எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 8, 2017

ஹனிமூன் தேசம் – உடன் கடோலா – மலைச்சிகரத்திற்கு ஒரு பயணம்

ஹனிமூன் தேசம் – பகுதி 13

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

மலைப்பாதையில் இப்படிச் சுமையோடு நடப்பது நமக்குச் சாத்தியமா?

வகைவகையாக பராட்டாக்களை உள்ளே தள்ளிய பிறகு அந்த மலைப்பாதையில் கொஞ்சம் நடக்கலாம் என சாப்பிட்டு முடித்த சிலர் நடந்தோம்.  ஜோதியிடம் அனைவரும் சாப்பிட்ட பிறகு அவர்களை அழைத்துக் கொண்டு வந்துவிடுங்கள், பாதையில் நாங்களும் ஏறிக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டு நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்.  ஒரு பக்கம் மலை, மற்றொரு பக்கம் நதி, கண்களுக்கு இனிய காட்சியாக தூரத்தில் பனிபடர்ந்த சிகரங்கள், சில்லென்று வீசும் காற்று, மகிழ்ச்சியாக பேசிக்கொண்டே நடக்கும் நடை…. என சுகமான அனுபவம் அது. அப்படி நாங்கள் கொஞ்சம் தூரம் நடந்து சென்றிருக்க, ஜோதி வண்டியில் மற்றவர்களை அழைத்துக் கொண்டு வந்து விட்டார்.  நடந்து வந்த அனைவரும் வண்டியில் அமர்ந்து கொள்ள, வண்டி அடுத்த இலக்கை நோக்கிச் சென்றது.


இது தான் உடன் கடோலா.....

அடுத்த இலக்கு – எங்கே? அங்கே செல்வதற்கு முன்னர் ஒரு ஹிந்தி வார்த்தை கற்றுக் கொள்ளலாம்! அது தான் தலைப்பில் இருக்கிறதே அந்த வார்த்தை தான் – உடன் கடோலா! உடன் கட்டை கேள்விப்பட்டிருக்கலாம் – உடன் கடோலா?  Rope/Cable Car-ஐத் தான் ஹிந்தி மொழியில் இப்படி அழைக்கிறார்கள். உட்னா[Udnaa] என்ற வார்த்தைக்கு பறப்பது என்ற பொருள். கம்பிகளில் தொங்கியபடி பயணிக்கும் இந்த Cable Car-ஐயே உடன் கடோலா என அழைக்கிறார்கள்.  அப்படியே பறந்து போகும் படி இருக்குமல்லவா? அப்படி ஒரு பயணத்திற்காகத் தான் நாங்கள் சாலை வழியே சென்று கொண்டிருந்தோம்.

வாகன நெரிசலும் மணாலியும் இணைபிரியாத தோழர்கள்....

நாங்கள் முதலில் சென்ற இடத்திற்கு அதிகாலையிலேயே புறப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் இல்லை. நிம்மதியாக பனியை ரசித்து அனுபவிக்க முடிந்தது என்றால், இந்த இரண்டாம் இடம் நோக்கிப் பயணிக்கையில் பத்தரை மணிக்கு மேல் ஆகிவிட்டபடியால், வழியெங்கும் வாகனங்கள் அதிக அளவில் சாலையை அடைத்தபடி இருக்க, இஞ்ச் இஞ்சாகத் தான் நகர்ந்தது எங்கள் வாகனம். சாலையில் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்திய பல வாகனங்கள் தலைநகர் தில்லியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் என்று பார்க்காமலேயே சொல்ல முடியும்!

இது சூரியனா இல்லை சந்திரனா?
சரியாக சூரியன் என்று சொன்னால் உங்களுக்கு ஒரு டம்ளர் கிர்ணி ஜூஸ் - வெயிலுக்கு இதமாய்!

தில்லி மனிதர்களுக்கு கெட்ட வழக்கம்! தான் நன்றாக இருந்தால் போதும், அடுத்தவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற எண்ணத்தோடு தான் வாழ்க்கை நடத்துபவர்கள்! எங்கே சென்றாலும் இப்படித்தான் – வண்டியை சாலையில் தாறுமாறாக நிறுத்தி, பின்னால் வருபவர் வண்டியைத் தாண்டி தானாகவே எப்படியாவது போய்விடுவான் என்ற எண்ணத்தோடு தான் தங்களது வாகனங்களை நிறுத்துவார்கள். Road Sense, Civic Sense எல்லாமே இவர்களைப் பொறுத்தவரை Nonsense! உடன் கடோலா இருக்கும் இடத்திற்குச் சென்று சேர்வதற்குள் தாவு தீர்ந்துவிட்டது! ஒரு வழியாக அருகே சென்றபிறகு எங்களை இறங்கச் சொல்லி, வண்டியை இங்கே எங்காவது பார்க்கிங்-ல் விட்டுவிடுவேன்.  நீங்கள் திரும்பி வரும்போது அலைபேசியில் அழையுங்கள் என்று சொல்லிச் சென்றார் ஜோதி.

குளிருக்கு இப்படியெல்லாம் ட்ரெஸ் போட்டுக்கிட்டாத்தான் நல்லது!

எல்லா இடங்களிலும் தங்குமிடங்கள்/வீடுகள்!
ஒரு இஞ்ச் கூட விடமாட்டோம்ல!

அனைவரும் இறங்கிவிட்டார்களா எனப் பார்க்க, ஒருவரை மட்டும் காணவில்லை. பார்த்தால் வண்டியின் உள்ளேயே இருந்தார். “நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன், நான் வரவில்லை” என்று சொல்ல, “பரவாயில்லை, வாங்க” என்று அழைக்க, அவர் மீண்டும் மறுக்கவே, சரி பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் எனச் சொல்லி மற்ற அனைவரும் நடந்தோம்.  சாலைகளில் இருந்த வாகனங்களுக்கு இடையே நடப்பது பெரிய சவாலாக இருந்தது.  அந்தப் பகுதியில் என்ன தான் இருக்கிறது? என்று பார்க்கலாமா….

Zorbing - இந்தப் பந்துக்குள் நம்மை அடைத்து உருட்டிவிடுவார்கள்! இப்படிப் போக நீங்க ரெடியா?
படம் எடுத்தது - தில்லியில்!

Paragliding, Zorbing, Trekking, Rope/Cable Car, Skiing, Quad Ride என பல விஷயங்கள் இப்பகுதியில் உண்டு.  Paragliding – இரண்டு விதம் உண்டு – ஒன்று Short மற்றது Long! Short duration மற்றும் Long Duration! Long Duration 20 நிமிடம் என்றால் மற்றது எவ்வளவு இருக்கும் என்பதையும் சொல்ல வேண்டியதில்லை! முதலாவதற்கு 600 ரூபாய்/ஒருவருக்கு என்றால் இரண்டாவதற்கு 1800 ரூபாய். Zorbing என்பது ஒரு Transparent பந்துக்குள் நம்மை அடைத்து பந்தை உருட்டி விடுவார்கள்! அப்படியே உருண்டு உருண்டு போகலாம்! Quad Ride என்பது மலைப்பகுதிகளில் இருக்கும் நான்கு சக்கர பைக்! அதிலும் தனியாக பயணிக்கலாம்! இப்படி இருக்கும் Adventure Sport வசதிகளில் நாங்கள் தேர்ந்தெடுத்தது உடன் கடோலா என அழைக்கப்படும் Cable/Rope Car!

ஒண்ணு தொப்பிய குடு, இல்லை லேஸ் குடு!
”தடமாட்டேன் போ!” என்று சொன்ன செல்லம்!

சமவெளிப்பகுதியிலிருந்து மலைச்சிகரம் நோக்கி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு கம்பிகளில் பயணிக்கும் சிறு பெட்டிகளில் அமர்ந்த படி நாம் பயணிக்கப் போகிறோம்.  பெட்டிக்குள் அமர்ந்து கீழே பார்த்தால் கிடுகிடு பள்ளம். பல இடங்களில் பள்ளம் 500 மீட்டருக்கும் மேல்! அம்மாடி… ”கீழே விழுந்தா என்ன ஆவறது” என்ற நினைப்போ என்னவோ, சிலர் வர மாட்டேன் என மறுக்க, அனைவரையும் குண்டுகட்டாக ஏற்றிவிட முடிவெடுத்தோம்.  இந்தப் பயணத்திற்கு ஆள் ஒன்றுக்கு 500 ரூபாய் வசூலிக்கிறார்கள். காலை 09.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை இந்த உடன் கடோலாவை Ski Himalayas Ropeway நிறுவனம் இயக்குகிறது. அனைவருக்கும் டிக்கெட் வாங்கி விட்டேன்.  உடன் கடோலாவில் பயணிக்கலாம் வாருங்கள்….. 


கம்பிகளில் தொங்கியபடி கேபிள் கார் பயணம்.....

போலாம் ரைட்..... தயாராக கேபிள் கார்....

மேலே சென்றபடியே காட்சிகளை கண்ணாடித் தடுப்புகள் வழியே பார்த்துக் கொள்ளுங்கள். மேலே ஒரு அற்புத அனுபவம் உங்களுக்காகக் காத்திருக்கிறது. என்ன அனுபவம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். 

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

14 comments:

 1. கடோலா அனுபவம் வித்தியாசமாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. அருமையான அனுபவம் ஜி!! நீங்கள் சொல்ல இருக்கும் அந்த அனுபவத்தைத் தெரிந்து கொள்ள ஆவல். படங்கள் அருமை வெங்கட்ஜி. தொடர்கிறோம்.

  கீதா: கேபிள் காரில் பயணித்த அனுபவம் உண்டு என்றாலும் அங்கு போகவில்லை. அது போல ZORBING மற்றும் QUADRIDE இதுவரை போனதில்லை...அது என்ன அனுபவம் ஜி??! காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு..

  ReplyDelete
  Replies
  1. Quadride மற்றும் Zorbing - குறிப்பாக Zorbing செல்லத் தயக்கம் - நம்ம உயரத்துக்கு அந்த பலூனுக்குள் இடம் இருக்குமோ என்று சந்தேகம்!

   Quadride செய்ததுண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. அட்டகாசமான பயணம்...
  அமர்களம்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 5. உடன்கடோலாவுல போகும் ஆசை வருதே சகோ

  ReplyDelete
  Replies
  1. வாய்ப்பு கிடைத்தால் சென்று வாருங்கள் சகோ....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. ஹரித்வாரில் சண்டி கோவில் மானசா கோவில் போன்ற இடங்களுக்குக் கேபிள் காரில் சென்ற அனுபவம் உண்டு இது வித்தியாசமானதா

  ReplyDelete
  Replies
  1. உடன் கடோலா வடக்கே பல இடங்களில் உண்டு - ஹரித்வார் உட்பட. வகைகள் மட்டுமல்ல, கிடைக்கும் காட்சிகளிலும் மாற்றமுண்டு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 7. உடன் கடோலாவைப் பார்த்த உடன் எனக்கு நமது பழனி மலையில் உள்ள Cable Car நினைவுக்கு வந்தது. அதில் பயணிக்கும் தூரம் குறைவு என்றாலும் முதன் முதல் பயணிக்கும் போது சற்று பயம் ஏற்பட்டது உண்மை. குறைந்த தூரம் பயணிக்கவே பயம் வரும்போது ஒன்றரை கிலோ மீட்டர் உடன் கடோலாவில் பயணம் செய்ய சிலருக்கு பயம் வந்ததில் வியப்பேதும் இல்லை.
  உங்களின் அடுத்த அனுபவத்தை அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....