எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, April 18, 2017

மாதொருபாகன் – வாசிப்பனுபவம்குழந்தையின்மை என்பது மிகப்பெரிய கொடுமை என்று தான் இந்த சமூகம் நினைக்கிறது. அதுவும் திருமணம் நடந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே “என்ன ஒண்ணும் விசேஷம் இல்லையா?” என்ற கேள்விக்கணைகள் பெண்ணை நோக்கி வீசப்படுகின்றன. ஆண்களிடம் இந்த கேள்விகள் அவ்வளவாக எழுப்பப்படுவதில்லை என்பதல்ல. அவர்களிடம் கேட்டால் கொஞ்சம் சூடாகவே பதில் கிடைக்கும் என்ற பயம் இருக்கும். ஆனால் பல பெண்கள் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்ளும்போது அத்தனை சுலபமாக பதில் சொல்ல முடிவதில்லை.


ஒவ்வொரு முறை இந்த கேள்வி அவளை நோக்கி வீசப்படும்போதும் கிரிக்கெட் விளையாட்டில் வரும் பௌன்சர் பந்து போலவே எதிர்கொள்கிறாள். அப்பந்தை ஹூக் செய்து சிக்சர் அடிக்கும் திறன் பெரும்பாலான பெண்களிடம் இருப்பதில்லை.  மௌனமாகத் திரும்புகிறாள் அல்லது அவ்விடத்திலிருந்து விலகி வீடு வந்து கண்ணீர் வடிக்கிறாள். கேள்வி கேட்கும் எவருமே, தமது கேள்வி, கேட்கப்படுபவரை சோகமாக்குமே, அவரது மனதை புண்படுத்துமே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலையே செய்கிறார்கள்.

பல வீடுகளில் திருமணம் ஆன இரண்டு வருடம் வரை சும்மா இருந்தாலும், அதற்குப் பிறகு கல்யாணமான ஆணை வேறு திருமணம் செய்து கொள்ளத் தூண்டும் பெற்றோர்கள் நிறையவே.  ஆணுக்கும் குறை இருக்கலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு வருவதே இல்லை! ஏன் பெண்ணுக்கு மட்டுமே குறை இருக்க வேண்டுமா? அந்த ஆணுக்கு ஏதேனும் குறை இருக்கக்கூடாதா? இந்த எண்ணமே வருவதில்லை எவருக்கும். பெண்ணை மட்டுமே குறை சொல்வது தான் இங்கே பல இடங்களில் நடக்கிறது.

தமிழகத்தை விடுங்கள், வட இந்தியாவில் கடந்த 26 ஆண்டுகளாக வசிக்கும் எனக்கு, இங்கே இருக்கும் நடைமுறைகள் கொஞ்சம் தெரியும். எனக்குத் தெரிந்த ஒரு இளைஞர் – ஹரியானாவினைச் சேர்ந்தவர். அவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்தது. பெண் வீடு, ஆண் வீடு இருவருக்குமே தில்லியை அடுத்த குருகிராம் பகுதிகளில் நிலம் இருந்தது. அதனை விற்று கிடைத்த பணமே கோடிகளில்! திருமணத்திற்கு மணப்பெண் வீட்டிலிருந்து மணமகனுக்கு ஆடி கார் கொடுத்தார்கள்! [அதன் பெயர் கூட சொல்லத்தெரியாது – நான்கு வளையங்கள் முன்னால் இருக்குமே [சார் சல்லே வாலி] என்று ஹிந்தியில் சொல்லுவார் மணமகனின் தந்தை!]

திருமணம் முடிந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக, குழந்தை பிறந்தபாடில்லை. மணமக்கள் கொஞ்சம் தள்ளிப்போடலாம் என யோசனை செய்திருப்பார்களோ என்று கூட கேட்காமல், அந்தப் பையனுக்கு மீண்டும் பெண் பார்க்கும் படலம் துவங்கி விட்டார்கள். மருமகளை புண்படுத்தும்படியான வாசகங்கள் தினம் தினமும் சொல்லிக் கொண்டே இருக்க, அந்தப் பெண்ணும் எத்தனை நாள் பொறுமை காக்க முடியும்! ஆனாலும் பாவம் அந்தப் பெண் பொறுமையாகத் தான் இருந்திருக்கிறாள். அந்தப் பையனும் கொஞ்சம் பொறுங்கள் என்று சொன்னாலும் கேட்கவே இல்லை. பெண்ணை அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துவிட்டார்கள்.

ஹரியானா பகுதிகளில் கோர்ட், கேஸ் என்றெல்லாம் போவதில்லை. எந்த முடிவாக இருந்தாலும் பஞ்சாயத்து தான் முடிவு சொல்லும்! அதற்கென்று ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாயத்துக் காரர்கள் உண்டு. அவர்களை [khap]காப் பஞ்சாயத்து என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது தான் முடிவு. ஊரில் இருக்கும் பொறுக்கி ஏதாவது பெண்ணை கற்பழித்து விட்டால், ஆயிரம் ரூபாய் பஞ்சாயத்திற்கு கட்ட வேண்டும், பெண் வீட்டாருக்கு ஒரு மூட்டை கோதுமை தரவேண்டும் என்பது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள் சொல்வார்கள் இந்த காப் பஞ்சாயத்துக்காரர்கள்!

நல்ல வேளையாக காப் பஞ்சாயத்து அளவிற்குப் போகாமல், அந்த இளைஞன் தனது வீட்டினரிடம் கோபமாகப் பேசியதோடு, இரண்டு பேரும் சேர்ந்து மருத்துவரிடம் சோதனைகள் செய்து கொண்டு, சில மாதங்களுக்குப் பிறகு ஆண் குழந்தை பிறந்தது.  நல்ல வேளை அந்தப் பெண் தப்பித்தாள்! இப்போது அந்த இளைஞரின் பெற்றோர்கள், தனது வாரிசு என்று அந்தக் குழந்தையைக் கொஞ்சுகிறார்கள், தனது மருமகளையும் வாரிசு தந்தவள் என்று கொண்டாடுகிறார்கள். இருந்தாலும் அவள் பட்ட கஷ்டங்களை மறக்க முடியுமா அந்தப் பெண்ணால்!

குழந்தை இல்லை என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்து விடமுடியுமா? இப்போதெல்லாம் artificial insemination, test tube baby என்று பல விஷயங்கள் நடக்கிறது. விந்து வங்கி என்று, வேறு யாரிடமோ வீரியமுள்ள விந்து பெற்று, அதை வைத்து, செயற்கை முறை மூலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க வழி செய்யும் மருத்துவ முறைகளும் இப்போதெல்லாம் இருக்கிறது. கடைசியாகச் சொன்ன விஷயத்தினை ஏற்க மனம் ஒப்புவதில்லை.

சரி “மாதொருபாகன்” – திரு பெருமாள் முருகன் அவர்களின் புத்தகத்திற்கு வருகிறேன்.  காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த புத்தகம். சமீபத்தில் தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்தில் எடுத்துப் படித்த புத்தகம். மிகவும் சர்ச்சைக்குள்ளான புத்தகம் என்பதால் படிக்க நினைத்திருந்தேன். முன்னரே ஒரு முறை இந்தப் புத்தகத்தின் PDF வடிவம் கிடைத்தாலும், ஏனோ படிக்கவில்லை. இப்போது தான் புத்தகமாக படித்தேன். காளி மற்றும் பொன்னா ஆகிய இருவரைச் சுற்றிப் பின்னப்பட்ட ஒரு புதினம். குழந்தை இல்லாத குறையால் அவர்கள் இருவருக்கும் வறடன், வறடி என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது. 

பொன்னாள் படும் அவஸ்தை தான் எத்தனை எத்தனை. அவளைப் புண்படுத்தும் எத்தனை வார்த்தைகளைச் சமூகம் சுலபமாகச் சொல்லி விடுகிறது – அவள் மனது என்ன பாடுபடும் என்பதை உணர்ந்து கொள்ளாத சமூகம்! என்ன தான் குழந்தை இல்லாவிட்டாலும், அவர்கள் இருவருக்கும் இருந்த அன்னியோன்யம் மனதுக்குப் பிடித்திருந்தது. குழந்தை இல்லாவிட்டால் என்ன, இருவருமே ஒருவருக்கு மற்றவர் குழந்தை என்பது போல இருந்து கொண்டிருந்தார்கள்.  ஆனால், பல வருடங்கள் ஆனபிறகும், குழந்தை இல்லாத காரணத்தால், இரண்டு வீட்டினரும் சேர்ந்து எடுத்த ஒரு முடிவு – காளிக்கு விருப்பம் இல்லாத போதும், அவன் ஒத்துக்கொண்டதாக பொன்னாளிடம் பொய் சொல்லி அவளையும் அந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ள வைத்த கயமை.

என்னதான் புதினம் என்றாலும், ஒப்புக்கொள்ள முடியவில்லை. அதுவும் பிடிக்காத விஷயத்தினை பொய் சொல்லி ஒப்புக்கொள்ள வைப்பது எவ்வளவு கொடுமை. அதன் விளைவு எவ்வளவு கொடுமையானதான இருந்தது! அது என்ன விஷயம்? என்ன செய்தார்கள் என்பதை இங்கே சொல்ல முடியாது. ஆனால் இப்படியும் நடக்குமா என்று தெரிந்து கொள்ள திரு பெருமாள் முருகன் அவர்களின் “மாதொருபாகன்” புத்தகத்தினை படிக்கலாம்!

என்னைப் பொறுத்தவரை குழந்தை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக வருந்துவதை விட்டு, வேறு வழிகளில் மனதைத் திருப்பலாம். ஏதாவது குழந்தைகள் காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு வேண்டிய உதவியைச் செய்யலாம், தத்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை, தங்களால் முடிந்த அளவு இது போன்ற குழந்தைகளுக்கான செலவை ஏற்றுக்கொள்ளலாம், எப்போதெல்லாம் முடிகிறதோ, மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் அனாதை இல்லங்களுக்குச் சென்று அங்கிருக்கும் குழந்தைகளோடு நேரம் செலவிடலாம்.  இப்படி எல்லாம் சொல்வது சுலபம் என்றாலும், இதுவும் ஒரு விதத்தில் மனதுக்கு இதமானதாகவே இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. சமூகத்தில் உள்ளவர்களும், நம்மை சுற்றி இருப்பவர்களும் எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள் – அது நம்மை பாதிக்காமல் இருக்க பழகிக்கொள்வதே சிறந்தது.

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 comments:

 1. எனக்கும் pdf வந்தது. படித்ததில்லை, எனினும் சர்ச்சை எதனால் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அருமையாகச் சொல்லி இருக்கீங்க! குழந்தை இல்லைன்றதை சமூகம்தான் கவனிச்சுக்கிட்டே இருக்கு :-(

  நாங்கள் பெரிதும் மதிக்கும் ஒரு ஆன்மிகவாதி இப்படிச் சொன்னார். 'குழந்தை இல்லைன்னா... உங்க கர்மா தீர்ந்தது. உங்களுக்கு இனி மறு பிறவி இல்லை'

  இது உண்மைன்னு இப்ப ரொம்பவே தோணுது!

  ReplyDelete
  Replies
  1. சமூகம் கவனிச்சுக்கிட்டே இருக்கு! அது தான் பெரிய பிரச்சனையே. அடுத்தவர் வாழ்க்கையில் இவர்களுக்கு இருக்கும் பொய்யான அக்கறை :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 3. மனதை வேறு திசையில் திருப்பலாம்.

  எனக்குத் தெரிந்த சில தம்பதிகள் தத்து எடுத்து ஆனந்தமாய் இருக்கிறார்கள்.

  மனித இனம் காலங்காலமாய் பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டிருக்கிறது. இதுவும் இன்றைய நிலையில் ஏற்றுக் கொள்ளப்பட்டே வருகிறது பரவலாய். கொடுமைகளின் அளவு இப்போது குறைந்து வருவதாய் எனக்குத் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. நகரங்களில் கொஞ்சம் பரவாயில்லை. சிற்றூர்களில் இன்னமும் அதே நிலை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 4. தங்களது அனுபவத்தை பகிர்ந்த விதம் அருமை ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 5. அன்பு வெங்கட்,
  அவனோ மாதொருபாஜகன் .அவன் ஊரிலே இந்தக் கொடுமை.
  கதை எப்படி ஆகிறது என்பது வேறு விஷயம். ஆனால் இப்படியெல்லாம் நடக்க வேண்டுமா தேவையா என்ற யோசனை யாருமே செய்வதில்லையா.
  எங்கள் ஊரில் தத்துக் கொடுப்பது மிக சரளமாக நடக்கும். இரு வீட்டினரும் வரப் போக
  இருப்பார்கள்.
  உங்கள் எண்ணங்கள் புரிகிறது. இப்படி விந்து வங்கியில்
  கருவெடுத்துக் குழந்தை பெறுவது ஒரு கலக்கம் தான் நம் நாட்டைப் பொறுத்தவரை.
  ஆண்டவன் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது பதிவில் உங்கள் கருத்துரை. மிக்க நன்றி வல்லிம்மா....

   ஆண்டவன் அனைவருக்கும் அமைதியைக் கொடுக்கட்டும். அதே தான். பலருக்கும் இந்த அமைதி தான் இப்போதைய தேவை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

   Delete
 6. இயக்குனர் பார்த்திபன் அவர்களின் திரைப்படம் (பொண்டாட்டி தேவை) ஞாபகம் வந்தது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 7. ஒரு குழந்தையினைத் தத்து எடுத்துக் கொள்ளலாம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 8. நல்ல பகிர்வு. ஆதரவற்றோருக்கு உதவலாம். ஒரு குழந்தைக்கு ஆதரவாகத் தத்து எடுக்கவும் செய்யலாம். பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்களின் ஆசிர்வாதத்துடன் கடந்த சில வருடங்களில் எங்கள் குடும்பத்தில் நான்கு தத்துக் குழந்தைகள். தம்பதியரின் முடிவுக்கு உறுதுணையாக நின்று, எந்த வித்தியாசமும் காட்டாமல் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெரியவர்களுக்கும் வந்து விட்டால் இந்தப் பிரச்சனைகள் குறையும்.

  ReplyDelete
  Replies
  1. பெரியவர்களுக்கும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 9. பிள்ளைக இருந்தாலும் பிரச்சனை இல்லன்னாலும் பிரச்சனைன்னு தெரியும். ஆனா கதை எழுதினாலும் பிரச்சனை வரும்ன்னு இப்பதான் புரியுது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   Delete
 10. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  Tamil News

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   Delete
 11. பின்னணியுடன் புத்தகத்தைத் தொட்டுச் சென்றது கவர்ந்தது. அரசு ஆஸ்பத்திரிகளில், 'குழந்தைத் திருட்டு' நடப்பதற்கு நீங்கள் சொல்லிய சமூகக் காரணம்தான். அதுவும் கிராமங்களில் உள்ள சமூகம். நகரத்தில் அவன் அவன் பாட்டைப் பார்க்கவே அவனவனுக்கு நேரமில்லை.

  பொதுவாகவே குடும்பங்களில், ஒருவர் உயர்வது எல்லோருக்கும் பிடித்தமானதாக இருப்பதில்லை. அதனால், பிறர் குறைகளைச் சொல்லிக்காட்டுவது வழக்கம்தான்.

  ஆஸ்திரேலிய அரசாங்கம், மக்களை, மனமுவந்து தானம் தாருங்கள் என்று கேட்கிறது. (இலவசமாக.. தேவை என்று கேட்டால் மாத்திரம் டிரான்ஸ்போர்ட் உதவி. இதை பணம் பண்ணும் விதமாக நினைத்துவிடக்கூடாது, தேசத்துக்கு உதவும் விஷயமாக நினைக்கவேண்டும் என்பதால், தானம் தருபவர்களுக்கு பணம் தருவதில்லையாம்)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 12. மிக அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் வெங்கட்ஜி! அழகாக இப்போதைய நிகழ்வுகளையும் சொல்லி, மாதொருபாகனையும் சொன்ன விதம் அருமை. உங்கள் கருத்தையே வழி மொழிகிறோம். அதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லைதான்...

  கீதா: மேற் சொன்ன கருத்துடன்....பெருமாள் முருகன் நடந்ததாகச் சொல்லும் நிகழ்வுகள் ஆங்காங்கே நடந்திருக்கிறதுதான் என்றாலும் மனம் ஏற்க மறுக்கிறதுதான். ஆர்டிஃபிசியல் இன்செமினேஷன் என்பது ஒரு வேளை இயற்கை முறையில் கருத்தரிக்க முடியவில்லை என்றால் கணவனின் விந்தை மனவியின் கர்ப்பப்பையில் செலுத்திப் பெற வைப்பது, அல்லது டெஸ்ட் ட்யூப் பேபி என்பதையேனும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் விந்து வங்கி என்று ஏதோ ஒரு ஆணின் விந்தைப் பெற்றுக் குழந்தை பெறுவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அதைப் போன்றதுதான் மாதொருபாகனில் சொல்லப்பட்டிருப்பதும்...மாதொருபாகனில் இயற்கை முறை என்று இப்போது செயற்கை முறையில் ஏதோ ஒரு ஆணின் விந்து...என்றாலும் இதனை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறதுதான்.

  இவற்றாய் எல்லாவற்றையும் விட நீங்கள் சொல்லியிருப்பது போல் குழந்தை இல்லை என்றால் என்ன? வாழ்வே நலிந்துவிட்டதா என்ன? எவ்வளவோ வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன...

  பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள்....ஒரு சிலர் மட்டுமே இச்சமுதாயத்தைத் தைரியமாக எதிர்கொள்கின்றனர். மிக நல்ல பதிவு மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 13. படித்து இருக்கிறேன். மனதை கஷ்டபடுத்திய கதை.
  துளசி சொல்வது போல்தான் மகரிஷி சொல்வார்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 14. இந்த கதை சம்மந்தமாக பெருமாள் முருகனை வாய்க்கு வந்தபடி திட்டி நெறையவே சண்டை போட்டாச்சு. எதிர் கருத்துனு வந்துவிட்டால் பெரிய மனுஷன் சின்ன மனுஷனென்றெல்லாம் பார்ப்பதில்லை.

  எனிவே, என் பார்வையில் பொன்னாள் மனநிலையையோ, காளி மனநிலையையோ பார்ப்பது அர்த்தமற்றது.. அவர்களை தன் வசதிக்கு உருவாக்கி அவர்களை தன் இஷ்டப்படி ஆட்டிப் படைக்கும் பெருமாள் முருகன் மனநிலையைத்தான் என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அந்தாளு ஒரு எத்தனை பெரிய பர்வெட் என்பதை நீங்க அந்த "சாமி" வடிவத்தில் "பெருமாள் முருகனே" வந்து அந்த இருட்டில் பொன்னாளிடம் உறவுகொள்ளும் சம்யத்தில் தெளிவாகப் பார்க்கலாம். He has written in such a way that two lovers are willingly making love without any kind of guilty feeling or whatsoever at that moment.

  பொன்னாளை பெருமாள் முருகன் தன் வசதிக்காகப் "படைத்து" தன் இஷ்டம்போல் அவளுக்கு உதவுதாக, அவளை சமூகத்திடம் இருந்து காப்பாத்துவதாக கதை சொல்லி தன் இச்சையை தீர்க்கொண்டார் என்பதுதான் உண்மை.

  இதில் ஊர் உலகம் நம்மிடமிருந்ந்த மூடப் பழக்கவழக்கம், குழந்தை பெற இயலாதவர்களை அவமானப்படுத்தும் நம் போற்றும் நமது கலாச்சாரம் என்பதெல்லாம் ரண்டாவது குற்றவாளிகள்தான்.

  பெண்கள் பாவம். அதிலும் இக்கதையை மெச்சிப் புகழும் பெண்கள்..அவர்களுக்கு பெருமாள் முருகன் மனநிலையை கவனிக்கவோ கணிக்கவோ முடியவில்லை. நம்மைப் போல் ஒரு ஆம்பளைதான் பெருமாள் முருகனின் கைப்பொம்மை பொன்னாளை ஒதுக்கி வைத்துவிட்டு பெருமாள் முருகனை பிச்சு பிச்சுப் பார்த்து அவனை அடையாளம் காணமுடியும். பெண்களால் எப்படி முடியும்?

  பெண்ணோடு பிறந்து பெண்ணோடு வாழ்ந்து பெண் மனதை புரிந்து கொள்ளாமலே சாவபவந்தான் மனிதன் (க்ரிடிட் :கண்ணதாசனுக்கு). இதில் பெருமாள் முருகனும் விதிவிலக்கல்ல என்பது "பொன்னாளு"காக அழும் எத்தனை பேருக்கு புரிந்தது??

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வருண்.

   Delete
 15. நல்றலதொரு பகிர்வு.சிறப்பாக எழுதியிருக்கிரீர்கள். மாதொருபாகன் படிக்க வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

   Delete
 16. //சமூகத்தில் உள்ளவர்களும், நம்மை சுற்றி இருப்பவர்களும் எதையாவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள் – அது நம்மை பாதிக்காமல் இருக்க பழகிக்கொள்வதே சிறந்தது.//

  நீங்கள் சொல்வதை வழிமொழிகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 17. வித்தியாசமான பகிர்வு .....நானும் இந்த புத்தகத்தின் விமரிசனங்கள் மட்டும் படித்தேன் ...ஆனால் நாவல் வாசிக்கும் ஆவல் எழவில்லை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....