எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, April 14, 2017

ஆறடிக் கூந்தல் – பெண்ணுக்கு அழகா, ஆபத்தா?

பெண்களுக்கு ஆறடிக் கூந்தல்! இப்படிக் கற்பனையாகச் சொன்னாலும், நிஜத்தில் அவ்வளவு நீளமான கூந்தல் கொண்ட பெண்கள் வெகு சிலரே! சில பெண்களுக்கு முட்டி வரை கூந்தல் இருப்பதைக் கண்டு வியந்ததுண்டு. “எப்படித்தான் இதைப் பராமரிக்கிறார்களோ என்ற எண்ணமும் வருவதுண்டு! மாதத்துக்கு ஒரு முறையோ, 45 நாட்களுக்கு ஒரு முறையோ நாவிதரிடம் சென்று வளர்ந்திருக்கும் முடியை வெட்டிக்கொண்டு வராவிட்டால் ஏதோ தலைக்கு மேல் பல கிலோ எடை அதிகரித்திருப்பது போல உணரும் எனக்கு, இவ்வளவு முடி கொண்ட பெண்கள் பாவம், கஷ்டமா இருக்குமே என்று தோன்றும். 
அது சரி, இன்னிக்கு என்ன ஆச்சு, பெண்களின் கூந்தல் பற்றிய பதிவு எதற்கு? என்று உங்களுக்கு கேள்வி மனதில் தோன்றலாம்! நான் பார்த்த ஒரு குறும்படம்/விளம்பரம் தான் இந்தப் பதிவு எழுத முக்கிய காரணம். 

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்த வண்ணமே இருக்கிறது. ஆண்கள் மட்டுமல்ல, சில பெண்களுமே பெண்களுக்கு எதிராகத் தான் நடந்து கொள்கிறார்கள்.  எத்தனை பேர் உத்திரபிரதேசத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை.  அப்படி என்ன நடந்தது?

உத்திரப்பிரதேசத்தின் உண்டு உறைவிடப் பள்ளி அது. மொத்தம் 70 பெண்கள் அங்கே தங்கி படிக்கிறார்கள். அந்தப் பள்ளியின் முதல்வர், ரொம்பவும் கண்டிப்பானவராம். சமீபத்தில், அங்கே இருக்கும் கழிவறையில் ஒரு நாள் உதிரம் உறைந்திருக்க, எந்தப் பெண்ணுக்கு உதிரப்போக்கு இருக்கிறது, யார் இப்படி செய்து சுத்தம் செய்யாது போனது என்று தெரிந்து கொள்ள, அங்கே படிக்கும் அத்தனை பெண்களையும் நிர்வாணமாக்கி யாருக்கு உதிரப்போக்கு இருக்கிறது என்று சோதனை செய்தாராம். என்னவொரு கொடுமை! இத்தனைக்கும் அந்த உறைவிடப் பள்ளியின் முதல்வர் ஒரு பெண்மணி…. 

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும், பள்ளியின் முதல்வரை தற்காலப் பணிநீக்கம் செய்திருக்கிறார்கள். நான் கண்டிப்பானவள் என்பதால், எனக்கு எதிராக திட்டமிடப்பட்ட சதி என்று அந்த முதல்வர் சொல்கிறார்.  பள்ளியில் படித்த பெண்களில் பாதிக்கும் மேல் அவரவர் வீட்டுக்குத் திரும்பிச் சென்று விட்டார்கள். அவர்கள் இனிமேல் படிக்க வருவார்களா என்பது சந்தேகம் தான். இது உண்மையாக நடந்திருந்தால் இதைவிடக் கொடுமையான விஷயம் இருக்க முடியாது…… 

ஆண்களால் பெண்களுக்கு நேரும் தொல்லைகளே கணக்கிலடங்காமல் இருக்க, இப்படிச் சில பெண்களாலும் பெண்களுக்குப் பிரச்சனை தான். தமிழகம் தாண்டி இங்கே வந்த பிறகு வடக்கே நான் பார்த்த ஒரு விஷயம், எந்த ஒரு பெண்ணுக்குமே இங்கே மரியாதை இல்லை என்பது தான். பெரும்பாலான ஆண்கள், குறிப்பாக உத்திரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் ஏனோ பெண்களை ஒரு பொருட்டாக மதிப்பதே இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. பல குற்றங்கள் வெளியே சொல்லப்படுவதே இல்லை! குற்றம் இழைக்கப்பட்ட பெண், அந்தக் கொடுமையை, தனக்குள்ளே வைத்து வைத்து வெம்பி வெம்பியே சாகிறார்…..  உயிரோடு இருந்தாலும், உயிரில்லாத ஜடம் போலவே வாழ்கிறார். 

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி – அது சரியானதா, தவறானதா என்ற பிரச்சனையை விடுங்கள் – கேள்விப்பட்டதுண்டா? அது – When Rape is inevitable, lie back and enjoy it! அதாவது உங்களை ஒருவர் கற்பழிக்க முயலும்போது, அதை உங்களால் தடுக்கமுடியாது என்று தெரிந்த பிறகு, அதைப் பற்றி கவலைகொள்ளாது, அந்த அனுபவத்தினை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள்! இப்படி இருக்க எந்தப் பெண்ணாலும் முடியுமா என்பது சந்தேகமே….

சரி, நான் பார்த்த காணொளி விஷயத்திற்கு வருகிறேன்.  அந்தக் காணொளி வங்க மொழியில் இருக்கின்ற ஒரு காணொளி! அட நம்ம பக்கத்து ஊர் பாஷையே நமக்குத் தகராறு, இதுல வங்க மொழிப் படமா? என்று பயப்பட வேண்டாம். கீழே சப்டைட்டில் உண்டு! அது இல்லாமலும் கூட உங்களால் புரிந்து கொள்ள முடியும். 

ஒரு பெண் – நீண்ட கூந்தலை உடைய பெண். அழகு நிலையத்திற்கு வருகிறார். அங்கே இருக்கும் பணிப்பெண்ணிடம் கூந்தலை வெட்டி, சிறியதாக்கச் சொல்கிறார். உங்க முடி, நீளமாக, அழகாக இருக்கிறது, கொஞ்சமா ட்ரிம் பண்ணிடறேன் என்று பணிப்பெண் சொல்ல, இல்லை இல்லை, சின்னதாக வெட்டிவிடு, என்று சொல்கிறார் அந்தப் பெண்.  கொஞ்சம் கொஞ்சம் என வெட்டிய பிறகு, அந்தப் பணிப்பெண் போதுமா எனக் கேட்கும்போதெல்லாம், இன்னும் சின்னதாக்கச் சொல்கிறார் அந்தப் பெண்…  ஏன் இப்படி என்று அதிர்ச்சியுடன் நாம் பார்க்க, மீதி இருக்கும் தன் தலைமுடியைக் கைகளால் பிடித்து, இன்னும் சின்னதாக ஆக்கு என்று பீறிட்டு அழுதபடியே சொல்கிறார்……  அப்படி என்னதான் சொல்கிறார் என்று பாருங்களேன்…..


Jui எனும் கூந்தல் எண்ணை தயாரிப்பாளர்கள் தயாரித்த விளம்பர/குறும் படம் இது. கடைசியில் அந்தப் பெண்மணி தன் தலைமுடியைப் பிடித்தபடி, இன்னும் சின்னதாக்கச் சொல்லும்போது உங்களுக்கும் நிச்சயம் மனது துடிக்கும், கண்ணீர் பெருகும்…..  அப்போது வரும் வாக்கியம் – Hair, the pride of a woman – Let it never be the reason for her weakness சாலப் பொருத்தமானது….. 

ஒவ்வொரு குழந்தைக்கும், சரியான வளர்ப்பு முறை தேவை – தங்களது குழந்தைகளை, ஆண், பெண் இருபாலருக்கும், பெற்றோர்களின் சரியான அறிவுரை சொல்லி வளர்ப்பது தான் இந்த மாதிரி பிரச்சனைகளுக்குத் தீர்வு தர முடியும். தனது ஆண் குழந்தைகளுக்கு, பெண்களை மதிக்கக் கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளுக்கும் அவர்களது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்துடன் வளர்க்க வேண்டும்.  எத்தனை எத்தனை காலமாக இப்படியே இருந்து கொண்டிருக்கப் போகிறோம்….

நாளை வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

32 comments:

 1. ஆண், பெண் இருபாலருக்கும், பெற்றோர்களின் சரியான அறிவுரை சொல்லி வளர்ப்பதுதான் சரியான முடிவாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 3. பெண்களின் நிலை இன்னமும் இப்படி இருக்கையில்... சிலர் பெண்கள் முன்னேறி விட்டார்கள் இன்னும் எதற்கு அவர்களுக்கு சலுகைகள் என்று பேசிவருகிறார்கள்... என்ன செய்வது... நாம் பார்க்கும் ஒரு சிலரை வைத்து ஒட்டுமொத்தப் பெண்களையும் எடைபோட்டுவிடக்கூடாது.. உள்ளுக்குள் புழுங்கும் மன வேதனையை எத்தனைப் பேரால் உணரமுடியும்.. சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி வெங்கட். காணொளி பார்க்கமுடியவில்லை.. முடியும்போது பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முடிந்தால் காணொளியும் பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 4. புரிகிறது... வேதனை தரும் காணொளி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. வேதனையான விடயம் ஜி

  ReplyDelete
  Replies
  1. வேதனையே தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 6. When Rape is inevitable, lie back and enjoy it!இந்த ஆங்கிலப் பழமொழியை சொல்லித்தான் ஒரு நீதிபதி அதிக கண்டனத்துக்கு ஆளானார் :)

  ReplyDelete
  Replies
  1. அவருக்கென்ன சொல்லி விட்டார்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. நீளமான கூந்தலைப் பராமரிப்பது இக்காலத்தில் கடினமே. ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தன்னை விட நீண்ட கூந்தல் உடையவளைக் கண்டால் பெருமூச்சு விடுவதும் உண்மையே. இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் அன்றாடம் பார்க்கிறேன். இறைவனே கூந்தலுக்காகத்தானே நக்கீரனோடு விளையாட வந்தார்! நல்ல பதிவு.

  - இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. இறைவனே கூந்தலுக்காகத்தானே நக்கீரனோடு விளையாட வந்தார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   Delete
 8. உண்மைதான், சில விஷயங்களில் ஆண்கள் எதிரி, பல விஷயங்களில் பெண்களே பெண்ணுக்கு எதிரி. அந்த ஹொஸ்டல் சம்பவம் நம்பமுடியவில்லை. எல்லாப் பெண்களும் சேர்ந்து அந்த மேட்டனை ஒரு கை பார்த்திருக்கலாம் அதை விட்டுப்போட்டு ஏன் இப்படி.. தெரியல்ல.

  ஆங்கிலப் பழமொழிக்கு என் வன்மையான கண்டனங்கள்.. நிட்சயமாக எவராலும் முடியாது.

  இந்தக் காலத்தில் கூந்தல் நீளமாக இருப்பின் பட்டிக்காடு:) எனும் நிலைமை உருவாகி வருகிறது...

  அஞ்சாம் நம்பர்:) பஸ்லில் ஏறி வந்தேன்:)

  ReplyDelete
  Replies
  1. கூந்தல் நீளமாக இருப்பின் பட்டிக்காடு!......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 9. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 10. ஆங்கிலப் பழமொழி என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பதை காந்தி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் Advise ஆகச் சொன்னார்.

  ReplyDelete
  Replies
  1. மேலதிகத் தகவல்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் ஜி!

   Delete
  2. திரு நெ.த. சொல்லி இருப்பது தான் நான் கேள்விப் பட்டதும்! :( அவர் முன்னாடி சொல்லிட்டார். :)

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 11. Let it never be the reason for her weakness..! நச் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

   Delete
 12. ம்ம்ம்ம்ம், நல்ல கருத்துள்ள படம் தான்! வேதனையைத் தரும் விஷயமும் கூட! ஆனால் சலுகைகள் தொடர்ந்து அளிப்பதால் மட்டும் பெண் விடுதலை என்பது வந்து விடாது. ஆணுக்கோ, பெண்ணுக்கோ மனம் மாறி வன்முறையைக் கைவிடணும். :(

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 13. என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறேன் ஐயா. தங்களின் இப்பதிவு எனக்கு சிந்திக்கவும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தி விட்டது.இப்பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து உள்ளேன்.
  ஒவ்வொருவரும் அறிய வேண்டிய கருத்துக்கள் என்பதால் தங்களது இப்பதிவின் முகவரியை மட்டும் பகிர்ந்து உள்ளேன் ஐயா.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் முகநூல் பக்கத்தில் எனது பதிவினை பகிர்ந்து கொண்டது அறிந்து மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம்.

   Delete
 14. அந்த பெண் கடைசியில் சொன்ன சொற்கள் மனதை என்னவோ செய்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. ஜி அருமையான பதிவு! வேதனையும் கூட!


  கீதா: முடி ஒரு பெண்ணின் வீக்னெஸிற்குக் காரணம் என்ற ஒரு மனப்பான்மை எனக்கும் பல சமயங்களில் எழுந்ததுண்டு ஜி! மனதை வேதனைப்பட வைத்த காணோளி. பதிவு அருமை! பெற்றோரின் வளர்ப்பில்தான் இருக்கிறது! உங்கள் இறுதி பாராவை வழிமொழிகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....