எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, March 30, 2013

அன்னம் விடு தூது – 5 – ஸ்ரவாணி


அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் முதல் கதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி ஸ்ரவாணி எழுதிய கதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இதுவரை நான்கு கவிதைகள் வந்திருக்கின்றன.  இதோ முதலாவது கதை!

சந்திரவதனி!


பட உதவி: சுதேசமித்திரன் 1957

" தண்டை ஒலியினால் கெண்டை மிரண்டு ஓடிற்றாம் 
சிலம்பொலியின் சிணுங்கலினால் சிவந்த மேனியனும் 
மெய் சிலிர்த்தானாம்  " 

பாடல் ஒலி அரண்மனை நந்தவனத்தில் பலமாகக் கேட்டது.

அடி பூங்கொடி ! இந்தா  இப்பந்தைப் பிடி பார்க்கலாம் 
என்றவாறே அந்த அழகான பூப்பந்தை கோணலாக வீசி 
எறிந்தாள் சந்திரவதனி. சேர நாட்டுப் பைங்கிளி .
பெயருக்கேற்றார் போலவே  மதி முகமும் கிளிப் பேச்சும் கொண்டவள் .
உனக்கு அனைத்துமே அம்மானை ஆடுவது போல் விளையாட்டுத் தானாம்மா ?
சரியான விளையாட்டுப் பெண்ணம்மா நீ என்று மன்னர் 
பெருஞ்சேரலாதர் அடிக்கடி கடிந்து கொள்வது உண்டு தம் 
ஆசை மகளை.

" மெய் சிலிர்த்தவன் தங்கள் மேனி சிலிர்க்கச் செய்யும் 
நாள் தான் எதுவோ ? சிவப்புடன் மஞ்சளும் கலக்கும் 
பொழுதும் எதுவோ ? "

இப்படி எதிர்ப்பாட்டு பாடியவாறே பூங்கொடியும் பந்தைக் 
கச்சிதமாகப் பிடித்து விளையாடினாள்.

போதும் பூங்கொடி ! இதே விளையாடி அலுத்துக் களைத்து 
விட்டது. சற்றே  ஏரிக்கரைப் பக்கம் சென்று காற்று வாங்கிக் 
கொண்டே கொஞ்சம் ஊஞ்சலாட்டம் ஆடுவோமா ?

சரி இளவரசி ! அப்படியே ஆகட்டும் .

பொன் ரதத்தில் குதித்தோடி ஏறிய சந்திரவதனி தன்  பக்கத்தில் 
ஆசைத் தோழியையும் அமர்த்திக் கொண்டாள் . ரதம் விரைந்து 
சென்றது காற்றென .குதிரையின் குளம்பொலியும் பேச்சொலியும் 
காற்றிலே கலந்து சுழன்றது அங்கே.

இங்கே சலசலவென பேச்சு துவங்கியது அவர்களிடம்.

ஊஞ்சலாட்டத்தை விட இளவரசிக்குப் பிடித்த விளையாட்டு 
ஒன்று இருப்பதை நான் அறிவேன். 

அது என்ன நான் அறியாத அப்படி ஒரு விளையாட்டோ ?

அது தான் ' அன்னம் விடு தூது ' இளவரசி அவர்களே .
இந்த விளையாட்டு தாங்கள் அறியாததா என்ன ?

சரி , நீயே ஞாபகப் படுத்தி விட்டாய் . அன்னத்திடம் சென்று 
இன்று என் எண்ணத்தைப் பற்றி பேசி  விட வேண்டியது தான் .

எல்லாம் தங்கள் சுயம்வரம் பற்றித் தானே இளவரசி ?
என்னிடம் ஓலை அளித்தால் நான் நிமிடத்தில் சென்று , அன்று 
விருந்தினர் மாளிகையில் தங்கி தங்கள் மனத்தைக் கொள்ளை 
அடித்தவரிடம் சென்று சேர்ப்பிக்க மாட்டேனா ?
இதற்காகவெல்லாம் போய் அந்த ஹம்சத்தைக் கெஞ்சுவதும் , கொஞ்சுவதும் ....
என்னை விட அது தான் தங்களுக்கு உயிர்த் தோழி  போலுள்ளது.  க்கும் .

ஏதேது பூங்கொடி , இன்று என் மேல் நீ தீராத பகை கொண்டு என் 
மனத்தை வாடச் செய்கிறாய் . என்ன இருந்தாலும் அந்த அன்னப்பறவை 
என் மனம் அறிவதில் உனக்கு இணை  ஆகுமா ? அதற்கு எல்லாம் 
விஸ்தீரணமாகச் சொல்ல வேண்டுமே . இருப்பினும் தான் என்ன ,
அதன் பால் போன்ற வெண்ணிற மேனியில் எனக்கொரு மயக்கம் . நான் சொல்லுவதை 
உடனே பறந்து சென்று அவ்விடம் சொல்லாதோ ? உனக்கும் ஒரு ஓலை 
தயார் செய்து வைத்து இருக்கிறேன் . நாளை தருகிறேன். 
அன்னம் சற்று முன்னமே செல்லட்டுமே ....

சரி , சரி , உங்கள் ஆசையை நான் ஏன் கெடுப்பானேன் ?
பத்திரமாகக் கொடுத்து விட்டுப் போகிறேன் . ஆனால் 
இப்போது என் எண்ணம் எல்லாம் அன்று நடந்ததையே எண்ணி வட்டமிடுகிறது 
இளவரசி.

அம்மா தாயே  , அன்று அப்படி என்ன தான் நடந்தது என்று கொஞ்சம் 
விளக்கமாகத் தான் சொல்லேன் .... கேட்கிறேன்.

இன்று போல் அன்றும் ,மதி  மயக்கும் மாலை வேளையிலே  தேரேறி ஏரிக்கரை சென்று கொண்டு இருந்தோமா !

 இருந்தோம். 

வண்டி குடை சாய்ந்து விட்டதா ?

ம்ம்ம்..சாய்ந்து விட்டது. அப்புறம் ...

அந்த குதிரை வீர வணிகர் வந்து உதவியதும் ..காப்பாற்றியதும் ...

அப்படியா ? பிறகு ?

அவர் கையில் இருந்த ராஜமுத்திரை பதித்த கணையாழியும் தேகக்கட்டும் அவர் 
ஒரு வணிகர் அல்ல என்பதும் , விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப் பட்ட போது 
அவர் மாறு வேடத்தில்வந்திருந்த  காஞ்சியின் இளவரசர் சூர்யவர்மர் என்று நீங்கள் கண்டுபிடித்ததும் ...

பிறகு நான் அவர் பக்கம் குடை சாய்ந்ததும் தான் ... உனக்குத் தெரிந்தது தானே 
என்று கூறி சந்திரவதனியும் ,பூங்கொடியும் கலகலவென சிரிக்கவும் 
ஜில்லென்று குளிர் காற்று வீசியதும் ஏரிக்கரை வந்து விட்டதை உணர்த்தியது .

சதங்கை , கைவளை  குலுங்க இருவரும் இறங்கி நடந்து சென்று 
அந்த பசுமையான மரத்தில் கொடியினால் கட்டப் பட்ட அந்த ஊசலில் 
சென்று இளவரசி அமர்ந்து கொள்ள , பாட்டு பாடியவாறே பூங்கொடி 
ஊசலை முன்னும் பின்னும் அசைத்தாள் . அதுவும் இளவரசியின் 
மனம் போலவே உயர்ந்தது. தாழ்ந்தது. பறவையினங்கள் இன்னிசை 
பொழிந்தன.

சற்று நேரம் சென்ற பிறகு , பூங்கொடி நீ சிறிது இங்கேயே ஊஞ்சலாடிக் 
கொண்டு இரு . நான் சென்று என் பிரியத் தோழி அன்னத்தை சந்தித்து 
அளவளாவி விட்டு வருகிறேன். என்ன ?


ஏரியின் பளிங்கு போன்ற தண்ணீரில் ஆம்பல்களும் 
செந்நிற தாமரைகளும் ஆங்காங்கே பூத்திருந்தன.
கெண்டைகள் துள்ளி விளையாடின. தண்டை ஒலி  கேட்டு அவை 
தலை தூக்கிப் பார்த்தன இளவரசியைக் காண ஆவலுடன்.

சந்திர வதனி அன்ன நடை இட்டு அங்கே ஏரிக்கரையில் ஆனநதமாய் 
தன்  துணையுடன் நீந்திக் கொண்டு இருந்த ஹம்சத்தின் அருகே சென்று அமர்ந்தாள் .

தடாகத்தில் பூத்து இருந்த தாமரை மலர்களின் இடை இடையே வளைநது வளைந்து 
நீந்தி சென்றுக் கொண்டிருந்த அன்னம் இவள் வரவைக் கண்டவுடன் நீந்துவதை 
நிறுத்தி அங்கேயே நின்று இவளை உறுத்துப் பார்த்தது .

பால் போன்ற என் அன்னமே , என் சுவர்ணமே !
நலமா ? சுகமா ? என்றாள் .

நாங்கள் நலமே , சுகமே ! நீங்கள் தான் சென்ற முறைக் 
கண்டது காட்டிலும் சுகவீனமாகக் காணப்படுகின்றீர்கள் .
பசலை நோய் காரணமோ ? என்று வினவியது பால் அன்னம்.

அதெல்லாம் ஒன்றும்  இல்லை. முதலில் நீ ஒன்றை எனக்குக் கூறுவாயாக.
உனக்கு நீரையும் பாலையும் பிரித்து உண்ணக் கூடிய மாய 
வித்தையைக் கற்றுத் தந்தது யார் ?

அது இறைவன் எமக்களித்த வரம் இளவரசி ... இப்போது ஏன் 
அதைப் பற்றி கேட்கின்றீர்கள் ?

இல்லை. அந்த வித்தையை உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டால் 
ஒருவேளை எனக்கு பொய்க்காதல் , மெய்க்காதல் என்று பகுத்து 
அறியத் தெரியுமோ என்னவோ ?

ஏன் ? என்னவாயிற்று இளவரசி ?

பிறகென்ன , விரைவில் என் கழுத்தில் மங்கல  நாண் பூட்டுவேன் 
என்று சொல்லி விட்டு சென்றவர் , இரு திங்களாகியும் வரவில்லையே ...
அங்கே தந்தையார் அவரை அழைக்காமலே சுயம்வரத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் 
செய்து விட்டார். எல்லாம் அந்த மதி கெட்ட மந்திரி மதிவாணனால் 
வந்த வினை.


என்னையும் தான் மறந்தானோ 
அல்லது மனதிலிருந்து தான் எறிந்தானோ 
என்னையும்  தான் வெறுத்தானோ 
அன்றி வேறொரு பெண்ணைக்  கலந்தானோ 
என்னையும் தான் துறந்தானோ 
போர்க்களம் ஏதும் தான் புகுந்தானோ 
சொன்ன சொல்லானது துஞ்சும் 
கல்லானதோ  அவன் நெஞ்சம் 
ஏதும் தெரியவில்லையே 
அவனின்றி  நான் வாழ்வது எங்ஙனம் 
இனி வேரோடு வீழ்வது தான் திண்ணம் ....

கலக்கமடையாதீர்கள் தேவி !என்று தங்கள் சுயம்வர கோலாகலம் ?

வரும் முழுமதி நாளில் தான் என் தங்கமே .. எனக்கு என்ன செய்வது என்று 
தெரியவில்லை ...

 நீ தான் சிரமம் பாராது உடன் பறந்து தூது  சென்று 
இச்செய்தியை காஞ்சித் தலைவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
எனக்காக இதை செய்வாயோ என் சுவர்ணமே ?!

இந்தத் தடாகத்தில் மலர்ந்து இருக்கும் தாமரை மலரை ஒத்த
 கண்களை உடைய கமலக்கண்ணியே ! இளவரசியே ! 
கலங்காதிரு ! உன் மனநிலை நான் அறிவேன்.
காதல் மணாளனைக் காணாது எவ்வளவு துயருற்று இருப்பாய் 
என எனக்குப் புரிகிறது. நான் உடன் விரைந்து சென்று 
சூர்யவர்மரிடம் இச்செய்தியை கூறி உம்மைக் கவர்ந்து 
செல்லச் சொல்கிறேன். நீங்கள் இருவரும் தங்கள் விருப்பம் 
போல் மணம் புரிந்து கொண்டு இதே ஏரிக்கரையில் 
முழுமதி நாளில் நிலவொளியில் அலங்கரிக்கப்பட்ட படகில் 
ஏரி முழுதும் எம்மைப் போலவே பவனி வருவீர்களாக. 
அப்போது நான் உங்களை இனம் கண்டு இனிய குரல் 
எழுப்பி மகிழ்வேன் என்றது அன்னம். 

ஆஹா , என் எண்ணமும் அதுவே ..... 
நீ சொன்னது மட்டும் பலித்து விட்டால் உனக்குப் 
பொற்கிண்ணத்தில் நீர் கலக்கா பால் தருவேன்.
அப்போது பருகி மகிழ் , இப்போது நீந்தி மகிழ் ....

என்று அன்னத்தைக் காலம் கழிவது தெரியாமல் 
கொஞ்சி மகிழ்ந்தாள் அந்த சேரஇளவஞ்சிக்கொடி.

- ஸ்ரவாணி.


என்ன நண்பர்களே கதையினை ரசித்தீர்களா? கதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கதை எழுதிய ஸ்ரவாணி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. சந்திரவதனி! தந்த - ஸ்ரவாணி.அவர்களுக்கு பாரட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 3. ஆக்கம் அருமை.

  அவர்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 4. கவிதையும் கதையும் கலந்து கலக்கலா க இருக்கு. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   Delete
 5. ஆஹா , என் எண்ணமும் அதுவே .....
  நீ சொன்னது மட்டும் பலித்து விட்டால் உனக்குப்
  பொற்கிண்ணத்தில் நீர் கலக்கா பால் தருவேன்.
  அப்போது பருகி மகிழ் , இப்போது நீந்தி மகிழ் ...//

  கதை அருமை அருமை.
  வாழ்த்துக்கள்.
  ஸ்ரவாணி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து! நானும் உங்களுடன் மகிழ்ந்து கொடுக்கிறேன் பூங்கொத்து.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 6. கதை + கவிதை என ஸ்ரவாணியின் படைப்பு அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   Delete
 7. அட அட என்னவென்று சொல்வது அன்புத்தோழி ஸ்ரவாணி அவர்களின் இக் கவிதைக்கதையினை...

  அதி அற்புதமான சொற்கட்டுக்களுடன் மிக மிக அழகாக கண்ணெதிரே காட்சிகளை கதைவடிவில் பின்னி இழைத்தெடுத்திருக்கின்றார்.
  மிகச் சிறப்பு.

  சகோதரரே! இதனை இங்கு எம்முடன் பகிர்ந்து அழகிய பூங்கொத்தினை வழங்கும் உங்களுக்கும் பெற்றுக்கொள்ளும் கதாசிரியர் ஸ்ரவாணி அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 8. பொய்க்காதல் மெய்க்காதல் - மிகவும் ரசித்தேன். (ஆமாம் பொய்க்காதல் பாலா நீரா? எந்தக் கலப்பில் எது பொய்யாகிறது? :)

  ReplyDelete
  Replies
  1. எது பொய்யாகிறது..... ஸ்ரவாணி பதில் சொல்லுங்களேன்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 9. சகோதரி ஸ்ரவாணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 10. தங்கள் தளத்தில் என் கதையை வெளியிட்டு
  சிறப்பித்ததிற்கு மிக்க நன்றி . இதன் மூலம் சில உறுப்பினர்களையும்
  பல பின்னூட்டங்களையும் பெற்று மகிழ்ந்தேன்.
  தொடரட்டும் தங்கள் இனிய பணி .

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   என் மூலம் உங்களுக்கும் சில உறுப்பினர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி.

   Delete
 11. இங்கே என்னைப் பாராட்டி மகிழ்வித்து ஊக்குவித்து
  பூங்கொத்து அளித்து கௌரவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும்
  என் நெஞ்சார்ந்த நன்றிகள் . என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 12. அருமையான படத்திற்கு முதல் கதை அருமை கதையின் ஆசிரியருக்கு வாழ்த்துகள் பகிர்ந்த ஊங்களுக்கும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 13. கதை அருமை நன்றாக இருக்கிறது வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கீதா.

   Delete
 14. வார்த்தைஜாலம்! வண்ணக்கோலம்! நன்று! நன்று!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....