எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 12, 2017

ஹனிமூன் தேசம் – இன்ப அதிர்ச்சி தந்த கேரள நண்பர்

ஹனிமூன் தேசம் – பகுதி 15

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!

பனிச்சிகரத்தின் மேல்...
 
பனிச்சிகரத்திலிருந்து திரும்ப மனதே இல்லாமல் புறப்பட்டு, உடன் கடோலாவில் கீழ்நோக்கிப் பயணித்தோம். சென்ற பகுதியிலேயே இதற்கான கட்டணத்தினைச் சொல்லி இருந்தேன்.  மேலே சென்று கீழே திரும்பி வருவதற்கு ஆளொன்றுக்கு ஐநூறு ரூபாய் கட்டணம் என்று. கீழே வந்து பார்த்தபோது தான் அலைபேசியில் அழைப்புகள் வந்திருந்தது தெரிந்தது. கீழே காத்திருந்த ஜோதியும், எங்கள் குழுவில் இருந்த, சிகரத்திற்கு வராத ஒருவரும் எங்களை அழைத்திருக்கிறார்கள். அலைபேசியில் அவர்களை அழைத்து இதோ வந்துவிட்டோம் என்று சொல்ல, அவர்கள் இங்கே நிறைய வாகன நெரிசல் என்று சொன்னார்கள்.


வாகன நெரிசல்...

சோலாங்க் பகுதியில் கீழே இருந்த கடை ஒன்றில் தேநீர், குளிர்பானம் என்று அவரவர்களுக்குத் தேவையானதை அருந்தி, வண்டியை நிறுத்தி இருந்த இடத்திற்குச் சென்றால் எங்கு பார்த்தாலும் வாகனங்கள். ஒரு வண்டியும் நகரவில்லை! குறுக்கும் நெடுக்குமாக பல வாகனங்கள் நிறுத்தி இருக்க, ஒரே கூச்சலும் குழப்பமும். எங்களுடைய வாகத்தினை ஜோதி கஷ்டப்பட்டு வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்.  நாங்கள் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருக்க, எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகள்…. பல ஊர்களிலிருந்து வந்திருந்த மக்கள் – அவரவர் பாஷையில் பேசிக் கொண்டிருந்தார்கள்!  இங்கே சில நிமிடங்கள் இருந்தால், இந்தியா முழுவதிலிருந்தும் மணாலிக்கு வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!

பனிச்சிகரத்தின் மேலிருந்து கீழே வர மனமில்லாமல் வந்த பிறகு...

பெங்காலி, தெலுகு, தமிழ், ஒரியா, ஹிந்தி, பஞ்சாபி, பஹாடி என பல பாஷைகளில் பேசுவதைக் கேட்க முடிந்தது. நடுவே கொஞ்சம் மலையாளமும் கேட்க, எதிரே பார்த்தால் சிலர் மலையாளத்தில் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள். யார் என்று பார்க்க, இன்ப அதிர்ச்சி. என்னுடைய முந்தைய சில பயணங்களில் என்னுடன் வந்திருந்த நண்பர் நாசர் அவருடைய கேரள நண்பர்கள் சிலருடன் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.  அவருக்கும் என்னைப் பார்த்ததில் இன்ப அதிர்ச்சி! எல்லா தில்லிவாசி நண்பர்களைப் போல பார்த்ததும் கட்டிப் பிடித்துக் கொண்டார்! பேசியதும் தான் தெரிந்தது அவர் பயங்கர ஃபிட்! ஹிட்! என்று!


பியாஸ் நதியின் குறுக்கே இரும்புப் பாலம்....

சமீபத்தில் கேரளத் தலைநகரிலிருந்து இந்தியத் தலைநகரில் இருக்கும் கேரளா ஹவுஸ்-க்கு பணி மாற்றத்தில் வந்துவிட்டார் என்று தெரியும் என்றாலும், நேரில் சென்று பார்க்கவில்லை. அங்கே பணிபுரியும் மற்ற கேரள நண்பர்களோடு மணாலி வந்திருப்பதாகச் சொன்னார். மற்ற நண்பர்களையும் அறிமுகம் செய்து வைக்க, அனைவரிடத்தும் ஹலோ சொல்லி, சில கைகுலுக்கல்களுக்குப் பிறகு அவர்கள் உடன் கடோலா நோக்கிச் செல்ல நாங்கள் எங்கள் வாகனம் வெளியே வரக் காத்திருந்தோம். இத்தனை நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு கூட வாகனத்தினை வெளியே எடுக்க முடியவில்லை – முன்னும் பின்னும் சென்று ஒரு வழியாக வாகனத்தினை வெளியே எடுத்து வந்தார் ஜோதி!

பூங்காவின் மேலே ஒரு சிலை!

கேரள நண்பர் கட்டிப்பிடித்தபடியே பேசியதில், எனது நாசிக்குள் அவர் அடித்திருந்த சரக்கின் வாசம் சென்றிருக்க, எனக்கு ஒரு மாதிரி இருந்தது. நானே சரக்கடித்த உணர்வு! வாசத்தினை எப்படிப் போக்குவது என்று யோசித்து ஒரு Bubble gum வாங்கி அதைக் கொஞ்சம் முகர்ந்து, பின் வாயில் போட்டு மென்றபடியே வண்டிக்குள் ஏறி அமர்ந்தேன். கீழேயே தங்கிவிட்ட எங்கள் குழுவைச் சேர்ந்தவர் எங்களை அழைத்தது பற்றிச் சொல்ல, நான் அவரிடம் அலைபேசி அடித்தது கேட்கவில்லை என்று சொல்லி மேலே பயணித்தோம். 


பனிக்கு இதமாய் காலுறைகள்...

மலைப்பாதையில் பயணித்து, காலையில் குளிர்கால உடைகள் மற்றும் Gumboot வாடகைக்கு எடுத்த கடைக்குத் திரும்பி எல்லாவற்றையும் உரிமையாளரிடம் திரும்பிக் கொடுத்தோம். எதிரே ஒரு பூங்கா அந்தப் பூங்காவில் இருந்த ஒரு சிலை கண்களைக் கவர கடையிலிருந்தே ஒரு புகைப்படம் எடுத்தேன். அடுத்ததாக எங்கே செல்லலாம் என்று கேட்க, இன்னும் பார்க்க வேண்டிய இடங்களைப் பட்டியல் இட்டார் ஜோதி. வாகனம் அடுத்த இடம் நோக்கிப் பயணித்தபோது பக்கவாட்டில் பியாஸ் நதி! தெரிந்தவுடன் நதிக்கரையில் கொஞ்சம் நேரம் இருக்கலாம் என வாகனத்தினை நிறுத்தச் சொன்னேன்.  சாலையிலிருந்து இறங்கி நதியில் கொஞ்சம் நேரம் இறங்கி சில்லென்ற தண்ணீரில் நின்று ரசித்தோம். 


ஒரு லவ் ஜோடியும் குறுக்கே ஒரு கரடியும்!

ஆங்காங்கே இருக்கும் பெரிய பாறைகளில் பல காதல் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது. எங்கள் குழுவினர் சிலரும் பியாஸ் நதிக்கரையில் இருந்த சில பாறாங்கற்களில் தங்கள் துணையோடு நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள்! நானும் என் துணையோடு – அதாங்க என் கேமராவுடன் நின்று மற்றவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.  பியாஸ் நதி வேக வேகமாய் தனது கடல் காதலனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறாள்! கரையில் இருந்த சில கடைகளில் அழகாய் குளிர்காலத்திற்கான, குழந்தைகளுக்கான காலுறைகள் பின்னி விற்றுக் கொண்டிருந்தார்கள் சில பெண்கள். அனைத்தையும் பார்த்தபடியே வாகனத்திற்குத் திரும்பினோம். 


பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க!...

அங்கிருந்து எங்கே சென்றோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்லட்டா!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

24 comments:

 1. இந்தியா முழுவதையும் ஒரே இடத்தில் கண்ட உங்களின் அனுபவம் வித்தியாசமானது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 2. செலவு செய்யாமலேயே தங்களுக்கும் போதை ஏற்றி விட்டார் தங்களது மலையாள நண்பர்

  ReplyDelete
  Replies
  1. செலவு செய்யாமலே போதை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. குளுகுளு - என அழகான படங்கள்.. கண்ணுக்கு விருந்து..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 5. இடங்களை ரசித்தேன். தொடர்கிறேன்.

  'குறுக்கே வரும் கரடி' நீங்கள்தானா என்று ZOOM செய்து பார்த்தேன்.. இல்லை.. மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹென்றி.

   Delete
 7. அருமையான பயணம்!! பனிச்சிகரங்கள் படங்கள் அழகு! தொடர்கிறோம்..

  கீதா: கேரள பேருந்துகளில் பிரயாணம் செய்தால் நிச்சயமாக 3ல் ஒருவர் தண்ணி போட்டிருப்பார். எப்போதுமே தண்ணியில் இருப்பார்களோ என்று தோன்றும் அதுவும் பகலில் கூட...கடுப்பாக இருக்கும்...கோபமும் வரும்...அந்த வாடை குமட்டும். கூட்டமான பேருந்தில் மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்போதுபரவாயில்லை பெண்கள் முன் பகுதி என்று தனியாக இருப்பதால் கொஞ்சம் தப்பிக்கலாம்...இப்படிப் பயணிக்கும் போது ஐயோ டிரைவரும் போட்டிருப்பாரோ....சாயா குடிப்பது போல் என்று எண்ணத் தோன்றிவிடும்...
  பியாஸ் நதி மிக அழகு. எனக்கு அதில் பிடித்ததே அந்தப் பாறைகள். நிறைய சிறிதும் பெரிதுமாகப் பாறைகள் வெள்ளையாக இருக்க அதன் நடுவே தண்ணீர் சலசலத்து ஓடுமே அது அழகோ அழகு!!! நாங்களும் தண்ணீரில் ஆங்காங்கே நதியின் கரையில் நின்று தண்ணீரில் கால் நனைத்து என்று களித்தோம்...

  அருமை தொடர்கிறோம் ஜி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. தங்களால் நாங்களும் பார்க்கிறோம்
  அருமை ஐயா
  தொடருங்கள் தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. புளொக்கை நினைச்சுக்கொண்டே பயணிச்சிருக்கிறீங்க என்பது படங்களைப் பார்க்கப் புரியுது ஹா ஹா ஹா.. அனைத்தும் அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. பிளாக்கை நினைத்துக்கொண்டே பயணம்! :) பயணம் பிடிக்கும் என்பதால் பயணமே தவிர பிளாக்குக்காக இல்லை! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   Delete
 10. பியாஸ் நதியின் அழகுத்தோற்றத்தை
  அற்புதமாக பதிவு செய்துள்ளீர்கள்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. // ஒரு லவ் ஜோடியும் குறுக்கே ஒரு கரடியும்!// என்ற உங்களது குறும்பை இரசித்தேன். தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 12. இங்கெல்லாம் போனதில்லை. இனியும் சந்தர்ப்பம் கிட்டுமா என்பதும் தெரியவில்லை! :) அருமையான அனுபவங்கள்.

  ReplyDelete
  Replies
  1. போக நினைத்தால் போகலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....