எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 5, 2017

ஹனிமூன் தேசம் – பைரவர் தந்த பாடம் – காணாமல் போன மோதிரம்


ஹனிமூன் தேசம் – பகுதி 11

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிபடர்ந்த மலையும் இலைஇழந்த மரங்களும்சாலையோர மரங்களும், பனியும்....

சென்ற பகுதியில் பார்த்த அதே Gகுலாபா பகுதியில் தான் இன்னமும் பனியோடு விளையாடிக்கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்திலேயே வந்துவிட்டதால் அத்தனை சுற்றுலாப் பயணிகள் இல்லை. அப்போது தான் ஒவ்வொரு குழுவாக வர ஆரம்பித்திருந்தார்கள். நாங்கள் பனியில் விளையாடுவதோடு, இயற்கைச் சூழலையும் ரசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். இப்படி ஒரு இடத்தில், இப்படி குழுவாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வாய்ப்பு இனிமேல் எப்போது கிடைக்குமோ என்பதற்காக, எல்லோரையும் ஒன்றாக நிற்க வைத்து நான் புகைப்படம் எடுக்க, எனக்காக, என்னையும் சேர்த்து வேறு ஒருவர் புகைப்படம் எடுக்க, என ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவை.

பனியிலும் இலைகளோடு!பனிக்கட்டிகளை ஒருவர் மீது ஒருவர் போடுவதும், சாலையோரத்தில் மலைப்பகுதியில் ஓரிடத்தில் பனி உருகிக் கொட்டிக் கொண்டிருக்க, அதன் பின்புறம் சென்று புகைப்படம் எடுப்பதும் என ஜாலியாக இருந்தது. நண்பர் ஒருவரும் அவர் மனைவியும் விளையாடாமல் பார்த்துக் கொண்டிருக்க, நான் சும்மா இல்லாமல் கொஞ்சம் பனிக்கட்டியை எடுத்து நண்பரின் மனைவியிடம் கொடுத்து சும்மா அவர் மேலே போடுங்க என்று சொல்ல, அவர் வேகமாக அடிக்கவும் நண்பர் கையிலிருந்து புது அலைபேசி கீழே விழவும் சரியாக இருந்தது! அதுவும் அந்த அலைபேசி குழுவில் இருந்த வேறு ஒருவருடையது! நல்ல வேளை அலைபேசிக்கு ஒன்றும் ஆகவில்லை! வடிவேலு மாதிரி “உனக்கு இது தேவையா?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்!

பனி மூடிய அந்த மலையுச்சியில் கொஞ்சம் உட்கார்ந்து வரலாமா....

 உருகி ஓடிக்கொண்டிருக்கும் பனிநீர்!

மலைப்பாதையில் மேல் நோக்கி நடப்பதற்கு தனித்திறமை வேண்டும். கொஞ்சம் நடந்தாலே, பலருக்கும் மூச்சு வாங்க ஆரம்பித்துவிடும்! எங்கள் குழுவினரில் சிலரும் கொஞ்சம் நடந்த பிறகு, இதற்கு மேல் எங்களால் முடியாது என வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு நடக்க, நானும் இன்னும் சிலரும் மேலும் கொஞ்சம் தூரம் நடக்க ஆரம்பித்தோம் – மூச்சு வாங்கியபடியே தான். சாதாரண மலைப்பகுதியில் நடப்பதற்கே கஷ்டம் என்றால் இப்படி பனிப்பொழிவுள்ள மலைப்பகுதியில் நடப்பது இன்னும் அதிக கஷ்டம். ஆனால் இப்பகுதிகளில் எப்படி நடக்க வேண்டும் என்பதை எங்களுக்கு வெகு அழகாய்ச் சொல்லிக்கொடுத்தார் அங்கே கண்ட ஒரு பைரவர்.

பாடம் சொல்லிக்கொடுத்த பைரவர்!

எங்களுக்குப் பின்னாலிருந்து வேகவேகமாக நடந்து வந்து கொண்டிருந்த பைரவர் சில மீட்டர் தொலைவு நடந்த பிறகு திவ்யமாகப் படுத்துக் கொண்டு கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டார். அதன் பிறகு எழுந்து மீண்டும் கொஞ்சம் நடை. அதன் பிறகு மீண்டும் கொஞ்சம் ஓய்வு. இப்படித் தொடர்ந்து நடையும் ஓய்வும் எடுத்துக்கொண்டு நடந்தால், சிரமமாக இருக்காது என்பதை எங்களுக்குப் புரியவைத்தார் அந்த பைரவர்.  பைரவர் போல அந்த பனிபடர்ந்த சாலையில் படுத்துக்கொள்ள முடியாது என்றாலும் சாலையோரத் திண்ணைகளில் நிச்சயம் அமர்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் நடந்தால் மலைப்பாதையில் நடப்பதில் சிரமம் இருக்காது என்பது புரிந்தது.

பனி உருகி வீழ்ந்து கொண்டிருக்க, அதன் பின்புறத்தில் நான்!
இது எனக்கே கொஞ்சம் ஓவராத் தான் இருக்கு!

என்னதான் குளிர்கால உடை, கால்களுக்கு Gumboot போட்டிருந்தாலும், வீழ்ந்து கிடக்கும் பனிக்குள் நடந்தால் கால்கள் சில்லென்று ஆவதுடன், சில பனிக்கட்டிகள் Gumboot-க்குள் நுழைய தட்டுத்தடுமாறி அதைக் கழற்றி ஒற்றைக் கால் நடனம் ஆடியபடியே பனிக்கட்டிகளை வெளியே கொட்ட வேண்டியிருந்தது.  சாலையோரப் பாறை ஒன்றின் மேல் முழுவதும் பனிக்கட்டியாக இருக்க, அதன் மேல் நின்றுகொண்டு புகைப்படம் எடுக்கலாம்/எடுத்துக்கொள்ளலாம் என்று நுழைய இந்த அனுபவம். ஓரத்தில் நின்று புகைப்படம் எடுக்கும்போது, மனதுக்குள் ஒரு எண்ணம்…. இங்கிருந்து விழுந்துவிட்டால் என்ன ஆகும்? பனியில் சறுக்கியபடியே சென்று கீழே வாகனம் இருக்கும் சாலைக்கு செல்லமுடியுமா என்றும் தோன்றியது!

இப்படியே கீழே போனா பேருந்துக்குப் போகமுடியுமா என யோசித்தபோது....

பயணம் செய்யும் போது இந்த மாதிரி விளையாட்டு – வினையாக முடியும் விளையாட்டு தேவையே இல்லை என்று நினைத்தபடியே கீழே இறங்கினேன்.  அந்தப் பனிபடர்ந்த மலையில் சிறிது நேரம் இருந்த பிறகு, தேநீர் மட்டும் அருந்தி காலையில் புறப்பட்ட வயிறு – என்னையும் கொஞ்சம் கவனியேன் என்றது. சிலர் மட்டும் வாகனத்திற்கு ஏற்கனவே சென்றிருக்க, மீதி இருந்தவர்களுடன் நானும் வாகனம் நோக்கி கீழ் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தோம்.  எதிரே, எங்கள் குழுவினரில் ஒருவர் மட்டும் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  ஒரு வேளை எங்களைத் தேடித்தான் வந்தாரோ என நினைத்தால் இல்லை!

ஏலே... டைட்டானிக் பட ஹீரோன்னு நினைப்பா உனக்கு?

கைகளில் இருந்தால் மோதிரம் கழண்டு விழுந்து விடும் என ஒரு சிறிய டப்பாவில் போட்டு, அதை ஒரு பர்சில் போட்டு, அந்தப் பர்சை தனது குளிர்கால உடையில் வைத்திருந்தாராம். அது இப்போது அவரிடம் இல்லை! பனிப்பிரதேசத்தில் எங்கேயோ விழுந்துவிட்டது போலும். அதைத் தேடிக்கொண்டே தான் மேலே வந்திருக்கிறார்.  முதல் நாளே இரவு உணவு உண்ணும் இடத்தில் தொலைந்து போக, அதைத் தேடிக்கண்டுபிடித்தோம். இப்போது மீண்டும் தொலைந்துவிட்டது. அதுவும் பனிப்பொழிவு மிகுந்த இடத்தில் வீழ்ந்திருந்தால் அதைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினம். பனிக்குள் எங்கோ மூழ்கி இருந்தால், அது உருகி ஓடிய பின்னர் தான் கிடைக்கும்!

இங்கேயே இருந்துவிடலாமா?

தொலைத்த மோதிரத்தினைத் தேடி மீண்டும் ஒரு நடை நடந்து சென்றது தான் மிச்சம். அது கிடைக்கவே இல்லை. மீண்டும் அவரையும் அழைத்துக் கொண்டு வாகனம் நிறுத்திய இடத்திற்கு வந்தோம். கொஞ்சம் கஷ்டமாகி விட்டது. என்ன இருந்தாலும், சுற்றுலா வந்த இடத்தில் இப்படி எதையாவது இழந்துவிட்டால் மனதுக்குக் கஷ்டம் தானே.  வாகனத்தில் அமைதியாக திரும்பிக் கொண்டிருந்தோம். அடுத்ததாய் எங்கே சென்றோம், என்ன செய்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

28 comments:

 1. படங்களைப் பார்க்கையிலேயே உடல் சில்லிட்டுப் போகிறது ஐயா
  தங்களுக்க எப்படி இருந்திருக்கும்
  மறக்க முடியாத அனுபவம்தான்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. சுவாரஸ்யமான இடங்கள். எனக்கும் இது போன்ற பாதைகளை பார்க்கும்போது நிற்கும் இடம் நொறுங்கி விழுந்தால் என்ன ஆவது என்று தோன்றும் - அங்கு போகாமலே!

  தம இன்னும் சமிட் ஆகவில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. பைரவர் அழகு. அவர் சொல்லிக் கொடுத்த பாடமும் அழகு.

  ReplyDelete
  Replies
  1. பைரவர் கொழுக் மொழுக் என அழகு இல்லையா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. குளுகுளு படங்களுடன் ... பதிவைப் பற்றி என்ன சொல்ல!.. அருமை..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. ....ஆஹா படங்கள் கொள்ளை அழகு....ஜி. நானும் மகனும் பனி பந்து உருட்டி விளையாடினோம்...எங்கள் உடைகளுக்குள்ளே சென்று ...ஒரே சில் சில் ...திரும்பி வர மனதே இருக்காது....பனி உருகி வடிவது..அழகு..மீண்டும் போகணும் என்று ஆவல் வந்துவிட்டது ஜி.....தொடர்கிறோம் ஜி..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 6. ரொம்ப நல்லா இருக்கு. இதைப் படித்தவுடனே எனக்கு, நீங்கள் எப்போ பனிசூழ்ந்த இடங்களுக்குப் போனீங்கன்னு சந்தேகம் வந்தது. பார்த்தால், முந்தைய பகுதியைப் படிக்க விட்டிருக்கிறேன். படத்தைப் பார்க்கும்போதே, பனி மலையில் ஏறினால் என்ன என்று தோன்றியது..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 7. அழகான படங்கள் . மோதிரம் கிடைக்கவில்லை என்று அறிந்து வருத்தம், முன்பு தொலைந்து கிடைத்த போது மகிழ்ச்சியாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மோதிரம் தொலைந்ததில் எங்களுக்கும் வருத்தம் தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 8. வணக்கம். நான் ஸ்ரீநாத். எழுத்தாளன். ஜெமினி சினிமா ஸ்ரீநாத் என்று அழைப்பர். வயது 68. தற்சமயம் பாக்யராஜ் சாரின் பாக்யா பத்திக்கையில் இருக்கிறேன்.நம் வலைப்பூ நண்பர்களுக்கு உதவி செய்ய கடமைபட்டிருக்கிறேன். அன்புடன் ஸ்ரீநாத்.srrinath@ yahoo.com.

  ReplyDelete
  Replies
  1. தங்களது முதல் வருகையோ? மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி ஸ்ரீநாத் ஐயா.

   Delete
 9. நேரில் பார்ப்பது போன்று இருக்கின்றன தங்களது படங்களும் அதற்கான விளக்கங்களும். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 10. ஹா ஹா ஹா மிக அருமையான பனிப் படங்கள்.. நல்லதொரு சுற்றுலா.. எப்போதாவது இப்படிப் போகும் போது சந்தோசமே.. எப்பவும் இப்படி பனியும் மலையும்.. குளிரும் என இருக்கும் நம்மைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து பனிப்பிரதேசத்தில் இருப்பது கடினமான விஷயம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா...

   Delete
 11. கையில் இருந்தால் அருமையாக இருந்திருக்கும் மோதிரம், ஏனெனில் பனிகுளிருக்கு கை விரல்கள் வீங்கிடும், அப்போ விழுவதற்கு சான்ஸ் குறைவு, இது ஓவரா பத்திரப்படுத்த வெளிக்கிட்டமையாலேயே இப்படி ஆச்சு... சரி எல்லாம் நன்மைக்கே... இதுவும் கடந்து போகும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 12. எங்கும் எதிலும் கற்க முடியும் என்று தெரிவிக்கிறது உங்கள் அனுபவம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 13. உங்களுக்கே ஓவராக தெரிகிறதா ? ஹா... ஹா... ஹா... ஸூப்பர் ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 14. அருமை! அருமை!

  (அந்த குல்லா போட்ட யேசுநாதர் புகைப்படம் சூப்பர்!)

  ReplyDelete
  Replies
  1. குல்லா போட்ட யேசுநாதர் - ஹாஹா... பாவம் அவர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....