வியாழன், 23 மார்ச், 2017

சாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி! – Made for each other!

ஜலேபி - ரப்டி!

வத்தக்குழம்பு – சுட்ட அப்பளம், வெங்காய சம்பார் – உருளைக்கிழங்கு கறி, வெஜிட்டபிள் பிரியாணி – வெங்காய தயிர் பச்சடி, தயிர் சாதம் – மாவடு, அடை – அவியல், புட்டு – கடலைக்கூட்டு, பரோட்டா-சால்னா,…. இப்படி நிறைய Made for each other உணவு வகைகள் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்! படிக்கும்போதே சிலர் வாயில் நீர் ஊறி உறிஞ்சும் சப்தம் “Slurp” என்று கேட்பதைத் தடுக்க முடியவில்லை! இந்த ஜோடி மாதிரி நம்ம ஊருல நிறைய விஷயம் சாப்பிட்டு இருப்பீங்க… இந்த வாரம் வடக்கே கிடைக்கும் சில Made for each other உணவுகள் பற்றி பார்க்கலாம்.

தில்லி வந்த புதிதில், சில உணவகங்களில் வெளியே எழுதி வைத்திருக்கும் ஒரு பதாகை – மக்கி Dதா ரொட்டி, சர்சோன் கா சாக்g! – பார்க்கும் போது ஏதோ மக்கிப் போன ரொட்டி கூட என்னமோ தருவாங்க போலன்னு நினைச்சுப்பேன் – நம்ம ஹிந்தி புலமை அப்படி! ஹிந்தி படிக்காத கொடுமை, தில்லி வந்து இறங்கி ஒரு வார்த்தை புரியாம திண்டாடிய சமயம்! மக்கி என்பது சோள மாவு, சர்சோன் என்பது கடுகு என்பதும், அதன் அர்த்தம் சோள மாவில் செய்த சப்பாத்தியும், கடுகுக்கீரையில் செய்த சப்ஜியும்! என்று தெரிந்தது. சரி சாப்பிட்டுதான் பார்ப்போமே என சாப்பிட, ரொம்பவே நல்லா இருந்தது! அதுவும் அந்த மக்கி ரொட்டியில் தடவித் தரும் நெய்யும், கீரையில் மிதக்கும் நெய்யும் போட்டிப்போட்டுக் கொண்டு கலந்து, சுடச்சுட அந்த ரொட்டியை நனைத்து சாப்பிட வாவ்! என்னவொரு சுவை!

வட இந்திய திருமணங்களுக்கு அழைப்பு வரும்போது செல்வதற்கு கொஞ்சம் சோம்பலுண்டு. எல்லா திருமணங்களுமே இரவு தான் நடக்கும் – அதுவும் Bபராத் – மாப்பிள்ளை குதிரை மேல் அமர்ந்து வந்து சேர்வதற்குள் நமக்கு தாவு தீர்ந்து விடும்! – இரவு பத்து பத்தரைக்கு மேல் தான் மண்டபத்திற்கு வந்து சேர்வார். அதற்கு அப்புறம் தான் டின்னர் துவங்கும்! Snacks Counter மட்டும் திறந்து பக்கோடா, ஃபிங்கர் சிப்ஸ், வறுத்த பனீர், தஹி bபல்லா-பாப்டி, பானிபூரி என சாப்பிடக் கொடுத்தவாறே இருப்பார்கள். மாப்பிள்ளை வந்த பிறகு தான் டின்னர் கொடுக்கத் துவங்குவார்கள். சாப்பிடத் துவங்கவே இரவு 11-30க்கு மேலே ஆனால், எப்போ சாப்பிட்டு, எப்போது வீடு திரும்புவது என்பதற்காகவே இது போன்ற திருமணங்களுக்குச் செல்வதில்லை!

ஆனாலும் சில தவிர்க்க முடியாத சமயங்களில் செல்லும்போது சில Made for each other உணவுகளைச் சுவைப்பதுண்டு! அப்படி சாப்பிடும் சில விஷயங்கள் – இது Main Course அல்ல! Dessert –  ஒரு s விட்டால் பாலைவனம் ஆகிவிடும் அபாயமுண்டு! பல வகை இனிப்புகள் வைத்திருப்பார்கள் என்றாலும், இரண்டு விஷயங்கள் எனக்குப் பிடிக்கும் – அது சில்லென்ற ஐஸ்க்ரீம் மீது சுடச்சுட குலாப்ஜாமூன் போட்டு, சர்க்கரைப் பாகு சேர்த்து தருவார்கள் – இரண்டையும் கலந்து சாப்பிடும்போது வாவ்! உணர்வு உங்களுக்கு வரும்!

இரண்டாவது விஷயம் தான் தலைப்பில் சொல்லி இருக்கும் ஜலேபி-ரப்டி! தில்லியின் உணவகங்களின் வாயிலில் இந்த ஜலேபி போட்டபடியே இருப்பார்கள் – குறிப்பாக குளிர் காலங்களில். இரவு உணவு சாப்பிட்ட பிறகு, காலார நடந்து சென்றால், இந்த கடை வாசலில் தானாக நிற்கும் உங்கள் கால்கள்! சுடச்சுட ஜலேபி ஒரு தொன்னையில் வைத்துத் தர, அதைச் சாப்பிட்டு வருபவர்கள் அதிகம் பேர்! இந்த ஜலேபியுடன் ரப்டி என அழைக்கப்படும் ஒரு விஷயத்தினை மேலே விட்டுத் தருவார்கள் சில கடைகளில். ஆஹா இரண்டும் சேர்ந்தால் உங்களை அறியாமல் Divine என்று சொல்வீர்கள்!

ஜலேபி தெரியும், அது என்ன ரப்டி! ப்ளடி ஹிந்தி தெரியாம இருக்கறது எவ்வளவு கஷ்டமா இருக்கே! ரப்டி! எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

பால் [ஒன்றரை லிட்டர் – Full Cream], ஏலக்காய் பவுடர், சர்க்கரை [3 ஸ்பூன்], பாதாம் [10], பிஸ்தா [10], குங்குமப் பூ!

எப்படிச் செய்யணும் மாமு:

அடி கனமான, அகலமான பாத்திரத்தில் மிதமான சூட்டில் பாலை காய்ச்சவும், பொங்கி வரும் சமயத்தில் சூட்டை முழுவதுமாகக் குறைத்து வைக்கவும், இடைவெளி விட்டு கலக்கவும். படியும் பாலாடையை ஓரத்தில் ஒதுக்கி வைக்கவும். அது நன்கு க்ரிஸ்பியாகும்.

மூன்றில் ஒரு பங்காக, பால் குறையும் வரை [அளந்து பார்க்கல்லாம் வேண்டாம்… ஒரு குத்து மதிப்பு தான்! ஓங்கி குத்திடாதீங்க!] அடுப்பை விட்டு, [நல்லா கவனிங்க, இடுப்பை விட்டு அல்ல!] இறக்க வேண்டாம். அதுக்கப்புறம் சர்க்கரை சேர்த்து, அது கரைந்த பிறகு, சீவிய பாதாம், பிஸ்தா, குங்குமப் பூ சேர்த்து ஒரு கலக்கு கலக்குங்க!

ஓரத்தில் ஒதுக்கிய க்ரிஸ்பி பாலாடைகளையும் பாலுக்குள்ளே தள்ளுங்க! அதுக்கப்புறம் இரண்டு நிமிடம் காத்திருந்து அடுப்பினை நிறுத்துங்க! அவ்வளவு தான். சூடு குறைந்த பிறகு, வேறு பாத்திரத்திற்கு மாற்றி அதை பழேத்து பொட்டி – அதாங்க ஃப்ரிட்ஜ்ல ஒரு இரண்டு மணி நேரம் வச்சுடுங்க! அவ்வளவு தான் ரப்டி தயார்! இந்த ரப்டியைச் சும்மாவே சாப்பிடலாம் என்றாலும், சுடச்சுட ஜலேபி மீது ஜில்லென்ற ரப்டி சாப்பிட வாவ்! என்னவொரு சுவை!

இதெல்லாம் யாருங்க செய்யறது? என்றால் வட இந்திய கடைகளிலோ, வட இந்திய திருமணங்களுக்கோ செல்லும் போது அப்படியே கண்ணை கொஞ்சம் ஓட்டுங்க! இல்லைன்னா ஜலேபி-ரப்டி கிடைக்குமான்னு கேட்டுப் பாருங்க, சாப்பிட்டு பாருங்க! சரியா! சாப்பிட்டு எப்படி இருந்ததுன்னும் சொல்லுங்க!

நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

34 கருத்துகள்:

  1. அருமை. அந்த நாள் ஞாபகம் வந்ததே,வந்ததே....நண்பனே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் நினைவுகளை இந்தப் பதிவு மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அசோகன் ஜி!

      நீக்கு
  2. கண்டிப்பா வாய்ப்பு கிடைக்கும் போது...ஜலேபி ரப்டி சாப்டே ஆகணும்..

    ம்ம்ம்...சுப்பரா இருக்கு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாய்ப்பு கிடைத்தால் சாப்பிட்டு பாருங்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  3. படமே நாவில் எச்சில் ஊறவைக்கிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்தால் சாப்பிட்டுப் பாருங்கள் ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. இவ்வளவு விஷயங்கள் இருக்குதா - இதுக்குள்ளே!..

    இருக்கட்டும் .. ஜிலேபி கடையில் வாங்கிக் கொள்ளலாம்..
    அப்புறம் என்ன! .. ரப்டி செஞ்சுடுவோம்!..

    நலம் வாழட்டும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  5. மேட் ஃபார் ஈச் அதரில் நீங்கள் சொல்லி வரும் போது என்னடா குலாப்ஜாமூன் ஐஸ்க்ரீம் வரலையே என்று நினைத்து வாசிக்கும் போதே நீங்கள் சொல்லிவிட்டீர்கள்....ரொம்ப நல்லா இருக்கும்....அது போல இந்த ஜலேபி ரப்டி யும் சாப்பிட்டிருக்கேன்...வீட்டில் செய்தது இல்லை அதாவது இரண்டும் சேர்த்து....ரப்டி என்று சொல்லுவதை நாம் இங்கும் சிரோட்டி ஸ்வீட்டில் விடுவதுண்டு இல்லைஅய...சிரோட்டிக்குச் செய்ததுண்டு...வட இந்திய ஜலேபி செய்ததுண்டு ஆனால் ஷேப் எல்லாம் அவர்கள் செய்வது போல வருவதில்லை....

    இங்கும் இப்போது சில கல்யாணங்களில் மெஹந்தி பார்ட்டி வைக்கும் போது வீட்டிற்கு வட இந்திய உணவு சமைப்பவரை அழைத்து ஜலேபி ரப்டி செய்து வருபவர்களுக்குக் கொடுக்கிறார்கள்...எனக்கு ஜாங்கிரியை விட ஜலேபி க்ரிஸ்பாக இருப்பதால் மிகவும் பிடிக்கும் ஆனால் சாப்பிட முடியாதே!!! நானே ஸ்வீட்!!! ஆசையைத் தூண்டி விட்டீர்கள் அதுவும் அந்த ஸ்லர்ப் லிஸ்டில் நானும் உண்டு ஹ்ஹஹஹ்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குலாப்ஜாமூன் - ஐஸ்க்ரீம் - நல்ல காம்பினேஷன் தான் கீதா ஜி! ஸ்லர்ப் லிஸ்டில் நீங்களும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. பகிர்விற்கு மிக்க நன்றி வெங்கட்ஜி...வட இந்திய கல்யாணங்கள் பற்றிக் கேட்டதுண்டு...அப்போ எல்லா கல்யாணங்களுமே ராத்திரிதானோ.....ஆந்திராவில் கூட நடு ராத்திரி தான் முகூர்த்தம் வைக்கிறார்கள்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வட இந்தியாவில் பெரும்பாலான கல்யாணங்கள் ராத்திரி தான்! சர்தார்ஜிகள் கல்யாணம் மட்டும் மதிய வேளையில் நடக்கும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு

  7. இங்கே ஹோட்டல்களில் குலோப்சாமுன் ஐஸ்க்ரீம் கண்டிப்பாக இருக்கும் அல்லது கேரட் அல்வா ஜஸ்க்ரீம் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேரட் ஹல்வாவுடன் ஐஸ்க்ரீம் - இதுவரை அப்படிச் சுவைத்ததில்லை!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. உண்மை தான். பார்க்கும்போதே வாயில் நீர்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவிந்தராஜூ அருணாச்சலம் ஜி!

      நீக்கு
  9. Recently I was eat this Jilebi with Rabdi at Manesar,really its divine experience.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... மானேசரில் சாப்பிட்டுப் பார்த்தீர்களா... Divine! that's the word!

      தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமேஷ் சுந்தரராஜன் ஜி!

      நீக்கு
  10. சொன்ன காம்பினேஷன் எல்லாம் அருமை. ஜிலேபி ரஃப்டி சாப்பிட்டிருக்கேன். காலைல உணவைப் பார்த்தவுடன், இன்று டயட் என்ற எண்ணம் காணாமல் போய்விட்டது.

    பழேத்து பொட்டி = அருமையான வார்த்தை (குளிர் சாதனப் பெட்டியைவிட) - பழசை ஏத்தி (தள்ளி) ஏத்தி வைக்கிற பெட்டி. அல்லது பழசுக்கான பொட்டி.. தமிழ் ஆர்வலர்கள் பார்த்து திட்டாம இருந்தாச் சரிதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் ஆர்வலர்கள் பார்த்து திட்டாம இருந்தாச் சரி தான்! :) அந்த பயம் இருக்கணும்! :) பெரும்பாலான வீடுகளில் இந்த மாதிரி ஏத்தி ஏத்தி தானே வைத்திருக்கிறார்கள்.....


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  11. நண்பருக்கு ஓர் வேண்டுகோள் தங்கள் வலைப்பூவினை Feedly வழியாக படித்து கொண்டிருந்தேன் சில நாட்களாகா தங்கள் வலைப்பூவினை Feedly ல் முழுவதுமாக படிக்க முடிவதில்லை மறுபடியும் பழைய படி தங்கள் வலைப்பூவினை Feedly ல் படிக்க வழிவகை செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி வணக்கம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைப்பக்கத்தினைப் படிப்பவர்கள் எண்ணிக்கை சம்பந்தமாக சில மாறுதல்கள் செய்ததால் இப்படி ஆகிறது. ப்ளாக்கர் மூலம் படிக்கலாம் நண்பரே. ஃபீட்லியில் படித்தால் உங்களால் கருத்துகளைச் சொல்ல முடியாது என்பதும் ஒரு குறை தானே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வடிவேலன்.

      நீக்கு
  12. ..ஜலேபியும் ஜிலேபியும் ஒண்ணுதானே? ரப்டி என்பது நம்ம சேட்டுக்கடை மசாலா பால் போல இருக்கும் போல! வாய் உள்ளே போகும் பொருட்களின் பெயர்தான் வாயில் நுழைய மாட்டேன் என்கிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளே போகும் பொருட்களின் பெயர் தான் வாயில் நுழைய மாட்டேன் என்கிறது! :) இங்கே ரப்டி என எழுதி இருந்தாலும், இதை ஹிந்தியில் எழுதும் போது ரப்ரி எனதான் எழுத வேண்டும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. இந்த ஜிலேபி ஜாங்கிரி இரண்டுமே கன்ஃப்யூஸ் செய்கிறதுஇப்போது கீதாவின் பின்னூட்டம் தெளிவாக்குகிறது க்ரிஸ்பாக இருப்பது ஜிலேபி சாஃப்டாக இருப்பது ஜாங்கிரி சரியா. இந்த மேட் ஃபர் ஈச் அதரில் வெங்கட்டும் பயணமும் என்று சேர்க்கலாமோ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜலேபி, ஜாங்கிரி ரெண்டும் வித்தியாசம் தான் - ஒண்ணு மைதாவில் இன்னுமொன்று உளுந்தில் செய்வது. கீதாம்மா கீழே சொல்லி இருக்காங்க பாருங்க!

      வெங்கட்டும் பயணமும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு
  14. சிவகாசி ஜேசி ஜோன் கானில் ஒருமுறை ஜிலேபியும் தயிரும் ஒரு வித்யாசமான காம்பிநேசனில் சாப்பிட்டோம்

    வட இந்திய ஜே.சி ஒருவர் ஏற்பாடு ..
    தமிழ் மணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜலேபி - தயிர் - பெரும்பாலான உத்திரப் பிரதேச மாவட்டங்களில், குறிப்பாக அலஹாபாத் பகுதிகளில் இது ரொம்பவும் பழக்கமான விஷயம்! காலை வேளையில் இப்படி தயிருடன் ஜலேபி சாப்பிடுவார்கள்! நானும் சாப்பிடதுண்டு! சிலர் பாலுடன் சாப்பிடுவார்கள்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது!

      நீக்கு
  15. ஜலேபி மைதாமாவில் செய்து நல்ல மொறுமொறுப்பாக எடுத்துச் சர்க்கரைப்பாகில் போட்டுச் சுடச் சுடச் சாப்பிடணும்! ஜாங்கிரி என்பது நம்ம ஊர்ப்பக்கம் உளுந்து அரைத்துச் செய்வது! நம்ம ஊர்ப்பக்கம் மைதாமாவு ஜலேபி பார்க்கிறது ரொம்ப அபூர்வம். வடக்கே ஜலேபியும் பார்க்கலாம், ஜாங்கிரியும் கிடைக்கும் இமர்த்தி என்னும் பெயரில்! ஜலேபி ராப்டி சாப்பிட ராஜஸ்தான் போகணும் போலத் தோன்றுகிறது! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜஸ்தான் போகணும்! போகலாமே!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. வாயில் எச்சில் ஊற வைத்துவிட்டீர்கள்! பதிவை ருசித்தேன்! நன்றி!

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  16. இந்த ஜிலேபி ஒல்லிப்பச்சானாய் இருக்கும் தானே ,மும்பையில் ஒரு முறை ருசித்ததுண்டு :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒல்லிப்பாச்சானே தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....