வெள்ளி, 28 ஏப்ரல், 2017

ஹனிமூன் தேசம் – காத்திருந்து, காத்திருந்து – உணவக அனுபவம்...

ஹனிமூன் தேசம்பகுதி 22

தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் வலப்பக்கத்தில் Drop Down Menu-வாக இருக்கிறது! படிக்காதவர்கள் படிக்கலாமே!


மணிக்கரண் - வெந்நீர் ஊற்றும் நதியும்...


மணாலியில் இருந்து அதிகாலையில் புறப்பட்டதால் காலை உணவு சாப்பிடவில்லை. வழியில் ஒரு இடத்தில் தேநீரும், பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டது தான். அதன் பிறகு நேராக மணிக்கரண் குருத்வாரா சென்று விட்டோம். குருத்வாராவிலும் “குரு கா லங்கர்சாப்பிடவில்லை! அங்கே இருந்தவரை பசி தெரியவில்லை. வெளியே வந்த பிறகு பசி தெரிய ஆரம்பித்து விட்டது. ஓட்டுனர் ஜோதியிடம் சாப்பிட வேண்டுமே எனக் கேட்க, அவரும் லங்கர் சாப்பிடவில்லையா எனக் கேட்டார். இல்லை என்று சொல்ல, சரி வழியில் பார்க்கலாம் என்று சொல்லி விட்டார். மீண்டும் மலைப்பாதையில் பயணித்து, வழியில் ஒரு உணவகம் வர வண்டியை நிறுத்தினார் ஜோதி.


மணிக்கரண் - குருத்வாரா வளாகத்தில்...
புகைப்படம் எடுக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம் என எழுதி இருக்கிறார்கள்!

பெரும்பாலான வட இந்திய உணவகங்களைப் போலவே அந்த உணவகத்தின் உரிமையாளர்கள் பகல் பதினோறு மணிக்கு மேல் திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி இருந்தார்கள்! உணவகத்தின் அன்றைய முதல் பயனாளிகள் நாங்கள் தான்! இருக்கைகள் அனைத்தும் காலியாக இருக்க, உள்ளே சென்று அமர்ந்தோம்.  பணியாளர் ஒருவர் கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டிருக்க, உரிமையாளர் உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தார். என்ன இருக்கிறது என்று கேட்க, அதே பதில் – பராட்டா வகைகள் – ஆலு பராட்டா, ஆனியன் பராட்டா, பனீர் பராட்டா, மிக்ஸ் பராட்டா, மூலி பராட்டா, மேத்தி பராட்டா என்று அடுக்கினார்!


மணிக்கரண் - குருத்வாரா பகுதியில்...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!என்று பாட வேண்டியிருந்தது – காத்திருந்த நேரத்தில் குழுவில் சிலர் செல்ஃபி சிண்ட்ரெல்லாக்களாக மாறினார்கள். சிலர் சமையலறையைப் பார்த்தபடியே இருந்தார்கள். அனைவரும் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தோம். எத்தனை நேரம் பேசி இருப்போம் என்று தெரியாது! எவ்வளவு நேரம் காத்திருப்பது? எழுந்து சமையலறை வாயிலுக்குச் சென்றால் இங்கேயும் ஒரு பெண்மணி தான் சமையலறையில் Chief Chef! அழகாய் பராட்டாவை கைகளால் தட்டிக் கொண்டிருந்தார்! வடக்கே உள்ள பெண்மணிகள் சப்பாத்தி, பராட்டாவை பேலன் என்று அழைக்கப்படும் குழவி இல்லாமல் கைகளாலேயே தட்டி விடுவார்கள்! இந்தப் பெண்மணியும் அப்படியே.


 மணிக்கரண் - இயற்கைக் காட்சிகள்......

சுடச்சுடத் தயாராகிக் கொண்டிருக்க, உதவியாளரை அழைத்து தட்டு, டம்ளர், ஊறுகாய், தயிர், பச்சை மிளகாய், ஆகியவற்றை அனைவரது டேபிள்களிலும் கொண்டு வையுங்கள் எனச் சொன்னேன்! கொஞ்சம் கொஞ்சமாக பராட்டாக்கள் தயாராக நானும் இன்னும் ஒருவரும் அனைவருக்கும் கொண்டு பராட்டாக்களைத் தரத் தொடங்கினோம். பதினைந்து பேருக்கும் கொடுப்பதற்கு அந்த உதவியாளர் கொஞ்சம் திண்டாடவே இந்த ஏற்பாடு. இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும். பெரும்பாலான வட இந்திய உணவகங்கள் மதியத்திற்கு மேல் தான் தொடங்குவார்கள். மூன்று முன்றரை வரை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். அதன் பிறகு ஏழு மணிக்கு மேல் ஆரம்பித்தால், இரவு வெகு நேரம் வரை திறந்திருக்கும்.


உணவகத்தில் தேநீர் அருந்திய பொழுதில்...

இந்த மலைப்பாதை ஓரமாக இருக்கும் கடையின் உரிமையாளரே பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறார். சமையலறைக்குள்ளும் அவரே உதவி செய்வதைப் பார்க்க முடிந்தது. சில சமயங்களில் இப்படி கூட இருந்து வேலை செய்வது நல்லது தான். இன்னுமொரு விஷயமும் அவரிடம் பார்க்கக் கிடைத்தது. நமது ஊரில் கவனித்து இருக்கிறீர்களா? சுற்றுலாப் பயணிகள் வீட்டிலிருந்தே உணவு எடுத்து வரும்போது சாலை ஓரங்களில் வண்டியை நிறுத்தி அங்கேயே கைகளில் தட்டு வைத்துக் கொண்டு சாப்பிடுவார்கள். நமது ஊரில் சாலையோர உணவகங்கள் வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வரும் உணவை அங்கே வைத்து சாப்பிட அனுமதிப்பதில்லை!உணவகத்தில் இருந்த ஓவியங்கள்...

நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் சமயத்தில் ஒரு பேருந்து நிறைந்த சுற்றுலாப் பயணிகள் – பெங்காலிகள், உணவகத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் தங்குமிடத்திலிருந்தே உணவு தயாரித்து எடுத்து வந்திருந்தார்கள். இந்த மலைப்பாதை உணவகத்தின் உரிமையாளர் அந்த உணவை தனது உணவகத்தில் அமர்ந்து சாப்பிட அனுமதி அளித்தார்! அதற்குக் கட்டணமாக ஐந்நூறு ரூபாய் வாங்கிக் கொண்டார்! உட்கார்ந்து சாப்பிடப் போகும் அந்த ஒரு மணி நேர வாடகையாக ஐந்நூறு ரூபாய்! எப்படியும் காலியாகத் தானே இருக்கிறது! இப்படியும் சம்பாதிக்க ஒரு வழி! 


மணிக்கரண் - நதிப்பெண்...


நதியும் மலைகளும்.... எவ்வளவு அழகு. இங்கேயே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறதா!

நாங்களும் சாப்பிட்டு முடித்திருக்க, வந்திருந்த பெங்காலிகளுக்கு இன்னும் வசதி. சாப்பிட்டு முடித்து, தேநீருக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. உணவகத்தின் ஒரு பக்கத்தில் திறந்த வெளியில் சில இருக்கைகளும் மேஜைகளும் இருக்க, அங்கே அமர்ந்து கொண்டோம். இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே தேநீர் அருந்தி, சில பல குழுக்களாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். சில மணி நேர ஓய்வு ஜோதிக்கும் கிடைத்தது என்பதால் மீண்டும் உற்சாகத்துடன் வண்டி புறப்பட்டது. சாலையோர இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்துக் கொண்டிருந்தோம்.

மற்ற விஷயங்களை தொடரின் அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்…..

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து....


18 கருத்துகள்:

 1. பயனாளிகள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் ,அதுக்கு ஓசி கிராக்கி என்று அர்த்தம் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 2. மலைகளில் நின்று தேநீர் அருந்துவது சுகமான அனுபவம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலைப்பகுதியில் தேநீர் - அது ஒரு சுகானுபவம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு

 3. உங்களது பயண்த்தில் நானும் இந்த தொடர் மூலம் பயணித்து கொண்டிருக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. பராட்டாக்குப் பச்சை மிளகாயா??, ஓவியங்கள் மிக அழகு. ஓடும் நதி அயகோ அயகூஉ... இன்னும் சுற்றுலா முடியவில்லையா? போஸ்ட் படிச்சே ரயேட் ஆகிட்டேன் நான் , போன உங்களுக்கு:)?, சரி களைப்பெனினும் மிக அருமையான இடங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிச்சே ரயேட் ஆகிட்டீங்களா.... கவலைப்படாதீங்க... அடுத்த பகுதியோடு இந்தப் பயணத் தொடர் முடியும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 5. ஆஹா... என்ன அழகு இடம்...பல இடங்களுக்கு அழைத்து செல்கிறீர்கள் வெங்கட்ஜி....தொடர்கிறோம்..

  கீதா: ஆம் ஜி அங்கேயே இருந்து விடலாம் என்று தோன்றியது...மனதை மயக்கும் இடங்கள்..வியந்து..அமைதி கொள்ள வைக்கும் இடங்கள்..இப்படி.ஒவ்வொரு மலைப் பகுதி, ஆறு பகுதிக்க்உ செல்லும் போது தோன்றும்....அழகான இஇடம்....தொடர்கிறோம் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 6. இம்மாதிரி இடங்களுக்குப் போய்வருவதுதான் சரி அங்கேயே இருக்க முடியுமா இருந்தால் ரசிப்போமா என்பது சிந்திக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 7. காத்திருந்து உண்பதிலும் ஒரு சுவை இருக்கத்தான் செய்யும்
  தொடருங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. ஹோட்டலில் இருந்த படங்கள்
  மிக மிக அற்புதமாக உள்ளதே
  ஒரு ஸ்டார் ஹோட்டலில் உள்ளது போல
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....