புதன், 8 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - நைமிசாரண்யம் - தொடங்கியது உலா - மா லலிதா தேவி - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

நாம் வகுக்கும் பாதை நம்மோடு முடிவதில்லை… பின்னால் அதில் பயணிக்க பலருண்டு! ஆதலால் வகுக்கும்போதே பாதையை பிழையின்றி வகுப்பது நலம். 

 

******

 

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே. பகுதி இரண்டு இங்கே.  பகுதி மூன்று இங்கே. பகுதி நான்கு இங்கே. 



கோவில் நுழைவாயில் - படம் இணையத்திலிருந்து…

 

சென்ற பகுதியில் சொன்னது போல நைமிசாரண்யம் மற்றும் அதனை அடுத்த சிறப்பான தலங்களில் உலா வர உள்ளூர் சாரதியான அவ்(dh)தேஷ் Gகிரி அவர்களை ஏற்பாடு செய்து கொண்டாயிற்று. அடுத்து என்ன உலா வர வேண்டியது தான்.  சென்ற பகுதியில் சொன்னது போல, ஓட்டுனருடன் பேசி விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர் என்னோடு பேசியதை விட அவரது அலைபேசி வழி வேறு யாருடனோ பேசியது தான் அதிகம்.  தொடர்ந்து அழைப்பு வருவதும், இவர் பேசுவதும் என தனது வாகனத்தினை செலுத்தியபடியே பேசிக்கொண்டே இருந்தார்.  இடைப்பட்ட நேரத்தில் தான் கொஞ்சமாவது என்னால் அவருடன் பேச முடிந்தது.  முதலில் காலை உணவை முடித்துக் கொண்டு உலா வரலாம் என்று சொல்ல வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.  ஊருக்கு வெளியே இருக்கும் இடங்களை முதலில் பார்த்துவிட்டு பிறகு ஊருக்குள் இருக்கும் இடங்களை பார்க்கலாம் என்று முதலில் சொன்னவர், இல்லையில்லை முதலில் இன்றைய நாளை, உங்கள் சுற்றுலாவை மா லலிதா தேவி தரிசனத்துடன் தொடங்கலாம், அது தான் சரி என்று சொன்னார்.  நீர் தான் எங்கள் சாரதி, நீர் எங்கே அழைத்துச் சென்றாலும் எங்களுக்கு ஓகே என்று சொல்ல, அன்றைய நாளில் முதல் முதலாக அழைத்துச் சென்ற இடம் - நாங்கள் தங்கியிருந்த இடம் அமைந்த சாலையில் சில மீட்டர் தொலைவில் இருக்கும் மா லலிதா தேவி கோயில்.  



மா லலிதா தேவி, நைமிசாரண்யம் - படம் இணையத்திலிருந்து…



மா லலிதா தேவி - சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் கோவில் உத்திர பிரதேச மாநிலத்தில் இருக்கும் கோயில்களில் பிரதான இடம் பிடிக்கும் அளவு முக்கியமான கோவில். திவ்யதேசங்களில் ஒன்றான நைமிசாரண்யம் நகரின் தலைமை தெய்வமாக, நகரைக் காக்கும் தேவியாக, இந்த மாதா லலிதா தேவி அவர்களையே வழிபடுகிறார்கள்.   சக்தி பீடங்கள் உருவான விதம் குறித்து முன்னரும் எனது சில தொடர்களில் எழுதி இருக்கிறேன்.  சுருக்கமாகச் சொல்வதென்றால், சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள,  அவை விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாக உருவாகியுள்ளன. இந்த சக்தி பீடங்கள் எவை என்பதில் இந்தியாவின் ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு வித பட்டியல் உண்டு! உத்திர பிரதேசத்தின் நைமிசாரண்யத்தில் இருக்கும் இந்த லலிதா தேவி கோயில் சில பட்டியல்களில் இல்லை! உள்ளூர்வாசிகளை பொறுத்தவரை சக்தி பீடங்களில் ஒன்று இந்த மா லலிதா தேவி கோயில்.  கோயிலின் வாயிலில் இரு யானை சிலைகள் நின்று நம்மை வரவேற்க அழகான சூழலில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில். 


ஐம்பத்தி ஒரு பாகங்களில் சதி தேவியின் ஹ்ருதய பகுதி இங்கே விழுந்ததாக நம்பிக்கை.  மிக அழகான கோயில் இங்கே அமைந்திருக்கிறது. காலை நேரம் நாங்கள் அங்கே சென்ற போது அத்தனை பக்தர்கள் இல்லை என்றாலும் கர்ப்பக்கிரத்தின் வெளியே இருந்த சிறு இடத்தில் நிறைய பக்தர்கள் நின்றிருந்தார்கள்.  கோயில் திரை சாற்றியிருக்க ஒரு ஓரமாக நின்று தேவியின் அருள் பெற காத்திருந்தோம்.  ஒவ்வொரு ஊரிலும் பக்தி செலுத்தும் வழிகள் வேறு தான்.  நம் ஊரில் பிரார்த்தனை செய்வது ஒரு விதம் என்றால் வடக்கில் பிரார்த்தனைகள் வேறு விதம். அவரவர் கைகளில் ஏந்தியிருக்கும் சிறு தட்டில் விளக்கேற்றி வெளியில் நின்றபடியே ஆரத்தி எடுப்பதும், கைகளில் வைத்திருக்கும் தட்டிலிருந்து பூக்களை எடுத்து உள்ளே இருக்கும் தேவியின் சிலை மீது வீசுவதும், அங்கே இருக்கும் எல்லா பொருட்களுக்கும் பொட்டு வைத்து, பூ வைத்து வழிபடுவதும், dhதான் பாத்ர! என்று ஹிந்தியில் அழைக்கப்படும் உண்டியலுக்கு கூட  பூ வைப்பார்கள் என்றால் பாருங்களேன்!, என பிரார்த்தனை, வழிபாடு விதிகள் நம்மை பிரமிக்க வைக்கும். இறை நம்பிக்கையும், தெய்வத்தினை சகியாக, தோழனாக, எல்லாமுமாக வழிபடுவதில் அவர்கள் வழி தனி வழி.  கோயில் அருகே சென்றவுடன் இரண்டு கைகைகளையும் மேலே தூக்கி ஜெய பேரிகை முழங்கும் போது நம்மை அறியாமல் நம் உணர்வுகள் இறை சக்தியுடன் இணைவதை நம்மால் உணர முடியும்.    

 

சத்ர யாகத்தினை செய்து வந்த முனிவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுக்க, முனிவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிடுகிறார்கள்.  பிரம்மாவோ, என்னிடம் வந்து வணங்கி பயனில்லை, நீங்கள் அனைவரும் மா லலிதா தேவியிடம் முறையிடுங்கள், உங்களுக்கு உடனடியாக பலன் கிடைக்கும் என்று வழிகாட்ட, முனிவர்கள் மா லலிதா தேவியை வணங்கி தங்களது யாகத்திற்கு அசுரர்கள் தரும் தொல்லைகளைக் குறித்து முறையிடுகிறார்கள்.  மா லலிதா தேவி, அசுரர்களை அழித்து, யாகம் தொடர்ந்து நடைபெற உதவி செய்கிறார் என்று ஒரு கதையும் உண்டு.  மா லலிதா தேவி கோயில் கொண்டிருக்கும் இந்த நைமிசாரண்யம் பகுதி முழுவதுமே ஒரு வனப்பகுதியாக இருந்தது தான்.  வனமே, ஆரண்யமே, விஷ்ணுவாக வணங்கப்படும் இந்த ஊரில் குடிகொண்டிருக்கும் மா லலிதா தேவி கோயிலில் சில நிமிடங்கள் வரை திரை விலகி தரிசனம் பெற காத்திருந்தோம்.  நாங்கள் சென்ற போது தான் தேவிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள் என்பதால் காத்திருக்க வேண்டியிருந்தது.   



Gகட்டா - ஒரு பிரசாதம்

 

காத்திருந்த எங்களுக்கு தேவியின் திவ்யமான தரிசனம் கிடைத்தது. கோயில் உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்றாலும் பலரும் எடுத்துக் கொண்டு இருந்தார்கள். நம் மக்களுக்கு சொல் பேச்சு கேட்கும் வழக்கம் இல்லையே. கோயில் பகுதியில் நிறைய குழந்தைகளும் பெரியவர்களும் பணம் கேட்டபடி கூடவே வருகிறார்கள். நிறைய பேர் கோயில் காண்பிக்கிறேன் என்று துரத்துவதும் உண்டு. சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது.  யார் அழைத்தாலும், அதை கவனிக்காமல் இறைவியை தரிசித்து அங்கிருந்து வெளியே வருவது நமக்கு நல்லது, நம் சேமிப்புக்கும் நல்லது.  வழக்கமான பிரபல கோயில்கள் போலவே இங்கேயும் நிறைய கடைகள் உண்டு.  சின்னச் சின்னதாய் லலிதா தேவி கோயில் படங்கள், தேவியின் உருவம் பொறித்த படங்கள், கோயில் மாதிரிகள் என பலவும் விற்பனைக்கு இருக்கிறது.  மா லலிதா தேவி கோயில் இருக்கும் சாலையில் நிறைய பிரசாதக் கடைகள்.... அந்தக் கடைகளில் பார்த்த ஒரு பிரசாதம் பார்க்க வித்தியாசமாக இருந்தது. கேட்டு விட்டேன் - என்னப்பா இது என்று?  பெயர் Gகட்டா என்றார் கடைக்காரர். என்னடா இது என்றால் ரோஜாப்பூ இதழ்கள் சேர்த்த சர்க்கரை மிட்டாய் என்கிறார். சுவை எப்படி இருக்கும் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் எனது பதில் தெரியாது என்பது தான்..... படம் எடுத்தது நீங்கள் பார்க்கவும் இங்கே பகிர்ந்து கொள்ளவும் மட்டுமே, சுவைக்க அல்ல! 

 

மா லலிதா தேவியின் திவ்யமான தரிசனம் கண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  வாயிலில் எங்கள் ஓட்டுநர் காத்திருந்தார்.  வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டதும் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே பார்த்தது என்ன, மேலும் எங்களுக்கு கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.  அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து.

 

18 கருத்துகள்:

  1. ​நானும் எங்கள் பயணத்தில் இந்த டைம் சென்ற நினைவு. நைமிசாரண்யத்தில் மிகக் குறைந்த இடங்களே எங்களுக்கு காட்டினார் எங்கள் ஆள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாக நிறைய இடங்களை இது போன்ற பயண ஏற்பாடு செய்பவர்கள் காண்பிப்பது இல்லை ஸ்ரீராம். நாங்கள் அங்கே ஒரு நாள் தங்கியதால் மாலையிலும் சில இடங்களுக்கு நடந்து சென்றோம்.

      பதிவு குறித்த தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. பயணத் தகவல்கள் யாருக்கேனும் பயன்பட்டால் மகிழ்ச்சி கில்லர்ஜி. தங்களது கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  3. எங்கள் யாத்திரைகளில் விஷ்ணு கோவில்கள் தவிர வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லுவதில்லை. 2008ல் இந்தக் கோவிலோ இல்லை வேறு ஒன்றோ நானும் மனைவியும் போய் பார்த்ததுண்டு. நைமிசாரண்யத்துக்கு மூன்று முறை சென்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஷ்ணு கோவில்கள் தவிர வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்வதில்லை - :) தெரிந்தது தான்! மூன்று முறை அங்கே பயணித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    வாசகம் அருமை. பதிவும் நன்றாக உள்ளது. லலிதா தேவியின் தரிசனம் பக்தியுடன் பெற்று கொண்டேன். பயண விபரங்களை விளக்கமாக சொன்னது ரசிக்கத்தக்கதாக இருந்தது. அடுத்த இடத்தின் பகிர்வுக்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      பதிவு வழி பகிர்ந்து கொண்ட செய்திகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. சிலருக்கேனும் பயனுள்ளதாக இருந்தால் நல்லதே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  6. பயண அனுபவம் அருமை.

    //நிறைய பேர் கோயில் காண்பிக்கிறேன் என்று துரத்துவதும் உண்டு. சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது//

    ஆமாம். இல்லையென்றால் மிகவும் தொந்திரவு அனுபவித்து இருக்கிறோம்.
    மா லலிதா தேவி தரிசனம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போன்ற இடங்களில் தொல்லை தருவதற்கென்றே சிலர் உண்டு. அது எந்த ஊராக இருந்தாலும் சரி! பதிவு குறித்த தங்கள் கருத்துரைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. லலிதாதேவி கோவில் தரிசித்தோம் .கேட்டா மிட்டாய் வித்தியாசமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் பதிவு குறித்த கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மாதேவி.

      நீக்கு
  8. அவரவர் கைகளில் ஏந்தியிருக்கும் சிறு தட்டில் விளக்கேற்றி வெளியில் நின்றபடியே ஆரத்தி எடுப்பதும், கைகளில் வைத்திருக்கும் தட்டிலிருந்து பூக்களை எடுத்து உள்ளே இருக்கும் தேவியின் சிலை மீது வீசுவதும், அங்கே இருக்கும் எல்லா பொருட்களுக்கும் பொட்டு வைத்து, பூ வைத்து வழிபடுவதும், dhதான் பாத்ர! என்று ஹிந்தியில் அழைக்கப்படும் உண்டியலுக்கு கூட பூ வைப்பார்கள் என்றால் பாருங்களேன்!, என பிரார்த்தனை, வழிபாடு விதிகள் நம்மை பிரமிக்க வைக்கும். இறை நம்பிக்கையும், தெய்வத்தினை சகியாக, தோழனாக, எல்லாமுமாக வழிபடுவதில் அவர்கள் வழி தனி வழி. கோயில் அருகே சென்றவுடன் இரண்டு கைகைகளையும் மேலே தூக்கி ஜெய பேரிகை முழங்கும் போது நம்மை அறியாமல் நம் உணர்வுகள் இறை சக்தியுடன் இணைவதை நம்மால் உணர முடியும். //

    ஆமாம் ஜி...வடக்கிலும் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஜெய பேரிகை முழங்கும் போது நமக்கும் நம்மை அறியாமல் சிலிர்த்து சக்தியுடன் இணையும்...அதே அதே..
    இங்கும் கூட இப்படிச் செய்கிறார்கள் நான் கண்டது அம்மன் கோயில்களில் குறிப்பாக பனசங்கரி கோயிலில். அந்தக் கோயில் அருமையான கோயில். மிக மிக அழகான அம்மன். அலங்காரம் ஈர்க்கும். பெரிய வளாகம். வாசலில் விற்கிறார்கள் நெய் விளக்குகள் 6,9 என்று ஒருதட்டில். சிலர் தாங்களே கொண்டு வந்து அங்கேயே திரி போட்டு நெய் விட்டு என்று ஆரத்தி காட்டுவார்கள் எல்லா சன்னதிகளிலும்.

    2002 ல் இங்கிருந்த போது இருந்த பனசங்கரியா இப்போது என்று வியக்கும் அளவிற்கு வளர்ச்சி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  9. Gகட்டா பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. இது போகாமல் படுத்தியது இப்போது வரும் என்று நினைக்கிறேன். ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....