எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, April 29, 2017

ஆலமரமும் பனைமரமும் – படிப்பு – அப்போதும் இப்போதும்!

கொல்கத்தாவில் உள்ள பெரிய ஆலமரம்....


நேற்று திருப்பராய்த்துறை சென்றிருந்தோம். தமிழகம் வரும்போதெல்லாம் திருப்பராய்த்துறை செல்லாமல் இருப்பதில்லை. எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் இரண்டாமிடம் இந்த ஊருக்குத் தான்! முன்பெல்லாம் அகண்ட காவிரி குளியல், பராய்த்துறைநாதர் கோவில், பெரியம்மாவின் கையால் சாப்பாடு, திவ்யமான தூக்கம், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் என எப்போதுமே ரசிக்கும் ஊர் திருப்பராய்த்துறை. இப்போது காவிரியில் சொட்டு தண்ணியில்லை என்பதில் வருத்தம் தான் – அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக இருக்கிறது! நேற்று திருவரங்கத்திலிருந்து திருப்பராய்த்துறை சென்று நாள் முழுவதும் நிம்மதியாக, பணிச்சுமை பற்றிய கவலையின்றி இருந்து வந்தேன்.

பெரியம்மாவிற்கு இப்போது 78 வயது! இப்போதும் அவர் படித்த போது இருந்த செய்யுள்கள், பாடல்கள் என அனைத்துமே நினைவில் வைத்திருக்கிறார். அப்போதைய ஆசிரியர்கள் படிப்பு சொல்லித் தந்த விதம் அப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார். இப்போதெல்லாம் சொல்லிக் கொடுப்பது அந்த வருடம் தாண்டி குழந்தைகளுக்கு நினைவில் இருப்பதில்லை. வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை – அதுவும் சமச்சீர் வந்த பிறகு முதல் மூன்று மாதத்தில் படித்ததை அதன் பிறகு நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை! படிப்பின் தரம் குறைந்து கொண்டே வருகிறது என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

எங்கள் அனைவருக்குமே எழுத்தறிவித்தது பெரியம்மா தான். முதன் முதலில் நெய்வேலி தோட்டத்தில் மணல் பரப்பி, எங்கள் கைவிரலைப் பிடித்துக் கொண்டு “அ”, “எழுதச் சொல்லிக் கொடுத்ததே பெரியம்மா தான். கொஞ்சம் கோபம் அதிகம் வரும் என்றாலும், நல்லதை மட்டுமே சொல்லித் தந்தவர்/தருபவர்.  அவர் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர் பெயர் முதற்கொண்டு நினைவில் வைத்து அவர் சொல்லிக் கொடுக்கும் முறையையும் சொல்லிக் கொண்டிருந்தார். அவரது குரலில் சில செய்யுள்/பாடல்களை எனது அலைபேசியில் சேமித்துக் கொண்டேன். அப்படி சேமித்துக் கொண்ட ஒரு செய்யுள்/பாடல்....

ஆலமரத்திற்கும் பனைமரத்திற்கும் ஒரு ஒப்பீடு! பாருங்களேன் – எவ்வளவு எளிமையாக ஒப்பீடு செய்திருக்கிறார்கள். இந்தப் பாடல் நறுந்தொகை என்று தெரிகிறது – அதிவீரராமபாண்டியன் என்பவர் எழுதியது.

பனைமரம்:
தேம்படு பனையின் திரள் பழத்து ஒருவிதை
வானுற ஓங்கி வளம்பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழலாகாதே

பொருள்: சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது.

ஆலமரம்:

தெள்ளிய ஆலின் சிறுபழத்து ஒருவிதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவிஆள் பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே.

பொருள்: ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு கூடின மன்னர்க்கு நிழல் தரும்.

எத்தனை அர்த்தமுள்ள பாடல் பாருங்கள். இப்படி பேசிக் கொண்டிருந்த போது வெண்ணை எடுப்பதைக் கூட மஹாபாரதக் கதையோடு பிணைத்துச் சொன்ன ஒரு செய்யுள் சொன்னார். அது....

வானம் கடங்கடங்க,
மத்தளம் ஓசை கேட்க,
அர்ஜூனன் கையில் விழ,
த்ரௌபதி ஒதுங்கி நின்றாள்....

மோர் சிலுப்பும் வேளையில், மத்து பாத்திரத்துடன் மோதும் ஓசையும், சிலுப்பும் மோர் சிலுப்புபவர் கையில் தெறிக்க, வெண்ணை திரண்டு வரும் என்பதை இப்படிச் சொல்லுவார்களாம்!

இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டிருந்தார் பெரியம்மா. எத்தனை எத்தனை கதைகளும் விடுகதைகளும், புதிர்களும் இன்னமும் அவர்களுக்கு நினைவில் இருக்கிறது. இப்போது நமக்கு நேற்று படித்தது இன்று நினைவில் இருப்பதில்லை! சில சமயங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்னர் படித்ததைக்  கேட்டால் சொல்ல முடிவதில்லை. அப்படி இருக்கிறது நம் நிலை! இப்படி நிறைய விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. இத்தனைக்கும் நடுவே எங்களுக்கு உணவு தயாரிக்கும் வேலையிலும் பெரியம்மா ஈடுபட்டிருந்தார்.

எப்போதுமே பெரியம்மாவின் கைப்பக்குவம் மிகவும் நன்றாக இருக்கும். இப்போது தள்ளாமையில் அவ்வளவு நன்றாக சமைக்க முடியவில்லை என்றாலும், வெண்டக்காய் சாம்பார், ஈயச் சொம்பில் தக்காளி ரசம், ஃப்ரெஷ்ஷாக பறித்துக் கொணர்ந்த வாழைக்காய் பொரியல், அரிசி/உளுந்து அப்பளம் என சமைத்து விட்டார். நிம்மதியாக உண்டு, மடித்த மஞ்சம்என்று அழைக்கப்படும் ஆந்திரக் கட்டிலில் படுத்துறங்கி இரவு திருவரங்கம் வந்து சேர்ந்தோம்.

நாளை ஹனிமூன் தேசம் தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....32 comments:

 1. இடையிடையே சமைத்தார் என சாதாரணமாகச்
  சொல்லிவிட்டீர்கள்
  மிகப் பெரிய விருந்துச் சாப்பாடல்லவா அந்த வயதிலும்
  தளராது சமைத்திருக்கிறார்.
  (சமைத்துவிட்டார் என்பதை இயல்பாகவே நான்
  ஜமாய்த்துவிட்டார் எனப் படித்தேன் )

  செவிக்குணவும், வயிற்றுக் குணவும்
  நிச்ச்யம் உங்களுக்கு புத்துயிர் ஊட்டி இருக்கும்
  மிகக் குறிப்பாக மறக்காது வந்தமைக்காக
  உங்கள் பெரியம்மாவுக்கும்...

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் ஜி. பெரியம்மாவின் சமையல் எப்போதுமே நன்றாகவே இருக்கும். அன்புடன் அளிக்கும் போது இன்னும் சுவை கூடுதல் அல்லவா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. பெரியம்மாவின் நினைவுத்திறன் அசர வைக்கிறது...அவர்களுக்கு.எங்கள் வணக்கம்! பாடல்கள் அருமை...கேட்டிராத ஒன்று. இதை இத்தனை வருடங்கள் கழிந்தும் நினைவில் வைத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது...அன்புடன் வருவது எல்லாமே.அருமையான அமிர்தமான சாப்பாடுதானே...

  தொடர்கிறோம் ஜி

  ReplyDelete
  Replies
  1. அன்புடன் வருவது எல்லாமே, அருமையான அமிர்தமான சாப்பாடுதானே..... 100$ உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 3. இன்றைய மாணவர்கள் பொருள் அறியாமலே படிக்கின்றனர்
  அதனால் அவர்கள் என்ன படித்தாலும், எவ்வளவு மதிப்பெண்கள் வாங்கினாலும்,
  படித்த பாடங்கள் நினைவில் தங்குவதில்லை
  தங்கள் பெரியம்மாவின் நினைவாற்றல் வியக்கத்தான் வைக்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. இக்கால மாணவர்கள் கடமைக்கு படிக்கிறார்கள் என்பது உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 4. பெரியம்மாவுக்கு நமஸ்காரங்கள். இவ்வளவு தமிழ் எனக்கு வராது! கிராமத்துச் சூழ்நிலை என்றுமே ரசிக்கத்தக்கது.

  ReplyDelete
  Replies
  1. இவ்வளவு தமிழ் எனக்கு வராது! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 5. பெரியம்மாவை வணங்குகிறேன் எவ்வளவு நினைவாற்றல் ?

  ReplyDelete
  Replies
  1. அம்மா, பெரியம்மா இருவருக்குமே நினைவாற்றல் அதிகம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. கொடுத்து வைத்தவர் நீங்கள் ,இப்படி ஒரு பெரியம்மா எல்லோருக்கும் கிடைபதில்லையே :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 7. அருமையான செய்யுள் - படிக்கும்போது 'தில் மாங்கே மோர்' என்பது போலிருக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. ”யே தில் மாங்கே மோர்!” :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   Delete
 8. // அவர் படித்த போது இருந்த செய்யுள்கள், பாடல்கள் என அனைத்துமே நினைவில் வைத்திருக்கிறார். அப்போதைய ஆசிரியர்கள் படிப்பு சொல்லித் தந்த விதம் அப்படி என்று சொல்லிக் கொண்டிருந்தார்.//

  தங்களின் பெரியம்மா சொன்னது சரியே!
  அப்போது இருந்த ஆசிரியர்கள் கல்வி கற்பிப்பதை ஒரு கடமையாக நினைத்தார்கள். இப்போது அதை ‘கடமைக்காக’ செய்கிறார்கள் சிலர்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் - நிறையவே மாற்றங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 9. பெரியம்மாவின் நினைவுதிறன் வியக்க வைக்கிறது.
  படங்கள் அழகு.வறண்ட காவிரி வருத்தம். எப்போது மீண்டும் கரைபுர்ண்டு ஓடும் என்று நினைக்க வைக்கிறது. பெரியம்மாவின் உபசரிப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. பெரியம்மாவின் உபசரிப்பு என்றுமே இப்படித்தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 10. பனைமரம் ஆலமரம் அருமையான ஒப்பீடு. இரசித்தேன்.

  பனைமரத்தின் அற்புதமான பலன்களும் அனைவரும் அறிந்ததுதானே! கடவுளின் படைப்புகளில் குறையொன்றுமில்லை!

  கிராமங்களின் எளிய மனிதர்கள் தரும் புத்துணர்ச்சி அற்புதமான அனுபங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாண்டியன் சுப்ரமணியன் ஜி!

   Delete
 11. அன்பான பாசமான சொந்தங்கள் வரப்ரசாதம்! பெரியம்மாவுக்கு நமஸ்காரங்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.

   Delete
 12. wநமக்குப் பிடித்தமானவரைப் பற்றி சொல்வதில் சலிப்பு வராது. முன்பே பெரியம்மா பற்றியும் அவர் நினைவாற்றல் பற்றியும் பகிர்ந்திருக்கிறீர்கள் அன்புடன் சமைத்துக் கொடுப்பதாலேயே சுவை கூடுகிறது. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் வரிகளைப் படிக்கும் போது எனக்குள் அந்தவரிகள் நினைவுக்கு வரட்டுமா என்று கேட்பதுபோல் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   Delete
 13. பெரியம்மாவின் நினைவாற்றல் ஆச்சரியம் அளிக்கிறது. அழகாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு வணக்கங்கள்.

  கொல்கத்தா ஆலமரம் அழகு.

  ReplyDelete
  Replies
  1. கொல்கத்தா சென்ற போது எடுத்த படம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி!

   Delete
 15. மிக அருமை, அந்த ஆலமரம் இப்படி பரந்து நீள் கோட்டில் வளர்ந்திருக்கிறதே? ஆலமரம் எனில் வட்டமாக எல்லோ வளரும்?

  பெரியம்மாவின் பாடல்களும், அந்த ஊர் பற்றிய கதையும், காவிரி நதியும், சாப்பாடும் .. மடித்த மஞ்சமும் மனதைக் கொள்ளை கொண்டு விட்டது.

  ReplyDelete
  Replies
  1. மடித்த மஞ்சம் - எனக்குப் பிடித்தது! எப்போது அங்கே சென்றாலும் அதில் தான் படுக்கை - உயரம் குறைவாக இருந்தாலும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 16. அத்தை பாட்டிகள், பெரியம்மாக்கள் நமது சென்ற தலைமுறையின் அறிவுத்தலைவர்கள். அவர்களால் நாம் பெற்றது மிகுதி. அவர்களுக்கு நாம் கொடுத்தது குறைவே.

  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....