திங்கள், 17 ஆகஸ்ட், 2020

என் கிட்ட மோதாதே – கதை மாந்தர்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை மாலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

நாம் நடக்கும் பாதை ரோஜா மலர் மீது அமைய வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை! ஆனால் அதில் உள்ள ஒரு முள்ளைக்கூட மிதிக்கக் கூடாது என நினைப்பதில் அர்த்தமில்லை. முள் இல்லாமல் ரோஜா மலர் இல்லை! துன்பம் இல்லாமல் வாழ்க்கை இல்லை! ”பகவான் கிட்ட நான் செய்யும் ஒரே மன்னத் (பிரார்த்தனை) என் மகனுக்கு நல்லதொரு மனைவி அமைய வேண்டும் என்பது தான்” பால்யகாலத்திலிருந்தே நட்பாக இருந்து, ஒரே கிராமத்தில் வாக்கப்பட்டு வந்த தோழியிடம் சொல்லிக் கொண்டிருப்பார் லக்ஷ்மிதேவி. அவரது மகன் ஆனந்த் சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான் – சில வருடங்கள் முன்னர் கணவர் இறந்து விட, கிராமத்திலிருந்து கொண்டே லக்ஷ்மிதேவி, ஆனந்த்சிங்கை நன்கு படிக்க வைத்து, அவன் வேலையிலும் அமர்ந்து விட, மகனுக்குத் திருமணம் முடித்து விட்டால் தன் கடமை முடிந்து விடும் என்று நினைத்து பகவானிடம் வேண்டியதெல்லாம் மகனுக்கு நல்லதொரு துணை அமைய வேண்டும் என்பது மட்டுமே! 

அவர் ஆசைப்படியே மகனுக்கு ஒரு துணையாக வந்து சேர்ந்த பெண் தான் ஸ்வப்னா! ஒன்றிரண்டு மாதங்கள் வரை எல்லாம் நல்லபடியாகவே சென்று கொண்டிருந்தது! ஸ்வப்னா லக்ஷ்மிதேவியை நன்கு பார்த்துக் கொண்டதோடு ஆனந்துடன் ஆனந்தித்து இருந்தாள். சில மாதங்களுக்குப் பிறகு தான் அவளுடைய சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட ஸ்வப்னாவிற்கு கோபம் வந்தது. வார்த்தைக்கு வார்த்தை பேசி குடும்பத்தின் நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பித்தது. வீட்டில் மட்டும் என்றில்லாமல் கிராமத்தில் பார்ப்பவர்கள் அனைவரிடமும், பேசுபவர்கள் அனைவரிடமும் ஏதோ ஒரு காரணத்திற்கு சண்டை நடப்பது தினப்படியான விஷயமாக மாறி இருந்தது! சில சண்டைகள் கைகலப்பாகவும் மாறி, குத்துச் சண்டை வீரர் போல சிலரின் முகத்தில் குத்து விட்டு சிலரின் மூக்கை உடைக்கும் அளவுக்கு, கோபக்காரியாகவும் சண்டைக்காரியாகவும் இருந்தாள் ஸ்வப்னா.

ஸ்வப்னாவை பார்க்க வந்த அவளது அம்மா-அப்பாவும் “கல்யாணம் ஆன பிறகும் இவள் கோபம் குறையவில்லையே, குணம் மாறவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டு திரும்பினர். எப்படியாவது அவள் திருந்த வேண்டும், அது உங்கள் கையில் தான் இருக்கிறது என்று தங்களது dhதமாத்dh (மருமகன்) ஆனந்திடம் சொல்லிச் சென்றனர். பொதுவாக ஆண்கள் தனது மனைவியுடன் பிணக்கென்றால் பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவது தானே வழக்கம்! ஆனந்த் அப்படியெல்லாம் செய்யாமல் எப்படியும் தனக்கு வாய்த்த மனைவி திருந்தி தன்னுடன் வாழ்க்கை நடத்துவாள், தனது வாழ்க்கையும் ஆனந்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அவ்வப்போது ஸ்வப்னாவிற்கு புத்தி மதி சொல்லி வந்தான். ஆனாலும் ஸ்வப்னா திருந்துவதாக இல்லை. 

ஒரு சமயத்தில் ஆனந்திற்கு வேறு ஊருக்கு பணியிட மாற்றம் வர, கிராமத்தில் தாயை விட்டு விட்டு, ஸ்வப்னாவுடன் அந்த ஊருக்குச் சென்று தங்கினான் ஆனந்த். சில நாட்கள் வரை எல்லாம் சரியாகவே இருந்தது. அந்த ஊரில் நடந்த விஷயம் தான் இன்று வரை ஆனந்தையும் அவரது தாய் லக்ஷ்மிதேவியையும் வருத்திக் கொண்டிருக்கிறது. ஆனந்த் அலுவலகம் சென்று விட, வீட்டிலிருந்த ஸ்வப்னாவிற்கு பக்கத்து வீட்டில் இருந்த, அவரை விட வயது குறைந்த மகேஷிடம் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனந்த்-க்கு தெரியாமல் அந்த உறவு தொடர்ந்திருக்கிறது. ஒரு சில மாதங்களில் ஸ்வப்னா, மகேஷைத் திருமணம் செய்து கொள் என்று கட்டாயப் படுத்த ஆரம்பிக்க, அதுவரை ஸ்வப்னாவினை பயன்படுத்திக் கொண்ட மஹேஷ் ஸ்வப்னாவினைத் தவிர்க்க ஆரம்பித்து இருக்கிறான்! வேலைத் தேடிக் கொண்டு வெளியூர் செல்கிறேன் எனச் சொல்லி விட்டு நண்பர் வீட்டிற்குச் சென்று தங்கி இருக்கிறான் மஹேஷ்! பிரிந்தால் சூழல் சரியாகும் என அவனுக்கு ஒரு நம்பிக்கை! 

ஆனால் ஸ்வப்னா அவனை மறக்கவில்லை! மன்னிக்கவும் இல்லை! கோபத்தின் உச்சிக்குச் சென்றவள் அவனை பழிதீர்க்கத் துடித்து, தான் திருமணம் ஆனவள், தான் செய்யும் செயல் தன் குடும்பத்தினையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளவே இல்லை! ஆனந்த் வீட்டில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை எடுத்து பகுதியில் இருந்த சில அடியாட்களிடம் கொடுத்து மஹேஷை தாக்கியதில் அவன் இறந்தே போனான்! கொலைக் குற்றத்தில் மாட்டிக் கொண்டு ஸ்வப்னா இப்போது சிறையில்! கணவன் ஆனத்தும் உடந்தையாக இருந்திருப்பானோ என்று காவல்துறை சந்தேகப்பட்ட போது ஸ்வப்னாவும் அப்படியே சொல்ல, ஆனந்த் தனக்கும் இந்தக் கொலைக்கும் சம்மந்தம் இல்லை என நிரூபிக்க பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது. 

தற்போது ஸ்வப்னா சிறையில்! ஆனந்த் தனிமையில் வெறுமையில்! கிராமத்தில் உள்ள அனைவருமே லக்ஷ்மிதேவியையும், அவரது குடும்பத்தினையும் கொலைகாரக் குடும்பம் எனத் தூற்ற, அவரும் வேதனையில்! ஒரு பெண்ணின் கோபமும் அவரது செயலும் மொத்த குடும்பத்தினையும் அழித்து விட்டது! வெளியே தலைகாட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனந்த்-உம் அவர் அம்மா லக்ஷ்மி தேவியும்! கோபம் என்றைக்குமே சத்ரு தான் என்பதை, இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவரின் கிராமத்தில் நடந்த விஷயமிது! கேள்விப்பட்டதை உங்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

28 கருத்துகள்:

 1. கோபம் எந்த அளவு ஒரு குடும்பத்தையே பலி வாங்குகிறது...   என் நண்பரின் மருமகள் ஒருத்தி இபப்டிதான் கோபக்காரியாய் இருந்தாள்.  நல்லவேளையாக ஏகப்பட்ட சிரமங்களுக்கு நடுவே விவாகரத்து பெற்றனர் இருவரும்.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்தினையே பலி வாங்கிய கோபம் - உண்மை தான்.

   உங்கள் நண்பரின் குடும்பத்தினர் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டது நல்லதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. ஆமாம், என்ன இந்தப் பதிவை நேற்று மாலை எழுதி வைத்து விட்டீர்களோ...   மாலை வணக்கம் என்று தொடங்கி இருக்கிறீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை மாலையாகி விட்டது! :) மாற்றி விட்டேன். சுட்டியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வள்ளுவர் வாக்கு - சிறப்பாக எடுத்துச் சொன்னீர்கள் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. காலை வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. ஒரு குடும்பத்தில் புதிதாக வருபவரினால் (மருமகள், மருமகன்) அந்த குடும்பமே கலங்கி நிற்பது வேதனை தரும் விஷயந்தான்.

  திருமணம் முடிந்து வருபதற்கு முன் ஒருவரின் மனோபாவங்கள் தெளிவாக தெரிவதில்லையே.. சிரமந்தான்..! நல்ல வாழ்க்கை என நினைக்கும் ரோஜாகளின் இடையே குத்தும் முட்கள்.. வாசகத்துக்கு பொருத்தமான கதை... கோபம், பாபம், சண்டாளம்.. என்பார்கள். வெறித்தனமான கோபங்கள் இப்படித்தான் வீபரீதங்களில் கொண்டு போய் முடித்து விடுகிறது. அந்த குடும்பத்துக்கு நாம் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும், வலியும், வேதனையும் ஒவ்வொரு நாளும் அவர்களையும் முட்களாக குத்துமே..! இறைவன்தான் அவர்களது மன உளைச்சல்களை அகற்ற வேண்டும். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. இப்பொழுது எங்கும் இதுபோன்ற நிகழ்வுகள்தான் ஜி.

  ஒரு பெண்ணால் எவ்வளவு மனிதர்களுக்கு பாதிப்பு நான்கு குடும்பங்கள் சிதைவு.

  சிறையில் இப்போது கோபத்தை காட்ட முடியுமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய நிகழ்வுகள் இப்படி நடக்கின்றது என்பது வருத்தமான விஷயம் கில்லர்ஜி.

   சிறையில் கோபம் காட்டினால் - :) காட்ட முடியாது என்றே தோன்றுகிறது! அங்கே கிடைக்கும் ட்ரீட்மெண்ட் வேறு மாதிரி ஆயிற்றே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. தொலைக்க வேண்டியனவற்றுள் ஒன்று கோபம் என்பதை உணர்த்தும் பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் - தொலைக்க வேண்டியனவற்றுள் ஒன்று - உண்மை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. இது போன்று நிறைய சம்பவங்களை தற்போது கேள்விப்படுவது வேதனையாக உள்ளது ஐய்யா.
  இரு பாலரும் இவ்வாறு செய்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் அரவிந்த். இப்படியான சம்பவங்கள் மலிந்துவிட்டன. கோபம் பொல்லாதது என்பதை உணர்ந்தால் நல்லது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. நான் சொல்ல நினைத்ததை (திருமிகு முனைவர் அ.கோவிந்தராஜூ) இனியன் ஐயா சொல்லி விட்டார்...

  அளவற்ற கோபம் அனைத்தையும் கெடுக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அளவற்ற கோபம் அனைத்தையும் கெடுக்கும் - உண்மை தனபாலன். ஆனால் பலரும் இதனை புரிந்து கொள்வதே இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. இது போல செய்திகள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சங்கடமாகிறது. கோபம் மிகப்பெரிய சத்ரு என்பதில் சந்தேகமில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் மிகப் பெரிய சத்ரு - உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாவி தங்கமணி.

   நீக்கு
 10. அளவுக்கு மீறிய கோபம் என்பது கொடியது. குடியும் கோபமும் கண்ணை (அறிவுக்கண்ணை) மறைக்கும் என்பது எத்தனை உண்மை. அப்பெண்ணிற்கு கோபம் ஒரு புறம் என்றாலும் நடத்தையும் மோசமாகியிருக்கிறதே.

  குடும்பமே சிதைந்துவிட்டதே. ஆண்களைப் பற்றிக் கேள்விப்படுவதுண்டு. இப்படிப் பெண்களும் இருக்கிறார்களே வேதனை

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடியும் கோபமும் அறிவுக்கண்ணை மறைக்கும் - உண்மை தான் கீதா ஜி.

   இப்போதெல்லாம் இந்த மாதிரி விஷயங்களில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை என்றே தோன்றுகிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. கதையைக் கேட்கவே பயங்கரமாக இருக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையைக் கேட்கவே பயங்கரம் - இப்படியும் சிலர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.

   நீக்கு
 12. கோபம் அனைவரும் அவசியம் துறக்க வேண்டிய ஒன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபம் துறக்க வேண்டியது - உண்மை கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. காலையிலேயே படித்தேன். இன்று கீதா ரங்கனும் ஒரு சோகக்கதை எழுதியிருந்தார். என்னடா ஒரே சோகமா இருக்குன்னு பின்னூட்டம் போடலை.

  நினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடந்துவிடுகிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்...

   சோகமும் சில சமயம் தேவை தானோ?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  2. அன்பு வெங்கட்,
   மிக மிக சோதனையான வாழ்வு ஆனந்திற்கும் அம்மாவுக்கும்.
   இப்படிக் கூட கோபம் வரும் என்றால்
   மனசிதைவு தான் காரணம்.

   நம்பமுடியாமல் நடக்கிற சம்பவங்கள் நிறைந்த வாழ்க்கை.
   இனியாவது ஆனந்திற்கு நிம்மதி கிடைக்கட்டும்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....