புதன், 9 ஆகஸ்ட், 2017

சாப்பிட வாங்க – எனது ஐந்தாவது மின் புத்தகம் வெளியீடு




அன்பின் நண்பர்களுக்கு,

மாலை வணக்கம்! ஒரே நாளில் இரண்டு சாப்பாட்டு பதிவா? என்று அலற வேண்டாம்! அப்படி அமைந்து விட்டது! என்னுடைய வலைப்பூவில் எழுதிய பயணக் கட்டுரைகளைத் தொகுத்து இது வரை நான்கு மின்புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன் – மூன்று புத்தகங்கள் WWW.FREETAMILEBOOKS.COM தளம் மூலமாகவும், நான்காவது புத்தகம் WWW.PUSTAKA.CO.IN தளம் மூலமாகவும்.  அவற்றின் விவரங்கள் எனது வலைப்பூவின் வலப்பக்க ஓரத்தில் இருக்கிறது…. [குறிப்பு: படத்தின் மேல் சுட்டினால் அந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்].


இப்போது ஐந்தாவது மின்புத்தகம்.  இப்புத்தகமும் எனது முதல் மூன்று புத்தகங்கள் போலவே WWW.FREETAMILEBOOKS.COM தளத்தில் வெளி வந்திருக்கிறது.  புத்தகம் பற்றிய ஒரு சிறு அறிமுகம் கீழே!

விதம் விதமாய் சாப்பிட வாங்க.......

பயணம் செய்வது எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.  அதைப் போலவே சாப்பிடுவதும் என்று சொன்னால் என்னை நன்கு தெரிந்தவர்கள் திட்டுவார்கள் – பசிக்கு சாப்பிட வேண்டுமே தவிர, ருசிக்கு சாப்பிடக் கூடாது என்று அவ்வப்போது என் மனைவியிடமும் அம்மாவிடமும் சொல்வது வழக்கம்.  இருந்தாலும் நானே சமைத்து சாப்பிட வேண்டிய நேரங்களில் விதம் விதமாய் சமைப்பதுண்டு! போலவே பயணம் செய்யும் சமயங்களில் எந்தெந்த ஊரில் என்ன கிடைக்கிறதோ அதைச் சாப்பிடுவதே எனது வழக்கம்.  வட இந்தியாவில் இருந்து கொண்டு, அதுவும் வடக்கின் எல்லை மாநிலங்களில், தமிழகத்திலிருந்து வெகு தொலைவு வந்த பிறகு சாதத்துடன் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என சாப்பிடக் கிடைக்குமா என்று தேடினால் பயணம் முழுவதும் பட்டினி தான் இருக்க வேண்டும்.  மசாலா தோசை என்ற பெயரில் புளித்த மாவில் செய்த தோசை மீது உருளைக்கிழங்கு மசாலா வைத்து மகா மோசமான சுவையில் கொடுப்பார்கள் – அதைச் சாப்பிடுவதற்குச் சும்மா இருந்து விடலாம். 

இப்படி சில அனுபவங்கள் கிடைத்த பிறகு, எங்கே சென்றாலும், அந்த ஊரின் உணவு என்னவோ அதையே கேட்டு வாங்கிச் சுவைப்பது எனது வழக்கம். வடக்கே பெரும்பாலான ஊர்களில் காலை உணவு பராட்டா தான் – பயப்பட வேண்டாம் – இது மைதா பராட்டா அல்ல – கோதுமை பராட்டா, கூடவே தொட்டுக்கொள்ள ஊறுகாயும் தயிரும்! ஆனாலும், ஒவ்வொரு ஊருக்குச் செல்லும் போதும், வித்தியாசமான உணவு வகைகள், அவை தயாரிக்கப்படும் முறைகள் என கேட்டு சாப்பிடுவது வழக்கமாகி இருக்கிறது. சில இடங்களில் உணவுக்காக படும் அவஸ்தைகள், தேடல்கள் என நிறையவே அனுபவங்கள்.  பயணக் கட்டுரைகள் எழுதும் போது அந்தந்த ஊரில் உணவு உண்ட அனுபவங்களையும் எழுதுவது வழக்கம். அது பலருக்கும் பிடித்தமானதும் கூட!  அப்படி எழுதியது தவிற, சமையலுக்காகவே சில தனி பதிவுகளும் எனது வலைப்பூவில் எழுதியதுண்டு.

பல ஊர்களில் கிடைத்த அனுபவங்கள் வித்தியாசமானவை. உதாரணத்திற்கு மில்க் மெய்ட் தேநீர் – வட கிழக்கு மாநிலங்களில் பயணித்த போது மலைப் பிரதேசங்களில் பால் தட்டுப்பாடு – பெரும்பாலும் லால் சாய் எனப்படும் கட்டஞ்சாய் தான். பால் விட்டு தேநீர் கேட்டால், கட்டஞ்சாயில் ஒரு ஸ்பூன் மில்க் மெய்ட் விட்டு கலக்கி தந்து விடுகிறார்கள். வாயில் வைக்கமுடியாத சுவை – ஒரு முறை அதைக் குடித்த பிறகு எங்கே சென்றாலும் பால் விட்ட தேநீர் கேட்கவில்லை!

உத்திரப் பிரதேசத்தில் பயணிக்கும் போது, குறிப்பாக அலஹாபாத், வாரணாசி ஆகிய இடங்களுக்குப் பயணிக்கும் போது காலை வேளையில் பால் [அ] தயிரில் தோய்த்த ஜாங்கிரிகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன்.  எப்படித்தான் இருக்கிறது என சுவைத்தும் பார்த்திருக்கிறேன்.  பாலில் ஜாங்கிரியா? படிக்கும்போதே குமட்டுகிறதே என்று சிலர் நினைக்கலாம்..... ஆனால் இதற்கு உத்திரப்பிரதேசத்தில் பலத்த வரவேற்பும், ரசிகர்களும் உண்டு!  வித்தியாசமான சில உணவு வகைகள், உணவு சம்பந்தமான அனுபவங்கள் ஆகியவற்றை தொகுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அவ்வப்போது வருவதுண்டு.  பயணக் கட்டுரைகள் சிலவற்றை மின்புத்தகமாக வெளியிட்ட எனக்கு, சாப்பாடு அனுபவங்களையும் மின்புத்தகமாக வெளியிடலாமே என்ற எண்ணம் வரவே, அதன் தொடர்ச்சியாய், இதோ எனது ஐந்தாவது மின் புத்தகம் – ”சாப்பிட வாங்க!”

புத்தகம் பற்றிய எண்ணம் வந்ததும், எனது “சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூவில் எழுதிய சமையல்/சாப்பாடு அனுபவங்களையும் இங்கே தொகுத்து இருக்கிறேன்.  தொகுத்து வைத்த கட்டுரைகளை பிரபல பதிவர், எழுத்தாளர் திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களுக்கு அனுப்பி வைக்க, அவர் தொகுப்பு பற்றிய தனது எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  திருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களின் எண்ணங்கள் வரும் பக்கங்களில் கருத்துரையாக! இந்தத் தொகுப்பில் இருக்கும் அனுபவங்கள்/உணவுகள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  நீங்களும் படித்து, உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் மின்புத்தகத்தினை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன்....... 

நட்புடன்

வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
09-08-2017.



இந்த மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால், கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கி செய்து கொள்ளலாம்!



புத்தகத்தினை வெளியிட்ட WWW.FREETAMILEBOOKS.COM தள நண்பர்களுக்கும், கருத்துரை எழுதி அனுப்பிய சகோ தேனம்மை அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. என்னுடைய முந்தைய மின்னூல்களுக்கு ஆதரவு தந்தது போலவே, இப்போதும் உங்கள் ஆதரவு வேண்டி....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 


26 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் மின் நூலுக்கு அதை பகிர்ந்தர்க்கு நன்றி...
    நீங்க சொல்வது மிகவும் சரி எந்த ஊருக்கு போகிறோமோ அந்த இடத்தில என்ன ஸ்பெஷல் என்றும் மேலும் அங்கு பிரஷாக என்ன கிடைகிறதோ அதை உணவாக எடுத்து கொள்வதே சாலச்சிறந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

      நீக்கு
  2. மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி!!!
    பதிவிறக்கம் செய்தாயிற்று!!

    உங்கள் சாப்பாட்டு அனுபவங்களைப் பதிவுகளில் வாசித்திருந்தாலும் இப்படி எல்லாம் ஒரே புத்தகத்தில் மீண்டும் வாசிப்பதும் ஒரு நல்ல அனுபவம் தான்! பயணம் செய்பவர்களுக்குச் சொல்லவும் செய்யலாமே!!

    பகிர்விற்கு மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  3. புத்தக வடிவமைப்பும் நன்றாக இருக்கிறது வாசிப்பதும் எளிதாக இருக்கிறது ஜி!

    கீதா: கணினியிலும், துளசி : மொபைலிலும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை புத்தக வடிவமைப்பும் நானே செய்திருக்கிறேன். என்றாலும் அழகாய் வந்திருப்பதற்கு வெளியிட்ட நண்பர்களே காரணம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  4. தங்களது தன்னலம் கருதாத, ஐந்தாவது மின்னூலுக்கு வாழ்த்துகள். எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் உள்ள மின்நூலகத்தில் தரவிறக்கம் செய்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

      நீக்கு
  6. தேசாந்திரியாய் மாறி விட முடியாதுதான். ஆனால் நமது தேசத்தை ஒரே ஒரு முறையாவது சுற்றிப் பார்த்து விட நினைத்த என் ஆசை இப்போது வரை நினைவேற வில்லை.
    உங்களுடைய பயணக் கட்டுரைகள் படித்த போது பார்க்க வேண்டிய இடங்களை பட்டியல் போட்டுக் கொண்டதோடு கொஞ்சம் பொறாமையையும் மனதில் இருத்திக் கொண்டேன்.
    சாப்பிட வாங்க படித்த போதும் இதே நிலைதான்.
    எப்போது சமைத்துப் பார்க்கப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் படித்த வரையில் இந்த உணவு வகைகளை, அவை எங்கு கிடைக்குமோ அங்கு சென்று ருசிக்க வேண்டிய ஆவலை தூண்டி விட்டீர்கள்.
    உணவுடன் கூடிய தகவல்கள், உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், வட இந்திய நண்பர்கள் (5 பேரையும் கேட்டதாக சொல்லுங்கள்), மோமோ,யோங்சா, பேட்மி,ஜலேபா (ஜிலேபியின் தந்தை) என்று வாயில் நுழையக் கூடிய உணவுகள் என்று படிக்கும் போது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது.
    பெரும்பாலான இடத்தில் ரவை என்று சொன்னீர்களே அது கோதுமை ரவையா இல்லை வெள்ளை ரவையா?
    தான் ரசித்ததை அது உணவாகட்டும், ஊர் சுற்றுவதாகட்டும் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டு ஒரு வழிகாட்டியாய் இருக்கும் உங்கள் குணம் மிக உயர்ந்தது.
    நேரம் ஒதுக்கி புத்தகம் எழுதி அதை இலவசமாக அளிக்கும் உங்கள் உள்ளம் உன்னதமானது.
    தொடரட்டும் உங்கள் பயணம்.

    அன்புடன்
    பாரதிராஜா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலும் வெள்ளை ரவை தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பாரதிராஜா...

      நீக்கு
  7. நேரம் கிடைக்கும் போது சாப்பிடுகிறேன் ....இல்லை இல்லை .படிக்கிறேன் :)

    உங்கள் வலைப்பூவின் தலைப்பில் ,'த'வைக் காணலையே ,கண்டுபிடித்து கொண்டு வாங்க ஜி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ”த”வைக் காணலையே.... :) அதற்கு தான் கீழே சுட்டி கொடுத்திருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
    2. அடப்பாவமே... எனக்கும் இப்போதுதான் தெரிந்தது பகவான்ஜி...

      நீக்கு
    3. தமிழ்மணம் Secure இல்லை என்பதால் https:// என இருக்கும்போது என் பதிவில் தெரிவதில்லை. http://venkatnagaraj.blogspot.com என இருக்கும்போது வலைப்பக்கமே திறப்பதில்லை!

      தமிழ்மணம் வாக்களிக்க கீழே சுட்டி இருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

      நீக்கு
  8. வாழ்த்துகள் அண்ணா... சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டு இருக்கிறீர்கள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. பயணமும் சாப்பாடும் கைகோர்த்து நடப்பவை...பயண அனுபவ புத்தகம் வரும் முன்னே ! சாப்பாடு அனுபவ புத்தகம் வரும் பின்னே என்னும் கருத்தை சொல்லாமல் சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிரசாத் ஜி!

      நீக்கு
  11. புத்தகம் தரவிறக்கம் செய்து கொண்டேன். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  12. மின்னூல்களைப் பணம்கொடுத்து வாங்கிப் படிப்பவர் மிகக் குறைவு என்று நினைக்கிறேன் அதற்கு முதலில் பெயர் பெற்ற எழுத்தாளன் என்று அறியப்பட வேண்டும் போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் குறைவு தான். பிரபலமான எழுத்தாளர்கள் புத்தகங்கள் கூட நிறைய விற்பதில்லை. விளம்பரம் தேவையாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....