திங்கள், 10 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – பனிச்சிகரத்தின் மேல் – Solang Valley

ஹனிமூன் தேசம் – பகுதி 14

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


இங்கே வந்ததன் நினைவாக இங்கே புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்!
 


உடன் கடோலாவில் பயணித்தபோது எடுத்த புகைப்படம் - கீழே முழுவதும் உறைந்திருக்கும் பனி......

ஆளுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்து உடன் கடோலா டிக்கெட் வாங்கி எங்கள் முறைக்காக காத்திருந்த சமயத்தில் அங்கே காத்திருந்த சில குழந்தைகளின் விளையாட்டை புகைப்படம் எடுப்பதும், குழுவில் இருப்பவர்களிடம் பேசுவதிலும் கழித்தபடியே வரிசையில் முன்னேறினோம். இதோ எங்களுக்கான பெட்டி வந்து விட்டது! ஒரு பெட்டியில்/கூண்டில் ஆறு பேர் தான் பயணிக்க முடியும்! உள்ளே அனைவரையும் உட்கார வைத்து, கதவை நன்கு மூடி, பாதுகாப்பு சோதனைகள் முடித்து, கைகட்டைவிரலை உயர்த்தி All Clear Signal தர கூண்டு நகர்கிறது. அனைவரும் ஒரே பெட்டியில் இருக்க ஆசைப்பட்டாலும் அது முடியாது.


உறைந்திருக்கும் பனி - இன்னுமொரு புகைப்படம்....


உயரத்தில் இருந்து பார்க்க, கீழே உறைந்திருந்த பனியில் இருந்தவர்கள் சின்னச் சின்னதாய் தெரியும் காட்சி

குழுவினர் இரண்டு கூண்டுகளில் முழுவதும் இருக்க, இரண்டு பேர் மட்டும் வேறு சிலரோடு மூன்றாவது கூண்டில்! கொஞ்சம் கொஞ்சமாக கூண்டு மேல் நோக்கி, பனிமூடிய சிகரங்களை நோக்கி நகர கூண்டுக்குக் கீழே பாதாளம். சில இடங்களில் ஐந்நூறு மீட்டருக்கு மேல் பள்ளம் என்று தெரிய, சிலருக்கு நடுக்கம். நானோ, கண்ணாடித் தடுப்பு வழியாக கீழே இருக்கும் சிகரம் முழுவதும் பனிபடர்ந்திருப்பதை புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே, ரசித்தபடி பயணித்தேன்.  சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நடுநடுவில் நின்று நின்று சுற்றிலும் பார்த்து ரசித்தபடியே பயணித்தது ஒரு சுகானுபவம்.  ஏற்கனவே இம்மாதிரி உடன் கடோலாவில் பயணித்திருந்தாலும், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம்.


உடன் கடோலாவிருந்து இன்னுமொரு புகைப்படம்....


இதோ இறங்குமிடம் வரப்போகிறது.....  பார்வை படும் இடமெல்லாம் பனி.....

சண்டிகரை அடுத்த Timber Trail எனும் இடத்திலும் இப்படி உடன் கடோலாவில் சென்றதுண்டு. அங்கே முழுவதும் காடு, கிடுகிடு பள்ளத்தில் நீரோட்டம் என்றால் இங்கே முழுவதும் பனி – எங்கும் பனி. எதிலும் பனி! உடன் கடோலா செல்லும் கம்பித்தடங்களை தாங்கிப் பிடித்திருக்கும் இரும்புத் தூண்கள் கூட பனிச்சிகரங்களில் தான் பதிந்திருக்கிறது! ஒரு வழியாக உடன் கடோலாவில் பயணித்து அங்கிருந்து வெளியே வந்தால் – வாவ்…..  எங்குப் பார்த்தாலும் பனி – சிகரம் முழுவதும் பனி கொட்டி இருக்க, அந்தப் பனியின் மீது தான் நாம் நடந்து கொண்டிருக்கிறோம்.


விளையாடலாம் வாங்க! எதற்கு இந்த தயக்கம்! இதோ உறைபனி கொட்டிக்கிடக்கு.... எடுத்து யார் மீதாவது வீசுங்களேன்!


கண்களுக்கு நிறைவாய் ஒரு காட்சி!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பனி, பனி, பனி! பனியைத் தவிர வேறொன்றுமில்லை. பனிச்சிகரத்தின் மீது நடப்பது கொஞ்சம் சவாலான விஷயம். அணிந்திருந்த Sports Shoe இங்கே பயன்தராது. காலையில் வாடகைக்கு எடுத்த Gumboot-ஐ வாகனத்திலேயே கழற்றி வைத்துவிட்டேன் – குளிர்கால உடையையும்! ஒரு சிலர் நாங்கள், பனிச்சிகரத்தினைப் பார்த்தபடி ஆங்காங்கே இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறோம் எனச் சொல்ல, நானும் வேறு சிலரும் மட்டும் பனியில் நடக்க நினைத்தோம்.  சிகரத்திலும் Gumboot வாடகைக்குக் கிடைக்க, அதை வாங்கி அணிந்து கொண்டு பனியில் நடந்தோம்.


இன்னும் இன்னும்.... எடுக்க எடுக்க திகட்டாத காட்சிகள்!


 காட்சிகள் - மனதை விட்டு அகலாத காட்சிகள்....


இப்படித்தான் அடிமேல் அடி எடுத்து நடக்கணும்!

என்னதான் தில்லாக நடந்தாலும், பல இடங்களில் பனியில் சறுக்கி விழுந்து விடுவோமோ என்று தோன்றியது. ஒரு இடத்தில் தடுமாறி கையைக் கீழே வைத்து தப்பிக்க, கை பனிக்குள் சென்றது! கையை வெளியே எடுக்கும்போது பனிக்கட்டிக்குக் கீழே இருந்த மண் எல்லாம் சேறாக கையில்! நண்பர் ஒருவர் மட்டும் மலைச்சிகரத்திற்கு மேல் நடந்து கொண்டே இருக்கிறார். நானும், நண்பர்களின் இரண்டு பெண்களும் மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறுகிறோம்.  அப்படி நடந்து சென்றது மிகவும் பிடித்திருந்தது. கீழே வர கொஞ்சம் கூட மனதில்லை. அப்படியே பனியில் இருக்கலாம் என்றால், Gumboot தாண்டி கால்கள் சில்லிட ஆரம்பித்திருந்தது. 


இந்தப் படம் போதுமா.... இன்னும் கொஞ்சம் வேணுமா.....


மேகம் தொட்டு விடும் தூரம் தான்... தொடலாமா.....

பனிச்சிகரத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கிறார்கள்.  பனியில் அமர்ந்து தன் நிலை மறந்து சறுக்கி விளையாடுகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டிகளை தூக்கி வீசி மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். பல ஹனிமூன் ஜோடிகளையும் பார்க்க முடிந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டாலும், ஏனோ திருப்தி பல ஜோடிகளுக்கு இல்லை! கையில் கேமராவுடன் இருக்கும் எனைப் பார்த்து ஒரு புகைப்படம் எடுத்துத் தர முடியுமா எனக் கேட்ட ஜோடிகள் சில உண்டு. என் கேமராவில் எடுக்காமல், அவர்களது கேமராவிலேயே எடுத்துத் தர அவர்களுக்கும் மகிழ்ச்சி – வாழ்நாள் முழுவதும் அந்தப் புகைப்படத்தினை அவர்கள் ரசிக்க முடியுமே என்பதில் எனக்கும் மகிழ்ச்சி!


பனிச்சிகரத்தில் மகிழ்ந்திருக்கும் மக்கள் கூட்டம்......

கொஞ்சம் நேரத்தில் கீழே அமர்ந்திருந்தவர்கள் எங்களை நோக்கி கையசைத்து கீழே வரச் சொல்ல மனதில்லாமல் கீழே இறங்கினோம். அந்தப் பனிச்சிகரம் பகுதியில் ஒரு உழைப்பாளி பனியிலேயே அழகாய் உட்கார இடம் அமைத்து அதன் சுற்றிலும் கலரில் Welcome to Solang Valley, Kullu Manali, Happy Tour என ஒரு இடத்திலும், அதன் பக்கத்திலேயே இதய வடிவில் “Hum Saath Saath Hai, Honey Moon, I Love You” என்றும் அழகாய் வடிவமைத்து அங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் அந்த அமைப்பினை பின்புலமாக வைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார்!


உழைப்பாளி! பனியைச் சேர்த்து நினைவுப்படம் எடுக்க வசதி!


ஹனிமூன்/காதல் ஜோடிகளுக்கான ஒரு பின்புலம்!

எல்லோரும் அப்படி புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.  எங்கள் குழுவினரும்! அதற்கு அந்த உழைப்பாளிக்குக் காசு கொடுக்க வேண்டும்! நூறு ரூபாய் கொடுத்தால் புகைப்படங்கள் – எத்தனை வேண்டுமானாலும் உங்கள் கேமராவில் எடுத்துக் கொடுப்பார்! எங்கள் குழு கொஞ்சம் பெரியது! என்பதால் நாங்கள் இருநூறு ரூபாய் கொடுத்தோம். இதய வடிவ அமைப்பின் அருகே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஜோடிகளுக்கு, ஒருவர் மற்றவருக்கு பூ கொடுப்பது போலவும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வசதி உண்டு! அங்கே வந்திருந்த ஒரு சர்தார்ஜி ஹனிமூன் தம்பதியை நான் புகைப்படம் எடுத்துத் தந்தேன்! எங்கள் குழுவினரையும் மொத்தமாக புகைப்படம் எடுத்தேன்!


கீழே வர மனதே இல்லாது உடன் கடோலாவில் கீழ் நோக்கித் திரும்பியபோது......

மனித மனது இருக்கிறதே, அதற்கு எத்தனை கிடைத்தாலும் திருப்தி இருப்பதில்லை. எத்தனை நேரம் அங்கிருந்தாலும் போதாது போலவும், அலுப்பே இல்லாமலும் இருந்திருக்கிறோம். கீழே வாகனத்தில் ஜோதி மட்டுமல்லாது சக பயணி ஒருவரும் காத்திருப்பாரே என்ற எண்ணத்தில் கீழே இறங்க மனதே இல்லாது தான் அங்கிருந்து புறப்பட்டோம்… அலைபேசி அடித்தது கூட எங்களுக்குத் தெரியவில்லை! கீழே காத்திருந்தவர் தான் இரண்டு மூன்று முறை அழைத்திருக்கிறார்! மீண்டும் உடன் கடோலாவில் பயணித்து கீழே வர, அங்கே எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது! அது என்ன என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 கருத்துகள்:

 1. ஆகா
  படங்களைப் பார்த்துப் பார்த்து கண்ணும் மனதும் குளிர்ந்து விட்டது ஐயா
  இதற்கு மேலும் இன்ப அதிர்ச்சியா
  காத்திருக்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. குல்லு மணாலியா? நான் குலு மணாலி என்று சொல்லிப் பழக்கம்.

  மேலேயிருந்து கீழே பார்த்தால் எனக்கும் மயக்கம் வரும். அது சமீபத்திய வழக்கம் ஆகி விட்டது!

  எத்தனை படங்களில் இந்த இடங்களைப் பார்த்திருக்கிறோம்? குறிப்பாக ஹிந்திப் படங்களில்?

  பனியில் நடக்கும்போது யானை பிடிக்கும் பள்ளம் போல பெரிய பாதாளங்களைப் பனிமூடி அதில் காலை வைத்து உள்ளே விழுந்து விடுவோமோ என்கிற பயம் இல்லையா? எனக்கு அப்படித் தோன்றும்!!

  கீழே என்ன இன்ப அதிர்ச்சி என்று அறியக் காத்திருக்கிறேன். தம இன்னும் சப்மிட் ஆகவில்லை.

  பதிலளிநீக்கு
 3. குலூ மணாலி! இங்கே பல ஹிந்தி படங்கள் எடுத்ததுண்டு. க்ரிஷ் [ஹ்ரித்திக் ரோஷன்] கூட இங்கே எடுத்தார்கள். தொடரின் ஒரு பகுதியில் அப்படத்தில் இருந்த வீடு கூட படம் போட்டிருந்தேன்.

  பனியில் யானை பிடிக்கும் பள்ளங்கள்! :)

  த.ம. - அது என் தளத்தில் சில நாட்களாக ரொம்பவே பிரச்சனை பண்ணுகிறது! கண்டு கொள்வதில்லை!

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 4. அடிக்கிற வெயிலுக்கு படங்கள் ரொம்பவும் இதம்...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. காணக் கண்கொள்ளாக் காட்சி! ரோஜா படத்தில் பார்த்தத்துண்டு. இன்னும் சில படங்களில்....படங்கள் சூப்பர் வெங்கட்ஜி!! தொடர்கிறோம் உங்கள் இன்ப அதிர்ச்சி என்ன என்று தெரிந்து கொள்வதற்கு

  கீதா: ஆஹா! மீண்டும் அங்கு சென்ற நினைவு. பல வருடங்களுக்கு முன் பனியில் விளையாடி என்று அப்போது நான் பனி மலைகளைக் கிளிக்கித் தள்ளிவிட்டேன். ஆனால் கேமரா எங்களுடையது அல்ல மட்டுமின்றி டிஜிட்டலும் அல்ல. நண்பர் ஒருவருடையதை வாங்கி வந்திருந்தோம்,..அந்தப் படங்களின் ப்ரின்ட் இப்போதும் வீட்டில் உள்ளது.

  2008 ல் சென்ற போது எடுத்த படங்கள் எங்கள் கேமரா ஸோ படங்கள் நிறைய எடுத்து வைத்தேன்...அருமையாக இருக்கிறது ஜி. நானும் கம் பூட்ஸ் குளிர் உடைஎல்லாம் கழற்றி வைத்துவிட்டேன். ஏனோ அத்தனை வேண்டியிருந்தது போல் இல்லை. பனியில் நடக்க பூட்ஸ் வேண்டும்....கைக்கு க்ளொவ் பனியை எடுத்து விளையாட வேண்டும்தான். அப்புறம் வண்டிக்குச் சென்று கம் பூட்ஸ் க்ளவ் மட்டும் போட்டுக் கொண்டேன் குளிர் உடை போட்டுக்கொள்ளவே இல்லை...பூட்ஸ் போட்டாலும் காலில் பனி ஏறியது....நல்ல த்ரில் அனுபவம் ஜி...உங்கள் கடோலா அனுபவமும் அப்படித்தான் தெரிகிறது...உங்கள் இன்ப அதிர்ச்சி என்னவோ? ஆவல் மேலிடுகிறது. தொடர்கிறோம்...ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒவ்வொரு பகுதியும் தங்களது பயண நினைவுகளை மீட்டெடுப்பது தெரிந்து மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. இங்கு ஒரே வெயில் அடித்துக் கொளுத்துகிறது. பனியைப் பார்த்ததும் ஆகா போகமாட்டோமா என்று இருக்கிறது...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தலைநகரிலும் இப்போது நல்ல வெயில் தான்! போக ஆசையிருந்தாலும் போக முடியாது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 7. மிக அருமை படங்களும் வர்ணனையும், பனியில் நிற்கும்போது குளிர் த்ர்ரியாது, பின்பு வீட்டுக்குள் வந்ததும்தான் fever வந்தது போல இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா....

   நீக்கு
 8. பனி படர்ந்த காட்சிகளை படம் எடுத்து பகிர்ந்த உங்களுக்கு நன்றி! நான் குல்மார்க் சென்றபோது பனியில் வழுக்கி தடுமாறியது நினைவுக்கு வருகிறது தங்களின் பதிவைப் படிக்கும்போது. அந்த இன்ப அதிர்ச்சி என்ன என்று அறியக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 9. அற்புதமான படங்கள்,பகிர்வுக்கும் நன்றி
  Tamil News | Latest News | Business News

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   நீக்கு
 10. குலு மணாலி போனபோது ஜுரத்தில் விழுந்துவிட்டேன். உட்டன் கட்டோலா வில் பயணிக்க முடியாமல் போனது.ஆனால் ஹரித்வாரில் போயிருக்கிறேன். பாலக்காடு மலம்புழாவிலும் போயிருக்கிறேன். யாருக்கு எதுவோ அதுதானே கிடைக்கும் நண்பரே!

  - இராய செல்லப்பா (இப்போது) நியூ ஆர்லியன்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 11. குலு மணாலி படத்தைப் பார்த்தாலே மனம் சில்லிடுகிறதே :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 12. அட்டகாசம்..கண்கள் நிறைகின்றது ..குளுமையால் ..எனது மகள் குலுமனாளிக்கு போலாமா அம்மா ...எப்ப போனா பனிமலையைப் பார்க்கலாம்னு கேட்டா நான் உங்களிடம் கேட்டு சொல்ரேன்னு சொல்லிட்டு இங்க வந்தா ஆத்தி பார்க்கும் போதே குளுருதே ...மிகவும் அருமை ...எங்களுக்கு உங்களின் ஆலோசனை தேவை சகோ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆலோசனை தானே - நிச்சயம் சொல்கிறேன். உங்கள் பயணத்திட்டம் முடிவானதும் சொல்லுங்கள். முடிந்த உதவிகள் செய்ய நான் தயார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 13. மிக அருமையான அனுபவம். இம்மாதிரி அனுபவம் ஹரித்வாரில் கிடைத்தாலும் அங்கே பனி எல்லாம் கிடையாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....