வெள்ளி, 10 ஜூன், 2022

நதிக்கரை நகரங்கள் - பயணத் தொடர் - நைமிசாரண்யம் - ததீச்சி குண்ட் - பகுதி ஆறு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட யாரிவள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் நம்மிடம் இருந்தால் முன்னேற்றத்திற்கான வாயிற்கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.

 

******

 


நதிக்கரை நகரங்கள் - பகுதி ஒன்று இங்கே


பகுதி இரண்டு இங்கே.  


பகுதி மூன்று இங்கே


பகுதி நான்கு இங்கே


பகுதி ஐந்து இங்கே. 

 


ததீச்சி (Dadhichi) குண்ட்

சென்ற பகுதியில் சொன்ன மா லலிதா கோவிலில், சக்தி பீடங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், அன்னை லலிதா தேவியை தரிசனம் செய்து கொண்டு வெளியே வந்த நாங்கள் அங்கே இருந்த மக்கள் கூட்டத்தினைத் தாண்டி வெளியே வந்தோம்.  சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த எங்கள் சாரதி அவ்(dh)தேஷ் Gகிரி அவரது வாகனத்தினை இயக்க, அங்கிருந்து புறப்பட்டோம்.  நாங்கள் அடுத்து எங்கே செல்லப் போகிறோம் என்று அவரிடம் கேட்க, நைமிசாரண்யம் பகுதியிலிருந்து வெளியே இருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்வதாக சொன்னார்.  அவர் எங்கே எங்களை அழைத்துச் செல்லப் போகிறார் என்று பார்க்க நாங்கள் பயணித்தபடியே காத்திருந்தோம்.  மா லலிதா தேவி கோவிலிலிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நாங்கள் செல்லப் போகும் இடம்.  ஊர் மிகச்சிறிய ஊர் தான் என்றாலும் சாலைகள் நன்றாகவே இருந்தன.  அந்த சாலையில் வேறு வாகனமாக இருந்தால் இன்னும் கொஞ்சம் வேகமாக சென்றிருக்கலாம் - ஆனால் நாங்கள் சென்றது பேட்டரி ரிக்ஷா என்பதால் பொறுமையாகவே செல்ல முடிந்தது. 



ததீச்சி குண்ட் கோவில் வளாகம்


 

ஒரு வழியாக அரை மணி நேர பயணத்திற்குப் பிறகு, மிஸ்ரிக்(Kh) என்றொரு இடத்தினை நாங்கள் சென்று சேர்ந்தோம்.  அங்கே அமைந்திருப்பது ததீச்சி (Dadhichi) குண்ட் என்ற இடம். இந்த இடத்தில் விசேஷம் என்ன என்று தெரிந்து கொள்ள சில தகவல்களைப் பார்க்கலாம். தேவராஜன் இந்திரனை வ்ருத்ரா எனும் அரக்கன் வெற்றிகொண்டு, "ராசா, இது என் இடம், வீட்டை விட்டு வெளியே போ!" என்று சொல்வதற்குள் "தப்பித்தேன் பிழைத்தேன்" என்று ஓடி விட்டாராம் இந்திரன். சரி இழந்த தேவலோகத்தினை மீட்பது எப்படி, என்று எல்லாம் வல்ல விஷ்ணுவிடம் கேட்க, "வ்ருத்ராவை வெல்வது சுலபமல்ல..... சாதாரண ஆயுதங்கள் கொண்டு அவனை வீழ்த்த முடியாது, தவ வலிமை பெற்ற முனிவரான ததீச்சி அவர்களின் எலும்புகள் கொண்டு செய்யப்பட்ட வஜ்ராயுதம் கொண்டு மட்டுமே அரக்கனை வதம் செய்ய முடியும்” என்று வழிகாட்டினாராம். தேவராஜன் இந்திரனும் முனிவரை வேண்டிக் கொள்ள அவரும் தன்னை மாய்த்துக்கொண்டாராம்!  மாய்ந்து போன ததீச்சி அவர்களின் எலும்புகளைக் கொண்டு வடிவமைத்த ஆயுதத்தால் அரக்கனை வென்று இழந்த இந்திர லோகத்தை மீண்டும் அடைந்தாராம் இந்திரன். அப்படி இந்திரன் ததீச்சி முனிவரை சந்தித்து, அவரது முதுகு எலும்புகளால் செய்யப்பட்ட வஜ்ராயுதம் பெற்ற இடம் தான் இந்த  ததீச்சி குண்ட். இங்கே ஒரு குளமும் கோவிலும் அமைந்துள்ளது. நைமிசாரண்யம் வந்தால் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று.... 



ததீச்சி குண்ட் கோவில் பதாகை ஒன்று
 

மிஸ்ரிக்(Kh) தீர்த்(th) என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ததீச்சி முனிவரின் ஆஸ்ரமம் அந்தக் காலத்தில் இருந்ததாம்.  தேவராஜனுக்கு தனது எலும்புகளால் வஜ்ராயுதம் செய்து கொள்ள கொடுத்த அவரது தன்னலமற்ற செயலை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் அவரது பெயரிலேயே ஒரு குளமும் (ததீச்சி குண்ட்) ஒரு சிறு கோவிலும் அமைந்துள்ளது.  கோவிலின் சுவர்களில் அவரது தியாகம் குறித்த தகவல்களை பொறித்து வைத்திருக்கிறார்கள்.  அவருக்கு ஒரு சிலையும் அங்கே இருக்கிறது.  அது தவிர அவரது மகனுக்கும் ஒரு சிலை இருக்கிறது.  சின்னச் சின்னதாய் கோவில்களும் அங்கே ஒரு ஸ்தல விருக்ஷமும் உண்டு.  அந்தப் பகுதியில் கடுகு விளைவு அதிகம் போல, கோவில் வளாகத்தில் கடுகு காய வைத்திருந்தார்கள்.  கோவில் பகுதியில் நின்று நிதானித்து வலம் வந்தபோது அங்கே சில உள்ளூர் பக்தர்களையும் பார்க்க முடிந்தது. அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, சின்னச் சின்னதாய் விஷயங்களை கேட்டுக் கொண்டோம்.  அங்கே பெரிதாக யாரும் எங்களை கண்டு கொள்ளவில்லை.  பெயருக்கு ஒரு பெரியவர் அங்கே அமர்ந்திருந்தார் என்றாலும் அவர் எங்களை கண்டு கொள்ளவில்லை.    



ததீச்சி குண்ட் கோவில் சிலை ஒன்று

 

குளம் அருகே சில கடைகளில் பூஜைக்கான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.  அது தவிர குளத்தில் இருக்கும் மீன்களுக்கு உணவாக சிறு கோதுமை மாவு உருண்டைகளை விற்கும் சிறுவர்களும் அங்கே நிறைய பேர் இருந்தார்கள்.  குளத்தின் படித்துறை வரை சென்று அங்கிருந்து கொஞ்சம் தண்ணீர் எடுத்து எங்கள் தலையில் தெளித்துக் கொண்டோம்.  சிலர் அங்கே குளித்தார்கள் என்றாலும் அங்கே குளிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தோன்றவில்லை.  அழகான குளம், படித்துறை, குளம் அருகே கோவில், சிறு கிராமம் என அழகான சூழல்.  அங்கிருந்து புறப்பட மனம் இன்றி அங்கிருந்து வெளியே வந்தோம்.  கோவிலுக்குச் செல்லும் முன்னர் எங்கள் ஓட்டுநர், ஆஸ்ரமத்தில் இருப்பவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள், பணம் கேட்டால் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருந்தார் - ஆனால் அங்கே யாரும் எங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு தரவில்லை என்பதில் மகிழ்ச்சி.  




ததீச்சி குண்ட் கோவில் வளாகத்தில் ஸ்தல விருக்ஷம்
  

அங்கே திவ்யமான தரிசனம் கண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  முதல் நாள் இரவு வீட்டிலிருந்து புறப்பட்டபோது சாப்பிட்ட நாங்கள் அதன் பிறகு ஒன்றும் சாப்பிடவில்லை.  நைமிசாரண்யம் தங்குமிட வாயிலில் இரண்டு குல்லட் தேநீர் குடித்ததோடு சரி.  வயிறு கொஞ்சம் கவனித்தால் நல்லது என்று எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தது.  ததீச்சி முனிவர் ஆஸ்ரமம் அருகே எங்கள் ஓட்டுநர் காத்திருந்தார்.  வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டதும் அவர் எங்களை காலை உணவுக்காக எங்கே அழைத்துச் சென்றார், அங்கே எங்களுக்கு கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை எல்லாம் வரும் பகுதிகளில் எழுதுகிறேன்.  அடுத்த பகுதியில் சந்திக்கலாம்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்து இருங்கள் நண்பர்களே. 

 

*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து.

 

16 கருத்துகள்:

  1. "நான் செத்தாதான் உனக்கு வாழ்வா?  அடப்போடா" என்று சொல்லாமல் தியாகம் செய்த ததீச்சி முனிவர் கதை புதிது.  சாதாரணமாக புராணங்களில் இபப்டி தியாகம் செய்தவர்களை சம்பவம் முடிந்ததும் மறுபடி உயிர்ப்பித்துக் கொடுத்து விடுவார்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தியாகம் செய்பவர்கள் உயிர்ப்பித்துக் கொடுத்து இருக்கலாம்! இவர் வாழ்வில் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை ஸ்ரீராம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. 2008ல் மனைவியுடன் பேட்டரி காரில் நைமிசாரண்யத்தை மதிய உணவு முடித்தபின் சுற்றினேன். ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்ததால் மற்றவர்கள் மிஸ்ரிக்குச் சென்றுவிட்டனர். அப்போது இவற்றைப் பார்க்கவில்லை. 2019ல் தரிசனம் செய்தேன். மீண்டும் இந்த இடங்களுக்கு அடுத்தவருடம் செல்லலாமென நினைத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களது அடுத்த பயணத்தில் இந்த இடங்களுக்குச் சென்று வர நினைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது அனுபவங்களையும் இங்கே பகிர்து கொண்டதற்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  3. எல்லா ஊர் கோயில்களுக்கும் ஓர் வரலாறு இருக்கத்தான் செய்கிறது
    தகவல்கள் நன்று ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா ஊர் கோவில்களுக்கும் வரலாறு இருப்பது நல்லதே. அனைவரும் தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி தான் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. இந்திரனுக்கு இதே தான் வேலை போல...!

    ஓட்டுநர் சொன்ன கவனத்தை அடுத்த பதிவில் அறிந்து கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. நீண்ட நாட்களுக்குப் பிறகு இணையத்திற்கு வந்துள்ளேன் ஐயா. இனி தொடர்வேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னாலும் பலரது தளங்களுக்கு வர முடிவதில்லை ஐயா. முடிந்த போது அனைத்து பதிவுகளையும் படித்து விடுவேன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    இன்றைய வாசகம் அருமை. பயணப் பதிவும் நன்றாக உள்ளது. முனிவரின் தன்னலமற்ற செயலால் தேவர்களின் வாழ்வு திரும்பிய கதை இதுவரை கேள்விபடாதது. ஆனால் இது போல் புராணங்களில் ஏகப்பட்டவை இருக்கின்றன. கேட்க கேட்க நமக்கும் நன்றாகத்தான் இருக்கிறது. அடுத்து ஆட்டோ டிரைவர் உங்களை எங்கு அழைத்துச் சென்றார் என்றறிய தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  7. ததீட்சி குண்ட் கோவில் வரலாறு அறிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மாதேவி.

      நீக்கு
  8. இந்திரனைக் குறித்த கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் ராங்க் பார்ட்டி போல!

    ததீட்ச்சி குன்ட் கோயில் தகவல்கள் எல்லாம் அருமை...ஜி

    மீன்களுக்கு கோதுமை உருண்டைகள்!! அட!! ...நம்மூரில் பொரி போடுவது போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மூரில் பொரி போல அங்கே கோதுமை உருண்டைகள்! ஹரித்வார், ரிஷிகேஷ் பகுதிகளில் கூட இந்த மாதிரி கோதுமை உருண்டைகள் கிடைக்கும்.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....