்ணீரை வரவழைத்துக் கொள்ள வேண்டுமா?” என்று கேட்டு விட்டு தான் வந்தேன்!


முகநூலிலிருந்து – நண்பர் முரளியின் ஒரு இற்றை:


என் மனைவி cake செய்வதைப்பற்றிய செயல்முறையை Youtube-ல் பார்த்துக் கொண்டிருக்கும்போது நான் அவளுக்கு வெங்கடேஷ் பட்டின் பாதாம் அல்வா செய்வதின் விளக்கத்தை காட்டினேன். இன்று நான் அல்வாகேக் சாப்பிட்டேன்.


பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:


2012-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – ’பயந்து ஒளிந்து கொண்ட புலிகள்’ என்ற பதிவிலிருந்து சில வரிகள்…

 

மன்னர் நல்லாட்சி புரிந்து எவ்வளவு பிரபலமானாரோ அது போலவே வேட்டையாடுவதிலும் வல்லவராக இருந்து பிரபலம் ஆனவராம். மொத்தம் 111 புலிகளை இந்த பாந்தவ்கர் காடுகளில் வேட்டையாடியிருக்கிறார். 109 என்பது பாரம்பரியமாக இவர்களுக்கு அதிர்ஷ்ட எண்ணாம். அதை விட இரண்டு அதிகமாகவே வேட்டையாடிக் கொன்றிருக்கிறார்.

 

அது சரி, ”அவர் இத்தனை புலிகளை வேட்டையாடியதற்கும், உங்கள் பயணத்தின் போது புலிகள் ஓடி ஒளிந்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம்?” என்று தானே கேட்கிறீர்கள்? இருக்கிறது நண்பர்களே இருக்கிறது. இத்தனை நேரம் மஹாராஜா ரகுராஜ் சிங் ஜி ஜு தியோ அவர்களின் மகன் என்றுதானே சொன்னேன், அவரின் பெயரைச் சொல்லவில்லையே! அவரது பெயரில் தான் இருக்கிறது காரணம்.


முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...


பயந்து ஒளிந்து கொண்ட புலிகள்


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

40 கருத்துகள்:

 1. இன்று எழுந்தது கொஞ்சம் லேட்.   இன்று கபசுரக்குடிநீர் நாள்!!!   ஐந்தேகாலுக்கு அதைக் குடித்திருப்பதால் ஆறு மணிக்குதான் காஃபி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் தாமதமாகவே எழுந்தேன்.

   கபசுரக் குடிநீர் நாள் - ஓ... வாரத்திற்கு ஒரு முறையா? இங்கே கிடைப்பதில்லை. வரவழைக்க வேண்டும் என நினைத்தேன் - ஆனால் வரவழைக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நல்ல வாசகம்.  இப்போதைய என் நிலைமைக்குப் பொருத்தம்.  ஆனால் என் விஷயத்தில் கடமை தெளிவாக இருக்கிறதா இல்லையா என்றே முடிவெடுக்க முடியவில்லை!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   முடிவெடுக்க முடியவில்லை! :) அப்படியும் ஆவதுண்டு!

   நீக்கு
 3. வாசகம் நன்று காணொளி பாடல் கேட்டேன்... ஜி

  அந்தப் பெரியவருக்கு இவ்வளவு பொருமை தேவையில்லைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   பொறுமை - இவ்வளவு தேவையில்லை தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. காய்கறி வாங்க வந்த பெண் காணொளி உளறல்களை அதிகம் கேட்பவர் போல் தெரிகிறது...

  போட்ட முதல் எப்படியாவது கைக்கு வர வேண்டும் என்று கடைக்காரர் பொறுமை காக்கின்றார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உளறல்களை அதிகம் கேட்பவர் போல் தெரிகிறது - இருக்கலாம்!

   போட்ட முதல் எப்படியாவது கைக்கு வர வேண்டும் என்று கடைக்காரர் பொறுமை காக்கிறார் - அது தானே அவருக்குத் தேவையானது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 5. // கடைக்காரப் பெரியவர் செய்தது இன்னும் டெரராக இருந்தது! ஒரு பச்சை மிளகாயை எடுத்துக் கரகரவெனக் கடித்து, ”கொஞ்சம் காரமாத் தான் இருக்கும்மா” என்று கண்களில் கண்ணீருடன் சொன்ன போது அதற்கு மேலும் அங்கே இருந்தால் என் வாய் சும்மா இருக்காது என அங்கிருந்து சற்று தள்ளியே நின்று கொண்டேன்!// L O L !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. LOL! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி.

   நீக்கு
 6. அல்வா கேக்.. புதுசா இருக்கே...

  காய்கறிக்கடைக்காரரை பாடாய் படுத்தும் ஆட்களும் இருக்காங்க. இதுக்குதான் என்ற வூட்டுக்காரர் ஒரு கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி, தேங்காய்....ன்னு பையை நீட்டுவதோடு சரி. இவருக்காகவே காத்திருந்தமாதிரி முத்தல் வெண்டை, அழுகல் தக்காளின்னு கொடுத்தனுப்புவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அல்வா கேக் - புதுசே தான்!

   உங்க மாமாவைக் கிண்டல் பண்றதே வேலையாப் போச்சு! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 7. பஹாரா பஹாரா...? பாடல் நல்லாத்தான் இருக்கு...!

  பெரியவர் கடையை காலி செய்யாமல் இருந்தால் சரி...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   இந்த வாரம் அவர் கடை போட வரவில்லை - வளாகத்தில் ஒரு பாசிட்டிவ் கேஸ் வந்து விட்டதால் கடை போட வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அடுத்த வாரம் தான் வருவார் எனத் தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 8. இங்கேயும் படிச்சுட்டுப் புலிகளையும் போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஜூலை 2012 இல் தான் ஸ்ரீரங்க வாழ்க்கை ஆரம்பித்து 3 மாதங்கள். உங்களை மே 2012 ஆம் ஆண்டில் பார்த்தோம்.

  காய் வாங்க வந்த அந்தப் பெண்மணி உண்மையில் காய் வாங்கினாரா என்பதே சந்தேகமா இருக்கு. 1980 ஆம் வருஷத்து தீபாவளிக்கு நான் பண்ணின கோதுமை அல்வா என்ன காரணமோ கேக் மாதிரி உடைத்துச் சாப்பிடும்படித் தான் இருந்தது. சர்க்கரை ரொம்பவே முறுகிவிட்டது என்று நினைத்தோம். அல்லது நிறையப் போயிருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கேயும் சென்று படித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா... உங்கள் கருத்துரையும் கண்டேன்.

   காய் வந்த அந்தப் பெண்மணி - :)

   உடைத்துச் சாப்பிடும்படியான அல்வா! ஆஹா! இது புதுசா இருக்கே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. மஹாராஜா வெங்கட் ராமன் அவர்களே, மீண்டும் மத்தியப்பிரதேசம் அழைக்கிறது நூல் எப்ப வரும்?
  வாசகம் மிக அருமை, எனக்கு ஒரு கடமை பாக்கி இருக்கு.
  அப்படிப்பட்ட பெண்களிடம் வாயக் கொடுத்தா, மிக்சி ல மாட்டின பூண்டு வெங்காய பேஸ்ட் ஆயிருப்பீங்க. அப்பரம் காப்பாத்த திருவரங்கத்திலிருந்து மக்கள் ஓடி வரனும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அரவிந்த் அது மின் நூலாக வெங்கட்ஜி போட்டிருக்கிறார். https://mptour.pressbooks.com/


   http://thillaiakathuchronicles.blogspot.com/2016/01/MadhyaPradesh-Invites-You-By-VengakNagaraj-Ebook-Review.html இதில் எல்லா சுட்டிகளும் இருக்கின்றன.

   கீதா

   நீக்கு
  2. //மீண்டும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது// நூலாக வெளிவரும் - விரைவில். “மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் எழுதியது மட்டுமே மின்னூலாக வெளிவந்தது.

   //காப்பாத்த திருவரங்கத்திலிருந்து மக்கள் ஓடி வரணும்// ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

   நீக்கு
  3. கீதாஜி நீங்கள் சொல்வது முதல் மத்தியப் பிரதேசம் பயணம். உங்கள் வாசிப்பு அனுபவத்துடன் வெளியிட்ட நூல். இன்றைய பின்னோக்குப் பார்வையில் வந்த கட்டுரை இன்னும் நூலாக வரவில்லை - அது “மீண்டும் மத்தியப் பிரதேசம் அழைக்கிறது” என்ற தலைப்பில் வந்த கட்டுரைகள். விரைவில் மின்னூலாக வரலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி.

   நீக்கு
 10. வாசகத்திலிருந்து அனைத்தும் ரசித்தேன். காய்கறி விற்கும் பெரியவர் ரொம்பவே பொறுமைக்காரராக இருப்பார் போலத் தெரிகிறது.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காஃபி வித் கிட்டு பகுதிகள் அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 11. பாடல் நன்றாக இருக்கிறது ஜி.

  விளம்பரம் மனதைத் தொட்டது.

  அந்தக் காய் வாங்க வந்தவர் வாங்கினாரா இல்லையா? அப்பெரியவர் இம்புட்டு பொறுமையா? நம்ம ஊர்லனா "ந்தா வாங்கனும்னா வாங்கு இல்லேனா போய்கினே இரும்மே" நு சொல்லிருப்பாங்க. அந்தப் பெரியவர் ஒன்னு செய்திருக்கலாம்....பாகற்காய் கசக்குமான்னு, பச்சைமிளகாய் காரமா இருக்குமான்னு கேட்டதுக்கும், பழக்கடைக்காரர்கள் சாம்பிள் கொடுத்து டேஸ்ட் பார்க்க சொல்வது போலச் சொல்லிக் கொடுத்துட்டு அதை அப்படியே எடுத்துட்டுப் போரதா இருந்தா நீயே சாப்பிட்டுப் பார்த்துக்க, காசையும் வைச்சுட்டுப் போன்னு சொல்லிருக்கணும்!!!

  புலிகளைப் பார்க்கப் போனா கால்தடம் தான் தெரிந்தது!!!. உங்க பெயர் அவங்களை ஓளிய வைச்சதுன்னு சொன்னதையும் ரசித்தேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
  2. பெங்களுரில் எத்தனை தரம் வேண்டுமானாலும் விலை கேட்கலாம். ஆனால் காய், பழங்களை கையால் தொட்டுவிடக் கூடாது. தொட்டுவிட்டு வாங்கவில்லைனா, அவங்க வாயில நாம விழவேண்டியிருக்கும்.

   நீக்கு
  3. விலை கேட்பது பிரச்சனையில்லை. தொட்டுவிடக்கூடாது! இங்கே அதுவும் செய்யலாம்! சிலர் மட்டுமே - சில காய்களை மட்டுமே தொட விடுவதில்லை.

   //அவங்க வாயில் நாம் விழவேண்டியிருக்கும்// சென்னையை விடவா?

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   நீக்கு
 12. வெங்கட்ஜி பின்னோக்கிப் பார்த்ததும் அது நாங்கள் வாசித்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மீண்டும் அங்கே சென்று வாசித்ததற்கு நன்றி துளசிதரன் ஜி.

   நீக்கு
 13. கடைக்காரரின் ஒபினியன் கேட்ட பெண். ஹா ஹா. இங்கு கோவைக்காய் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்வார்கள். நிறைய தடவை கோவைக்காய் உள்ள பழுத்திருக்கும், அதை உபயோகப்படுத்த முடியாது. இந்த ஊர்ல கிலோ 10 ரூபாய்க்கும் விற்றார்கள். நான் ஒரு கடைக்காரரிடம், எனக்கு காயா இருக்கணும், நானே பொறுக்கி எடுத்துக்கறேன் என்றேன் (அப்படி எடுத்தாலும் அதேமாதிரி உள்ள பழுத்து இருக்க வாய்ப்பு உண்டு). அவரோ, எல்லாக் காயும் பச்சைப் பசேல்னு உள்ள இருக்கும், எப்போதும் விற்கிற எனக்குத் தெரியாதா என்று சொல்லி, இதோ பாருங்க என்று இரண்டு மூன்றை உடைத்துக் காண்பித்தார், அத்தனையும் பழம் என்றதும் அவருக்கே வெட்கமாகப்போய்விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவருக்கே வெட்கமாகப் போய்விட்டது!// ஹாஹா. சில சமயம் இப்படி ஆவதுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 14. ஹந்தி பாட்டும், தந்தையர் தின விளம்பரமும் சூப்பர்.காய்வாங்க வந்த பெண்ணும் காய்கறி விற்பவரின் பேச்சும் வியப்பை அளித்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி, பாட்டு உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 15. பாட்டு காணொளி, விளம்பர காணொளி இரண்டும் நன்றாக இருக்கிறது.

  //ஒரு பச்சை மிளகாயை எடுத்துக் கரகரவெனக் கடித்து, ”கொஞ்சம் காரமாத் தான் இருக்கும்மா”//
  இப்படி காய்கடைக்காரரை அழவைத்த பெண்மணி காய் வாங்கினாரா இல்லையா?

  பெரியவர் பொறுமைதான்.
  அல்வாகேக் நல்லா இருக்கே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   பொறுமை தான். வாங்கினார் மா. பணம் கொடுக்கும்போதும் ஒரே ட்ராமா!

   அல்வாகேக் - :)

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 16. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
  நினைப்பதும் மாறுவதும் மீண்டும் தெளிவாவதும் நடக்கிறது தினந்தோறும்.

  தந்தை காணொளி அற்புதம்.

  பஹாரா பஹாரா அருமை. கவி நயமாகப்
  படம் எடுத்திருக்கிறார்கள்.
  இந்த நேரம் சுஷாந்த் நினைவு வருகிறது.:(

  காய்கறி வாங்க வந்த பெண் வாங்கினாளோ இல்லையோ.
  என்ன செய்வது இந்தச் சிரமகாலங்களில்
  பொறுமையாக இருந்தால் தான் விற்பனை
  காண முடியும்.அல்வா கேக் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

   காணொளிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சுஷாந்த் - :(

   பெரியவரின் பொறுமை - ஆமாம். அவருக்கு இந்தக் காலக் கட்டத்தில் பொறுமை அவசியமே.

   அல்வா கேக் - :)

   தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. அருமையான விஷய கோர்வை. வானத்திலிருந்து வந்த அந்த பெண்மணிக்கு நம்ம ஊர் காய்கறிகளை பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. கடைக்காரரின் அணுகுமுறை தான் அவரது நீண்ட கால வெற்றிகரமான வியாபார ரகசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....