வெள்ளி, 17 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - நைமிசாரண்யம் - ருத்ர குண்ட் - பகுதி எட்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


“Travelling – it leaves you speechless, then turns you into a storyteller” – Ibn Battuta.

******

 

நதிக்கரை நகரங்கள் என்ற  தலைப்பில் இதுவரை வெளியிட்ட பயணத் தொடரின்  பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே. 

நதிக்கரை நகரங்கள் - பகுதி இரண்டு இங்கே.  

நதிக்கரை நகரங்கள் - பகுதி மூன்று இங்கே. 

நதிக்கரை நகரங்கள் - பகுதி நான்கு இங்கே. 

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஐந்து இங்கே. 

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஆறு இங்கே.

நதிக்கரை நகரங்கள் - பகுதி ஏழு இங்கே.



அறுவடைக்குத் தயாராக கோதுமை…




சென்ற பகுதியில் சொன்னது போல காலை உணவை ஒரு வழியாக முடித்துக் கொண்டு பேட்டரி ரிக்ஷாவில் அடுத்த இலக்கு நோக்கி புறப்பட்டோம். நைமிசாரண்யம் பகுதியில் மட்டுமல்லாது உத்திரப் பிரதேசத்தின் பல இடங்களில் வயல்களில் கோதுமை விளைந்து அறுவடைக்கு காத்திருக்கிறது. சிலர் அறுவடை முடித்து பெரிய பெரிய இயந்திரங்கள் மூலம் தானியத்தை தனித்து எடுத்து இருந்தார்கள். பேட்டரி ரிக்ஷாவில் பயணித்த போது, சாலையோரம் இரு பெண்கள் வயலில் அறுவடை செய்து கொண்டிருக்க நானும் களத்தில் இறங்கி இரண்டு கொத்துகளை, அவர்களிடமிருந்து கத்தியை வாங்கி, அறுவடை செய்தேன். அந்த இரண்டு பெண்களுக்கும் நான் ஒரு கத்துக்குட்டியாக கோதுமை வயலில் இறங்கி வேலை செய்வதைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு! நல்ல வேளை நமுட்டு சிரிப்பு தான்!  கெக்கே பிக்கே என்று சத்தமாக சிரித்திருந்தால் எனக்கு வெட்கமாக போயிருக்கும்!  ஆனாலும், ஏதோ நம்மால் இரண்டு பேர் சந்தோஷமாக இருந்தால் நல்லது தானே, என்ற எண்ணம் மனதில் வர நானும் அவர்களுடன் சேர்ந்து சிரித்து அவர்களுடன் இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு வந்தேன். நான் அறுவடை செய்ததை நண்பர் காணொளியாக எடுத்தார். சற்று தொலைவில் இருந்து எடுத்ததால் பேசியது உங்களுக்குக் கேட்க வாய்ப்பில்லை.    



கோதுமை அறுவடைக்குப் பிறகு தொடர்ந்து பயணித்தோம்.  நாங்கள் பயணித்து செல்லப் போகும் இடம் குறித்து சில தகவல்களை இணையத்தில் பார்த்திருந்தோம்.  அங்கே சென்று வந்திருந்த நண்பர் ஒருவரும் இந்த இடம் குறித்துச் சொல்லி நிச்சயம் சென்று வாருங்கள் என்று சொல்லி இருந்தார்.  நாம் செல்லப் போகும் இடம் கோமதி ஆற்றங்கரையில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம். அங்கே என்ன சிறப்பு, தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.  ருத்ரவ்ரத் குண்ட் அல்லது ருத்ர குண்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு இடம் நைமிசாரண்யத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. குண்ட் என்ற ஹிந்தி வார்த்தைக்கு குளம் என்று அர்த்தம்.  


கோமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த இடம்/குண்ட் ஆற்றின் ஒரு பகுதியாகவே இருக்கும் ஒரு குளம். ஆலகால விஷத்தை அருந்திய சிவபெருமான் இந்தக் குளத்தின் உள்ளே வந்து அமர்ந்து கொண்டதாக ஐதீகம். இந்தக் குளத்தில் ஒரு சிறப்பு விஷயம். பழங்கள் வில்வ இலைகள், பூக்கள், பால் போன்றவற்றை உள்ளே இருக்கும் சிவபெருமானை மனதில் நினைத்து வழிபட்டு  ஆற்றில் விடுவார்கள். ஒரு சில பழங்கள் உள்ளே சென்றுவிட சில பழங்கள் மேலே மிதக்கின்றன. அதிலும் குறிப்பாக இலகுவான வில்வ இலைகள் உள்ளே சென்றுவிட எடையுள்ள பழங்கள் மிதப்பது அதிசயம் தானே. உள்ளே சென்றவற்றை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும் மேலே மிதப்பவை அவர் உங்களுக்குத் தரும் பிரசாதம் என்பதும் நம்பிக்கை. பொதுவாக பழங்களுக்கு இருக்கும் எடைக்கு அவை நீரின் உள்ளே செல்ல வேண்டும் அல்லவா? ஆனால் அவை மிதப்பது அதிசயமான விஷயம் தான்..... எத்தனையோ விஷயங்கள் நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை தான்..... 



அங்கே சில சாதுக்கள் தான் கோவிலை பார்த்துக் கொள்கிறார்கள்.  அதில் ஒரு சாதுவிற்கு வாய் பேச முடியாது - செய்கைகளால் தான் விஷயங்களை நமக்குச் சொல்ல முயல்கிறார்.  நாங்கள் அங்கே சென்ற பொது ஏதோ ஒரு கல்லூரியிலிருந்தோ, நிறுவனத்திலிருந்தோ சிலர் ஒரே மாதிரி உடுப்பில் வந்திருக்க, குளத்தில் பழங்களையும் வில்வ இலைகளையும் குனிந்து சமர்ப்பிக்கும் போது சட்டைப் பையிலிருந்து சாவியோ எதுவோ விழுந்துவிட அந்த வாய் பேசமுடியாத சாதுதான், குளத்தின் அருகே இருந்த பகுதியில் தனது கால்களால் தடவித் தடவி  எடுத்துத் தந்தார்.  குளத்தில் இறங்கி தேடுவது ஆபத்தானது என்றும் அங்கே ஆழம் அதிகம் என்பதுடன், எங்கே குளம் ஆரம்பிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியாது என்பதால் இறங்கி தேடுவது முடியாத விஷயம் என்றும் பக்கத்தில் இருந்த சிலர் சொன்னார்கள். ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த சில சிறுவர்களை அழைத்து எடுத்துத் தர சொன்னபோது அவர்களும் வந்தார்கள் என்றாலும், சாது அவர்களை திட்டிவிடுவார் என்றும் அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். 



அங்கே இருந்த வேறொரு சாதுவிடம் எங்கள் சாரதி சொல்ல, அவர் ஹிந்தியில் நீண்டதாக சில விஷயங்களை நம் பிரார்த்தனையாக சொல்லச் சொல்ல நாங்களும் திருப்பிச் சொன்னோம்.  பக்கத்தில் விற்பனை செய்து கொண்டிருந்த பழங்கள், வில்வ இலை, சொம்பில் தண்ணீர் கலந்த பால் என ஒரு தட்டு இருப்பது ரூபாய்க்கு வாங்கி சாது சொன்னபடியே செய்தோம்.  மேலே சொன்னபடி இலகுவான வில்வ இலைகள் உள்ளே சென்றுவிட, சில பழங்கள் மேலே மிதந்தன.  மிதந்த பழங்களை எங்களுக்கு பிரசாதமாக எடுத்துக் கொண்டு பக்கத்திலே இருந்த கோவிலுக்கும் சென்று பால் கொண்டு அபிஷேகமும், வில்வ இலைகள் கொண்டு பூஜையும் செய்தோம்!  அங்கே சில நிமிடங்கள் பிரார்த்தனைகள் செய்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம்.  அங்கிருந்து புறப்பட்டு சென்ற இடம் என்ன, அந்த இடத்திற்கும் தமிழகத்திற்கும் இருக்கும் சம்பந்தம் என்ன போன்ற விஷயங்களையும், அந்த இடத்தின் சிறப்புகளையும் அங்கே கிடைத்த அனுபவங்களையும் வரும் பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

19 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமான தகவல்கள். நீங்கள் அறுவடை செய்ததை பேஸ்புக்கில் பார்த்தேன் என்று நினைவு. மிதக்கும் பழங்கள், முழுகும் இலைகள் வியப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முகநூலில் காணொளி பார்த்திருக்கலாம்.... அங்கே பயண சமயத்தில் அவ்வப்போது சில விஷயங்கள் பகிர்ந்து கொண்டேன். இயற்கை நமக்கு பல வியப்புகளை தந்த வண்ணமே இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. மிக அருமையான பதிவு.
    காணொளிகள் அருமை.

    உள்ளே சென்றவற்றை சிவபெருமான் ஏற்றுக் கொண்டார் என்றும் மேலே மிதப்பவை அவர் உங்களுக்குத் தரும் பிரசாதம் என்பதும் நம்பிக்கை.//

    நம்பிக்கை அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. நம்பிக்கை தானே எல்லாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. நாங்கள் ருத்ரகுண்ட் சென்றதில்லை. நல்ல தகவல்கள். அடுத்தமுறை வாய்க்கவேண்டும்.

    பதிவில் அபூர்வமாக இரு தட்டச்சுப்பிழைகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த பயணத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும். நல்ல இடம்.

      தட்டச்சுப் பிழைகள் - சரி செய்துவிட்டேன். சுட்டிக் கான்பித்தமைக்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  4. காணொளிகள் அருமை... சிரிப்பு கேட்கிறது... தமிழ்நாட்டின் தொடர்பு இல்லாத இடம் உலகில் எங்குமில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளிகள் மற்றும் பதிவு வழி பகிர்ந்த தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  5. மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்! கோதுமை வயல்களைப்பார்க்கவும் கோதுமைக் கதிரை பார்க்கவும் உங்கள் மூலம் வாய்ப்பு கிடைத்தது. மிக அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்வாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி மனோம்மா.

      நீக்கு
  6. மிதக்கும் பழங்கள், முழுகும் இலைகள் வியப்பைத் தருகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியப்பு தான். இப்படி பல விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கத்தான் செய்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. இன்னும் சில விசயங்கள் மனிதர்களுக்கு புரியாத புதிராகத்தான் இருக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியாத புதிர்...... உண்மை தான் கில்லர்ஜி. இப்படியான விஷயங்கள் நிறையவே உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. கோதுமை வயல்களின் படங்கள் தாங்கள் கோதுமையை அறுவடை செய்யும் காணொளி அனைத்தும் நன்றாக இருக்கின்றன. இறைவனது விருப்பமாக நீரில் மிதக்கும் பொருட்களில் நமக்கென்று நம்மிடம் வரும் பொருள் குறித்த விஷயம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. எல்லாம் இறைவன் செயல். அந்த காணொளிகளும், விபரங்களும் அருமை. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      இறைவன் செயல்..... பல நமக்குப் புறியாதவை. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  9. கோதுமை வயல்கள் அழகாக கதிர்கள் முற்றியபடி. நீங்கள் அறுவடை செய்வதும் அழகு.

    சிறப்பான ருத்ரகுண்ட் தகவல்கள் அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்த விஷயங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  10. இந்தப்பதிவை அன்றே வாசித்திருக்கிறேன்...உங்களை கோதுமை வயலில் இருக்கும் படத்தில் பார்த்ததும் அட வாசித்தோமே என்று நினைத்தேன் ஆனல அன்று வேலைப் பளுவில் வலைப்பக்கம் வந்து கருத்திடவில்லை என்பது அப்புறம் நினைவுக்கு வந்தது,

    வில்வ இலைகள் தண்ணீருக்குள் போவதும் பழங்கள் மிதப்பதும் ஆச்சரியம்தான் . விஞ்ஞானப்படி பார்த்தால் வில்வ பழம் ஓடு வெளிப்புறம் காற்று அடைந்திருக்காம்கவும் தண்ணீரை விட அடர்த்தி குறைவாகவும் இருக்குமாக இருக்கும்....உள்ளே சதைப்பற்று குறைவாக இருந்திருக்குமோ...

    ருத்ர குண்ட் மற்றும் கோமதி ஆறு படங்கள் அழகு,...நீர்நிலைகள் மலைகள் இயற்கை இருக்கும் இடமே அழகுதான்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....