வெள்ளி, 24 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - பகுதி பத்து - நைமிசாரண்யம் - சக்கரத் தீர்த்தம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


I HAVEN’T BEEN EVERYWHERE; BUT IT’S ON MY LIST! 


******

 

நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - சற்றே இடைவெளிக்குப் பிறகு. 


நதிக்கரை நகரங்கள் - அதிகாலையில் நீண்ட ஆட்டோ பயணம்.  


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தங்குமிடங்கள். 


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உள்ளூர் சாரதி. 


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - உலா - மா லலிதா தேவி. 


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட்.


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - காலை உணவு.


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட்.


நதிக்கரை நகரங்கள் - நைமிசாரண்யம் - தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம்.



சென்ற பகுதியில் கோமதி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் தேவதேவேஷ்வர் dhதாம் மற்றும் ராமேஷ்வர் dhதாம் எனும் இடத்திற்குச் சென்றது குறித்தும், அங்கே கிடைத்த அனுபவங்கள் குறித்தும் உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.  இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் இதுவரை படிக்கவில்லை எனில் மேலே உள்ள சுட்டிகள் வழி ஒவ்வொரு பகுதியையும் படித்து வரலாம்.  இனி தொடர்ந்து எங்கே பயணித்தோம் என்ற தகவல்களை பார்க்கலாம் வாருங்கள். கடந்த சில பகுதிகளில் நைமிசாரண்யம் பகுதியை விட்டு வெளியே சென்று பார்த்த இடங்கள் குறித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து வந்தேன். இனி வரும் பகுதிகளில் நகருக்கு/ஊருக்கு உள்ளேயே இருக்கும் இடங்கள், கோவில்கள், தகவல்கள் போன்றவற்றை பார்க்க இருக்கிறோம்.  நைமிசாரண்யம் என்ற பெயர் வரக் காரணமாக இருந்தது ஒரு சக்கரம்! பெயர்காரணங்களாக பல கதைகள் உண்டு அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்…


  • நீம்சர், நைமிஷா என்று பிரபலமாக அறியப்படும் க்ஷேத்திரம் இந்த நைமிசாரண்யம்.  நைமிஷே'-அனிமிஷ்-க்ஷேத்ரே என்ற வடமொழி வாக்கியத்திற்கு நைமிஷ் என்பது அனிமிஷ் என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் இருப்பிடமாகும் என்று அர்த்தம். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 23-வது ஸ்லோகம் விஷ்ணு பகவானை அனிமிஷா என்று விவரிக்கிறது.  அந்த வார்த்தைக்கு அர்த்தம் எப்போதும் விழித்திருப்பவர், விழிப்புடன் இருப்பவர், எல்லாவற்றிலும் புத்திசாலி.
  • நைமிசாரண்யம் என்ற ஊருக்கு நேமிசாரண்யம் என்ற பெயரும் உண்டு. நேமி என்பது சக்கரத்தின் வெளிப்புற மேற்பரப்பு என்ற அர்த்தம் உண்டு. 88000 முனிவர்கள் தங்கள் தவத்திற்கு தகுந்த இடம் காண்பித்துத் தரவேண்டும் என்று பிரம்ம தேவரிடம் கேட்க, அவர் தனது மனோமய சக்கரத்தினை சுழற்றி விட்டு அது எங்கே விழுகிறதோ அந்த இடத்தில் அவர்கள் தவம் செய்யலாம் என்று சொல்லி அனுப்ப, முனிவர்கள் சக்கரத்தினை தொடர்கிறார்கள்.   
  • பிரம்ம தேவரின் மனோமய சக்கரம் இந்தப் பிரபஞ்சத்தை பல முறை சுற்றி முடித்த பிறகு, இறுதியில் ஒரு வெறிச்சோடிய இடத்தில் விழுந்தது/நின்றது.  அந்த இடம் ஆதிகங்கா கோமதி ஆற்றின் கரை.  அந்த இடம் அனைத்து பாவங்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்து விடுபட்டது என்பதை பிரம்ம தேவரின் சக்கரம் முனிவர்களிடம் எடுத்தியம்பியதோடு, இந்த புனித ஸ்தலத்தில் செய்யப்படும் எந்தவொரு செயலும் நன்மையான பலனைத் தரும், இந்த முழு பிரபஞ்சத்திலும் இதைப் போன்ற புனித இடம் வேறு எதுவும் இல்லை என்றும் தகவலைத் தந்ததாம். அந்தச் சக்கரம் விழுந்த இடம் தான் தற்போதைய நேமிசாரண்யம் எனும் நைமிசாரண்யம் என்று ஒரு கதை. 


சரி இன்றைக்கு பதிவில் பார்க்கப்போகும் சக்கரத் தீர்த்தம் குறித்த தகவல் எதுவும் சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு தான் இப்போது வரப்போகிறேன்! மேலே சொன்ன பிரம்மதேவரின் மனோமய சக்கரம் பூமியில் விழுந்த இடத்தில் (நைமிசாரண்யம்) ஒரு தீர்த்தம் உருவானது.  சக்கரத்தின் சக்திவாய்ந்த வீழ்ச்சியின் காரணமாக பாதாள உலகங்கள் உடைந்து, பூமியிலிருந்து நீர் பிரவாகமாக வெளியேறத் தொடங்கியது. தனது "பிரம்ம சக்கரத்தை" நிறுத்துமாறு பிரம்மா, ஸ்ரீ லலிதா தேவியிடம் வேண்டிக்கொள்ள அவரது தெய்வீக சக்தி அந்த சக்கரத்தை நிறுத்தியதோடு, அதே ஊரில் தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கவும் தொடங்கியதாகவும் ஒரு கதை. அந்தக் கோவில் தான் மாதா ஸ்ரீ லலிதா தேவி கோவில். இந்தக் கோவில் குறித்து தொடரின் ஒரு பகுதியில் நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சக்கரத்தினால் உண்டான குளம் சக்கரத் தீர்த்தம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

 

சக்கர தீர்த்தம் அமைந்த இடம் பிரபஞ்சத்தின் மையம் என்றும் கூறப்படுகிறது. சக்கர-தீர்த்தத்தின் மைய பகுதியைச் சுற்றி ஒரு சக்கர வடிவ அமைப்பும், அந்த அமைப்பின் வெளியே பக்தர்கள் குளிக்க ஒரு அமைப்பும் படித்துறையுடன் இருக்கிறது.  முதலாவது இருக்கும் சக்கர பகுதியில் யாரையும் குளிக்க அனுமதிப்பது இல்லை.  சக்கரம் விழுந்த அந்த மையப்பகுதிக்கு அடிப்பகுதி இல்லை என்றும் மிகவும் ஆழமானது என்றும் நம்பிக்கை.  சிலர் அதன் ஆழத்தினை அளந்து பார்க்க முயற்சித்து தோல்வி அடைந்தார்கள் என்றும் சில தகவல்கள் உண்டு.  சக்கரத் தீர்த்தம் அமைந்த பகுதியில் படித்துறை வழியே மேலே ஏறினால் நிறைய கோவில்கள் அமைந்திருக்கிறது.  சக்கரத் தீர்த்தத்தில் நீராடி கோவில்களில் இறைவனைத் தொழுவதை பக்தர்கள் வெகு சிரத்தையுடன் செய்கிறார்கள்.  இந்தச் சக்கரத் தீர்த்தத்தில் குளித்து, சக்தி பீடங்களில் ஒன்றாகிய மா லலிதா தேவியின் கோவிலில் தேவியை தரிசனம் செய்தால் இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவங்கள் மட்டுமல்லாது முந்தைய பத்து ஜென்மாக்களில் செய்த பாவங்களும் அனைத்தும் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை.  அதற்கென்று பாவம் செய்துவிட்டு இங்கே சென்று குளித்தால் போதுமா என்ற கேள்விகள் அவசியமற்றது.  நம்பிக்கை தானே எல்லாம்.  வேண்டுமென்றே பாவம் செய்துவிட்டு இங்கே சென்று குளிக்க நினைப்பதே பாவம்! 

 

சக்கரத் தீர்த்தத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.  புராணங்கள் பலவற்றில் இந்த சக்கரத் தீர்த்தத்தின் பெருமைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன.  இந்த பூமியில் இருக்கும் தீர்த்தங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது நைமிசாரண்யத்தில் அமைந்திருக்கும் சக்கரத் தீர்த்தம் தான் என்றும் சொல்வதுண்டு.  நாங்கள் சென்ற போது நிறைய பக்தர்கள் சக்கரத் தீர்த்தத்தில் குளித்துக் கொண்டிருந்தார்கள்.  நாங்கள் ஏற்கனவே தங்குமிடத்தில் குளித்து விட்டதால் சக்கரத் தீர்த்தத்திலிருந்து நீர் எடுத்து தலையில் ப்ரோக்ஷித்துக் கொண்டோம்.  பிறகு சில நிமிட பிரார்த்தனைகளுக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.

 

தொடர்ந்து எங்கே சென்றோம், அங்கே பார்த்த இடங்களென்ன, அனுபவங்கள், தகவல்கள் என அனைத்தும் வரும் பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

18 கருத்துகள்:

  1. இந்த இடத்துக்கு நாங்களும் சென்றோம்.  குளிக்கவில்லை.  தண்ணீர் சுத்தமாகவும் காணப்படவில்லை அப்போது. லலிதா தேவி கோவிலும் சென்று வழிபட்டோம்.  சுற்றி இருக்கும் ஏகப்பட்ட கோவில்களிலிருந்து காத்திருந்த நிறையபேர் எங்களைக் கவர்ந்திழுத்து காசு பார்ப்பதில் குறியாய் இருந்தார்கள்!

    பதிலளிநீக்கு
  2. சரித்திர தகவல்கள் அறிந்தேன் நன்று ஜி

    பதிலளிநீக்கு
  3. சக்கரம் குறித்த சரித்திர புரான தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  4. சக்கர தீர்த்தம் தகவல்கள் நன்று. குளித்ததில்லை

    பதிலளிநீக்கு
  5. சக்கர தீர்த்தம் படம் அருமை. தீர்த்த விவரங்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பயணப் பதிவு அருமை

    சக்கரத் தீர்த்தம் பற்றிய விபரங்கள் அருமை. புராணங்களில் தான் எத்தனை எத்தனை உண்மை சம்பவங்கள் கதைகளாக உள்ளன. தங்கள் பதிவால் இந்த இடம் பற்றி தெரிந்து கொண்டேன். சக்கரத் தீர்த்தம் படமும் அருமை.

    /அதற்கென்று பாவம் செய்துவிட்டு இங்கே சென்று குளித்தால் போதுமா என்ற கேள்விகள் அவசியமற்றது. நம்பிக்கை தானே எல்லாம். வேண்டுமென்றே பாவம் செய்துவிட்டு இங்கே சென்று குளிக்க நினைப்பதே பாவம்! /

    அழகாக சொல்லியுள்ளீர்கள். எல்லா விபரங்களும் படிக்க நன்றாக உள்ளது மேலும் தொடரும் உங்கள் பயணத்தில் கலந்து கொள்ள ஆவலோடிருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. நைமிசாரண்யம் போயிட்டு வந்து நானும் எழுதினேன் என்றாலும் இத்தனை விரிவாக எல்லாம் எழுதலை. ஶ்ரீராம் சொல்றாப்போல் அங்கே கொஞ்சம் அதிகம் காசு பார்ப்பதே குறியாக இருந்தார்கள். எல்லா இடங்களும் நாங்களும் போனோம்.

    பதிலளிநீக்கு
  8. வெங்கட் தினம் ஒரு பதிவுனு வெளியிட்டுக் கொண்டே இருக்கார். நான் சுமார் 2,3 மாதங்களாக எதையும் படிக்கலை. ஆதி எழுதுவதை முகநூலில் படிச்சுடுவேன். ஆனால் கருத்துப் போடுவதில்லை. :) வெங்கட்டின் தில்லி பற்றிய தொடரும் முகநூலில் படிச்சுடுவேன்.

    பதிலளிநீக்கு
  9. கமென்ட் மாடரேஷனை எடுத்துட்டீங்க போல!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா...டி... எவ்வளவு சீக்கிரம் கேட்டுட்டீங்க....!!!!

      நீக்கு
    2. எவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்கனு கேட்டிருக்கணும் இல்லையோ? சுமார் 3 மாதங்கள் கழிச்சு இன்னிக்குத் தான் நேரம் அமைந்தது. வந்திருக்கேன்.

      நீக்கு
    3. //எவ்வளவு சீக்கிரம் வந்திருக்கீங்கனு கேட்டிருக்கணும் இல்லையோ? சுமார் 3 மாதங்கள் கழிச்சு இன்னிக்குத் தான் நேரம் அமைந்தது. வந்திருக்கேன்.//

      கீதா அக்காவின் இந்த கமெண்ட் ஸ்பாமுக்குப் போயாச்சு!

      நீக்கு
    4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    5. எனக்குத் தெரியுதே? நல்லவேளை!

      நீக்கு
    6. இப்போ எனக்கும் கண்ணில் படுது. ஸாரி.. மெயிலில் பார்த்துட்டு இங்க வந்து பார்க்கும்போது இல்லை.

      நீக்கு
  10. நைமிசாரண்யம், , சக்கரதீர்த்தம், ஸ்ரீலலிதா தேவி அம்மன் , புராணவரலாறுகள் அறிந்தோம். சிறப்பான கோவில்தான்.

    பதிலளிநீக்கு
  11. தகவல்களுக்கு நன்றி. இந்த இடங்களையெல்லாம் நாங்கள் பார்க்கப்போவது எப்போதோ! எங்கள் சார்பாக நீங்கள் சென்றுவந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....