புதன், 5 ஆகஸ்ட், 2020

தப்பா எடுத்துக்காதீங்க பாபுஜி! ஒரு Peg அடிச்சிருக்கேன் – கதை மாந்தர்கள்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

பிரச்சனை என்பது தொலைநோக்கி போலவே – பார்க்கும் பார்வையில் தான் அடங்கி இருக்கிறது. பெரிதாக நினைத்தால் பெரியதாகவே தோன்றும். சிறியதாக நினைத்தால் பிரச்சனை ஒரு பொருட்டாகவே தெரியாது. மதியம் இரண்டு மணி! நேற்று அலுவலகம் செல்ல வேண்டாம் என நினைத்து வீட்டிலே இருக்கையில் அழைப்பு! நான்கு மணிக்கு முக்கியமான கலந்துரையாடல் இருக்கிறது – வந்தே ஆகவேண்டும் என்று கட்டளை! வேறு வழி! செல்லத் தான் வேண்டும்! தயாராகி புறப்பட்டு சாலைக்குச் செல்ல, பக்கத்திலிருக்கும் வழிபாட்டுத் தலத்தின் வாயிலில் குடிதண்ணீர் பிடித்துக் கொண்டு ஆட்டோவில் அமர்ந்தார் ஒரு ஓட்டுனர். செல்ல வேண்டிய இடம் சொல்லிக் கேட்க, “போகலாமே!” என்றார்! பெரும்பாலும் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை இங்கே இருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள். “எவ்வளவு கட்டணம்?” என்று கேட்க, வந்த பதில், “எவ்வளவு கொடுக்கறீங்களோ கொடுங்களேன்!” சரி என ஆட்டோவினுள் கம்பிகளைப் பிடிக்காமல் உள்ளே நுழைந்து அமர்ந்து கொண்டேன். 

வண்டி புறப்பட்டது! ஓட்டுனர் ஒரு மார்க்கமாகவே வண்டியைச் செலுத்தினார் – எங்கேயோ தள்ளி ஒரு வாகனம் தென்பட, ஹாரனை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருந்தார்! “அந்த வழிபாட்டுத் தலத்தில் பிடித்த தண்ணீர் உப்பு கரிக்கிறது! நிலத்தடி நீர் போல!” “காலையில ஒரு சவாரி கூட்டிட்டு வந்தேன். இந்த நேரத்தில் தான் அவரை அழைத்துச் செல்ல வேண்டும் – நேரமாகும்னு சொன்னதாலே உங்களை அழைத்துப் போகிறேன்” என்று வரிசையாக பேசிக் கொண்டே வந்தார். பொதுவாக ஆட்டோவில் பயணிக்கும்போது ஓட்டுனர்களுடன் பேசுவதுண்டு – அவர்கள் பேசினால்! இவருடனும் அவர் பேசியபோது நானும் பேசிக் கொண்டு சென்றேன்! நடுவில், அவராகவே “பாபுஜி, Bபுரா மத் மான்னா! மேனே தோடி சி லகா ரக்கா ஹே!” என்றார்! அதாவது கொஞ்சமாக குடித்திருப்பதாகச் சொன்னார்! நானும், அவர் ஆட்டோ ஓட்டும் விதத்திலேயே எனக்கு சந்தேகம் வந்ததைச் சொன்னேன்! 

”என்ன செய்யறது பாபுஜி, உங்ககிட்ட சொல்றதுல தப்பு ஒண்ணும் இல்ல! காலைல ஐந்து மணிக்கு தொழிலுக்குப் புறப்பட்டேன் – இதோ மணி இரண்டு ஆகிடுச்சு, உங்களை இறக்கி விட்டுட்டு ரெகுலர் சவாரியை அழைத்துக் கொண்டு வீட்டில் விட்டு, வேற சவாரி பார்த்து வீட்டுக்குப் போக ராத்திரி ஒன்பது ஆயிடும்! ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரமாவது ஓட்டினா தான் காசு தேறுது! இந்த தீதுண்மி காலத்துல கஷ்டமா இருக்கு! உங்க ஏரியாவுல இரண்டு CNG Pump இருக்கு! ஆனா மூணு சாராய கடை இருக்கு! ஆட்டோக்கு Gas அடிச்சுட்டு அப்படியே ஒரு க்வாட்டர் வாங்கி நானும் ஊத்திக்குவேன்! அப்பதான் உடம்பு நல்லா இருக்கு! நான் குடிக்கிறது கூட என் உடம்பு நலத்துக்குதானே தவிர வேற ஒண்ணும் காரணம் இல்ல!” நாள் பூரா குடும்பத்துக்கு உழைக்கறோம்! நமக்குன்னு ஒரு சந்தோஷம் வேண்டாமா? அதுனால ஒரு க்வாட்டர்!

அதெல்லாம் சரி, ”நீங்க இப்படி சரக்கடிச்சுட்டு வண்டி ஓட்டறதுனால, ஏதாவது விபத்து ஏற்பட்டா, உங்களோடு சேர்ந்து, ஆட்டோல பயணிக்கிறவருக்கும் அடிபடலாம் இல்லையா? வண்டி ஓட்டும்போது இப்படி குடிச்சுட்டு ஓட்டறது தப்பு இல்லையா? குடிக்கறதே தப்பு, அதுல குடிச்சுட்டு வண்டி ஓட்டி, உங்களால மத்தவங்களுக்கும் பிரச்சனை வரலாமே!” என்று கேட்க, “பாபுஜி, நான் சரக்கடிச்சாலும் வண்டி ஓட்டுறதுல எந்தப் பிரச்சனையும் இல்ல! சாதாரணமா இருக்கறத விட, தண்ணி அடிச்சுட்டு ஓட்டினா இன்னும் ஸ்டெடியா இருப்பேன்!” என்று சிரித்தபடியே சொல்கிறார்! வண்டி ஓட்டிக் கொண்டிருந்த போதே அவரது அலைபேசி ஒலிக்க, சற்றே ஓரம்கட்டி பேசுகிறார், “அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்” என்று சொல்லிவிட்டு, காலைல கூட்டிட்டு வந்த சவாரி தான் பாபுஜி! அவருக்கு வேலை முடிஞ்சுடுச்சாம்! அவரை கொண்டு போய் ரோஹிணில இறக்கி விடணும்! என் ஆட்டோல தான் ரெகுலர் சவாரி! ஆஃபீஸ் வாசல்ல காத்திருப்பார்!

அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் வர, காசைக் கொடுத்தபோது, திரும்பவும் சொன்னார் – ”பாபுஜி, Bபுரா மத் மான்னா!” அந்த சவாரி காத்திருப்பார்! நான் புறப்படுகிறேன்! அவருக்கு கண் தெரியாது! நான் போய் தான் அழைச்சுட்டுப் போகணும்! என்னை இறக்கி விட்டு அவர் புறப்பட, என் மனதில் தொடர்ந்து அவரைப் பற்றிய எண்ணத்தோடு, அவரது அடுத்த சவாரி பற்றிய கவலையும் சேர்ந்து கொண்டது! இந்த க்வாட்டர் கந்தசாமி கண் தெரியாத அந்த நபரை, ரோஹிணி வரை, கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தொலைவு – ஒழுங்காகக் கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற கவலை தான்! என்ன தான் அவரது திறமை பற்றி – சரக்கடித்தாலும் ஸ்டெடியா வாகனம் ஓட்டுவேன் என்று அவரது திறமை பற்றி அவருக்கு பெருமிதம் இருந்தாலும், இது சரியல்ல என்று சொல்லிய பிறகே அனுப்பினேன்! 

அலுவலகத்திற்கு வந்த பிறகு எதிரே வந்த நபர் – என்னுடன் முன்னர் பணிபுரிந்தவர் – “பாபுஜி, உங்களுக்கு விஷயம் தெரியுமா? நம்ம கூட வேலை செஞ்சானே சூரஜ் – நேத்து அவன் இறந்துட்டான்! தண்ணி அடிக்காதன்னு சொல்லியும் கேட்கலையே” என்றார்! சூரஜ் இறந்ததால் இருக்கும் வருத்தத்தை விட அவரின் அப்பா ஓம் பால்-ஐ நினைத்தால் தான் கவலையாக இருந்தது! ஏற்கனவே இந்த சூரஜ் பற்றி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் எழுதி இருக்கிறேன் – பெத்த மனம் பித்து என்ற பதிவில்! குடி இன்னும் எத்தனை சூரஜ்-களை அழிக்கப் போகிறதோ! 

நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. அபூர்வராகங்கள் படத்தில் நாகேஷுக்கு பாலச்சந்தர் ஒரு வசனம் வைத்திருப்பார்.   ஒரு சின்ன கல்லை எடுத்து கண்ணுக்கருகில் வைத்துப் பார்த்தால் கண்ணையே மறைக்கும்.  தள்ளி வைத்துப் பார்த்தால் அது இருப்பதே தெரியாது என்று...  வாசகம் அதை நினைவூட்டுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - உங்களுக்கு சினிமா பட வசனத்தினை நினைவூட்டியிருக்கிறது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. குடி -  இதில் என்ன இருக்கிறது என்று அதன் பின்னால் அலைகிறார்களோ...   சமீபத்தில் இந்த கேஸ் ஆட்டோ பற்றி ஒன்று கோபப்பட்டேன்.  உண்மையா என்று தெரியவில்லை.  40 ரூபாய்க்கு கேஸ் நிரப்பினால் 270 ரூபாய் வரை ஓட்டலாம் என்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடி - இதில் என்ன இருக்கிறது அது ஏழைகளின் அதாவது உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் பெயின் கில்லர்.... குடிக்காதவர்கள் உடல் உழைப்பு பணியில் ஈடுபடும் போது பெயின் கில்லர் மெடிசின் எடுத்துக் கொள்கிறார்கள் அப்படி இல்லாதவர்கள் குடியில் ஈடுபடுகிறார்கள்.. இதில் குடித்துவிட்டு தெருவில் உழுந்துகிடப்பவர்கள் சேர்த்தி அல்ல

   நீக்கு
  2. அவங்க அவங்க குடும்பம், எனக்குத் தேவையானவற்றை நீ கொடுத்தாகிவிட்டது. மீதிப் பணத்தை உன் இஷ்டப்படி செய்துக்கோ என அனுமதி கொடுத்தால் குடிப்பது தவறு இல்லை. அப்படிக் குடிக்கறவங்க, தன் மனைவி தன்னைவிட உடலுழைப்பு செய்யறாங்க என்று தோன்றினால் அவங்களையும் குடிக்க உற்சாகப்படுத்துவார்கள் என நம்புகிறேன். அவங்க மட்டும்தான் குடிப்பதை ஆதரிப்பதற்கு உரிமை உள்ளவங்கன்னு நான் நினைக்கிறேன்.

   நீக்கு
  3. 40 ரூபாய்க்கு கேஸ் நிரப்பினால் 270 ரூபாய் வரை ஓட்டலாம் - தில்லியில் ஒரு கேஜி கேஸ் 47 ரூபாய். ஒரு ஆட்டோ கேஜி கேஸில் சுமார்/சராசரியாக 20-22 கிலோமீட்டர் பயணிக்கலாம்! இதை வைத்து கணக்கு பார்க்கலாம் ஸ்ரீராம். தில்லி கணக்குப் படி 22 கிலோமீட்டர் பயணிக்க மீட்டர் போட்ட ஆட்டோவில் 185 ரூபாய்!

   குடி - என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை! போதை வஸ்து அவ்வளவு தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  4. பெயின் கில்லருக்கு பதில் குடி! எனக்குத் தெரிந்து தினம் தினம் பெயின் கில்லர் எடுத்துக் கொள்பவர்கள் இல்லை! தினம் குடிப்பவர்கள் - அலுவலகத்தில் அமர்ந்து நோகாமல் வேலை செய்து திரும்புபவர்களும் குடிக்கிறார்கள்! அவரவர் பழக்கத்தினைப் பொறுத்தே இருக்கிறது.

   குடித்து விட்டு அதனால் குடும்பத்தினரை படுத்தி எடுப்பவர்களை என்ன சொல்ல!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
  5. குடும்பத்தினரின் அனுமதியோடு குடிப்பது! இப்படியும் சில வீடுகளில் உண்டு! அவர்களும் கொஞ்சம் மருந்து மாதிரி எடுத்துக் கொள்ளலாம்! வடக்கில் பார்ட்டிகளில் ஆண் பெண் வித்தியாசமில்லாமல் மது அருந்துகிறார்கள் - பார்த்ததுண்டு நெல்லைத்தமிழன்.

   வீட்டினரைக் கஷ்டப்படுத்தி, தன் சுகம் மட்டுமே பிரதானமாகக் குடிப்பவர்களுக்கு எந்தவிதத்திலும் அது சரி என்று சொல்வதற்கில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. இனிய காலை வணக்கம்.வெங்கட். கண்ட நேரத்தில் வேலைக்கு அழைப்பதில் அவரகளுக்கு என்ன கட்டாயமோ தெரியவில்லை.:(
  இன குடி இல்லாத ஆட்டோவில் பயணப்படவும்.குடித்து அழிபவர்களைக் கண்டுமனம் வருந்துகிறது. நீங்கள் எழுதி இருந்த சூரஜ்..அவரையும் அவர் குடும்பத்தையும் நினைக்க மிகவும் கவலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் வல்லிம்மா. சில சமயங்களில் இப்படித்தான் - விடுமுறை நாட்களிலும் கூட அழைப்பு வருவதுண்டு.

   குடி இல்லாத ஆட்டோவில் - ஏறி அமர்ந்த பிறகு தான் குடித்திருப்பது தெரிந்ததும்மா...

   குடி பல குடும்பங்களை அழித்துக் கொண்டிருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. ஆள்பவர்கள் நினைத்தால்தான் இந்த குடிகாரர்களை நல்வழி படுத்தமுடியும் ஜி.

  ஆனால் அதற்கான சாத்தியம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆள்பவர்களும் நினைக்க வேண்டும் - மக்களும் நினைக்க வேண்டும்! உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் - குஜராத்தில் அரசு மதுவை தடை செய்து இருக்கிறது - பல வருடங்களாகவே! ஆனால் குடிப்பதற்கெனவே பக்கத்து ஊரான தியு செல்வதுண்டு! அது தவிர லைசன்ஸ் பெற்ற நட்சத்திர/சாதாரண ஹோட்டல்களில் கூட குடிப்பதற்கெனவே வருபவர்கள் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. பதிவை படிக்கையில் கஸ்டமாக உள்ளது. இந்த மது அரக்கனுடன் நெருங்கிய பழக்கத்தால், அவர்கள் உயிருக்கு மட்டுமின்றி, அவர்களை நம்பிய பேர்களுக்கும் தீங்கைத்தான் விளைவிக்கப் போகிறோமென்பதை இந்த குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றுதான் உணர்வார்களோ? அவர்கள் மனந்திருந்த வேண்டுமென அனைவருக்காகவும் பிரார்த்திப்பதை தவிர வேறு எதுவும் தெரியவில்லை. நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மது அரக்கனால் தள்ளாடுபவர்கள் தவிர அவர்களது குடும்பமும் தள்ளாடுவது வேதனை! உணர்ந்தால் தானே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.

   நீக்கு
 6. // அப்பதான் உடம்பு நல்லா இருக்கு! // அந்த நம்பிக்கை தரும் மனமே வெற்றி பெறுகிறது... மாறுவது சிரமம்... மாற நினைக்கும் போது மேலும் அடிமைப் படுத்தும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாறுவது சிரமம். உண்மை. பலறால் பழக்கங்களை கைவிடமுடிவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. நம்மூரிலும்கூட நாள்தோறும் இத்தகைய சம்பவங்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அரசே இதை வலிந்து நடத்துவதால் கொஞ்சம்கூட குறைக்க முடியவில்லை என்பதே உண்மை. முன்பெல்லாம் குடிப்பவர் என்றாலே மரியாதைக்குறைவாக பார்ப்பர். ஆனால் இப்போது 'தண்ணியடிக்கிறதில்லையா' ஆச்சரியமாக கேட்கும் காலமாக மாறியிருக்கிறது. பள்ளிக்கூட பையன்களும் பெண்களும்கூட இந்தப் பழக்கத்துக்கு பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறு வயதிலேயே பழக்கப்படுத்திக் கொண்டு விடுகிறார்கள் - அதனை விடுவதும் அவர்களுக்கு கைவருவதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஞானசேகரன் ஜி.

   நீக்கு
 8. பாவம் சூரஜ். யாராலோ ஆரம்பித்த கெட்ட வழக்கம் அவர் வாழ்வை மட்டுமல்லாது அவர் குடும்பத்தையே துன்பத்திற்கு உள்ளாக்கிவிட்டநு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு பெரிய துன்பம். அவருக்கு மூன்று பெண்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 9. சூரஜ் பற்றியது வேதனையான விஷயம் தான். ஆனால் அந்த ஆட்டோக்காரர் போல உள்ளவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சூரஜ் - வேதனை!

   ஆட்டோக்காரர் - அவராக திருந்தினால் தான் உண்டு துளசிதரன் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. என்ன சொல்ல என்று தெரியவில்லை வெங்கட்ஜி.

  அந்த ஆட்டோக்காரர் நலல்விதமாக அவரைக் கொண்டு சேர்த்திருப்பார் என்று நம்புவோம்.

  சூரஜ்...உங்கள் அப்பதிவு நினைவு இருக்கு. இப்படியான பழக்கங்கள் உயிரை பலிவாங்குவது வரை சென்றுவிடுகிறது. அதுவும் அவர் குடும்பத்தையும் வேதனைக்குள்ளாக்கி என்ன சொல்ல ?

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவிதமாகக் கொண்டு சேர்திருக்க வேண்டும் என்பதே ஆசை.

   சூரஜ் - வேதனை. அவருக்கு மூன்று மகள்கள் - அவர்களின் நிலை தான் கவலை அளித்தது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 11. எழும்பூரில் காலை 5 முதல் 6 மணிக்குள் வந்திறங்கினால் "ஆட்டோ வேணுமா சார்?" என்று உங்களை எதிர்கொள்ளும் ஓட்டுனர்கள் பலரிடம் ஒரு தனியான வாசனை தெரிவதை நீங்கள் அனுபவிக்க முடியும். ஆனால் எப்படியாவது பத்திரமாக வீட்டில் சேர்த்து விடுகிறார்கள். அது என்ன வாசனை என்று தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செல்லப்பா ஜி,
   அது நேற்று சாப்பிட்டதின் இன்றைய வாசனை. பழ நெடி.

   நீக்கு
  2. ஒரு விதமான/தனியான வாசனை! :) வாசனையான மனிதர்கள் ஹாஹா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
  3. பழ நெடி - ஹாஹா... அதே தான் வல்லிம்மா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. குடித்துவிட்டு வண்டி ஒட்டுவதும் இல்லாமல் அதை நியாயபடுத்துவது அதைவிட கொடுமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடித்து விட்டு நியாயப்படுத்துவது கொடுமை தான் இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 13. அவர்களாக உடல்நலத்தை உத்தேசித்து விட்டு விட்டால் நல்லது . உடல் வலிக்கு மருந்து என்று அளவோடு குடித்து கொண்டு இருக்கிறார் போலும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களாக விட்டால் நல்லதே. ஆனாலும் இப்பழக்கத்தினால் குடும்பத்திற்கு கெடுதல் என்று உணர்ந்து விட்டால் நல்லது கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. ஒரு முறை ஆட்டோ ஓட்டுனர் குடித்திருக்கிறார் என்பது தெரியாமல் ஏறி விட்டோம். திரும்பத் திரும்ப
  "அம்மா உங்க செல் ஃபோனில் பழைய பாட்டு இருந்தால் போடுங்கம்மா. எனக்கு எம்.ஜி.ஆர். பாடல்கள் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
  மாத ஆரம்பத்தில் டாஸ்மாக் வாசலில் இருக்கும் கும்பலை பார்த்தால் வயிறு கலங்கும். கணவன் சம்பளத்தை கொண்டு வரப்போகிறான் என்று வீட்டில் காத்திருக்கும் மனைவிமார்களின் முகங்கள் மனக்கண்ணில் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழைய பாட்டு கேட்ட ஆட்டோ ஓட்டுனர்! :) இப்படியும் சிலர்.

   டாஸ்மாக் வாசலில் உள்ள கும்பல்! வேதனை - பல குடும்பங்களின் அழிவுக்கு அரசே காரணமாக இருப்பது கொடுமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானும்மா.

   நீக்கு
 15. என்ன காரணமாக இருந்தாலும் மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானதுதான். உடல் வலிக்காக மாத்திரைகள் சாப்பிடுவதும் மது அடுத்துவதும் ஒன்றல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன காரணமாக இருந்தாலும் மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது தான் - உண்மை கோயில்பிள்ளை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....